"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Friday, December 16, 2016

நாவலர் பெருமானும் மிசனரிகளின் சாதிச்சதிகளும்!!!

பேராசிரியர் ரட்ணஜீவன்.எச்.கூல் நாவலர் பெருமானை ஒரு சாதித்துவவாதியாகச் சுட்டிஆங்கில பத்திரிக்கைகளில் கட்டுரையொன்று எழுதியுள்ளார்.

பேராசிரியர் ரட்ணஜீவன் எச்.கூல் என்பார்தமிழ் ஏடுகளைத் தேடித்தேடி சேகரித்து அச்சேற்றிக் காத்துத்தந்த சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் பரம்பரையைச் சார்ந்தவர்சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் கிருஷ்தவராக இருந்து தாய்ச் சமயமானசைவ சமயத்திற்கு சுயதேடலால் ஆர்வமேற்பட்டு மாறியவர்ஆனால் அவரது பிள்ளைகளில்பலர் சைவசமயத்தை ஏற்கவில்லைஅப்பிள்ளைகளின்வழித்தோன்றல்களில் ஒருவரே பேராசிரியர்ரட்ணஜீவன் எச்.கூல்.

தனது கிருஷ்தவ விசுவாசத்தால் பேராசிரியர் ரண்டஜீவன் எச்.கூல்,
சி.வை . தாமோதரம்பிள்ளை அவர்கள் ஏடுகளை பெற்றுக்கொள்ளும்
பொருட்டான சூழ்நிலை காரணமாக சைவத்துக்கு மாறியவர் என்ற
மொக்குத்தனமான கருத்தை முன்வைத்தவர்அந்நியர் ஆட்சிக்காலத்தில்,
கிருஷ்தவ சமயத்தாரே ஆதிக்கம் உடையவராக இருந்தனர் என்ற முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து "பேராசிரியர்அடைமொழியை கீழ்த்தரமாகப் பயன்படுத்தியவரே பேராசிரியர் ரண்டஜீவன் எச்.கூல்.

ஜீ
.யூ.போப்,வீரமாமுனிவர்(கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி) போன்ற வெளிநாட்டு பாதிரிமார்களுக்கு ஏற்படாத நிர்பந்தம் சி.வை.தாமோதரம்பிள்ளைக்கு ஏற்பட்டதென்பது மதக்காழ்ப்புணர்வில் ஏற்பட்ட சிறுபிள்ளைத்தனமான விமர்சனமே!!!
சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் சைவசித்தாந்த நூற்களினைக் கற்று,தமிழர் சமய வளத்தை உணர்ந்து சைவத்தைத் தழுவியவர்.தமிழ்நூல்களைப்
பதிப்பித்தவர். பாஷாபிமானமும் சமயாபிமானமும் வேண்டுமென்று ஊருக்கு
உரைத்தவர், நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழெங்கே என்று பாடியவர், சைவ மகத்துவம் போன்ற நூல்களை இயற்றியவர் கட்டாயத்திலா மாறியிருப்பார்?
 
பணத்துக்கும் பொருளுக்கும் பெண்ணுக்குமாய் மதம் மாறுவதற்கும்
சுதேசியப் பற்றினாலும் நூலறிவினாலும் தாய்ச்சமயம் தழுவுகின்றமைக்குமான  வேறுபாடுகளை பேராசிரியர். எச்.கூல் உணர்திலர் போலும்!!!


தனது முன்னோராகிய சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் சைவசமயத்தை ஏற்றமையை மதக்காழ்ப்புணர்வோடு விமர்சித்தவர்நாவலர் பெருமானைச் சாதித்துவவாதி என்பதில் வியப்பேதுமில்லை!!!

சுதேச சமய அடையாளங்களைப் பேணுவதற்கு(திருநீறு அணிதல்,பொட்டு போடுதல் போன்றவைமிசனரிகளின் கல்லூரிகள் தடைசெய்திருந்தபோதுநாவலர் பெருமான் சைவப்பாடசாலைகளை சைவப்பிள்ளைகள் சைவ விழுமியங்களை தெரிந்து வளரவேண்டுமென்ற நோக்கோடு அனைத்துச் சைவப்பிள்ளைகளுக்காகவுமே உருவாக்கினார்.  குறித்த சாதியினருக்கென்று உருவாக்கவில்லை!!!! நாவலரின் கல்விப்பணியானது கிருஷ்தவ மிசனரிகளுக்கு சுதேசப் பண்பாட்டைச் சிதைக்கின்ற ஊழியப்பணிக்கு பெரும் தடைக்கல்லாக விளங்கியது.  அதனால் வெறுப்புண்ட மிசனரிகள்நாவலர் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் செல்வாக்குப் பெற்றுவிடக்கூடாதென்ற நோக்கில் உருவாக்கிய பொய்ப்பிரச்சாரமே நாவலருக்கு சாதித்துவ முத்திரை ஏற்படுத்த வழிகோலிற்று.


