"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"
Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Friday, August 22, 2008

பெரியாரும் விவேகானந்தரும்

சமீபத்தில் வலைப்பூ ஒன்றில் விவேகானந்தரை தூற்றி ராமசாமி முதலியார் ஆகிய பெரியாரின் எழுத்து பிரசுரிக்கப்பட்டிருந்தது. அப்போது என்னத்தை சொன்னாலும் பயனில்லை என்று விட்டுவிட்டேன். ஆனால் அண்மையில் என் உள்ள ஆதங்கத்தை அறிந்த எம்பெருமான் சிவபெருமான் திருவருளால் ஜீலை 2008 ஆடி என்று திகதி இடப்பட்ட ஸ்ரி ராமகிருஷ்ண் விஜயம் புத்தகத்தில் "திராவிட வேர்கள் வியந்த விவேகானந்தர்" என்ற தலைப்பில்அருமையான விளக்கக்கட்டுரை பிரசுரமாகியிருப்பது கண்டேன்.

சுவாமி விவேகானந்தரால் தமிழ்ச் சைவத்திற்கு தனிச் சிறப்பு பெரிதாக அமையாவிட்டாலும் , அவரால் மேற்கொள்ளப்பட்ட வேதநெறி மறுமலர்ச்சியை மறைப்பது தூற்றுவது சைவத்திற்கு அழகல்ல.
மிசனின் தொண்டையும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ஆனால் தனிப்பெரும் முதலாகிய தமிழரின் சிவ வழிபாட்டை பேணும் போது மிசனும் விவேகானந்தரும் சைவ உலகின் வாசலோடு சரி. அதை நினைவில் கவனமோடு கொள்ளவேண்டியது அவசியம். ஆறுமுகநாவலரின் மீள் பிரதிட்டை செய்யப்பட்ட சைவவழிபாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தாது மிசனையும் விவேகானந்தரையும் கருத்தில் எடுக்கவேண்டும்.

கொழும்பில் வளர்ந்த காலப்பகுதியில் கொழும்பு இராமகிருசுண மிசனின்( மடம்) ஆன்மீக தொடர்பை பேணும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். எனினும் ராமகிருசுணரும் சாரதா அன்னையும் குருவாகக் கொண்டதோடு சரி. வாழ்கையில் அவர்களை ஆசான்களாய் ஏற்று அறிதல் சைவவாழ்வுக்கு குந்தகத்தை ஏற்படுத்தாது என்று கருதினேன். ஆனாலும் கடவுளாக காட்டுவதும், மட சுவாமிகள் திருநீறு அணிதலையே தவிர்க்கவிரும்புவதும் ஏற்க இயலாதவை. ராம வழிபாட்டையும் கிருசுணர் வழிபாட்டையும் சிறுவரிடம் தூண்டுவதும் மனதை சங்கடப்பட செய்பவை. எப்படி சாயிபாபா, அம்மா பகவான் என்று தனிப்பெரும் தமிழர் வழிபாடு ஆகிய சைவ வழிபாடு சிதைக்கப்படுகின்றதோ அதுபோல்த்தான் இராமகிருசுணமிசனின் சில நடைமுறைகளும் அமைந்துள்ளன.
இங்கு, ஈழச் சைவ சமூகம் விழிப்படைந்தால் தானாகவே இராமகிருசுண மிசன் ஈழத்தில் சைவ அனுகுமுறைக்குள் வந்துவிடும் என்று நம்புகிறேன்.சைவ வழிபாட்டை பேணும் தொண்டு நோக்குடைய துறவிகளின் நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பு உருவானால் மிசனின் சைவ குந்தகக் கருத்துகள் தானாக மறைய வாய்ப்புண்டு.
இராமகிருசுண மிசனில் அவர்களுடைய கருத்துக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் வகையில் எதனையும் புகுத்த அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் ஆறுமுகநாவலரை வெறும் வாய்க்கு கூறிவிட்டு அவர் முதுகெலும்பையே உடைக்கும் சிலரின் செயற்பாடுகள்தான் சைவத்தின் மேன்மையை மங்கச்செய்யும் மிசனின் சில செயற்பாடுகளுக்கு காரணம் என்பதே என் கருத்து. பூசுவது திருநீறு இடிப்பது சிவன் கோயில் .......!!!



