"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, October 5, 2011

சகலகலாவல்லி மாலை-பொருளுரை

ஸ்ரீகுமரகுருபரர் காசிக்கு சென்றபோது அங்கு மீண்டும் சைவாலயம் அமைத்திட விரும்பினார். அதற்கு காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக இருந்த தாரா ஷிக்கோஹ் என்பவரிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. கொடுங்கோல் ஆட்சி செய்த அவர்களிடம் அனுமதி பெறுவதென்பது முயல் கொம்பு காரியம் என அனைவரும் அறிவுறுத்தியிருந்தனர். எனினும் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அவரிடம் சென்று ஹிந்துஸ்தானி மொழிபெயர்ப்பாளரை அழைத்துச் சென்று காசியில் ஆலயம் அமைக்க நிலம் கேட்டபோது ஹிந்துஸ்தானி தெரியாத காரணத்தினால் அவமதிக்கப்பட்டார். கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது! எனினும் சிந்தை கலங்காது, கலைவாணியைத் துதித்து சகலகலாவல்லி பாமாலை இயற்றிச் சூட்டி ஹிந்துஸ்தானி , உருது மொழியாற்றல்களை ஒரேநாளிலேயே பெற்றுக்கொண்டார்.


தனது தவச்சிறப்பால் சிங்கத்தை தன்வசப்படுத்தி அதன்மேல் அமர்ந்து தாரா ஷிக்கோஹ்யின் அவைக்குச் சென்று தனது கோரிக்கையை ஹிந்துஸ்தானியில் கேட்டு, ஹிந்துஸ்தானியிலே அவனுடன் சரளமாக கதைத்து நாணச்செய்து அவனிடம் இருந்து இடத்துக்குரிய அனுமதியைப் பெற்று காசிமடம் ஆகியவற்றை அமைத்துக் கொண்டார். 


இவையாவும் கலைவாணியின் அருள்மழையால் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளுக்கு  கைகூடியது.எனவே, நாமும் கலைவாணியின் அருள்மழையைப் பெற்றிட இயற்றிய தமிழ்மழையை கலைவாணிமேல் பொழிகின்ற சகலகலாவல்லி பாமாலையை பாடுவோமாக!


"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 
பல்லோரும் ஏத்தப் பணிந்து' என்று மாணிக்கவாசகப் பெருமான் பொருளுணர்ந்து பாட வேண்டியதன் சிறப்பை திருவாசகத்தின் சிவபுராணத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே பொருளுணர்ந்து பாடுவோமாக! 

1)வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் 
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் 
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் 
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 
பதம் பிரித்து அமைந்த பாடல்:

வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத் 
தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து 
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் 
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.


சகலகலாவல்லியே -
எல்லாக் கலைகளையும் அளிக்கின்ற வல்லமை உடையவளே

சகம் ஏழும்அளித்து உண்டான் உறங்க -
காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக அவற்றை உண்டு, (ஆலிலைமேல்) துயின்றான்.
ஊழிக் காலத்தில் உலகங்கள் அனைத்தையும் உண்டு காத்த வண்ணம் ஆல் இலைமேல் துயில்வார் என்பது புராணச்செய்தி.

ஒழித்தான்பித் தாக - அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான்.

உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே - உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே!

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாதுகொலோ - உனது திருவடிகளைத் தாங்கும் பேறு வெண்தாமரையைத் தவிர்த்து எனது உள்ளமாகிய வெண்தாமரைக்கு வாய்க்கப்பெறாதது முறையா?

காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக உண்டு, ஆலிலைமேல் துயின்றான். அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான். ஆனால், உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரமன், கலைமகளாகிய உன்னை மனைவியாகப் பெற்று மகிழ்ந்தான். பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே! சகலகலா வல்லியே! உனது திருவடிகளை வெள்ளைநிறத் தாமரையே தாங்கியுள்ளது! வஞ்சனையற்ற குளிர்ந்த எளியேனின் மனம் வெண்தாமரை போல் ஆகிவிட்டது. எனவே எளியேனின் வெண்தாமரை போன்ற மனதினை உனது திருவடிகளை தாங்கும் ஆசனம் ஆக்கிக்கொள்ளக்கூடாதா? இன்னும் அத்தகு தகுதியான வெண்மையுள்ளம் வாய்க்கப்பெறவில்லையா? இது தகுமா? 

