"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, April 30, 2012

நித்தியானந்தாவும் சுமார்த்த திருவிளையாடலும்! -சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 8

அத்வைதத்துக்கு சங்கரர் கொடுத்த விளக்கம் தவறானது என்றும் சைவசித்தாந்தமே அத்வைதத்துக்கு உண்மை பொருளை கொடுக்கும் சுத்தாத்வைதநெறி என்றும் முன்னைய பகுதியில் பார்த்தோம்.
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் முன்னைய பகுதிகள்
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 1
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 2
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 3
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 4
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 5
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 6
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 7

இன்றைய பகுதியில் சைவசித்தாந்தம் பற்றி ஆராயாமல், சைவசித்தாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பார்க்க இருக்கின்றோம்.இது கொஞ்சம் அரசியல்வாடை கலந்த பதிவு! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்ற அப்பரடிகளின் அருள்வாக்கே சைவர்களுக்கு திருவாக்கு என்பதால் அரசியல்வாடை ஒரு இடைஞ்சல் அல்ல என்று கருதுகின்றேன்!

இப்பதிவு சற்று நீண்டபதிவுதான்! ஆனால் தமிழருக்கு அவசியமான பதிவு!!! ஆகவே பொறுமையோடு படிக்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.


சங்கர அத்வைதத்தை தோற்றுவித்த ஆதிசங்கரர் பிறப்பால் பிராமணர்! அதுவொன்றுதான் இன்றுவரை சங்கரரின் அத்வைதம்பற்றிய கருத்து தவறானதாக இருந்தபோதும் இன்றுவரை உயிர் வாழ்வதற்கு ஏதுவாயிற்று! ஆதிசங்கர் தான் பிராமணராக இருந்தமையை எண்ணி பெருமைப்பட்டிருப்பாரோ தெரியவில்லை! ஆனால் அவர் சமூகம் தம்மவர் முன்வைத்த அத்வைதத்துக்கான விளக்கம் என்ற ஒரே காரணத்துக்காக அதுபற்றிய தர்க்கரீதியான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடாமல் கண்மூடித்தனமாக அதுவே மெய்யென்று தலையில் வைத்து கொண்டாடுகின்றது!

சங்கர அத்வைதத்தை தழுவியிருப்பவர்கள் சைவநெறியுடையோர் அல்லர்! வைணவநெறியுடையோரும் அல்லர்! அவர்கள் சுமார்த்தர்கள் எனப்படுவர். இதனை தெய்வத்தின் குரலில் தெளிவாகவே சங்கர பெரியவாள் தெரிவித்துவிட்டார்!

சைவசமயத்துக்கும் சுமார்த்தத்துக்கும் அடிப்படை வேறுபாடுகள்தான் என்ன?


சங்கர அத்வைதத்தில் கடவுள்
பிரம்மம்=ஆன்மா

சைவநெறியில் கடவுள்!
சிவபெருமான்


சங்கர அத்வைதமும் சாதியும்!
நான்கு வர்ணங்கள்! பிராமணரே உயர்ந்தோர்!

குறைந்தசாதி என்று அவர்களால் கருதப்படும் எவரோடும் பேசும்போதும்கூட தீட்டு ஏற்பட்டுவிடும். எனவே அத்தீட்டு ஏற்படுவதை தவிர்க்க மாட்டு கொட்டகையில் வைத்துத்தான் அப்படியானவர்களை சந்தித்தல்( காந்தியை அப்படித்தான் சங்கரப்பெரியவாள் சந்தித்தார்)

சைவநெறியில் சாதி!
சிவாகமங்களை கற்று அறுபத்திநான்காம் நாயனாராக விளங்கிய ஆறுமுகநாவலர் பெருமானால் சைவசாதியமைப்பு தெளிவாக உரைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல சைவர்கள் அதனை பின்பற்றுவதில்லை என்பது வேறுகதை! இதோ; நாவலர் பெருமானின் வாக்கு:

