"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, March 16, 2013

ஆன்மாக்களும் சிவமான குருவும்! சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் - பாகம் 12


ஆன்மாக்கள் அநாதி காலந்தொட்டு உள்ளதென்பதையும், அதன் சதசத்து,சிதசித்து இயல்புகளையும் முன்னர் பார்த்தோம்.
ஆன்மாக்களின் இயல்பினை மூன்று உதாரணங்களினால் எளிதாக உணரலாம்.அதை இப்பகுதியில்ப் பார்ப்போம்.

1) பூவின் மணம் - பூவின் மணத்தை உணரமுடியுமே தவிர காணமுடியாது. உடல் வேறு. உயிர் வேறு. ஆனால் இரண்டையும் பிரித்து உயிரைத் தனியே காணமுடியாது. உயிரற்ற உடலும் உக்கி அழிந்துவிடும்.

மின்சாரத்தை நாம் இதுதான் மின்சாரம் என்று பார்க்கமுடியாது. அதனை ஒன்றினுள் செலுத்தி மின்சாரம் இன்ன இன்ன வேலையைச் செய்யும் என்று காட்டமுடியுமேயொழிய  இதுதான் மின்சாரம் என்று ஒரு பொருளைக் காட்டமுடியாது. உதாரணத்துக்கு மின்சாரத்தால் தொலைக்காட்சிப்பெட்டி இயங்கும் என்றும் வானொலி இயங்கும் என்றும் மின்குமிழ் இயங்குமென்றும் கூறலாமேயொழிய, இதுதான் மின்சாரம் என்று மின்சாரத்தை ஒரு பொருளாகக் காட்டமுடியாது. இதனை Bertrand Russell என்னும் அறிவியலாளர் எடுத்துக்கூறியுள்ளார்.

எனவே எப்படி நாம் மின்சாரத்தை ஒரு பொருளாகக் காட்சிப்படுத்தமுடியாதோ அப்படித்தான் இதுதான் உயிர் என்று உயிரை ஒருபொருளாகக் காட்சிப்படுத்த முடியாது. ஆனால் மின்சாரத்தின் இருப்பை எப்படி மின்கருவிகளின் இயக்கத்தின்மூலம் உணர்ந்துகொள்கின்றோமோ, அப்படித்தான் நாம் உயிரின் இருப்பை உடலில்மூலம் உணர்ந்து கொள்ளமுடியும். உயிர் இல்லாத உடல் மின்சாரம் இல்லாத மின்சாதனம் போன்றது.

2)இருள் ஒளியலாக் கண்

அதுவென்ன இருள் ஒளியலாக் கண்? ஒளியுள்ளபோது கண் ஒளியைப் பெற்று ஒளியாகி பார்த்தல் தொழிலைச் செய்யும். ஒளியில்லாதபோது அதாவது இருள்வேளையில், ஒளியைப் பெறாமையினால் கண் இருளாகிவிடும்.பார்த்தல் தொழிலை இழந்துவிடும்.

 அதாவது ஒளியுள்ளபோது ஒளியாகவும் ஒளியற்றபோது இருளாகவும் கண் விளங்குகின்றது. அதாவது கண்ணுக்கென்று தன்னுடைய தன்மையென்று ஒன்றில்லை. கண்ணானது ஒளியைத் தானே தனித்துக் கொண்டிருக்குமானால் இருளிலும் பார்க்கும் தொழிலைச் செய்யக்கூடியதாக இருக்கும். அதுபோல் கண்ணானது இருள்மயமான நிலையைத் தன்னிடத்தே தனக்கென்று கொண்டிருக்குமானால், சூரியவெளிச்சம் இருந்தாலும் கண்ணால்ப் பார்க்கமுடியாது. எனவே கண்ணுக்கென்று தனித்த தனக்கென்ற ஒரு தன்மை இல்லை. அதுபோல் பாசத்துடன்(ஆணவம்,கன்மம்,மாயை) உயிர் இணைந்திருந்தால் உயிருக்கு பாச இயல்பும் பதியோடு சேர்ந்திருந்தால் பதிபோலவும் விளங்கும் இரட்டைத்தன்மை உடையது.

இவ்வாறு பதியோடு இருக்கும் போது பதிபோல் விளங்குவதால்த்தான் உயிர் அச்சமயம் தன்னைச் சிவமாகவே உணரும்! அதாவது உயிராக உணராது!இவ்வாறான நிலையைச் "சிவமாக்கி என்னை ஆண்ட" என்று மாணிக்கவாசக சுவாமிகள் கூறுவர். இதுவே உண்மையான அத்வைதம்!
அதாவது நாம் ஏற்கனவே முன்னைய பகுதிகளில் பார்த்ததுபோல சுத்தாத்வைதம் எனப்படும். அதாவது ஒன்றுமல்ல! இரண்டுமல்ல! இரண்டின்மையும் அல்ல! சுத்தாத்வைதம் என்பது இரண்டன்மை!!! சிவோகம் நிலை!!! நான் என்ற உணர்வழிந்து உயிரென்ற ஒன்றை மறந்து சிவத்தினையே
உணர்ந்துநிற்கின்றநிலையில் சிவமானேன் என்று உயிர் உணர்வுபெற்று நிற்கும்!!!
இத்தகைய ஆன்மாக்களின் இயல்பை "சார்ந்ததன் வண்ணம்" என்று கூறுவர்.  அசத்துடன் உள்ளபோது அசத்தாயும் சத்துடன் உள்ளபோது சத்தாயும் விளங்கும் ஆன்மாவின் சதசத்துதன்மை "சார்ந்ததன் வண்ணம்" என்னும் தன்மையால் ஏற்படுவதாகும்.


