"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, July 31, 2008

ஈழச்சைவக்குடிமகனின் பார்வையில்.........................

என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற அப்பரின் சரியையும் ஞானப்பால் குடித்த திருஞானசம்பந்தரின் கிரியையும் ஒருங்கே தனது வாழ்வியலில் கடைப்பிடித்து சைவவாழ்விற்கு இலக்கணமாய் தனது வாழ்வியலை சைவ உலகிற்கு சமர்ப்பணம் செய்த திருநாவலர் பெருமானின் அவதாரபூமியாகிய ஈழவளநாடு எண்ணற்ற சைவ சான்றோர்களையும் சிவதொண்டர்களையும் காலத்துக்குகாலம் பெறுவது சிவபூமி இதுவென திருமூலர் நவின்றதை உறுதிப்படுத்துகின்றது எனலாம்.திருநாவலரின் காலத்தின்பின்னர் சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார், சேர்.பொன்.இராமநாதன் போன்ற சைவச்சான்றோர்கள் காலத்தால் மறக்கமுடியாத சமூகத்திற்காய் வாழ்ந்த சிவனடியார்கள். அவர்களின் பின்? கிழக்கு சுவாமி தந்திரதேவானந்தாவையும் வடக்கு அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியையும் பெற்றிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.கிழக்கில் 2005ம் 6ம் ஆண்டு காலப்பகுதிகளில் மறைந்த மட்டக்களப்பு இராமகிருசுணர் மடத்தலைவர் அவர்களின் சேவையையும் கிழக்கு சைவசமூகம் மறக்கவாய்ப்பேயிருக்காது.
இங்கு, அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியை இக்காலத்துக்குரிய ஈழத்து சைவ அடையாளமாக சைவர்கள் பார்த்தார்கள் என்று கூறலாம். தமிழகமுதலமைச்சரின் அனுதாபச்செய்தி ஈழத்தின் அடையாளமாக அன்னை இருந்துள்ளார் என்பதை ஆணித்தரமாக உறுதியாக்கியுள்ளது எனலாம். ஆனால் என்னதான் சொன்னாலும் சைவத்தமிழ் சமூகம் அன்னையை ஈழத்து தமிழ் அடையாளமாக பயன்படுத்த தவறிவிட்டது என்பது மறைக்கமுடியாத உண்மையாகும். கிருத்தவபாதிரிமார்கள் தமிழரின் ஆன்மீக அரசியல் அடையாளமாக சித்தரிக்கப்பட்டுவருகையில் அனைத்து தகுதிகளையும் கொண்டிருந்த அன்னையை அவ்வாறு பயன்படுத்த தவறிவிட்டது வெட்கப்படவேண்டிய ஒன்று.(கிருத்தவபாதிரிமார்கள் போர்ச்சூழலில் ஆன்மீக அரசியல் அடையாளத்தை பயன்படுத்தி மதமாற்றத்தில் சுறுசுறுப்பாக இருந்தாலும் அவர்களுடைய தக்கதருணத்தில் மக்களோடு மக்களாய் நின்று வழங்கும் சேவையை மத அடையாளம் கொண்டு நான் மறைக்கவிரும்பவில்லை.அவ்வாறு செய்தால் ஜீ.யு.போப் வீரமாமுனிவர் ஆகியோருக்கும் அன்னையாய் விளங்கிய தமிழ் என்னை மன்னிக்க மாட்டாள். ) அல்லது நமக்கு ஏன் உந்தவம்பு என்று அன்னை நினைத்து கொண்டாரோ...........ம்ம்ம்!ஆனால் ஒன்று, கிருத்தவர்களுக்கும், இசுலாமியருக்கும் மதரீதியான அரசியல் பாதுகாப்பரண் உண்டு. சைவர்களுக்கு "இந்து"மாமன்றம் செயற்படுகின்றது என்று கூறலாம். ஆனால் யுத்தசூழ்னிலையில் மக்களோடு மக்களாய் நின்று சேவைசெய்யும் சைவப்பிரதிநிதிகள் இல்லையென்றுதான் கூறவேண்டும். எங்கள் மதகுருமார்கள்............குடும்பம் குட்டியென்று பாதுகாப்பாய் ஓடவேண்டியனிலை.ம்ம்ம்........இவர்களும் பாவம் தான்! அரசியல்ரீதியான பாதுகாப்பு கவசம் இவர்களிடம் இல்லையே!காலியில் உயிரோடு கோயில் ஐயரை எரித்ததை கேட்பதற்கு என்ன.........போப் பாண்டவர் வரவா போறார்? அல்லது இந்தியா ஆரியச்சதியின் அத்திவாரமான சங்கரமடமா வரும்? இனிமேல் சங்கரமடத்தை நினைத்தே பார்க்கமுடியாது. அதுவே இந்தியப்பிரதமரையே நடுங்கவைக்கும் ஜெயலலிதாவின் கடும் நடவடிக்கையில் இறையே......இறையே......இறையே......என்பதற்குப்பதிலாக சிறையோ.......சிறையோ.......சிறையோ.......என்று இருக்கின்றது. 83கலவரத்தின்போது கொழும்பில் பலதமிழரைத்துரத்திக்கொண்டு கொழும்பு இராமகிருசுணர் மடத்தை நோக்கி வந்த காடையர்கள் அங்கிருந்ததுறவியைக்கண்டதும் திரும்பி சென்றுவிட்டனர் என்று செவிவழிச்செய்தியாய் நான் கேட்டதுண்டு. துறவிக்கு பிள்ளையில்லை.........குட்டியில்லை; ஆதலால் மக்களுக்காய் நிற்கும் திறனும் இயல்பாய் உருவாகும்.(துறவியர் எல்லோரும் சமயகுருவாக முடியாது. சமய பிரதிநிதியாக அவர்களைக் கருதலாம். சிவாகமங்கள், சைவசித்தாந்தம் யாவையும் கற்றுத்தேர்ந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட துறவியர் சைவசமய குருமாராக உருவாகவேண்டியது அவசியமாகும்.)

கோயிலில் மணியடிப்பவர், மாலை கட்டுபவர், கோயிலை சுத்தம் செய்பவர் ஆகியோர் செய்வது சரியைத்தொண்டு.ஐயர்மார் செய்வது கிரியைத்தொண்டு. சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகிய இந்த நான்கு மார்க்கங்களுமே ஒன்றுக்கொன்று நிகர். அப்படியானால் கோயிலில் மணியடிப்பவர், மாலை கட்டுபவர், கோயிலை சுத்தம் செய்பவர் எல்லோருமே சமயகுருவாகிவிடுவர். எனவே சமயகுரு என்பவர் யார் என்பதில் தெளிவுபெறுவது அவசியமாகும். கட்டுரை பாதைமாறிச்செல்வது புரிகிறது.