இன்ன இன்ன தேவையற்றது எங்கள் நாட்டில் என்று வரையறுத்திருந்தால் மடமும் உடன்பட்டிருக்கவேண்டியது நிர்பந்தமாயிருக்கும்.
ஆகவே திருநெறித் தமிழர்களே, உயர் சைவ வழிபாட்டை பேணுவோம். மறைநெறி வளர்த்தவர்களை ஆதரிப்போம். சைவ வீட்டில் சிவ தீட்சை அல்லாதோரை வாசலோடு நிறுத்திடுவோம். வாசலுக்கு வெளியே அவர்களின் மறை தொண்டு தூற்றப்படுவதை அனுமதியாது செயலாற்றுவோம்.
"வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க" என்று சிவத்தமிழ் வாழ்வை மேற்கொள்வோம்.

குறித்த அந்தக் கட்டுரையை இங்கு அப்படியே தருகின்றேன். வாசிக்க. தெளிவு பெறுக. பெரியார்(ராமசாமி) போற்றியதான பிரசுரம் இங்கு. பெரியார் தூற்றியதாய் பிரசுரம் அங்கு http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_19.html .
பெரியாரின் சாதி எதிர்ப்பு தோல்வி கண்டபோது மத எதிர்ப்பாகிகொண்டார். அதன் விளைவு போற்றியோர் எல்லோரையும் கண்ணை மூடிக்கொண்டு தூற்றினார்.
சாதி எதிர்ப்பிலேயே ஆழமாய் நின்றிருந்திருந்தால் ஒருவேளை தமிழகத்தில் சாதியையே இல்லாமல் செய்திருக்கலாம். ஆனால் மத எதிர்ப்பாக்கி அதில் சாதி எதிர்ப்பை இழகவிட்டுவிட்டார். விளைவு சாதியின் பேரில்தான் பள்ளிப்படிபென்று ஆகிவிட்டது. பார்ப்பனர் என்பது ஒரு சாதிக்கட்டமைப்பாக கண்ட பெரியார், தமிழரில் ஆயிரம் சாதிகள் இருப்பதை மறந்தது துன்பகரமானதே.



பெரியாரின் சாதி எதிர்ப்பை பார்ப்பனர் எனும் சிறு வட்டத்துகுள் நில்லாது ஒட்டுமொத்த சாதி எதிர்பாக வளர்த்து சாதியில்லா சமூகத்திற்காய் உழைப்போம். மத எதிர்ப்பு பெரியாரின் பிராமண எதிர்ப்பில் ஏற்பட்ட தோல்வியால் உருவானதென்று உணர்ந்து,சாதி இல்லா வேதநெறியை அவரின் புண்ணிய ஆன்மா மகிழ உருவாக்குவோம்.


இதோ குறித்த பிரசுரம் உங்கள் பார்வைக்கு



விவேகானந்தர் இல்லம் தொடர்பாக அண்மையில் எழுந்த பிரச்சினையைக் குறிப்பிட்டு சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் பின்வரும் கருத்தை வெளியிட்டுள்ளார்.
"பகுத்தறிவு இயக்கத்தின் கருத்துகளை, பெரியார்,அண்ணா ஆகியோரின் கருத்துகளைப் பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்கிற போது அவரிடம் நாங்கள் ஏன் விரோதம் கொள்ளவேண்டும்?"

