அமெரிக்காவில் பிச்சைக்காரர்கள் கொள்ளைக்காரர்கள் மதுக்குடி மன்னர்கள் விவகாரத்துக் கோரும் தம்பதிகள் என்று கொட்டிக்கிடப்பது எங்கள் கிராமத்து ஏழைக்கு தெரியவர வாய்ப்பேயில்லை. எனவே இந்தசூழ்நிலையை தமக்கு சாதகமாக்கி "இங்கே பார் உன் வீட்டில் எவ்வளவு பிரச்சினை, அங்கு ஒரு பிரச்சினைகளும் இல்லை.அது சொர்க்கபுரி, இங்கே இருந்தால நரகந்தான் விளையும். " என்று தமது வாய்வண்ணத்தைக் காட்டுகின்றனர். பண வண்ணத்தோடுதான்!
இராமபாலம் உண்டு என்கின்றனர் ஒருசாரார். மிதக்கும் கல்லை காட்டுகின்றனர் அதாரமாக. இல்லை என்கின்றனர் மறுசாரார்.
"உண்டு என்று நம்பும் மக்களின் நம்பிக்கையில் ஏன் மண்ணள்ளிப்போட வேண்டுமென்று?" இன உணர்வாளர், இயக்குனர், நடிகர் விஜய ராஜேந்திரர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகின்றார்.
இதே கிருத்தவர்களோ இசுலாமியரோ உண்டு என்று நம்பியிருந்தால் விளைவு என்ன என்று சில பொதுசனம் முணுமுணுக்கின்றனர். இராமன் இருந்தானா இல்லையா என்பது தேவையற்றது என்னைப்பொருத்தவரையில்.
ஆனால் இதேபோல் நாளை திருவண்ணாமலை கோயிலை பெயார்த்தால்த்தான் பொருளாதாரவளர்ச்சி என்றநிலை தமிழகத்துக்கு வராமல் இருக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
புராணங்கள் பற்றி சைவருக்கு ஆறுமுகநாவலர் எடுத்துரைத்துள்ளார். எனவே இதுபற்றி குழம்பத்தேவையில்லை. சைவ வினாவிடையில் இதோ அவர் திருவாக்கு;
திருமுறைகளில் இடம் பெற்றுள்ள புராண வரலாறுகள் உண்மையாக நடைபெற்றவை தாமா?
திருமுறைகளில் இடம் பெற்றுள்ள புராண வரலாறுகள் இரண்டுவிதமாகப் பகுத்துப் புரிந்து கொள்ளவது வல்லது.
தத்துவ விளக்கங்களைக் கூறும் செய்திகள், அவற்றுள் ஒரு வகை மற்றொரு வகை உண்மையாக நடந்தவை. எடுத்துக்காட்டுக்காகச் சிலவற்றை இங்குக் காணலாம்.
சிவமகா புராணத்தில் ஒரு தலைப்பு எவ்வாறு சிறு சிவ புண்ணியம் செய்த கேடான நிலையில் இருந்தவனும் உய்வு பெற்றனன் எனக்கூறும். அதற்கு அடுத்த தலைப்பே எவ்வாறு ஒரு நல்ல சிவபக்தர் செய்த சிறு சிவ அபராததிற்காகப் பெற்ற கேடு குறித்துக் கூறும். இவை சிறிதளவேனும் சிவ புண்ணியம் செய்ய வேண்டும், செய்யும் பணியைக் கவனத்துடன் குற்றமின்றிச் செய்ய வேண்டும் என்னும் தத்துவங்களை உணர்த்த என்று கொள்ளாமல் உள்ளவாறே கொண்டால் குழப்பமே கிட்டும்.
இவ்வாறு புராண வரலாறுகளைப் பகுத்தறிந்து புரிந்து கொள்வதே நல்லது
"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
என்று வள்ளுவன் வலியுறுத்துவதும் இதையே. அதாவது எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் கேட்டவாறே கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும். எனவே புராணங்கள் நடந்ததா இல்லையா என்பது தேவையற்ற விவாதம். அது சொல்லும் பொருளை அறிந்து வாழ்வியலை வளப்படுத்துவதே அறிவுடமையாகும்.
அவதானத்திற்கு:- இங்கு நாவலர் "திருமுறைகளில்" என்று வரையறுப்பதை மறக்கலாகாது. சிவாகமத்திற்கு ஒவ்வாதவைபற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் சேது சமுத்திர விடயத்தில் நாம் கொஞ்சம் கவனமெடுக்கவேண்டும். அது யாழ்ப்பாணத்திற்கு இதனால் கேடு விளையுமா இல்லையா என்பதிலேயே! யாழ் நீர்வளம் அழிவடையும், தீவுகள் மூழ்கலாம் என்றெல்லாம் கருத்துகள்.......ஆய்வறிக்கைகள் கூறிக்கொண்டுள்ளன. அடியேனும் சாதரண பொதுமகனாய் குழப்பத்தில்தான் உள்ளேன்.
கண் கெட்டபின் சூரியவணக்கம் போல் யாழ் நீர்வளத்தை இழந்தபின் எதுவும் செய்யமுடியாது. தமிழகம் கன்னடத்திடமும் கேரளத்திடமும் நீருக்காய் கைகட்டி நிற்பதுபோல் தயவு செய்து எங்களையும் எதிரிகளிடம் நீறுக்காய் கைகட்டி நிற்கவைத்திட வேண்டாம் என்பதுவே என் ஆதங்கவேண்டுகோள். வல்லுனர்களே சிந்தித்து செயற்படுக. பண முதலைக்கு மூளையை விலைவைத்து ஈழத்தமிழரை நீருக்கு நாதியற்ற இனமாக மாற்றாமல் இருந்தால் சரி.