"சாதியினுஞ் சமயமே அதிகம். சமயத்தினுஞ் சாதி அதிகமெனக் கொள்வது சுருதி யுத்தி அநுபவமூன்றுக்கும் முழுமையும் விரோதம்.உலகத்துச் சாதிபேதம் போலச் சற்சமயமாகிய சைவசமயத்தினும் முதற்சாதி இரண்டாஞ்சாதி மூன்றாஞ்சாதி நாலாஞ்சாதி நீச சாதியென சமயநடைபற்றி ஐந்து சாதி கொள்ளப்படும்.
சிவாகமத்தில் விதிக்கப்பட்ட நான்கு பாதமுறைப்படி வழுவற நடந்து சிவானந்தப் பெரும்பேறு பெற்ற சீவன்முத்தர் சிவமேயாவர். இனிச் சிவஞானிகள் முதற்சாதி; சிவயோகிகள் இரண்டாஞ்சாதி; சிவக்கிரியாவான்கள் மூன்றாஞ்சாதி;சிவாச்சாரியான்கள் நாலாஞ்சாதி; இந்நெறிகளில் வராதவர்களும் ,இவர்களையும் இவர்கள் சாத்திரமுதலியவற்றையும் நிந்திப்பவர்களும்,இந்நெறிகளிலே முறைபிறழ்ந்து நடக்கின்றவர்களும், இந்த நடைகளை விட்ட பதிதர்களும், சதாசூதகிகளாகிய பஞ்சமசாதி.

சிவசரியை கிரியை முதலியவைகளிலே பொருள்தேடி உடம்பை வளர்ப்பவர்களும், அப்பொருளை பாசத்தாருக்குக் கொடுத்து இன்புறுபவர்களும், கோயிலதிகாரிகளாய்த் தேவத்திரவியத்தைப் புசிப்பவர்களும், விருத்திப் பொருட்டு ஆசாரியாபிஷேக முதலியன செய்துடையோர்களும், விருத்திப் பொருட்டு சிவவேடந்தரித்தவர்களும், விருத்திப் பொருட்டுத் துறவறம் பூண்டவர்களும், சிவஞானநூல்களைச் சொல்லிப் பொருள் வாங்கி வயிறு வளர்ப்பவர்களும், பிறரும் பதிதர்களுள் அடங்குவர்கள்.

இங்கே சொல்லிய முறையன்றி, சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டுத் தமக்குத் திருமேனியாகக் கொண்டருளிய குருலிங்கசங்கமமென்னும் மூன்றிடத்தும் ஆசையும் பணியும் வழிபாடும் கொடையும் அடிமைத் திறமும் உரிமையுடையவர்கள் எந்தக் கருமஞ்செய்தாலும் முதற்சாதியெனக் கொள்ளப்படுவார்கள்."

ஒன்றே குலம் -திருமந்திரம்
ஆன்மாக்கள் அனைத்தும் பசு என்னும் ஒருகுலத்தை சார்த்தவையே! இதுவே திருமந்திரம் சொல்லும் திருமறை!

ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே - அப்பர் பெருமான்

கோத்திரமுங் குலமுங்கொண்டென் செய்வீர் -அப்பர் பெருமான்

சங்கர அத்வைதத்தில் மொழி!
சங்கதமொழி(சமஸ்கிருதமொழி) ஒன்றுதான் உயர்ந்த தேவமொழி! கடவுள் மொழி! தமிழ்மொழி பூசை,நாயன்மார் பூசை(நாயன்மாரை ஆதிசங்கரர் துதித்திருந்தமையை கருத்தில் கொள்வது இவர்களுக்கு கடினமான விடயம்) ஆகியவை தமது உயர்ந்த தகுதியை குறைக்கும் செயல்கள்! தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து கிளைத்தவைதான்! (அறிவியலுக்கு முரணானது. சங்கர அத்வைதத்தை பரப்பிய சாய்பாபா கூட இதனையே சொன்னார். நம் தமிழர்கள் கேட்டு மெய்சிலிர்த்தனர்!)