சுவாமி விவேகானந்தரிடம் விரோதம் பாராட்ட வேண்டியதில்லை எனும் கருத்து வரவேற்கத்தக்கதே.ஆனால் பெரியார் மற்றும் அண்ணாவின் பெரும்பகுதி கருத்துகளை எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்று தலைகீழாக மாற்றிக் கூறியது, காலக்கணிப்பு வழுவுடையது.
சுவாமிஜி சமூகச் சீர்திருத்தம் தொடர்பாக முன்மொழிந்த கருத்துகளை பெரியார்,அண்ணா அவரவர்கள் பாணியில் வழிமொழிந்தனர் என்பதே சரியானது.
திராவிட இயக்கத்தின் முன்னோடி இதழ்களுள் ஒன்றாகப் புகழ்பெற்ற "ஜஸ்டிஸ்" எனும் ஆங்கில நாளேடு சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக-சமுதாய ஆளுமையை பெரியார்-அண்ணாவிற்கு முன்பாகவே புனைந்துரையோ,பிறழ்ச்சியுரையோ இன்றி நட்புறவுடன் போற்றியுள்ளது.
26.2.1917-இல் சென்னையில் இருந்து "ஜஸ்டிஸ்" இதழ்வெளிவந்தது.அரசியல் பார்வையில் பாரதியார் "ஜஸ்டிஸ்" இதழை "ஸ்வதேச விரோதிகளின் முக்கியக் கருவி" என்று ஒருமுறை குறிப்பிட்டார். "ஜஸ்டிஸ்" இதழின் ஆசிரியராக ஆற்காடு ராமசாமி முதலியார் 1927-இல் பணியாற்றினார். புகழ் பூத்த அரசியல் தலைவராக அவர் ஆற்றியுள்ள பணி தனி ஆய்விற்கு உரியது. அவரும், லட்சுமணசாமி முதலியாரும் ஆற்காடு இரட்டையர்கள் என்று போற்றப்பட்டனர். இருவருமே சுவாமி விவேகானந்தரைப் போற்றி மகிழ்ந்தவர்கள்.
"ஜஸ்டிஸ்" இதழின் தலையங்கங்களில், சுவாமி விவேகானந்தரின் கட்டுரைகள்,உரைகளில் இருந்து மேற்கோள்களை எடுத்தாண்டதோடு,சரியான மதிப்பீடுகளையும் செய்தார்.
பிராமணிய எதிர்பானது, சமய எதிர்ப்பாக, ஆத்திக எதிர்ப்பாக மாற்றப்படாமல் இருந்த சூழலில் ராமசாமி முதலியாரின், பிராமணர் அல்லாதார் இயக்கப் பணி அமைந்தது.அவர் தம்மை தூய வைணவராக அடையாளம் காட்டிக் கொண்டவர்.
"புரோகிதத்துவ எதிர்ப்பு இயக்கம்", "காத்தியும் வர்ணாச்ரம தர்மமும்" எனும் இரண்டு தலையங்களை விரிவாக எடுத்தாண்டுள்ளார். அவரது சொற்றொடர்களைத் தன்மயமாக்கிக் கொண்டும் எழுதியுள்ளார்,ராமசாமி முதலியார்.
"வேதாந்தவிற்பனரான சுவாமி விவேகானந்தர், புரோகிதர் தலையீடுகளை உறுதியாகவும், நேர்மையாகவும் கண்டித்துள்ளார்" என்று தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது தலையங்கத்தில் சுவாமிஜியின் "வேதாந்தமும் தனியுரிமையும்" எனும் அற்புதமான உரை(1896) மிகவிரிவாக எடுத்தாளப்பட்டுள்ளது. தனியுரிமையை எதிர்த்து போராட வேதாந்தம் உறுதுணையாக நிற்கின்றது என்பதை மிகத்தெளிவாக சுவாமிஜி விளக்கியுள்ளார்.
சுவாமிஜி , 1896-இல் லண்டனில் 'தனியுரிமை"எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை, ராமசாமி முதலியாரை ஆட்கொண்டது. இந்த உரையி ஒருபகுதியை தலையங்கத்தில் வழங்கிவிட்டு, ராமசாமி முதலியார் சுவாமி விவேகானந்தரை "ஜீவன் முக்தர்" என்று ஏற்றிப் போற்றியுள்ளார்.
"சுவாமிஜிவின் சொற்கள் உன்னதமான ஆன்மா எழுச்சியை தரவல்லன; புனிதன் மிக்க ஒரு ஜீவன் முக்தரின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டச்சொற்கள்" என்று வர்ணித்தார்.
".......நீங்கள் உடல்பலமோ,அறிவுபலமோ அதிகமாகப் பெற்றுள்ளதால் என்னைவிட உங்களுக்கு உரிமை அதிகம் இருக்கக்கூடாது.பொருள் அதிகமாக இருப்பதால் நீங்கள் என்னைவிடப் பெரியவர் என்ற நினைப்பும் உங்களுக்கு வரக்கூடாது.ஏனெனில் இந்தப் பேதங்களையெல்லாம் கடந்து நமக்குள் ஓர் ஒருமை விள்ங்குகிறது.".சுவாமிஜியின் இந்த உரை தலையங்கத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சுவாமி விவேகானந்தரை அருமையான ஆங்கிலத்தில் பின்வருமாறு போற்றிப் புகழ்ந்துள்ளார் ராமசாமி முதலியார்.