3)பன்னிறங் காட்டும் படிகம்
சூரியன் கிழக்காகவோ மேற்காகவோ உள்ளபோது படிகக்கல் தனக்குக்கீழ் உள்ள பொருளின் நிறத்தைப் பெற்று அதையே படிகக்கல் முழுவதும் ஊடுருவவிட்டு, அந்நிறமாகய்க் காட்சியளிக்கும். ஆனாலும் சூரியன் நேர் உச்சியில் இருக்கும்போது படிகக்கல்லின் கீழ் எந்நிறப்பொருள் இருந்தாலும் அந்த நிறங்கள் அக்கல்லில் ஊடுருவாது, படிகக்கல் எந்நிறமும் பெறாது, தன் இயல்பான வண்ணமாகவே, சூரியனின் ஒளியோடு ஒளியாகச் சேர்ந்து தோன்றும். அதுபோல் உயிர்களும் திருவருட்சக்தியை விலகியிருக்கும்வரை ஆணவம்,கன்மம்,மாயை என்னும் மும்மலப் பாசத்தோடு இணைந்திருந்து தன்னைப் பாசப்பொருளாகவே கருதிப் பாசமாகவே தன்னை உணரும். திருவருட்சக்தி நேர்பட்டகாலத்தில் பாசப்பொருட்களாகிய கருவி கரணங்கள் ஆன்மாவைத் தாக்கமாட்டாது.உச்சிகதிர்ப் படிகம் ஒவ்வுநாள் எந்நாளோ - தாயுமானசுவாமிகள்


சூரியஒளி நேர்ப்படும்போது சூரியஒளியைப் பெற்று ஒளியாகவே எப்படிப் படிகக்கல் நம்பார்வைக்கு காட்சிதருமோ அதுபோல்  திருவருட்சக்தி பதியப்பெற்ற ஆன்மாக்கள் திருவருட்சக்தி வெளிப்படுமாறு விளங்கும். அத்தகைய ஆன்மாக்களை நாம் குருவாகக் கருதித் தொழுது அத்திருவருட்சக்தியினை நம்முள்ளும் பதியச்செய்ய முடியும். அவ்வாறு திருவருட்சக்தி  பதியப்பெற்ற ஆன்மாக்களை நாம் சிவமாகக் கருதுவது மரபாகும்.

சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ1 நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே. - திருமந்திரம்

பதப்பொருள்:-
சிவனே சிவஞானியாக அமைவதால், தனக்கு உபதேசம் செய்யும் குருவைச் சிவனென்று எண்ணித் திருவடியை அடைவார்க்கு சிவத்தினது தோழமையும் நல்ல முக்தியும் பொருந்தும்.அவர் பிறப்பின்றி மேலான சிவலோகத்தைச் சென்றடைவர்.
(ஜி.வரதராஜன் திருமந்திரம் விரிவுரை)

குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனும் ஆய்க் கோனும் ஆய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே.- திருமந்திரம்

பதப்பொருள்:-
எனது குருமண்டலத்தில் விளங்கும் நந்தி குருவே சிவம் என உபதேசித்தான். குருமண்டலமே சிவனுமாய் உயிருக்குத் தலைவனுமாயுள்ளது. குருமண்டலமே வாக்கு உணர்வைக் கடந்து விளங்கும் அரசனாகும். இத்தகைய பெருமையுடைய குருமண்டலத்தில் சிவம் உள்ளிருந்து விளங்குவதைச் சாமானியர் அறியாதவராக உள்ளார்.
(ஜி.வரதராஜன் திருமந்திரம் விரிவுரை)

இங்கு நீங்கள் அவதானித்தீர்களாயின், பாசமலங்களில் இருந்து நீங்கியவர்களில் திருவருட்சக்தி பதியும் என்பதையும் அவ்வாறு பதியப்பெற்றவர்கள் குருவாக;சிவமாக விளங்குவர் என்பதையும் பார்த்திருப்பீர்கள்!!! ஆக; குருவே சிவம் என்று நாம் போற்றக்கூடியவர்கள்............தங்கத்தை தலையணைக்குள் வைத்திருந்து தங்கச்சங்கிலிகளை வித்தைகாட்டி எடுத்து அரசியல்வாதிகளுக்கு அணிவித்து சொகுசு மகிழூர்ந்தில் சுற்றித்திரிந்தவர்களையோ, தன்னைக் கும்பிடுவதற்கு சிறப்புத்தரிசனக் கட்டணம் என்று வசூலிக்கும் அம்மாபகவான்களோ அல்ல என்பதை நன்றாக விளங்கியிருப்பீர்கள் என்று கருதுகின்றேன்!!! சரி, அடுத்த பகுதியில் ஆன்மாக்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.

முன்னைய பகுதிகள்


மேலும் படிக்க...

