ஏனைய சமயங்கள் மதம்பிடித்து தம்கடவுளை வழிபடாவிடின் நரகத்திற்கே இட்டுசெல்லும் என்றும் உருவவழிபாட்டை அழித்தல் இறைவனுக்கு பிரியமானது என்றும் போதித்து உலக அழிவுகளுக்கு காரணமாக இருக்க; சைவசமயம் "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" என்று உரைப்பது முறையாகுமா? என்று சிலர் வினாவினர். சைவசமயத்துக்கு மதம் பிடித்துவிட்டதா என்று கேள்வி தொடுத்தனர்!
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே
தோத்திரநூல்களில் சாத்திரத்துக்குரிய திருமந்திரத்தின் சாரம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் அன்பே சிவம் என்பதாகும்.
மனம் அது நினைய வாக்கு
வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டங்(கு)
இச்சித்த தெய்வம்போற்றிச்
சினமுதல் அகற்றி வாழும்
செயல் அறமானால் யார்க்கும்
முனம் ஒரு தெய்வம் எங்கும்
செயற்குமுன்னிலையாம் அன்றே! - சைவசித்தாந்தம்(சிவஞானசித்தியார் நூலின் சுபக்கம் இரண்டாம் சூத்திரம் 24)
"தான் விரும்பும் தெய்வத்தை மனதில் நினைக்கவும் வாக்கினால் தவறாது மந்திரம் கூறவும் கையினால் நல்ல மலர்களை எடுத்துப் போற்றவும் இவற்றோடுகூட, சினம் முதலிய தீயகுணங்களை நீக்கி, வாழும் முறைப்படி வாழ்ந்தால், அவர் விரும்பிய தெய்வம் அவரின் செயல்களுக்கு துணையாக முன்வந்து நிற்கும்" என்றுரைக்கின்றது சைவசித்தாந்தம்.
சைவசித்தாந்தம் சைவநெறியின் தத்துவ விளக்கம். சைவசித்தாந்தம் பாரில் உள்ள சைவநெறி சாராதோருக்கும் அவர்களின் வினைகளுக்கு ஏற்ப இறைவன் அருள்பாலிக்கின்றார் என்று எடுத்துரைக்கின்றது.
.
இத்தகைய மேன்மை பொருந்திய "சைவநீதி'யைத்தான் உலகமெலாம் விளங்குக என்று கச்சியப்பர் பாடினாரே தவிர சைவசமயம் உலகமெலாம் விளங்குக என்று பாடவில்லை.
எனவே; இத்தகைய உலக சமாதானத்துக்கு உயிராக இருக்கக்கூடிய சைவநீதி உலகமெலாம் விளங்க வேண்டும் என்று கச்சியப்பசிவாச்சாரியார் வேண்டினாரே தவிர; சைவசமயம் உலகமெலாம் விளங்க வேண்டும் என்று குறுகிய சிந்தனையுடன் பாடவில்லை என்று பொருளுரைத்தேன். சமயம் என்பது வாழ்க்கையை நன்முறையில் சமைப்பது. நெறி என்பது நன்முறையில் நெறிப்படுத்துவது. எனவே; சைவநெறி(சைவசமயம்) மதம்பிடித்து; உலகம் முழுவதும் "தன்சமயம்" மட்டுமே விளங்க வேண்டுமென்று போதிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டதும் வினாத்தொடுத்தோர் சைவநெறியில் தாம் பிறந்தமைக்குரிய ஊழ்வினைப்பயனை எண்ணி பெருமை கொண்டனர். இத்தகைய உலக சமாதானத்துக்குரிய சைவநீதி உலகம் முழுவதும் பரவவில்லையே என்று வாடினர்.
"செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தாக்கால் எய்த வருமோ இருநிதியம்" என்ற ஔவையின் நல்வழிப்பாடலை உள்ளத்தில் நினைவுபடுத்தி;பாரிலுள்ள மாந்தரின் நல்தீவினைக்கு ஏற்பவே யாவும் அரங்கேறும் என்பதை சிந்தையில் நிறுத்தி எளியேனும் மனதை சமாதானம் செய்து கொண்டேன்.
ஆனால் சிவனடியார் மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஐயாவிடம் இருந்து வந்த மின்னஞ்சல் "சைவநீதி" உலகமெலாம் பரவுவதற்கு காலம் கனிந்துவிட்டது என்பதை உணர்த்திற்று.
