"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, March 16, 2013

ஆன்மாக்களும் சிவமான குருவும்! சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் - பாகம் 12


ஆன்மாக்கள் அநாதி காலந்தொட்டு உள்ளதென்பதையும், அதன் சதசத்து,சிதசித்து இயல்புகளையும் முன்னர் பார்த்தோம்.
ஆன்மாக்களின் இயல்பினை மூன்று உதாரணங்களினால் எளிதாக உணரலாம்.அதை இப்பகுதியில்ப் பார்ப்போம்.

1) பூவின் மணம் - பூவின் மணத்தை உணரமுடியுமே தவிர காணமுடியாது. உடல் வேறு. உயிர் வேறு. ஆனால் இரண்டையும் பிரித்து உயிரைத் தனியே காணமுடியாது. உயிரற்ற உடலும் உக்கி அழிந்துவிடும்.

மின்சாரத்தை நாம் இதுதான் மின்சாரம் என்று பார்க்கமுடியாது. அதனை ஒன்றினுள் செலுத்தி மின்சாரம் இன்ன இன்ன வேலையைச் செய்யும் என்று காட்டமுடியுமேயொழிய  இதுதான் மின்சாரம் என்று ஒரு பொருளைக் காட்டமுடியாது. உதாரணத்துக்கு மின்சாரத்தால் தொலைக்காட்சிப்பெட்டி இயங்கும் என்றும் வானொலி இயங்கும் என்றும் மின்குமிழ் இயங்குமென்றும் கூறலாமேயொழிய, இதுதான் மின்சாரம் என்று மின்சாரத்தை ஒரு பொருளாகக் காட்டமுடியாது. இதனை Bertrand Russell என்னும் அறிவியலாளர் எடுத்துக்கூறியுள்ளார்.

எனவே எப்படி நாம் மின்சாரத்தை ஒரு பொருளாகக் காட்சிப்படுத்தமுடியாதோ அப்படித்தான் இதுதான் உயிர் என்று உயிரை ஒருபொருளாகக் காட்சிப்படுத்த முடியாது. ஆனால் மின்சாரத்தின் இருப்பை எப்படி மின்கருவிகளின் இயக்கத்தின்மூலம் உணர்ந்துகொள்கின்றோமோ, அப்படித்தான் நாம் உயிரின் இருப்பை உடலில்மூலம் உணர்ந்து கொள்ளமுடியும். உயிர் இல்லாத உடல் மின்சாரம் இல்லாத மின்சாதனம் போன்றது.

2)இருள் ஒளியலாக் கண்

அதுவென்ன இருள் ஒளியலாக் கண்? ஒளியுள்ளபோது கண் ஒளியைப் பெற்று ஒளியாகி பார்த்தல் தொழிலைச் செய்யும். ஒளியில்லாதபோது அதாவது இருள்வேளையில், ஒளியைப் பெறாமையினால் கண் இருளாகிவிடும்.பார்த்தல் தொழிலை இழந்துவிடும்.

 அதாவது ஒளியுள்ளபோது ஒளியாகவும் ஒளியற்றபோது இருளாகவும் கண் விளங்குகின்றது. அதாவது கண்ணுக்கென்று தன்னுடைய தன்மையென்று ஒன்றில்லை. கண்ணானது ஒளியைத் தானே தனித்துக் கொண்டிருக்குமானால் இருளிலும் பார்க்கும் தொழிலைச் செய்யக்கூடியதாக இருக்கும். அதுபோல் கண்ணானது இருள்மயமான நிலையைத் தன்னிடத்தே தனக்கென்று கொண்டிருக்குமானால், சூரியவெளிச்சம் இருந்தாலும் கண்ணால்ப் பார்க்கமுடியாது. எனவே கண்ணுக்கென்று தனித்த தனக்கென்ற ஒரு தன்மை இல்லை. அதுபோல் பாசத்துடன்(ஆணவம்,கன்மம்,மாயை) உயிர் இணைந்திருந்தால் உயிருக்கு பாச இயல்பும் பதியோடு சேர்ந்திருந்தால் பதிபோலவும் விளங்கும் இரட்டைத்தன்மை உடையது.

இவ்வாறு பதியோடு இருக்கும் போது பதிபோல் விளங்குவதால்த்தான் உயிர் அச்சமயம் தன்னைச் சிவமாகவே உணரும்! அதாவது உயிராக உணராது!இவ்வாறான நிலையைச் "சிவமாக்கி என்னை ஆண்ட" என்று மாணிக்கவாசக சுவாமிகள் கூறுவர். இதுவே உண்மையான அத்வைதம்!
அதாவது நாம் ஏற்கனவே முன்னைய பகுதிகளில் பார்த்ததுபோல சுத்தாத்வைதம் எனப்படும். அதாவது ஒன்றுமல்ல! இரண்டுமல்ல! இரண்டின்மையும் அல்ல! சுத்தாத்வைதம் என்பது இரண்டன்மை!!! சிவோகம் நிலை!!! நான் என்ற உணர்வழிந்து உயிரென்ற ஒன்றை மறந்து சிவத்தினையே
உணர்ந்துநிற்கின்றநிலையில் சிவமானேன் என்று உயிர் உணர்வுபெற்று நிற்கும்!!!
இத்தகைய ஆன்மாக்களின் இயல்பை "சார்ந்ததன் வண்ணம்" என்று கூறுவர்.  அசத்துடன் உள்ளபோது அசத்தாயும் சத்துடன் உள்ளபோது சத்தாயும் விளங்கும் ஆன்மாவின் சதசத்துதன்மை "சார்ந்ததன் வண்ணம்" என்னும் தன்மையால் ஏற்படுவதாகும்.


