"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, December 21, 2011

சைவசித்தாந்தமும் சங்கரர் அத்வைதமும் -சைவ சித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் - 7

பாரதசமய பண்பாடு என்பது சமய ஆராய்வுகளால் எழுப்பப்பட்டது. வெறுமனே ஒருவர் தோன்றி இதுதான் சமயம்,இதுதான் கடவுள்,இதுதான் சமயநூல்,இதுதான் கடவுளுக்கும் உயிருக்குமான தொடர்ப்பு என்று ஆணையிடப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டது பாரதசமயப் பண்பாட்டு அல்ல! அது பாரதசமயப் பண்பாட்டுக்கு முரணானது!

விஞ்ஞானிகள் ஆராய்வுகளை மேற்கொண்டு கருதுகோள்களை வெளிப்படுத்தி பரிசோதித்து பார்ப்பதுபோல், பாரதசமயப் பண்பாட்டு மெஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் என்ன தொடர்பு என்பதை தமது அனுபவ உணர்வுகள் வாயிலாக ஆராய்ந்து தத்துவநூல்களுடாக மானிடருக்கு வெளிப்படுத்தினர்.

விஞ்ஞானிகளிடம் பல கருதுகோள்கள் எழுவதுபோல் ஒவ்வொருவரும் தமது மெஞ்ஞான சித்திக்கு அமைவாக தமது அனுபவ உணர்வுகளை வெளிப்படுத்தினர். அவற்றை அவர்களுடைய சீடர்கள் மேலும் மேலும் அனுபவ வாயிலாக உணர்ந்து மெருகூட்டினார்கள். இப்படி வளர்ந்ததுதான் பாரதப்பண்பாட்டு சமயத்தத்துவங்கள்.

முன்னைய பகுதிகள்:-
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 1
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 2
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 3
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 4
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 5
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 6


இந்த சமயதத்துவ ஆய்வில் வெளிப்பட்டவையே அத்துவிதம்,துவைதம் என்பனவாம். இதில் அத்துவித தத்துவத்தை அதிகமாக பலர் அனுபவ உணர்வுகளுடாக பலஞானிகள் தமது ஞானசித்திக்கு அமைவாக கண்டறிந்து வெளிப்படுத்தினர். அவையாவன;

சங்கரரின் அத்துவிதம்
விஷிட்டாத்துவிதம்
மெய்கண்டார் அத்துவிதம்

துவைதம்,சங்கரரின் அத்வைதம்,விஷிட்டாத்வைதம் ஆகியவற்றை வேதாந்தம் என்பர். பிரம்மசூத்திரத்துக்கு விளக்கவுரை வழங்குவதனாலேயே வேதாந்தம் என்று கூறுவர். மெய்கண்டாரின் அத்வைதம் சைவசித்தாந்தம்  என்று போற்றப்படும். தென்னாட்டுச் சைவசமயத்தின் சால்பாக சைவசித்தாந்தம் விளங்குகின்றது.

சங்கரரின் அத்துவிதம் ஏகன்மவாதத்தை கொண்டது. அதாவது கடவுளும் ஆன்மாவும் ஒன்றே எனும் கருத்தை வலியுறுத்துவது. விஷிட்டாத்வைதம் ஆன்மா கடவுளிடம் இருந்து வெளிப்பட்டது என்கின்றது.

மெய்கண்டார், நாயன்மார்களால் இலைமறை காயாக சைவசமய திருமுறைகளில் சொல்லப்பட்ட அத்துவிதத்தை அகச்சந்தானகுரவராகிய சத்தியஞானதரிசினிகள் வாயிலாக தெளிவுற்று, அதனை வளர்ப்பதற்கு சிவஞானபோதம் என்னும் சைவசித்தாந்த தமிழாகமநூல் எழுதி குருபரம்பரையை நிறுவினார். இதன் காரணமாக சைவசித்தாந்த அத்துவிதத்தை மெய்கண்டார் அத்துவிதம் என்றும் அழைப்பர்.

சங்கரர், இராமனுசர் போன்றோரின் அத்துவிதக் கருத்துகளில் இருந்து முரண்பட்டு அத்துவிதத்திற்கு சைவத்திருமுறைகளில் காணபட்ட அருமையான விளக்கத்தை உணர்ந்து மெய்கண்டார் சிவஞானபோதமாக வெளிப்படுத்தினார். அதுவே சைவசித்தாந்த அத்துவிதமாகும்.

உலகம்,ஆன்மா ஆகியவை யாவுமே பிரம்மம் என்றால் பிரம்மத்தினை ஆன்மாவாகும் உலகமாகவும் ஆக்கியது எது என்னும் கேள்விக்கு சங்ரரின் அத்வைதம் மாயை என்கின்றது. அப்படியானால் மாயையால் பாதிக்கப்படக்கூடிய பிரம்மம் முழுமுதற்தன்மை உடையதல்ல என்பது உறுதியாகின்றது. குறையுடைய பொருள் என்று ஆகிவிடுகின்றது.

பிரம்மத்தில் இருந்தே ஆன்மாக்கள் வந்தன என்றால் முக்தி என்பது (பிரம்மத்துடன் சேருவது) நிலையற்றதாகின்றது. நிலையற்றதான முக்தியை நாடவேண்டிய அவசியம் என்ன?