மீண்டும் விடயத்திற்கு வருகின்றேன். 2002 சமாதான காலத்தில் யாழ் செல்லும் பாக்கியம் எனக்குகிட்டியிருந்தது. அவ்வேளை, தெல்லிப்பளைக்கு சென்றிருந்தேன். அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் அருமையை அவருடைய படம் இல்லாத தெல்லிப்பளை வீடுகள் கண்ணில்படுவது அருமையாய் இருந்தது கண்டு உணர்ந்துகொண்டேன். தெல்லிப்பளை ஆலயத்திற்கு சென்றபோது அன்னையைக்காணும் பாக்கியமும் பெற்றேன். சிலர் ஆலயத்துள் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியிடம் சென்று வீழ்ந்து வணங்கு என்றனர். ஆலயத்துள் ஒருவரின் காலில் இன்னொருவர் வீழ்ந்துவணங்குவது கூடாதசெயல் என்று அன்று நான் அறிந்திருக்கவில்லை. நின்ற கூட்டத்தினை சமாளித்துக்கொண்டு அன்னையை அடைந்துவிட என்னால் முடியவில்லை.அங்கு நின்றவர்கள் ஆலயத்திருவிழாக்கூட்டமே ஒழிய அன்னையை நெருங்குவதற்கான கூட்டமில்லை. அன்னை தன்பாட்டிற்கு ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார்.அப்போது மெல்ல எனக்கு புரியத்தொடங்கியது இங்கு நிற்கும் கூட்டம் தெல்லிப்பளை மக்கள் திரள் என்று. அமைச்சர்களுக்கு அரசனைப்பார்ப்பதில் புதினமிருக்காது. அது இயல்புதானே! (இன்று ஆலயத்தினுள் அர்ச்சகரின் காலில் விழுந்து வணங்குதல்.........அவர் இவர் என்று காலில்விழுந்து கும்பிடுதல்.......சாதரண நிகழ்வுகளாகிவிட்டன. வணக்கத்தைப்பெறுவோர் கூட வணங்குபவர்களிடம் எடுத்துவிளக்குவது இல்லை. ஏன் ஆலயத்தில் அப்படி செய்தல் ஆகாது? ஆலயத்தினுள் எல்லோரும் சமன். வணக்கத்திற்குரிய ஒரே ஒருபொருள் ஆலய இறைவன்.)பின்னர் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டிபற்றி அறியும் ஆவலில் என் தெல்லிப்பளை உறவினர்களிடம் கேட்டறிந்துகொண்டேன்.சைவத்தை சிதைக்கும் நோக்கில் சைவத்தில் இல்லாத ஆஞ்சனேயர் வழிபாட்டை அன்னை ஆதரித்தார் என்னும் செய்திகேட்டு வருந்திய சைவக்குடிமக்களில் நானும் ஒருவன்.(1995களில்த்தான் இலங்கைக்கு ஆஞ்சநேயர் வழிபாடு அறிமுகப்படுத்தப்பட்டது.) சேர்.பொன்.இராமநாதன் புகழை பேசும் சமூகம் அவர்விட்ட தவறுகளை (புத்தளத்தமிழரை கவனிப்பாரன்றி கைவிட்டமை, இலங்கைத்தமிழரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியமை) "ஏன் அவர் அப்படிச்செய்திட்டார்?" என்று நெஞ்சில் மீட்டு கவலையடைவதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. அதுபோல் அன்னைவிட்ட இந்தந்தவறு அடுத்தசந்ததிக்கு "சைவம்" என்னும் சொல் நமது புழக்கத்தில் இருந்ததே தெரியாமல் போய்விடும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. அடுத்த சந்ததி "ஏன் அவர் அப்படிச்செய்திட்டார்?" என்று அன்னையை நோக்கி கேள்வி கேட்பது அன்னையின் மகத்துவத்திற்கு அழகும் இல்லை. பல கொழும்பு பணக்கார "இந்து" நிறுவனங்களை பகைத்திட்டால் ஆலய அறசெயல்களுக்கான நிதிக்கு ஆபத்துவந்துவிடும் என அஞ்சினாரோ தெரியவில்லை.

சிவபதம் அடைந்த அன்னை நிச்சயமாக ஈழப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் சைவத்தை பணக்கார சுமார்த்ததிடம் இருந்து பாதுகாப்பதற்கும் ஆயிரம் நாவலர்களின் பிறப்பிற்கு சிவபெருமானிடம் வரம் கேட்டிருப்பார் என்று திடமாக எண்ணி அன்னையின் சிவலோகவாழ்வை உள்ளத்திலே கண்டு சிவானந்தம் அடைவோமாக.

சுவாமி தந்திரதேவானந்தா, அமெரிக்காவில் பிறந்த வெள்ளைக்காரராகிய இவர் வேதநெறியில் ஈர்ப்புக்கொண்டு, வேதங்கள், உப நிடதங்கள் எனயாவும் கற்று இந்துத்துறவி/வேதத்துறவியாக மாறி திருகோணமலையில் சிவதொண்டு ஆற்றிய மகான். இவர் அமெரிக்கா வெள்ளைக்காரராக இருந்ததன்மையினால் கிருத்தவத்தின் நெளிவு சுழிவுகள் யாவும் அறிந்திருந்தார். அதன்மூலம் மதம்மாற்றிகளின் பிரச்சாரங்களை தவிடு பொடியாக்கினார். சுவாமி மதம் மாற்றும் தரகர் கூட்டத்திற்கு சிம்மசொப்பனமாக விளங்கினார் என்றால் மிகையாகாது.அவருடைய சொற்பொழிவுகளை வாசிக்கும் பேறு பெற்றிருந்தேன். அவருடைய சொற்பொழிவு மூலம்தான் கிருத்தவம் கிருத்துவுக்கு முன்னர் 5000ஆண்டில்தான் உலகம் தோன்றியதாக கூறுகின்றது என்று அறிந்துகொண்டேன்.( வேத உப நிடதக்கணக்குப்படி எங்கள் வைதீகநெறி அண்ணளவாக 198 கோடிமட்டில் ஒரு பெறுமதியை வரையறுக்கின்றது. விஞ்ஞானம் அண்ணளவாக 200 கோடி என்கின்றது)சாத்தனுக்கு கல்லெறிதல்.....இறைவனின் குருதியென்று "வைன்" குடித்தல் போன்ற பல்வேறு மூட நம்பிக்கைகள் ஏனையமதங்களிலும் உண்டு...........இயேசு நாதர் இமயமலை வந்து ஆன்மீகம் பயின்றார்..........போன்ற பல்வேறு விடயங்கள் அவர் சொற்பொழிவுகளை வாசித்து நான் பெற்ற அறிவாகும்.சுவாமியை நேரில் காணும் பாக்கியம் எளியேனுக்கு கிட்டவில்லை. சுவாமி பிறப்பால் அமெரிக்கராக இருப்பதனால் இலங்கையில் தொன்றுதொட்டு நிலவிவருகின்ற சைவப்பாரம்பரியம் அவரால் உணரக்கூடியதாக இருந்திருக்குமென எதிர்பார்க்கமுடியாது. இங்கு பிறந்து இங்கேயே வளர்ந்த பலருக்கு இந்து என்னும் புறமொழி ஆக்கிரமிப்பும் அதற்குள் மறைந்திருக்கும் பாரிய சதியும் விளங்கக்கடினமாக இருக்கையில் சுவாமியிற்கு விளங்கியிருக்கவேண்டுமென்பது கடினமான எதிர்பார்ப்பாகும்.சுவாமியுனுடைய சமூகசேவையை ஈழச்சமூகம் மறக்கவாய்ப்பேயிருக்காது. சிவபதம் அடைந்த சுவாமியினுடைய தொண்டுகளைத்தொடர்வதே அவருக்கு ஈழமக்கள் செயயக்கூடிய அதியுயர்ந்த நன்றிக்கடனாகும்.

