"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Friday, September 14, 2012

அன்புடைய சீரடிபாபா பக்தர்களே.........

அன்புடைய சீரடிபாபா பக்தர்களே.........இப்பதிவு உங்களுக்குரியது! இப்பதிவால் மனம் நொந்தால் மன்னித்துவிடுக! ஒருசில சீரடிபாபாவின் பக்தர்களின் செயற்பாடுகளாலும் இலங்கையில் அவர்கள் அமைப்பின் செயற்பாட்டினாலும் எழுதப்படும் பதிவு!  அனைத்து சீரடிபாபா பக்தர்களையும் இப்பதிவு சுட்டமுனையவில்லை!

அண்மையில் முகநூலில் பலர் பகிர்ந்துகொண்ட ஒரு படம் பல சைவர்களின் மனதைப் புண்படுத்தியமையால் புண்பட்டவர்களின் சார்பில் இப்பதிவை எழுதுகின்றேன்.

குறித்த படம் தஞ்சைப்பெருங்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் எம்பெருமான் பெருவுடையாரின் படமாகும்!!! அட...பெருவுடையாரின் படத்தைப்பார்த்தால் சிவானந்தம்தானே பெருக வேண்டும்? மனம் புண்படக்காரணம் என்ன?

பெருவுடையாருக்கு அந்தணர்கள் பால் அபிடேகம் செய்யும் அருமையான படம்தான்! ஆனால் பெருவுடையாரின் இலிங்கத்திருமேனியில் சீரடிசாய்பாவாவின் படம் கணிணித்தொழில்நுட்பத்தின் உதவியுடன் வரையப்பட்டிருந்தது. அதாவது தஞ்சை பெருவுடையாரில் சீரடிசாய்பாபா காட்சியளிப்பதுபோல் குறித்தபடம் அமைந்திருந்தது.

இது எவ்வளவு அறிவீனமான செயல்!!! தமிழரின் மாண்புக்கும் சமய சால்புக்கும் இழுக்குத்தரும் செயல்!!!!

ஏன் குறித்தபடம் சைவமாண்புக்கு பங்கமானது?

சீரடிசாய்பாபா என்பவர் பிறப்பு இறப்பு என்னும் மனித இலக்கணத்துக்கு உட்பட்டவர்! அவரை மகானாக கருதுவதில் தவறில்லை......காரணம் ஆன்மீகத்தில் உயர்ந்தவர்களை மகான்களாக கருதுவது முறையானதே!

பிறப்பு-இறப்பு என்பது யாருக்கு அமையும்? சைவசமயத்தின்படி, வினையினால் பீடிக்கப்பட்டவர்களுக்கே பிறப்பு-இறப்பு உண்டு!!!!

திருமால் பிருங்கிமுனிவரின் மனைவிமேல் கொண்ட மையல் காரணமாக பிருங்கிமுனிவரிடமிருந்து
பெற்ற சாபத்தின் விளைவால் பலபிறவிகள் எடுக்கவேண்டியேற்பட , சிவபெருமானிடம் சென்று யாதுசெய்வதென்று வேண்டிநின்றார். அப்போது சிவபெருமான் "உலகத்தில் அதர்மங்கள் ஓங்கும்போது அவற்றை நீக்கி தர்மத்தை நிலைநாட்டிட பத்துமுறை பிறப்பாயாக" என்று பிருங்கிமுனிவரின் சாபத்தை திருமாலுக்கு பெருமைசேர்க்கும் வகையில் அமைத்துக்கொடுக்கின்றார். இச்செய்தியை சைவசித்தாந்த சாத்திரநூல் கூறுகின்றது! ! அதாவது பிறப்பு என்பது வினையினால் வருவது!

பத்துமாதங்கள் கருவாசம் என்பது எவ்வளவு இடர்பாடுடையது என்பதை திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தெளிவாக உரைத்துள்ளார்!

"யானை முதலா எறும்பீ றாய
ஊனமி லியோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்
தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்

இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்

மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் நூறலர் பிழைத்தும்

ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்

எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படுந்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
" -திருவாசகம் (போற்றித் திருவகவல்)

பிறவிப் பெருங்கடல் - திருக்குறள்

ஆக தமிழரின் பொதுமறையாகிய திருக்குறளில் திருவள்ளுவர்கூட பிறவியை "பெருங்கடல்" என்று துன்பத்தோடுதான் ஒப்பிடுகின்றார்!

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை - திருக்குறள்

ஒருவன் ஒன்றை விரும்புவதானால், பிறவா நிலையை விரும்ப வேண்டும் என்று பிறத்தலை துன்பத்தோடுதான் ஒப்பிடுகின்றார். வினையின் பயன் என்றே சொல்கின்றார்.