சைவநெறியில் மொழி!
"தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே"-திருமந்திரம்

"ஆரிய முந்தமி ழும் உடனே சொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே"-திருமந்திரம்

இவ்வண்ணம் சைவதோத்திர நூல்களில் ஒன்றாகிய திருமந்திரம் தமிழ்மொழி கடவுள்மொழி என்பதை தெளிவாகவே உறுதிசெய்கின்றது.

ஆக; தமிழும் சங்கதமொழியும் சிவபெருமானால் அம்மைக்கு ஆகமங்களைப் போதிக்க ஒரேநேரத்தில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் என்பது தெளிவு! எனவே தமிழும் சங்கதமொழியும் இறைவனின் மொழிகளே! ஒன்றை உயர்த்தி ஒன்றைத் தாழ்த்தி கருதுதல் பாவம்! இதுதான் சைவநெறி! ஆக; தமிழ்வழிபாடு என்பது ஆகமச்சைவநெறிக்கு தவறான ஒன்றல்ல!!!

சங்கர அத்வைதமும் வேதமும்!
வேதங்கள் தானாக இருந்தவை. கடவுளால் தோற்றுவிக்கப்படாதவை. வேதமும் ஸ்மிருதிகளுமே சமயநூல்! இதுதான் சங்கர அத்வைதம்!
ஆனால் சைவசமயம் இதனை மறுக்கின்றது!

சைவத்தில் வேதம்!
வேதங்கள் பொதுநூல்களே! சைவாகமங்களே சைவசமயத்தின் சிறப்பு நூல்கள்!  பன்னிருதிருமுறைகளும் தமிழ்வேதம்! பதினான்கு மெய்கண்ட சாத்திரநூல்களுமே சைவசித்தாந்த திருநூல்கள்!

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது
அயந்திரு மாலொடு மயங்கி - திருவிசைப்பா
ஆக; வேதத்தினால்கூட முழுமையாக வெளிப்படுத்தமுடியாதவர் சிவபெருமான் என்பது சைவமுடிவு! எனவே சைவத்தில் வேதத்தின் பங்கு எவ்வளவு என்பது தெளிவு!

உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏதேனும் ஒருவழியைப்பற்றி அறிவுபெற்று ஈற்றில் சைவசமயப்பிறவி வாய்க்கவே வேதம் சிவபெருமானால் உரைக்கப்பட்டது என்பது சைவதுணிபு.

புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும்
      புகன்மிருதி வழிஉழன்றும் புகலும்ஆச் சிரம
அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்
      அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும்
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
      சிரப்பொருளை மிகத்தௌ¤ந்தும் சென்றால் வைசத்
திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகம்
      செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்.- சிவஞான சித்தியார்

இப்படி பல்வேறு காரணிகளால் சுமார்தர்களுக்கு சைவசமயம் என்பது வேம்பங்காய் என்று ஆகிவிட்டது! அவர்களுடைய கொட்டங்கள் அரங்கேற இடமற்ற நெறியாக சைவசமயம் விளங்குவது உறுத்தல் ஆயிற்று! சைவசமயமே தமிழரின் பெருஞ்சமயமாக இருந்தமையால் அதனை மழுங்கடிப்பதும் கடினமாக இருந்திற்று.

மேன்மைகொள் சைவநீதி என்றார் கச்சியப்பர் பெருமான். ஆனால் இன்று அத்வைதத்துக்கு பிழையான பொருள்கொடுத்த சுமார்த்தமதம் அரசியல்ரிதீயில் பலம் பொருந்திய மதமாக வளர்க்கப்பட்டு வருவதும் சைவசமயம் மழுங்கடிக்கப்பட்டுவருவதும் தமிழர் செய்த துர்வினைகளின் பலன் என்றுதான் சொல்லவேண்டும்!

