"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, February 2, 2011

சைவ மங்கையர் கல்லூரியும் கழகமும் தமிழ்ச்சால்பை எப்போது பெறுவர்?

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" 
என்ற திருமூலர் நாயனாரால் சிவபூமி என்று சிறப்பிக்கப்பட்ட திருநாடு ஈழவள பொன்னாடாகும். சிவவழிபாட்டை தொன்றுதொட்டு சிறப்பாக பேணிவருகின்ற திருப்பயனால் சிவபூமி என்று ஈழநாட்டை சிறப்பித்தார் நாயனார். அந்தச் சிவனுடன் சம்பந்தமான சைவம் அந்நிய சமயத்தவர்களின் மதமாற்றங்களினாலும் போர்சூழல் ஏற்படுத்திய தாக்கங்களினாலும் மட்டுமல்லாது; சுமார்த்தர் என்கின்ற மதப்பிரிவினரின் ஆதீக்கம் கூடிய இந்துமதம் என்ற பெயரினாலும் இன்று ஈழநாட்டில் மழுங்கடிக்கப்பட்டு வருவது பெருந்துயரை ஏற்படுத்தும் விடயமாகும்.

சுமார்த்தர் என்பவர் ஆதிசங்கரின் வழிவந்தோர். உனக்குள் கடவுள் உள்ளார் என்பதை உணராது நீதான் கடவுள் என்று சொல்லும் சுத்தாத்வைதத்துக்கு முரணான அத்வைதிகள். வர்ணாச்சிரமதர்மத்தை இன்று உள்ளதுபோல் அனுசரிப்போர். நான்காம் வர்ணத்தாராகிய சூத்திரருக்கு வேதமுரைக்க அறுகதை இல்லை என்போர். பிராமணசாதியில் பிறந்தவர்கள் மட்டுமே மடாதிபதிகளாக சமயத்தலைவராக வரமுடியும் என்ற கருத்தை உடைய சங்கரபீடத்தை சார்ந்தோர். தமிழை தீட்டுமொழியாகக் கருதுவோர். ஆதிசங்கரர் நாயன்மார்களைப் போற்றியிருக்க; இவர்களோ அதையும் பொருட்படுத்தாது நாயன்மார்களை புறந்தள்ளி வைக்கும் பழக்கமுடையோர். சிவாகம வழிபாட்டை ஏற்காதோர். வேதங்களையும் சிவாகமங்களை சிவபெருமான் சொன்னதாக ஏற்காதவர்கள். வேதங்கள் தொன்றுதொட்டு இருப்பதாக சொல்வர்.ஆனால் சிவபெருமான் உரைத்தார் என்பதை ஏற்காதவர்கள். இவர்களுக்கு பிரம்மம் தான் கடவுள். இவர்களின் கடவுள் கொள்கைப்படி சிவன்,விஷ்ணு,பிரம்மன் மூவர் மட்டுமல்ல ஆஞ்சநேயர் தொட்டு அருச்சுனன் அடங்கலாக அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர்களே! இவர்கள் தமது சுமார்த்த மதத்தை பரப்புவதற்கு இட்டுக்கதையாக ஆதிசங்கரர் சிவனின் அவதாரம் என்பர். இவர்களுக்கு சைவ தேவாரத் திருமுறைகளாயினும் சரி, வைணவ திவிய பிரபந்தங்களாயினும் சரி அவசியமான புனிதமான ஒன்றல்ல!

சைவநெறி சிவபெருமானை முழுமுதற்கடவுள் என்கின்றது. சிவபெருமானுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்கின்றது.
"ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே" என்று பாடுகின்ற மாணிக்கவாசகர், "பூமேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று ஏமாறி நிற்க" என்று முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானின் திருவருளை போற்றுகின்றார்.

கருவறை வாழ்வு,பிறப்பு,இறப்பு என்பன வினைகளின் பயனாக விளைவது என்பது சைவசமய கொள்கை. எனவே; சிவபெருமான் ஒருதாயின் வயிற்றில் கருவாக இருந்தார்,பிறந்தார்,இறந்தார் என்று சைவசமயம் ஏற்றதே இல்லை. அப்படி கருதுவதையே சிவத்துரோகமாக சிவபாதகச்செயலாக கொள்வது சைவசமயம். 
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி  மாயா  விருத்தமு மாமே -திருமந்திரம்

ஆனால்; அப்படிப்பட்ட சிவபெருமானை 'ஆதிசங்கரரின் கொள்கைகளை சைவசமயிகளிடம் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கிலும்; சிவபெருமானை ஏனைய தேவர்களுக்கு சமமானவராக தரவிறக்கம் செய்யவேண்டும் என்ற சூழ்ச்சி நிமித்தமும்" சிவபெருமானின் அவதாரமே ஆதிசங்கரர் என்று விஷமப் பிரச்சாரம் செய்வது சுமார்த்தரின் இழிநிலைக்கு எடுத்துக்காட்டாகும்!

வடமொழியே தெய்வமொழி என்றும் தமிழ் நீசபாசை என்றும் உரைப்பது சுமார்த்தம். ஆனால் சைவசமயம் திருமந்திரத்தினூடாக சிவபெருமான் இருமொழிகளிலும் ஒரேநேரத்தில் சிவாகமங்களை உமைக்கு போதித்தார் என்று தமிழையும் வடமொழியையும் சமமாக பேணுக்கின்ற சால்புடையது.

"தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே"

"ஆரிய முந்தமி ழும் உடனே சொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே"

வடமொழிக்கு எதிரான துவேசத்தையும் சைவம் ஏற்பதில்லை. தமிழுக்கு எதிரான துவேசத்தையும் சைவம் ஏற்பதில்லை.இத்தகு சைவக்கொள்கை சுமார்த்தருக்கு இடைஞ்சலானது!

சைவசமயத்துக்கு வேதம் பொதுநூல். சிவாகமம் சிறப்புநூல். தமிழில் உள்ள பதினான்கு சைவசித்தாந்த நூல்கள் சாத்திர நூல்கள். பன்னிரு திருமுறைகளும் தோத்திரநூல்கள்.  ஆனால் சுமார்த்தருக்கு இந்த தமிழ்நூல்கள் உப்பில்லாப் பண்டங்கள்! அவர்களுக்கு ஸ்மிருதிகள் மட்டுமே சமய தத்துவநூல்.