"வெள்ளைநிற மல்லிகையோ?

வேறெந்த மாமலரோ?

வள்ளல் அடியிணைக்கு

வாய்த்த மலரெதுவோ?

வெள்ளைநிறப் பூவுமல்ல!

வேறெந்த மலருமல்ல!

உள்ளக் கமலமடி

உத்தமனார் வேண்டுவது!" - என்ற சுவாமி விபுலானந்த அடிகளின் பாடலையும்

'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வர்' என்னும் திருக்குறளின் மலர்மிசை ஏகினான் என்பதன் பொருளையும் இங்கு பொருத்து உணர்க!



2)நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் 
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் 
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 
பதம் பிரித்து அமைந்த பாடல்:
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியில் பணித்தருள் வாய் பங்கயாசனத்தில் 
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால் 
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே. 

பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே- தாமரை மலராகிய ஆசனத்தில் வீற்றிருப்பவளே! பசும்பொன்கொடி போன்றவளே!
கனதனக் குன்றும்-குன்றுபோன்ற பெரிய தனங்களை உடையவளே!

ஐம்பால்- ஐந்து கால் எடுத்துப் பின்னப்பட்டிருக்கும் பெண்-கூந்தல் ஒப்பனை
ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே - ஐந்து பகுதிகளாக பகுத்து ஒப்பனை செய்யப்பட்ட காடுபோல் அடர்ந்த கூந்தலை தாங்கியுள்ளவளே! கருப்பாக இனிப்பவளே!

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் -  அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருள் சுவையும் சொல் சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிகளையும் ( ஆசுகவி,மதுரகவி,சித்திரக்கவி,வித்தாரக்கவி)

பாடும் பணியில் பணித் தருள்வாய்- இடையறாது பாடும் பணிக்கு எளியேனை பணித்து அருள் செய்வாயாக!

ஆசுகவி - யாரும் இதுவரை பாடியிராத வகையில் யாரும் பாடியிராத பொருளின்பத்தை தரும் வண்ணம் புதிய புதியதாக பாடல்களை இயற்றும் கலை


மதுரகவி- இசைநடையில் கவி எழுதும் கலை


சித்திரக்கவி - தேர் போன்ற சித்திரத்தில் அடுக்கி வைக்கலாம் போன்ற அமைப்பில் சொற்களை அழகுற அடுக்கி பாடுகின்ற கலை


வித்தாரக் கவி - பலவிதமான அமைப்புகளில் அமைத்து பாடுவது 


வெண்தாமரையை ஆசனமாகக் கொண்டிருப்பவளே! பசும்பொன் கொடி போன்றவளே! குன்றுபோலுள்ள் பெரிய தனங்களை உடையவளே! ஐந்து பகுதிகளாகப் பகுத்து அழங்கரிக்கப்பட்ட காடுபோல் அடர்த்தியான கூந்தலை தாங்கியிருப்பவளே! கரும்பாக இனிப்பவளே! சகலகலாவல்லியே! அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருட்சுவையும் சொற்சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிதைகளை இடையறாது பாடும் பணிக்கு எளியேனைப் பணித்து அருள் செய்வாயாக!

3)அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் 
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் 
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு 
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில் 
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித் 
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு 
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.

உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே -
எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே!

உளம் கொண்டு - விருப்பம் கொண்டு
களிக்கும் கலாப மயிலே - மகிழ்ச்சியடையும் மயில் போன்றவளே
சிந்தக்கண்டு - பொழியக்கண்டு

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்து -நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக

உன் அருள்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடும் கொலோ -  உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா?

எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே!
நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக ஆன்மீக அனுபவத்தை பெற்று உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா? அவ்வாறான அரும்பெரும் பேறை அருளுவாயாக!

4)தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் 
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலுந் 
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று 
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் 
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும் 
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று 
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

வடநூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே -  கடல் போன்ற வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 

செந்நாவில் நின்று -  நல்ல நாவினின்று 

தூக்கும் பனுவல் -  அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் 
துறைதோய்ந்த கல்வியும் - எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் 

சொற்சுவை தோய் வாக்கும் - சொற்சுவை நிரம்பிய வாக்கும் 

பெருகப் பணித்துஅருள் வாய்- பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக

கடல் போன்று விரிந்த எண்ணிலாத வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த அருஞ்செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 
அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் நாள்தோறும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக!

5)பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் 
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத் 
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக் 
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய பொற்பாத பங்கேருகம் என் 
நெஞ்சத் தடத்து அலராதது என்னே நெடுந் தாள் கமலத்து 
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக் 
கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே.


நெடுந் தாள் கமலத்து -  (திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த) நீண்ட தண்டிடைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும்
அஞ்சத்துவசம் உயர்த்தோன்- அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனும்

செந்நாவும் - சிறந்த நாவினையும்
அகமும் -மனதினையும் 

வெள்ளைக் கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய்-  ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! 

பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய - செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் 

பொற்பாத பங்கேருகம் -  பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள்

என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே - எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ?

தாள் - கால், கயிறு, முயற்சி,படி,காகிதம்,வைக்கோல்,கடையாணி,தாழ்ப்பாள்,திறவுகோல் (கழகத் தமிழ்க்கையகராதி) சிலர் நீண்ட இதழை உடைய தாமரை என்று பொருள் சொல்கின்றனர். அது பொருந்துமா என்று தெரியவில்லை! கழக அகராதிப்படி தாள் என்பது தாமரையின் தண்டையே பெரிதும் குறிக்கும்! 

திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த நீண்ட தண்டிடைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும் அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனுமாகிய நான்முகனின் சிறந்த நாவினையும் மனதினையும் ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! சகலகலாவல்லியே!
செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் செம்மையான பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள், எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ? 
பொய்கைகளில் தாமரை மலர்வது இயல்பு. எனது மனமும் நீர்போன்று மென்மையாக உள்ளது. குளிர்மையாக உள்ளது. நீர்நிலைகளில் எப்படித் தாமரை மலர்வது இயல்போ மென்மையாலும் குளிர்மையாலும் நீர்நிலை போல் ஆகிவிட்ட எனது மனமெனும் பொய்கையில் தாமரை என்னும்  உனது திருவடிகள் இன்னும் மலராது இருப்பது முறையோ என்று வருந்துகின்றார் குமரகுருபரர்.

6)பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் 
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும் 
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் 
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான் 
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும் 
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர் 
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 

எழுதா மறையும் - எழுதாமறையாகிய வேதத்திலும் 
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் -வானம்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று 
அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் - அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! 
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் - பண், பரதம்,நற்கல்வி, இனிய சொற்களால் கொண்டு கவிகள் (நூல்கள்) 
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய் - விரும்பும் காலத்தில் எளிதில் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக

வானம்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று என்னும் ஐம்பூதங்களிலும் எழுதாமறையாகிய வேதத்திலும் அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! சகலகலாவல்லியே!  பண், பரதம்,நற்கல்வி, இனிய சொற்களால் கொண்டு கவிகள் (நூல்கள்) இயற்றும் ஆற்றல் ஆகியனவற்றையெல்லாம் விரும்பும் காலத்தில் எளிதில் எளியேன் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக!

