"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"
Latest Posts

Wednesday, May 20, 2020

கோப்பாய் சிவம்- திரு.சிவானந்த சர்மா அவர்களின் பதிவுகுறித்த கட்டுரை

இப்பதிவினைப் படிக்கமுதல், ஆதிசைவப் பிராமணர், மகாசைவப் பிராமணர் என்றால் யாரென்ற தெளிவு இருத்தல் வேண்டும்.
சைவநூல்களில் 
வர்ணங்கள்(மற்றும் சாதிகள்) குறித்து மூன்று முடிவுகள் உண்டு.

இதில்,
1) பிறப்பால் வர்ணங்கள் இல்லையென்று கூறப்பட்டுவரும் கருத்துகள் வைதீகத் தத்துவ மரபில் சைவசமயத்திற்கு தனித்துவமான கருத்துக்களாகும்.
உத்தமமான கருத்தென்று நாம் இதைக் கொள்கின்றோம்.

2)பிறப்பால் உள்ள வர்ணங்கள் தீட்சைகளால் ஒழியும் என்பதும் சைவசமயத்திற்கே சிறப்பான கொள்கையாக விளங்குகின்றது. இது மத்திமமான கருத்தென்று போற்றலாம்.

இவ்விரண்டுமே தீட்சைப்பாரம்பரியத்தைத் தூக்கிப்பிடிப்பதால்- தீட்சைமரபு என்று நாம் இக்கட்டுரையில் பாவிக்கின்றோம்.
3)பிறப்பால் உண்டாகும் வர்ணம் அழியாது என்னும் கோட்பாடு கொண்டாரும் உளர். இதுவும் ஆகமங்களில் சில இடங்களில் கூறப்பட்டுள்ள கருத்தேயாகும். எனினும் இக்கருத்துகள்  ஏனைய ஆகமங்கள்/சைவநூல்களுக்கும்  ஒவ்வாததாக இருப்பதால் - இக்கருத்து புகுத்தப்பட்டதென்பது தெளிவாகின்றது. எனினும் ஸ்மார்த்தமதவாச வர்ணப்பிடிப்பு உள்ளோர் இக்கருத்தில் உறுதியாய் இருப்பர்., இங்கு நாம் அதை வாதத்துக்கு உள்ளாக்கவில்லை. ஏனெனில் இக்கட்டுரை துகுறித்த வாதத்துக்குரியதல்ல. இதனைச் சுமார்த்தவாசக்கருத்து எனலாம்.
பிறப்பால் தோன்றும் வர்ணங்கள்  ஒருபோதும் ஒழியாது என்னும் கோட்பாடுகளுக்கு அமைவாக, ஆகமத்தில் பிராமணரினை இருவகையாகப் பிரிப்பர். 
1) ஆதிசைவப் பிராமணர்
2) மகாசைவப் பிராமணர்

இதில் ஆதிசைவப் பிராமணர் என்போர் சிவபெருமானின் ஐந்து முகங்களினால் தீட்சிக்கப்பட்ட முனிவர்களின் கோத்திரத்தினைச் சார்ந்தவர்களாவர்.  கௌசிகர்,காசிபர்,பரத்வாஜர்,கௌதமர்,அகத்தியர்(அல்லது அத்திரி)  என்று இக்கோத்திரங்களை ஆகமநூல்கள் கூறுகின்றன.   இவர்களுக்கே கருவறைக்குள் நுழைவதற்கும், சிவபெருமான் முதலிய தெய்வங்களுக்கு பூசைகள் செய்வதற்கும் அதிகாரம் உண்டு. ஏனையாருக்கு இல்லை.

மகாசைவப் பிராமணர் என்போர், ஸ்மார்த்தமதத்தில் பிறந்த பிராமணர். பிரம்மாவின் முகத்தில் தோன்றியவர்கள் என்று கூறப்படும் பிராமணக்கோத்திரங்களை உடையவர்கள். எனினும், சைவசமயத்தினைச் சார்ந்து, சைவசமயதீட்சை முதலியன எடுத்துக்கொண்டு, சைவவழி நிற்போர். இவர்களுக்கு யாகம் செய்யும் அதிகாரம் உண்டு. ஆனால் கோயில்களில் பூசைசெய்யும் அதிகாரம் இல்லை. இது ஆகமத்தில் பிறப்புவழி வர்ணம் ஒருபோதும் ஒழியாதென்னும் கருத்திற்கு அமைவான கொள்கையாகும்.


(சைவசமயநெறி என்னும் ஆகமசார நூலிலிருந்து விளக்கம் தமிழில் இருக்கும்பொருட்டு தரப்படுகின்றது.)

இதுவரைகாலமும், சைவசமயத்தில் ஸ்மார்த்தமத சம்பிரதாயங்கள் வலுத்துள்ளதென்றும், கிரியைகளில் மிகவும் பெருத்துள்ளதென்றும், சைவசமயப் பூசகர்களிடையே ஸ்மார்த்தமத சம்பிரதாயங்களே முதன்மைபெற்று நிற்கின்றதென்றும் கூறிவந்தபோது, ஆரம்பத்தில் சிலர் மறுத்தனர். அப்படியானவர்களில் ஒருவர் கோப்பாய் சிவம் எனப்படும் திரு.சிவானந்த சர்மா அவர்கள்.  அவருடைய நூலில் ஸ்மார்த்தமதமே சைவமாக இட்டுக்கட்டப்படுவதைச் சுட்டிப் பதிவு நாம் இட்டும் இருந்தோம்.  எனினும், அதற்குரிய நேர்மையான பதில்கள் கிடைக்காதவிடத்தும், ஸ்மார்த்தமத பிராமணர்கள் சைவதீட்சைகளெடுத்து பூசைசெய்யும் பிராமணரில் குறிப்பிட்டளவு உள்ளனர் என்றும், ஏனையோர் சிவப்பிராமணர் என்றும் கூறினார். தற்போது, இலங்கையிலுள்ள பிராமணர் எல்லோரும் ஸ்மார்த்தமதப்பூர்வீகத்தையுடைய "மகாசைவப்பிராமணர்" என்று எழுதியுள்ளார். 


விரிவுரையாளருடைய பதிவுகள் குறித்த நமது கருத்துகள்
1)  அச்சுவேலிக் குமாரசுவாமிக்குருக்கள் பெருமானார் முதலிய பல்வேறு ஆதிசைவப் பிராமணர் இருந்தனர் என்பது உறுதி. எமது ஊகத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட சில பிராமணரின் மூலத்தினைத் தேடினால் ஆதிசைவப்பிராமணராகவேயிருப்பார்கள். ஆனால் பிற்காலத்தில் ஸ்மார்த்தப்பிராமணர்கள்(மகாசைவராகி) குருகுலங்களை நடத்தத்தொடங்கியமையினால்- செல்வாக்காக இருந்தமையினால், ஆதிசைவ பிராமணரின் மரபுகளை கைவிட்டு, ஸ்மார்த்தமத மரபுகளைப் பலரும் கைக்கொள்ளும் நிலைக்கு உள்ளாயினர்.

பலருடைய தந்தையாரின் பெயரில், தந்தையாரின் முன்னோர்களின் பெயரில் சர்மா இருக்காது.ஆனால் இன்றைய தலைமுறையினரில் சர்மா பெயர் இணைத்துக்கொண்டிருப்பர். இவை, ஸ்மார்த்தவழக்கம் என்று தெரிந்துகொள்ளாமல், வர்ணப்பற்றில் இட்டுக்கொண்டவையேயாகும். இப்படித்தான், ஆதிசைவப்பிராமணர் பலர், ஸ்மார்த்தவழக்கத்தினுள் நுழைந்தனர்.
இதனாலேயே, இன்றுள்ள அனைத்துப் பிராமணரினையும் திரு.சிவானந்த சர்மா அவர்கள் மகாசைவப் பிராமணர் என்று கூறிவிட்டார். இதனை அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்கள் முதலிய ஆதிசைவப்பிராமண அடியினையுடையார் ஏற்றுக்கொள்வார்களா? என்பது எமக்கு வியப்பாகும்.


2)ஆலய பரிபாலனம் தொடர்பாக அச்சுவேலிக் குமாரசுவாமிக்குருக்கள் எழுதிய நூல்களில், மகாசைவப்பிராமணருக்கு கருவறைக்குள் நுழையும் அதிகாரம் இல்லையென்று தெளிவாக மறுக்கின்றார். அவர்மட்டுமல்ல, தமிழக சிவாசாரிய அமைப்புகளும் மறுக்கின்றன. 
ஆகமமும் "பிறப்புவழியில்" பொருள்கொண்டால் அதனை அறுதியாகவும் உறுதியாகவும் மறுக்கின்றன. எனவே, கோயில்களில் மகாசைவப்பிராமணர் பூசைசெய்வதை  ஆதரிக்கும் திரு. சிவானந்த சர்மா அவர்கள் பிறப்புவழியில்  தீட்சைகளினாலும் ஒழியாதென்று கொள்ளும் வர்ணாச்சிரமத்தினைவர்ணாச்சிரமத்தினை ஏற்கின்றாரா? இல்லையா?
பிறப்புவழி வர்ணாச்சிரமம் தீட்சைகளினாலும் ஒழியாதென்னும் நிலைப்பாடுடையாரின் பிரமாணமே ஆதிசைவப்பிராமணர்,மகாசைவப்பிராமணர் முதலிய பகுப்புக்கள். 