Saturday, February 23, 2013

டேவிட் அப்துல்லா பாலமுருகன்! பெரியாரிஷ்டின் சிவலிங்கம்!!!!


எல்லோரும் பெர்ணான்டோவும் பீட்டரும் மைக்கலும் டேவிட்டும் ரகுமானும்,அப்துல்லாவும்,பர்சாட்டும் ஆகிவிட்டால், சுந்தரன் என்றும் வடிவேல் என்றும் பாலமுருகன் என்றும் பெயர் வைப்பது யார்தானோ? தமிழ் அடையாளத்தைப் பேணுவது யார்தானோ? எல்லாச் சமயங்களும் தமிழை வைத்து தம்மை வளர்த்து தமிழ்ப் பெயர்களை மங்கச்செய்கின்றன!!! சைவநெறிதான் தனித்தமிழ் இயக்கம் என்று தமிழுக்காய் உழைக்கிறது!!! ஆனால் பெரியாரிஷ்டுக்களுக்கு டேவிட்டும் அப்துல்லாவும் தெரிவதில்லை......சுந்தரலிங்கம் என்பதில் உள்ள இலிங்கம் மட்டும் கண்ணுக்கு குத்துகின்றது!!!!!!

குறி என்றால் அடையாளம் என்று பொருள். தமிழர் குறி என்றால் தமிழரின் அடையாளம்!! ஆண்குறி என்றால் ஆணின் அடையாளம்!!! இலிக்கம் என்பது குறி என்னும் சொல்லையே தனித்து குறிக்கின்றது. அது கடவுளின் அருவுருவத்திருமேனியைக் குறிக்கப் பயன்படுத்துவதால் குறி என்று அதாவது சங்கதமொழியில் இலிங்கம் என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் இந்தப் பெரியாரிஷ்ட்டுக்களுக்கு "ஆண்" என்றசொல்லை இலிங்கத்திற்குமுன் தாமே இட்டுக்கட்டி இலிங்கம் ஆண்குறியைக் குறிக்கின்றதென்று மோட்டுத்தனமாகப் பிதற்றுகின்றனர்!!! பகுத்தறிவு மட்டுமல்ல படிப்பறிவும் பட்டறிவும் இல்லாத மடையர்கள்!!!!

பெண் ஆண் அலி என்னும் பெற்றியன் காண்க- திரு அணடப்பகுதி(57) திருவாசகம்
இறைவன் ஆண்-பெண்-அலி என்னும் இயல்புகள் அற்றவன் என்று திருவாசகம் படித்திலன் இந்த மூடன்!!!
அதுசரி; தமிழைக் காட்டுமிராண்டிமொழி என்றுசொல்லும் பெரியாரிஷ்ட்டுக்களுக்கு திருவாசகத்தின் அருமை புரியுமா என்ன?
பாலுறவில் ஆண்குறியின் நுனிப்பாகம் பெண்குறியினுள் செல்வதுதானே முறை? சிவலிங்கத்தில் சக்திபீடத்தில் இருந்து அதாவது மோடர்கள் பெண்குறி என்று பிதற்றும் பகுதியில் இருந்து வெளிநோக்கியவாறெல்லவா இலிங்கத்தின் முனைப்பகுதி காணப்படுகின்றது!!!!

படம்1 விளங்கப்படுத்துவது ஆண்குறி பெண்குறியினுள் நுழைவதை! படம்2 பெண்குறியென்று பெரியாரிஷ்ட்டுக்களால் சொல்லப்படும் சக்திபீடத்தில் காணப்படும் இலிங்கம்! இலிங்கத்தின் முனைப்பகுதியோ இங்கு ஆண்-பெண் உடலுறவைக் குறிக்கின்றதென்றால் இயற்கைக்கு முரணாக எப்படி பெண்குறியிலிருந்து வெளிநோக்கியவாறு எப்படி ஆண்குறியின் முனைப்பகுதி இருக்கமுடியும்?

கடைசியில் இவர்கள் நாய்க்கும் பூனைக்கும் உலகிலுள்ள உயிர்கள் அனைத்துக்கும் இறைவன் இயற்கையிலேயே வழங்கிய சேக்கைப்போர் அறிவுகூட இல்லாத மூடர்களாகிவிட்டார்கள்!!!!

சக்தி என்பது வலு(ENERGY) என்பதுதான் பொருள்!!! அதுதான் சித்தாந்தம் சொல்வதும்!!! அந்த சக்தியை பெண்ணுருவாக வழிபடுகின்றனரேயொழிய உண்மையில் அது பெண்ணல்ல!!! சிவலிங்கம் ஆணையோ,பெண்ணையோ,ஆண்-பெண் சேர்க்கையையோ குறிக்கும் என்பது பகுத்தறிவு,படிப்பறிவு,பட்டறிவு,பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் ஏன்....பூக்களுக்கும் புழுக்களுக்கும் இருக்கும் பாலுறவு தொடர்பான இயற்கை அறிவுகூட இல்லாத பெரியாரிஷ்ட்டுக்களின் மோட்டுத்தனம் என்பது வெள்ளிடைமலை!!!

