"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, December 29, 2012

ஆன்மாக்கள் எப்போது தோன்றின? சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 9

நீண்டகால இடைவெளியின் பின்னர்,மீண்டும் சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பகுதியை தொடர்ந்து எழுத எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளின் திருவருட்சம்மதம் வாய்க்கப்பெற்றுள்ளது.

இறை தத்துவத்தை, அது விஞ்ஞானத்தை விஞ்சிநிற்கும் அருமையை ஆன்மாவுடனாக இறைவனின் தொடர்பை முன்னைய பகுதிகளில் பார்த்தோம்!
அத்வைதம் என்னும் சொல்லுக்கு சங்கரர் கண்டது பிழையான பொருளென்றும் நம் சித்தாந்திகள் கண்டதே சாலச்சிறந்த பொருள் என்றும் பகுத்தறிந்தோம்.
முன்னைய பகுதிகள் :- சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 1
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 2
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 3
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 4
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 5
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 6
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 7
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 8 

இனி, ஆன்மாவின் தன்மைபற்றி சைவசித்தாந்தம் என்ன கூறுகின்றதென்று பார்ப்போம்!
ஆன்மாக்கள் எத்தனை?

எண்ணற்றன! இதுதான் சைவசித்தாந்தம் சொல்லும் பதில்! பூமியில் செடி
,கொடி தொட்டு மனிதன் ஈறாய் எத்தனை உயிர்கள் உண்டென்று கணக்கெடுக்க முடியுமா?  பூமியில் உள்ளவற்றையே  கணக்கெடுக்க முடியவில்லையென்றால்...........மொத்த ஆன்மாக்களின் எண்ணிக்கையை சிந்தித்துப் பார்க்கத்தான் முடியுமா? முடியாது! அதனால்த்தான் எண்ணற்றன என்கின்றது சைவசித்தாந்தம்!

ஆன்மாக்கள் எப்போது உருவாகின?
ஆகா; ருமையான கேள்வி! ஏன் உருவாகின, எங்கிருந்து உருவாகின என்ற கேள்விகள்கூட மனதில் எழலாம். எனவே அத்தகைய கேள்விகளே எழுவதற்கு வாய்ப்பில்லாத அருமையான விடையை சைவசித்தாந்தம் பகருகின்றது.ஆன்மாக்களும் சிவனைப் போல் அநாதியே! இதுதான் சைவசித்தாந்தம் பகரும் அருமையான பதில்!

"சுடரொளியாய் என்றுமுள்ள அன்றளவும் யானும் உளன்" - உமாபதி சிவாச்சாரியார்

அநாதிக்காலம் என்றால் அது எக்காலம்?
ஆன்மாக்கள் பூமிக்கு வந்த பிற்பாடே காலத்தத்துவத்துக்குள் அகப்பட்டுக்கொள்கின்றன. ஆக; பஞ்சபூதங்களாலான, இவ்வுலகிற்கு வருவதற்கு முன்னர் காலம் என்னும் தத்துவத்தில் அவர்கள் இருந்திலர்.

ஒரு பிறந்த மனிதனுக்கே, குழந்தைப்பருவம் என்று தொடங்கி, மூப்பு வந்து காலத்தை உணர்த்துகின்றது. எனவே, காலம் என்பது சடப்பொருட்களால்; அதாவது ஐம்பூதங்களால் உருவாக்கப்பட்ட இந்த உடம்பைப் பெற்றபின்னர் சடப்பொருட்களில்(ஐம்பூதங்களில்) நடைபெறும் மாற்றங்களைக் கொண்டு உணரும் ஒரு தத்துவம்!
எனவே, அநாதிக்காலம் என்றால் அது எக்காலம்? என்று சிந்திப்பது முரண்.

காலமே இல்லாத இயல்பில் உள்ள ஆன்மாவுக்கு காலத்தை ஏற்றிக் கதைப்பதும் பாலுக்கு உறைப்பு எக்காலத்திலிருந்து உண்டு என்று ஆராய்வதும் ஒன்றுதான்.

ஆன்மாவை இன்னும் விரிவாக அடுத்தடுத்த பகுதிகளில் அலசுவோம்.
மேலும் படிக்க...

Friday, December 28, 2012

ஈழத்திருநாட்டில் சம்புபட்ச நாராயணனின் சொர்க்கவாசல்!

மாலறியா நான்முகனும் காணா மலையினை – திருவெம்பாவை ஒருவ ராயிரு மூவரு மாயவன்  - அப்பர் தேவாரம் (திருக்கடம்பூர்)
ஓருவாயினானை மானாங்காரத்து ஈரியல்பாய் ஒரு விண்முதல் பூதலம்  படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை - திருஞானசம்பந்தர் தேவாரம் (திருவெழுகூற்றிருக்கை)


என்னடா இது நாராயணனால் காணமுடியாத சிவபெருமான் என்று திருமுறைகள் துதிக்கின்றன. அதே திருமுறைகள் நாராயணனாய் இருப்பவன் சிவபெருமான் என்றும் துதிக்கின்றன! பெரும் முரணாயிற்றே!!!! 
ஏன் இப்படியொரு முரண்?
பார்த்திடுவோம்!

மூன்று மலங்களாகிய ஆணவம்,கன்மம்,மாயை ஆகியனவற்றில் கடைசி இரண்டும் பக்குவத்தால் அழிவுற்று ஆணவம் மங்கிநிற்கும் நிலையில், ஆன்மாக்கள் விஞ்ஞானகலர் எனப்படுவர். இவர்களில் ஆணவம் மென்மையாகக் காணப்படும்.

இந்த ஆன்மாக்கள் தாம்செய்த புண்ணியத்தின் பலனாக, பிரம்ம,விஷ்ணுக்களாகப் பதவி பெறுவர். இவர்கள் சிவபெருமானின் அதட்டித்தலால், தமது பதவிகளுக்குரிய தொழிலைப் புரிவர். இவர்களில் மங்கிநிற்கும் ஆணவம் சிலசமயம் மேலோங்கிவிடும். இதன் காரணமாகவே "நானே முழுமுதல்" என்ற சண்டைசச்சரவுகள் ஏற்பட்டுவிடுகின்றன.
இவ்வகையான ஆன்மாக்கள் பிரம்ம,விஷ்ணுப்பதவிகளை அனுபவிக்கும்போது, அவ்வகையான பிரம்ம,விஷ்ணுக்களை அணுபட்ச பிரம்ம,விஷ்ணு என்பர். அதாவது காரியேசுவரர் என்று அழைக்கப்படுவர்.  அணுபட்சம் என்றால் ஆன்மா தொடர்பானது என்று பொருள்ப்படும்.
சிலசமயம், சிவபெருமானே பிரம்ம,விஷ்ணுக்களாய் திருவடிவம் கொண்டு  படைத்தல்,காத்தல் தொழில்களைச் செய்வார். இவ்வாறு சிவபெருமானின் திருவடிவங்களாக விளங்கும் பிரம்ம,விஷ்ணுக்களை சம்புபட்சம் என்பர். அதாவது காரணேசுவரர் என்று போற்றப்படுவர். சம்புபட்சம் என்றால் சிவசம்பந்தமுடையது என்று பொருள்ப்படும்

அதுசரி, சொர்க்கவாசல் பற்றி இங்கு என்ன தொடர்பு?