சுமார்த்தமடத்தின் அதிபதியாக பிராமணரே வரலாம் என்னும் விதியினாலும் பிராமணரே பிறப்பால் உயர்ந்தோர் என்னும் கருத்தை வலியுறுத்துவதாலும் பிராமணரில் பெரும்பான்மையானோரின் மதமாக சுமார்த்தம் உருவாக ஏதுவாயிற்று. ஆதிசிவாச்சாரியார்கள்,சைவசமய பிராமணர்கள் பலரும் இன்று இந்த சுமார்த்த வலைக்குள் அகப்பட்டுக்கொண்டிருப்பதும் இன்று பரவலாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. சென்னையிலுள்ள தேவாரப்பாடல்பெற்ற
திருத்தலங்களினுள் ஆதிசங்கரரின் உருவப்படங்கள் கொழுவப்பட்டிருப்பது இப்பெருமாற்றத்தின் வெளிப்பாடே!!!

சைவசித்தாந்தநெறியை சிதைக்கும் சிந்தனை இந்துத்துவாவிடம் ஏன் உருவாகியது?

தனித்தமிழ் இயக்கம், தமிழர் ஆண்டுக்கணக்கு என்று பல்வேறு புரட்சிகளுக்கு வித்திட்டவர்களும் சைவசித்தாந்திகளே!அதை உருவாக்கி வளர்த்து பேணியவர்களும் சைவசித்தாந்திகளே! ஆக; திராவிடவாதத்தின் ஊற்று சைவசித்தாந்தமே என்ற தெளிவு பார்ப்பனீய இந்துத்துவத்துக்கு ஏற்பட்டது! தமிழகத்தில் திராவிடநாடு கோரிக்கை முன்வைக்கப்பட்ட காலத்தில் இந்தியத்தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தெடுக்க, இந்திய முழுவதும் ஒரேபண்பாட்டையுடைய இந்துமதம் உருவாக்கப்பட வேண்டுமென்ற சிந்தை பார்ப்பனீயத்துக்கு உருவாகிவிட்டது. அதன்விளைவாக, தமிழகத்தில் செழிப்பாகவுள்ள தமிழ்ச்சால்புடைய சைவசித்தாந்தநெறியை தமிழரிடம் இருந்து மெதுமெதுவாக மறைத்து அதற்குப்பதிலாக, பார்ப்பனீயச்சால்புடைய சுமார்த்தநெறியை தமிழருக்கு ஊட்டவேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று அதுமெதுமெதுவாக செயற்படுத்தப்படலாயிற்று. சுமார்த்தம்  சங்கதமொழி(சமஸ்கிருதமொழ்) ஒன்றே தேவமொழி என்று கருதுவதால் அதுவே இந்தியாவின் ஒருமைப்பாட்டை வளர்க்கும் மதமாக இந்தியத்தேசியவாதிகளுக்கு இனித்தது! இது விசித்திரமான ஒன்றல்ல!

அம்பேக்கர் இந்துத்துவா சாதித்துவத்தை அழிக்க உதவாது என்று கருதியபோது, பௌத்தமதமே தழுவிக்கொண்டார். இஸ்லாமிய கிருஷ்தவமதங்கள் இந்தியமண்ணின் மாண்புக்கும், மனிதநேய விழுமியங்களுக்கும் எக்காலத்திலும் உறுதுணையளிக்காது என்பதை நன்குவெளிப்படுத்தி பௌத்தத்தை தழுவினார்.  அவரிடம் இருந்த அரசியல் ஞானம் பெரியாரிடம் இருந்திருக்கவில்லை! திருக்குறளையே திட்டிய பெரியாருக்கு அப்படியான சிந்தனைத்தெளிவு இருக்கவில்லை என்பதில் வியப்பில்லை!
எனவே அவரும் இந்துமதத்துக்கும் சைவசித்தாந்தத்துக்குமுள்ள பாரிய வேறுபாடுகளை உற்றுணராது நாத்தீகத்தையும் இஸ்லாமிய கிருஷ்தவசார்பு செயற்பாடுகளையும் ஆதரித்து திராவிடவாதத்தை தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டுவந்துவிடவே, சைவசித்தாந்தநெறி தனிமைப்படுத்தப்பட ஏதுவான சூழ்நிலை உருவாகிற்று.