ஆறுமுகநாவலருக்கு பின்னர் சேர்.பொன்.இராமநாதன், சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் போன்றார் சிவாகமத்தை பேணும் சைவசமூக பிரதிநிதிகளாக மிளிர்ந்தபோதும் நாவலர் போல் சாதாரண மக்களிடம் சமயக்கருத்துக்களை கொண்டுசேர்க்கும் திறனைப்பெற்றிருக்கவில்லை. அதன்பின்னர் சைவச்சான்றோராக சாதாரணமக்களால் போற்றப்பட்ட அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி, சுவாமி தந்திரதேவானந்தா போன்றோர் ஆறுமுகநாவலர் காட்டியபாதையில் சைவத்தை வழிநடத்தத்தவறிவிட்டனர். இன்று இருக்கும் நல்லை ஆதினமுதல்வரும் மௌனியாய் இவர்கள்போல் இருந்துவிடக்கூடாது என்பது சாதரண சைவக்குடிமக்களின் வேண்டுதலாகும். ஆதினத்தின் வாரிசாக சிவாகமங்களில் அனுபவமுள்ள சிவக்கொழுந்தை நியமிக்கவேண்டுமென்பது காலம் அவரிடம் எதிர்பாக்கும் சைவக்கடமையாகும்.எங்கள் கல்லூரி அதிபர் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய ஆன்மீகவாதியான மாணவனிடம் "ஆதினவாரிசாகப் போரியா?" என்று கேட்டிருந்தார். ஆனால் அந்தமாணவன் ஆஞ்சநேய பக்தன்.ஆனால் ஒழுக்கத்தில் சிறந்துவிளங்கும் தன்மை ஆதினவாரிசுவுக்கான தகுதிகளில் ஒன்றே ஒழிய அதுவே ஆதினவாரிசுவுக்கான தகுதியல்ல என்பது அதிபருக்கு விளங்கவில்லை. அதுவொன்றே தகுதியென்றால் ஒழுக்கத்தில் சிறந்த கிருத்துவரையும் இசுலாமியரையும் நல்லூர் ஆதினவாரிசாக நியமிக்கலாம் தானே? சிவாகமங்களையும் சைவசித்தாந்தங்களையும் கற்றுத்தேர்ந்த வாரிசுவை நியமிப்பது காலத்தின் கட்டாயமாகும். வாரிசு இல்லாமல் ஆதினமிருப்பதும் அழகுயில்லை.


(இந்து, சுமார்த்தம் போன்றவற்றிற்கு என்னுடைய முன்னைய கட்டுரைகள் விளக்கம் கொடுத்திருக்குக்கின்றன. மீட்டிப்பார்க்க.)

வலைப்பூ:- இங்கேயும் சிறுபொழுதை கழியுங்கள்.
http://nirshan.blogspot.com/2008/06/blog-post_5427.html
( அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவாக வெளியிடப்பட்டுள்ள ஒரு சிறந்த நினைவுக்கட்டுரை.)
மேலும் படிக்க...

Sunday, July 27, 2008

தமிழோடு வாழ்வோம்

தேம் மதுரத்தமிழோசை உலகமெல்லொம் பரவச்செய்யவேண்டும் என்றார் மகாகவி பாரதி. ஆனால் இன்று தமிழைக் காக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.பல வ்கையான சவால்களை தமிழ் இன்று சந்தித்தாலும் முக்கியமான இரண்டு வகையான சவால்களை இங்கு நான் அலசியாரய விரும்புகின்றேன்.ஒன்று அசிங்கமான தமிழ்வார்த்தைகள் என்றும், பல்வேறு காரணங்களாலும் பொருள்சிதைவடையும் தமிழ்ச்சொற்கள். இரண்டாவது சதிகாரர்களால் தமிழ் சிதைவு தூண்டப்படுதல்.


நான் முதலில் சுட்டிக்காட்ட விளைவது ஆபத்துதன்மை குறைந்த சவாலை அதாவது அசிங்கமானது, அழகு குறைந்தது என்றெல்லாம் புறக்கணிக்கப்படும் சவாலையாகும்.

