"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, March 21, 2012

பண்டைய தமிழக கோயில் இடிக்கப்படுவதை தடுப்போம்!!!!


பாடல்பெற்ற சைவத்திருத்தலமான பனையபுரம் எனப்படும் புறவார் பனங்காட்டூர் திருக்கோயிலின் ஒருபகுதியை சாலை பெருப்பித்தல் என்னும் பெயரில் இடிக்கவுள்ளனர். சாலையை கோயிலில் இருந்து சற்று எதிர்த்திசையில் பயணிக்கச்செய்து விரிவிக்கலாம். அல்லது வேறுவழிகளைக் கையாளலாம். ஆனால் கோயிலின் ஒருபகுதியை இடிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதுவும் 1000 ஆண்டுகள் பழமையான தமிழரின் சொத்து இது!!!!  தமிழரின் கோயில்கள் அந்நிய ஆட்சிக்காலத்தில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதை எம்மால் தடுக்கமுடியவில்லை!!! ஆனால் இன்று எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே இடிக்க உத்தரவு இடுவதை என்னவென்று சொல்வது!!! இது மத்திய அரசின் கீழ் வருவதால் மத்திய அரசு இச்செயலைக் கைவிட நடவடிக்கை எடுக்க தமிழர்கள் அனைவரும் மதபேதங்கள் கடந்து முன்வர வேண்டுமென அடியேன் தாழ்மையோடு வேண்டுகிறேன்.

மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து மத்திய அரசின் முடிவை மாற்ற முன்வர வேண்டும் என்றும் பணிவோடு வேண்டுகிறேன்.

தற்போது அனைவராலும் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று...உங்கள் எதிர்ப்பை கீழுள்ள இணையத்தளத்திற்கு சென்று உங்கள் எதிர்ப்பை முன்வைப்பதாகும். தயவுசெய்து இந்த இலகுவான பணியை முன்வந்து செய்யுமாறு வேண்டுகிறேன். அனைவராலும் செய்யக்கூடிய பணி!!! ஒருநிமிடம்கூட ஒதுக்கத் தேவையில்லை!!!

அனைவரையும் மன்றாடிக்கேட்டுக்கொள்கின்றேன்.....தயவுசெய்து உங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யுங்கள்.

மதுரை மீனாட்சி கோயிலை உலக அதிசயமாக்க வந்த வாய்ப்பை அரசியல் மதபேதங்களால் இழந்துவிட்டோம்!!! இப்போது இந்தக்கோயிலின் ஒருபகுதியை இடிக்க மத்திய அரசு எடுத்த முடிவை தடுக்கவேனும் எம்மால் முடிகின்றதா.....பார்ப்போம்!!! மதபேதங்கள் கடந்து தமிழர் சொத்து என்ற உணர்வோடு செயற்படுமாறு அனைவரையும் வேண்டுகிறேன்.

இந்த இணையத்தளத்தில் சாலையின் இலக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு என்று NH45C பதிலளிக்கவும். 
உங்கள் எதிர்ப்பை பதிவுசெய்ய இங்கே கீழே உள்ள இணையமுகவரியை பயன்படுத்துக. அல்லது கீழே உள்ள இணையமுகவரி என்னும் சொல்லினை அழுத்துக.

Temple Name:-  Panaiyapuram Sivan temple located near viluppuram in Tamilnadu (  Panangattur temple  )

இணையமுகவரி
http://www.nhai.asia/register/rgr/traffic.asp

ஆலயம் பற்றி அறிந்து கொள்வதற்கு:-
http://aadalvallan.blogspot.com/2012/03/blog-post_20.html


நன்றி

மேலும் படிக்க...

Tuesday, March 6, 2012

பசுவதை? ஈழத்து சைவாலயத்திலா? சிவசிவ!!!!!


போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் என்று படையெடுத்து மதசகிப்புத்தன்மையற்ற கொடுஞ்செயல்களாக சைவக்கோயில்களை நிர்மூலம் செய்து அக்கற்கள் கொண்டு கிருஷ்தவ தேவசபைகளையும் தமது கோட்டைகளையும் கட்டி ஈழவளத்திருநாட்டில் கற்கோயில் என்று எந்தவொரு சைவக்கோயிலையும் காட்டி தமிழர் பெருமைப்படும் சால்பை இல்லாது ஒழிந்தனர். ஈழத்திருநாட்டில் சைவக்கற்கோயில் எதுவும் இல்லையே என்னும் பெருங்குறையை நீக்கும்பொருட்டு, பெருமகனார் சேர்.பொன்.இராமநாதன் புராதன கோயிலாகிய திருப்பொன்னம்பலவானேசுவரர் திருக்கோயிலை கற்கோயிலாகக் கட்டி சைவவுலகுக்கு வழங்கியிருந்தார்.