வெய்யிலுக்குள் கருப்புச்சட்டை அணிவது கூடாது என்பது விஞ்ஞானம்!!! அதைத்தான் சமயமும் கருப்பாடை அணிவதைத் தவிர்க்கச் சொல்லியது!!! ஆனால் மோட்டுத்தனத்தின் உச்சத்தில் விஞ்ஞானப்பாடத்திட்டத்தில் சிறுவயதிலேயே கருப்பு வெய்யிலுக்கு கூடாது என்று சொல்லிக்கொடுத்தும் திருந்தாது கருப்புச்சட்டை போட்டுத்திரியும் வடிகட்டின முட்டாள்களுக்கு இந்தப் கட்டுரையால் ஏதேனும் பயன் உண்டாகுமா?

இலிங்கத்துக்குத்தான் வெள்ளைக்காரர் பிழையான பொருளைக் கொடுத்தமையால் இந்த மோட்டுச்சாம்பிராணிகள் தவறாகப் பொருள்கொள்கின்றனர் என்று வைத்துக்கொண்டால் ஆவுடையப்பன் என்ற பெயருக்கு எப்படி ஒரு பொருள்கண்டுள்ளார்கள் என்று பார்த்தீர்களா?
பெண்குறிக்கு அப்பன்!

இந்த மோட்டுச்சாம்பிராணிகளுக்குத் தமிழ்படிப்பித்துக் கொடுத்த தமிழாசான் யாரோ? அதுசரி தமிழைக் காட்டுமிராண்டிமொழி என்ற கன்னடரின் அடிபொடிகளுக்கு எப்படித் தமிழ் தெரியும்?

ஆவுடையப்பன்
ஆ-பசு (தமிழில்)
பசு என்பது உயிர்களை சைவசமய இலக்கியங்களில் குறிக்கும்!
உயிர்களுக்கு தந்தையாக விளங்குபவர் என்பதுதான் அதன் இயல்பான/வெளிப்படையான பொருள்!!! இதில் எந்தச் சொல்லுக்கு பெண்குறி என்று பெரியாரிஷ்ட்டு மூடன் பெயர்வைத்தான் என்று என் படிப்பறிவுக்கும் பகுத்தறிவுக்கும் பட்டறிவுக்கும் விளங்கவேயில்லை.....யாரேனும் தமிழாசிரியர்கள் சொல்லித்தருவார்களா?

"ம்மா" என்றுதான் குழந்தை பிறந்தவுடன் அழைக்கின்றது!!! பஞ்சணைப்போரிலும் இதே ஒலிதான் என்று பட்டறிந்தோரும் அறிவர்! அகநானூறு படித்தோரும் அறிவர்!!!
நல்ல காலம் அம்மா என்றசொல் ஆபாசமென்று தமிழைக் காட்டுமிராண்டியென்று சொன்ன ஈ.வெ.ராவின் அடிபொடிகள் சொன்னாலும் சொல்வார்கள்!!!! கவனம்!!!

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள் ஒரு சைவசித்தாந்தி! திருவள்ளுவர் ஆண்டு நடைமுறையைக் கொண்டுவந்தவர்கள் சைவசித்தாந்திகளே! தமிழ் செம்மொழி ஆனதென்றால், அது தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம்பிள்ளை,ஆறுமுகநாவலர் பெருமான் போன்ற சைவசித்தாந்திகள் தமிழேடுகளைத் தேடித்தேடி அலைந்து கண்டெடுத்து பதிப்பித்ததினாலேயே!!! தமிழ் செம்மொழி ஆனதென்றால் அது சைவாதீனங்கள் காத்துவைத்திருந்த சைவ-சமண-பௌத்த இலக்கியங்களினாலேயே!!! இந்தப் ஈ.வெ.ரா  தமிழ் இலக்கியங்களை அழித்துவிடு என்றார்!!! திருக்குறளைத் திட்டித்தீர்த்தார்!!! 

ஆக; பெரியாரிஷ்ட்டுக்களிடம் வேண்டுவது யாதெனில் தமிழை எப்படிப் பாதுகாக்கவேண்டுமென்று திராவிட இயக்கங்களைவிட சைவத்தமிழருக்கு நன்றாகத் தெரியும்!!!! நீங்கள் உங்கள் மணியம்மை-குஷ்புவம்மை விடயங்களை இரசித்துக் கதைத்து காலத்தைக் கழியுங்கள்!!!! அதுபோதும்!!!!

மேலும் படிக்க...

Monday, January 21, 2013

குமுதம் பக்தியின் தராதரமும் இலங்கை நல்லூரும்


இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் நல்லூர் முருகன் கோயில் உள்ளதென்று பெரும்பகிடியை உருவாக்கியுள்ளது குமுதம் பக்தி ஷ்பெஷல் "ஜனவரி 16-31,2013".
கொழும்பு இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது. நல்லூர் இலங்கையின் வடக்கில் உள்ளது. அதாவது யாழ்ப்பாணத்தில் உள்ளது. இலங்கையில் நில அமைப்புக்களைப் பற்றியும் சமயப்பண்பாட்டுப் பழக்கவழங்கங்களைப் பற்றியும் கொஞ்சம்கூட அறிவேயில்லாது கட்டுரையை எழுதியுள்ளார் கட்டுரையாளர். பாவம்! அவர் மட்டுமா? அங்குள்ள அத்தனை சைவ- இந்து அமைப்புக்கள் யாவும் இதே போக்கைத் தான் கொண்டிருக்கின்றன. இல்லாவிட்டால், கொத்துக் கொத்தாக மரணங்கள் அரங்கேறியபோது, அடடா....எம் இனக்காரன்....எம் மதக்காரன் இப்படி அழிகிறானே என்று சிந்தித்து இருப்பார்களல்லவா?