இன்று பொதுவாக " நாறுது" என்ற பேச்சுவழக்குச் சொல்லின்மூலம் நாம் உணர்த்துவது சகிக்கமுடியாத மணத்தையேயாகும். ஆனால் நாற்றம் என்பது நறுமணத்தையும் துர்நாற்றம் என்பதே சகிக்கமுடியாத மணத்தையும் குறிக்கும். எவ்வளவு பொருள் பிழையுடன் நாம் எமது மொழியை கையாளுகின்றோம்! குண்டி என்றழைக்கப்படும் உடற்பாகம் உண்மையில் நிதம்பம் என்றேயழைக்கப்படும். நிதம்பபாரத்து நேரிழையால் என்று கம்பன் இதனைக்கையாண்டுள்ளான். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கம்பராமாயணத்தை புரட்டியவேளை அறியக்கண்டேன். அப்படியானால் குண்டி என்னும் சொல் எதனைக்குறிக்கும் என்று என்னுள் கேள்வியெழுந்தது. விடை விதைப்பை என்று கழகத்தமிழ் அகராதி மூலம் அறிந்துகொண்டேன். எப்படி நாற்றம் என்பது சகிக்கமுடியாத மணமாக பொருள் மாற்றமடைந்ததோ அவ்வாறுதான் இதுவும் மாறியிருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். பெண்குறியை குறிக்க அல்குல் என்ற சொற்பதம் பெருமளவான இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சில இடங்களில் தனங்களை குறிக்க பயன்படுத்தியுள்ளனரோ என்ற மயக்கத்தை தோற்றுவிக்கும் படியாகவும் பயன்படுத்தியுள்ளனர். பாடல்களின் பொருளுரையின்மூலம் கூட தெளிவுபெறமுடியவில்லை. இந்த சந்தேகம் எனக்கு இன்றைக்கு நான்குவருடங்களுக்கு முன்னர் தோன்றியது. அதாவது பள்ளிக்காலத்தில். எனினும் அன்றைய என்னுடைய நாணம் காரணமாக ஆசிரியர்களிடம் கேட்டு சரியான தெளிவு பெறமுடியவில்லை.( இன்று என்னைச்சூழ தமிழ்ச்சூழலே இல்லை.) எனவே என்னையும் என்னைப்போல் இலக்கியத்துள் நுனிப்புள் மேய்ந்ததால் இச்சந்தேகத்துக்கு ஆளாகியிருப்போரையும் தெளிவுபடுத்தும்படி தாழ்மையோடு தமிழாசான்களை வேண்டிநிற்கின்றேன். "இலக்கியத்தில் எவ்வளவோ இருக்க உனக்கு இதுதான் சந்தேகமா?" என்று என்னை குட்டிவிடவேண்டாம். தேவாரங்களில் கூட அல்குல் என்னும் சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதை நினைவுகூற விரும்புகின்றேன்.
நான் தமிழ்நாட்டில் கோடை விடுமுறைகாலத்தைக் கழித்தவேளை மக்கள் தொலைக்காட்சி என்னும் தொலைக்காட்சி அலைவரிசையை கண்டுகளிக்கும் வாய்ப்பைப்பெற்றேன். ஏறக்குறைய நூறுவீதம் தனித்தமிழ் அலைவரிசை என்று அதைக்குறிப்பிடலாம். நடிகர் ரஜனியை திரைப்படக்காட்சிகளில் புகைபிடிப்பதை வெற்றிகரமாகத்தடுத்த அரசியற்கட்சிக்கு உரியது அத்தொலைக்காட்சி என்றனர் ஒருசிலர்.ஆனந்தமடைந்தேன். அத்தொலைக்காட்சியலைவரிசையில் பேராசிரியர். திரு நன்னன் ஐயா அன்றாடவாழ்க்கையில் நாம் விடுகின்ற தமிழ்ச் சொற்பிழை, பொருட்பிழைகளை சுட்டிக்காட்டுவார்.அத்தொலைக்காட்சியினால் ஐயா மூலம் நான் பெற்ற பலன்கள் ஏராளம். கலாச்சாரம் என்பது கல்ச்சர் என்னும் ஆங்கிலத்திரிபு என்றும் பண்பாடு என்பதே கல்ச்சரின் சரியான தமிழ்ப்பதம் என்றும் பசு மரத்தில் ஆணி அறைவதுபோல் விளக்கினார். அன்றுவரை கலாச்சாரமே தமிழ்ப்பதம் என்றும் பண்பாடு என்பது கலாச்சாரத்தின் அருஞ்சொல் என்றும் எண்ணியிருந்த எனக்கு அது எவ்வளவு மடைத்தனமான நினைப்பு என்று அப்போது தோன்றியது."வோட்டர் ப்போல்" என்பதன் தமிழ்ப்பதம் நீர்வீழ்ச்சி என்று எண்ணிருந்த எனக்கு "வோட்டர் ப்போல்" என்பதன் சரியான தமிழ்ப்பதம் அருவி என்று ஐயா மூலம்தான் அறிந்து கொண்டேன்.அதுவரை அருவி என்றால் நீரோடை என்றே தவறாக எண்ணியிருந்தேன். " வோட்டர்- நீர், ப்போல்- வீழ்ச்சி " என்னும் மொழிமாற்றே நீர்வீழ்ச்சியாகும் என்று நன்னன் ஐயா அத்தொலைக்காட்சியில் அருமையாக விளக்கியிருந்தார்.
"தமிழ்த்தினப் போட்டி" என்னும் சொற்ப்பததில் உள்ளகுறையை கொழும்பில் தனியார் வகுப்பேடுக்கும் பிரபல தமிழாசிரியர் திரு.சிவநிர்த்தானந்தா( ஆனந்தன் ஆசிரியர்) ஐயா தனது சைவமங்கையர் கழக கட்டிடத்தில் எடுக்கும் தனியார் வகுப்பில் சுட்டிக்காட்டியிருந்தார் கவலையுடன். "தினம்" என்பது தமிழ்ச்சொல் அல்ல. அது சமசுகிரதம். நாள் என்பதே சரியான தமிழ்ச்சொல். ஆனாலும் "தமிழ்நாள் போட்டி" என்னும்போது சொல்லில் ஒருவித அழகு தெரியவில்லை என்ற காரணத்தினால் யாரும் அவ்வாறு மாற்றவிரும்பவில்லை என்று தான் மாற்றமுயற்சித்து பெற்றதோல்வியை எம்மிடம் கூறிவருந்தினார்.அவரிடம் அத்தருணம் நான் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குரிய மாணவனாக இருந்தேன். அவர் கூறக்கேட்டு நானும் பல மாணவர்களுடன் சேர்ந்து வருந்தினேன். வருந்துகின்றேன்.
"தமிழ்த்திருநாள் போட்டி" என்பது நான் என்மூளையை சலவைசெய்து பெற்ற தலைப்பு. இதில் ஏதும் அழகுக்குறை( ஸ்டைல்லான டைடில் வேணும் என்பதுதான் இலங்கை கல்வித்திணைக்களம் தமிழ்ப்பிரிவின் நிபந்தனையாம்) உண்டோ?