தனித்தமிழ் இயக்கம்,தமிழர் புத்தாண்டுமுறை, தமிழ் பூசைக்கு ஆதரவு போன்ற சைவசித்தாந்திகளின் செயற்பாடுகளால் பார்ப்பனீய இந்துத்துவத்துக்கு கசப்பாக விளங்கிய சைவசித்தாந்தநெறி, பெரியாரின் நாத்தீகத்திராவிட அரசியலாலும் புறக்கணிக்கப்பட்டது! இதன்விளைவால், பார்ப்பனீய இந்துத்துவத்துக்கு இலகுவாக சைவசித்தாந்தநெறியை மழுங்கடிக்கச்செய்ய பொறிமுறைகள் உருவாக்கிற்று.

தமிழ்நாட்டில் இயங்கிய நாத்தீக அரசியல் தலைமைகள் அரசு பள்ளிக்கூடங்களில் சமயக்கல்வியை தடைசெய்தது. இதனால் சைவத்தமிழ் தேவாரத் திருமுறைகள் தமிழ் மாணவர்களுக்கு புகட்டுவது இயலாத காரியம் ஆகிற்று. இந்துப்பள்ளிக்கூடங்களென்று இந்துத்துவா நிறுவனங்களால் பேணப்படும் பள்ளிக்கூடங்களில் சைவசமயம் என்ற ஒன்று இருப்பதாகக்கூட கற்பிப்பதில்லை. காலை கடவுள் வணக்கத்தில் முழுவதும் சங்கதமொழி(சமஸ்கிருதமொழி) மந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நாயன்மார் வரலாறு அறியாத தமிழினம் உருவாக்கப்படலாயிற்று. குமுதம் பக்தி,ஆனந்தவிகடன் சக்தி,கோபுரம்,ஆலயம் போன்ற வெகுஜன ஊடகங்களினூடாகவும் பார்ப்பனீய இந்துத்துவம் பார்ப்பனீய சுமார்த்தத்தையே இந்துமதமாக போதிக்கின்றன. இதனால், சைவம் என்றால் வெஜ்(Veg) என்ற பொருளைமட்டுமே அறிந்த தமிழகம் பிறந்திற்று!

மணிப்பிரவாளநடை என்ற பெயரில் தமிழ் அழிந்துகொண்டிருந்தபோது தனித்தமிழ் இயக்கம் கண்டு தமிழைக்காத்து இன்றைய சந்ததிக்கு தமிழை தமிழாக சைவசித்தாந்தம் வழங்கியிருக்க, பெரியார்வழி நாத்தீக திராவிட அரசியல் தலைமைகளின் அறிவீனத்தால் இன்று தமிங்கிலமொழி உருவாக்கம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. பார்ப்பனீய இந்துத்துவாவே இந்த தமிங்கிலமொழி உருவாக்கத்துக்கும் அடித்தளம் இட்டு வளர்த்தெடுகின்றது என்ற சிந்தனைத்தெளிவு திராவிட இயக்கங்களுக்கு இல்லை! பார்ப்பனீய இந்துத்துவத்தை பொருத்தவரைக்கும், சமஸ்கிருதம்(சங்கதமொழி) வளர்க்கப்படாவிட்டாலும், தமிழ் ஏதேனும்வழிகளில் சிதைக்கப்பட்டால் சரி என்ற தெளிவு உண்டு! அதுபோல் தமிழரிடம் தமிழ்ச்சால்பு சைவசித்தாந்தம் மழுங்கடிக்கப்பட்டு பார்ப்பனீய சுமார்த்தமே வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்ற புரிதலும் உண்டு. அதுவே தமிழ்த்தேசியவாதத்தை சிதைக்க உதவும் என்ற தெளிவான புரிதலும் உண்டு! ஆனால் சாக்கடை அரசியலுக்குள் சிக்கியுள்ள திராவிட இயக்கங்களுக்கு சைவசித்தாந்த்தை காக்க வேண்டிய தேவையை உணர்ந்துகொள்ள முடியவில்லை! அதனை கடந்த செம்மொழி மாநாட்டில் உணரக்கூடியதாகவே இருந்தது. தமிழகப் பாரம்பரீய சைவாதீனங்களை செம்மொழிமாநாட்டில் கண்டுகொள்ளாமல் விட்டமை இதனை உணர்த்தியது! தமிழ் நூல்களைக் காத்து தமிழை செம்மொழியாக்கும் தகுதியை உருவாக்கிய சைவாதீனங்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டமையே பெரியார்வழி நாத்தீகதிராவிட அரசியலின் மோட்டுத்தனத்தை தோலுரித்துக்காட்டியது!