ஈழவளநாட்டில் இரண்டு பிரசித்தமுடைய திருமால் ஆலயங்கள் உண்டு. ஒன்று இந்திரனின் சாபத்தைப் போக்குவதற்காக ஆமையாகத் தோன்றி கல் ஆமையாக நிலைபெற்று அருளாட்சி செய்யும் பொன்னாலை வரதராசப்பெருமாள் ஆலயம். மற்றையது சக்கரமாக தோன்றி அருளாட்சி செய்யும் வல்லிபுர ஆழ்வார் ஆலயம்.  பொன்னாலை வரதராசப் பெருமாள் ஆலயத்துக்கும் எங்கள் குடுப்பத்துக்கும் பண்டுதொட்டு தொடர்பு இருந்துவருகின்றமையால் என்னுடைய குழந்தைப் பருவந்தொட்டு சிறுவயதுவரை இக்கோயிலோடுதான் என்னுடைய சைவசமய ஆன்மீக வாழ்வு பிணைந்திருந்தது. இடம்பெயர்வுகளாலும் புலம்பெயர்வுகளாலும் இக்கோயிலோடு மானசீகத்தொடர்பையே பதின்வயதின் பிற்பகுதியிலிருந்து பேணவேண்டியிருந்தது. ஆக, ஒரு தசாப்தத்தின் பிற்பாடு கோயிற் சொர்க்கவாசல் பூசைக்கு சென்றிருந்தேன்.சொர்க்கவாசல் பூசையும் அன்றைய தேரோட்டமும் எளியேனின் பெரியம்மாவுடைய பூசை என்பதால், வெளிநாட்டிலிருந்து வந்த பெரியம்மாவுடன் சென்றிருந்தேன். பெரியம்மாவின் மூப்பின் சிரமம் காரணமாக என்னையே தெற்பை(தர்ப்பை) போட்டு பூசையை மேற்கொள்ளப் பணித்திருந்தார். பல்லாண்டுகளின் பிற்பாடு ஈழத்துப் பாரம்பரியக்கோயில் ஒன்றின் பூசையில் கலந்துகொள்ளும் பேறை எம்பெருமான் எனக்கு அளித்திருந்தமையைக் கண்டு பூரித்தேன்.

ஆலயத்தில் அர்த்தமண்டபத்தில் கைமணியைத் தந்து அடிக்கும்படி ஆலய அந்தணர் வேண்டியிருந்தார். நானும் கைமணியை அடித்தபடி அபிடேகத்தை பார்த்தவண்ணம் இருந்தேன். சம்புபட்ச திருமாலாகவே கண்டு மகிழ்ந்தவண்ணம் இருந்தேன். நான் அடித்துக்கொண்டிருந்த கைமணியின் பிடியில் சங்கரம் இருந்தது. திடிரென ஆலயத்து தலைவர் வந்து, "இந்தாரும் இதை அடியும்" என்று என்னிடம் இருந்த சக்கரக்கைபிடி போட்ட கைமணியை வாங்கிக்கொண்டு, நந்திச்சின்னம் கைபிடியில் பொறிக்கப்பட்ட கைமணியை என்னிடம் தந்தார்.என்னே அதிசயம்! ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது! சம்புபட்ச திருமாலாய் நான் பொன்னாலையத்தில் நாராயணனைப் பார்த்து உள்ளத்தில் அவ்வண்ணம் உருவகித்து வழிபட்டுக்கொண்டிருந்தபோது, நந்திக்கைபிடிபோட்ட கைமணியை என்னிடம் அளித்த அந்த அருட்செயல் எம்பெருமானின் திருவருட்சம்மதம் என்றுதான் சொல்லவேண்டும்!!!!
பொன்னாலயத்தில் நடைபெற்ற பூசைகளின் போது, அந்தணர் ஓதிய மந்திரங்களை நன்றாக செவிமடுத்தவண்ணம் இருந்தேன்.

ஓம் சங்கரப் பிரியாய நம" என்று அந்தணர் சொல்லும்போது சிவதீட்சை பெற்று கிருஷ்ணர் செய்த சிவபூசையும், இராமர் இராமேசுவரத்தில் செய்த சிவபூசையும்,தனது கண்ணையே தாமரைப்பூவாக பிடுங்கி சிவபெருமானுக்கு திருமால் செய்த பூசையும் அதற்கு மகிழ்ந்து சிவபெருமான் திருமாலுக்கு அளித்த திருச்சக்கரமும் என் நினைவுகளில் வந்து என்னை ஆட்கொண்டது. அணுபட்சத் திருமால்கூட ஒரு சிவனடியாரே என்ற உணர்வை என்னுள் ஊட்டியது.ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ - திருவெம்பாவை

பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால் சிவபெருமான்மேல் கொண்ட அன்புடமைபோன்று அன்புடமை பூண்ட உனது திறம் இதுதானோ? என்று திருவெம்பாவையில் திருமாலின் சிவபக்தி ஒப்புவமையாகக் கையாளப்பட்டுள்ளது.
சம்புபட்சமாய் திருமால் விளங்கும்போது சிவனாகவும் அணுபட்சமாக திருமால் விளங்கும்போது சிவனடியாராகவும் உள்ள திருமால் வழிபாடு சைவவிரோதம் அன்று!


அதுவும் ஈழத்திருநாட்டில் சைவவழி நின்றுதான் திருமால்வழிபாடு பேணப்படுகின்றது. விபூதியே அந்தணர்களால் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. அந்தணர்களும் வீபூதியையே உடம்பெல்லாம் பூசியுள்ளனர்.

