"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, May 28, 2009

செய்யக்கூடாத முப்பத்திரண்டு குற்றங்கள்

திருக்கோயிலில் செய்யக்கூடாத முப்பத்திரண்டு குற்றங்களையும் தீர்த்தத்திலும் நந்தவனத்திலும் செய்யக்கூடாத குற்றங்களையும் நாவலர் பெருமானின் சைவவினா விடை பட்டியலிட்டுள்ளது. குறித்தவற்றை பதிவாக்கியுள்ளேன். நன்றிகள்.

முப்பத்திரண்டு குற்றங்கள்

1)நந்திதேவருக்கும் சிவலிங்கப்பெருமானுக்கும் மத்தியிற் போதல்
2)தரிசனை செய்தபின் புறங்காட்டிவருதல்

3)ஒருகை குவித்து தரிசித்தல்

4) ஒரு பிரதட்சணம் செய்தல்

5)மேலே யுத்தரீயம் போட்டுக்கொண்டு தரிசித்தல்

6)கோபுரச்சாயையைக் கடத்தல்

7) கோயிலிலுண்ணுதல்

8)நித்திரைசெய்தல்

9)நின்மாலியத்தைத் தாண்டுதல்

10)நின்மாலியத்தைத் தீண்டுதல்

11)கையினால் விக்கிரகங்களைத் தீண்டுதல்

12)ருத்திரகணிகையரைக் கையினால் தீண்டுதல்

13) அவர்களோடு பேசுதல்

14)நோக்குதல்

15) வீணான வார்த்தைகள் பேசுதல்

16)கோயிற்காரிய மல்லாத சொல்லைச் சொல்லுதல்

17)தான் சொல்லாவிட்டாலும் ஒருவர் சொல்லுவதைக் கேட்டல்

18)உத்தமர்களை யவமதித்தல்

19)அற்பர்களை மதித்துப்பேசுதல்

20)அவ்விடத்திலிருக்கும் சிவசொத்தாகிய பொருளை அபகரிக்கும் சிந்தையோடு பார்த்தல்.

21)வேதங்களால் சொல்லப்படாத சிறுதெய்வங்களைப் பணிதல்

22)வேதமுதலான கலைகள் பாடமோதுதல்

23)உன்னத தானத்திலிருத்தல்

24)ஆசனத்திலிருத்தல்

25)ஒருவரைப் பார்த்து நகைத்தல்

25)பிணங்குதல் முதலான துர்க்குணங்களைப் பாராட்டுதல்

26)அருட்பாக்களையன்றி மற்றப்பாடலை மதித்துக்கேட்டல்

27)சண்டேசுரரிடத்தில் வஸ்திரத்தின்(ஆடையில் இருந்து) நூல் கிழித்துவைத்தல்

28)பலிபீடத்துக்கும் சந்நிதானத்துக்கும் மத்தியில் மற்றவரை வணங்குதல்

29)திருக்கோயிலினுள் பொடிமுதலியன போடுதல்

30)திரிசந்தியல்லாத காலங்களில் ஆலயத்திற் செல்லுதல்

31)இரண்டொரு பிரதட்சணம் செய்தல்

32)சிறப்பற்ற பாடல்கள் பாடுதல்சிவதீர்த்தத்திலும் நந்தன வனத்திலும் செய்யத்தகாத காரியமென்ன?

சிவ தீர்த்தத்தில் உமிழ்நீர் துப்பலாகாது. மூக்குச் சிந்தலாகாது. மற்றுமுள்ள அசுசியான காரியஞ் செய்யலாகாது. நந்தனவனத்தும் இப்படியே.
மேலும் படிக்க...

Wednesday, May 13, 2009

அன்புத் தமிழகத்திற்கு,

அன்புத் தமிழகத்திற்கு,

தேர்தல் தொடங்கிவிட்டது. தேர்தலின்போது ஒவ்வொருமுறையும் கட்சிரீதியாக வாக்களிப்பீர்.சாதிரீதியாக வாக்களிப்பீர்.மதரீதியாக வாக்களிப்பீர். இம்முறை திராவிட இனம், தமிழினம் என்ற கொள்கையடிப்படையில் வாக்களியுங்கள்.