மகாசைவப்பிராமணர் என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், பிறப்புவழியில் தீட்சையால் ஒழியாத வர்ணாச்சிரமத்தினை ஏற்றுக்கொள்கின்றார் என்பதே பொருளாகும். ஆனால், அப்படியான மகாசைவப்பிராமணர் சைவக்கோயில்களில் பூசைசெய்வதை ஆதரிக்கின்றார். இது எந்தவகையில் நியாயம்? மேட்டிமை சிந்தனைக்கும் அடுத்தவரைக் கீழானோர் என்னும் மனோபாவத்துக்கும் உதவும் பிறப்புவழி வர்ணாச்சிரமம் வேண்டும்.ஆனால், அந்த வர்ணாச்சிரமம் கூறும் "மகாசைவப்பிராமணர்" கோயில்களில் பூசைசெய்யும் அதிகாரம் அற்றோர் என்னும் கருத்துமட்டும் வேண்டாம்!!!!

நாம் இதுவரைகாலமும் எழுதிய பதிவுகள் ஒரு நோக்கம் பற்றியது. அதுதான் இங்கு இனி விரிவாக எழுதப்படவுள்ளது. எனவே, பொறுமையோடு படிக்க. மகாசைவப்பிராமணர்தான் உள்ளோம் என்று கோப்பாய் சிவம் அவர்கள் ஏற்றுக்கொண்டது எமது கட்டுரைகளுக்கு கிடைத்திருக்கும் பயனாகும்.

  

3)சித்தாந்த சைவசமயம், பிறப்புவழியில் வர்ணாச்சிரமத்தினைக் கொண்டாடுவதில்லை என்பதை நாம் நம்புகின்றோம். தீட்சைவழியிலேயே  என்பது சிந்தாந்தத்தெளிவாய் உண்டு.  
இதனை ஏற்றுக்கொண்டால், மகாசைவர் என்கின்ற பாராபட்சம் சைவசமயத்தினைத் தழுவிக்கொண்ட ஸ்மார்த்தமதத்தினாரைத் தொற்றிக்கொள்ளாது. எனினும் முடிவு அவர்களே எடுக்கட்டும்.ஆனால், அந்த முடிவு எல்லோருக்குமானது. வெறுமனே தனியொரு சமூகத்துக்குரியதல்ல!  சரி, விசயத்துக்கு வருவோம். இவற்றையெல்லாம் ஏன் ஆராயவேண்டிய தேவை வந்தது? அவற்றைப் பார்ப்போம்.

1) 2019ம் ஆண்டுகளில் "தேசிகக்குருக்கள் கொடியேற்றுவதா? பிராமணக்குருக்கள் கொடியேற்றுவதா? என்ற சிக்கல் யாழ்ப்பாணக்கோயில் ஒன்றில் உருவாகியது. பிராமணக்குருக்கள், தேசிகக்குருக்கள்மாருக்கு பிறப்புவழியில் அதிகாரம் இல்லையென்று பிடிவாதம் பிடித்தனர். நிர்வாகசபையும் அதனை ஏற்றுக்கொண்டது.முடிவு கத்திக்குத்தாயிற்று.
இங்கு பிறப்புவழியில் வர்ணம் உண்டாயின், தீட்சையினால் வர்ணம் நீங்காதென்ற நிலைப்பாட்டில் பிடிவாதம் பிடித்துநிற்பதாயின், சிவாகமங்களின் பிரகாரம் பிராமணக்குருக்களுக்கும் (மகாசைவப்பிராமணர்) கொடியேற்றும் அதிகாரம் இல்லை என்பதை பிராமணக்குருக்களும் தெரிந்திருக்கவில்லை. நிர்வாகத்தாரும் தெரிந்திருக்கவில்லை.
தீட்சையால் வர்ணம் ஒழியும் என்னும் சித்தாந்தத்தெளிவில் நின்றால் - இருவரும் சமமேயாகும்! கத்திக்குத்தும் நடந்திராது!!!
:- இதற்கெல்லாம் அடிப்படை ஸ்மார்த்தமத வர்ணாச்சிரமம்தானே?

2)கொழும்பில் சிதம்பரநாதக்குருக்கள் விசேடதீக்கையினை ஒருசைவசமயிக்கு கொடுக்க மறுத்தார். ஏனென்றால், அதற்கு சூத்திரர் அதிகாரம் அற்றவர் என்பது அவரது நிலைப்பாடு. சிதம்பரநாதக்குருக்களைக் கொண்டு சமயதீட்சை வழங்கும் நிகழ்வு 2019ம் ஆண்டு கொழும்பில் ஏற்பாடுசெய்யப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் ஒழுங்கமைப்பில் பங்களிப்புச்செய்திருந்தது. வந்திருந்த அடியார்களில் ஒருவர் விசேடதீக்கையினைப் பெறுவதற்கு வந்திருந்தார். அதனை அவர் வழங்கவில்லை. சாதி/வர்ணம் என்பவற்றினை கேட்டுப் பிரச்சினைகள் செய்தபோது, பலவாறு விளங்கப்படுத்தியபோதும் சைவாகமப்பிரகாரமான விசேடதீக்கை அவரால் மேற்கொள்ளப்படவில்லை. பிராமணர் அல்லாதவருக்கு சமயதீக்கை/விசேடதீக்கையெல்லாம் தேசிகக்குருக்களாலேயே வழங்கப்படுவதென்றும், பிராமணர் சூத்திரருக்கு தீட்சைவழங்குவதில்லையென்றும், தேசிகக்குருக்கள்மார் இல்லாதபடியினால் சமயதீக்கை மட்டுமே அளிக்கவந்ததாகவும் கூறிநின்றார்.
:- இது ஸ்மார்த்தமத வர்ணாச்சிரமம்தானே?

3) வடமாகாணத்தில் கிருஷ்தவர்கள் அதிகமுள்ள இடத்தில் சைவர்கள்  சிலர் சமயதீக்கையில் நாட்டம்கொண்டு, அத்தீக்கையைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுசெய்தபோது   சூத்திரருக்கு பிராமணர் தீக்கை வழங்குவதில்லை என்னும் கருத்து நிலைப்பாட்டில், வருவதற்கு சம்மதித்த பிராமணக்குருக்களை ஏனைய சிலர் தடுத்துவிட்டனர். (எமது கழகம் நேரடியாக இவ்விடயத்தில் ஈடுபட்டிருகாததால், நாம் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களைத் தவிர்த்துள்ளோம்.) :- இது ஸ்மார்த்தமத வர்ணாச்சிரமம்தானே?

4) இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஏனைய சில இடங்களிலும் மாத்திரமே தேசிகக்குருக்கள்மார் உள்ளனர். மன்னார் முதலிய பல்வேறு பிரதேசங்களில் தேசிகக்குருக்கள்மார் இல்லை. இப்படியான பிரதேசங்களில் ஒருவர் மரணம் அடையும்போது, அபரக்கிரியைகள் செய்யமுடியாது வசதியற்றவர்கள் அல்லல்படுகின்றனர். மன்னாரில் சைவசமயி ஒருவரின் உடலுக்கு கத்தோலிக்கப்பாதிரியார் கிரியைசெய்துவைத்த விவகாரம் அண்மையில் பெரிதாகப் பேசப்பட்டது. பிராமணர் இறந்தால், பிராமணரில் ஒருவரே அபரக்கிரியைகள் செய்கின்றார். அப்படியான ஒருவர்கூட, ஏனையோருக்கு அபரக்கிரியைகள் செய்யமுன்வருவதில்லை. தமிழகத்தில் சிவாசாரியார்கள் குலகுருவாக விளங்கும் பிரதேசங்களில் அபரக்கிரியைகளையும் அவர்கள் முன்னெடுக்கும் வழக்கங்கள் உண்டு. பிராமணரில் பிராமணருக்கு அபரக்கிரியைகள் செய்யும் ஒருவர், ஏனையாருக்கு அபரக்கிரியைகள் செய்யக்கூடாதென்பது எந்தப் பிரமாணத்தில் உள்ளது?  :- இது ஸ்மார்த்தமத வர்ணாச்சிரமம்தானே?
5) யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் கோயில் ஒன்றில் ஆஞ்சநேயர் சன்னிதி வைக்கலாமா இல்லையா என்ற சர்ச்சை உருவாகி நீதிமன்றத்திற்கு வழக்குச்சென்றது. நீதிபதி யாழ்ப்பாணத்தில் பிரபல குருக்களிடம் இதற்கு ஆலோசனை வேண்டினார். நீதிபதிக்கு சைவசமயத்திற்கும் ஸ்மார்த்தசமயத்திற்குமான வேறுபாடு தெரிந்திருக்கவில்லை. வழக்குத்தொடுத்த வாதிகளுக்கும் -பிரதிவாதிகளுக்கும் இந்த வித்தியாசங்கள் தெரிந்திருக்கவில்லை. நீதிபதி ஆலோசனைக்கு நாடியவர் ஸ்மார்த்தமதப் பாரம்பரியத்தினை சைவப்பாரம்பரியமாகக் கருதி, ஒழுகிக்கொண்டிருந்த ஒரு பிராமணரையேயாகும். அவர் ஆஞ்சநேயரை பிள்ளையார் கோயிலில் தனிச்சன்னிதியாகப் பிரதிஷ்டைசெய்யலாம் என்று ஒரு கடிதம் எழுதிக்கொடுத்தார். ஆகமப்பிரமாணங்களைச் சுட்டிக்காட்டியிருக்கவில்லை. ஆனால், பலரால் போற்றப்படும் குறித்தப் பிராமணர் சொன்னால் சரியென்று, நிதிபதியும் முடிவெடுத்து ஆதரவாகவே தீர்ப்பும் வழங்கினார். ((தகவல் அளித்த சிவநெறிப்பிராமணர், கோயில் பெயரினை பகிரங்கப்படுத்தவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்.))