ஆக; இவ்வாறான முரண்பாடுகளை.....ஐயங்களை அகற்றும்படி அத்துவிதத்துக்கு சைவசித்தாந்தம் அழகாக விளக்கம் அளிக்கின்றது.

இறைவன் ஆன்மாவுடன் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்கின்றான் என்பது சைவசித்தாந்த கொள்கையாகும்.
அதாவது சைவசித்தாந்தம் என்பது முப்பொருள் உண்மையை வலியுறுத்துகின்றது. பதி(இறைவன்),பசு(ஆன்மாக்கள்),பாசம்(மும்மலங்கள்-ஆணவம்-கன்மம்-மாயை).ஆன்மாக்கள் தொன்றுதொட்டு இருப்பவையாகும். யாராலும் தோற்றுவிக்கப்படாதவை. ஆணவமலத்துள் கட்டுண்டு இருக்கும் ஆன்மாக்களை ஆணவமலத்திலிருந்து விடுவித்து முக்தி அளிப்பதற்காக இறைவன் தனு,கரண,புவன போகங்களைப் படைத்து அவற்றை ஆன்மாக்கள் அனுபவிக்கச் செய்து பக்குவப்படவைத்து மும்மலங்களையும் அறுத்து வீடுபேற்றை நல்குகின்றான் என்கிறது சைவசித்தாந்தம். வீடுபேற்றை பெற்ற ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுப்பதில்லை.ஆக; நிலையான முக்தி!

ஆணவமலத்துள் கட்டுப்பட்டுள்ள ஆன்மா இறைவனை அடையும் வரை தானே இயங்கும் என்று சொன்னால் அது இறைவனின் முழுமுதற்தன்மைக்கு இழுக்கு! தானே யாவற்றையும் அறியும் என்று சொன்னால் அதுவும் இறைவனின் முழுமுதற்தன்மைக்கு இழுக்கு ஆகிவிடுகின்றது! தானே இயங்கும்.....தானே அறியும் அறிவுடையது என்றால் இறைவன் எதற்கு? அவை கடவுளை அண்டியிருக்க வேண்டிய தேவையில்லையே!!!!

தானோ இயங்கும் தானே சிந்திக்கும் எந்திர மனிதர்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயலுவது பற்றியும் அதனது விபரிதங்கள் பற்றியும் இன்று பரவலாக பேசப்படுகின்றது. மனிதனுக்கு சவாலாக இத்தகைய எந்திர மனிதர் அமைந்துவிடுவர் என்பதே மிகப்பெரிய விபரீதமாக பேசப்படுகின்றது. அதுபோல் இயக்கத்துக்கும் அறிவுக்கும் இறைவனிடத்தில் ஆன்மா தங்கியில்லை என்றால் அது இறைவனின் முழுமுதற்தன்மைக்கு இழுக்காகவே அமையும்!

எனவே சைவசித்தாந்தம் உயிர்கள் தானே அறியும் ஆற்றல் அற்றவை என்றும் இறைவன் அறிவிக்க அறிவன என்றும் கூறுகின்றது. அதுபோலவே இறைவன் உயிர்களோடு உடனாக இருந்து இயக்குகிறான் என்கிறது.கடவுள் உயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் உடனாகவும் இருந்து உயிர்களை இயக்குகின்றான்.உயிர்களுக்கு அறிவிக்கின்றான். உயிர்கள் இறைவன் அறிவிக்க இறைவனால் அறிந்து கொள்கின்றன.

கடவுளே தன்னில் இருந்து உயிர்களைப் படைத்தார் என்றால்,அவை மீண்டும் தன்னை வந்தடைய வேண்டும் என்று கருதுகின்றார் என்றால், எதற்காக உயிர்களைப் படைத்தார் என்கின்ற கேள்வி உருவாகின்றது?

ஆனால் இங்கு கடவுளோடு சேருவதே முக்தி ஆகையால்; தன்னோடு வந்து சேருவதற்காக உயிர்களைப் படைக்க வேண்டிய நோக்கம் ஏன் எழுந்தது?

எனவே உயிர்களும் அநாதியானவை என்கின்றது சைவசித்தாந்தம்!!!!

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அநாதி - திருமந்திரம்

அருளுடைய பரமென்றோ அன்று தானே யானுளன் - தாயுமானவர்


முக்தியில்; தன்னோடு நிலையாக இணைத்துக் கொண்டபோதும்; சீவனை சிவமாக்கியபோதும் சீவனால் சிவன்போல் ஐந்தொழில்கள் ஆற்ற முடியாது. சிவனோடு கலந்து சிவமாகி சிவானந்தத்தை நுகருமே ஒழிய; சிவன்போல் தொழில்கள் ஆற்ற முடியாது.

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே." -மாணிக்கவாசகர்


இப்பாடலை நெஞ்சுக்குள் நிறுத்தி உள்ளத்தால் உருகி படித்தால் இப்பாடலில் சூட்சுமமாக சொல்லப்பட்டுள்ள உண்மை புலனாகும்.