நாவலர் பெருமான் சைவச் சாதிஅமைப்பைத் தெளிவாக தனது பெரியபுராண வசனம் நூலின் முன்னுரையில் எடுத்துக்கூறியுள்ளார்சைவ சமயச் சாதி அமைப்பானது பிறப்பு அடிப்படையில் அன்று என்பது அவரது துணிபு.  நாவலர் பெருமான் கூறிய சாதி அமைப்பைப் பார்ப்போம்.

 "சாதியினுஞ் சமயமே அதிகம்சமயத்தினுஞ் சாதி அதிகமெனக் கொள்வது சுருதி யுத்தி அநுபவமூன்றுக்கும் முழுமையும் விரோதம்.உலகத்துச் சாதிபேதம் போலச் சற்சமயமாகிய சைவசமயத்தினும் முதற்சாதி இரண்டாஞ்சாதி மூன்றாஞ்சாதி நாலாஞ்சாதி நீச சாதியென சமயநடைபற்றி ஐந்து சாதி கொள்ளப்படும்.

சிவாகமத்தில்
 விதிக்கப்பட்ட நான்கு பாதமுறைப்படி வழுவற நடந்து சிவானந்தப் பெரும்பேறு பெற்ற சீவன்முத்தர் சிவமேயாவர்இனிச் சிவஞானிகள் முதற்சாதிசிவயோகிகள் இரண்டாஞ்சாதிசிவக்கிரியாவான்கள் மூன்றாஞ்சாதி;சிவாச்சாரியான்கள் நாலாஞ்சாதி;

இந்நெறிகளில் வராதவர்களும் ,இவர்களையும் இவர்கள் சாத்திரமுதலியவற்றையும் நிந்திப்பவர்களும்,இந்நெறிகளிலே முறைபிறழ்ந்து நடக்கின்றவர்களும்இந்த நடைகளை விட்ட பதிதர்களும்சதாசூதகிகளாகிய பஞ்சமசாதி.

சிவசரியை கிரியை முதலியவைகளிலே பொருள்தேடி உடம்பை வளர்ப்பவர்களும்அப்பொருளை பாசத்தாருக்குக் கொடுத்து இன்புறுபவர்களும்கோயிலதிகாரிகளாய்த் தேவத்திரவியத்தைப் புசிப்பவர்களும்விருத்திப் பொருட்டு ஆசாரியாபிஷேக முதலியன செய்துடையோர்களும்விருத்திப் பொருட்டு சிவவேடந்தரித்தவர்களும்விருத்திப் பொருட்டுத் துறவறம் பூண்டவர்களும்சிவஞானநூல்களைச் சொல்லிப் பொருள் வாங்கி வயிறு வளர்ப்பவர்களும்பிறரும் பதிதர்களுள் அடங்குவர்கள்.

இங்கே சொல்லிய முறையன்றிசிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டுத் தமக்குத் திருமேனியாகக் கொண்டருளிய குருலிங்கசங்கமமென்னும் மூன்றிடத்தும் ஆசையும் பணியும் வழிபாடும் கொடையும் அடிமைத் திறமும் உரிமையுடையவர்கள் எந்தக் கருமஞ்செய்தாலும் முதற்சாதியெனக்கொள்ளப்படுவார்கள்."

ஆகபிறப்படிப்படையில் அல்லாமல் சிவவழிபாட்டினை மேற்கொள்ளும் முறைமையிலேயே சாதி அமைப்பை ஆகமங்கள் வகுத்திருப்பதை நாவலர் பெருமான் தெளிவுபடுத்தியுள்ளார்பிறப்படிப்படையில் சைவத்தில் உயர்ச்சி தாழ்ச்சி இல்லை என்பதற்கு சைவாகமங்களைத் தெளிவுறக் கற்றுத்தெளிந்த நாவலர் பெருமானின் எழுத்துக்களே சான்றுகளாய் உள்ளன. சைவ சமய வழிபாட்டு கற்புநெறியின் அடிப்படையிலேயே சாதியை நாவலர் பெருமான் நோக்கியமையாலேயே, சிவதீட்சை பெற்றிராத தில்லைத் தீட்சிதரிடமிருந்து திருநீற்றினைப் பெற்றுக்கொள்ள மறுத்தார்.
 