புதுடெல்லியில் உள்ள மதுரை மீனாட்சி கோயில் என்று ஒருவர் கட்டுரை எழுதினால், அவருடைய அறிவை என்னவென்று சொல்வீர்?  கொழும்பில் நல்லூர் உள்ளதென்று கூறியதன் மூலமாக அப்படியொரு பிழையைத் தான் கட்டுரையாளர் ஏற்படுத்தியுள்ளார்!!! அத்தோடு இன்னொரு இட்டுக்கட்டு வேறு!!! தைப்பூசத்தன்று கிருஷ்தவர்களும் இஸ்லாமியர்களும் பங்குபற்றுகின்றனர் என்று!!! அந்த நல்லூரானைத்தான் கேட்க வேண்டும்!!!

இலங்கைச் சமயப்பண்பாடுகளில், குமுதம் மட்டுமல்ல........சின்மியாமிஷன், இரவிசங்கரின் மிஷன்,அம்மாபகவானின்( தன்னைக் கும்பிடுவதற்கு தானே  காசு வசூலிக்கும் ஒரே கடவுள்!!!!) தொண்டர் அமைப்புக்கள், சாயிபகவான் சங்கங்கள் எவருக்கும் எள்ளளவும் அறிவில்லை! இலங்கைத் தமிழரின் உண்மையான துயரிலும் இவர்களுக்கு அக்கறையில்லை! எல்லோரும் தாம்தாம் இங்கு பரப்பவந்ததை பரப்பி, தமிழ்ச்சைவப் பண்பாட்டை சிதைத்து கலப்பட இந்துத்துவத்தை உருவாக்குவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன! இராமகிருஷ்ணமிஷன் இதில் பெருமளவு விலகி, அறப்பணிகளில் தனது பார்வையை அதிகம் செலவிடுவது பாராட்டுக்குரியதே!!!


பங்களாதேசில் பங்களாதேசிய பௌத்தருக்கு அடித்தார்கள் என்று இலங்கையில் பங்களாதேசின் தூதுவரகத்துக்கு கல்லெறி விழுகின்றது!  இலங்கை சிங்கள பௌத்தர்கள் எல்லோரும் கொந்தளித்து எழுகின்றனர்! பங்களாதேசிய பௌத்தரும் இலங்கை பௌத்தரும் மொழியால்,இனத்தால்,நாட்டால் வேறுபட்டவர்கள்! மதத்தால் ஒன்றுபடுகின்றனர்!!!


ஆனால், இலங்கையில் இயங்கும் இந்திய இந்து அமைப்புக்கள் இலங்கைச் சைவப்பண்பாட்டை அறிந்துகொள்ள முயற்சிக்காது, "இந்துக்கள் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் வாரீர்" என்று முழங்குகின்றனர்! நாமும் புல்லரிக்கின்றோம்!!! ஆனால் அதே அமைப்புக்கள் இந்தியா முழுதும் இயங்கினாலும்,"நம் இந்துக்களுக்கு இலங்கையில் இடர்" என்று முணுமுணுக்கக்கூட இல்லை!!!! என்னே ஒற்றுமை!!!! இந்துத்துவ ஒற்றுமை இதுதான்!!! இந்த ஒற்றுமைக்காகத்தான் நாம் "சைவம்" என்ற சொல்லையே மறந்து இந்துக்களாக உருமாறினோம்!!! என்னே வெட்கம்!!!
மேலும் படிக்க...

Saturday, January 19, 2013

ஆபிரகாமியச் சாத்தானும் சைவசித்தாந்த ஆன்மாவும்-சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 11

ஆன்மாவின் இயல்பு என்ன?
ஆன்மாவின் இயல்புகள் சதசத்தும்சிதசித்தும் ஆகும்.

சத்து என்றால் என்ன
?
என்றும் ஒரே தன்மையுடையதாய்
 ; நித்தியமானதாய்(என்றும் உள்ளதாய்) இருக்கும் தன்மை சத்து எனப்படும்.
அசத்து என்றால்  என்ன?
என்றும் ஒரே தன்மையற்றதாகவும் நித்தியமற்றதாகவும் இருக்கும் தன்மை.
இறைவன் சத்து தன்மையுடையவர்.

 ஆனால் ஆன்மா?
ஆன்மாவும் என்றும் நித்தியமானது. எனவே சத்து என்று சொல்ல எத்தனிக்கலாம். ஆனால் ஆன்மா சத்து இல்லை.ஏனெனில் என்றும் ஒரே தன்மையில் ஆன்மா இருப்பதில்லை. பிறப்பெதுவும் எடுக்கமுதல்கேவலநிலையில் ஆணவமலத்துடன் இணைந்திருந்தும்பெத்தநிலையில்(பிறப்புக்களில் உழலும் நிலையில்கன்மம்,மாயை என்னும் ஏனைய மலங்களுடன் இணைந்துஉடம்பின் இயல்பையே தன்னியல்பாகக் கருதியும்முக்தி நிலையில் சிவானந்தத்தில் மூழ்கியும் என்று ஆன்மாவின் தன்மை பலவாறு மாறுபடும். 