Swami Vivekananda did not care if in his remarks he offended the sentiments and susceptiblities of any section of the people.He poured out his heart to them, told his audience in burning words of eloquence and true faith where they were lacking, showed them their weak points, refused to palliate the crimes against society committed by any section, and gave them lessions which must have gone home to their inmost hearts.

Yet there was no vulgar abuse, no ringing denunciations, no violent language. The grace of the savants, the sharpness of the zeolot, and the sincerity of one of the noblest souls in India combined to add to the divinity of his message.


"சுவாமி விவேகானந்தர், எங்கே தமது கருத்துகள் பிறரது உணர்ச்சியைப் புண்படுத்தி, குறைகளைச் சுட்டிக்காட்டிவிடுமோ என்று கவலைப்பட்டதில்லை.அனல் கக்கும் எழுச்சிமிகு சொற்களாலும், உண்மையான நம்பிக்கையுடனும் தன் உள்ளத்தைத் திறந்து காட்டி அவர்களின் குறை என்ன என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
"சமுதாயத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும்,தீமைகள் செய்தாலும் , சுவாமிஜி புகட்டிய பாடம் அவர்கள் நெஞ்சில் ஆழப் பதிந்தது.
"ஆனாலும், தரக்குறைவாகச் சாடுவதோ, வீண் கண்டனமோ, வன்சொல்லோ அவரிடம் அறவே இல்லை.ஞானிகளின் கருணை , ஆர்வம் உடையவரின் கூர்மை,இந்தியாவின் ஒரு உயரிய ஆன்மாவின் நேர்மை இவற்றுடன் தெய்விகமும் கலந்தது அல்லவா இவரது ஒவ்வொரு செய்தியும் ஆகும்!"
இவ்வாறு சொல்லொவியம் தீட்டினார் ராமசாமி முதலியார்.கல்விப் புரட்சி தொடர்பான மற்றும் சுவாமிஜியின் பாமர மக்கள் முன்னேற்றக் கருத்துகள் ராமசாமி முதலியாரைக் கவர்ந்தன.
தொடர்ந்து ஜஸ்டிஸ் ஆசிரியர் சுவாமிஜிக்குப் பின்வறுமாறு புகழ்மாலை சூட்டினார்.
"ஆற்றல் மிக்க அறிவினர், தூய்மையான சமூக சீர்திருத்தவாதி, புனித ஆத்மா,அவரது இயலபான பணியின் ஓர் அம்சமாக வாழ்வாதாரப் பிரச்சினைகளுடன் நேரடித் தொடர்பு கொண்டு மக்களினுடையே சமத்துவப் பாடங்களைப் போதித்தார்."
இவ்வாறு திராவிடப் பாரம்பரியத்தின் அடிவேர்களே விவேகானந்தரைக் கண்டு வியந்த வரலாற்றை எல்லோரும் அறிந்திட வேண்டும்.




பி.கு- திரும்பத்திரும்ப கேட்கிறேன்..............தயவுடன் வேண்டுகிறேன்..........பெரியாரின் அடிப்படை கொள்கையை நடைமுறைப் படுத்துவதே முதன்மையானது. அதை செயற்படுத்துங்கள்.

கவனத்திற்கு
எனது unicode எழுத்துமுறையில் உள்ள குறைபாட்டால் sri ஒலிக்குரிய சரியான கிரகந்த எழுத்தை எழுதமுடியவில்லை. அதனால் இராமகிருசுண மடத்தின் பெயரில் வரும் sriயை திருத்தமாக எழுதமுடியவில்லை. மன்னிக்க. ராமகிருஷ்ண என்பதை ராமகிருசுண என்றே எழுதியுள்ளேன். கிரகந்தத்தை இயன்றவரை தவிர்க்கும் பொருட்டு.
மேலும் படிக்க...