சைவாகமங்களில் ஆஞ்சநேயருக்கு சன்னிதி எந்த ஆகமத்தில் உண்டு?
இது ஸ்மார்த்தமத சம்பிரதாயம் தானே?
பிரபலமான பிராமணர் எந்தவித பிரமாணங்களும் இல்லாமல் எழுதிய கடிதத்தினைப் பிரமாணமாக நீதிமன்றம் கொள்கின்றதென்றால்,  சைவசமயம்-ஸ்மார்த்தசமயம்; சிவப்பிராமணத்துவம் - ஸ்மார்த்தபிராமணத்துவம் முதலிய எந்த வேறுபாடுகளையும் நீதிமன்றமோ, நிர்வாகசபைகளோ தெரிந்திருக்கவில்லையென்றுதானே பொருள்?  உருப்படியாக இந்த வித்தியாசங்கள் தெரிந்திருந்தால் -இந்த வழக்கு நடந்திருக்குமா? குறித்த பிராமணர்தானும் கடிதம் கொடுத்திருப்பாரா? நீதிமன்றம் அக்கடித்தத்தினை ஏற்றுத்தான் இருக்குமா?
6) சைவசமயத்தின் குருக்கள்மார் சைவக்குருக்கள் என்றுதானே அழைக்கப்பட வேண்டும்......இந்துக்குருக்கள் என்று அழைப்பது ஏனோ? என்று நாம் வினாவியபோது, சிவத்திரு.சோமஸ்கந்தகுரு சாம்பசிவக்குருக்கள் (கனடா) சைவக்குருவென்றால் சூத்திரக்குருவென்றாகிவிடும் என்றார். எனவே, சைவக்கடவுள் என்றால் சூத்திரக்கடவுள் என்றாகுமா என்று நாம் கேட்டதும், தாம் முகநூலில் எழுதியவற்றை அழித்துவிட்டார்.

சைவசமயம் என்ற சொல்லில் பற்றில்லாதது, வர்ணப்பற்றுக்குள் மூழ்கியுள்ளனர் என்பதும்; வர்ணமா? சைவமா? என்னும்போது வர்ணமே என்னும் இழிநிலை பெருத்துள்ளதென்பதும்  மறைக்கப்பட்டு, சைவசமயம் என்ற சொல் கைவிடப்பட்டு இந்து என்றசொல் ஆதரிக்கப்பட்டு வருகின்றதே? அதற்கு இந்தியாவுடன் உறவு முதலிய போலிக்காரணங்கள் இட்டுக்கட்டப்பட்டுவருகின்றனவே? இவற்றுக்கு ஸ்மார்த்தமத வர்ணாச்சிரமப் பற்றுத்தானே காரணம்?

7)  ஆதிசங்கரர் தாபித்தது ஸ்மார்த்தமதம். அதில் சைவ,வைணவ,சாக்த,கௌமார,காணபத்திய,சௌர உபாசனைகள் உண்டு.இந்தச் சுமார்த்தமதம் சைவத்திற்கு புறச்சமயம். ஆனால், இந்துமதப்பிரிவுகள் என்னும்பெயரில் இன்று இந்த ஸ்மார்த்தமதப்பிரிவுகளையே சைவசமயத்தார் படிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.(திரு.சிவானந்த சர்மா அவர்கள் எழுதியுள்ள நூல்களிலும் இந்த வழக்குத்தான் உள்ளது.)
இந்த ஸ்மார்த்தமதத்தில் பிராமணர்க்கே ஞானத்தை உணரும் வாய்ப்பு உண்டாகுமென்றும், ஏனையாருக்கும் பெண்களுக்கும் இல்லையென்று மறுக்கும் கோட்பாடுகள் உண்டு. இதனைத் தாபித்த ஆதிசங்கரரை அன்பிலார் என்று சுவாமி விவேகானந்தர்கூடக் கண்டிக்கின்றார். ஆனால், சைவத்தில் செடி முதலாய அனைத்து உயிர்களுக்கும் முத்தியுண்டு என்பது கொள்கை. நாயன்மார்கள் பல்வேறு சமூகவகுப்புக்களைச் சார்ந்தவர்கள். ஆதிமுத்தர்,ஆதிபிரளயாகலர்,ஆதிவிஞ்ஞானகலர் என்றெல்லாம் மனிதப்பிறப்பேயில்லாது முத்தி/பதமுத்திகள் பெற்றோர் உளர். ஆனால் இவற்றுக்கு மாறான ஆதிசங்கரரினை,  சைவத்தினைச் சார்ந்துவிட்டோம் என்று கூறிக்கொள்ளும் ஸ்மார்த்தவாசர் கொண்டாடிக்கொண்டு - அவரைக் குருவாக பிரப்ல்யம்செய்துகொண்டு, அந்த ஸ்மார்த்தமதத்தின் மடங்களின் அதிபதிகளாகிய சங்கராசாரியார்களினை தலையில்வைத்துக் கொண்டாடிக்கொண்டு சைவசமயத்தவர்க்கு எப்படி கிரியாகுருமாராக 'மகாசைவப்பிராமணர்/ஸ்மார்த்தவாசப் பிராமணார்"இருக்கலாம்?  ஆக, சைவத்தினைச் சார்ந்த பிறகும் சங்கராச்சாரியார்கள் இனிப்பது -வர்ணாச்சிரம பற்றினால்தானே? சைவசமய குரவர்களில் ஒருவராகிய மாணிக்கவாசகர் பெருமான், சந்தான குரவர்கள், நாவலர், மாயாவாததும்சகோளரி கதிரைவேற்பிள்ளைகள் பெருமானார்,  காசிவாசி செந்திநாத ஐயர் பெருமானார், சூளை சோமசுந்தர நாயகர் பெருமானார் முதலிய சைவப்பரம்பரையே கண்டித்துவந்த/ தொடர்புகளை எள்ளளவும் பேணாதுவந்த/ சைவத்தால் அணுகத்தகாத இடமாகவே கொள்ளப்பட்ட மாயாவாத(சங்கராசாரிய) மடத்தினரை "குருவே நமஸ்காரம்"என்று கொண்டாடும் சைவசமய அந்தணர்களை ஈழநாடு சம்பாதித்திருப்பது - ஸ்மார்த்தவாச வர்ணாச்சிரமப்பற்றினால் தானே?

08)  தேசிகக்குருக்கள்மாருக்கு பூர்வக்கிரியைகள்/கோயிற்கிரியைகள் செய்யும் அதிகாரம் இல்லையென்றும், அவர்களிலிருந்து வேறுபாடுகாட்ட, 
  • சிவஶ்ரீக்குப் பதிலாக பிரம்மஶ்ரீ முதலியன பாவித்துக்கொண்டும், 
  • சமயமுரணாய் தீட்சைகள் எடுத்தபிறகும் வர்ணப்பெயரான சர்மாவினைப் பற்றிநிற்பது 
  • சைவக்குருக்கள் என்றுகூறாது, இந்துக்குருக்கள் என்றுகொண்டும்  - சைவசமயத்தையும், சிவசிறி என்னும் பதத்தினையும் புறக்கணித்துவருகின்றமை :- ஸ்மார்த்தமத வர்ணாச்சிரமப் பாசத்தினால் தானே?
09) ஸ்மார்த்தமதத்தினையும் அதன் சம்பிரதாயங்களினையும் சைவசமயத்தில் நிலைநாட்டியவாறு இருப்பதற்கு அத்திவாரமாக இருப்பது வர்ணாச்சிரமப்பற்று. இவ்வாறு சைவசமயத்தில் "வர்ணத்தினைத் தூக்கிப்பிடித்து" சைவசமயம் என்னும் சொல்லினையே கைவிட்டு நின்றமையினாலேயே, முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் 
"தூக்கிப்பிடிக்கப்படும் வர்ணப்படி" பல பிராமணருக்கு பூசை அதிகாரம் ஆகமப்பிரகாரம்  இல்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டியதாயிற்று. ஸ்மார்த்தமதவாசம் கலந்திருப்பதை திரு.சிவானந்த சர்மா அவர்கள் ஏற்றிருப்பது
நாம் இதுவரை காலமும்  எழுதிய கட்டுரைகளுக்கு எம்பெருமான் அளித்துள்ள பலன்! இதனை ஆலய நிர்வாகத்தாரும் சைவசமயத்தாரும் இனித்தெளியவேண்டும் என்பது எம் அவா!!! அதுவும் கால ஓட்டத்தில் மெதுவாக மலரும்! எல்லாம் திருவருட்சம்மதம்!!! 