மேலே நாம் பார்த்தது அன்றாட வாழ்வில் தமிழை நாம் தவறாகக் கையாளும் சில உதாரணங்களாகும். ஆனால் திட்டம் தீட்டி தமிழ் வதைக்கப்படும் விதத்தையும் வரலாறையும் சற்று அவதானிப்போம்.தமிழின் நம்பர் 1 இதழ்.................போலீஸ் ஸ்டேசனில் கத்திச் சண்டை..........ட்ரீட்மண்டின் பின் நார்மலாகிட்டார்............ நந்தனம் ஆட்ஸ் காலேஜ்...............பேங்கில ஐயாதான் சீப் கெஸ்ட்டு............அமைதிப்படையில சத்தியராஜ் கேரக்க்டரைப்..............இவன் மட்டும் லைஃப்ல கிராஸ் பண்ணலைனா....................எக்ஸ்ட்ரா எனர்ஜியோடு அணியை வழிநடத்தியதில் ஷேன் வார்னேதான் நம்பர் ஒன் கேப்டன்.................அப்பப்பா எவ்வளவு ஆங்கிலக் கலப்படங்கள்! ஒரு நிமிடத்தில் எழுமாறியாக ஒரு தமிழ்நாட்டு சஞ்சிகையினை புரட்டியபோது நான் பெற்றுக்கொண்டவைதான் இவை. அப்படியானால் அந்தப்புத்தகத்தில் எவ்வளவு ஆங்கிலம் கலக்கப்பட்டிருக்கும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்!இது ஏன்? தமிழ்நட்டில் சென்னையில் நானிருந்தவேளையில் என் தமையனார் சொல்லியும் கேட்காது, வலப்பக்கமாய்த் திரும்பு என்று நான் வேடிக்கையாக முச்சக்கரவண்டிக்காரனிடம் சொன்னபோது ரைட்டா லேப்டா என்று தமிழில் சொல்லு என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் நீ கேரளாக்காரனா என்று வேறு கேட்டுவிட்டான். சிரிப்பதா.........அன்றி தமிழின் நிலையென்னி வருந்துவதா?இப்படியொரு சமூகம் எப்படியுருவானது அங்கு? நடந்த.......நடக்கின்ற சதி என்ன?அத்தனையும் ஆரியச்சதிதான்! இந்தி எதிர்ப்புப் போராட்டம் செய்த தமிழ்நாட்டில் இந்தியை பரப்பமுடியாவிட்டாலும் தமிழை எப்படியாவது சீர்குலைத்து தமிழ்ப்பற்றை அங்கு இழக்கச்செய்து அதன்பின்னர் மெதுவாக ஆந்திரம்வரை பரப்பிய இந்தியைப் பரப்புவதுவாகும். என் நண்பர் குழாமிலுள்ள ஆந்திரர்கள் தாம் ஆரியவம்சம் என்கின்றனர் வரலாறு தெரியாது. இயன்றவரை என் ஆங்கில அறிவில் (சாதரண அரசாங்க இரண்டாம்நிலைப் பாடசாலையில் இரண்டாம்மொழிக்கல்வியாக கற்பிக்கப்பட்டும் சிறப்பாகப்பயிலத்தவறி உயர்தரத்தின் பின்னர் சற்று கவனசிரத்தையோடு பயின்று போட்டிவாழ்க்கையில் ஆங்கிலம் தேவையானதொன்று ஆசியாவுக்கு; ஆனால் சீனன் போல் தாய்மொழி பற்று அவசியம் என்பதை நண்குணர்தவன் நான்) எடுத்தியம்பிப்பார்த்தேன். நம்புகின்றார்களில்லை தாம் திராவிடர் என்பதை. ஆரியர்-ஆந்திரா என்னும் ஒலி ஒற்றுமை அவர்கள் வாதத்திற்கு அவர்கள் சேர்க்கும் பலம்.இப்படியொரு சூழலை தமிழ்நாட்டில் உருவாக்கும் திட்டத்தின் ஆரம்பம்.........இல்லை; இடைநிலை இந்த ஆங்கிலக் கலப்பு எனலாம்.தமிழ்நாட்டு சஞ்சிகைகள், பொதுவான பிரசித்தமான பத்திரிக்கைகள் எல்லாம் ஆரியப்பார்ப்பனீயத்தால் வழிநடத்தப்படுபவையே. அதனால்த்தான் அவர்கள் ஆங்கிலத்தை கலக்கத்துடிக்கின்றனர். எங்கே எப்படி ஆங்கிலத்தை கலக்கலாம் என்று தவமாய்த் தவமிருக்கின்றனர். சென்னையை தமிங்கில மொழியாளர்களாக ஏறக்குறைய மாற்றிவிட்டனர் தமது வலிமையான ஊடகசக்தியை வைத்து. இது யாது தமிங்கிலம் என்று யோசிக்கவேண்டாம். தமிழ்+ஆங்கிலம்=தமிங்கிலம்.பிரதிட்டையை பிரதிஷ்டை என்றும் சாத்திரத்தை சாஸ்திரம் என்றும் சாத்திரியை சாஸ்த்திரி என்றுமே எழுதவிரும்புகின்றனர் சமயசஞ்சிகைகளில் இப்பார்ப்பனர்கள்.இவையாவும் சரியான தமிழ்ப்பதத்தில் இல்லாவிடினும் தமிழ் உச்சரிப்புமுறைக்கு மாற்றக்கூடியனவாக உள்ளன. ஆனால் அவை தமிழை சீர்குலைக்கத்துடிக்கும் இவர்களுக்கு எப்படிப்புரியும்? பரிதிமாற் கலைஞர் என்று தமிழுணர்வு காரணமாக தன்பெயரை மாற்றிக்கொண்ட சூரியநாராயண சாத்திரி ஐயாவினை ஆரியப்பித்துப்பிடித்துள்ள தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு( எங்கள் கொழும்பில் இவர்களுக்கு விலைபோன "இந்து"குருமார்களும் இதற்குள் அடக்கம்.) தெரியவரவே வாய்ப்பில்லை. பாரதியாரை பிராமணன் என்று கூறிட இவர்களின் நா விரும்பவாய்ப்பே இல்லை.தமிழ்திருமுறைகள் ஆலயத்திற்கு மாசுகற்பிக்கின்றன என்றுகூறி அண்மையில் நீதிமன்றம் சென்று தோற்றதை தமிழ்வரலாறு மறக்காது.மன்னிக்காது. யாழ். நூலகத்தை சிங்களர் திட்டமிட்டு அழித்தனர். அவர்கள் இதை கற்றுக்கொண்டது சிதம்பர பார்பனரிடமிருந்து என்றே நானுரைப்பேன். ஆம், திருமுறை பரவி மந்திரத்தை பாதித்துவிடுமென பயந்து கறையானுக்கு அதை வழங்கிமகிழ்தனர். நம்பியாண்டார் நம்பி என்ற தமிழ்ப்பற்றுள்ள பிராமணரும் இராச இராச சோழனும் அன்று தமிழுலகில் இல்லாவிடின் திருமுறைகள் எஞ்சியிருக்கவாய்ப்பேயில்லை.
நல்ல காலம், பார்ப்பனச்சதி இலங்கையில் கொழும்பு எல்லையை தாண்டமுடியாமல் தவிக்கின்றது. ஏனெனில் வடகிழக்குத்தமிழர் தேசியம் என்று ஒருகுடையில் நிற்பதாலும் வடகிழக்கு பிராமணர் தம்மை சாதிகட்டமைப்பாக மட்டுமே கருதுவதாலும் அதாவது ஆரியருடன் தம்மை தொடர்புபடுத்தி எண்ணாததன்மையாலும் சதிகாரரின் கனவுகள் நனவாக மறுக்கின்றன. இலங்கையில் அரசியல்ரீதியாக தமிழ்மொழி எதிர்நோக்கும் சவால்களை என்னுடைய எழுத்துத்தான் நவிலவேண்டும் என்று இல்லை.
தமிழ் எதிர்நோக்கும் சவால்களையறிந்து விழிப்புணர்வுடன் செயலாற்றுவது எமது கட்டாயகடமையாகும். நாம் விடுகின்ற தமிழ் பொருட்பிழைகள், சொற்பிழைகள் என்பவற்றை தமிழாசிரியர்களின் துணைகொண்டு களைவது கடமையாகும். தமிழாசிரியர்களும் இதற்கு துணை நிற்கவேண்டியது கடமையாகும். சதிகாரர்களிடம் இருந்து விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு கவசமாகும். அவர்களை அரசியல் மற்றும் பொருளாதார வழிமுறைகளில் தோற்கடிப்பதே அவர்களுக்கு பாடம் புகட்டும் வழிமுறையாகும்.

நன்றி
மேலும் படிக்க...

Friday, July 25, 2008

மீண்டு வா தமிழா..........கை கொடு!