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை
-முக்திநெறி அறியாத மூர்க்கரோடு இருந்த என்னை என்பது பொருளாகும். அதாவது ஆணவமலத்துள் அழுத்தி கண்ணில்லாத தேனீபோல் தத்தளித்து துன்பப்பட்டுக்கொண்டிருந்த என்னை என்று பொருள் கொள்க.

பத்திநெறி அறிவித்துப் -பக்தி வழியைக் காட்டி -தனு,கரண,புவன போகங்களைப் படைத்தருளி அதனை அனுபவிக்கச் செய்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிதந்து பக்தி மார்க்கம் தந்து அதனூடாக

பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்து-பழைய வினைகள் எல்லாம் கெட்டொழியும்படி அறிவை பற்றியுள்ள மூலமலத்தை(ஆணவமலத்தை) போக்கி

சிவமாக்கி எனையாண்ட  - சிவமாக்கி என்னை ஆட்கொண்ட - சிவத்தன்மையாக்கி என்னை ஆட்கொண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார்  அச்சோவே - இறைவன் பெருங்கருணையினால் தானே வந்து தனக்கு அருளிய அத்தகைய அருமையை யார் தான் பெறுவர்! 

ஆணவமலத்துள் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த தன்னை அதிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இறைவன் ஆன்மாவாகிய தன்மீது கொண்ட பெருங்கருணையின் நிமித்தம் தன்னை தனு,கரண,புவன போகங்களை அனுபவிக்கச் செய்து பிறவிகள் தந்து அதனூடாக பக்குவப்படவைத்து இன்பம்-துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்கின்ற அருமையை ஏற்படவைத்து கன்மம்,மாயை ஆகியவற்றை உதரியபின் மூலமலமாகிய ஆணவமலத்தை தானே முன்வந்து நீக்கி சிவமாக்கி நிலையான பேரின்பத்தை தந்தருளிகின்றான் என்பதை சூட்சுமமாக இப்பாடலில் உணர்த்துகின்றார் மாணிக்கவாசகர்.

சிவமாக்கி என்னை ஆண்ட என்ற பதமும் அத்தன் எனக்கு அருளியவாறு என்கின்ற பதமும் நமக்கு தெளிவாக ஒருசெய்தியை உணர்த்துகின்றது. அது யாதாயின்; இறைவனே நமக்குள் இருக்கின்ற சிவத்தன்மையை உணரவைத்து(ஒன்றாய்,வேறாய்,உடனாய் ஆன்மாக்களோடு இறைவன் கலந்திருக்கின்ற தன்மையை) நமக்கு வீடுபேறு அருளி நிலையான முக்தியை தந்தருளிகின்றான் என்பதையாகும். 

வேதாந்த அத்வைதத்துக்கும்(கேவலாத்வைதம்) சைவசித்தாந்த (சுத்தாத்வைதம்) அத்வைதத்தும்மும் உள்ள வேறுபாடுதான் என்ன?

வேதாந்திகள் அத்வைதத்துக்கு சொல்லும் பொருள் இரண்டின்மை( இரண்டு இன்மை). சைவ சித்தாந்தம் அத்வைதத்துக்கு சொல்லும் பொருள் இரண்டன்மை ( இரண்டு அன்மை).

ஒன்றா காமல் இரண்டா காமல்
ஒன்று மிரண்டு மின்றா காமல் - இருபா இருபது


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல்த்துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் நா.ஞானகுமாரன், எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டுச் சிறப்பு வெளியீடாக வந்த தனது நயந்தரும் சைவசித்தாந்தம் என்னும் நூலில் இரண்டின்மை, இரண்டன்மை என்னும் சொற்களில் உள்ள வேறுபாட்டை குறள் கொண்டு அழகாக தெளிவுபடுத்துகிறார்.

பொருள் அல்லவற்றைப் பொருளெண்றுணரும்
மருளானா மாணப்பிறப்பு -திருக்குறள்

-"அல்ல என்பதன் வழி பொருளின் இன்மைத்தன்மை எடுத்தாளப்படவில்லை. இதற்குப் பதிலாக பிரிதொரு பொருளின் இருப்பு உள்ளீடாக ஏற்கப்படுவதாகின்றது"

பொருள் இல்லை என்றால் இன்மையை வெளிப்படுத்துகின்றது. பொருள் அல்ல என்றால் அது மறைமுகமாக இன்னொரு பொருள் இருப்பதை வெளிப்படுத்துகின்றது.

நன்கொடை வாங்கும்போது "பொருள் அல்லது பணமாக தாருங்கள்" என்பர்! இது பொருள் இல்லை பணமாக தாருங்கள் என்று சொற்றொடர் அமைக்க முடியாது. ஏனெனில் இல்லை என்பது இன்னொரு பொருளை மறைமுகமாக சுட்டாது.  ஆனால் அல்ல என்பது இன்னொரு பொருளை மறைமுகமாக சுட்டும்.

எனவே இரண்டின்மை என்பது ஒன்றுதான் என்பதை சுட்டுகின்றது. ஆனால் இரண்டன்மை என்பது "ஒன்றுமல்ல;இரண்டும் அல்ல!" என்பதை சுட்டுகின்றது.