வெறும் எழுத்தில் மட்டும் சாதியிலும் சமயம் அதிகமென்று கூறாது, 
நாவலர் பெருமான் அவ்வண்ணமே வாழ்ந்தார் என்பதற்கு ;

1.அனைத்து சைவசமயப் பிள்ளைகளுக்குமான சைவப் பாடசாலைகள் (நாவலரினதும் அவரது தொண்டர் நிறுவியதுமான பாடசாலைகளே ஏழைகளும் கற்கும் கூடமாக அன்று தொட்டு இன்றுவரை விளங்குவதும்மிசனரிப் பாடசாலைகள் அன்று தொட்டு இன்றுவரை மேற்தட்டுவர்க்கத்தாரின் கல்விக்கூடங்களாக விளங்குவதும் கண்கூடு.)

2. 
வறுமை ஏற்பட்டு மக்களை வாட்டியபோதுகஞ்சித் தொட்டி தர்மம் என்று அனைவருக்கும் உணவு வழங்கும் பணியை மேற்கொண்டமை

3.
சிவதீட்சை பெற்றிராத தில்லைப் பிராமணரிடமிருந்து திருநீறு பெற்றுக்கொள்ள மறுத்தமை
என்பன தக்க சான்றுகளாகும்.

சைவசமயம் சாதி கடந்தது என்பதை தனது எழுத்துக்களால் ஆவணப்படுத்தியதோடுவாழ்க்கை நெறியிலும் அதனைக் கடைப்பிடுத்து ஒழுகிய  உத்தமனாருக்கு பேராசிரியர் எச்.கூல் போன்றோரால் சாதித்துவ அடையாளம் கொடுக்கப்படுகின்றதென்றால் அது
கிருஷ்தவ அடிப்படை வாதத்தின் வெளிப்பாடு அல்லவா?

THE EXILE RETRUNED : A SELF PORTRAIT OF THE TAMIL VELLAHLAS OF JAFFNA
என்ற நூலில் கதிர்காமத்தில் கலைவந்து ஆடுகின்ற திருமணமான பெண்களின் நிதம்ப அசைவானது முருகனுடன் உடலுறவு கொள்வது போன்ற பாவனையில் உள்ளதென்று சுட்டி தமிழ்ப் பெண்களின் கலையாட்டத்தை விமர்சித்த, சைவசமயத்தின்பாலான கீழ்த்தரமான காழ்ப்புணர்வு கொண்ட கிருஷ்தவ மத
அடிப்படைவாதியான பேராசிரியர்(?) ரட்ணஜீவன் எச். கூலுக்கு  சுதேச பண்பாடுகளை மீட்டெடுத்து சைவ மறுமலர்ச்சியை ஏற்படுத்திய நாவலர் பெருமான்பால் காழ்ப்புணர்வு ஏற்படுவது இயல்புதானே!!! 

திரும்பச் திரும்பச் சொல்லும் பொய்பொய் உண்மையாகும் என்பதற்குநாவலர் பெருமானை நலிந்தோரிடமிருந்துஅந்நியப்படுத்த வேண்டுமென்ற செயற்திட்டத்தோடு கிருஷ்தவ மிசனரிகளால் நாவலர் பெருமான்பால் சோடிக்கப்பட்ட சாதித்துவ அடையாளம் தக்க சான்றாம். 




நாவலர் பெருமானுக்கு தமிழர் அனைவரும் விழாவெடுத்து கொண்டாடிய இக்காலகட்டத்தில் பேராசிரியர் எச்.கூலின் நாவலர் மீதான உண்மைக்குப்புறம்பான கீழ்த்தரமான விமர்சனம் வந்திருப்பது மிசனரிகளின் நாவலரை நலிந்தோரிடமிருந்து அந்நியப்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்ட சதித்திட்டத்தின் இன்றைய தொடர்ச்சி   எனலாம்.

ஆகநாவலரின் ஆக்கங்களில் தமிழர் கொள்ளும் புலமையே அடிப்படைவாத மிசனரிகளின் சதிகளில் தமிழர் வீழாது இருப்பதற்கு வழிவகுக்கும்.

வாழ்க நாவலர் நாமம்!


பேரா.ரட்ணஜீவன் எச்.கூல் எழுதிய கட்டுரை
Navalar myths aborting reconciliationThe Island
Colombo Telegraph

சி. வை. தாமோதரம்பிள்ளை

மேலும் படிக்க...