நாம் தீட்சையை நம்புகின்றவர். தீட்சையுள்ள எவரினையும் வர்ணங்கொண்டு நோக்காத உளவளத்தினை சிவபெருமான் எமக்கு அளித்துள்ளார். எனவே, பூர்வீகம் ஸ்மார்த்தமதமா? வைணவ மதமா? என்பது இங்கு பிரச்சினையில்லை. ஆனால், சைவசமயத்தினை சைவசமயமாக நின்று ஒழுகவேண்டும்.
தீட்சைகளினால் வர்ணம் நீங்காது என்று பிடிவாதம்பிடித்தால்- எங்களுக்கு ஸ்மார்த்தமத ஆதிசங்கரர்/சர்மா/பிரம்மஶ்ரீயிலேயே நாட்டமுண்டு என்றால், கருவறைக்கு வெளியே நிற்றலே சைவாகமங்களுச்செய்யும் உபகாரமாகும். ஏனெனில், தீட்சையினால் வர்ணம் ஒழியுமென்று நம்பினால்; அதனை சகல விடயங்களிலும் அனுசரிக்கவேண்டும். தீட்சையினால் வர்ணம் ஒழியாதென்று பிடிவாதம் பிடித்தால், அதனையும் நேர்மையோடு சகலவிடயங்களிலும் அனுசரிக்கவேண்டும். தீட்சையினால் வர்ணம் ஒழியாதென்று நினைத்தால், மகாசைவப்பிராமணர் கருவறையினுள் நுழையமுடியாது.
10)இப்போது மூன்று தெரிவுகள்தான் உண்டு. 
1) வர்ணாச்சிரமம் தீட்சையால் போகாதென்ற ஸ்மார்த்தவாசக் கருத்தினை ஏற்று, மகாசைவப் பிராமணர் என்று நிலைப்பாடெடுத்து;  வீட்டிலே  ஆத்மார்த்த பூசைகளோடு சிவசிந்தையோடு இருத்தல். இவ்வர்ணாச்சிரமக்கோட்பாட்டுப்படி, மகாசைவப்பிராமணருக்கு கோயில் பூசை அதிகாரம் இல்லை என்பதை கற்போடு உணர்ந்து ஏற்றொழுகல்.
2) ஸ்மார்த்தமதத்தார் என்னும் நிலைப்பாடெடுத்து;  சைவ நூல் வழிபாடுகளை விடுத்து - பிரம்மசிறி,வர்ணம் என்று ஸ்மிருதிகளில் உழலல்.
3)  வர்ணம் தீட்சையால் நீங்கும்/ பிராமணத்துவம் பிறப்பால் இல்லை என்னும் சைவநூற் தெளிவுகளை உள்ளன்போடு ஏற்று- சிவநெறிப்பிராமணராய் பூசைகள் ஆற்றுதல். ஏனைய சமூகத்தவரையும் அதுபோல் அரவணைத்தல். 
இவையே சைவநூல் வழங்கும் தெரிவுகள். கல்வியுடையார் கற்புடையார்!!!!

11) வேதாந்தம் என்னும்சொல், உபநிடதங்களினையும் குறிக்கும். ஆதிசங்கரர் முதலிய பிரம்மசூத்திரப்பாடியக்காரர் தாபித்த கொள்கைகளையும் குறிக்கும்.மாயை என்னும் சொல், சைவத்தில் ஒருபொருளும் மாயாவாதமதத்தில்(ஸ்மார்த்தமதத்தில்) பிரிதொருபொருளும் கொள்ளும்.
வைதீகம் என்னும்சொல், வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே என்பதற்கிணங்க சிவபரத்துவ வைதீகத்தினையும் குறிக்கும். ஸ்மார்த்தமதத்தினையும் குறிக்கும்.

ஸ்மார்த்தம் என்னும்சொல்கூட, மாயாவாதமதத்தினரையும் (ஸ்மார்த்தமதத்தினரையும்) குறிக்கும்.வேதவழி வழக்கினையும் குறிக்கும்.
விஷ்ணு/நாராயணன் என்பவை சைவத்தில் சிவபெருமானுக்கும் சிவபெருமானின் அதட்டித்தலில் உட்பட்டு நிற்கும் காத்தற்கடவுளாகிய திருமாலுக்கும் உரியது. வைணவத்தில் அவர்களின் முழுமுதற்கடவுள் திருமாலுக்குரியது. ஸ்மார்த்தமதத்தின்படியும் திருமாலுக்குரியது.
வீபூதி ஸ்மார்த்தமதத்தில் வெறும் புனித அடையாளம். வேதசம்பிரதாயம். சைவசமயத்தினைப் பொறுத்தவரை வீபூதி சிவசின்னம்.
இப்படி ஒருசொற்களே பலபொருள்களில் இந்திய சமயங்கள் பலவற்றிலும் உண்டு.

இந்த அடிப்படையை விளங்கிக்கொள்ளாது, வைதீகம்/ஸ்மார்த்தம்/வேதம் முதலிய சைவநூல்களில் புழகும் சொற்களுக்கு ஸ்மார்த்தமதத்தில் வழங்கும் பொருளை இழுத்துவந்து சேர்த்தல் பெருந்தவறு. அதனால் விளைந்ததுவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமய விரிவுரையாளர், சமய அறிஞர் திரு.சிவானந்த சர்மா அவர்களின் ஏனைய மயக்கக்கருத்துக்கள்.அவற்றை விரிவாக வேறொருபதில் ஆறுதலாக விளக்குகின்றோம்.
எனினும், ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதுபோல்; பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர்,சுந்தரமூர்த்தி நாயனார் புராணத்தில் பலதும் எடுத்து சைவவைதீகத்தை ஸ்மார்த்தவைதீகமாக்கி சோடித்த இட்டுக்கதைகள் ஸ்மார்த்தத்துக்கு பிரமாணமாகாதென்பதற்கு பெரியபுராணத்தில்  சுந்தரமூர்த்தி நாயனார் புராணப்பகுதியிலிருந்தே இங்கு ஒரு பிரமாணம் தருகின்றோம்.ஏனைய ஆகமப்பிரமாணங்கள் முன்னைய கட்டுரைகளில் அளித்துள்ளோம்.
"மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ இத்தகைய வேடம்" என்று சுந்தரரின் திருமணக்கோலத்தினை தடுத்தாட்கொண்ட புராணத்தில் சேக்கிழார் வருணிக்கின்றார்.  வெறுமனே வைதிகமென்றால் ஸ்மார்த்தமதம் புகுந்துவிடுமென சேக்கிழார் வைதிகம் என்னும் பெயரினைப் பாவிக்கும் இடங்களில், அது சைவவைதீகமேயென்பதை உணர்த்தத் தவறுவதில்லை.  இங்கு, மெய்த்தநெறி வைதிகம் என்பது, மெய்நெறி சைவமென்பதால்; சைவவைதிகம் என்பதை வெள்ளிடைமலையாக்குகின்றார்.  வைதிகம் பலபொருள் குறித்தது. வைணவத்தில் வைதிகமென்றால், திருமாலை முதற்பொருளாகக் கொள்ளும் வேதநெறி என்று பொருள். இவற்றை பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்சிந்தையில் எடுத்துக்கொண்டால் நன்று.
12) எமக்கு எவர்மீதும் துவேசம் இல்லை. எந்தச்சமூகத்தின்மீதும் துவேசமில்லை. சைவசமயத்தினை சைவசமயமாக சைவசமயிகள் ஒழுகுவதற்குரிய தடைகளை நிவர்த்திசெய்யவேண்டியுள்ளது.
சைவத்தினுள் ஸ்மார்த்தமதம் ஊடுருவி நிற்றலை விலக்கவேண்டியுள்ளது. பாதிரிமார்கள் கத்தோலிக்கத்துக்கு விரோதமாக நடந்தால் கத்தோலிக்கர் குற்றம் சாட்டுவர். அதுபோலவே, சைவசமயக்குருமார் சைவசமயப்படி நிற்கவில்லையென்பதை நாம் சுட்டிக்காட்டுவது. இங்கு குருமார் என்பவர்கள் பிராமணரே என்பதால், அது பிராமண வெறுப்பாக சிலரால் தமது நலன்கருதி திரிபுசெய்ய வசதியாகவுள்ளது. பூசை செய்க என்றுதான் நாம் வேண்டுகின்றோம். ஆனால் சைவசமயிகளாக வாழ்ந்தவாறு பூசைசெய்க என்பதே வேண்டுதல்.
ஸ்மார்த்தமதம் ஸ்மார்த்தமதமாக இருப்பதில் எமக்கு எந்த இடரும் இல்லை. ஆனால் சைவசமயத்தில் ஸ்மார்த்தமதத்தினைக் கலக்கும் செயலை மௌனியாக ஏற்றுக்கொண்டிருக்கமுடியாது.   சைவசமயத்தினைச் சைவசமயமாகவே ஒழுகுதலும் வளர்த்தலும் வேண்டுமென்றால், பலருக்கு தலையிடி ஏன் உருவாகின்றதென்று நமக்கு விளங்கவில்லை!!!! ஆக; நாம் வேண்டுவதெல்லாம் - சைவசமயத்தினைச் சைவசமயமாகவே ஒழுகுதல் வேண்டும் என்பதுவே!!!!