அதர்வண வேதத்திலுள்ள பஸ்மஜாபால உபநிஷத், "பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷா பரணா :தக்ஷிணாயாந் திகி விஷ்ணு " என்று கூறுகிறது. "திருமால் ஸ்ரீ காசி ஷேத்திரத்திலே தென்திசைக்கணிருந்து ,விபூதி ருத்திராக்ஷதாரணமுடியவராய் உபாசிக்கின்றனர்" என்பது பொருள். (நன்றி: http://vaidikasaivam2.blogspot.com/2012/11/blog-post.html?spref=fb)

"ராமம்...பஸ்மோத் தூளித சர்வாங்கம் " -ராம ரஹஸ்ய உபநிஷத்
இதன் பொருள்,"இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் " என்பதாகும்.
(நன்றி: http://vaidikasaivam2.blogspot.com/2012/11/blog-post.html?spref=fb)

"சிவஸ்ய விஷ்ணோர் தேவாநாம் " எனும் பராசர ஸ்மிருதி சுலோகம்,விபூதியை திருபுண்டரமாகத் தரிப்பதால்,கேசவ மூர்த்திக்கும் லக்ஷ்மி தேவியாருக்கும் திருப்தியுண்டாகிறது என்று நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
(நன்றி: http://vaidikasaivam2.blogspot.com/2012/11/blog-post.html?spref=fb)
திருமால் வழிபாடு பண்டைய காலத்தில் திருநீறுவழி சைவவழிபாடாகவே விளங்கியது. பிற்காலப்பகுதியில் அதில் மாறுதல்கள் ஏற்பட்டு வைணவமாக திரிபடைந்தபோதும், சிவபூமியாக ஈழவளத்திருநாடு விளங்கிய அருமையினால், திருமால் வழிபாடு சைவவழிசார்ந்த வழிபாடாகவே பண்டுதொட்டு பேணப்பட்டு வருகின்றது.
திருமாலை சைவவழிநின்று வழிபடும் ஈழத்துப் பாரம்பரியத்துக்கு இன்று ஸ்மார்த்தர்களின் ஊடுருவலால் கேடுவந்தவண்ணம் உள்ளதென்பதையும், திருமால் வழிபாட்டை வைணவவழிபாடாக இவர்கள் ஈழத்தில் மேற்கொள்ளத்துடிப்பதையும் இன்று சில இடங்களில் காணக்கூடியதாகவுள்ளது. இந்த ஆகமவிரோதத்துக்கு சைவர்கள் துணைபோகாது சைவ அறிவோடு சைவர்கள் விளங்க வேண்டுமென்று பணிவோடு வேண்டி, சம்புபட்ச திருமாலின் அருளை யாம் பெற்றதுபோன்று அனைவரும் பெற பொன்னாலையில் எழுந்தருளியுள்ள நாராயணனை வேண்டிக்கொள்கிறேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



மேலும் படிக்க...

Tuesday, December 4, 2012

தமிழின் தாய்மொழி - பாபா சொல்ல பூரித்த தமிழர்!

ஒரு இனம் தனித்துவமாக வாழ்வதற்கு நாடு தேவையில்லை! ஆனால் தனித்துவப் பண்பாடுகள் சிதைவுறாமல் பேணப்படுவது முதன்மையானது! உதாரணம் யூதர்கள்!
இதை உணர்ந்துதான் திராவிடநாடு கேட்ட தமிழினத்தின் தனித்துவப் பண்பாடுகளை சிதைத்து, இந்துத்துவ சாகரத்துக்குள் அனைவரையும் மூழ்கடிக்கச்செய்வதே இந்தியத்தேசியவாதிகளின் கனவு!
சைவம்-வைணவம் என்கின்ற பாரம்பரியங்களை மெதுவாக சிதைத்து சாம்பார் இந்துமதத்துக்குள் தமிழரை அழைத்துச்செல்வதே இந்தியத்தேசியவாதிகளின் குறி!!
என்றேனும் ஒருகால் தமிழரில் சிலருக்கு பழைய கனவில் பற்றுவந்தால், இந்துமதம் என்கின்ற சொல்லை வைத்து பெரும்பான்மைத் தமிழரை அச்சிலரில் இருந்து பிரிப்பதுவே சாம்பார் இந்துமதத்தின் நோக்கம்!
அதனால்த்தான் தமிழ்த்திருமுறைகளுக்கு ஆலயங்களில் தடா! தனியார் இந்துப்பாடசாலைகளில் வழிபாட்டுநேரத்தில் தமிழ்த்திருமுறைகளுக்கு பொடா!
இதற்கு பாபாக்களும், அம்மாபகவான்களும் பெரும் உதவி!

ஏழைக்கு வீபூதியும் அரசியல் தலைவர்களுக்கும் வெளிநாட்டு முகவர்களுக்கும் பிரபல்யங்களுக்கும் தங்கச்சங்கிலி!!!! என்னே கொடுமை!
இந்தக் கொடுமைக்கு தெய்வீகசாயம் வேறு!
சிலர் பாபாவின் போதனைகள் நன்றாகவுள்ளது என்று கூறுவதைக் கேட்டதுண்டு. நித்தியானந்தாவின் கட்டுரைகளைப் படித்தவர் நித்தியானந்தா மூடரைவிடக் கேவலமாக பேட்டிகொடுக்கத் தொடங்கும்வரை அவரது ரஞ்சிதா லீலைகளை நம்பவேயில்லை!!!
பாபா தமிழரின் பாரம்பரியத்தை சிதைப்பதற்கு இந்தியதேசியவாதிகள் பயன்படுத்தும் ஊடகம் என்பதற்கு இதோ ஆதாரம்!
"இந்திய மொழிகள் அனைத்தின் தாய் சம்ஸ்கிருதம் என்பதை பாரதீய மாணவர்கள் அடையாளம் காணல் வேண்டும்" என்று பாபா திருவாய் மலர்ந்துள்ளார். ஸனாதன ஸாரதி ஜனவரி 2011 பக்கம் 15 இல் பாபாவின் அமுதமொழி தெய்வீக அருளுரை என்னும் சிறப்புப்பெயரோடு வெளிவந்துள்ளது.
இந்தியமொழிகள் அனைத்தின் தாய் சம்ஸ்கிருதம் என்கின்றார் பாபா!!! என்னே மடத்தனம்! இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்னரே இருந்த மக்கள் பழந்தமிழர்! தமிழுக்கு தாய்மொழி என்ற ஒன்று இல்லை! தமிழ்தான் கன்னடம்,தெலுங்கு,மலையாளம் ஆகியவற்றுக்குத் தாய்மொழி! இது மொழியியல் ஆய்வாளர் முடிந்தமுடிபாகக் கொள்ளும் அறிவியல்! இந்த அறிவியல் அறிவுகூட இல்லாத ஒருவரா பாபா? இவரையா சர்வவல்லமையுடைய கடவுளென்று எம்தமிழ்ச்சனம் நாடி ஓடியது?
தமிழ்ப்பதிப்பாக பாபாவின் சமித்தியால் வெளியிடப்படும் நூலில் இந்தியமொழிகள் அனைத்துக்கும் சம்ஸ்கிருதமே தாய்மொழி என்று பாபா கூறியது பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது தமிழருக்கு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தமிழுக்கும் தாய்மொழி சம்ஸ்கிருதம் என்று இதன்மூலம் அறிவுறுத்தப்படுகின்றது! பாபாவின் திருவாயால் அறிவியலுக்கு முரணான செய்தி பரப்பப்படுகின்றது!