என்றும் நித்தியமாய்(என்றும் உள்ளதாய்) இருப்பதால் ஆன்மாவை அசத்து என்றும் கூறமுடியாது.
எனவே ஆன்மா சதசத்து எனப்படும். அதாவது ஆன்மா சத்தும் இல்லை. அசத்தும் இல்லை. இரண்டினிலும் மாறுபட்ட தன்மையுடையது.

சித்து என்றால் என்ன?
தானே அறியும்;முற்றும் உணரும்;ஒருங்கே அறியும்,இடைவிடாது அறியும்எதனிலும் அழுந்தாது அறியும் இயல்பு. இது சித்து எனப்படும். இது இறைவனின் இயல்பாகும்.

அசித்து என்றால் என்ன?
அறியும் ஆற்றலுமில்லை. அறிவித்தால் அறியும் ஆற்றலுமில்லை. ஆகசடப்பொருள்!
அப்படியானால் ஆன்மா சித்துத்தன்மையுடையதா?
தானே அறியும் ஆற்றல் ஆன்மாவுக்கு இல்லை. 
எனவேஆன்மா சித்து இல்லை.

அப்படியானால் ஆன்மா அசித்துத்தன்மையுடையதா?
இறைவனால் அறிவிக்க அறிந்துகொள்ளும் இயல்புடையது.
ஆன்மா அறிவினைப் பெறுவதற்குபெத்தநிலையில் கருவி,கரணங்கள் அவசியமாகின்றது. அதாவது ஐம்பொறிகள்,ஐம்பூதங்கள் என்பனவற்றின் உதவியினாலேயே அறிவினைப் பெறுகின்றது.அதுவும் சிவப்பரம்பொருள் ஆன்மாவோடு ஒன்றாய்,வேறாய்,உடனாய் சுத்தாத்வைதமாக இருப்பதாலேயே சாத்தியமாகின்றது.

முக்திநிலையிலும் 
ஆன்மா சிவானந்தத்தை அனுபவிப்பதற்கு சிவபெருமானின் திருவருட்கருணையே கருவியாக தொழிற்பட்டு, ஆன்மாவுக்கு சிவானந்தத்தை நுகர வழிசமைக்கின்றது.

உதாரணத்துக்கு
மாணவன் ஒருவன் ஆசிரியரின் துணையின்றி கற்றுக்கொள்ளும் ஆற்றலுடையவன் என்றால்ஆசிரியரின் தேவை அவனுக்கு இருக்காது. ஆசிரியரின் தேவையில்லாதவனுக்கு ஆசிரியர்மேல் அன்பும் மரியாதையும் எங்கனம் வரும்?
ஆன்மாவாலும் தன்னுடைய ஆற்றலால் சிந்திக்க,செயற்பட முடியுமென்றால் "இறைவன் என்பவன் ஆன்மாவுக்கு எதற்கு?" என்ற கேள்வி எழுந்துவிடுகின்றது. ஆன்மாவுக்கு என்னால் முடியும் என்ற ஆணவம் மேலும் வளர்ந்து கொள்ளும். பிரகலாதன் கதையில் வரும் இரண்யனின் கதை இதையே விளக்குகின்றது. 
ஆபிரகாமிய சமயங்கள் சொல்வதுபோல்இறைவனிடம் இருந்து எம்மை சாத்தான் பிரித்தெடுத்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளமுடியுமென்றால் இறைவனின் ஆளுமை கேள்விக்குறியாகிவிடுகின்றதெல்லவாஆபிரமாகியசமயங்கள் சொல்லும் சாத்தான் என்பதுகடவுளின் இயலாமையையே விளக்குகின்றன. சாத்தான் என்பவன் கடவுளைமீறி சிலரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பான் என்றால்கடவுளின் இயலாமை அங்கு வெளிச்சமாகின்றது.
அதாவது இறைவனின் இச்சைக்கு எதிராக இயங்கும் ஆற்றலுடைய சாத்தான் ஒருவன் உள்ளான் என்னும் ஆபிரகாமியசமயங்களின் தத்துவங்கள் கடவுளின் ஆற்றலை கேள்விக்குறியாக்குகின்றன.

இதில் என்ன வேடிக்கை என்றால், 
ஆபிரகாமியமதத்தவர்களின் சம்பாசணையில் சாத்தானின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள்தான் சைவர்களும் ஏனைய பாரதவேதநெறிச் சமயத்தவர்களும் என்ற காழ்ப்புணர்வுக் கதைகளைத் தாராளமாகக் காணலாம்

