"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, May 14, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 2

இறைவனுக்கு உருவமுண்டு;ஆனால் அந்த இறைவனை யாரும் பார்க்கவில்லை என்பதால் மனிதர் தமது விருப்பத்துக்கு அமைவாக உருவம் வரையக்கூடாது என்கின்றது ஏனைய சமயங்கள். அதே நேரத்தில்; இதுதான் அந்தக்கடவுளின் பெயரென்று ஏதேனும் ஒரு பெயரைத் திட்டவட்டமாக கூறுகின்றன. பெயருள்ள பொருளுக்கு வடிவம் இருக்கும் என்பது வெளிப்படை உண்மை. இதனால் உருவ வழிபாட்டை நிந்திக்கின்ற சமயங்கள்கூட, விஞ்ஞானத்தத்துவ ரீதியில் பூச்சியமாகிவிடுகின்றன. ஆனால் சைவசித்தாந்தம் அருமையான விளக்கத்தை இறைவனுக்கு அளித்து விஞ்ஞானத்தை விஞ்சிய மெய்ஞ்ஞானமாக விளங்குகின்றது.

அப்படியென்ன அருமையான விளக்கத்தை சைவசித்தாந்தம் அளிக்கின்றது?
சிவபெருமானுக்கு சொரூப இயல்பு,தடத்த இயல்பு என்னும் இருவகையான இயல்புகளுண்டு என்கின்றது சைவசித்தாந்தம்.

அதுவென்ன இறைவனின் சொரூப இயல்பு? சரி; இத்தொடரில் சிவபெருமானின் சொரூப இயல்பைப் பார்ப்போம்.
அதற்குமுன்னர் சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பகுதி 1ஐ படிக்காதவர்கள் படித்திடுக. ஏனெனில் சைவசித்தாந்தம் பற்றிய அறிமுகத்தை எளிமையாகவும் சுருக்கமான முறையிலும் பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.


சைவசித்தாந்தம் இறைவனுக்கு கண்ட அருமையான இலக்கணமே இறைவனின் சொரூப இயல்பு. இறைவனின் சொரூப இயல்பை சிறப்பியல்பு அல்லது இயற்கைத் தன்மை என்றும் அழைப்பர்.

பதியாகிய சிவபெருமான் அருவம்,அருவுருவம்,உருவம் என்னும் முன்றுவகையான தன்மைகளையும் கடந்தவர். உவமைகள் கொண்டு அளக்கப்படக்கூடியவர் அல்லர். யாவற்றுக்கும் அப்பாற்பட்டவர். யாவற்றுக்குள்ளும் இருப்பவர். தூணிலும் இருப்பவர். துரும்பிலும் இருப்பவர். எங்கும் வியாப்பித்து இருப்பவர். எல்லாவற்றையும் கடந்தும் இருப்பவர். இறைவனின் இந்த இயல்பு சொரூப இயல்பு எனப்படும். ஒரு பொருளுக்கு அதன் தன்மையில் இயல்பாக என்றுமுள்ள இயல்பு எனப்பொருள்படும்.

சொரூப இயல்பு என்பது அருவம்,அருவுருவம்,உருவம் என்னும் மூன்று தன்மைகளையும் கடந்த இறைவனின் தன்மையாகும்.அருவம் என்பது உருவத்தின் நுட்பம். கண்ணுக்கு தெரியாத தன்மையை அருவம் என்போம். நுண்ணங்கிகளும் அணுமூலக்கூறுகளும் எமது கண்களுக்கு புலப்படுவதில்லை. எனவே அவற்றுக்கு உருவமில்லை என்று ஆகிவிடுமா? எனவேதான் அருவம் என்பது உருவத்தின் நுட்பம் என்பதை உணர்ந்து, அருவத்தையும் கடந்த நிலையே இறைவனின் சொரூபநிலை என்கின்றது சைவசித்தாந்தம்.


இறைவனின் சொரூப இயல்பை மொழிகளால் பூரணமாக விளங்கிக்கூற முடியாது.சொற்பதம் கடந்த தொல்லோன் என்றும் சொல்பதம் கடந்த அப்பன் என்றும் மாணிக்கவாசகப்பெருமான் இறைவனின் இயல்பை சொற்களுக்குள் அடக்கமுடியாது என்று கூறிவிடுகின்றார். இத்தன்மையே சொரூப இயல்பு என்போம்.


ஒருநாமம் ஒருருவம் ஒன்றும்
இல்லாற்கு -  -திருவாசகம்


மூவரும் முப்பத்து மூவரும் மற்று ஒழிந்த தேவரும் காணாச் சிவபெருமான் -திருவாசகம்


பெண் ஆண் அலி எனும் பெற்றியன் - திருவாசகம்


பெண்டிர் ஆண் அலி என்று ஒண்கிலை - திருவாசகம்


இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே - ஆறாம் திருமுறை


சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி - திருவாசகம்

எவராலும் அறியமுடியாத தன்மையை உடையவர்,ஆண்,பெண்,அலி எனும் பேதங்களைக் கடந்தவர், அருவம்,உருவம்,அருவுருவம் எனும் வடிவங்களைக் கடந்த தன்மையுடையவர்,  இப்படிப்பட்டவர், இந்த நிறமுடையவர்,இந்த வடிவம் உடையவர் என்று எழுத்தாலோ சொற்களாலோ விபரிக்கமுடியாத தன்மையை உடையவர் என்று இறைவனின் சொரூப இயல்பை திருமுறைகள் தெளிவுபடுத்துகின்றன.

சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட தன்மையே இறைவனின் சொரூப இயல்பு என்பதை மாணிக்கவாசகர் "சிந்தனைக்கரிய சிவமே போற்றி" என்று திருவாசகத்தில் உணர்த்துயுள்ளார்.


சிவன் அருவுருவுமல்லன் சித்தினோடு அசித்தும் அல்லன்
பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடுவானும் அல்லன்
தவமுதலி யோகபோகத் தரிப்பவனும் அல்லன் தானே
இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பினானே -  சிவஞானசித்தியார்

தனியே சிவபெருமானைப் பற்றிக் கருதினால்;  அவர் உருவம்,அருவுருவம்,அருவம் எனும் வடிவங்கள் அற்றவர். அறிவுள்ள பொருட்களாகவும் அறிவற்ற பொருட்களாகவும் உள்ள எந்த உலகப்பொருட்களாகவும் இல்லை. படைப்பு முதலான தொழில்களைத் தானே செய்பவனாகவும் இல்லை. தவம்,யோகம்,போகம் ஆகிய எதனையும் அவர் மேற்கொள்வதில்லை. இவற்றை ஆன்மாக்களுக்கு வழங்குவதன்றி எதையும் அவர் தனக்கு ஏற்பதில்லை.  இவை அவரோடு பொருந்தினாலும், இவை எவற்றாலும் அவர் பற்றப்படுவதில்லை என்று சிவஞானசித்தியார் இறைவனின் சொரூப இயல்பைத் தெளிவுபடுத்துகின்றது.இச்சொரூப இயல்பை சச்சிதானந்தம் என்று சொல்வர். சத்தாகியும் சித்தாகியும் ஆனந்தமாகியும் நிற்கின்ற இயல்பு; சத்து+சித்து+ஆனந்தம்= சச்சிதானந்தம் எனப்படும்.

சத்து = என்றும் யாதொரு மாற்றமும் இன்றி நிலைபேறுடையதாய் உள்ள தன்மை.
சித்து = பேரறிவு
ஆனந்தம் = குறைவில்லா நிறையுடைய பேரின்பம்

சத்து,சித்து,ஆனந்தம் ஆகிய மூன்று தன்மைகளையும் விரித்து சிவபெருமானுக்கு எண் குணங்கள் உண்டென்று சைவசித்தாந்தம் அறிவுறுத்துகின்றது.

அதுவென்ன இறைவனின் எண்குணங்கள்? இறைவனின் தடத்தஇயல்பு என்றால் என்ன? சுருக்கமாகவும் தெளிவாகவும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 3
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 4

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 2"

suvanappiriyan said...

//இறைவனுக்கு உருவமுண்டு;ஆனால் அந்த இறைவனை யாரும் பார்க்கவில்லை என்பதால் மனிதர் தமது விருப்பத்துக்கு அமைவாக உருவம் வரையக்கூடாது என்கின்றது ஏனைய சமயங்கள். அதே நேரத்தில்; இதுதான் அந்தக்கடவுளின் பெயரென்று ஏதேனும் ஒரு பெயரைத் திட்டவட்டமாக கூறுகின்றன. //

தவறு நண்பரே! இறைவனை பல பெயர்களிலும் அழைக்கலாம். 'அல்லாஹ்' என்ற ஒன்று மட்டுமே அவனது பெயரில் அடங்காது.

'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'
-குர்ஆன் 17:110

சிவத்தமிழோன் said...

////அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன////

இறைவனுக்கு பெயர் உருவம் எதுவும் இல்லை என்பது சைவசித்தாந்தம். உருவமற்றதன்மை (அருவம்) யையும் கடந்தவர் இறைவன் என்கின்றது சைவசித்தாந்தம். அதைத்தான் இங்கு விளக்கியிருக்கின்றேன்.

மனம் அது நினைய வாக்கு
வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டங்(கு)
இச்சித்த தெய்வம்போற்றிச்
சினமுதல் அகற்றி வாழும்
செயல் அறமானால் யார்க்கும்
முனம் ஒரு தெய்வம் எங்கும்
செயற்குமுன்னிலையாம் அன்றே! (24) -
சிவஞானசித்தியார்

தான் விரும்பும் தெய்வத்தை மனதில் நினைக்கவும் வாக்கினால் தவறாது மந்திரம் கூறவும் கையினால் நல்ல மலர்களை எடுத்துப் போற்றவும் இவற்றோடுகூட, சினம் முதலிய தீயகுணங்களை நீக்கி, வாழும் முறைப்படி வாழ்ந்தால், அவர் விரும்பிய தெய்வம் அவரின் செயல்களுக்கு துணையாக முன்வந்து நிற்கும்.

யாதொரு தெய்வம் கொண்டீர்
அத்தெய்வ மாகிஆங்கே
மாதொரு பாகனார்தாம் -
சிவஞானசித்தியார்

எந்தப் பெயரில் அழைத்தாலும் இறைவனுக்கு அது பிரச்சினைக்குரிய விடயமல்ல என்பதை தெளிவுறுத்துகின்றது சைவசித்தாந்தம். எனவே; சிவன் என்றாலும் திருமால் என்றாலும் அல்லா என்றாலும் ரகுமான் என்றாலும் பிதா என்றாலும் இறைவனுக்கு அது பிரச்சினைக்குரிய விடயமல்ல. எனவே எல்லா சமயங்களையும் அரவணைக்கும் பாரததுணைக்கண்டச்சால்பை சைவசித்தாந்தம் இன்னும் அழுத்தமாக பதிந்திருப்பதை விளக்கியதே இப்பதிவு.

தங்கள் சமயம் தொடர்பான விளக்கத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

Post a Comment