சைவப் பிராமணர்களாகிய சிவாச்சாரியார்களை நாவலர் காலத்தில் பதிதர்கள் என்று பழித்தவர்கள் இந்த சுமார்த்தர்கள். சைவ நாயன்மார்களுக்கு குருபூசை செய்வதனால் இவர்களை இவ்வண்ணம் பழித்தனர். அதற்கு நாவலர் சுமார்த்தர்களின் குருநாதராகிய ஆதிசங்கரரே நாயன்மார்களை சௌந்தரியலகரி,சிவானந்தலகரி,சிவபுசங்கம் ஆகியவற்றில் போற்றிப்பாடியுள்ளதை சுட்டிக்காட்டி அவர்களை நாணவைத்து சுமார்த்தர்களின் பழிச்சொல்லில் இருந்து சைவப் பிராமணர்களை காத்தார். 

நாவலர் சுமார்த்தருக்கு தொடுத்த கண்டனம்

ஓ சைவ சமயிகளே, உங்களெதிரே அறுபத்துமூன்று நாயன்மார்களை நிந்திக்கும் ஸ்மார்த்தர்களைக் காணும்தோறும் இந்த ஐந்து வினாக்களைக் கேட்டு,அவர்களைத் தலைகுனிவித்து அவர்கள் வாயை அடக்குங்கள்.அவ்வினாக்கள் இவை.

1. ஓ ஸ்மார்த்தர்களே, உங்கள் மத தாபகரான ஆசாரியர் சங்கராச்சாரியரோ அன்றோ?

2. சௌந்தரியலகரியும் சிவானந்தலகரியும் சிவபுசங்கமும் உங்கள் சங்கராசரியர் செய்த கிரகந்தங்கள் அன்றோ?

3. அறுபத்துமூன்று நாயன்மார்கள்ளுள்ளே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைச் சௌந்தரியலகரியினும் கண்ணப்பநாயனாரைச் சிவானந்தலகரியினும் இயற்பகை நாயனாரையும் சிறுத்தொண்டநாயனாரையும் சண்டேசுரநாயனாரையும் சிவபுசங்கத்தினும் உங்கள் சங்கராச்சாரியர் துதித்திருக்கின்றாரோ அன்றோ?

4. உங்கள் குருவாகிய சங்கராசாரியராலே துதிக்கப்பட்ட நாயன்மார்களை நீங்கள் நிந்தித்தலினாலே,அச் சங்கராச்சாரியரிடத்திலே அறியாமையையேற்றிக் குருநிந்தர்களானீர்களோ அன்றோ?

5. அறுபத்துமூன்று நாயன்மார்களை வணங்கும் பிராமணர்கள் பதிதர்களாவரெனச் சொல்லும் நீங்கள் அவர்களைத் துதிக்கும் சங்கராசாரியரைப் பதிதரெனச் சொல்லாம் சொல்லி அவரை நீங்கள் வணங்குதலாற் பதிதரிற் பதிதர்களாயினீர்களோ அன்றோ?


இந்துமதம் என்ற சொல்லாடல் சைவசமய பண்பாட்டை சிதைக்கும் விதம்!!!!

இன்று இந்து சமயம் என்னும் பெயரால் சுமார்த்தமதம் இலங்கையில் வெகுவாக மக்கள்மத்தியில் ஊட்டப்பட்டு வருகின்றது.  திருநீறு பூசியுள்ள யாவரையும் சிவனடியாராக சைவராக கருதுகின்ற ஏனாதிநாத நாயனாரைப் போன்ற சைவமக்கள், இந்துமதம் என்ற போர்வையில் இருக்கின்ற சுமார்த்தரை சுமார்த்தர் என்று அறியாது சைவர் என்றே கருதி; அவர்களுடைய சமயவழிகாட்டலை சிரமேற்கொண்டு கொண்டு; அச்சுமார்த்தர்களையே சைவசமயத்துக்கு தலைமைதாங்கச் செய்கின்ற அசிங்கங்களும் சிவபூமியில் சைவமக்களிடையே தற்சமயம் ஏற்பட்டவண்ணம் உள்ளன.

சைவ குருமார் பீடம் என்று ஏற்கனவே இலங்கையில் இருக்க; சர்வதேச இந்து குருமார் பீடம் என்று ஒன்று மலர்ந்துள்ளதே! ஏன் இந்த "சர்வதேச இந்து" என்ற பெயரென சைவர்கள் நினைத்தார்களா? சர்வதேசம் என்றால் உலகம் முழுக்கவுள்ள இந்து குருமார்களுக்கு இவர்களா தலைவர்கள்? அப்படியானால் தமிழகத்தில் வைணவ பிராமணர்கள் இவர்கள் சொல்லைக் கேட்பார்களா? ஏன் தமிழகத்தில் உள்ள சுமார்த்த பார்ப்பனர்கள் இவர்களுக்கு கட்டுப்படுவார்களா? இந்திய வடநாட்டுக்கு இப்படி ஒரு அமைப்பு இலங்கையில் உண்டென்று தெரியுமா? யாருக்கு பூச்சாண்டி காட்டுகின்றார்கள் பெயர் வைத்து? தமிழர் கிணற்றுக்குள் இருப்பதுபோல் கருதி இப்படியொரு "நொண்டி" பெயரை வைத்து ஏற்னவே இயங்கும் சைவ குருமார் பீடத்துக்கு மேலானவர்கள் தாம் என்பதை தம்பட்டம் செய்யும் இழிநிலை இவர்களுக்கு ஏன் வந்தது? சைவம் என்ற பெயர் இவர்களுக்கு பிடிக்காமல் போனது ஏன்? எல்லாம் சுமார்த்தம் செய்யும் கோலம்! சங்கரமட பணபேய் ஆட்டும் ஆட்டம்!!!!