சைவ நூல்களாகிய திருமுறைகளும் சைவசித்தாந்த சாத்திரங்களும் ஏற்கனவே தேவாரம் மின்னம்பலத்தில் அழகுடன் தொகுக்கப்பட்டு ஆங்கில மொழிபெயர்புடனும் பல்வேறு மொழிகளின் ஒலிபெயர்ப்புடனும் ஐயாவின் பணியால் பாருக்கு வழங்கப்பட்டிருப்பது சைவநீதி உலகமெலாம் பரவுவதற்கு பிள்ளையார் சுழியை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. தற்போது; ஐயாவின் பணியால் தேவார மின்னம்பலம் மேலும் பலமொழிகளில் அழகுபடுத்தப்படவிருக்கும் செய்தி தேன்போல் இன்பத்தை ஊட்டிற்று.
ஐயாவின் மின்னஞ்சல் செய்தி
2042இல் திருமுறைப் பணி
வணக்கம்
தமிழ்ப் புத்தாண்டும், தைப் பொங்கலும் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தைத் தருவனவாக.
www.thevaaram.org தளத்தில் 2042 தொடங்கும் புத்தாண்டில் மேற்கொள்ளவுள்ள பணிகளைப் பட்டியலிடுகிறேன்.
1. தருமபுரம் ப. சுவாமிநாதன் திருமுறைக் குரலிசை முழுவதையும் (10,322 பாடல்கள்) தளத்தில் ஏற்றச் சிங்கப்பூர் அன்பர்கள் உதவுகிறார்கள். அடுத்த 3 மாதங்களில் தளத்தில் ஏற்றிடலாம்.
2. இதுவரை குரலிசை பெறாத திருக்கோவையார் 400, திருமந்திரம் 1,700, 11ஆம் திருமுறை 1,102 = 3,202 பாடல்களின் குரலிசைப் பதிவுக்குச் சிங்கப்பூர் அன்பர்கள் உதவுகிறார்கள். இப்பதிவுடன் பன்னிரு திருமுறை முழுவதும் குரலிசையில் அனைவருக்கும் கிடைப்பதுடன் www.thevaaram.org தளத்தில் கேட்கவும் வழியுண்டு. அடுத்த 24 மாதங்களில் இப்பணி நிறைவாகும்.
3. ஒலிபெயர்ப்பாகப் பன்னிரு திருமுறையை உலக மொழிகள் பலவற்றில் வாசிக்கப் பேரா. புனல் க. முருகையன் வகுத்த வரைவுகளுக்கமைய எடுத்துச் செல்லல். www.thevaaram.org தளத்தில் அந்த முறையைச் செப்பனிடல், பெருக்குதல்.அடுத்த 6 மாதங்களில் முதற்கட்டப் பணி நிறைவாகும்.
4. தெலுங்குக்கு மொழிபெயர்த்துத் தளத்தில் ஏற்றியுள்ள 1ஆம் திருமுறையை அடுத்து ஏனைய திருமுறைகளைத் திருமலை திருப்பதி தேவத்தானத்தினர் 17.7.2010இல் ஒதுக்கிய ரூ. 1,316,760 பயன்படுத்தித் தெலுங்குக்கு மொழிபெயர்த்து அடுத்த 3 ஆண்டுகளில் பணி நிறைதல்.
5. கன்னடத்தில் 1, 9, 12 (ஒரு பகுதி) ஆகிய திருமுறைகளை மொழிபெயர்த்துத் தளத்தில் ஏற்றியதைத் தொடர்ந்து ஏனைய திருமுறைகளைக் கன்னடத்துக்கு மொழிபெயர்த்தல், அப்பணிக்கான நிதி ஆதாரம் தேடல்.
6. மலையாளத்தில் மொழிபெயர்ப்பான 8ஆம் திருமுறை திருவாசகத்தைத் தளத்தில் ஏற்றல், ஏனைய திருமுறைகளை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் பணிக்கு நிதி ஆதாரம் தேடல்.
7. இந்தியில் மொழிபெயர்ப்பான 7ஆம் திருமுறை, 8 திருவாசகம், 10 இரு தந்திரங்கள் ஆகியன தளத்தில் உள்ளன. 4, 5, 6, 10 ஆகிய திருமுறைகளைத் தளத்தில் தொடர்ந்து ஏற்றி வருதல். 1 ஆம் திருமுறை இந்தியைத் தட்டச்சாக்கித் தளத்தில் ஏற்றுதல், 2, 3, 9, 11, 12ஆம் திருமுறைகளை இந்திக்கு மொழிபெயர்த்தல், நிதி ஆதாரம் தேடல். தில்லி நடுவண் இந்தி இயக்ககத் துணை நாடல்.