பிறப்பு என்பதே வினையால் வருவது என்றும் கருவாசம் என்பது வினையின் பயன் என்றும் சைவத்தமிழ்த் திருமுறைகள் எங்கும் உரைக்கப்பட்டிருக்க, நம் தமிழ்ச்சனம் அதை உணராது பிறந்து, பிணி(வழுக்கி விழுந்து கால்வலியால் அவதிப்படுதல்),மூப்பு என்பவற்றுக்கு உள்ளாகி இறுதியில் செயற்கை சுவாசம், செயற்கை கழிவகற்றல் என்று மரண துன்பங்களையெல்லாம் அனுபவித்த ஒருவர், தமிழுக்கும் தாய்மொழி சம்ஸ்கிருதம் என்று உரைத்திட, நம்தமிழரும் கடவுள் உரைத்துவிட்டார் என்று கொண்டாடுகின்றனர் என்றுசொன்னால் முட்டாள்கள் நம்தமிழர் தானே?

இனி தமிழ்வழிபாடு வேண்டுமென்று எந்தக்கோயிலிலும் கேட்பீரோ?

"ஆரியமுந் தமிழும் உடனே சொலிக்
காரிகை யார்க்குக் கருணை செய் தானே " – திருமந்திரம்தமிழையும் வடமொழியையும் ஒரேநேரத்தில் சிவபெருமான் உரைத்ததாக திருமூலர் தெரிவித்துள்ளார். சித்தர் திருமூலருக்குத் தெரிந்த உண்மைகூட கடவுள் பாபாவுக்கு தெரியாமல்ப்போனது எங்கனம்?



Tamil is one of the longest surviving classical languages in the world. It has been described as "the only language of contemporary India which is recognizably continuous with a classical past" and having "one of the richest literatures in the world". - Wikipedia

பாவம் பாபாவுக்கு விக்கிபீடியாகூடத் தெரியாது! இவரா முற்றும் அறிந்த முதல்வன்?
கடவுளே........காலக்கொடுமையா இது!!!

பாபாவின் தாய்மொழியான தெலுங்குக்குகூட தமிழ்தான் தாய்மொழி என்பதை பாபாவுக்கு அவரை இயக்கியவர்கள் எடுத்துரைக்காமையே அறிவியலுக்கு முரணான அவரது பேச்சுக்குக் காரணமாயிற்று! பாவம் பாபா!!!

மங்குவர் செல்வம் மதிக்க மாட்டேன்மாயவித்தை காட்ட மாட்டேன் - யோகர்சுவாமி நற்சிந்தனை

பாபா செய்யும் மாயவித்தைகளைவிட பலமடங்கு சிறப்பான மாயவித்தைகளை மஜிக்மேன்கள்(மாயாவிகள்) செய்வதைக் கண்டிராதோர் இக்காணொளியைக் காண்க.

ஆரடா நீ என்று செல்லப்பா சுவாமிகள் யோகர் சுவாமியை ஆட்க்கொண்டார். மறைஞானசம்பந்தர் பட்ட கட்டையில் பகற்குருடு போகுதென்று கூறி உமாபதிசிவாச்சாரியாரை ஆட்கொண்டார்.

ஆக; குருவே சிவமாக எழுந்தருளும்போது தத்துவவித்தையே நடைபெறும்! மாயாவிகளுக்குத்தான் மாயவித்தை தேவை தங்களின் இருப்பை நிலைநாட்டுவதற்கு!!!

 
மேலும் படிக்க...

Thursday, November 22, 2012

தமிழ்க்குழந்தையின் தந்தை தமிழனில்லையோ

ஒரு ஐந்துவயது குழந்தையையும் அக்குழந்தையின் தாயையும் சந்தித்தேன்................

இப்பதிவை படித்துத்தான் பாருங்களேன்!http://thiviyaranchiniyan.blogspot.com/2012/11/blog-post_22.html



நன்றி
சிவத்தமிழோன்
மேலும் படிக்க...

Sunday, November 18, 2012

அன்புள்ள சிவயோகர் சுவாமி அடியார்களுக்கு

அன்புள்ள சிவயோகர் சுவாமி அடியார்களுக்கு,"நான் கடவுள்" என்று சொல்லி பணந்திரட்டி கொண்டாடுகின்ற இக்காலகட்டத்தில் சிவஞானத்தை அள்ளி வழங்கிய சித்தர்களின் சிறப்பைப் பேசுவதும் எழுதுவதும் அருமைதான்! சிவபூமி என்று திருமூலநாயனாரால் சிறப்பிக்கப்பட்ட ஈழவளத் திருநாட்டில் பூத்து சைவத்தை தழைக்கச்செய்த சித்தர் பெருமக்களை இன்று சைவர்கள் நினைவுபடுத்துவதே ஆச்சரியமான அதிசயமானதாகவுள்ளது!
ஈழத்தில் தோன்றிய சித்தர்களை அத்தி பூத்தாற்போல் அங்கொன்று இங்கொன்றாக நினைவுபடுத்தும் நிகழ்வுகள் அரங்கேறினாலும் அவற்றை பிரபல்யப்படுத்தும் உத்திகளையும் எவரும் கையாள்வதில்லை! பத்திரிக்கைகளில் எங்கேனும் ஒரு மூலையில் ஒருசிறுசெய்தியாக அந்நிகழ்வு அமைந்துவிடுகின்றன!

இப்படியான இக்காலகட்டத்தில்,
சிவயோக சுவாமி நம்பிக்கை நிதியம் என்னும் அமைப்பு சிவயோகர் சுவாமி வழிபாட்டுக்கென்று ஒரு நிலையான இடமொன்றை தாபிக்கும் நோக்கில் துண்டுப்பிரசுரம் ஒன்றை சிவதொண்டன் சஞ்சிகையூடாக அனுப்பியிருந்தனர்.
நான் கடவுள் என்றும் நானே கல்கியென்றும் ஆன்மீக வியாபாரம் செய்கின்ற அமைப்புகளுக்கு பணம் கொழுத்துப்போய் இருப்பதால் ஆயிரத்தெட்டுவகையில் பணந்திரட்டும் வழிகளைக் கையாளுகின்றனர்! சுவரொட்டிகள்,பத்திரிக்கை விளம்பரங்கள்,தொலைக்காட்சி விளம்பரங்கள் என்று இவர்களின் அமைப்புகளுக்கு குறைவேயில்லை!
சிவப்பரம்பொருள் ஒன்றே கடவுள் என்றும் பிறப்பு இறப்பு என்னும் வினைகளுக்கு அப்பாற்பட்ட திருவருளே சிவப்பரம்பொருளென்றும் கொண்டாடுகின்ற சைவப்பாரம்பரியத்தில் சிவஞானம் பெருக்கி குருவருளைச் சுரந்து சிவனடியை உணர்ந்திட வழிகாட்டிய சித்தர்களினை போற்றுகின்ற அமைப்புக்கள் வியாபாரவழியை அறியாதவர்கள்! அதற்கு தலைசிறந்த உதாரணம் நம் ஈழத்து சிவயோகசுவாமி நம்பிக்கை நிதியத்தார். சிவஞானம் ஒன்றையே பொருளாகக் கொண்டு இயங்கும் இவ்வமைப்பினர் பல்லாண்டுகளாய் பல்வேறு கூட்டுவழிபாடுகளை மாதந்தோறும் ஒழுங்குசெய்து வருகின்றபோதும் இன்றுவரை ஒரு நிலையான வழிபாட்டு நிலையத்தை உருவாக்கிட முடியாதளவுக்கு உள்ளனர்.
ஆக; சிவஞானம் பெருக்கும் அமைப்பு ஒன்றுக்கு நாம் செய்யும் உதவி நிச்சயமாக நம்மை ஏதோவொருவழியில் வளப்படுத்தும் என்பதை உள்ளத்தில் இருத்தி, உதவமுன்வருமாறு
பணிவோடு வேண்டுகின்றேன்.
வங்கிக் கணக்கு :
SIVAYOGA SWAMI TRUST OF SRI LANKA
A/C 0000716822
BANK OF CEYLON
BRANCH: BAMBALAPITIYA
Swift Code : BCEYLKLXXXX
(BCEYLKLX)
SRI LANKA