தமிழைக் காக்கும் கடமை உங்கள் வாக்குகளில் உள்ளது. ஈழநாட்டில் செந்தமிழ் படும் துன்பத்தைக் கருத்தில்க் கொண்டு வாக்களியுங்கள். வேலைவாய்ப்பு, மின்சாரம் இவையாவும் அடுத்த தேர்தலிலும் பார்த்து சமாளிக்கக்கூடிய பிரச்சினைகள், ஆனால் ஈழநாட்டில் செந்தமிழ்படும் துயரை இந்தத் தேர்தலில்த்தான் தீர்க்கவேண்டும். இந்தத் தேர்தலில் தீர்க்கப்படாவிட்டால், அடுத்த தேர்தலை நீங்கள் எதிர்கொள்ளும் சமயம்; ஈழநாட்டில் தமிழ் இல்லாதுபோகலாம்.

அன்பான என் இனிய தாய்த்தமிழகமே, ஈழத்தமிழரைக் கைவிட்டுவிடாதீர்.
நன்றி
தென்னாடுடைய சிவனே போற்றி

மக்கள் சேவையே மகேசன் சேவை

இங்கனம்
சிவத்தமிழோன்
மேலும் படிக்க...

Wednesday, May 6, 2009

உருத்திராக்க இயல்

விபூதி தரித்துக்கொண்டாலே போதுமே, உருத்திராக்ஷமுந் தரித்துக்கொள்ள வேண்டிய தென்ன?

விபூதி ருத்திராக்ஷமும் சிவசின்னமாகையால் அவ்விரண்டுமே தரிக்கவேண்டும். இதுவுமின்றி விபூதியானது சிலவேலை வியர்வை மழை முதலியவற்றால் மறைந்துபோனாலும் ருத்திராக்ஷமிருந்தால் தோஷமில்லை. ராக்ஷதரால் பீடிக்கப்படுகிற பாபம் அணுகாது.

உருத்திராக்ஷம் எவ்விடத்தில் எவ்வாறு உண்டாயது?

தேவர்கள் திரிபுரத்து அசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பம் செய்துகொண்ட பொழுது, திருக்கயிலை உடையாரின் மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரில் தோன்றிய மணியாம். இந்தக் காரணத்தினால் அதற்கு ருத்திராக்ஷம் என்கிற பெயருண்டாயது. (ருத்திரன் - சிவன், அக்ஷம் - நேத்திரம். ) அதற்குக் கண்மணியென்றும் பெயர். சிவபூசை செய்கிறவர்கள் கழுத்தில் ருத்திராக்ஷ மில்லாமல் பூசித்தால் அந்தப் பூசையைப் பரமசிவன் அங்கீகரித்துக்கொள்ளமாட்டார். ஆதலால் சிவபூசை செய்கிறவர்கள் ருத்திராக்ஷ கண்டிகை அவசியம் தரித்துக்கொள்ள வேண்டும்.

எத்தனை உருத்திராக்ஷம் தரித்துக்கொள்ள வேண்டும்?

உச்சியி லொருமணி, காதொன்றுக்கு ஆறுமணியாக இரண்டு காதுக்கும் பன்னிரண்டு மணி, சிரசில் நாற்பது, கழுத்தில் முப்பத்திரண்டு, மார்பில் நூற்றெட்டு, புயத்தில் முப்பத்திரண்டு, கைகளில் இருபத்துநாலு, இவ்வாறு தரிக்க வேண்டும்.

ருத்திராக்ஷங்களின் இடைகளில் ஏதாவது மணிகள் கோக்கலாமா?