தமிழுக்குள் சாதியை
ஒழியுங்கள்!
தமிழெனும் சாதியை
வளர செய்யுங்கள்!
தமிழா!
எந்த இனத்தவனும்
தன்னெறியை துறந்ததில்லை!
பெண்ணுக்காய் பொன்னுக்காய்
மண்ணுக்காய் நீ-மட்டும்
உன்னெறியை துறக்கலாமோ?
கடல் கடந்துவந்து
பொன்னைக் காட்டியதும்
முதுகெலும்பைத் துறந்து
ஓடோடிப்போனவனே!
பார்த்தாயா இன்று
உன் நிலையை!
வந்தவன் உன்
மண்ணிலுள்ள வளமெல்லாம்
குடித்தான்!
பண்க்கார நாடானான்!
தனக்கு உணவாக்க
உனக்கு விறகுதந்தான்!
நீயோ;
அது செய்தான்
இது செய்தான்
என்று விறகு
வாங்கிய கதையை
தம்பட்டம் அடிக்கின்றாய்!
வந்தவன்,
உன் பொட்டை
அழித்தான்
பூவை அழித்தான்
நெற்றியில் இருந்த
பட்டையை அழித்தான்!
உனக்கு வெள்ளைத்
தோளைத் தந்தானா?
நீ போரில்
சாகும்போது ஓடோடி
வந்தானா?
நலந்தானேனும் கேட்டானா?
வந்தவன் அழித்தது
பொட்டும் பூவும்
பட்டையையும் மட்டுமல்ல!
உன் மண்ணுரித்தையும்தானடா!
நீ செய்தபிழை
பொறுக்கா சங்கிலியன்
மதிகெட்டு கொலைவெறி
பூண்ட வேளையிலே
வந்தவன் உன்னைக்காக்க
துணிந்தானா?
அன்றி தன்னைக்காக்க
பத்திரமாய் தன்னுடமைகளோடு
அம்போ என்றுஉன்னைவிட்டு
ஓடோடிச்சென்றானா?
சொல்லடா தமிழா
சொல்லு!
ஆபிரிக்காவில் இப்படித்தானடா
மதம் பரப்பினான்!
மொழி பரப்பினான்!
சுரண்ட இல்லாதபடி
எல்லாத்தையும் சுரண்டினான்!
கடைசியில் எயிட்சைக்
கொடுத்தான்!
கை கழுவிவிட்டுவிட்டான்!
நாளைக்கு உன்க்கும்
அதுதான் கதி!
தமிழா!
உன் தாய்
உன்னை அழைக்கிறாள்!
கல் தோன்றி
மண் தோன்றாக்
காலத்தே தோன்றிய
மூத்தகுடி நீயடா!
அன்றே தோன்றியது
உன்னுடைய நெறியுமடா!
ஆரியன் வந்தான்!
தன்னெறி ஆக்கினான் - உன்
நெறியை!
தனக்கேற்ற மாதிரியும்
ஆக்கினான்!
சாதியைப் படைத்தது
ஆரியன்!
உன் நெறியல்ல!
அன்று மௌனியாய்
இருந்துவிட்டு இன்று
பிதற்றுகின்றாய் சாதி
செப்பும் நெறியென்று!
கருப்புச்சாதி வெள்ளைச்சாதி
அங்கு உதுதான்
பிரச்சினையாம்!
ஆயிரம் சாதி
அரேபியாவிலும் உண்டடா!

தாயில் குறையெனின்
மாற்றான் தாயை
உன் தாயென்று
நவிலத்தான் முடியுமா?
முலையில்லாத் தாயிடம்
பாலை எதிர்பார்க்கத்தான்
முடியுமா?
நவிலடா தமிழா
நவிலு!

உன் பூட்டனும்
பூட்டனின் பூட்டனும்
போட்டது பட்டையடா!
உன் பூட்டன்
சொன்ன சித்தமருந்து
பொய்யாய் போகவில்லை!
உன் பூட்டன்
சொன்ன சோதிடமும்
பொய்யென்று விஞ்ஞானத்துணையுடன்
நிறுவிக்க உன்னால்
முடியவில்லை!
உன் பூட்டன்
கட்டிய கட்டிடங்களும்
செதுக்கிய சிற்பங்களும்
உன் விஞ்ஞான
மூளைக்கு விளங்காத
புதிர்கள்!
தஞ்சை பெரியகோவில்
கட்டிய சூத்திரமே
தெரியவில்லை கட்டிட
விஞ்ஞானம் பயின்ற
உனக்கு!
மதுரை மீனாட்சி
திரு அரங்கம்
எல்லாமே உன்
கற்பனைக்கு அப்பாற்பட்டவை!
அத்தனையும் உன்
பூட்டனின் திறமையடா!
அவன் சொன்ன............
அவன் வாழ்ந்த.........
தமிழர் நெறி
எப்படிப் பொய்த்துப்போகுமடா!
பௌத்தமும் சமணமும்
உன்னைத்தேடி வந்தவேளை
இரண்டுமே உண்டு
எங்கள் நெறியிலென்று
சாதியைத் தாங்கிக்கொண்டு
வழியனுப்பி வைத்தவனே!
யார் கண்ணடா
உன்மீது பட்டது?
வா..........................
மீண்டு வா....................
கை கொடு!
"சாதியில்லா வேதநெறி
தழைத்தோங்க மிகு
சைவத்துறை விளங்க"
வா..............
தமிழா வா!
கை கொடு!
தூங்கினது போதும்!
வா..............மீண்டு வா!
மேலும் படிக்க...