Cheques,Bank Drafts,Pay Orders and International Money Orders should be Crossed "Account Payee Only" and made out in favour of SIVAYOGA SWAMI TRUST OF SRI LANKA.பண உதவி செய்யும் வசதியற்றோர், இச்செய்தியை வசதியும் மனமும் படைத்தோரிடம் கொண்டு சேர்க்கும் போற்றுதலுக்குரிய தொண்டை ஆற்றினால் அதுவே அருமையான தொண்டாகும்.
நேரில் சென்று ஏதேனும் உதவிகளை வழங்க விரும்புவோர் பின்வரும் விலாசத்தினைக் குறிப்பெடுத்து, அமைப்பின் உரியவர்களை சந்திக்கும்படி பணிவோடு வேண்டுகின்றேன்.The Secretary
No- 5, Moor Road,Colombo-06,Sri lanka
Tel:- +94 11 2580584




பிற்குறிப்பு: ஏதேனும் பண உதவி செய்வோர் தங்கள் தொலைபேசி இலக்கத்தையும் பெயரையும் அனுப்பி வைத்த பணத்தின் பெறுமானத்தையும் தங்கள் விலாசத்தையும்sivayogaswami@yahoo.com
என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைப்பீர்களேயானால், தங்களுக்கு பணம் அனுப்பி வைத்தமைக்குரிய சான்றினை இவ்வமைப்பினரிடம் இருந்து பெற்றுத்தர ஆவண செய்யமுடியும். மின்னஞ்சல் முகவரி இவ்வலைப்பூவின் பணிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட என்னுடைய தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியாகும்.இவ்வமைப்பின் சிறப்பான திருப்பணியை அறிந்து அவர்களின் சிவப்பணியில் ஏதேனுமொருவழியில் எளியேன் பங்குகொள்ள அவாக் கொண்டேன். எளியேனுக்கு இறைவன் அளித்த எழுத்துப்பணியினூடாக பணிசெய்யும் ஆர்வம் பூத்திடவே, வலைப்பூ ஒன்றினையும் முகநூலில் குழுமம் ஒன்றினையும் சிவயோகர் சுவாமிகளின் திருப்பெயரில் அமைத்துள்ளேன். எல்லாம் திருவருட் சம்மதம்.

நன்றி
சிவத்தமிழோன்

http://sivayogaswami.blogspot.com/2012/11/blog-post_18.html
(குருபரன் சிவயோக சுவாமிகள் என்னும் என்னுடைய வலைப்பூவில் இந்தமடலை பதிவாக பிரசுரித்துள்ளேன்.)
மேலும் படிக்க...

Tuesday, November 13, 2012

தீபாவளியும் கருப்புச்சட்டை அரசியலும் பெண்ணியமும் சின்னத்திரையும்!

தீபாவளித் திருநாளுக்கு பல்வேறு காரணங்களை பல்வேறு பகுதிகளில் பாரதத்திருநாடு எங்கும் கூறுவர். வடநாட்டின் பலபகுதிகளில் இராமனின் முடிசூட்டுவிழாவாகவும் இராவணனைக் கொன்ற நாளாகவும் இராமன் மீண்டும் அயோத்திக்கு வருகைதந்த நாளாகவும் கருதிக் கொண்டாடுவர். தமிழ்நாட்டில் கண்ணபிரான் நரகாசூரனை பூமாதேவியினூடாக வதைத்த நாளாகக் கொண்டாடுவர். இதனை கருப்புச்சட்டைக்காரர்கள் திராவிடனை ஆரியன் கொன்ற நாளென்று மோட்டுத்தனத்தில் உழறுவர்!

கருப்புக் கண்ணன்  ஆரியனாக இருக்க வாய்ப்பேயில்லை என்ற பொதுவறிவுகூட இல்லாத மோட்டுத்தனத்துள் மூழ்கியுள்ளது கருப்புச்சட்டை அரசியல்! வடநாட்டில் பிறந்தவரெல்லாம் ஆரியர் என்றால் சிந்துநதிப்பள்ளத்தாக்கில் வாழ்த்தவர் தமிழர் என்று சொல்வதில் என்ன நீதி? இன்றும் வடநாடெங்கும் ஆதிகுடிமக்களின் மொழி திராவிடமொழிக்குடும்பத்தை சார்ந்ததாகவே உள்ளதென்ற நீதியை எங்கனம் மறைக்கமுடியும்? ஆக; கருப்புச்சட்டை அணிந்து கருப்பனையே கேவலப்படுத்துகின்ற இழிவான அரசியல் செய்வதிலும் பார்க்க அம்மணமாக நிற்கலாம்!!!

அது சரி....தீபாவளிக்கும் பெண்ணியத்துக்கும் என்ன சம்பந்தம்?

தீபாவளிக்கு கண்ணபிரான் கதையை பிரபல்யப்படுத்தியது ஒருவகையில் இந்த கருப்புச்சட்டைக்காரர்தான்! ஆரிய-திராவிட அரசியலுக்கு உதவும் என்பதால்த்தான் அப்படியொரு பிரபல்யத்தை கண்ணபிரான் கதைக்குக் கொடுத்தனர்!!! தமிழர் அறிவற்றவர் என்றனர்! நமக்கும் ஐயம் ஏற்படலாயிற்று!!!