13)  சமய அறிஞர் திரு.சிவானந்த சர்மா அவர்கள், " ஹரிஓம்/அனுட்டானம்/பிரம்மஶ்ரீ/நாமதாரணம்" முதலியன பிராமணரின் பிரச்சினைகள்.ஏனையார் தலையிடத்தேவையில்லை என்பதுபோன்ற தொனியில் எழுதியுள்ளார்கள்.
ஒரு மருத்துவர் இலங்கை மருத்துவ சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவரா இல்லையா என்பதை, ஒவ்வொரு நோயாளியும் தெரிந்துகொள்ளும் உரிமை நோயாளியின் அடிப்படை உரிமையாகும். ஒரு பாதிரியார் பாதிரியாருக்குரிய கல்விகளை முடித்தவரா இல்லையா என்பதை ஒவ்வொரு கத்தோலிக்கரும் தெரிந்துகொள்ளும் உரிமை அவர்களது அடிப்படை உரிமையாகும். 
அதுபோல், சைவசமயக்கோயில்களில் பூசைசெய்யும் அந்தணர்கள், சைவாகமப்படி உள்ளனரா இல்லையா என்பது சைவர்கள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளல் சைவசமயத்தாரின் அடிப்படை உரிமையாகும். 

சிவாகமங்களுக்கு விரோதமான சம்பிரதாயங்களைத் தழுவியவாறுள்ளோர் செய்யும் பூசைகளால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடுகள் என்பதை சிவாகமங்கள் திடமாய் வலியுறுத்துகின்றன. திருமந்திரம் முதலான நூல்களிலும் இவை விரிவாக எழுதப்பட்டுள்ளன. சமய அறிஞரும் பல்வேறு நபர்களால் பாராட்டுகள் பெற்றவருமான திரு.சிவானந்த சர்மா அவர்கள் இவற்றுக்குரிய பிரமாணங்களை நம்மிடம் எதிர்பாரார்.அவருக்கே இவற்றில் போதிய தெளிவு இருக்கும் என்று நம்புகின்றோம். சைவவைதிக/சைவ அனுட்டானங்கள், ஆத்மார்த்த பூசைகள் இல்லாதோர் செய்யும் பரார்த்தபூசை பலனளிக்காதென்பதோடு, தீமையையே மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கும் என்பதால், பரார்த்தபூசை செய்வோர் தம்வீடுகளில் சைவாகமப்படி ஆத்மார்த்தபூசைகள் செய்கின்றார்களா இல்லையா என்பதையும், சைவசமய ஒழுங்கங்களில் உறுதியாக உள்ளனரா என்பதையும் அறிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு சைவசமயிக்கும் உண்டு.  பரார்த்தபூசை செய்யாதோர் இல்லத்துள் எந்தவொரு நபரும் மூக்கை நுழைக்கார்!!!!!
குறிப்பு:- அன்பே சிவம் என்பதால் அன்பே சைவம் என்பது தெளியப்படுதலால், சைவ அன்புடையாரின் ரிஷிமூலம் எதுவும்  தேவையில்லை.அன்பிலாருக்கு சைவத்தில் இடமில்லை. இவையே சிவபத்தி எமக்களித்த வரம்.

எல்லாம் திருவருட்சம்மதம்
மேலும் படிக்க...

Wednesday, April 22, 2020

சிவஶ்ரீ VS பிரம்மஶ்ரீ?

(23 ஜீலை 2019ம் நாள் முகநூலில் நாம் எழுதிய கட்டுரை.தற்போது இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.)

இலங்கையில் அந்தணர் தம்பெயரைப் பாவிக்கும் போது பிரம்மஶ்ரீ என்பது பெரிதும் புழக்கத்திலுண்டு.பெரும்பாலான குருக்கள்மாரும் ஏனைய பூசகர்களும் இங்ஙனம் பெயருக்கு முன்னால் இட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர்களாகவுள்ளனர். ஆச்சாரிய அபிடேகம் செய்துகொள்ளாதவர்கள், தாம் சிவஶ்ரீ(சிவத்திரு) என்று போட்டுக்கொள்ள முடியாதென்பதால், பிரம்மஶ்ரீ போட்டுக்கொள்வதாக கூறுகின்றனர்.
ஏனைய பூசகர்பணி செய்யாதவரும் பிரம்மஶ்ரீ போட்டுக்கொள்வதற்கு இதையே விளக்கமாக உரைக்கின்றனர்.
1) இறைவன்(பிரம்மம்) என்பது பொதுப்பெயர்.
சிவம் என்பது சிறப்புப் பெயர். எதற்கு மங்கலமும் திருவருட்சிறப்பும் மிகுதியாய் உண்டென்றால், ஒப்பற்ற தன்மையில் மிகுந்து உயர்ந்ததாய் இருப்பது சிவம் என்னும் சொல்லுக்கேயாகும்.
" சிவனெனும் ஓசை அல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே" என்கிறார் அப்பர் பெருமான்.
ஆயிரம் பேருகந்தானும் ஆரூர் அமர்ந்தவம்மானே - என்று அப்பர் பெருமான் கூறுவதிலிருந்து, பிரம்மம்(இறைவன்) முதலிய பலபொதுப்பெயர்களும் எம்பெருமானுக்கு உகந்ததேயாயினும், சிவம் என்பது நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்திற்குரியது. '' சிவ'' என்பது காரண பஞ்சாட்சர மந்திரம். பிரம்மம் என்னும் சொல்லிலும், சிவனென்னும் சொல் மந்திரமாகவே விளங்கும் சிறப்பை உடையது.
"கற்றுணைப் பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" - திருநாவுக்கரசர்
"நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க" - மாணிக்கவாசகர்
சிவாயநம என்று சிந்தித்திருப் போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" - ஔவையார்.
இப்பிரமாணங்களுக்கு அமைவாக தெளியக்கூடியது யாதாயின், சிவஶ்ரீ(சிவத்திரு) என்பதற்குப் பதிலாக பிரம்மஶ்ரீ என்று இட்டுக்கொள்வது, கனியிருக்க காய் கவர்ந்த நிலைக்கு ஒப்பாவதோடு, சிவநிந்தனையும்கூட!
2) ஆச்சாரிய அபிடேகம் செய்துகொள்ளாத பூசகப்புனிதர்கள், தமக்கு சிவஶ்ரீ(சிவத்திரு) இட்டுக்கொள்ளக்கூடாதென்பது மயக்கமேயாம். சிவஶ்ரீ(சிவத்திரு) என்பது சிவபெருமான் எழுந்தருளுமாறு புனிதம் காப்போன், சிவபெருமானே மெய்ப்பொருள் என்பதை தெளிந்தோன் முதலிய கருத்துகளை உணர்த்தவேயாம்.
சமயதீட்சை, விசேடதீட்சை எடுத்து ஆன்மார்த்த சிவபூசை செய்யும் நல்லார் அனைவருக்கும் உகந்ததே சிவஶ்ரீ(சிவத்திரு).
ஆச்சாரிய அபிடேகம் செய்யப்பெற்றோர் குருக்கள் என்னும் பதத்தினைப் பயன்படுத்துவதால், குருக்கள்மாருக்கும் குருக்கள் அல்லாத ஏனைய பூசகர்களுக்குமிடையில் எந்தக்குழப்பத்தையும் சிவஶ்ரீ(சிவத்திரு) பாவிப்பது ஏற்படுத்தாது.
3) ஸ்மார்த்த மதத்தினை ஒழுகும் பிராமணர் முதலியோர் பிரம்மஶ்ரீ என்று இட்டுக்கொள்வதால், பிரம்மஶ்ரீ என்று இட்டுக்கொள்ளும் சைவ அந்தணரை ஸ்மார்த்தராகச் சைவர் குழம்பும் நிலையும் இப்பிரம்மஶ்ரீயினால் உண்டாகும்.
பிரம்மஶ்ரீ என்பது பிரம்மத்தை உணர்ந்தோன் என்னும் பொருளை வெளிப்படுத்தி நிற்கும். பிரம்மஞானம் என்பது சைவசமய சுத்தாத்துவிதம் தவிர்ந்த ஏனைய சங்கர அத்வைதம் முதலியன, சைவசமயப்பிரகாரம் பிரம்மஞானம் ஆகா.எனவே சங்கர ஸ்மார்த்தமதத்தார் தம்மை பிரம்மஶ்ரீ என்பது சைவரைப்பொறுத்தமட்டில் அரைகுறை வைத்தியப்படிப்பு படித்து, ஐயம் திரிபுகளின்றி கற்காது குறையில்விட்டவர் தமக்கு மருத்துவர் என்று பட்டம்சூட்டிக்கொள்ளலை ஒத்தது.
சைவசமயத்தாருக்கு இச்சொல் தேவையோவெனின், ஏற்கனவே கூறியவாறு பிரம்மம் சிவஞானமேயென்று தெளிந்தபிறகு காரண பஞ்சாட்சரமாகச் சிவஶ்ரீ(சிவத்திரு) இருக்க, பிரம்மஶ்ரீயைப்பற்றி நிற்பது சிவநிந்தையும் ஸ்மார்த்த அறியாமையுமே!!!
4)சத்தியகாமன் பிராமணன் என்று வைதீகம் ஏற்பதாலும், சுவாமி ஞானப்பிரகாசரை பிராமணனென்று ஏற்றுக்கொண்ட அண்மைய வரலாற்றுப் பிரமாணத்தாலும், கேரளநாடு முதலிய பல்வேறு இந்தியப்பூர்விகமுடைய ஸ்மார்த்தவம்சாவழியுடைய இலங்கைப் பூசகர், குருக்கள் முதலியோரை ஈழத்துச் சைவசமூகம் எக்கேள்வியும் எழுப்பாது. எனவே, சிவபெருமானால் தீட்சிக்கப்பட்ட கோத்திரங்களில் ஒன்றை தீட்சைவழி தேர்வுசெய்து, சிவப்பிராமணராகவே பூசைசெய்க. சைவசமூகம் மகிழ்வுறும். ஆனால், ஸ்மார்த்தர் என்னும் நிலைபற்றியே வாழவிருப்பின், சைவக்கோயில்களில் பூசைசெய்வதை கைவிடுதலே அறம். உரிமையில்லாத ஒன்றில் உரிமை எடுத்தல் தவறாகும். ஒரு இஸ்லாமிய இமாம், தேவாலயத்தில் பூசையைச் செய்தலுக்கு ஒப்பான காரியத்தை இந்துமதமென்ற ஒற்றைப்படுத்தல் ஸ்மார்த்தமதத்தார்க்கு சைவசமயத்துள் ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது.
அண்மையில் கோயிலொன்றில் அருமையாக பண்டிதர் மு. கந்தையா பெருமானார் கூறியவாறான, சைவசமய நெறிக்கு அமைந்த பூசையைப் பார்த்து, மெய்யுருகி நின்றேன். அக்குருக்களுடன் பூசைமுடிந்தபிறகு அவரின் பத்திச்சிறப்பையும் பூசைச்சிறப்பையும் கூறி மகிழ்ந்தபோதுதான், அவர் தாம் கேரளநாட்டு ஸ்மார்த்தப்பாரம்பரியத்தை உடையவரென்றும், ஆனால் தமது தந்தையார் சிவப்பிராமணருக்குரிய பூசைகளையே மேற்கொள்ளவேண்டுமென்று தமக்கு போதித்ததாகவும் கூறி, தாம் சிவப்பிராமணராகவே வாழ்வதாகவும் கூறினார். ஆலயங்களினுள் எவர்காலிலும் விழேன் என்னும் கொள்கையை மனதால் மறந்து, அவர்பாதம் தொட்டு வணங்கினேன். இவரைப்போல் ஏனைய ஸ்மார்த்தமதப் பரம்பரையினரும் நேர்மையோடு நடந்துகொண்டால், சைவசமயம் தழைத்தோங்கும்.
5)சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்னும் நாற்பாதங்களில் ஒன்றினை சிவபூசையாகக்கொண்டொழுகும் நல்லாரே சிவஶ்ரீ(சிவத்திரு) இட்டுக்கொள்ளலாம் என்பதால், பிரம்மத்தை உணராதாருக்கு பிரம்மஶ்ரீயும் பொருத்தமில்லையென்பதால், ஏனையவர் பிறப்பால் யாராயினும் திரு /திருவாளர்/திருமதி/செல்வி என்று இட்டுக்கொள்வதே சால்புடையது. அங்ஙனம் இன்றி, தமக்கு சிவஶ்ரீ(சிவத்திரு) /பிரம்மஶ்ரீ என்று இட்டுக்கொள்வது நாடிபிடித்து இதயத்துடிப்பை உணரமுடியாவொருத்தன் மருத்துவனென்று கூறிக்கொள்வதற்கு ஒப்பாகும் என்பதோடு, சிவநிந்தைக்குரிய பாவமும் சேரும்.
6)சிலர், விஷ்ணுஶ்ரீ, ஐயப்பன்ஶ்ரீ என்றும் பாவிக்கின்றனர்.எல்லாம் சிவன் என்னும் ஞானம் எய்திய சிவப்பிராமணர், இங்ஙனம் பாவித்தல் சிவநிந்தையும் அறியாமையுமேயாகும். பூசைசெய்யும் ஆலயத்திற்கு ஏற்ப தம்முன்னால் இட்டுக்கொள்ளவேண்டிய சிவஶ்ரீயை கழட்டுவதும் பூட்டுவதுமாக இருக்கும் அறியாமையை,சிவநிந்தையை
என்னென்று கூறுவது?
7)ஒருசொல்த்தானேயென்று சிலர் நினைக்கலாம்.இதில் என்ன.... எல்லாம் ஒன்றுதானேயென்றும் சிலர் நினைக்கலாம். ஆனால், இந்தவொரு சொல்த்தான் நம்மையும் நம்பண்பாட்டையும் திருத்துவதற்கும் மீட்பதற்கும் நாம்செய்யவேண்டிய முதற்படியான மாற்றம்.
" சிவனெனும் ஓசை அல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே"
-அப்பர் பெருமான்
சைவசமயமாய் எழுவோம்!
சைவசமயமாய் எழுவோம்!
சைவசமயமாய் எழுவோம்!
🙏🙏🙏எல்லாம் திருவருட்சம்மதம் 🙏🙏🙏
மேலும் படிக்க...