வேதத்தில் ஏகமேவ அத்துவதீயம் பிரமம் என்னும் அடியில் ஏகம்,அத்வைதம் என்னும் இரு சொற்களும் ஒன்று என்பதாகாது என்பதை சித்தாந்தம் தெளிவுபடுத்துகின்றது. ஏகம் என்பது ஒன்றென்பதையும் அத்வைதம் என்பது இரண்டல்ல என்பதையும் சுட்டுகின்றது என்று சித்தாந்தம் தெளிவுபடுத்துகின்றது.

இரண்டன்மை நிலை என்றால் என்ன?


கலப்பினால் ஒன்றாயும் பொருள் தன்மையால் வேறாயும் செயல்படுதன்மையில் உடனாயும் இறைவன் ஆன்மாவுடன் இருக்கும் தன்மையே அத்துவிதம் என்று சைவசித்தாந்தம் கண்டது. அதாவது ஒன்றும் அல்ல! இரண்டும் அல்ல! இப்படி இருக்கும் தன்மையே உண்மையான அத்துவிதத்தின் பொருள் என்று தெளிவுபடுத்தி விளக்குவதே சைவசித்தாந்தம்.

வேதாந்திகள் தத்துவம் அசி -அதுவே நீ என்கின்றனர். ஆனால் சைவசித்தாந்தம் "நீ அதுவாக வேண்டும்" என்று தத்துவம் அசி என்னும் மகாவாக்கியத்துக்கு பொருளுரைக்கின்றது. 

பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம் - அண்ணல்தாள்
அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்றென்னா
தத்துவிதம் என்றறையும் ஆங்கு -சிவஞானபோதம்


"பண்ணும் ஓசையும் போலவும் பழமுஞ் சுவையும் போலவும் இறைவன் எங்கும் கலந்திருக்கின்றான். இத்தன்மையை மறைகள் ஒன்றுமல்ல இரண்டுமல்ல அத்துவிதம் என்கின்றன" என்கின்றது சிவஞானபோதம்

சரி; ஆன்மாவோடு இறைவன் ஒன்றாய்,வேறாய்,உடனாய் கலந்துள்ளான் என்கிறதே சைவசித்தாந்தம்....அது என்ன? சற்று விரிவாக பார்ப்போம்!

ஒன்றாய்,வேறாய்,உடனாய் இறைவன் ஆன்மாவோடு இருக்கும் தன்மையை திருஞானசம்பந்தர் அழகாய் தெளிவுபடுத்துகின்றார்.

ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை யைந்தாய்
ஆறார்சுவை யேழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே.


பொழிப்புரை :
ஊழிக் காலத்தில் அனைத்தையும் ஒடுக்குவோனாய், ஒடுங்கிய உடலைத் தானொருவனே முதற்பொருளாய் நின்று தோற்றுவிப்பவனாய், சக்தி சிவம் என இருவகைப்பட்டவனாய், முக்குண வடிவினனாய், எக்காலத்தும் மாறுபடாத நான்மறை வடிவினனாய், ஐம்பெரும்பூதங்கள், ஆறுசுவை, ஏழு ஓசை, எட்டுத்திசை ஆகியவற்றில் நிறைந்தவனாய், உயிரோடு ஒன்றாகியும், வேறாகியும், உடனாகியும் விளங்கும் இறைவனது இடம் திருவீழிமிழலை.
நன்றி:-http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1011

ஒன்றாய் - உடலும் உயிரும் கலந்து இருப்பதுபோல் ஒன்றாய் - (கலப்புத்தன்மையில்)

வேறாய் -  உடலும் உயிரும் பொருட்தன்மையில் வேறுவேறுபோல்; பொருட்தன்மையில் கண்ணொளியும் சூரிய ஒளியும் வேறுவேறுபோல் - (பொருட்தன்மையில்)

உடனாய் - கண்ணொளியும் ஆன்மபோதமும் போல்- (இயங்குதன்மையில்)

              "சிவனருளாலே சிவன் தாள் வணங்கி" - மாணிக்கவாசகர்
                            விளக்கொளி பொருளைக் காட்டினாலும் கண்ணொளி அதைக் கண்டுவிடாது காணும்போது உயிரறிவும் உடன்நின்று காணுதல் வேண்டும்.  அதாவது தெருவில் யாரேனும் தெரிந்தவர் நம் எதிரே வந்துகொண்டு இருப்பர். ஆனால் நமது சிந்தனை ஓட்டம் வேறு எங்கோ இருக்கும். ஆனால் நாம் நடந்துகொண்டிருப்போம். வந்தவர் "என்னப்பா எதிரே வருகிறன்...தெரியாமல் மாதிரி போகிறியே!" என்பார். இது கண்ணில் விழுந்த காட்சியை உயிரறிவு பெற்றுக் கொள்ளாமையினால் வந்ததாகும். உயிரறிவு கண்ணொளியுடன் உடனாக செயற்படாமையால் வந்ததாகும்.

ஆக; இறைவன் ஆன்மாவோடு என்றுமே பிரிக்கப்படாதவராக; ஆன்மாவுடன் ஒன்றாய்,வேறாய்,உடனாய் அத்துவிதமாய் இருப்பார்.
முக்தி நிலையிலும் சரி; முக்திக்கு முன்னரும் சரி இந்தநிலையில் மாற்றமில்லை!!!