சிவபெருமானின் இடப்பாகத்தை உமையம்மை பெற்ற திருநாளே தீபாவளித்திருநாள்!!! இவ்வண்ணமே பண்டுதொட்டு தமிழர் கொண்டாடினர்! பெண்ணியத்தின் பெருமை பேசும்படியான நற்திருநாளாக தீபாவளியைத் தமிழர் கொண்டாடினர் என்ற வரலாற்றையே தமிழர் மறக்கலாயிற்றனர்! தமிழருக்கு மறக்கச்சொல்லிக்கொடுக்க வேண்டுமா என்ன?

பெண்ணியம் என்றவுடன் இன்னொரு செய்தி !!!


நேற்று சின்னத்திரை நாடகம் ஒன்றை எதேற்சையாக பார்க்க வேண்டியேற்பட்டது! பல பெண்கள் தொலைக்காட்சிப்பெட்டியைச் சூழ இருந்து "அவள் படுபாவி" என்றெல்லாம் கடிந்துகொட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தனர்! ஒரு காட்சியில் நடிகை "பெண்களுக்கு எங்கு சுதந்திரம் உண்டு" என்று கூற நம் பெண்களும் உண்மைதான் என்று தலையாட்டினர்!!! நாட்டில் நடக்கும் செய்தியைக்கூட கேட்காது நாடகத்திற்காய் தொலைக்காட்சிப்பெட்டிக்குள் மூழ்கியிருந்தால் எப்படி பெண்களுக்கு சமவுரிமையும் சுதந்திரமும் கிடைக்கும்? சின்னத்திரைக்குள் வீழ்ந்திருப்பவர்கள் சிந்திக்க!!!

எல்லோருக்கும் தீவாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!
மாதொருபாகனின் திருவருள் எல்லோருக்கும் வாய்ப்பதாகுக!

மேலும் படிக்க...

Friday, September 14, 2012

அன்புடைய சீரடிபாபா பக்தர்களே.........

அன்புடைய சீரடிபாபா பக்தர்களே.........இப்பதிவு உங்களுக்குரியது! இப்பதிவால் மனம் நொந்தால் மன்னித்துவிடுக! ஒருசில சீரடிபாபாவின் பக்தர்களின் செயற்பாடுகளாலும் இலங்கையில் அவர்கள் அமைப்பின் செயற்பாட்டினாலும் எழுதப்படும் பதிவு!  அனைத்து சீரடிபாபா பக்தர்களையும் இப்பதிவு சுட்டமுனையவில்லை!

அண்மையில் முகநூலில் பலர் பகிர்ந்துகொண்ட ஒரு படம் பல சைவர்களின் மனதைப் புண்படுத்தியமையால் புண்பட்டவர்களின் சார்பில் இப்பதிவை எழுதுகின்றேன்.

குறித்த படம் தஞ்சைப்பெருங்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் எம்பெருமான் பெருவுடையாரின் படமாகும்!!! அட...பெருவுடையாரின் படத்தைப்பார்த்தால் சிவானந்தம்தானே பெருக வேண்டும்? மனம் புண்படக்காரணம் என்ன?

பெருவுடையாருக்கு அந்தணர்கள் பால் அபிடேகம் செய்யும் அருமையான படம்தான்! ஆனால் பெருவுடையாரின் இலிங்கத்திருமேனியில் சீரடிசாய்பாவாவின் படம் கணிணித்தொழில்நுட்பத்தின் உதவியுடன் வரையப்பட்டிருந்தது. அதாவது தஞ்சை பெருவுடையாரில் சீரடிசாய்பாபா காட்சியளிப்பதுபோல் குறித்தபடம் அமைந்திருந்தது.

இது எவ்வளவு அறிவீனமான செயல்!!! தமிழரின் மாண்புக்கும் சமய சால்புக்கும் இழுக்குத்தரும் செயல்!!!!

ஏன் குறித்தபடம் சைவமாண்புக்கு பங்கமானது?

சீரடிசாய்பாபா என்பவர் பிறப்பு இறப்பு என்னும் மனித இலக்கணத்துக்கு உட்பட்டவர்! அவரை மகானாக கருதுவதில் தவறில்லை......காரணம் ஆன்மீகத்தில் உயர்ந்தவர்களை மகான்களாக கருதுவது முறையானதே!

பிறப்பு-இறப்பு என்பது யாருக்கு அமையும்? சைவசமயத்தின்படி, வினையினால் பீடிக்கப்பட்டவர்களுக்கே பிறப்பு-இறப்பு உண்டு!!!!

திருமால் பிருங்கிமுனிவரின் மனைவிமேல் கொண்ட மையல் காரணமாக பிருங்கிமுனிவரிடமிருந்து
பெற்ற சாபத்தின் விளைவால் பலபிறவிகள் எடுக்கவேண்டியேற்பட , சிவபெருமானிடம் சென்று யாதுசெய்வதென்று வேண்டிநின்றார். அப்போது சிவபெருமான் "உலகத்தில் அதர்மங்கள் ஓங்கும்போது அவற்றை நீக்கி தர்மத்தை நிலைநாட்டிட பத்துமுறை பிறப்பாயாக" என்று பிருங்கிமுனிவரின் சாபத்தை திருமாலுக்கு பெருமைசேர்க்கும் வகையில் அமைத்துக்கொடுக்கின்றார். இச்செய்தியை சைவசித்தாந்த சாத்திரநூல் கூறுகின்றது! ! அதாவது பிறப்பு என்பது வினையினால் வருவது!

பத்துமாதங்கள் கருவாசம் என்பது எவ்வளவு இடர்பாடுடையது என்பதை திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தெளிவாக உரைத்துள்ளார்!

"யானை முதலா எறும்பீ றாய
ஊனமி லியோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்
தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்

இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்

மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் நூறலர் பிழைத்தும்

ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்

எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படுந்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
" -திருவாசகம் (போற்றித் திருவகவல்)

பிறவிப் பெருங்கடல் - திருக்குறள்

ஆக தமிழரின் பொதுமறையாகிய திருக்குறளில் திருவள்ளுவர்கூட பிறவியை "பெருங்கடல்" என்று துன்பத்தோடுதான் ஒப்பிடுகின்றார்!

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை - திருக்குறள்

ஒருவன் ஒன்றை விரும்புவதானால், பிறவா நிலையை விரும்ப வேண்டும் என்று பிறத்தலை துன்பத்தோடுதான் ஒப்பிடுகின்றார். வினையின் பயன் என்றே சொல்கின்றார்.