ஆக; தமிழரின் அரியஞானத்தின் வெளிப்பாடு என்று ஜூ.யூ.போப் போன்றோரால் புகழ்ந்துரைக்கப்பட்ட சைவசித்தாந்தம் தமிழகத்தில் இன்று ஏதேனும்வழிகளில் இருக்கின்றதென்றால் அது சைவாதீனங்களின் செயற்பாடுகளால்த்தான் என்று புரிதல் பார்ப்பனீய இந்துத்துவாவிடம் உண்டு. எனவே சைவாதீனங்களை சிதைப்பதுவே தமிழரின் தனித்துவசமயப்பண்பாடாகிய சைவசித்தாந்தத்தை மழுக்கடித்து ஒரேஇந்துமதமாக பார்ப்பனீய சுமார்த்தத்தை தமிழகத்தில் பூரணமாக நிறுவ வழிவகுக்கும் என்ற சிந்தனை பார்ப்பனீய இந்துத்துவத்துக்கு ஏற்பட்டுவிட்டது! திராவிட அரசியல் தலைமைகளால் கண்டுகொள்ளாமல்விடப்பட்டுள்ள தமிழ்மாண்புக்குரிய சைவாதீனங்களை சிதைப்பதென்பது கடினமான ஒன்றல்ல! அரசு-அரசியல் ஆதரவற்ற எதனையும் இலகுவாக சிதைக்கலாம் என்பது சின்னக்குழந்தைக்கும் தெரிந்த ஒன்றே!

இதன் வெளிப்பாடாக இப்போது ரஞ்சிதாபுகழ் நித்தியானந்தாவுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய வரலாற்றுப்புகழுடைய சைவாதீனத்தின் இளைய மடாதிபதி நியமனம் ஏற்பட்டுள்ளது!

ரஞ்சிதாபுகழ் நித்தியானந்தா சர்ச்சைக்குரிய சம்பவத்திற்கு பின்னால் அளிந்த பேட்டிகள் அப்பேட்டிகளில் அவர்பயன்படுத்திய சில்லறைத்தனமான வார்த்தைகள், "தூ" என்று காரி துப்புவது போன்ற கோபச்செயற்பாடுகள், முன்சொன்ன கருத்துக்களை இல்லை என்று மறுக்கின்ற அரசியல்வாதிகளைப்போன்ற கீழ்த்தரமான செயற்பாடுகளால் அவர் சராசரி மனிதனிலும் கேவலமானவர் என்பது வெளிப்படையாயிற்று!