Tuesday, July 22, 2008

இந்துத்துவக் கொள்கையில் மறையும் சைவமும் தமிழும்

"என்று தோன்றினாள் எங்கள் தாய்" என்று பாரதி வியந்து பாடுகின்றான். ஆம், ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதி சிவம் மட்டும் அல்ல தமிழும் தான். ஆதலால் தான் சிவனின் மகள் என்று தமிழை பாரதி பாடியுள்ளான். அப்படி அவன் குறிப்பிட தொன்று தொட்டு தமிழர்நெறியாக சைவநெறி விளங்கிவருவதும் காரணமாயிற்று.தொன்மையான புகழுடைய சைவநெறி காலப்போக்கில் வடநாட்டால் ஏழு நெறிகளாக திரிவுபடுத்தப்பட்டது. வடக்கரான அதிசங்கரரால் அவ்வேழுநெறிகளும் அடங்கும் வகையில் சுமார்த்தம் எனும் புதுநெறி உருவாக்கப்பட்டது. அவர் சிவனின் அவதாரம் என்று வடநாட்டார் அறிமுகப்படுத்தி தமிழருக்கு ஊட்டி சைவத்தை அழிக்கமுயன்றனர்.இரத்தத்தில் தோய்ந்து பிறந்ததாய் சிவனுக்கு இலக்கணம் இல்லை என்ற திருமந்திரம் மூலம் ஆதிசங்கரரும் அவருடைய சுமார்த்தமும் தமிழரிடையே அன்று எடுபடமுடியவில்லை.
இந்திய சுதந்திரத்தின்போது மதரீதியாக பாக்கிஸ்தான் பிரிந்தபோது ஏனைய மாநிலங்களை பிரியாமல் இருக்கச்செய்தது இந்து என்ற மந்திரமே! ஆயினும் தமிழ்நாட்டை பல உரிமைகளை விட்டுக்கொடுத்தே காக்கவேண்டியநிலைக்கு உள்ளானது வடக்கு. அதன்மூலம் விழிப்புண்ர்வுபெற்ற வடக்கு தமிழ் நாட்டில் இந்துத்துவத்தை புகுத்தவேண்டியதன் அவசியத்தை உண்ரத்தொடங்கியது.இந்துத்துவம் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொருதனித்துவ இனங்களினதும் அடையாளங்களை அழியச்செய்து இந்தியாமுழுவதற்கும் பொது அடையாளமாக வடநாட்டின் பண்பாட்டை பரப்புவதாகும்.அவ்வேளை இந்துத்துவப்பார்ப்பனீயத்தின் கண்ணில்ப்பட்டது ஆதிசங்கரர் படைத்த சுமார்த்தமே! அதையே இந்துத்துவக் கொள்கையாக்கினர். இந்து என்ற சொல் வேதத்திலும் இல்லை. ஆகமங்களிலும் இல்லை. பாரசீகர் பாரதத்தவரை திருடர் என்று பொருள்ப்படவமைத்த சொல்த்தான் அது.
தமிழ்நாட்டில் இந்துத்துவக்கொள்கையான சுமார்த்தத்தை ஒரளவு(கிட்டத்தட்ட) பரப்பிவிட்டனர் என்பதை வெட்கத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. தமிழ்நாட்டு ஆதிசங்கரரின் வாரிசுக்களான சங்கராச்சாரியார்கள் இதன் அத்திவாரம். பாபர் மசுதி பிரச்சினையில் அவரை இந்துத்தலைவராகக் காட்டியதை கவனிக்க.தமிழ்நாட்டில் நாத்தீகவாதம் அரசகொள்கையாக இருப்பது அவர்களுடையதிட்ட்திற்கு இலகுவாயிற்று. சமயபாடம் மாணவர்களுக்கு இல்லாததனால் பணபலமுடைய இந்துத்துவப்பார்ப்பனீயம் சுமார்த்தகொள்கையுடைய சஞ்சிகைகளை வெளியிட அவையே மாணவர்களைச் சென்றடைந்தது. விளைவு தமிழ்நாட்டு தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்த்தேவாரம் தெரியாதநிலை! "ஓம் பூர் புவஸ்வக" தெரிந்த குழந்தைக்கு "தோடுடைய செவியன்" தெரியாத அவலம்! தமிழகத்தமிழர் சிலர் "நான் சைவம்" என்று சொன்னபோது " நான் நீங்க வேச்சுடேரியனா என்று கேட்கேல உங்க ரிலீஜனை கேட்டேன்" என்று என்னோடு கடுத்துக் கொண்டனர். இன்று தமிழகத்தில் சைவத்தின் நிலை இதுதான்! அன்று சிதம்பரத்தில் பார்ப்பனரால் திருமுறைகள் தமிழுலகையடைந்துவிடக்கூடாது என்று ஒழித்துவைத்து அரைவாசியை அழித்ததும் இராச இராசசோழனால் அவைமீட்க்கப்பட்டதும் சிலகாலங்களுக்கு முன்னர் சிதம்பரத்துபார்ப்பனீயத்தால் மீண்டும் சிதம்பரத்தில் தமிழில் திருமுறை படிப்பதால் கோயில் மகிமை இழக்கப்படுவதாகக்கூறி தடையுத்தறவுகோறி வழக்குத்தொடுத்து தோல்விகண்டதும் நிதர்சனம்.

இலங்கையில் தொன்றுதொட்டு சைவசமயம் சிறப்பாகப்பேணப்பட்டமை காரணமாகவே திருமூலர் எம்திருநாட்டை சிவபூமியென்று குறிப்பிட்டார். நாவலர் காலத்திலும் அதுவரைக்கும் மூக்கை நுழைக்க முடியாது தவித்துக்கொண்டிருந்த சுமார்த்தம் இந்துத்துவக்கொள்கைமூல்ம் அரசியல் ஆக்கப்பட்டமையினால் 1950களின் பின்னர் இலகுவாக இலங்கைக்குள் நுழையக்கூடியதாயிற்று.இலங்கை சுதந்திரம் பெற்றகாலத்தில் இந்தியாச்செட்டியார்கள் இலங்கையில் பணபலமுடையவர்களாக இருந்ததன்மையினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சமயத்தலைவர்கள் அவர்களிடத்தில் தங்கியிருக்கும் தன்மையேற்பட்டது. பெரியார்திடலில் வளர்ந்த இந்தியத்தமிழர்களே இந்தியா-இந்து என்று குழம்பும்போது இலங்கை செட்டியார் சமூகம் அவ்வாறு இருக்காது என்று எதிர்பார்ப்பது கடினந்தான். அதன் காரணமாக இந்துக்கல்லூரி.............இந்துமாமன்றம்...........இந்துகலாச்சாரத்துறை..............இந்துகுருமார் பீடம்..........என்றெல்லாம் மலரத்தொடங்கி இலங்கையில் இன்று சுமார்த்தம் விரியத்தொடங்கிவிட்டது.
சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் இந்து எம்மொழிச்சொல் என்று கேட்டு ஆய்வு நடத்தி இந்து என்ற சொல்லையே நிராகரித்துவிட்டார். சேர்.பொன்.இராமநாதனிடம் "நீங்கள் இந்துவா?" என்று வினாவிய ஆங்கிலேயரிடம் மறுமொழியாய் "இல்லை, நான் சைவன்" என்று மறுத்துரைத்ததாக திருமதி லீலாவதி இராமநாதன் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். ஏன், இந்து என்ற சொல்லை பிரபல்யப்படுத்திய சுவாமி விவேகானந்தர் கூட இலங்கையின் சைவசிறப்புத்தன்மையை பாரட்டியுள்ளார். ஆனால் இன்று? நாவலர் தெளிவாக சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம் சைவசமயம் என்று இடித்துரைத்து இருக்க கொழும்பு பார்ப்பனீயமும் அதற்கு துணையாக நிற்கும் மாமன்றங்களும் எப்படித்தான் மதியிழந்து பணத்திற்காய் சைவத்தை விற்க்கத்துணிந்ததோ தெரியவில்லை!