சில குழந்தைகள் பிறந்தவுடனேயே இறப்பது ஏன்? கருவாசத்தில் படுகின்ற துன்பமளவுதான் அவர்களது வினை இருந்துள்ளது என்பதே அதற்கான விடை! இதை மகாபாரதத்தில் பிறந்தவுடனேயே கங்கையில் வீசப்பட்டு இறக்கின்ற சந்தனு மன்னனுடையதும் கங்காதேவியினுடையதுமான ஏழு குழந்தைகளின் கதை உணர்த்துகின்றது! அதாவது வசிட்டரின் காமதேனுவை அபகரிக்க சென்ற அட்டவசுக்கள் என்னும் எட்டுத்திசைக்காவலர்களுக்கும் வசிட்டமாமுனிவர் வழங்கிய சாபத்தினால் அவர்கள் கருவாசம் கொண்டு உடனேயே இறக்க வேண்டியிருந்தது! எட்டாவது குழந்தையாகிய அட்டவசுக்களில் ஒருவராகிய பிரபாசன், காமதேனுவை கொள்ளையிட விருப்பிய தலைமை நபர் என்பதால் பூமியில் தொடர்ந்து மீஷ்மராக வாழ்ந்து அவருக்குரிய வினையை போக்கவேண்டியிருந்தது! மீஷ்மராக நாம் காணும் நபர் மிகப்பெரும் மேதையாக, ஞானியாக மகாபாரதத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பினும் அவருடைய பிறப்புக்கு காரணமான வினை கொடூரமானது!

ஆக; இன்று நாம் ஞானிகளாகவும் மகான்களாகவும் போற்றுபவர்கள் அனைவரும் ஏதோவொரு வினையின் விளைவால் பூமிக்கு வந்தவர்களே! மகாபாரதத்தில் பீஷ்மர் போற்றப்படுவதுபோல் நாமும் அவர்களை மகான்களாக போற்றுவதில் குறையில்லை!

 பிறப்பு-இறப்பு என்னும் வலைக்குள் அகப்பட்ட அனைவரும் ஆன்மாக்களே! கடவுளர்கள் அல்ல! அவர்களால் எமக்கு பாவவிமோசனமும் தரமுடியாது! முக்தியும் தரமுடியாது! சிறந்த மகான்களை முன்னுதாரணமாக கொண்டு வாழ்க்கையை அமைப்பதுமட்டுமே அவர்களிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரேயொரு பயன்!!!

ஆனால் இன்று? சீரடிபாபாவை கடவுளாக சிலர் வணங்குகின்றனர்!!! சரி; அது அவரவர் மனித உரிமை! அதில் குறைகாண்பது தேவையற்ற ஒன்று!
ஆனால் பிறப்பு-இறப்பு என்னும் இயற்கை நியதிக்கு உட்பட்ட சீரடி சாயிபாபாவை, அனைத்து விதிகளையும் கடந்த கடவுள் என்னும் தமிழரின் சொல்லுக்கு பண்டுதொட்டு பொருளாக விளங்குகின்ற பிறப்பு- இறப்பற்ற சிவபெருமானுடன் ஒப்பிடுவது முறையானதா? சைவர்களின் மனதை நோகடிக்காதா?

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே - திருமந்திரம்

பதவுரை:-
சிவபெருமான் என்றும் பிறப்பில்லாதவன். பின்னற் சடையினையுடையவன். அளவிடப்படாத பேரருளாளன். என்றும் அழிவிலாதவன். யாவர்க்கும் குறைவிலா நிறையின்பம் அருளி அவரை விட்டு நீங்காதவன். அவனைத் தொழுங்கள். அங்ஙனம் தொழுதால் அவன் உங்களை ஒருபோதும் மறவான். மாயைக்கு மறுதலையாகிய இயற்கைப் பேரறிவினன்.
(நன்றி:-http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=118&pno=12)

சிவனொடொக்குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை - திருமந்திரம்

உங்களைப்போன்றவர்கள் யாரேனும் ஒருவரை நாளை சிவபெருமானோடு ஒப்பிடுவர் என்பதை உணர்ந்துதான் திருமூலர் சிவபெருமானோடு ஒப்பிடக்கூடிய ஒருவரோ அவருக்கு இணையான ஒருவரோ எங்கனும் இல்லை என்று அறிவுறித்தியுள்ளார்.

ஆக; சிவபெருமான் பிறப்பு இறப்பு அற்றவர் என்று திருமந்திரம் கொடுத்துள்ள இலக்கணத்தை படித்ததேயில்லையா?
சிவபெருமானோடு யாரையும் ஒப்பிடக்கூடாது என்று திருமந்திரம் சொல்லியுள்ளதை கண்டதேயில்லையா? கண்ணிருந்தும் குருடர்களாக இருப்பது எவ்வளவு அறிவீனம்!

தமிழில் இருப்பதை தமிழரே அறியாவிட்டால் தமிழரின் மாண்பை யார்தான் காப்பது?

இலங்கையில்  கொழும்பில் உள்ள ஆலயம் ஒன்றில் சீரடிசாய்பாபாவுக்கு சிலைவைத்து வழிபாடு நடைபெறுகின்றது! நாளை நித்தியானந்தாவின் பக்தர்கள் அவருக்கும் ஆலயத்துள் சிலைவைத்து வழிபட உரிமைகேட்டால் எங்கள் சமயத்தின் நிலை எவ்வளவு தாழ்ந்துவிடும்???







எனக்கு என்னுடைய தாய்-தந்தையரை கடவுளாகக் கருத உரிமையுண்டு! அதற்காக, ஆலயத்தில் என் தாய்-தந்தையருக்கும் சிலை வைத்து வழிபட நான் விரும்பினால் எல்லோரும் தங்கள் தங்கள் தாய்-தந்தையருக்கும் சிலைவைத்து வழிபட உரிமைகேட்டு வந்துநிற்பர் அல்லவா?
ஆக; நான் கடவுளாகக் கருதும் என் பெற்றோருக்கு ஆலயத்துள் சிலைவைத்து வழிபாடு நடத்தினால்
எப்படிப்பட்ட இழிநிலை எங்கள் சமயமரபுக்கு ஏற்படும்?

ஆக; குஷ்பூவுக்கும் கோயில்கட்டினார்கள்! யார் இடைஞ்சல் செய்தது! அதுபோல் அவரவர் தாம்விரும்பும் நபருக்கு தனிக்கோயிலை தமது சொந்த இடத்தில் கட்டிக்கொள்வதில் எவருக்கும் தலையிடியில்லை!
ஆனால் சைவாலயத்துக்குள் குஷ்பூவுக்கு சிலைவத்தால்? வைக்ககூடாது என்று எப்படி வாதிடமுடியும்? அவரையும் சிலர் கடவுளாகக் கருதலாம்தானே? அது அவர்களின் தனிப்பட்ட உரிமைதானே?

ஆக; ஒன்றுக்கு வழிவிட்டால் எல்லாவற்றுக்கும் வழிவிடவேண்டிவரும்! சைவம் சீர்கெட்டு தமிழர் மரபு சிதைந்துதான் போகும்!!!!
பணபலத்தால் எதையும் சாதிக்கலாம் என்று வந்துவிட்ட கலிகாலம் இக்காலம் என்பதால் பணபலம் உள்ளோர் சாதிக்கின்றனர்!!!! அவ்வளவுதான்!