இதுவரை காலமும் அரசு வெளியீடுகளாக வெளிவருகின்ற சைவசமய பாடத்திட்ட நூல்களில் இந்து என்கின்ற சொல்லாடல் இருந்ததேயில்லை என்றநிலைபோய், சைவநெறி பாடத்திட்ட நூல்களில் இந்துமதம் என்ற சொல்லாடல் இம்முறை வெளியாகி நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்துள் வலுப்பெற்று காணப்படுகின்றது சுமார்த்தரின் கை ஓங்கியுள்ளதை தெளிவாக்குகின்றது. இச்சைவநெறி பாடத்திட்டத்துள் வைணவசமய தமிழ்த் தோத்திரமாகிய "நாலாயிர திவ்ய பிரபந்தம்" தனிப்பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதும் இதன்தாக்கம் என்றே தெளிவுற கூறலாம். நாலாயிரம் திவிய பிரபந்தங்களை தமிழ் மாணவர்களுக்கு அறிமுகஞ் செய்யவேண்டியது கடமையே! அதை தமிழ்மொழி நூலில், தமிழ் இலக்கிய நூலில் வழமையில் உள்ளதுபோல் ஏனைய சமய இலக்கிய நூல்களுடன்(சீறாப்புராணம்,இரட்சணீக யாத்திரிகம்) இணைத்து அறிமுகப்படுத்துவதே முறை!

புறச்சமயமாக சைவசித்தாந்தத்தால் வகுக்கப்பட்ட வைணவசமய இலக்கியத்தை சைவசமய நூலில் அறிமுகப்படுத்துவது சைவசித்தாந்தத்தை உதாசீனம் செய்வதற்கு ஒப்பாகும். அதேநேரத்தில் திவிய பிரபந்தங்களை அறிமுகஞ் செய்ய வேண்டியதும் தமிழர் என்ற அடிப்படையில் சைவருக்கு உரிய கடமையாவதால் தமிழ்மொழி நூல் பாடத்திட்டத்தில் அப்பாடத்தை இணைப்பதுவே முறை. 

தற்போது செய்திருக்கும் சாம்பார் போன்ற கலப்படங்களால்; சைவ மாணவர்களுக்கு எது சைவநூல் எது வைணவநூல் என்ற அறிவே இல்லாமல் போகச்செய்கின்ற சூட்சுமம் இருப்பதை சைவர்கள் உணரவேண்டும். இன்று நாலாயிரம் பிரபந்தம். நாளை ஆதிசங்கரரின் வரலாறு. பின்னர் சங்கரமட நூலாகிய தெய்வத்தின் குரல்! இப்படித்தான் மெதுவாக தமது காரியத்தை நகர்த்துவர் சுமார்த்தர் என்ற அறிவை சைவர் பெறவேண்டும்! ஏறத்தாழ பல்லாண்டுகளாக அரசுக்கு சமயபாடத்திட்ட நூல் அச்சிடுவதற்கு நிதியுதவியும் அறிவு உதவியும் செய்துவந்த சுமார்த்த நிறுவனங்களாகிய இந்து நிறுவனங்கள் இப்போது; சுமார்த்த கொள்கையாகிய கலப்படச்சமயத்தை பாடத்திட்டத்தை மெதுவாக சைவநெறி என்ற பெயரில் நுழைத்துள்ளனர். இனி அடுத்த சில ஆண்டுகளின் தமது இலக்கை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!!!

கௌமாரம்,காணபத்தியம்,சௌரம் என்ற மதப்பிரிவுகள் இருந்ததாக சைவநெறி எங்குமே அறிந்திருக்காதபோது; சைவநெறி சொல்லுகின்ற ஆறுசமயப் பிரிவுகளின் அறிவை மறைத்து "சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம்,காணபத்தியம்,சௌரம்" என்று ஆதிசங்கரரின் புதிய ஆறுமதப் பிரிவுகளை பழைய சைவசமயப் பாடத்திட்டத்தில் சுமார்த்தர் புகுத்தியிருந்தமையும் இப்படியான இழிநிலை ஏற்படுவதற்கு அறிகுறியாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 
கொழும்பு இராமகிருஷ்ண மடத்தலைவர் சைவசமய நூலுக்கு ஆலோசகராக விளங்குகின்றமையை என்னென்று சொல்வது? சுவாமி இராமகிருஷ்ணர் ஒரு வேதாந்தி. சுவாமி விவேகானந்தர் ஒரு வேதாந்தி. இவர்களைப்பற்றி சைவசமய நூல் பாடத்திட்டத்தில் இணைத்து இருந்தபோதே நாளை கிருஷ்தவ அமைப்பு ஏதேனும் நிதியுதவி செய்தால் யேசுநாதரைப் பற்றியும் சைவசமயப் நூலில் பிரசுரிக்கத் தயங்கமாட்டார்கள் என்று சைவமக்கள் உணர்வு பெற்றிருக்க வேண்டும்.

நாளை, நாவலர் பெருமானுடன் வாதிட்டு; தோல்வி கண்டவரும் சைவசித்தாந்த நெறிக்கு முரணாக சன்மார்க்க சமரச சமயத்தை நிறுவியவருமான வள்ளாலரைப் பற்றியும் சைவநூலில் இணைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!!!!

சைவ சித்தாந்திகள் இலங்கையில் இல்லையா? அல்லது அவர்களை இந்து மாமன்றம் போன்றவை மதிப்பதில்லையா? சமயப் பாடத்திட்டம் வகுத்தவர்களில் சைவப் புலவர்களை காண முடியவில்லையே? அதுதான் பெருங்குறை!!! அல்லது வேண்டுமென்றே நடக்கும் சதியா?


ஆனால் ஒன்று தெளிவு! சுமார்த்தர் விரும்பியதுபோல் இந்துமதம் என்ற பெயரை பல இடங்களில் தாங்கிய வண்ணம் சைவசமய பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டதும் வெளியான புத்தங்கள் யாவற்றில் ஒரு பக்கத்துக்கு ஒரு எழுத்தேனும் என்ற வீதத்தில் தமிழ்கொலை  அரங்கேறியுள்ளது!!!! அபசகுணம் பார்த்தீர்களா?