சில குழந்தைகள் பிறந்தவுடனேயே இறப்பது ஏன்? கருவாசத்தில் படுகின்ற துன்பமளவுதான் அவர்களது வினை இருந்துள்ளது என்பதே அதற்கான விடை! இதை மகாபாரதத்தில் பிறந்தவுடனேயே கங்கையில் வீசப்பட்டு இறக்கின்ற சந்தனு மன்னனுடையதும் கங்காதேவியினுடையதுமான ஏழு குழந்தைகளின் கதை உணர்த்துகின்றது! அதாவது வசிட்டரின் காமதேனுவை அபகரிக்க சென்ற அட்டவசுக்கள் என்னும் எட்டுத்திசைக்காவலர்களுக்கும் வசிட்டமாமுனிவர் வழங்கிய சாபத்தினால் அவர்கள் கருவாசம் கொண்டு உடனேயே இறக்க வேண்டியிருந்தது! எட்டாவது குழந்தையாகிய அட்டவசுக்களில் ஒருவராகிய பிரபாசன், காமதேனுவை கொள்ளையிட விருப்பிய தலைமை நபர் என்பதால் பூமியில் தொடர்ந்து மீஷ்மராக வாழ்ந்து அவருக்குரிய வினையை போக்கவேண்டியிருந்தது! மீஷ்மராக நாம் காணும் நபர் மிகப்பெரும் மேதையாக, ஞானியாக மகாபாரதத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பினும் அவருடைய பிறப்புக்கு காரணமான வினை கொடூரமானது!

ஆக; இன்று நாம் ஞானிகளாகவும் மகான்களாகவும் போற்றுபவர்கள் அனைவரும் ஏதோவொரு வினையின் விளைவால் பூமிக்கு வந்தவர்களே! மகாபாரதத்தில் பீஷ்மர் போற்றப்படுவதுபோல் நாமும் அவர்களை மகான்களாக போற்றுவதில் குறையில்லை!

 பிறப்பு-இறப்பு என்னும் வலைக்குள் அகப்பட்ட அனைவரும் ஆன்மாக்களே! கடவுளர்கள் அல்ல! அவர்களால் எமக்கு பாவவிமோசனமும் தரமுடியாது! முக்தியும் தரமுடியாது! சிறந்த மகான்களை முன்னுதாரணமாக கொண்டு வாழ்க்கையை அமைப்பதுமட்டுமே அவர்களிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரேயொரு பயன்!!!

ஆனால் இன்று? சீரடிபாபாவை கடவுளாக சிலர் வணங்குகின்றனர்!!! சரி; அது அவரவர் மனித உரிமை! அதில் குறைகாண்பது தேவையற்ற ஒன்று!
ஆனால் பிறப்பு-இறப்பு என்னும் இயற்கை நியதிக்கு உட்பட்ட சீரடி சாயிபாபாவை, அனைத்து விதிகளையும் கடந்த கடவுள் என்னும் தமிழரின் சொல்லுக்கு பண்டுதொட்டு பொருளாக விளங்குகின்ற பிறப்பு- இறப்பற்ற சிவபெருமானுடன் ஒப்பிடுவது முறையானதா? சைவர்களின் மனதை நோகடிக்காதா?

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே - திருமந்திரம்

பதவுரை:-
சிவபெருமான் என்றும் பிறப்பில்லாதவன். பின்னற் சடையினையுடையவன். அளவிடப்படாத பேரருளாளன். என்றும் அழிவிலாதவன். யாவர்க்கும் குறைவிலா நிறையின்பம் அருளி அவரை விட்டு நீங்காதவன். அவனைத் தொழுங்கள். அங்ஙனம் தொழுதால் அவன் உங்களை ஒருபோதும் மறவான். மாயைக்கு மறுதலையாகிய இயற்கைப் பேரறிவினன்.
(நன்றி:-http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=118&pno=12)

சிவனொடொக்குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை - திருமந்திரம்

உங்களைப்போன்றவர்கள் யாரேனும் ஒருவரை நாளை சிவபெருமானோடு ஒப்பிடுவர் என்பதை உணர்ந்துதான் திருமூலர் சிவபெருமானோடு ஒப்பிடக்கூடிய ஒருவரோ அவருக்கு இணையான ஒருவரோ எங்கனும் இல்லை என்று அறிவுறித்தியுள்ளார்.

ஆக; சிவபெருமான் பிறப்பு இறப்பு அற்றவர் என்று திருமந்திரம் கொடுத்துள்ள இலக்கணத்தை படித்ததேயில்லையா?
சிவபெருமானோடு யாரையும் ஒப்பிடக்கூடாது என்று திருமந்திரம் சொல்லியுள்ளதை கண்டதேயில்லையா? கண்ணிருந்தும் குருடர்களாக இருப்பது எவ்வளவு அறிவீனம்!