ரஞ்சிதாபுகழ் நித்தியானந்தா தனது இதுவரைகால செயற்பாடுகளில் வெளிப்படுத்திய சமயக்கருத்துகள் யாவுமே பார்ப்பனீய சுமார்த்தசமயக் கருத்துக்களே ஆகும்! ஆக அவர் பார்ப்பனீய சுமார்த்தமதத்தை தமிழரிடம் வளர்க்க பார்ப்பனீயத்தால் உருவாக்கப்பட்ட ஒருவர்! ஆம்; பார்ப்பன ஊடகமான குமுதத்தால் உருவாக்கப்பட்ட ஒருவரே அவர்!
தேவார திருவாச சைவசித்த்தாந்த திருமுறைகள், சைவசித்தாந்த சாத்திரநூல்கள், சைவாகமங்கள் என்பவற்றில் எள்ளளவேனும் அறிவு உடையவர் அல்லர்!  சைவசித்தாந்த மடத்தில் உரியமுறையில் கற்றவரும் அல்லர்! இப்படியான ஒரு பார்ப்பனீய சங்கரமட சுமார்த்தசமய பிரச்சாரகருக்கு சைவாதீனமான மதுரை ஆதீனத்தின்  இளைய ஆதீனப்பட்டம் எங்கனம் வாய்த்தது?

தற்போது மதுரை பெரியாதீனமாக இருப்பவர் அரசியல்வாதிகளுடன் சேர்ந்தியங்கும் தன்மை உடையவர்! அரசியல்வாதிகளைப்போன்று பேச்சுகளை நிகழ்த்துபவர்! துறவுக்கோலத்தில் இருந்தாலும் பகட்டு "பந்தா" வாழ்க்கையை மேற்கொள்ளுபவர். ஏற்கனவே பெண்விடயத்தில் கிசுகிசுக்கப்பட்ட ஒருவர்! எனவே இவருக்கும் நித்தியானந்தாவுக்கும் இடையில் உறவுபூப்பதற்கு பெரிய இராமர்பாலம் அமைக்கத்தேவையில்லை! இனம் இனத்தைச்சாரும் என்ற பழமொழிக்கு ஏற்ப இருவருக்குமிடையில் பாச உறவுபற்றிக்கொண்டுவிட்டது! ரஞ்சிதா நித்தியானந்தாவுடன் மதுரை ஆதீனத்துக்கு சென்றுள்ளமையும், பெண் சீடர்கள் இருவர் மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்டதாக கசிந்துள்ள செய்திகளும் இருவருக்குமான பாசமழையை உலகுக்கு வெளிப்படுத்திற்று.

ஆக; இருவருக்குமான உறவுக்கு ஊடகமாக சுமார்த்த இந்துமதம் சூட்சுமாய் விளங்கியுள்ளதென்பதை தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டிய தேவையுள்ளது. இனிமேல் மதுரை ஆதீனம் சைவசமய உலகாலும், அறிவுள்ள பொதுசனங்களாலும் ஒதுக்கப்பட்ட ஒன்றாகவே மாறவுள்ளது! இத்தனை நூற்றாண்டுகால ஆதீனச்சிறப்பும் சிதைந்திற்று! ஆக; மதுரை ஆதீனம் அழிந்திற்று என்றே கூறலாம்! எனவே சுமார்த்த பார்ப்பனீயம் உருவாக்கிய நித்தியானந்தாவால் மதுரை ஆதீனம் அழிக்கப்பட்டுள்ளது! சைவாதீனங்களில் ஒன்றை சிதைப்பதில் சுமார்த்தம் வெற்றிபெற்றுவிட்டது! நாத்தீக பெரியார்வழி திராவிட அரசியல் இந்துத்துவத்தின் கணக்குப்புரியாது கண்ணிருந்தும் குருடராகவுள்ளது!  சைவசமயம் அரசியல் ஆதரவுமில்லாது சுமார்த்த பார்ப்பனீயத்தை எதிர்கொள்ளும் பலமும் இல்லாது தவிக்கின்றது என்றுதான் கூறவேண்டும்!!!!