தமிழரிடம் தனித்துவமான சமயப் பண்பாடு இருப்பதை பொறுத்துக் கொள்ளமுடியாத விசமிகள், இன்று இந்துமதம் என்ற பெயரில் சுமார்த்தத்தையே பரப்புகின்றனர். நீயும் கடவுள், நானும் கடவுள் என்ற உதவாத கொள்கையை சைவசமயத்துக்கு முரணான கொள்கையை இந்துமதக் கொள்கையாக போதிக்கின்றனர். இதனால்த்தான் போலிச்சாமியார்கள் உருவாகி பெருகி ஈற்றில் வேதநெறிக்கே அவமானத்தை ஏற்படுத்துகின்றனர்.

பதி,பசு,பாசம் என்கின்ற முப்பொருள் உண்மையை போதிப்பது சைவநெறி. ஆனால் நான் கடவுள் என்று பிழையான பொருளில் அத்வைதத்தை போதிப்பது சுமார்த்தம்.  இந்துமதம் என்ற பெயர் இந்தியத்தேசியத்துக்கு உதவுமே ஒழிய தமிழ்ச்சால்புக்கு உதவமாட்டாது. தமிழரை ஈற்றில் தனித்துவப் பண்பாடற்ற இனமாக மாற்றவே வழிவகுக்கும். 
வைணவ ஆதீனங்களும் சரி., ஆலயங்களும் சரி இந்தச் சுமார்த்தரை நுழையவே விடுவதில்லை. ஆனால் சைவசமயத்தவர்கள் அறியாமையில் சைவசமயத்தை இந்தச்சுமார்த்தரிடம் இந்துமதம் என்ற பெயரில் அடகுவைத்தவண்னம் உள்ளனர்.

இந்துமதம் என்ற சொல்த்தான் இன்று சுமார்த்த ஊடுருவலுக்கு ஏதுவாகியுள்ளது. இந்த இந்துமதம் என்ற சொல்; தமிழருக்கு ஏற்புடைய சொல்லா? சைவசமயத்தவர்கள் தாங்கக்கூடிய சொல்லா? 

இல்லவே இல்லை!!!!!

ஹிந்துவும் சைவநெறியும்
இந்துமதம் என்பது ஹிந்து என்பதன் தமிழ்வழிப்படுத்திய சொல்லாடல். அதாவது ஹிந்து என்ற பெயரை எழுதும்போதுகூட தமிழ்ச்சொற்களின் துணைகொண்டு எழுதமுடியாத ஒருசொல்!!!!
இது பெர்ஷியன்(பாரசீக மொழி) மொழிச்சொல்! சிந்துவெளிக்கு அப்பால் இருந்த மக்களை தமது மொழியில் திருடர் எனப் பொருட்பட அமைத்து அழைத்த சொல்தான் ஹிந்து !
ஆக; இந்தச்சொல் அமங்கலமான பொருளுடையது!  மங்கலமான சைவத்துக்கு தலைமை ஏற்கவந்துள்ளது எவ்வளவு வெட்கக்கேடானது பாருங்கள்?

இந்து மதத்தை ஒர் தனித்துவமான மதமாக கருத முடியாது எனவும், பௌத்தம் மற்றும் வைதீக மதத்தின் கலவையே இந்து மதம் எனவும் ,ஏனைய மதங்களைப் போன்று இந்து மதத்திற்கு நீண்ட வரலாறு இல்லை எனவும் இந்து மதத்தை ஓர் கஞ்சியாகவே கருத வேண்டும்" என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தமிழர்களை எள்ளி நகையாட வழிவகுத்தது இந்த ஹிந்து என்ற சொல்!

ஈ.வெ.ராமசாமி,மு.கருணாநிதி,வீரமணி போன்ற ஞானக்குறைவுள்ள நாத்தீகவாதிகள் எமது சமயத்தின் தொன்மையையும் தனித்துவத்தையும் ஏளனஞ் செய்ய வழிவகுத்த சொல் இந்த ஹிந்து என்ற சொல்!

"சிவனெனும் ஓசை அல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை உனதே" என்றார் நாவுக்கு அரசராகிய திருநாவுக்கரசர் நாயனார். சிவனெனும் ஓசைக்கு அல்லாது வேறு எவற்றுக்கும் செம்மையில்லை.சபதம் பிடிக்கவா? என்கிறார். 'சைவம் சிவனுடன் சம்பந்தமாவது" என்கிறது திருமந்திரம். சைவம் என்பது சிவனெனும் ஓசையுடையது. இந்துவுக்கு எந்த மண்ணாங்கட்டியும் கிடையாது.

சைவப் பெரியார் க.சிவபாதசுந்தரம் ஐயா பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு மடல் வரைந்து "இந்து எம்மொழிச் சொல்?" என வினாவி என்ன அர்த்தத்தில் வழங்குகிறது என ஆய்வித்து அந்நியச்சொல் என்பதையும் அதன் அர்த்தம்(திருடர்) அமங்கலமானது என்பதையும் அறிந்து 1956களில் யாழ்ப்பாணத்தில் இருந்த இந்து வாலிபர் சங்கத்தை சைவ வாலிபர் சங்கமாக பெயர் மாற்றம் செய்தமை அறிந்த ஒன்றே!

1906இல் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருந்த சேர்.பொன்.இராமநாதனை கப்பலில் சந்தித்த அமெரிக்கர் ஒருவர் "ஐயா நீங்கள் இந்துவா?" எனக் கேட்டபோது சிரித்துவிட்டு நாங்கள் சிவபெருமானை வழிபடுபவர்கள்.அக்கருத்தில் நாங்கள் சைவர்கள்.விபரம் அறியாத வெளிநாட்டவர்கள் எங்களை இந்துக்கள் என்கிறார்கள் அதற்காக நாங்கள் அப்பெயருக்கு உரியவர் ஆகமாட்டோம்" என்றார். "Eastern pictures to Western Students" எனும் நூலில் இன்றும் காணக்கிடைக்கும் செய்தியிது. அன்று விபரம் அறியாதவர்களாக சேர்.பொன்.இராமநாதன் சுட்டுவது வெளிநாட்டவர்களை! இன்று விபரம் அறியாதவர்கள் என்றால் நாங்கள் தானே? வெளிநாட்டவரா என்ன?