 

கற்கோயில்களையும் கலைவண்ணம் மிக்க சிற்ப வேலைப்பாடுகளையும் காண ஆசையிருந்தும் தமிழகம் சென்று அவற்றை காண வசதியற்ற சைவப்பெருமக்களுக்கு இச்சிவாலயமே அவர்களின் ஆசையை நிறைவுசெய்யும் சிறப்பை கொண்டுள்ளதென்றால் அதுமிகை இல்லை!!!கொழும்பு மாநகரிலே சைவாகமவழி திருப்பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்ற சிவாலயம் என்னும் அருமையும் பெருமையும் உடையது திருப்பொன்னம்பலவானேசுவரர் திருக்கோயில்!

இத்தகைய பெருமைபொருந்திய சைவத்திருத்தலமாகிய திருப்பொன்னம்பலவானேசுவரத்து திருக்கோயிலில் பேணப்பட்டுவந்த மசுமடத்தில் காயத்தால் வாடிக்கொண்டிருந்த கருவுற்றிருந்த பசுவொன்று இறைச்சிக்காக விற்கப்பட்ட பெருங்கொடுமை.....பெரும்பாவம் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் இருப்பதைக் கேள்வியுற்று சைவ உலகமே ஆழ்ந்த துயரத்துள் வீழ்ந்துள்ளது!!!!

செய்திகளின் பிற்புலத்தை ஆராயும்போது இலங்கை அரசியல்வாதியொருவரால் இச்செய்தி வெளிக்கொண்டு வரப்பட்டிருப்பது அவதானிக்க வேண்டியவிடயமாகும். இவர் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் அதிபர் தெரிவில் உரியமுறையில் பொறுப்புடன் தலையிட்டபோதும் கல்லூரிப்பாரம்பரியத்துக்கு ஏற்ப முடிவெடுக்கத் தவறியமையால் அது சைவமக்களில் ஒருசாராரின் மனதை புண்பட வைத்துவிட்டது என்ற செய்தியும் உண்டு!!! எனவே அதை நிவர்த்திசெய்ய இச்செய்தியை வெளிக்கொண்டு வந்துள்ளாரா என்பது ஐயத்துக்குரிய கேள்வியே!!! ஆனாலும் உரிய ஆதாரங்கள் என்பவற்றை அடுக்கி அவர் கூறும் செய்தி கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே!!!! ஆலய அறக்காவலர் சபை "வேறு ஒரு ஆலயத்துக்கு குறித்த பசுவை வழங்கிய"தாக அறிவித்து எந்தவிதமான வெளிப்படையான செய்தியையும் வெளியிடாதது இன்னும் ஆழமாக கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. குறித்த பசு இறைச்சிக்காக வெட்டப்பட்டதாகவும் அது யாரால் வாங்கப்பட்டதென்பதையும் குறித்த அரசியல்வாதி வெளிப்படையாக கூறியுள்ளமையையும் நோக்க வேண்டியுள்ளது. அவர் இதுகுறித்த நிழற்படங்களை வெளியிடத்தயார் என்று கூறியுள்ளமையும் இதுபற்றி காவல் துறையில் புகார் செய்துள்ளமையும் அவதானிக்க வேண்டும். ஆக; ஆலய அறக்காவலர் சபைமேல் சுமத்தப்பட்ட குற்றத்தை தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் வெளிப்படையாகவும் ஆலய அறக்காவலர் சபை நிராகரிக்க எத்தனிக்கவில்லை என்பதுவே சைவ உலகத்துக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது!!!!


அந்நிய ஆட்சியில் யாழ்ப்பாணம் இருந்தபோது ஒவ்வொரு வீடும் ஒழுங்குமுறைக்கு அமைய ஒரு பசுவை அந்நிய ஆட்சிப்படையினரின் உணவுக்கு  வழங்க வேண்டும் என்ற விதி இருந்தது. ஈழத்து ஞானப்பிரகாசர் பசு வழங்கவேண்டிய தடவை வந்தபோது அப்பெரும் கொடும்பாவத்துக்கு அஞ்சி இரவோடு இரவாக யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறி தமிழகத்துக்கு சென்றார். இப்படியான பாரம்பரியம் தமிழருடையது!!!!!

பண்டைய சிங்கள அரசர் விகாரைகளுக்கு நிதியளிக்க தவறும் பௌத்தர்கள் திருக்கேதீசுவரத்தில் பசுக்கொலை செய்தமைக்கு ஈடான பாவத்தை பெறுவர் என்று வலியுறித்திய சிறப்பு ஈழத்தமிழரின் சைவப்பாரம்பரியத்தின் மேன்மையின் எடுத்துக்காட்டாகும்!!!