தமிழில் இருப்பதை தமிழரே அறியாவிட்டால் தமிழரின் மாண்பை யார்தான் காப்பது?

இலங்கையில்  கொழும்பில் உள்ள ஆலயம் ஒன்றில் சீரடிசாய்பாபாவுக்கு சிலைவைத்து வழிபாடு நடைபெறுகின்றது! நாளை நித்தியானந்தாவின் பக்தர்கள் அவருக்கும் ஆலயத்துள் சிலைவைத்து வழிபட உரிமைகேட்டால் எங்கள் சமயத்தின் நிலை எவ்வளவு தாழ்ந்துவிடும்???எனக்கு என்னுடைய தாய்-தந்தையரை கடவுளாகக் கருத உரிமையுண்டு! அதற்காக, ஆலயத்தில் என் தாய்-தந்தையருக்கும் சிலை வைத்து வழிபட நான் விரும்பினால் எல்லோரும் தங்கள் தங்கள் தாய்-தந்தையருக்கும் சிலைவைத்து வழிபட உரிமைகேட்டு வந்துநிற்பர் அல்லவா?
ஆக; நான் கடவுளாகக் கருதும் என் பெற்றோருக்கு ஆலயத்துள் சிலைவைத்து வழிபாடு நடத்தினால்
எப்படிப்பட்ட இழிநிலை எங்கள் சமயமரபுக்கு ஏற்படும்?

ஆக; குஷ்பூவுக்கும் கோயில்கட்டினார்கள்! யார் இடைஞ்சல் செய்தது! அதுபோல் அவரவர் தாம்விரும்பும் நபருக்கு தனிக்கோயிலை தமது சொந்த இடத்தில் கட்டிக்கொள்வதில் எவருக்கும் தலையிடியில்லை!
ஆனால் சைவாலயத்துக்குள் குஷ்பூவுக்கு சிலைவத்தால்? வைக்ககூடாது என்று எப்படி வாதிடமுடியும்? அவரையும் சிலர் கடவுளாகக் கருதலாம்தானே? அது அவர்களின் தனிப்பட்ட உரிமைதானே?

ஆக; ஒன்றுக்கு வழிவிட்டால் எல்லாவற்றுக்கும் வழிவிடவேண்டிவரும்! சைவம் சீர்கெட்டு தமிழர் மரபு சிதைந்துதான் போகும்!!!!
பணபலத்தால் எதையும் சாதிக்கலாம் என்று வந்துவிட்ட கலிகாலம் இக்காலம் என்பதால் பணபலம் உள்ளோர் சாதிக்கின்றனர்!!!! அவ்வளவுதான்!

நல்லூர் தேரடியிலிருந்து அற்புதங்கள் பலசெய்த யோகர் சுவாமிகளுக்கு நல்லூர் உட்பட சைவாலயங்கள் எங்குமே சிலையில்லை!!! காரணம் பணபலம் யோகர்சுவாமி மடத்திற்கு உண்டு! இத்தனைக்கும் அவரொரு சிவனடியார்! சைவசமயி! சிவனடியார் வழிபாடு சிவமுக்தி தரும் என்று சைவநெறி உரைக்கின்றது!  ஆனால் நாயன்மார்களைத் தவிர வேறு எவருக்கும் சிவாலயத்துள் சிலைவைப்பதில்லை என்ற மரபுகாரணமாகவே அவருக்கு இன்றுவரை சிலை எழுப்ப யாரும் முனையவில்லை!
பிரபல்ய ஆசையும் சைவசமயநிந்தையும் யோகர்சுவாமி பக்தர்களுக்கு இல்லை!!!! கடவுள் சிவபெருமான் ஒருவரே என்ற சைவசிந்தை அவர்களிடம் உண்டு! முக்தியையும் சித்தியையும் வினைகளில் இருந்து விடுதலையையும் சிவபெருமான் ஒருவராலேயே வழங்கமுடியும் என்ற தெளிவும் உண்டு!

எனக்கு ஒன்றுமட்டும் தெரியவேயில்லை......தமிழகத்தில் எத்தனையோ சித்தர்களும் மகான்களும் வாழ்ந்துள்ளனர்! அனைவரும் மகான்களாகவும் சித்தர்களாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர்! ஆனால் தமிழகத்திற்கு அப்பால் பிறந்து மகான்களாக மிளர்ந்தவர்கள் கடவுள்களாய் வடிவம் கொள்கின்றனர்! அது எப்படி அவர்கள் மட்டும் கடவுள்கள் ஆகுகின்றனர்?

இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்ற பழமொழி நினைவுக்கு வருகின்றது!!!! அமெரிக்கனுக்கு அமெரிக்க சுதந்திரதேவிச்சிலையின் அருமை தெரியாது என்பார்கள்! உண்மைதான்! நம்மவர்களுக்கு நம் சமயம் எது? நம் மாண்பு எத்தகையது? எதுவுமே தெரியாதே!!!!ஆக; பிறப்பு இறப்பு என்று வலைக்குள் அகப்பட்ட எவரையுமே சிவபெருமானுடன் ஒப்பிடுதல் பாவமாகும்! சைவசமயத்தை நிந்தித்த விசமச்செயலாகும்! சீரடிசாய்பாபா என்பவர் சைவசமயி அல்லர்! எனவே அவரை கடவுளாக கருதுபவர்கள் சைவசமயிகளாய் இருப்பது முரணாகும்! எனவே சைவசமயத்தைச்சாராதோர் சைவசமயக்கடவுளாகிய சிவபெருமானோடு , அதுவும் தமிழரின் மாண்பின் வடிவமாக விளங்கும் தஞ்சைப்பெருங்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருவுடையார் சிலையில் சீரடிசாய்பாபாவை வரைந்து கணிணியில் உலாவவிடுவதென்பது எவ்வளவு அநாகரீகமான செயலாகும்!!!

சீரடி சாய்பாபாவின் பக்தர்கள் அவரை சிவனாகவும் அல்லாவாகவும் யேசுவாகவும் யோகோவாவாகவும் கருதிட உரிமையுண்டு! ஆனால் இஸ்லாமியரின் மக்காவிலும் கிருஷ்தவர்களின் ஜெருசலேத்திலும் சைவர்களினது சைவக்கோயிலிலும் சீரடிபாபாவின் படத்தை வரைந்து சமூகத்தில் விநியோகிக்க எள்ளளவும் உரிமையில்லை!!! சீரடிபாபா இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்தானே? அவர் படத்தை மக்காவில் தெரிவதுபோல் வரைந்து பாருங்களேன்........முடியாது! ஏனெனில் சமயசண்டைகளை உருவாக்கிய குற்றத்தில் சிறைசெல்வீர்கள்!
ஆனால் சைவசமயம் அன்பே சிவம் என்பதாலும்
சிவஞானமே சைவரின்வழி என்பதாலும் உங்களின் அநாகரீகச்செயல்களுக்கு அமைதியாய் இருக்கின்றது!

 
சைவக்கோயிலுக்குள் அதுவும் தமிழரின் மாண்பின் வடிவமாக விளங்கும் சோழநாட்டின் சரித்திரமாக காட்சியளிக்கும் தஞ்சைப்பெருங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருவுடையாரில் நீங்கள் பிறப்பு-இறப்புக்கு அகப்பட்ட ஒருவரின் படத்தை கணிணித்தொழில்நுட்பத்தால் புகுத்தியிருப்பது நீங்கள் எவ்வளவு இழிவான தரம்தாழ்ந்த நிலையில் உள்ளீர்கள் என்பதை சைவ உலகிற்கு காட்டியிருக்கின்றது!

எளியேனின் விண்ணப்பம் யாதாயின்;

உங்கள் ஆன்மீக வியாபாரத்தை கச்சிதமாக காசுபார்க்க நடத்துங்கள்! அரசியல்-பணபலம் எதுவுமற்ற சிவஞானம் ஒன்றையே சொத்தாகக்கொண்டுள்ள
சைவசமயத்தை சிதைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

உங்களின் வழிப்பாட்டு விருப்பம் எதுவாகவும் இருக்கலாம் ! ஆனால் ஏனையவர்களின் மனங்களை நோகடிக்காது உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்!
யாதொரு தெய்வம் கொண்டீர்
அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம்
வருவர் மற்றத்தெய்வங்கள்

வேதனைப் படும் இறக்கும்
பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலான் இவைஇ லாதான்
அறிந்துஅருள் செய்வன் அன்றே!
-
சிவஞானசித்தியார் (சைவசித்தாந்த சாத்திரநூல்)


பதவுரை:-
எந்தத் தெய்வத்தை வணங்கினும் மாதொருபாகனாகிய சிவனே வந்து அருள்செய்வான்.
பிறதெய்வங்கள் யாவும் உயிர்களே! ஆகையால் அவைகள் வினைகள் செய்யும்.இன்ப துன்பம் அனுபவிக்கும்.இறக்கும்.பிறக்கும்.ஆனால் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இக்குறைபாடுகள் இல்லையாதலால், செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக் கொடுக்கவல்லவன் ஆவனே ஆவான்.


"சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது சால
உயர்சிவ ஞானத் தாலே
போழ் இள மதியினானைப்
போற்றுவார் அருள்பெற் றாரே" -சிவஞானசித்தியார் (சைவசித்தாந்த சாத்திரநூல்)
மேலும் படிக்க...