அமெரிக்காவில் பெருவெற்றியீட்டி 1987இல் இலங்கை வந்த சுவாமி விவேகானந்தர் "இந்து என்ற பெயர்க்குப் பதில் சைவன் எனக் கூறவேண்டும்" என்றார். சுவாமிக்கு உவகையளிக்கும் என எண்ணி இந்துமதம்....இந்து....என்று பேச்சாளர்கள் பேசியபோதே சுவாமி இவ்வண்ணம் தெரிவித்தார். திருமூல நாயனாரால் சிவபூமி என திருமந்திரத்தில் சிறப்பிக்கப்பட்ட இலங்கையில் சைவம் என்னும் அழகுபொதிந்த அர்த்தம் நிறைந்த சொல்லாடல் சிதையக்கூடாது என அவர் எண்ணினார் போலும். சுவாமிக்கு உவப்பாக இருக்கும் என எண்ணி சுவாமியை வரவேற்றுப் பேசியபோது , "We, the inhabitants of Jaffna professing the Hindu religion, desire to offer our most hearty welcome to our land, the chief centre of Hinduism in Ceylon" என்றெல்லாம் இந்துவைப் போற்றித் துதிபாடினர் எம் சில ஆங்கிலம் மெத்தப்படித்த பண்டிதர்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கட்கு பதிலளித்துப் பேசும்போது "The word Hindu has lost its meaning, for this word merely meant those who lived on the other side of river Indus.This name was altered by ancient Persians, and all people living on the other side of the river Sindhu were called by them as Hindus... I, therefore, would not use the word Hindu" என்று எம்மவர்களில் அறீவினத்தை சுட்டிக்காட்டினார். சுவாமி விவேகானந்தர் இவ்வண்ணம் சுட்டிக்காட்டியதை Lectures from Colombo to Almora, Advaita Ashram, Delhi, 1995 . 14th edition இல் காணலாம்.(இதனை உலக சைவப் பேரவையின் இணையத்தளப் பிரசுரத்தில் சித்தாந்தரத்தினம் கணேசலிங்கம் ஐயா சுட்டிக்காட்டியுள்ளார். ஐயாவுக்கு நன்றிகள்).

சைவ சமயமே சமயம் எனறார் தாயுமான சுவாமிகள். மேன்மைகொள் சைவநீதி என்றார் கச்சியப்ப சிவாச்சாரியார். சைவ சமயமாம் சமயஞ் சாரும் ஊழ்பெறல் அரிது என்றார் அருணந்தி சிவாச்சாரியார். சைவத்திற் மேற்சமயம் வேறில்லை என்றார் சைவ எல்லப்ப நாவலர். எங்கள் சமயம் சைவம் என்பதில் என்ன கூச்சம்? இந்து என்பதில் எனன பெருமை உண்டு? இந்து எனப்து தமிழரின் சிறுமை. திருகோணமலை என்ற அழகான பெயரை டிரிங்கோமல என்பது அழகாகுமா? 

இந்துமதம் என்றசொல் நான்கு வேதத்திலும் இல்லை. இருபத்தெட்டு சிவாகமங்களிலும் இல்லை. சம்பந்தரின் முதலாம் திருமுறை தொட்டு பெரியபுராணம் வரையான பன்னிரு திருமுறைகளிலும் இல்லை. சாத்திரநூல்களாகிய பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களிலும் இல்லை. பிறகு நமக்கு ஏன் இந்த அமங்கலமான இந்து என்ற சொல் தேவை? சைவர்களே சிந்தியுங்கள்!

அத்வைதம்,துவைதம்,விஷ்ட்டாத்வைதம் என்று இந்துமதக் கோட்பாடுகளாக பாரதம் முழுவதும் பேசப்படுகின்றது. சைவ சித்தாந்தம் என்ற ஒன்று தமிழகத்துக்குள்ளேயே  இருட்டடிப்பு செய்யப்படுகின்றது! ஏன்? தமிழில் இந்த இறை கோட்பாடு இருப்பதால்த்தானே ஒழிய வேறொன்று இல்லை!!!

சுமார்த்தர்களுக்கு இந்தச்சொல் இனிப்பதற்கு காரணம் "சைவத்தை மெதுவாக மறைத்து தமது அத்வைதத்துக்கு தவறான புரிதலைக் கொண்ட நான் கடவுள் சமாச்சாரத்தை தமிழருக்கு புகுத்தி; தமிழரின் தனித்துவ தேசிய அடையாளங்களை மறைத்து இந்துத்தேசியத்தை பாரதமெங்கும் வளர்க்க" இந்த இந்துமதம் உதவுகின்றமையால்தான்!

அன்புக்குரிய சைவ சமயத்தவர்களே,

 • சைவ நாயன்மார்களுக்கு பூசை செய்கின்ற சைவப் பிராமணர்களை பதிதர்கள் என்று இழிந்துரைத்த சுமார்த்தரின் செயல் நியாயம் என்றால்,

 • தமிழ்நீச மொழி என்பதை ஏற்கும் திடமிருந்தால்,

 • சாதி வேறுபாடுகளை அனுசரிக்க உடன்பாடிருந்தால்,

 • தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் உட்பட்ட திருமுறைகளும் தமிழில் உள்ள மெய்கண்ட சாத்திரங்களும் அழிந்துபோவதில் உடன்பாடிருந்தால்,

 • தனக்குவமை இல்லாத சிவபெருமானை சிறுதெய்வ தேவனாக பதவியிறக்கம் செய்யவிரும்பினால்,

 • தமிழர் சால்பை தொலைக்க உடன்பட்டால்,                                                                                                    

சுமார்த்தம் சைவசமயத்தவருள் ஊடுருவுவதை அனுமதிக்க!!!
இல்லையேல்.......
சைவசமயத்தைக் காக்க;ஆவண செய்க! 