எனக்குள்நீ என்றும் இயற்கையாப் பின்னும்
உனக்குள்நான் என்ற உறுதிகொள்வ தெந்நாளோ - தாயுமானவர்


    (பொ - ள்.) (ஆருயிர்கள் கட்டு நிலையில் இருவினைத் தொழில்களை ஈட்டலுந்துய்த்தலும் செய்து கட்டறுத்தற்பொருட்டு முதல்வன் அவ்வுயிர்களினுள் மறைந்து நின்றருள்வன்) அம் முறையில் (ஆருயிர்கள்) எனக்குள் நீயென்று நிற்கும் இயற்கைபோல் (ஒட்டு நிலையில் திருவடித்துய்ப்பின் பொருட்டு அவ்வுயிர்களைத் தன்னுள்ளடக்கித் தான் முன்னருள்வன் சிவன்) ஒட்டு நிலையில் உனக்குள் நான் என்ற உறுதிகொள்வ தெந்நாளோ?

இப்படி இறைவன் ஆன்மாவின் பொருட்டு; ஆன்மாவோடு ஒன்றாய்,வேறாய்,உடனாய் புணர்ந்திருக்கும் புணர்ப்பே இரண்டன்மை ஆகும்.

சைவசித்தாந்தம் கூறும் அத்துவித விளக்கமாகிய இரண்டன்மையே உண்மையான அத்துவிதபொருள் என்பதை எப்படித் துணியலாம்?

வேதாந்தத் தெளிவாம் சைவ
சித்தாந்தத் திறன்இங்குத் தெரிக்கலுற்றாம்.- சிவப்பிரகாசம்


வேதத்தின் முடிவிற் தெளிவாகியுள்ள சைவசித்தாந்தம் - மதுரை சிவப்பிரகாசர்
வேதத்தின் முடிவிலே சொல்லப்பட்ட தெளிவான சைவசித்தாந்தம் - சிறி சிதம்பரநாதமுனிவர்
பதி,பசு,பாசம் என்னும் முப்பொருள்களைப் பிரதிபலிக்கும் வேதாந்தத்தின் தெளிவுப் போதமாகிய சைவசித்தாந்தம் - காசிவாசி செந்திநாதையர்
வேதாந்தத்தைத் தெளிந்து உரைக்கும் சைவசித்தாந்தம் - திருவிளங்கம் அவர்கள்
இவ்வாறு சமய அறிஞர் வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் என்பதற்கு பொருள்காண்கின்றனர்.

வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ் செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே -திருமந்திரம்

பொழிப்புரை :
வேதத்தின் முடிந்த பொருள் இன்னது எனத் தெளிவாக விளங்குவதாகிய சித்தாந்த சைவத்தில் நின்று, நாத முடிவான தத்துவங்களைக் கண்டு கழித்தோரே, பின் ஒரு காலும் அசைவில்லாத திண்ணிய மெய்யுணர்வைப் பெற்றவராவர். பின்னும் அவர் `நான்` என்னும் தற்போதமும் கழலும்படி உணர்வு திருந்தப் பெறுவாராயின், நாதமுடிவில் விளங்கும் நிறை பரம் பொருளாகிய சிவமாந்தன்மையைப் பெறுவர். அதனைப் பெற்றோரே உண்மை ஞானத்தால் உண்மை ஞேயத்தை எய்தினோராவர்.
நன்றி:- http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10501

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதம் மேலித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே -திருமந்திரம்

பொழிப்புரை :
கற்கத் தக்கனவாகிய சிவாகமங்களைக் கற்று, அவைகளிலே சிறப்பாகப் பொருந்தியுள்ள பிராசாத யோகத்தின் வழிப் பிரணவ ஞானத்தைப் படிமுறையால் பொருந்தி, சாலோகம் முதலாகச் சொல்லப்பட்ட பதமுத்திகளையும், அடைந்து, இவை யெல்லாவற்றின் விளைவாகவும் அதிதீவிரபரிபாகமும், அதிதீவிர சத்திநிபாதமும் வரப்பெற்று, அனைத்துப் பொருளுக்கும் மேலாய், ஆன்ம வியாபகத் திற்கும் மேலான வியாபகப் பொருளாகிய பரசிவப் பொருளைத் தலைப்பட்டவரே `சைவ சித்தாந்திகள்` எனப் படுகின்றனர்.
நன்றி:- http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10501

அத்துவித மென்ற அந்நியச்சொற் கண்டுணர்ந்து
சுத்த சிவத்தைத் தொடருநாள் எந்நாளோ -தாயுமானவர்


(பொ - ள்) இரண்டிணை ஒன்றென்னும் உண்மையே அத்துவிதம் என உணராது ஒன்றே அத்துவிதம் என்னும் வேற்று நெறியினர் சொல்லைக் கண்டகன்று தூயசிவத்தை யடையுநாள் எந்நாளோ?

சுத்தாத்துவிதம் (சுத்தாத்வைதம்) என்றால் என்ன?

கலப்பால் ஒன்றாய், அறிவாளும் பொருட்தன்மையாலும் வேறாய் (பதி-முற்றறி; பசு -சிற்றறிவு;அறிவித்தால் அறிவது) இயங்குதன்மையில் உடனாய் பதி பசுவோடு வேறறப் புணர்ந்திருக்கும் புணர்ப்பே தூய்மையான(சுத்தமான) அத்துவிதம்! இரண்டன்மை!

பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித
மெய்கண்ட நாதன்அருள் மேவுநாள் எந்நாளோ -தாயுமானவர்


(பொ - ள்) புன்னெறியாம் பொய்ச்சமயம் கூறியவற்றை உண்மையென மயங்கி உழலும் முக்கூற்றுப் புறச்சமயத்தாரும் காணமுடியாத அடைமுதலியன சேர்க்கப்படாத தூய அத்துவிதத்தை மொழிந்தருளிய மெய்கண்ட நாதனருன் பொருந்துநாள் எந்நாளோ?

வேதாந்தத்துக்கும் சித்தாந்தத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?

வேதாந்த சித்தாந்த தொடர்பை குமரகுருபரர் பண்டாரமும்மணிக் கோவையில் தெளிவுபடுத்துகின்றார்.

"வேதாந்த மென்றுச்சியிற் பழுத்த ஆரா இன்பம்
அருங்கனி பிழிந்து சாரங் கொண்ட
சைவசித்தாந்தத் தேனமு தருத்தினர்"


தெவிட்டாத சுவையுடைய பழமாக வேதாந்தத்தையும் அந்த வேதாந்தப் பழத்தை பிழித்தெடுத்த சாரமாகச் சைவசித்தாந்தத்தையும் சுட்டுகின்றார்.

ஆக; வேதாந்தத் தெளிவே சைவசித்தாந்தம்!

ஆக; வேதாந்தம் வேறு; அதற்கு சங்கரர் கொடுத்த அத்துவித விளக்கமாகிய கேவலாத்துவிதம் வேறு! இந்த நுனி இழை வேறுபாட்டை உணர்ந்து கொள்வது சைவசமயத்தவர்களுக்கு அவசியமான ஒன்றாகும். வேதாந்தத்துக்கு சங்கரர் பிழையான வியாக்கியானம் கொடுத்துள்ளார். அதுதான் அந்த நுனியிழை வேறுபாடு!!!!

சங்கரரின் அத்வைதத்தை பின்பற்றின் என்ன குறை?

நான் கடவுள் என்பது ஆணவம்! போலிச்சாமியார்கள் கடவுள்களாகி பெருமாளிகை கட்டி; தங்கத்தை தலையணையில் வைத்துபடுத்துறங்க வசதியேற்படுத்திய அபச்சாரமே நான் கடவுள் தத்துவம்! அதனால்த்தான் "நான் கடவுள்" என்பவர் அனைவரும் சங்கரரின் அத்வைதத்தை தமது கருத்துகளாலாக முன்வைக்கின்றனர்! நான் கடவுள்....நீ கடவுள் என்று கூறி தான்மட்டும் பணம் சம்பாதிக்கின்றனர்! நான் கடவுள்....நீயும் கடவுள் என்றால் பிறகு நீ ஏன் என்னை வழிபட வருகிறாய் என்று இவர்கள் இதுவரை கேட்டதாய் சரித்திரம் இல்லை!

நான் கடவுள் என்றால் ஆணவம்!
நீ கடவுள் என்றால் அபச்சாரம்!
நம்முள் கடவுள் என்றால் அழகு!

நாம்பிரம மென்றால் நடுவேயொன் றுண்டாமால்
தேம்பிஎல்லா மொன்றாய்த் திகழுநாள் எந்நாளோ -தாயுமானவர்


(பொ - ள்) ஏகான்மவாதக் கொள்கைப்படி நானே பிரமம் என்று கூறிக்கொண்டால் நான் என்னும் அகங்காரமே தோன்றும். அது பசுஞானம் என்றே சொல்லப்படும்; எல்லாம் ஒன்றாகத் திருவருளால் உணர்ந்து மெய்ப்புணர்ப்புற்று நிறைந்து நிற்கும்நாள் எந்நாளோ?

எனவே; ஆணவமலத்தை ஊட்டும் இயல்புடையதால் சங்கரரின் அத்வைதக்கொள்கை கேவலாத்வைதம் எனப்படும்.

சிவோகம் பாவணை என்றால் என்ன?

ஆன்மாவோடு இறைவன் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிறைந்திருக்கின்ற தன்மை - அதாவது ஒன்றல்ல.....அதேசமயத்தில் இரண்டும் அல்ல என்கின்ற இரண்டன்மை புணர்வே தூய்மையான அத்துவிதம்.
இது அநாதி தொட்டு நிலவிவரும் புணர்ப்பு!

இத்தகைய அநாதிகாலமாய் இருந்துவரும் இரண்டன்மை புணர்ப்பை ஆன்மா உணரும்போது சிவோகம் பாவணை வாய்க்கப் பெறும்.
நான் என்னும் நினைப்பு ஒழியும்போது தன்னுணர்வை இழக்கும் ஆன்மா தன்னோடு இரண்டன்மையாய் இருக்கும் சிவத்தை மட்டுமே உணரும்! சிவமாய் உணரும்!

நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ - திருத்தெள்ளேணம் (திருவாசகம்)


சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட - கண்டப்பத்து (திருவாசம்)

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட - அச்சோப் பதிகம் (திருவாசம்)


    ஒருவனவன் யானைகெடக் குடத்துட் செங்கை
        ஓட்டுதல்போல் நான்பேதை உப்போ டப்பை
    மருவவிட்டுங் கர்ப்பூர மதனில் தீபம்
        வயங்கவிட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன்
    அருளுடைய பரமென்றோ அன்று தானே
        யானுளனென் றும்மெனக்கே ஆணவாதி
    பெருகுவினைக் கட்டென்றும் என்னாற் கட்டிப்
        பேசியதன் றேஅருள்நூல் பேசிற் றன்றே - தாயுமானவர்

எளியேனுக்கு அருள்பாலிக்கின்ற இறைவன் என்றுள்ளானோ அன்றுதொட்டு நானும் உள்ளேன். எனவே அநாதி காலம் தொட்டு உப்பும் நீரும் கலந்த உப்புத்தண்ணீர் போன்றும் கற்பூரமும் நெருப்பும் கலந்திருக்கும் கலப்புப்போலவும் அநாதிகாலம் தொட்டு இறைவனோடு கலந்து நிற்கையில், புணர்ப்பாகிய ஐக்கியத்தை வேண்டி வருந்துகிறேனே!
                                                     வேடனொருவன் தான்கண்ட யானை மறைந்துவிட அதனைத் தேடி அலைந்து அலுத்து சோர்வுற்ற நிலையில் ஏற்படும் மயக்க உணர்வால் யானை இருப்பதற்கு எள்ளளவுக்கும் வாய்ப்பில்லாத குடத்துக்குள் கூட கைவிட்டு தேடுவான். அப்படியான ஒருநிலையில் உனது ஐக்கியத்தை தேடி அலையும் நான் நிற்கின்றேன். இந்த மயக்கம் எனக்கு ஏன் வந்தது என்றால் ஆணவம்,வினை ஆகிய மலங்களினால் வந்தது. இந்த மலங்களோடு இருப்பதால் உன்னோடான எனது இரண்டன்மை நிலையை நான் உணராமல் வருந்துகிறேன்; இது எளியேனது கருத்தல்லவே? அருள்நூல்(மறைநூல்/சிவாகமநூல்/திருமுறை/சித்தாந்தநூல்) அல்லவா கூறுகின்றது!

இப்படியான சிவோகம் பாவணையே சிவனடியார்கள் பூணுவது. தானெனும் உணர்விழந்து சிவத்தை மட்டுமே உணருகின்ற உன்னதநிலை!!!! சிவம் மட்டுமே புலப்படுகின்ற முக்திநிலை!!!! சுத்தாத்துவித நிலை!!!!

குறிப்பு:-"ஒருவனவன் யானைகெடக்..." என்னும் பாடல் தவிர்த்து ஏனைய தாயுமானவர் சுவாமிகளின் திருப்பாடல்களுக்கு சித்தாந்த பண்டிதர்,சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகப்புலவர் ப.இராமநாத பிள்ளை ஐயாவின் உரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி:-http://www.tamilvu.org/library/l5F40/html/l5F40ind.htm


இந்தப் பகுதியில் சைவசித்தாந்தமே உண்மையான அத்வைதம் என்பதை பார்த்தோம். அடுத்த பகுதி இப்பகுதியின் நீட்சியாக அமையும்; அது என்ன நீட்சி? அடுத்த பகுதியில் பார்ப்போம்! எல்லாம் திருவருட் சம்மதம்!

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

13 comments: on "சைவசித்தாந்தமும் சங்கரர் அத்வைதமும் -சைவ சித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் - 7"

sivamoorthy said...

Most beautiful explanation. Kindly continue your writing.
I am also like you, most interested in Shaivam.

Namashivaya

Anonymous said...

"பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அநாதி" - திருமந்திரம்

இந்த திருமந்திரத்தினை முழுமையாக எழுதி அத்வைதத்தின் முழுமையை நிரூபிக்கவும்.

நன்றி:))

சிவத்தமிழோன் said...

/// அத்வைதத்தின் முழுமையை நிரூபிக்கவும////

திருமந்திரம் சைவசித்தாந்த நூல் என்பதை தாங்கள் அறிவீர்களாயின் விளக்கம் எதுவும் எளியேன் எடுத்துரைக்கத்தேவையில்லை என்று நினைக்கின்றேன்.
:))

Anonymous said...

mikka nandri.,this inspires youngsters like us.,i am 20 years old.,i m fond of tamil.,so started reading thiruvaasagam and fell in love with shiva.,and from that i was trying to read saiva dharma shastra but could not understand but your explanation is just mind blowing.,please continue writing.,namachivaya vaazhga.,

Prof.N.Krishnan said...

பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அநாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே.

இத்திருமந்திரத்தின் கருத்து: பதி பசு பாசம் (இறைவன், உயிர்கள், தளைகள்) என்ற மூன்றைப் பற்றிக் கூறுவதானால், இறைவன் எவ்வாறு தோற்றமோ முடிவோ அற்ற அனாதியோ, அவ்வாறே, உயிர்களும், (உயிர்களைக் கட்டியுள்ள) தளைகளும் தோற்றங்களோ முடிவுகளோ அற்ற அனாதிகளே. (ஒரே ஒரு வேறுபாடு - உயிர்களைக் கட்டியுள்ள) தளைகள் இறைவனைச் சென்று அணுக வல்லமை அற்றவை. தளைகளால் கட்டப்பற்ற உயிரை இறைவன் சென்று அணுகினால், அவ்வுயிரைவிட்டுத் தளைகள் நில்லாது ஓடிவிடும்.