ஆளுமையற்ற கடவுளுக்கு அடிமையாவதிலும் ஆளுமைகொண்ட சாத்தானுக்கு அடிமையாவது மேல் என்று நம்மவர்கள் சிலர் என்னிடம் தமது உள்ளக்கிடக்கையை முசுப்பாத்திப்பாணியில் 
தெரிவித்திருந்தனர். அதுசரி ஆளுமையற்ற இறைவன் என்னும்போது ஒரே முசுப்பாத்திதான்!!!!
ஆன்மா அசையவேண்டுமென்றாலும் சரிசிந்திக்க வேண்டுமென்றாலும் சரிசடமாகிய மலங்களும் அவைசார்ந்த வினைகளும் இயங்க வேண்டுமாயின் சரிஅண்ட சராசரங்களிலுமுள்ள அணுக்கள் ஒவ்வொன்றும் அசைய வேண்டுமென்றாலும் சரிநன்மையோ தீமையோ அத்தனையும் நடைபெற வேண்டுமாயினும் சரிசிவபெருமானின் தயவு தேவையாகின்றது. அவை அனைத்தோடும் இறைவன் ஒன்றாய்,வேறாய்,உடனாய் நின்று அவற்றை இயக்குவிக்கின்றான். ஆகஅவனின்றி அணுவும் அசையாது என்கின்றது சைவசித்தாந்தம்.

இறைவன் ஆன்மாவுடன் ஒன்றாய்
,வேறாய்,உடனாய் இரண்டன்மையாக (சுத்தாத்வைதமாக) விளங்கி ஆன்மா அறிவுபெற வழிவகுக்கின்றான்.
"அவனருளாலே அவன்றாள் வணங்கி" சிவபுராணம் (திருவாசகம்)

சிவம் இல்லாவிட்டால் எல்லாம் சவம் என்று சும்மாவா சொன்னார்கள் நம் சான்றோர்?
அறிவித்தால் அறியும் தன்மை ஆன்மாவுக்கு இருப்பதால்
ஆன்மா ஒரு அசித்து அல்ல. எனவே சித்தும் அல்ல. அசித்தும் அல்ல.இரண்டினும் வேறுபட்டதன்மையுடையது. இத்தகைய ஆன்மாவின் இயல்பை சிதசித் என்பர். 
எனவே, ஆன்மா சதசத் ஆகவும், சிதசித் ஆகவும் விளங்குவதை சைவசித்தாந்தம்  செவ்வனே தெளிவுபடுத்துவதை நாம் உணரலாம். ஆன்மாக்கள்பற்றி மேலும் விளங்கிக் கொள்வதற்கு மும்மலங்கள்பற்றிய விளக்கம் அவசியம் என்று கருதுகின்றேன்.எனவே; அடுத்தபகுதியில் மும்மலங்கள் பற்றி எம்பெருமானின் திருவருட்சம்மதத்துடன் பார்ப்போம்.

முன்னைய பகுதிகள்

மேலும் படிக்க...

Thursday, January 10, 2013

ஏன் பிறந்தோம்? சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 10

கடந்தபகுதியில் உயிர்கள் எக்காலம் தொட்டு உண்டு என்று பார்த்தோம். இப்பகுதியில் உயிர்களுக்கு ஏன் பிறவி வாய்த்தது என்று பார்ப்போம்.

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 1
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 2
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 3
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 4
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 5
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 6
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 7
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 8
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 9  


ஆன்மாக்களின் மூன்று நிலைகளும் எவை?

கேவலநிலை - ஆன்மா ஆணவமலத்துடன் அநாதிகாலந்தொட்டு இருக்கும்நிலை. பிறப்பு இறப்பு என்னும் சக்கரத்துள் வரமுன்னரான நிலை.

பிறப்பு இறப்பு என்பது ஆன்மாவுக்கு பக்குவத்தை ஏற்படுத்தி
, பாசமலங்களை அழியச்செய்து முக்தியெனும் சிவானந்தத்தை நுகரச்செய்வதற்கு இறைவன் வழங்கிய பரிசு. ஆக; அந்தப்பரிசு வாய்க்கப்பெறாத நிலை!

இந்நிலையில் ஆணவமலப்பிடிப்பால், தன்னோடு ஒன்றாய்,உடனாய்,வேறாய் உள்ள எம்பெருமானை ஆன்மா உணரமுடியாது பார்வையற்ற தேனீபோல் தத்தளித்துக்கொண்டிருக்கும்.

பெத்தநிலை - பிறப்புக்களில் உழலும் நிலை.

முக்திநிலை - பாசமலங்கள் யாவும் அறுபட்டு
, சிவானந்தத்தை நுகரும் நிலை.
ஆன்மாவுக்கு ஏன் பிறவி வந்தது?
ஆன்மாக்கள் அநாதிகாலந்தொட்டு, ஆணவமலத்துடன் இணைந்திருப்பதனால் பார்வையற்ற தேனீபோல் தவித்துக்கொண்டிருப்பன.இந்தநிலையை கேவலநிலை என்று பார்த்தோம்.
தன்னோடு ஒன்றாய்,வேறாய்,உடனாய் அநாதிகாலந்தொட்டே உள்ள சிவப்பரம்பொருளை உணரும் பேறு இந்நிலையில் அவற்றுக்கு இல்லை.
எனவே, இறைவன் ஆன்மாக்களிற்கு நன்மையளித்திடும்பொருட்டு, பிறப்புக்களில் உழல வைத்து, கன்மம் மாயை ஆகிய மலங்களை சேர்ப்பித்து, உலக இன்ப-துன்பங்களை அனுபவிக்கச்செய்து,மலங்கள் யாவையும் கெடச்செய்கின்றார்.