சுமார்த்திகளாகிய இந்துத்துவாவின் அண்மைய செயற்பாடுகள்

தமிழ்மொழி பூசைக்கு எதிர், அனைத்து மொழியினரும் அர்ச்சகராகலாம் என்னும் அரசு சட்டத்துக்கு எதிர், திருவாசகத்தை மாணிக்கவாசகர் எங்கு அரங்கேற்றினாரோ அங்குநின்று திருவாசகம் ஓதுதல் தீட்டை உருவாக்கும் என்ற கீழ்த்தரமான சிந்தை என்று அனைத்து வழிகளிலும் சுமார்த்தசங்கர மடமும் அதன் விசுவாசிகளான பார்ப்பனீயரும் ஒரேகுடையில் நின்று செயற்படுகின்றமை!

பார்ப்பனீய இந்துத்துவாவின் அரசியல் இயக்கமான R.S.S அமைப்பு தமிழக மக்களின் சிந்தனைக்கு மாறாக ஐ.நாவில் இலங்கைக்கு சார்பாக இந்தியா செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தமை!

அணு உலைக்கு எதிராக தமிழகமே குரல்கொடுத்தபோது, தமிழக இந்து முன்னணி மத்திய அரசுக்கு சார்பாக அறிக்கை வெளியிட்டு மக்கள் போராட்டத்துக்கு எதிராக செயற்பட்டமை! இராமர் பாலம் அழியும் என்று சொல்லி,தமிழக வளர்ச்சிக்கு உதவும் தமிழக சேதுசமுத்திரக்கனவை தடுத்தவர்கள், தமிழக வளர்ச்சி உதவும் என்று சொல்லி, அணு உலைக்கு ஆதரவாக செயற்பட்டமை!

ஆக; சுமார்த்தமதமாகிய பார்ப்பனீய இந்துமதம் தமிழரிடமுள்ள தமிழ்ச்சால்பு சைவசித்தாந்தநெறியை சிதைப்பது புதிரான ஒன்றல்ல என்பது வெள்ளிடைமலை!!!!

சைவர்களின் கடமைதான் என்ன?
சைவர்களே, விழித்தெழுங்கள்!!!! தமிழை திராவிட இயக்கங்களும் காக்கமாட்டனர்! பார்ப்பனீய இந்துத்துவாக்களும் காக்கமாட்டனர்!!!
சைவர்களே, உங்கள் கடமையாதெனில் தமிழர் குலத்தை இப்பாரினில் காத்திட, சைவசமயத்துக்கு வரும் பங்கங்களை களைய முன்வாருங்கள்!!!


சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் அடுத்த பகுதியில் சைவசித்தாந்த தத்துவங்களை பழையபடி தொடர்ந்து பார்ப்போம்!

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் 9


இதுதொடர்பான முன்னைய பகுதிகள்
இந்துத்துவக் கொள்கையில் மறையும் சைவமும் தமிழும்
http://sivathamiloan.blogspot.com/2008/07/blog-post_21.html


சைவ நெறியை அழிக்கத்துடிக்கும் இந்துவை போற்றுதல் வெட்கக்கேடானது தமிழுக்கும் தமிழருக்கும்
http://sivathamiloan.blogspot.com/2008/11/blog-post_22.html


சைவநெறி என்று பறைவோம்
http://sivathamiloan.blogspot.com/2009/07/blog-post_22.html


"இந்து" மதம் சைவநெறிக்கும் தமிழுக்கும் இழைக்கும் கொடுமைகள்
http://sivathamiloan.blogspot.com/2009/07/blog-post_23.html


ஸ்மார்த்தரிடம் நாவலர் தொடுத்த ஐந்து வினாக்களும் நாவலர் விளக்கிய சைவ சாதிமுறையும்
http://sivathamiloan.blogspot.com/2009/09/blog-post_13.htmlhttp://sivathamiloan.blogspot.com/2010/03/blog-post.html
மேலும் படிக்க...