இத்திருமந்திரத்தின் விளக்கம் - இறைவன், உயிர்கள், தளைகள் ஆகிய மூன்றுமே தோற்றமோ(ஆதி) முடிவோ(அந்தம்) அற்ற அநாதி அதாவது, என்றும் உள்ளவைகளாக இருப்பினும், தன்மைகளால் வேறுபட்டவை. இறைவன் எண்குணத்தவன் (தன் வயத்தனாதல், தூய உடம்புடைமை,முடிவிலா ஆற்றல் உடைமை,இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கிய தன்மை, முற்றுணர்வு உடைமை, பேரருள் உடைமை, இயற்கை உணர்வுடமை, வரம்பிலா இன்பம் உடைமை.); இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கிய தன்மை உடையவன். எனவே, பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம் என்றார் திருமூலதேவ நாயனார். எல்லையற்ற பேரருளாளனான இறைவன், தன கருணையினாலே, ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலப் பாசத்தால் கட்டுண்ட கடையவனாகிய உயிரை அணுகினால், மும்மலப் பாசம் நில்லாதோடி, உயிர் தூய்மை பெற்று முத்திநிலை அடையும் என்பதே.

பேராசிரியர். முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறை,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா.

Anonymous said...

சங்கரரின் அத்வைதம்,, வேதாந்தம்.வேதாந்தம் என்று கூறுவர். மெய்கண்டாரின் அத்வைதம் சைவசித்தாந்தம் என்று போற்றப்படும். தென்னாட்டுச் சைவசமயத்தின் சால்பாக சைவசித்தாந்தம் விளங்குகின்றது.
WHY ? THE TEMPLES OWNED BY VARIES " SAIVA ADHANAMS" (8 TO 12 IN TAMILNADU) ARE FOLLOEING, PUJAYS IN SAMASKRITHA. FOLLOEING ALL AGAMAS OF VADHA( ALL TYPE OF PUJAYS)
PL.EXPLAIN THE METHED'S OF PUJAS IN SAIVA SITHANANTHAM. SO WE CAN HAVE A IDYA ABOUT TAMIL PUJAS. PL.PL.PL. EXPLAIN (NOW I AM A STUDING SAIVA SITHANANTHA )

R.SURESH,CHENNAI

Sheae said...

Please continue this series. I would like to learn more about Sithantham.

சிவத்தமிழோன் said...

TO :- R.SURESH,CHENNAI

அன்புடையீர்,

தாமதமான பதிலுக்கு மன்னிக்க. கவனிக்கத்தவறிவிட்டேன்.
சைவசமயத்தைப் பொறுத்தவரை சமஸ்கிருதமும் தமிழும் இரு கண்கள். ஒன்றை ஒன்று தாழ்த்திப் பார்க்கும்பான்மை சைவத்தில் இல்லை.
சமஸ்கிருதத்திலும் தமிழிலும் ஒரேநேரத்தில் (ஒன்றுமுதல் மற்றையது பிறகு என்று அல்ல. ஒரே நேரத்திலேயே) ஆகமங்களை பார்வதிக்குப் பரமேசுவரன் சொன்னதாக திருமந்திரம் உரைக்கின்றது.

ஆனால், சைவக்கிரிகைகளைச் செய்வதற்கு தமிழ்வழி ஆகமங்கள் நம்தவக்குறைவால் எம்மிடம் இம்மையால், சமஸ்கிருதமொழியைப் பயன்படுத்துவதில் தவறில்லை. அதேசமயத்தில் சைவத்திருமுறைகளை கிரியைகளின்போது தோத்திரம் செய்வது அழகுடமையாக இருக்கும். ஆனால் இன்று ஸ்மார்த்தப் பிராமணர்களின் ஆதிக்கம் கூடித் தமிழ் நீசபாசை என்கின்ற மாயை அனைத்துப் பிராமணர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. இவ்வெண்ணத்தை மாற்றுவதற்கும் "சொற்றமிழில் பாடுக" என்று எம்பெருமானே சொன்னமையால் சமஸ்கிருதத்துடன் திருமுறைத் தமிழிலும் அந்தணர் வழிபாடுசெய்ய ஆவண செய்யவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

சிவத்தமிழோன் said...

ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக். காரிகை யார்க்குக் கருணைசெய் தானே -திருமந்திரம்

பொ.ஸ்ரீதரன் said...

நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்

Unknown said...

அருமை.மிக அருமை.
காலதாமதம் ஆன பதிவுதான் ஆனால் நான் இப்பொழுதுதான் வாசிக்க காலம் வாய்ந்தது. கோரா வில் உங்கள் எழுத்தின் கருத்தில் முழு உடன்பாட்டாளன்.நன்றி.மகிழ்ச்சி.

Kavinkumar said...

நல்ல விளக்கம். அரிய தகவல்கள் வாழ்க.....

Post a Comment