தனது மகன் செய்த தவறால் கன்றினை இழந்த தாய்ப்பசுவின் துயர் தீர்க்க தனது மகனையே தேரேற்றி கொலைசெய்த மனுநீதிசோழனின் சைவச்சால்பு தமிழரின் பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டாகும்!!!!

மேய்ப்பான் இறந்துகிடந்தமையைக் கண்டு பசுக்கள் எல்லாம் அழுத்தவண்ணம் நின்றபோது அதனது துயரத்தை நீக்க தனது உடலைத்துறந்து மேய்ப்பவனின் உடலுக்குள் கூடுவிட்டு கூடுபாய்ந்தார் திருமூலநாயனார்!!!!அனாயநாயனார் ,சண்டேசுவரர் ஆகிய நாயன்மார்களும் பசுவை போற்றி சைவச்சால்பை வெளிப்படுத்திய சிறப்புடையவர்கள்! இப்படி பசு என்பது சைவசமயத்தில் புனிதத்தின் அடையாளம்!!!!

இறைவனுக்கு அபிடேகத்துக்கு பயன்படுத்துவதும் பசுப்பால்தான்!!! தாய்ப்பாலுக்கு பிறகு ஒவ்வொரு குழந்தையும் அருந்துவது பசுப்பால்தான்!!!!ஆக; சமயச்சால்பாலும் சமூகச்சால்பாலும் போற்றுதலுக்குரியது பசு!!!! அத்தகைய பசுவை சைவாலய நிர்வாகமே இறைச்சிக்காக விற்றதாக வெளிவந்துள்ள செய்தி........கடவுளே கண்களும் காதுகளும் இச்செய்தியை அறியத்தானோ தந்தாய் என்று உள்ளம் குமுறுகின்றது!!!!! ஆலய நிர்வாக சபை என்ன செய்யப்போகின்றது?

கோபூசை செய்தென்றும் கோயில் தோறும்
கும்பிட்டு வாழ்ந்த மக்கள் கோலம்மாறிக்
கோவினையே கொல்களத்தில் வெட்டிவீழ்த்திக்
கொத்துறொட்டி ஆக்கியுண்ணல் கொடுமையன்றோ
தாமாகத் தாவரநல் லுணவையுண்டு
தமதுழைப்பும் தகுபயனும் தந்துவாழும்
கோமாதா குலத்தினையே கொன்று தின்னும்
கொடுமையினைப் போக்கிடவே திரண்டு வாரீர் - சைவப்புலவர் சு.செல்லத்துரை

குறித்த செய்தியை வெளிப்படையாகவும் ஆதாரபூர்வமாகவும் தெளிவாகவும் மறுக்க ஆலய அறக்காவலர் சபையால் முடியாதென்றால் குறித்த ஆலய அறக்காவலர் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் சைவர் என்னும் தகுதியையே இழந்தவர் ஆயினர் என்பதே சைவ உலகின் தீர்ப்பாக அமையும்!!!! அதில் எள்ளளவும் ஐயமில்லை!!! ஆக; குறித்த சபை உறுப்பினர்கள் அனைவரும் சபையைவிட்டு விலகி சைவச்சான்றோர்களிடம் ஆலய நிர்வாகத்தை ஒப்படைப்பதோடு பாவத்தை நீக்க விரும்பினால் உள்ளன்போடு மனந்திருந்தி காசிக்குச்சென்று கங்கையில் குளித்து பாவத்தை போக்க எத்தனிக்க!!!!

பெருமகனார் சேர்.பொன்.இராமநாதன் கட்டியமையால் அவரது உறவு உரிமைகருதி "யாராலும் யாரையும் நீக்க முடியாது" என்னும் ஆணவத்தோடு சைவ உலகின் கோரிக்கைகளைத் தட்டிக்கழித்தால் ஆலய அறக்காவலர் சபை உறுப்பினர் அனைவரும் நரகம் போவது திண்ணம்!!!!!

சைவ பெருமக்கள் துயரத்துள் சோர்வடையாது....உண்மையை அறியவும் உருப்படியற்றவர்கள் ஆலய நிர்வாக சபையில் இருப்பது உறுதியானால் அவர்களை அனைவரையும் ஆலய நிர்வாக சபையில் இருந்து அகற்றவும் முன்வர வேண்டும் என்று பணிவோடு வேண்டுகிறேன்.

எல்லாம் திருவருட் சம்மதம்
மேலும் படிக்க...