சுமார்த்த ஊடுருவலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

 • இந்துமதம் என்பது கூட்டுச்சரக்கு; சைவசமயம் என்பது எமது சமயம் என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்! அதற்கு இடைஞ்சலாக இருப்பது இந்து என்ற சொல் பல்கிப் பெருகி கொழுத்து இருப்பதே! இலங்கையில் இந்து சாதனம்,இந்துக் கல்லூரி என்று முளைவிட்டபோது அவை தனிச்சைவ சமயத்தையே பிரதிநிதித்துவப்படுத்தின. ஆனால் இன்று சுமார்த்தருக்கு சைவருக்குள் ஊடுருவி சைவசமயத்தை சிதைக்கு ஊடகமாகிவிட்டன!!! எனவே இந்து என்ற பெயரில் இயங்கும் நிறுவனங்கள்,கல்விக்கூடங்கள் தம்மை சைவ கல்லூரிகளாகவும் சைவ நிறுவனங்களாகவும் பெயர்மாற்றம் செய்ய வேண்டும். சைவப்பெரியார் சிவபாதசுந்தரனாரை போற்றுவோர் காலம் தாமதிக்காது சைவக்கடமையாகக் கருதி இப்பணியை முன்னெடுக்க வேண்டும்.
 • சேர்.பொன்.இராமநாதன் இந்துக்கள் நாமல்ல;சைவர்களே நாம் என்று வெளிநாட்டவர்க்கு எடுத்துரைத்திருக்க; இராமநாதன் இந்து மகளீர் கல்லூரி என்ற பெயரில் கொழும்பில் பம்பலப்பிட்டியில் சைவக்கல்லூரி இருப்பது இராமநாதனை நாணச் செய்யாதா? எனவே; சேர்.பொன்.இராமநாதனை மரியாதை செய்ய விரும்பின்; கல்லூரி நிர்வாகம் உடனடியாக ஏனைய கல்லூரிகளுக்கு முன்மாதிரியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டிய கடமையைப் பெற்றிருக்கின்றது! செய்வார்களா? அல்லது இராமநாதனை நாணத்தில் வாட்டுவார்களா? கல்லூரி நிர்வாகம் முடிவு செய்யட்டும்!
 • அகில இலங்கை இந்து மாமன்றம் தனது பெயரை நாவலரையும்,சைவப் பெரியார் சிவபாதசுந்தரனாரையும் சேர்.பொன்.இராமநாதனையும் மதித்து; இலங்கை வந்த சுவாமி விவேகானந்தர் சொன்னதற்கு ஏற்ப; இந்து என்ற பெயரை சைவம் என்று மாற்றி அகில இலங்கை சைவ மாமன்றம் ஆகுவார்களா? இல்லை  இத்தகு பெரியவர்கள் நால்வரையும் தொடர்ந்து அவமானப்படுத்துவார்களா?  இந்து ஒளி என்றால் திருடர் ஒளி என்றுதான் பொருள் என்பதை மாமன்றம் உணருமா? நாவலருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டு நாலவருக்கு குருபூசை செய்வதில் அர்த்தமில்லை! மாமன்றம் இதை உணருமா? மாமன்றத்தை நேசிக்கும் சைவர்களை சுமார்த்தரிடம் அடகுவைக்க மாமன்றம் விரும்பினால் இந்துவாகவே தொடர்ந்து இயங்குங்கள்!!!!
 • கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில்தான் விடைக்கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலாவினால் கல்லூரி முதல்வரின் ஆதரவுடன் முதன்முதலில் நந்திக்கொடி ஏற்றும் வைபவம் நிகழ்ந்து அது உலகம் முழுவதும் பரவியது. இராவணன் சிவப்பு மலர்களால் சிவபெருமானை வழிபட்ட இடத்தில் நிகழ்ந்த அருமையினால் விடைகொடி பாரெங்கும் பட்டொளிவீச ஏதுவானது. இந்த அருமையை உணர்ந்து; கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை தனது கல்லூரி பெயரை சைவம் என்றுமாற்றி; கொழும்பு சைவக் கல்லூரி,இரத்மலானை என்று புதுப்பொலிவு பெற்று இலங்கை சைவ சமூகத்துக்கு முன்னுதாரணம் ஆகுமா? 
 • யாழ்ப்பாணம் சைவ பாரம்பரியத்தை சிறப்போடு பேணும் பூமி என்பர். உண்மை என்பதை நிறுவிக்கும் வண்ணம்; யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சைவக் கல்லூரி என்று சிவநாமம் பெற்று சைவநாயன்மார்களுக்கு பெருமை சேர்க்குமா?
 • திருகோணமலையில் உள்ள திருக்கோணேசுவரத்து இறைவனின் திருவருளை உலகறியச் செய்யும் வண்ணம் திருகோணமலையில் உள்ள இந்துக் கல்லூரி சைவக்கல்லூரியாக பெயர் மாற்றம் பெறுமா? தமிழ்ஞானசம்பந்தரின் தேவாரத்துக்கு மந்திரசக்தி உண்டு என்பதை கல்லூரி நிர்வாகம் பாருக்கு உணர்த்துமா?
 • கடற்கன்னிகள் தமிழ்பாடும் தேன்னாடாகிய மட்டக்களப்பில் பெர்ஷியன் மொழியாகிய இந்துவுக்கு எப்படி இடம் கிடைத்தது?  மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை தமிழ்வாசணையுடைய சிவ ஓசையுடைய சைவம் என்ற சொல்லை தரித்து மட்டக்களப்பு சைவ இளைஞர் பேரவை என்று சைவப்பாருக்கே முன்னுதாரணமாக தன்னை மாற்றிக் கொள்ளுமா? அல்லது அமங்கலமான பொருளுடைய பெர்ஷியன்  மொழிச்சொல்லை தொடர்ந்து தாங்கி கடற்கன்னிகளின் தமிழ்பாடும் தேன்னாட்டின் சிறப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்துமா?
சைவ மங்கையர் கழகமும் கல்லூரியும் இப்படி நெறிபிறழலாமா?