8. வடமொழிக்கு மொழிபெயர்ப்பான 11ஆம் திருமுறைப் பகுதிகளைத் தளத்தில் ஏற்றல், ஏனைய திருமுறைகளை மொழிபெயர்க்கத் தில்லி இராஷ்டிர சமஸ்கிருத சமஸ்தானம் வழங்கக் கூடிய நிதி உதவியைப் பெறல். பணி தொடர்தல்.
9. மலாய்க்கு மொழிபெயர்ப்பாகும் 9ஆம் திருமுறையைத் தளத்தில் ஏற்றல், மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடன் ஏனைய திருமுறைகளையும் மலாய்க்கு மொழிபெயர்த்தல்.
10. பிரஞ்சுக்கு மொழிபெயர்க்கப் புதுச்சேரி பிரஞ்சு நிறுவன்ம், சீனத்துக்கு மொழிபெயர்க்கச் சிங்கப்பூர் அரசின் இந்து அறநிலையின் ஆதரவுடன் நன்யாங்கு பல்கலைக்கழகம், சிங்களத்துக்கு மொழிபெயர்க்க அகில இலங்கை இந்து மாமன்றம் ஆகியவற்றுடன் இதுவரை மேற்கொண்ட தொடர்புகளை வலுவாக்கல்.
11. கணிணி நிகழ்ச்சித் தொகுப்பாளர் வல்லமையுடன் மாறிவரும் தொழினுட்பத்திற்கேற்பத் தளத்தின் பயன்பாட்டை மேம்படுத்தல்.
12. மாதத்துக்குச் சராசரியாக 4இலட்சம் சொடுக்குகள் உள்ள நிலையை மேம்படுத்தப் பரப்புரையும் பிற மொழியாளருக்கு விளம்பரமும் செய்தல்.
பட்டியலிட்ட பணிகளை 2042இல் நிறைவாக்கக் கூடியவற்றை நிறைவாக்க இறைவனின் துணையையும் உங்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் நாடுகிறேன்.
நன்றி
--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan
ஐயாவின் பணி சிரமமானது. எழுத்துகளின் துணைகொண்டு ஐயாவின் பணியில் உள்ள சிரமத்தை எடுத்து விளக்க முடியாது. சேக்கிழார் பெருமான் சைவ உலகிற்கு கிடைத்த பயனால் பெரியபுராணத்தினூடாக சிவனடியார்கள் தமது சிவப்பணியை செவ்வனே செய்வதற்காகப்பட்ட சிரமத்தை உணரக்கூடியதாயிற்று.பெரியபுராணத்தின் துணைகொண்டு சிவனடியார்கள் தமது சிவப்பணியில் எதிர்நோக்கிய சிரமங்களை உணர்ந்தோர்; சிவனடியார் மறவன்புலவு க.சச்சிதானந்தன் ஐயாவின் பணியிலுள்ள சிரமத்தை ஓரளவேனும் உணரமுற்படுவர். ஐயாவின் பணியில் உள்ள சிரமங்களை உணர்ந்தோர்; ஐயாவுக்கு இயன்றளவு தங்கள் உதவிகளை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
ஐயாவின் பணிக்கு தோள்கொடுக்க எளிமையான வழிகளில் ஒன்று தேவாரம் மின்னம்பலத்துக்கு இணைப்புக்கொடுத்து உதவுதலாகும்.பணரீதியிலும் தொழில்நுட்பரீதியிலும் ஏனைய வழிகளிலும் உதவக்கூடிய வல்லமையை இறைவனின் திருவருட்சம்மதமாகப் பெற்றோர் காந்தளம் பதிப்பகத்தினூடாக ஐயாவைத் தொடர்பு கொள்ளமுடியும்.
முகவரி
68, அண்ணா சாலை,
சென்னை 600 005
தொலைபேசி: 9444455281
ஐயாவின் கட்டுரை:
பொன்னம்பலத்திலிருந்து மின்னம்பலத்திற்கு
http://pathippuththozhil.blogspot.com/2006/11/blog-post.html
ஐயாவைப்பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு:
http://sachithananthan.blogspot.com/2005/09/kanapathipillai-sachithananthan.html
http://sivathamiloan.blogspot.com/2010/07/blog-post.html
தேவாரம் மின்னம்பலம்:-
http://www.thevaaram.org/