கோப்பாய் சிவம் அவர்களின் கண்டனமும் எம் மறுப்புரையும் பாகம் 2

7) /////திருமுறை பற்றிய குற்றச்சாட்டு பல காலத்திற்கு முந்தியது. இப்போது தொண்ணூறு வீதமான ஆலயங்களில் திருமுறை ஓதிய பின்னரே ஆசீர்வாதம் சொல்லப்படுகிறது. ஒரு சிவாசாரியர், ஆசீர்வாத வசனத்திலே ஆசீர்வதன, திராவிட ஸ்தோத்தர என வருவதால் முதலில் ஆசீர்வாதம்தான் என வாதிட்டபோது நான் அந்த ஆசீர்வாதம் இக்காலத்தில் யாரோ இயற்றியது எனக்கூறி அவரோடு எதிர்வாதம் புரிந்து அகோர சிவாசாரியர் பத்ததி வாக்கியத்தை எடுத்துரைத்து மாற்றியிருக்கிறேன்.////


தங்கள் கருதால் மகிழ்ந்தோம். ஆனால், எம் கேள்வி யாதாயின் சைவாலங்களினுள் கத்தோலிக்கரோ மௌலவிகளோ பூசைசெய்வதில்லை. பிறகு அகோரசிவாச்சாரியார் பத்ததியிற் திருமுறைகள் ஆசீர்வாதத்திற்கு முன்னென்று இருக்க, அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்கள் போன்ற ஆகமசீலர்கள் வாழ்ந்த நாட்டில் எங்ஙனம் இவ்வழமை வழக்கொழிந்து தங்கள்போன்றோருக்கு "உண்மையை எடுத்துரைக்குமாறு"ஓர் சூழ்நிலையை உண்டாக்கியுள்ளது?
ஸ்மார்த்தமதத்து கொள்கையான சமஸ்கிருதம் தேவபாஷை, ஏனையவை நீசபாஷை என்னும் மூடப்பழக்கம்  சைவத்தினைத் தாக்கியதனாற்தானே  ஆசீர்வாதத்திற்கு பிறகு தமிழென்னும் இழிநிலை ஏற்பட்டது. சைவத்தில் இருமொழியும் சிவனால் அருளப்பட்டதென்னும் கொள்கையிருக்க, ஆசீர்வாதத்திற்குப் பிறகென்று துரத்தியது யார்ஸ்மார்த்தமதத் தாக்கம் இலங்கை சைவாலயங்களின் பூசைக்குள் புகுத்தியது கிருஷ்தவ இஸ்லாமியர் வேலையா என்ன?
தங்களின் பதிலே ஸ்மார்த்தமதத்தாக்கம் சைவத்துள் ஊடுருவியுள்ளதென்னும் கருத்திற்கு சான்றாவதாற் மேலதிகமாய் உரைக்கத்தேவையில்லை.
90% ஆலயங்களென்ற தங்கள் கருத்து மிகைப்படுத்தல். 10 வீதமோ, 90 வீதமோ எதுவாயினும் நூறுவீதமாக்கித்தர தங்கள் பணியை எதிர்பார்க்கின்றோம்

8) 
ஆதிசங்கரர் பெருமைக்குரியவரா?

A. பிராமண வர்ணத்தாருக்கு மட்டுமே முத்தியென்றார்.B. பெண்களுக்கு முத்தியில்லை என்றார்.
C. காமக்கலையைக் கற்கவேண்டிய தேவையேற்பட்டபோது, அரசனொருவனின் உடலிற் கூடுவிட்டுக்கூடுபாய்ந்து அந்த அரசனின் மனைவியை அனுபவித்தார். இது மாற்றான் மனைவியை இரகசியமாய் அனுபவித்த பஞ்சமாபாதகத்தில் ஒன்று. திருமூலர் இடையனின் உடலில் புகுந்தபோதும், அந்த இடையனின் மனைவியாரிலிருந்து விலத்தி வாழ்ந்தார். 
அன்பே
சிவம் என்ற திருமூலருக்கும் மேற்கூறப்பட்ட ஆதிசங்கரருக்கும் ஏணிவைத்தாலும் எட்டாப்பொருத்தம். ஆதிசங்கரரை சிவபெருமானின் அவதாரம் என்பர் ஸ்மார்த்தமதத்தார். சிவபெருமான் பிறப்பிலி என்பது சைவசமயம். எனவே,  சிவபெருமானின் அவதாரமென்று ஸ்மார்த்தர் இட்டுக்கட்டியதுபோன்று  ஏனைய ஆதிசங்கரர் சார்ந்தகதைகளும் இட்டுக்கட்டிய
தென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம்.