இடையிடை பவளம், ஸ்படிகமணி, பொன்மணி யிவைகளைக் கோத்து அணியவேண்டும். இவைகளுமன்றி வில்வப்பழ வோட்டையுஞ் சேர்க்கலாம். இவ்வாறு சேர்க்காமல் ருத்திராக்ஷங்களை மாத்திரம் கோத்துத் தரித்துக்கொண்டால் எத்தனை மணி சேர்த்தாலும் ஒருமணி யணிந்ததா லுண்டாகும் பலனே கிடைக்கும். இந்த ருத்திராக்ஷங்களில் ஒருமுகம், பதினொருமுகம், பதினான்கு முகமுள்ள மணிகளை வைத்துப் பூசித்தாலும் சிவார்ச்சனை செய்ததா லுண்டாகும் பலன் கிடைக்கும்.

உருத்திராக்கம் அணிவதற்கு தகுதியானவர் யார்?

மதுபானமும், மாமிச உண்டியும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய் உள்ளவர்.

உருத்திராக்கம் தரித்துக்கொண்டு மதுபானம், மாமிச உண்டி முதலியவை செய்தவர் யாது பெறுவர்?

நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அனுபவிப்பர்.

குளிக்கும் காலத்தில் உருத்திராட்சத்தை அணியக் கூடாதா?

அணியலாம், குளிக்கும் பொழுது உருத்திராட்ச மணியில் பட்டு வடியும் நீர் கங்கை நீருக்குச் சமமாகும்.

உருத்திராட்சத்தில் எத்தனை முகமணி முதல் எத்தனை முகமணி வரையும் உண்டு?

ஒருமுக மணி முதல் பதினாறு முக மணி வரையும் உண்டு.

உருத்திராட்ச மணியை எப்படிக் கோத்துத் தரித்தல் வேண்டும்?

பொன்னிலாயினும், வெள்ளியிலாயினும், தாமிரத்தாலாயினும், முத்தாயினும், பவளமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோத்துத் தரித்தல் வேண்டும்.

உருத்திராக்கம் தரிக்கத் தக்க இடங்கள் யாவை?

குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள், என்பவைகளாம்.

இன்ன இன்ன இடங்களில் இத்தனை இத்தனை மணி தரித்தல் வேண்டும் என்னும் முறை உண்டோ?

ஆம். தலையிலே இருபத்தி இரண்டு மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணியும், கழுத்திலே முப்பத்தி இரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், கைகளிலே தனித்தனி பன்னிரண்டு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும்.

இந்த இடங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் உருத்திராக்கம் தரித்துக் கொள்ளலாமா?

காதுகளிலும், கண்டத்திலும் எப்போதும் தரித்துக் கொள்ளலாம், மற்றை இடங்களில் எனில், தூக்கத்திலும் மலசல மோசனத்திலும், நோயிலும் அணிந்து கொள்ளலாகாது.

உருத்திராக்கம் அணிவது எதற்கு அறிகுறி?

சிவபெருமானுடைய திருக்கண்ணில் தோன்றும் திருவருட் பேற்றிற்கு அறிகுறி.
குறிப்பு:- நாவலர் பெருமானின் சைவ வினா விடையில் இருந்து உருத்திராக்கவியல் பதிவேற்றப்பட்டுள்ளது.
சிவன் பெயர் சொல்வது மாபெரும் தவம்
சிவம் இல்லையேல் எல்லாம் சவம்
தென்னாடுடைய சிவனே போற்றி
திருச்சிற்றம்பலம்
மேலும் படிக்க...

Friday, May 1, 2009

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எம்தமிழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்

யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அன்புள்ளம் கொண்டோரே ஓடோடி வாருங்கள். உதவிகள் செய்யுங்கள்.

யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரி முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை மன ஆறுதலை ஊட்டுகின்றது. 30ம்திகதி வரையே முதற்கட்ட பொருட்சேகரிப்பு நடைபெறும் என இவ்விளப்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அன்புள்ளம் கொண்ட நெஞ்சங்களே, கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்கலாம்.


Principal Name : Thambipillai Muthukumarasamy
Address : Hindu college, colombo - 04
Telephone Number : +94112586169

சிறுதுளி பெருவெள்ளம்

மக்கள் சேவையே மகேசன் சேவை
மேலும் படிக்க...