இலங்கையில் தலைநகரில் வெள்ளவத்தையில் இருக்கின்ற சைவம் என்ற பெயரில் இயங்குகின்ற பிரபல்யமான ஒரே கழகமும் கல்லூரியும் சைவ மங்கையர் கல்லூரி ஒன்றே!!! இக்கழகத்தையும் கல்லூரியையும் நிறுவியவர்கள், சாலச்சிறப்பான எமது பண்பாட்டுப் பெயரை கழகத்துக்கும் கல்லூரிக்கும் வழங்கியமையால் சைவ மங்கையர் கழகம் என்றும் கல்லூரி என்றும் பொருட்செறிவும் பண்பாட்டு அழகும் கொண்ட திருப்பெயருடன் இன்றுவரை விளங்கிவருவது யாவரும் அறிந்ததே! இக்கல்லூரி நிறுவப்பட முன்னரே இலங்கையெங்கும் இந்து என்ற அமங்கலமான சொல் எமது சமயத்துக்கு வலிந்து வழங்கப்பட்டிருந்தபோதும்; இக்கழகமும் கல்லூரியும் நிறுவப்பட்டபோது உரியமுறையில் பெயர் வழங்கப்பட்டு தமிழுக்கும் சைவத்துக்கும் பெருமை சேர்த்தனர் நிறுவிய சான்றோர். ஆனால்;  யார் விட்டகுறையோ இந்து என்ற பெயர் வலிந்துவந்து தொங்கிக் கொண்டுள்ளது இக்கழகத்துக்கும் கல்லூரிக்கும்?
சைவ மங்கையர் கழகம் என்பதன் ஆங்கிலப்பதம் Saivism women's society
என்பதாகும். சைவ மங்கையர் கல்லூரி(வித்தியாலயம்) என்பதன் ஆங்கிலப்பதம் Saivism ladies college என்பதாகும். ஆனால் இந்து என்ற பெயர் ஆங்கிலப் பெயர் பலகையில் வலிய வந்து குந்திக் கொண்டது ஏன் தானே? ஆங்கிலப்புலமையில் ஏற்பட்ட குறைவா? அல்லது இந்து என்ற பெயரில் ஏற்பட்ட காதலா? 

சைவசமய சிவாகமங்களுக்கு முரணான வழிபாடுகளுக்கும் இந்தக் கல்லூரி பயன்படுத்தப்படுவதாக சைவசமூகம் கவலை கொண்டிருப்பது கல்லூரி நிர்வாகமும் கழகமும் அறியுமா?

கொழும்பில் உள்ள கல்லூரி ஒன்று ஏற்பாடு செய்திருந்த கல்லூரிகளுக்கிடையிலான சமய அறிவுப் போட்டியொன்றில், அக்கல்லூரி சககல்லூரி ஒன்றின் பெயரை தமிழ்ப்படுத்தி அழைத்ததும் அழைக்கப்பட்ட கல்லூரி மேடையேற மறுத்துவிட்டது.  காரணத்தை வினாவியபோது; அது தமது கல்லூரியின் பழங்காலத்து தமிழ்ப் பெயர் என்றும் தற்போது புதிய தமிழ்ப்பதம் தமது கல்லூரிக்கு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.  அவர்களுடைய செயல் சரியா பிழையா என்ற வாதங்களுக்கு அப்பால்; புதிய தமிழ்ப்பதத்தை அன்று அனைத்துக் கல்லூரிகளும் உணரும்படி தெரியப்படுத்த மேடையேறாது தவிர்த்தனர். அவர்களிடம் இருந்த கல்லூரிப் பெயர்மேலான பற்று; விமர்சனங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பார்க்கும்போது பாராட்டுக்குரியது. இத்தகைய பற்று; சைவ மங்கையர் கல்லூரி மாணவிகளிடம் இருந்ததை எளியேன் அறிந்திலேன். அவர்களை ஏனைய கல்லூரி நிகழ்வுகளில் வெள்ளவத்தை இந்து மகளீர் கல்லூரி என்றும் வெள்ளவத்தை இந்து மங்கையர் கல்லூரி என்றும் கொழும்பு இந்து மகளீர் கல்லூரி என்றும் மாறிமாறி அழைப்பதுண்டு. கல்லூரிப் பெயரில் பற்றுகள் ஏதுமின்றி; அதுவும் பண்பாட்டில் அமைந்த கல்லூரிப் பெயரை உதாசீனம் செய்து; அவர்களும் நிகழ்வுகளில் இயல்பாகவே பங்குபற்றுவதுண்டு. ஏனைய கல்லூரி நிகழ்வுகளுக்கு மாணவிகளை அழைத்துச் செல்லும் பொறுப்ப்சிரியர்களுக்கு இதுபற்றிய அக்கறை இருப்பதில்லை. கழக நிர்வாகமே ஆங்கில மொழிபெயர்ப்பில் கோட்டைவிட்டுள்ளபோது; மாணவிகளை நொந்து கொள்வதில் என்ன நியாயம்?

சைவ மங்கையர் கல்லூரியின் மாண்பில் கொண்டுள்ள ஆதீத அக்கறையின் நிமித்தமே இக்கருத்தை ஆவணப்படுத்துகிறேன்.இதன் பின்னராவது; சைவ மங்கையர் கல்லூரி மாணவிகள் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டுமென்று உரிமையுடன் வேண்டுகிறேன்.சைவ மங்கையர் கல்லூரி மாணவிகள் கொழும்பு மாநகரில் சைவ மாணவர் சமுதாயத்துக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும் என்பது எளியேனின் பெருவிருப்பு. இந்து என்ற பெயரில் இருக்கும் மாணவர் மன்றங்களை சைவம் என்று பெயர் மாற்றம் செய்து கல்லூரிகளில் சைவ மறுமலர்ச்சி செய்ய மாணவர் முன்வர வேண்டும். அதுவும் சைவ மங்கையர் கழகத்தில் இயங்கும் இந்து மாணவர் மன்றம் சைவ மாணவர் மன்றம் என்று பெயர் மாற்றம் பெறுவதில் எத்தடங்கலும் இருக்கப்போவதில்லை!!!! சைவ மங்கையர் கல்லூரி மாணவர் சாதிப்பார்களா? சமயமறுமலர்ச்சிக்கு வித்திடுவார்களா? நாவலர் பெருமானுக்கு பெருமை சேர்ப்பார்களா?
சைவம் சிவ சம்பந்தமான சொல் என்று திருமந்திரம் தெளிவுபடுத்துகின்றது. அத்தகு அருமையான சொல்லை தலைநகரில் தாங்கி நிற்கின்ற சைவ மங்கையர் கழகமும் கல்லூரி நிர்வாகமும் அமங்கலமான பாரசீக சொல்லாகிய இந்துவை ஏற்கவிரும்பினால் இந்து மங்கையர் கழகம் என்றும் இந்து மங்கையர் கல்லூரி என்றும் பெயர் மாற்றம் செய்யுங்கள்! ஆனால் தமிழைச் செம்மொழி என்று என்றுமே உரைக்காதீர்! 