சுவாமி விவேகானந்தர் இந்த ஆதிசங்கரை அன்பில்லாதவர் என்று கூறியுள்ளமையை நோக்கின் அனைத்தும் விளங்கும்.

பெரியவாள் என்று அவர் பத்தரால் கூறப்படும் சந்திரசேகர சங்கராச்சாரியார் புனிதரா?

1. திருவானைக்கா,திருஞானசம்பந்தர் மடம் முதலிய பல்வேறு சைவாலயங்களைக் கபளீகரம் செய்த அவருடைய முன்னோர்களின் பிழைகளை மறைத்து, தமது நிர்வாகத்திலேயே பேணினார். இன்றும் அவ்வாறே.

2.  அவரை விழாதே இவரை விழாதே என்று தடுத்த மகான் என்று சிலர் புல்லரிக்கின்றார்கள். பிரிதொரு சமயத்தின் கோயிலை எங்ஙனம் நிர்வாகம் செய்யமுடியும்? தாமே தம் தெய்வத்தின்குரலில் "தாம் சைவசமயத்தவர் அல்லர்" என்று கூறிவிட்டு, சைவாலயங்களை நிர்வகித்தல் எந்தவிதமான ஒழுக்கம்?
ஆகா, அவையெல்லாம் புனைகதைகளாம். ஆதிசங்கரருக்கு சூட்டியதுபோன்ற புனைகதைகளே!

3.புனிதரென்றால், ஒருவருணத்துக்கே முத்தியென்றும் பெண்களுக்கு முத்தியில்லையென்றும் கூறுகின்ற மனித மாண்புக்கு மாறான சமயத்தை ஒழுகியிருப்பாரோ?

"மாலறநேயம்" என்னும் சிவஞானபோதத்தின் 12ம் சூத்திரத்தின் சொற்பதத்துக்கு பொருளுணர்ந்தார்க்கு அன்பில்லாதார் செய்யும் சிவபூசைக்கு எப்பலனும் இல்லையென்பதும் பெறப்படும்.

இங்குசிலர் காஞ்சி சங்கராச்சாரியார் சிவாகமப்பாடசாலைகள் நடத்துகின்றார் என்று சிலாகிக்கின்றார்கள். கிருஷ்தவர்கள் சிவஞானபோதம் நடத்தியதும், கிருஷ்தவப்பாடசாலைகளில் சைவப்பாடம் போதிக்கும் வழக்கமும் உலகம் இலகுவிற் தெளிந்த ஒன்று. ஸ்மார்த்தப்பாசத்தாருக்கு இதே கேட்டையே சங்கரமடம் செய்கின்றதென்ற உண்மை விளங்கவில்லையெனினும், ஈழத்து அந்தணர் பலர் ஆதிசங்கரரையும் பெரியவாளினையும் தம்குருநாதராய்ப் போற்றுவதிலிருந்து இவர்களின் சிவாகமப்பாடசாலையின் நோக்கம் அறிவுடையாருக்கு விளக்கமுறும்.

9) //// சைவ காவலர் ஐந்தாம் குரவர் ஆறுமுக நாவலரின்/////

////ஆறுமுக
நாவலர் சாதி விடயத்தில் என்ன கொள்கை உடையவராயிருந்தார் என்பது பலருக்கும் தெரியும்………………………..
ஆனால், நாவலரது சில எழுத்துக்களை ஆதாரமாகக்கொண்டு அவர் சாதிமுறைக்கு எதிரானவர் என புதிய வடிவம் கொடுத்து/////////

நாவலர் பெருமானை ஐந்தாம் குரவர் என்று கோப்பாய் சிவம் அவர்கள் ஏற்றிருக்கின்றார். மகிழ்ச்சி.

அதேசமயம், நாம் அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்களும், கணிதமேதை சுந்தரலிங்கம் அவர்களும் "பிற்படுத்தப்பட்டோரை ஆலயத்தினுள் நுழையவிடுதல் கூடாது" என்றுநின்ற கோட்பாட்டைச் சுட்டிக்காட்டியதும்
எமக்கு அந்தணவிரோதியாக விம்பம் அணிவிக்க, “கணிதமேதை சுந்தரலிங்கம் அவர்களை நாம் சுட்டிக்காட்டினோம்” என்னும் செய்தியையே இருட்டடிப்புச்செய்ததோடு மாத்திரமல்லாது,
நாவலருக்குப் பிற்காலத்தியர் செய்த தவறுகளை நியாயம்செய்ய நாவலரை நிந்திக்கின்றார்.


நமக்கு
சைவநீதி ஒன்றுதான் முதன்மையானது. வேளாளக்குடியாகிய சுந்தரலிங்கனாரும் ஒன்றுதான். அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்களும் ஒன்றுதான். நாவலர் மாணாக்கரும் ஒன்றுதான். நாவலர் சாதிகள் பிறப்பாலில்லை என்று தெளிவாய்ச் சொன்னபிறகு, அவருக்கு பிற்காலத்தியவர்களான இவர்களெல்லாம் அக்கோட்பாட்டினை வினைத்திறனாகக் கொண்டுபோகாது பின்னோக்கி நகர்த்திய தவறினைச் செய்தவர்களாகும்.  நாவலரினை நியாயப்பக்கம் நிறுத்துவதற்கு சில எழுத்துக்களேனும் ஆதாரமாய் இருக்க, ஏனையாருக்கு இல்லையென்பது கோப்பாய் சிவம் அவர்களுக்கு உவப்பாகவிருக்கவில்லை. வர்ணபாசம் சமயஞானத்தினைத் தடைசெய்கின்றது இங்கு வெளிப்பட்டுநிற்கின்றது.

இலங்கை
சைவநெறிக் கழகத்தினாற் சிவபூசை முறைகளிற் சித்தாந்த விளக்கம் என்று சிவத்திரு.ஈசான சொர்ணலிங்க தேசிகர் எழுதிய நூலுக்கு, அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்கள் விருது கொடுத்து மகிழ்ந்தோம். அந்தணசமூகம் அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்களை கொண்டாட மறந்துநிற்கும் இக்காலத்திற், இலங்கை சைவநெறிக் கழகம் இச்சாதனையைச் செய்திருந்தது. இனிமேலும் இச்சாதனையை நாம் தொடர்வோம். நல்லனவற்றை சைவசமயத்தார் எவர்செய்தாலும் கொண்டாடும் வழக்கம் நமக்குரியது. அவர்களின் குறைகளை "கால இடர்"என்று கடக்கவும் வலுவுள்ளது.


ஆனால், தம்சாதியர் தவறிழைத்தால் மூடிமறைப்பதும் அடுத்தவர் செய்தால் தோலுரிப்பதும் போன்ற அநாகரீகம் நம்பால் இல்லை.. நமக்கு கணிதமேதை சுந்தரலிங்கமும் அவ்வாறே. நாவலர் மாணாக்கர் மட்டுமல்ல, நாவலரையும் "சாதிகள் பிறப்பால் அல்ல"என்ற கருத்தினை முன்வைத்திருக்காவிடின், அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்களுக்கு வழங்கிய இடத்தையே வழங்கியிருப்போம்.

சாதிகள் பிறப்பால் அல்ல என்று கூறிய ஒருவரை, கூறாதாருடன் சமப்படுத்துவது சமயத்திலும் சாதியதிகம் என்னும் உள்ளுணர்வு ஊந்துதலால்!!! இத்தகைய உள்ளுணர்வைக்கொண்டவாறு "அன்பும், அடக்கமும்தான் சைவத்தின் முதற்படி. அதுவும் சமயப் பொறை என்பது நமது பெரும் சொத்து "என்று வகுப்பெடுத்தல் கல்லாதார் கற்ற கவிபோலாம்.


10)  
திருமால் வழிபாடு குறித்த விமர்சனம்

சைவ உபாகம நூலாகிய சிவதருமோத்திரத்தில், சம்புபட்சமாக திருமாலை வழிபட்டால் வைகுண்டம் வாய்க்குமென்றுள்ளது. அவ்வைகுண்டம் சைவ போகமுத்தி உலகேயாம்.  இலங்கையிற் சைவர்களென்றாலே திருமாலைச் சம்புபட்சமாக வழிபடுகின்றவர்களேயாம். இதனை பறாளாய் முருகன் ஆலய வரலாற்று நூலிற் காண்க. இக்காலத்திற் நாமதாரணம் செய்து, வைணவ ஆகமங்கள் அறியாமையாற் புகுத்தப்பட்டுள்ளனவேயொழிய, ஆதியிற் அவை முழுமையான சைவாகமக்கோயில்களேயாம்.போர்த்துக்கேயர் இடிக்கமுதற் அங்ஙனம்தான் விளங்கியதென்பதை குறித்த பறாளாய் முருகன் ஆலய வரலாற்று நூலிற் காணலாம்.