3)பன்னிறங் காட்டும் படிகம்
சூரியன் கிழக்காகவோ மேற்காகவோ உள்ளபோது படிகக்கல் தனக்குக்கீழ் உள்ள பொருளின் நிறத்தைப் பெற்று அதையே படிகக்கல் முழுவதும் ஊடுருவவிட்டு, அந்நிறமாகய்க் காட்சியளிக்கும். ஆனாலும் சூரியன் நேர் உச்சியில் இருக்கும்போது படிகக்கல்லின் கீழ் எந்நிறப்பொருள் இருந்தாலும் அந்த நிறங்கள் அக்கல்லில் ஊடுருவாது, படிகக்கல் எந்நிறமும் பெறாது, தன் இயல்பான வண்ணமாகவே, சூரியனின் ஒளியோடு ஒளியாகச் சேர்ந்து தோன்றும். அதுபோல் உயிர்களும் திருவருட்சக்தியை விலகியிருக்கும்வரை ஆணவம்,கன்மம்,மாயை என்னும் மும்மலப் பாசத்தோடு இணைந்திருந்து தன்னைப் பாசப்பொருளாகவே கருதிப் பாசமாகவே தன்னை உணரும். திருவருட்சக்தி நேர்பட்டகாலத்தில் பாசப்பொருட்களாகிய கருவி கரணங்கள் ஆன்மாவைத் தாக்கமாட்டாது.



உச்சிகதிர்ப் படிகம் ஒவ்வுநாள் எந்நாளோ - தாயுமானசுவாமிகள்


சூரியஒளி நேர்ப்படும்போது சூரியஒளியைப் பெற்று ஒளியாகவே எப்படிப் படிகக்கல் நம்பார்வைக்கு காட்சிதருமோ அதுபோல்  திருவருட்சக்தி பதியப்பெற்ற ஆன்மாக்கள் திருவருட்சக்தி வெளிப்படுமாறு விளங்கும். அத்தகைய ஆன்மாக்களை நாம் குருவாகக் கருதித் தொழுது அத்திருவருட்சக்தியினை நம்முள்ளும் பதியச்செய்ய முடியும். அவ்வாறு திருவருட்சக்தி  பதியப்பெற்ற ஆன்மாக்களை நாம் சிவமாகக் கருதுவது மரபாகும்.

சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ1 நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே. - திருமந்திரம்

பதப்பொருள்:-
சிவனே சிவஞானியாக அமைவதால், தனக்கு உபதேசம் செய்யும் குருவைச் சிவனென்று எண்ணித் திருவடியை அடைவார்க்கு சிவத்தினது தோழமையும் நல்ல முக்தியும் பொருந்தும்.அவர் பிறப்பின்றி மேலான சிவலோகத்தைச் சென்றடைவர்.
(ஜி.வரதராஜன் திருமந்திரம் விரிவுரை)

குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனும் ஆய்க் கோனும் ஆய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே.- திருமந்திரம்

பதப்பொருள்:-
எனது குருமண்டலத்தில் விளங்கும் நந்தி குருவே சிவம் என உபதேசித்தான். குருமண்டலமே சிவனுமாய் உயிருக்குத் தலைவனுமாயுள்ளது. குருமண்டலமே வாக்கு உணர்வைக் கடந்து விளங்கும் அரசனாகும். இத்தகைய பெருமையுடைய குருமண்டலத்தில் சிவம் உள்ளிருந்து விளங்குவதைச் சாமானியர் அறியாதவராக உள்ளார்.
(ஜி.வரதராஜன் திருமந்திரம் விரிவுரை)

இங்கு நீங்கள் அவதானித்தீர்களாயின், பாசமலங்களில் இருந்து நீங்கியவர்களில் திருவருட்சக்தி பதியும் என்பதையும் அவ்வாறு பதியப்பெற்றவர்கள் குருவாக;சிவமாக விளங்குவர் என்பதையும் பார்த்திருப்பீர்கள்!!! ஆக; குருவே சிவம் என்று நாம் போற்றக்கூடியவர்கள்............தங்கத்தை தலையணைக்குள் வைத்திருந்து தங்கச்சங்கிலிகளை வித்தைகாட்டி எடுத்து அரசியல்வாதிகளுக்கு அணிவித்து சொகுசு மகிழூர்ந்தில் சுற்றித்திரிந்தவர்களையோ, தன்னைக் கும்பிடுவதற்கு சிறப்புத்தரிசனக் கட்டணம் என்று வசூலிக்கும் அம்மாபகவான்களோ அல்ல என்பதை நன்றாக விளங்கியிருப்பீர்கள் என்று கருதுகின்றேன்!!! சரி, அடுத்த பகுதியில் ஆன்மாக்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.

முன்னைய பகுதிகள்



Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஆன்மாக்களும் சிவமான குருவும்! சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் - பாகம் 12"

Post a Comment