ஆனால் கல்லூரியினதும் கழகத்தினதும் ஆங்கிலப் புலமையை கேள்விக்குறியாக்கும் வண்ணம்; அல்லது சைவம் என்பதன் ஆங்கிலப்பதமே இந்து என்று சாதாரண சைவமக்களை அறியாமையில் மூழ்கச்செய்யும் சுமார்த்தர்களின் சதிக்கு துணைபோகும் வண்ணம்; தமிழில் சைவம் என்றும் ஆங்கிலத்தில் Hindu என்றும் பெயர் பலகையை வைக்காதீர்கள்! எளியேனின் எழுத்து; புண்படுத்துமானால் மன்னிக்க. கொழும்பு மாநகரில் இயங்குகின்ற சைவம் என்று பெயர் தாங்கிய ஒரேஒரு கல்லூரி என்று பெருமையை மங்கச்செய்யும் வண்ணம் பெயரில் தெளிவில்லாத மாணவிகளையும் பெயர்பற்றி அக்கறை ஏதுமில்லாத நிர்வாகத்தையும் பார்க்கும்போது உள்ளம் வாடுகின்றது! நிர்வாகமும் மாணவிகளும் இதை உணர்ந்தால் சைவப் பெருமக்கள் பெருமைப்படுவர். கொண்டாடுவர். சிவனருளே என்று போற்றுவர். கல்லுரியும் கழகமும் உணருவார்களா? இல்லை இந்து மோகத்துள் மூழ்கி தமிழையும் சைவத்தையும் அடகு வைப்பார்களா?

சமய நிறுவனங்களும் கல்லூரிகளும் சைவம் என்று சிவநாதமும் தமிழ்ச்சால்பும் பொருந்திய பெயர் மாற்றம் பெற்று; தமிழையும் சைவத்தையும் இலங்கையில் சுமார்த்தரிடம் இருந்து பாதுகாக்குமா? இல்லை இலங்கையில் தமிழ் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று இருந்த திமுக போல் இருப்பதில் பெருமை கொள்வீரோ!!!!

சிலோனாக இருந்த இந்ததீவுக்கு சிறிலங்கா என்று பெயர் மாற்றம் ஏன் வந்தது? பெரும்பான்மை மக்கள் தமது மொழியில் கொண்டிருந்த பற்றால்; அந்நியமொழிச்சொல்லை தூக்கி எறித்தனர்!!!! அவர்களிடம் சென்று மொழிப்பற்று என்றால் என்ன என்று தமிழர் பழக வேண்டும். ஒரு நாட்டினது பெயரையே மொழிப்பற்றுக் கொண்டு மாற்றப்பட்டிருக்க; நாம் எமது சமய நிறுவனங்களுக்கும் கல்லூரிகளுக்கும் எமது சமயப்பெயரை சூட்டுவதில் ஏன் தாமதிக்க வேண்டும்? ஏன் இயலாது? சாக்குப்போக்கு சொல்வோரிடம் தயவுடன் வேண்டுவது "சுமார்த்த அடிவருடிகள்" என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்! உங்கள் அன்னை உங்களுக்கு ஊட்டியது சைவத்தமிழ்ப்பால் அல்ல என்று ஊருக்கு உண்மையை சொல்லிவிடுங்கள்!!!!ஒரு சமயப் பெயர் அச்சமயத்தை பண்பும் பயனும் விளங்கும் உயிரோட்டமான அர்த்தம் பொதிந்ததாக இருத்தல் அவசியம். எள்ளில் எண்ணெய் இருப்பதுபோல் சமயப் பெயரில் சமயத் தத்துவங்கள் புலனாக வேண்டும். சைவம்-சிவம் என்பதே அழகு நிறைந்தது. தமிழருக்கு உரியது.


சி.வை.தாமோதரப்பிள்ளை "தேசப்பற்றும் மொழிப்பற்றும் சமயப் பற்றும் இல்லாதவர் பெருமையும் பெருமையா? " என்றார். தமிழ்ச்சாதியே என்ன செய்யப் போகிறாய்! பண்பாட்டை சிதைத்து சுய பண்பாடற்ற இனமாக மாற்றத்துடிக்கு சுமார்த்தத்துக்கு விலைபோக போகிறாயா? The Saiva Philosophy is the choicest product of the Dravidian intellect. It is the most elaborate, influential and undoubtedly the most intrisically valuable of all religions of India. It is peculiarly the South Indian and Tamil Religion. - Dr.G.U. Pope 
என்று மேல்நாட்டார் புகழ்ந்த சைவநெறிக்கு நாமே கலங்கத்தை உண்டுபண்ணலாமா?

ஓரினம் மண்ணில்லாம் ஆயிரம் ஆண்டுகளும் உயிர்பிழைத்து இருக்கலாம். யூதர்கள் அதற்கு சிறந்த உதாரணம்! ஆனால் பண்பாடும் தனித்துவ அடையாளங்களும் மறைக்கப்பட்டால் ஒருதசாப்தம்கூட அந்த இனம் உயிர் பிழைத்திருக்காது. உதாரணம் புத்தளத்தில் தமிழரின் நிலை! சிந்திக்க! செயலாற்றுக!


பிற்குறிப்பு:- தமிழ்நாட்டில் சைவம் என்றால் சாதரண பொதுசனத்துக்கு சாப்பாடுதான் நினைவுக்கு வரும். சைவம் என்கின்ற பெயரில் சமயம் ஒன்றுண்டு என்று அறிந்தோர் சைவசமயத்தைக் கற்றோர் மட்டுமே!!!!!! இப்படிப்பட்ட இழிநிலை விரைவில் எமது நாட்டிலும் உருவாகலாம்!!!!
மேலும் படிக்க...