நாம் சம்புபட்சம் என்று எழுதியுள்ளதன் பொருள் கோப்பாய் சிவம் அவர்களுக்கு விளங்கவில்லைப்போலும். சம்புபட்சமென்றால் சிவனே திருமாலாய் விளங்கும் வடிவம்.  ஹரிஓம்,சந்தியாவந்தனம் போன்றவை ஸ்மார்த்தமத திருமாலைக் குறித்தது. அத்திருமால் அனுபட்சம்.
சைவத்திலும்
திருமால் உண்டு. வைணவத்திலும் திருமால் உண்டு. ஸ்மார்த்தமதத்திலும் திருமால் உண்டு. ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் வேறுவேறு. இவையெல்லாம் அடிப்படைச் சமய அறிவுக்கு அத்தியாவசியமானவையாகும்.

11) 
தாங்கள் பிறப்புவழியிற் பார்க்கின் மகாசைவப் பிராமணரும் பூசைசெய்யலாம் என்று காட்டிய பிரமாணம் ஆத்மார்த்த பூசைக்குரியதுவடநாட்டுக்கோயில்களில் இப்படி பூசகர் ஒருவர் பரார்த்தத்துக்கும், அதுபோல் அடியவர் தாமே சென்று ஆன்மார்த்தபூசையையும் மேற்கொள்ளும் வழக்குண்டு.
அயன்முகத்திற் தோன்றிய அந்தணர் அர்சித்து
பயன்டைதற்கு  இட்டலிங்கம் பாங்கு - குறள் 436

பாங்கில்லை தீண்டப் பரார்த்த மவர் தீண்டிற்
தீங்குலகுக்குக் காமென்று தேறு
437


மகாசைவப் பிராமணர் ஆத்மார்த்தபூசையே செய்யமுடியும். பரார்த்தபூசை செய்தால் நாட்டிற்கு கேடு என்கின்றது சைவசமயநெறி.  (பிறப்புவழியை நம்புவார் பொருட்டு இப்பதில்.).
இதுவரைகாலமும்
கோயில்களில் பூசைசெய்வதென்றால் சைவமக்கள் சைவக்குருக்களிலும் பிராமணக்குருக்கள்தான் தேவை என்பர்.
பிறப்புவழியிற் பொருள்கொண்டால்  பிராமணக்குருக்களில்,
1)
சிவப்பிராமணர்
2)மகாசைவப்பிராமணர்
3) ஆதிசங்கரரை வணங்கும் ஸ்மார்த்தமதப் பிராமணர்முதலியோர் உள்ளனர் என்னும் செய்தி நம்மக்களிடம் சென்று சேரவேண்டும்.
இதிற், சிவப்பிராமணர் மாத்திரமே ஆகமப்படி பிறப்புவழியிற் பொருள்கொள்ளின் கோயிற் பூசைக்குரியார் என்னும் தெளிவை நம்மக்கள் பெறவேண்டும். அதிலும், ஆதிசங்கரரைக் குருவாக ஏற்றுக்கொண்டவர்கள், சைவசமயத்தவர் அல்லர் என்பதால் அவர்களுக்கு கோயிலில் பூசை உரிமை ஆகமப்பிரமாணம் இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்தவேண்டும்.

எமக்கு
கோத்திரமும் குலமும் கொண்டென்செய்வீர் என்ற அப்பர்வாக்கிற்தான் நம்பிக்கையுண்டு. எனினும், இவற்றின் பொருட்டே கோத்திரம் நாடவேண்டியதாயிற்று. இது முள்ளினை முள்ளால் எடுப்பதுபோல் என்க. சிவபெருமானைத் தீண்டிப்பூசிப்பதற்கு கௌசிக,காசிப,கௌதம,பரத்வாஜர்,அத்திரி(அகத்தியர்) கோத்திரத்தாருக்கே உரிமையுண்டென்பதால், கோத்திரம் என்பது சிவபெருமானின் உபதேசப்பரம்பரையென்பதால், அது ஞானப்பரம்பரையே என்று தெளிவதால் ஞானமுடையாருக்கு கருவாசக் கோத்திரம் முதன்மையா? சிவபெருமானின்பால் பெறும் ஞானத்தீட்சையால் விளையும் கோத்திரம் முதன்மையா ? என்பது புலனாகும். சிவபெருமானின் முகத்தில் (பதியிலிருந்து) குறித்த ஐந்து முனிவர்களும் தோன்றினர் எனின், பதியிலிருந்தே பசுக்கள் தோன்றின என்னும் சித்தாந்த முரணுக்கே இட்டுச்செல்லும். எனவே, ஆகமங்களின் ஞானபாதம் அறிந்தார் கிரியாபாதம் கூறும் உட்பொருளை உணர்வர்.
ஸ்மிருதிகளின் தரம் ஏற்கனவே விளக்கப்பட்டுவிட்ட்டதால் அவைகொண்டு கோத்திரத்தை விளக்கல் பயனில்லையாம்.

12) சைவசமயத்துக்குருமார் சைவக்குருமார்  என்றுதானே அழைக்கபடவேண்டும் பிராமணக்குருக்கள், இந்துக்குருக்கள் என்றெல்லாம் அழைக்கபடலாயினதேன்? சைவக்குருக்களிலிருந்து வேறானோர் என்னும் வர்ணப்பாசத்தினைக் காட்டிடத்தானே?

சைவம் சிவனுடம் சம்பந்தமாவது - திருமந்திரம்
வர்ணமா? சமயச்சொல்லா? என்னும்போது வர்ணப்பக்கம் சாய்ந்தமையினாற், பிறப்புவழி சிவப்பிராமணர் அரிது (தங்கள் விகிதாசாரக் கூற்றுப்படிதான்) என்பதை நிறுவவேண்டியதாயிற்று. சைவமக்கள் பிராமணக்குருக்கள் என்றால் பூசைசெய்யலாம் என்று எண்ணிய அறிவீனத்தினாற்தானே, சைவக்குருக்கள் என்ற பெயரினை உவக்காது புறந்தள்ளினீர்கள்!!! எமக்கு சைவசமயம் என்னும் பெயரில் பத்தியும், ஸ்மார்த்தமத வழக்கங்கள் இன்றியும், சிவநெறியிற் கற்போடும் நின்று பூசைசெய்யும் எவரேனும் எம்வழிபாட்டுக்குரியாரேயாம். எனவே அத்தகையாரிடம் எக்கேள்வியும் எழுவதில்லை. அவர் பூர்வீகம் ஸ்மார்த்தமதமா இல்லையா என்பதுகூட எமக்கு அநாவசியமேயாம்.

13) முடிவுரை:- 1
ஒரு மருத்துவர் உருவாகவேண்டுமென்றால் ஆறு ஆண்டுகள் கடினப்பட்டு படிக்கவேண்டும். பல பரீட்சைகளே எழுதவேண்டும். அனடொமி,பிசியலோஜி,பார்மகலோஜி போன்ற பாடங்களை தெரியாது ஒருவர் மருத்துவர் ஆகமுடியாது. அப்படியொருவர் உருவானால் அவரால் விளையும் பாதகம் உலகமறியும்அதுபோல்குருக்கள் ஆகவேண்டுமென்றால் சிவாகமங்களைப் படித்திருக்கவேண்டும். ஆனால், சிவப்பிராமணக் கோத்திரங்கள் ஐந்தினையும் நாம் கூறித் தெரிந்துகொண்டபின்னும், ஆகமங்களை ஏற்கமாட்டேன் என்று கூறுகின்ற அளவுக்கு நம்சமயக்குருமார். இதனாலேயே சைவசமயம் வெறும் கிரியைச்சமயமாய் ஒடுங்கியுள்ளதைத் தெளிந்து, சைவாகமக்கல்வியையும் கற்போடு அதையொழுகும் நெறியையும் வளர்த்தெடுக்கவேண்டும் என்பதுவே எம் அவாஇல்லை; சேற்றுக்குள் வீழ்ந்தேயிருக்கப்போகின்றோம் என்றால், அது அவரவர் விருப்பம்.ஆனால், சைவப்பெருஞ்சமயம் அவர்களைக் கடந்து ஏளனமாய்ப் பார்த்தபடி வளரும்.

முடிவுரை 2 -  எம்மை அந்தணவெறுப்பாளனாக திட்டமிட்டுச் சிலர் செய்யும் பிரச்சாரங்களைக் குறித்துக் கவலைப்படப்போவதில்லை. மருத்துவன் ஒருவன் மருத்துவனாக இருக்காவிடத்து சமூகம் பழிக்கும்.அதுவே சமயகுருமார் என்னும் நிலையை உடையாருக்கும்.  மருத்துவமனையிற் பௌத்தகுரு,கத்தோலிக்ககுரு என்போர் பெறும் குருத்துவப்பயன்களை நம்பூசகக்குருமார் பெறவேண்டும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிற் எமது விடுதியிற் நடைமுறையும் படுத்தினோம். எமது வலக்கரத்தால் பூசகருக்கு உதவிக்கரமாய் நின்ற செய்திகள் எம் இடக்கரத்துக்குத் தெரியாதென்பதால், அவற்றையெல்லாம் எழுதி எமது தரத்தினைக் குறைத்துக்கொள்ளவிரும்பவில்லை.


முதற்பாகம் படிக்க இங்கே சொடுக்குக.
மேலும் படிக்க...