7)பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் 
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர் 
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம் 
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 



பதம் பிரித்து அமைந்த பாடல்:
பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால் 
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர் 
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் 
காட்டும் வெள் ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே!
உளம்கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் - அடியார்கள் விரும்பி எண்ணிப் புனைகின்ற முத்தமிழ்க் கலை நூல்களில் காணப்படுகின்ற தீம்பால் அமுதம் (போன்ற மெஞ்ஞானத்தை) தெளிவிக்கின்ற
ஓதி/ ஓதிமம்-அன்னம்
பேடு -பெண்
பாட்டும் பொருளும் - பாட்டும் பாட்டுக்குரிய பொருளும் 
பொருளால்பொருந்தும் பயனும்- பாடலில் பொருந்து நிற்கின்ற பயனும்
என்பால் கூட்டும்படி - எளியேனிடத்து வந்தடையும் வண்ணம் 
நின்கடைக்கண் நல்காய் - உனது கடைக்கண் பார்வையை அருள்வாயாக!

அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்ளும் என்பர் கவிஞர். பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு கலைமகள் வழங்கி அருள்பாலிப்பாள் என்பதை கலைமகளை வெண்மையான பெண் அன்னம் என்று சுட்டுவதன் வாயிலாக குமரகுருபரர் நமக்கு உணர்த்துகின்றார்.

அடியார்கள் நல்மனதால் எண்ணிப் புனைகின்ற நூல்களில் காணப்படுகின்ற வீடு பேற்றின்பமாகிய பாலையும் உலகியல் இன்பமாகிய நீரையும் தனித்தனியாக பிரித்தறிகின்ற தன்மையை உலக மக்களுக்கு உணர்த்தும் வெண்மையான பெண் அன்னம் போன்றவளே!
சகல கலாவல்லியே! பாட்டும் பாட்டுக்குரிய பொருளும் பாடலில் பொருந்து நிற்கின்ற பயனும் எளியேனிடத்து வந்தடையும் வண்ணம் எளியேனுக்கு கலைமகளே.....உமது கடைக்கண் பார்வையை அருள்வாயாக!
அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்ளும் என்பர் கவிஞர். பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு கலைமகள் வழங்கி அருள்பாலிப்பாள் என்பதை கலைமகளை வெண்மையான பெண் அன்னம் என்று சுட்டுவதன் வாயிலாக குமரகுருபரர் நமக்கு உணர்த்துகின்றார்.

8)சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல 
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர் 
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும் 
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல 
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம்சேர் 
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும் 
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 

நளினஆசனம்சேர் செல்வி- செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் 
ஒருகாலமும்- எக்காலத்திலும்
சிதையாமை நல்கும் -காலத்தால் அழியாத 
கல்விப் பெருஞ்செல்வப் பேறே- கல்வி என்னும் பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! 
 சொல் விற்பனமும்-சொல்வன்மையும்
அவதானமும்-அட்டாவதானம் தசாவதானம் சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும்( நினைவாற்றல் சக்தி) 
கவி சொல்லவல்ல நல்வித்தையும் -  சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத்தன்மையும்
தந்து அடிமைகொள் வாய்நளின - அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக!

செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளின் அருள் நமக்கு வாய்க்கப்பெறவில்லையே என்று வருந்துகின்ற நிலை எக்காலத்திலும் ஏற்படாவண்ணம் காலத்தால் அழியாத கல்வி என்னும் பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! சகல கலாவல்லியே! 
சொல்வன்மையும், அட்டாவதானம் தசாவதானம் சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும்( நினைவாற்றல் சக்தி) சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத்தன்மையும்
எளியேனுக்கு அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக!

9)சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றம்என்ன 
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலம் தோய்புழைக்கை 
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை 
கற்கும் பதாம்புயத் தாளே சகல கலாவல்லியே. 

பதம் பிரித்து அமைந்த பாடல்:
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன 
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை 
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை 
கற்கும் பதாம்புயத் தாளே! சகலகலா வல்லியே! 

நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடி - நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானை
அரசன்னம்- அரச அன்னமும்
நாண-நாணும்படி 
நடை கற்கும் பதாம்புயத் தாளே-அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே
சொற்கும் பொருட்கும் -சொல்லுக்கும் பொருளுக்கும் 
உயிராம் மெய்ஞ்ஞானத்தின் - உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவத்தின்
தோற்றம் என்ன நிற்கின்ற - (தோற்றமென  நிற்கின்ற) - தோன்றி நிற்கின்ற 
நின்னை நினைப்பவர் யார் - நினைப்பவர்கள் யாரும் இல்லை

நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானையும் அரச அன்னமும் நாணும்படி அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே! சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவமாக தோன்றி நிற்கின்ற உன்னை நினைத்து உணர்ந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள் யாரும் இல்லை! (அவ்வாறு உணர்ந்து கொள்வது எளிதான ஒன்றல்ல என்று சுட்டுகிறார் குமரகுருபரர் ) அவ்வாறான பக்குவ ஆற்றலை எளியேனுக்கு அருள்வாயாக! 

10) மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என் 
பண்கண்ட அளவில் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் 
விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் விளம்பில்உன்போல் 
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் 
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம் 
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் 
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

படைப்போன் - படைக்கும் தெய்வம் நான்முகன் 
முதலாம் விண்கண்ட தெய்வம் - முதலாக சிறப்புடைய தெய்வங்கள் 
பல்கோடி உண்டேனும்  - பலகோடி இருந்தாலும் 
விளம்பில்- தெளிந்து கூறில்
உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ - உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை 
மண்கண்ட வெண்குடைக் கீழாக- மண்ணுலகம் முழுவதையும் தன் வெண்கொற்றக்குடையின் கீழ்
மேற்பட்ட மன்னரும்- சிறப்புடைய மன்னரும்  
பண்கண்ட அளவில் - பாடலைக் கேட்ட மாத்திரத்தில் 
பணியச் செய்வாய்- பணிந்து வணங்க அருள்செய்வாயாக!

படைக்கும் தெய்வம் நான்முகன் முதலாக சிறப்புடைய தெய்வங்கள் பலகோடி இருந்தாலும் உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை என்று தெளிந்து கூறும்படியாக விளங்குபவளே! சகலகலாவல்லியே!
மண்ணுலகம் முழுவதையும் தன் வெண் கொற்றக்குடையின் கீழ் கொண்டு ஆட்சிசெய்யும் மன்னரும் எளியேனின் இனிய தமிழ்ப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பணிந்து வணங்க அருள்செய்வாயாக!
குறிப்பு:- தமிழ்ப் பெரியசாமி என்னும் அறிஞரின் உரையை எளியேனின் பதவுரையில் பெருமளவில் பயன்படுத்திக் கொண்டேன். அறிஞர் தமிழ்ப் பெரியசாமி அவர்கட்கு நன்றி. இணையத்தில் சகலகலாவல்லி மாலைக்கு பொருள் விளக்கம் பெருமளவில் உண்டெனினும் அவற்றில் பெருமளவு பொருட்பிழைகளும் உண்டு. பொருட்பிழைகள் இல்லாத விளக்கவுரையை இணையத்தில் எளியேனால் காணமுடியவில்லை! எனவேதான் தமிழறிஞர் ஒருவரின் உரையைத் தேடினேன். தமிழ்ப் பெரியசாமி என்னும் நல்லறிஞரின் உரையை கண்டேன். அவருடைய உரையை பெருமளவு பயன்படுத்தியே எளியேன் விளக்கவுரை எழுதியுள்ளேன். 

முறையான பொருளுரையுடன் கூடிய சகலகலாவல்லி மாலை இணையத்தில் இடம்பெற வேண்டும் என்ற அவா எளியேனின் நெஞ்சுள் பெருக்கெடுத்து."சகலகலாவல்லி மாலை-பொருளுரை" ஆகியுள்ளது! இங்கு ஏதேனும் இலக்கணக்குற்றம் இருக்கும் என்றால் எளியேனுக்கு எடுத்தியம்புக. இருந்தால் திருத்த வேண்டியது கடமையல்லவா? 

நன்றி
மேலும் படிக்க...