இன்று எம் கல்லூரி நிகழ்ச்சிகளில் திருமுறைகளோடு "ஓம் பூர் புவஸ்ச"வும் வந்துவிட்டது. நாளை தமிழகத்தமிழ் குழந்தைகள் போல் திருமுறைகள் தெரியாதநிலைதான் எம்குழந்தைகளுக்கும் என்கின்ற அறிகுறிதான் இது.வைணவம் உள்ள இந்தியாவிலேயே ஆஞ்சநேயருக்கு தேர் இன்றுவரை இழுக்கவில்லை. ஆனால் இலங்கையில் ஆகமத்தை கேட்க்க ஆளில்லாத்தன்மையினால் இழுக்கிறார்கள்...............இழுக்கிறார்கள்............... இழுக்கிறார்கள்............... என்னென்னவோ இழுக்கிறார்கள்.இவர்களுக்கு இந்து என்னும் சுமார்த்தம் உருவானால் போதும். அதில் அர்த்தம் ஆகமம் இருக்கத்தேவையில்லை. அர்த்தமில்லாத் இந்தக்கலப்பட இந்துவால்த்தான் தமிழ்நாட்டில் நாத்தீகம் உருவானதை நினைவில் கொண்டால் சரி!
சாயி சங்கம்...............கல்கி சங்கம்.......... கரே ராமா கரே கிருஸ்ணா" சங்கம் ( ஓம் நமோ நாராயணா சங்கம் என்று உருவாக்க மாட்டார்கள். ஏனெனில் அது தமிழ் வழிபாட்டை குறித்துவிடும் என்ற பயம்........வெறுப்பு..............வடநாட்டாருக்கு. "குலந்தரும் செல்வம் தரும்.................தாயினும் ஆயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் அது நாராயணா எனும் நாமமே" என்று தமிழ் ஆழ்வார்கள் பாடியிருக்க "கரே ராமா கரே கிருஸ்ணா" மந்திரம் தான் கலியுக காவல் மந்திரம் என்கின்றனர்.)...........எத்தனை எத்தனை சிவவாகமத்திற்கு எதிரான வழிபாடுகளை சைவவீட்டில் புகுத்திவிட்டனர்.கொழும்பு தெகிவளை திருமால் ஆலயத்தின் முன்னால் நின்று "சிவனை வழிபட்டால் பத்துக்கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும் கிருஸ்ணருக்கு அப்படியில்லை" என்று கரே ராமா கரே கிருஸ்ணா இயக்கத்தினர் எடுத்தியம்பிய இழிவு! இலங்கையில் தொன்று தொட்டு வல்லிபுர திருமால் கோயில், பொன்னாலை வரதராசாப் பெருமாள் கோயில் , வண்ணை வெங்கடேசுவரர் கோயில் என்று காத்தற்கடவுளாகிய திருமாலை வழிபடும் வரலாறு தெரியாத இந்த ஏசண்டுகளும்(தரகர்கள்) அவர்களிடம் விலைபோன மாமன்றங்களும் கொழும்பு பார்ப்பனீயமும் நாவலர் மீண்டும் வந்தால் கல்லேறியத்தயங்க மாட்டார்கள்! இவர்கள் விரும்புவது எல்லாம் பாபர் மசுதி இடித்தது போல் மசுதிகளையும் சேர்ச்சுகளையும் இடித்தழிக்கும் இந்து சமூகத்தை இலங்கையில் உருவாக்குவதும் இந்தியா மத்திய அரசுக்கு அடிமையான இலங்கை சமூகத்தை வளர்ப்பதும் தான்!
இவையாவுக்கும் வடிகாலாய் அமைந்திருப்பது யுத்தசூழ்நிலையில் யாழ் சமூகம் சைவத்தலைமையை கொழும்பிடம் இழந்தமையேயாகும். சைவத்தை வழிநடத்தும் உரிமை, கடமை யாழ்.நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு இருந்தும் மௌனமாய் இருப்பது கவலையை ஊட்டுகின்றது.

சைவ இளையோர்களே, நாவலர் வருவார் வருவார் என்று காத்திராது விழித்தெழுங்கள்! சமய விழிப்புணர்வு காலத்தின் கட்டாயம்!

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"

சிவத்தமிழோன்
மேலும் படிக்க...

Sunday, July 20, 2008

விரைவில்




எனது கட்டுரைகள் விரைவில் இத்தளத்தை அலங்கரிக்கவுள்ளது.
நன்றி-சிவத்தமிழோன்.




"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"



மேலும் படிக்க...

Saturday, July 19, 2008

இணையத்தளம்

www.freewebs.com/saivismtamil

இது ஒரு சைவக்கோவை. பல சைவத்தளங்களின் நூலகம்.திருமுறைகள்,திருக்குறள் போன்ற பல்வேறுவகைப்பட்ட தளங்களின் களஞ்சியம். சிவத்தமிழோனின் சிறிய தவம்.
மேலும் படிக்க...

திருகேதீச்சரம்

கோயில்
புராதன லிங்கம்
பாலாவி தீர்த்தம்

திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
என்னையாளும் சிவமே
என்னையாளும் சிவமே-என்
நெஞ்சுள் இருந்து...............
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
உமையாளின் பதியே
உலகாளும் சிவமே
உமையாளின் பதியே
உலகாளும் சிவமே
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
மன்னார் பதியில்
மாதோட்ட நகரில்
என்னம்மை கௌரியுடன்
எழுந்தருளி என்னையாளும்
என் ஐயனே......!
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
தமிழான சிவமே
சிவபூமித் திருவே
அழகான சிவமே
அருள் தரும்
சிவமே
என்னை யாளும்
சிவமே
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
இருகரம் கூப்பி
ஓம் நமசிவாய
செப்பி..........
இருகரம் கூப்பி
ஓம் நமசிவாய
செப்பி தொழுதிட
தொல்லைகள் போக்கிடும்
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
கேதுவின் பாவங்கள்
போக்கிய எந்தன்
ஐயனே
பாலாவியெனும் தீர்த்தம்
கொண்டு பாரையாளும்
பர மேசுவரனே
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
திரு ஞானசம்பந்தர்
திரு சுந்தரர்
தமிழ் பாமாலை
ஏற்ற பெருமானே
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
இந்தச் சிறியேனும்
உனக்கு பாமாலை
சூட்டுகின்றேன்
சிவத்தமிழ் ஞானம்
என்னுள் பெருகிடவே..........
ஏற்றருள்வாய் ஐயனே!


(என்னை என் அப்பன் ஆட்கொண்ட திருத்தலம்-திருக்கேதீச்சரம்)
மேலும் படிக்க...



இலங்கை யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஆற்றும் சமையப் பணியும் சமூகப் பணியும் அளப்பரியது.ஆயினும் சிவபூமி சைவசமூகத்தை தலைமை தாங்கும் உரித்து ஆதினத்திடமிருந்து மாமன்றங்களினால் பறிக்கப்பட்டிருப்பது சைவமக்களை வருத்ததில் ஆழ்த்தியுள்ளது.மாமன்ற(க்களின்) பணிகள் வார்த்தைகளால் வடிக்கமுடியாத அளப்பரிய சேவைகள். ஆனால் கடந்த நூற்றாண்டு ஈழத்திற்கு பரிசளித்த மிகப்பெரிய சொத்துக்களில் விலைமதிப்பற்றது ஆதீனம். ஆதீனத்திடம் சைவதலைமைப்பீடம் இருப்பதுவே நன்று. மன்றங்களிடம் அல்ல.சேலையோடு காட்சியளிக்கும் தாயை காண விரும்பாத பிள்ளையேதும் உண்டோ?
மேலும் படிக்க...