நல்லூர் தேரடியிலிருந்து அற்புதங்கள் பலசெய்த யோகர் சுவாமிகளுக்கு நல்லூர் உட்பட சைவாலயங்கள் எங்குமே சிலையில்லை!!! காரணம் பணபலம் யோகர்சுவாமி மடத்திற்கு உண்டு! இத்தனைக்கும் அவரொரு சிவனடியார்! சைவசமயி! சிவனடியார் வழிபாடு சிவமுக்தி தரும் என்று சைவநெறி உரைக்கின்றது!  ஆனால் நாயன்மார்களைத் தவிர வேறு எவருக்கும் சிவாலயத்துள் சிலைவைப்பதில்லை என்ற மரபுகாரணமாகவே அவருக்கு இன்றுவரை சிலை எழுப்ப யாரும் முனையவில்லை!
பிரபல்ய ஆசையும் சைவசமயநிந்தையும் யோகர்சுவாமி பக்தர்களுக்கு இல்லை!!!! கடவுள் சிவபெருமான் ஒருவரே என்ற சைவசிந்தை அவர்களிடம் உண்டு! முக்தியையும் சித்தியையும் வினைகளில் இருந்து விடுதலையையும் சிவபெருமான் ஒருவராலேயே வழங்கமுடியும் என்ற தெளிவும் உண்டு!

எனக்கு ஒன்றுமட்டும் தெரியவேயில்லை......தமிழகத்தில் எத்தனையோ சித்தர்களும் மகான்களும் வாழ்ந்துள்ளனர்! அனைவரும் மகான்களாகவும் சித்தர்களாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர்! ஆனால் தமிழகத்திற்கு அப்பால் பிறந்து மகான்களாக மிளர்ந்தவர்கள் கடவுள்களாய் வடிவம் கொள்கின்றனர்! அது எப்படி அவர்கள் மட்டும் கடவுள்கள் ஆகுகின்றனர்?

இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்ற பழமொழி நினைவுக்கு வருகின்றது!!!! அமெரிக்கனுக்கு அமெரிக்க சுதந்திரதேவிச்சிலையின் அருமை தெரியாது என்பார்கள்! உண்மைதான்! நம்மவர்களுக்கு நம் சமயம் எது? நம் மாண்பு எத்தகையது? எதுவுமே தெரியாதே!!!!



ஆக; பிறப்பு இறப்பு என்று வலைக்குள் அகப்பட்ட எவரையுமே சிவபெருமானுடன் ஒப்பிடுதல் பாவமாகும்! சைவசமயத்தை நிந்தித்த விசமச்செயலாகும்! சீரடிசாய்பாபா என்பவர் சைவசமயி அல்லர்! எனவே அவரை கடவுளாக கருதுபவர்கள் சைவசமயிகளாய் இருப்பது முரணாகும்! எனவே சைவசமயத்தைச்சாராதோர் சைவசமயக்கடவுளாகிய சிவபெருமானோடு , அதுவும் தமிழரின் மாண்பின் வடிவமாக விளங்கும் தஞ்சைப்பெருங்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருவுடையார் சிலையில் சீரடிசாய்பாபாவை வரைந்து கணிணியில் உலாவவிடுவதென்பது எவ்வளவு அநாகரீகமான செயலாகும்!!!

சீரடி சாய்பாபாவின் பக்தர்கள் அவரை சிவனாகவும் அல்லாவாகவும் யேசுவாகவும் யோகோவாவாகவும் கருதிட உரிமையுண்டு! ஆனால் இஸ்லாமியரின் மக்காவிலும் கிருஷ்தவர்களின் ஜெருசலேத்திலும் சைவர்களினது சைவக்கோயிலிலும் சீரடிபாபாவின் படத்தை வரைந்து சமூகத்தில் விநியோகிக்க எள்ளளவும் உரிமையில்லை!!! சீரடிபாபா இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்தானே? அவர் படத்தை மக்காவில் தெரிவதுபோல் வரைந்து பாருங்களேன்........முடியாது! ஏனெனில் சமயசண்டைகளை உருவாக்கிய குற்றத்தில் சிறைசெல்வீர்கள்!
ஆனால் சைவசமயம் அன்பே சிவம் என்பதாலும்
சிவஞானமே சைவரின்வழி என்பதாலும் உங்களின் அநாகரீகச்செயல்களுக்கு அமைதியாய் இருக்கின்றது!

 
சைவக்கோயிலுக்குள் அதுவும் தமிழரின் மாண்பின் வடிவமாக விளங்கும் சோழநாட்டின் சரித்திரமாக காட்சியளிக்கும் தஞ்சைப்பெருங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருவுடையாரில் நீங்கள் பிறப்பு-இறப்புக்கு அகப்பட்ட ஒருவரின் படத்தை கணிணித்தொழில்நுட்பத்தால் புகுத்தியிருப்பது நீங்கள் எவ்வளவு இழிவான தரம்தாழ்ந்த நிலையில் உள்ளீர்கள் என்பதை சைவ உலகிற்கு காட்டியிருக்கின்றது!

எளியேனின் விண்ணப்பம் யாதாயின்;

உங்கள் ஆன்மீக வியாபாரத்தை கச்சிதமாக காசுபார்க்க நடத்துங்கள்! அரசியல்-பணபலம் எதுவுமற்ற சிவஞானம் ஒன்றையே சொத்தாகக்கொண்டுள்ள
சைவசமயத்தை சிதைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

உங்களின் வழிப்பாட்டு விருப்பம் எதுவாகவும் இருக்கலாம் ! ஆனால் ஏனையவர்களின் மனங்களை நோகடிக்காது உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்!
யாதொரு தெய்வம் கொண்டீர்
அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம்
வருவர் மற்றத்தெய்வங்கள்

வேதனைப் படும் இறக்கும்
பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலான் இவைஇ லாதான்
அறிந்துஅருள் செய்வன் அன்றே!
-
சிவஞானசித்தியார் (சைவசித்தாந்த சாத்திரநூல்)


பதவுரை:-
எந்தத் தெய்வத்தை வணங்கினும் மாதொருபாகனாகிய சிவனே வந்து அருள்செய்வான்.
பிறதெய்வங்கள் யாவும் உயிர்களே! ஆகையால் அவைகள் வினைகள் செய்யும்.இன்ப துன்பம் அனுபவிக்கும்.இறக்கும்.பிறக்கும்.ஆனால் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இக்குறைபாடுகள் இல்லையாதலால், செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக் கொடுக்கவல்லவன் ஆவனே ஆவான்.


"சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது சால
உயர்சிவ ஞானத் தாலே
போழ் இள மதியினானைப்
போற்றுவார் அருள்பெற் றாரே" -சிவஞானசித்தியார் (சைவசித்தாந்த சாத்திரநூல்)
மேலும் படிக்க...