"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, March 19, 2011

சைவ ஆதீனங்களும் நிறுவனங்களும் பிள்ளையார் சிலை எரிப்பும்

வணக்கத்துக்குரிய சைவ ஆதீனங்களும் மரியாதைக்குரிய சைவ நிறுவனங்களும் மௌனமாக இருப்பது அழகா?


கடந்த 14ம் திகதி அனுராதபுரத்தில் பிள்ளையார் சிலை இனவெறிக் காடையர்களால் எரிக்கப்பட்டமையை சைவ உலகம் உரியமுறையில் கண்டிக்காமை தமிழ்மக்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுதும் பரந்து இயங்கும் சைவ நிறுவனங்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பைக் காட்டிலும் தமிழகத்தில் உள்ள சைவ ஆதீனங்களுக்கு பாரிய பொறுப்பு சைவசமூக விடயத்தில் இருப்பதை எளியேன் உரைத்துத்தான் உணர்த்த வேண்டுமா? வணக்கத்துக்குரிய சைவ ஆதீனங்களுக்கு இதுபற்றிய செய்திகள் கிடைக்கவில்லையா? 
சைவ ஆதீனங்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சுக்கு தமது கவலைகளை பதிவுசெய்தால்; இலங்கைத் தூதரகங்களுக்கு இலங்கைச் சைவசமூகம் சார்ந்த தமது ஈடுபாட்டை காட்டினால் சைவ சமூகம் பெருமையடையுமல்லவா? வணக்கத்துக்குரிய ஆதீனங்களின் இலங்கைச் சைவசமூகத்துடனான ஈடுபாட்டை வெளிப்படுத்தினால் இலங்கைச் சைவசமூகம் பாதுகாப்பு உணர்வைப் பெறும் என்பதை வணக்கத்துக்குரிய ஆதீனங்கள் உணர்ந்து கொள்வார்களா? 

இலங்கையில் பாரிய போர் நடைபெற்றபோது வணக்கத்துக்குரிய ஆதீனங்களில் சில ஆதீனங்கள் உரிய முறையில் தமது கண்டனங்களை பதிவுசெய்ததுடன் ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுத்து இருந்தனர். ஆயினும் அரசியல் பலமற்ற சைவ ஆதீனங்களால் எதுவுமே சாதிக்க முடியவில்லை என்பது உண்மையே! 


அரசியல் பலம் சைவ ஆதீனங்களுக்கு இல்லாமையும் சைவ ஆதீனங்களை இந்து அமைப்புகள்  உரியமுறையில் மரியாதை செலுத்தாமையையும் இத்தருணத்தில் உணரக்கூடியதாக இருந்தது. அன்று சங்கரமடம் இதற்கு எதிராக குதித்திருந்தால் நிலமையே வேறு! வடநாட்டு ஊடகங்கள் தொடக்கம் தென்னாட்டு சுமைதாங்கிகள் வரை யாவரும் கொதித்து எழுந்திருப்பர். ஆனால்; இந்த உண்மையை இலங்கையில் சிலர் உணரவில்லை என்பது வருத்தத்துக்குரியதே! அவர்களும் சங்கரமடத்து சுமைதாங்கிகளாக செயற்படுவது அறிவின்மையையே சுட்டுகின்றது. 


வணக்கத்துக்குரிய சைவ ஆதீனங்களுக்கு,


போப் பாண்டவரிடம் இருக்கின்ற சர்வதேச அரசியல் பலம் தங்களிடம் இல்லை என்பதையும் சங்கர மடம் போன்ற இந்துத்துவ மடங்களுக்கு இருக்கக்கூடிய இந்திய அரசியல் பலமும் தங்களிடம் இல்லை என்பதையும் சைவசமூகம் ஆதங்க உணர்வுடன் புரிந்து கொள்கின்றது. சைவசமூகம் அரசியல் அநாதைகளாக உள்ளனர் என்பதை துயரத்துடன் விளங்கிக் கொள்கின்றது. ஆனால்; பலமில்லை என்று "சிவனே என்று இருப்பது" பொருத்தமுடைய ஒன்றல்ல!  சைவ சமூகம் எங்கு எப்போது பாதிக்கப்பட்டாலும் உரியமுறையில் நடவடிக்கைகள் எடுக்க வணக்கத்துக்குரிய ஆதீனங்கள் முன்வர வேண்டும். 

சைவ நாயன்மார்களின் வரலாறு போதிப்பதும் இதையே! சிவனடியார்களுக்கு பாதுகாப்பில்லை என்றால் சைவ ஆதீனங்கள் மௌனம் சாதிக்கலாமா? சைவ நிறுவனங்கள் பொறுமையுடன் இருக்கலாமா?  உலக சைவ பேரவை அமைதி காக்கலாமா?  சைவசமூகம் அக்கறையுடன் விடுக்கும் வினாக்கள் இவை! 
மேலும் படிக்க...