சடப்பொருள் ஒன்று இயங்க இயங்கத் தேய்வடைவதுபோல், ஆன்மாக்களை அநாதிகாலந்தொட்டு பீடித்துள்ள ஆணவம் பிறவிகள் தோறும்  ஆன்மாக்கள் பெறுகின்ற அனுபங்களினூடாக விளைகின்ற பக்குவத்தினால் நலிவடையும். ஆக; பிறப்பு என்பது ஆன்மாக்களின் நன்மையின் பொருட்டு, இறைவன் அருளும் பரிசுதான்!

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே." -மாணிக்கவாசகர்


இப்பாடலை நெஞ்சுக்குள் நிறுத்தி உள்ளத்தால் உருகி படித்தால் இப்பாடலில் சூட்சுமமாக சொல்லப்பட்டுள்ள உண்மை புலனாகும்.

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை
 -முக்திநெறி அறியாத மூர்க்கரோடு இருந்த என்னை என்பது பொருளாகும். அதாவது ஆணவமலத்துள் அழுத்தி கண்ணில்லாத தேனீபோல் தத்தளித்து துன்பப்பட்டுக்கொண்டிருந்த தன்னை என்று பொருள் கொள்க.

பத்திநெறி அறிவித்துப் -பக்தி வழியைக் காட்டி -தனு,கரண,புவன போகங்களைப் படைத்தருளி அதனை அனுபவிக்கச் செய்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிதந்து பக்தி மார்க்கம் தந்து அதனூடாக

பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்து-பழைய வினைகள் எல்லாம் கெட்டொழியும்படி அறிவை பற்றியுள்ள மூலமலத்தை(ஆணவமலத்தை) போக்கி 

சிவமாக்கி எனையாண்ட  - சிவமாக்கி என்னை ஆட்கொண்ட - சிவத்தன்மையாக்கி என்னை ஆட்கொண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார்  அச்சோவே - இறைவன் பெருங்கருணையினால் தானே வந்து தனக்கு அருளிய அத்தகைய அருமையை யார் தான் பெறுவர்!  

ஆணவமலத்துள் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த தன்னை அதிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இறைவன் ஆன்மாவாகிய தன்மீது கொண்ட பெருங்கருணையின் நிமித்தம் தன்னை தனு,கரண,புவன போகங்களை அனுபவிக்கச் செய்து பிறவிகள் தந்து அதனூடாக பக்குவப்படவைத்து இன்பம்-துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்கின்ற அருமையை ஏற்படவைத்து கன்மம்,மாயை ஆகியவற்றை உதரவைத்து மூலமலமாகிய ஆணவமலத்தை தானே முன்வந்து நீக்கி சிவமாக்கி நிலையான பேரின்பத்தை தந்தருளிகின்றான் என்பதை சூட்சுமமாக இப்பாடலில் உணர்த்துகின்றார் மாணிக்கவாசகர். 

ஆக
; நாம் பிறவிகளைப் பெறுவது இறைவன் நம்மீது வைத்த கருணையினாலேயே ஆகும்.
ஐம்பொறிகளைப் பயன்படுத்தி ஐம்பூதங்களின் வழியாக இறைவனின் அருமையை உணரக்கூடிய பேறு பெற்றிருக்கும் நிலை. இந்த பெத்தநிலை என்பது ஆன்மாவுக்கு இறைவன் கொடுத்த பரிசு. அப்பர் பெருமான் பெத்தநிலையாகிய இப்பரிசை தவறாகப் பயன்படுத்தாது முறையாகப் பயன்படுத்துமாறு தேவாரத்தினூடாக நமக்கு தெரிவிக்கின்றார்.


தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.

கண்காள் காண்மின்களோ - கடல் 
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.

செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் 
செவிகள் கேண்மின்களோ.

மூக்கே நீமுரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீமுரலாய்.

வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்.

நெஞ்சே நீநினையாய் - நிமிர் 
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய்.

கைகாள் கூப்பித்தொழீர் - கடி 
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.

ஆக்கை யாற்பயனென் - அரன் 
கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் 
வாக்கை யாற்பயனென்.

கால்க ளாற்பயனென் - கறைக் 
கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் 
கால்க ளாற்பயனென்.

உற்றா ராருளரோ - உயிர் 
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றார் ஆருளரோ.

இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
கிறுமாந் திருப்பன்கொலோ.

தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்.


ஊனால் அடைக்கப்பபெற்றுள்ள உடம்பாகிய இப்பிறப்பைக் கொண்டு தில்லையில் திருநடனம் செய்யும் இறைவனின் திருவடிகளைக் கண்டு வணங்குவோமேயானால், அப்பிறப்பால் இப்பூமிக்கு வந்தடைந்தன் நோக்கத்தை அடைந்திடலாம் என்று இறைவன் தந்த பிறவியென்னும் பரிசை முறையாகப் பயன்படித்திட வேண்டும் என்று சேக்கிழார் பெருமானும் அறிவுறுத்துகின்றார்.

ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியைச் சாருமால்
தேன் அடைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
மா நடம்செய் வரதர்பொன் தாள்தொழ   -பெரியபுராணம்

அடுத்த பகுதியில் ஆன்மாக்களின் இயல்புகளைப் பார்ப்போம். எல்லாம் திருவருட் சம்மதம்.

மேலும் படிக்க...