"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, July 29, 2009

கந்தசட்டிக் கவசம் அரங்கேறிய திருத்தலம்

ஆதிசேடனுக்கும் வாயுதேவனுக்கும் ஒருமுறை கடுமையான பலப்பரீட்சை நடைபெற்றது. மாபெரும் மலையாகிய மாமேருவை அனந்தன் சுற்றி வளைத்துக் கொண்டான். வாயுதேவன் பெரும் காற்றை ஏற்படுத்தி அனந்தனிடம் இருந்து மாமேருவை மீட்க முயன்றான்.காற்றைபலமாக வீசியதால் மாமேருவின் சிகரப்பகுதி அனந்தனின் பிடியில் இருந்து நழுவிப் பறந்து சென்று வீழ்ந்தது. அப்படி விழுந்ததால் உருவாகிய மலையே சிரகிரி, சிகரகிரி,புஷ்பகிரி,மகுடகிரி,சென்னிமலை என்றெல்லாம் அழைக்கப்படலாயிற்று.இங்கு குடிகொண்டிருக்கும் சிரகிரி வேலவனை "சென்னிமலை முருகன்" என அடியார்கள் துதிப்பர்.


இங்கு முருகன் எழுந்தருளிய கதை முருகப் பெருமானின் அற்புதத்தை பாருக்கு உணர்த்துகின்றது.சென்னிமலைக்கு அருகில் நொய்தல் ஆற்றின் கரையில் கொடுமணல் என்னும் ஊரில் முற்காலத்தில் பண்ணையார் ஒருவர் ஒரு காராம் பசு உட்பட பல பசுக்களை வளர்த்து வந்தார். மாடுகளை மேய்க்கும் இடையன் ஒருசில நாட்களாக வனத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் வருகின்ற காராம் பசுவின் மடியில் பால் வற்றியிருப்பது கண்டு வியந்தான். பண்ணையாரிடம் தெரியப்படுத்தினான். இருவரும் காராம் பசுவையும் ஏனைய பசுக்களையும் வழமைபோல் புல்மேய வனத்துக்கு அனுப்பிவிட்டு பின்னால் சென்றனர். காராம் பசு ஏனைய பசுக்களை விட்டு நீங்கிச் சென்று மண்மேடு ஒன்றில் தானாகவே பால் சொரிவதை அவதானித்தனர். குறித்த மணல்மேட்டை தோண்டிப் பார்த்தபோது முருகப் பெருமானின் கல் விக்கிரகத்தை கண்டு மனம் மகிழ்ந்தார். அழகாக இருந்த குறித்த சிலையின் இடுப்புப் பகுதிக்கு கீழ் முறையற்ற வேலைப்பாடு இல்லாது கரடு முரடாக இருக்கக் கண்டார். சிற்பியை அழைத்து கீழ்ப்பகுதியை திருத்தப் பணித்தார்.

உளியால் சிற்பி தட்டியபோது உதிரம் கற்சிலையில் இருந்து பெருக்கெடுப்பதைக் கண்ட சிற்பி பதறியடித்து "சாமிக் குற்றம்" ஆகிவிட்டது என்று பண்ணையாரிடம் தெரிவிக்கவே, முருகப் பெருமானின் விருப்பம் இவ்வண்ணம் இருப்பதே என்று உணர்ந்து அப்படியே தாபித்து கோயில் எழுப்பினார். இன்றும் கருவறையில் உள்ள இச்சிலையின் இடுப்புக்கு கீழான பாகத்தை வெள்ளிக்கவசத்தால் மறைத்து பூசை செய்கின்றனர்.கந்த சட்டிக் கவசத்தை இயற்றிய பாலன் தேவராயன் சுவாமிகள் காங்கேயம் அருகில் உள்ள மடவிளாகம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் மைசூர் தேராச உடையாரின் காரியதரிசிகளில் ஒருவராக இருந்தவர். முருகப் பெருமானின் பணித்தமைக்கு அமைவாகவே சென்னிமலை முருகன் ஆலயத்தில் கந்தசட்டிக் கவசத்தை அருளிப் பாடி அரங்கேற்றினார். 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்ற கந்தர் சட்டிக் கவச வரி இம்முருகப் பெருமானையே குறிக்கிறது.


அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடி படிக்காசு பெற்ற திருத்தலம் என்பது இவ்வாலய அருட்சிறப்பை மேலும் புலனாக்கிறது.

சிவாலயச் சோழன் கட்டப்பட்ட திருக்கோயில்வாகும். பிரம்மகித்தித் தோசம் பீடிக்கப்பட்ட மன்னன் தான் வழிபடும் சென்னிமலை முருகனை வழிபட்டு தோசத்தில் இருந்து மீள்வதற்கு ஆலயத்திற்கு வந்தார். அப்போது ஆலயத்தில் பூசகர் எவரும் இல்லாதது கண்டு மனம் நொந்து சகுனத் தடையென எண்ணி வாடினார். சிவாலயச் சோழனின் வாட்டத்தைப் போக்க அர்ச்சகர் உருவில் முருகப் பெருமானே எழுந்தருளி மன்னனுக்காக பூசை செய்து மன்னனைப் பீடித்திருந்த பிரம்மகித்தி தோசத்தைப் போக்கியருளினார்.

இத்தகு சிறப்புகள் கொண்ட
சென்னிமலை முருகனை வழிபட :- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
சென்னிமலை,பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம். தொலைபேசி:- 04294 250223, 04294 250263(மலைக் கோயில்)

காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.

சிரகிரி வேலவன் சீக்கிரம் வந்து தமிழர் துயரங்களை போக்க பக்தியோடு வழிபடுவோமாக.
மேலும் படிக்க...

Monday, July 27, 2009

நல்லூர் கொடியேற்றம்- யோகர் சுவாமி போற்றிப் பாடிய நல்லூரான்

ஈழவள நாட்டுமக்கள் இன்னல்களால் சூழப்பட்டு வாடியிருக்கும் இவ்வேளையில் காவல் தெய்வமாகிய நல்லூர் ஆலய கொடியேற்றம் இன்று நடைபெறுகின்றது. முருகனின் அருள்மழை ஈழத்தமிழுக்கு விடிவை நல்க வேண்டியோகர் சுவாமிகள் நல்லூரான்மேல் பக்தியோடு பாடிப்பரவசமடைந்த இவ்வரிய பாடலை பதிவிடுகிறேன்.

இப்பாடலை நல்லூர் அடியார்கள் நாள்தோறும் பாடிவரின் பொல்லாங்குகள் யாவும் தீரும் என்பது திண்ணம். சித்தர் வாக்கு சிவன் வாக்கு என்பர். "பொல்லாங்கு தீரும்" என்ற யோகர் சுவாமியின் வாக்கு எங்கனம் பொய்க்கும்? ஆதலால் நம்பிக்கையுடன் படியுங்கள். பாடுங்கள்.

எல்லாம் திருவருட் சம்மதம்


நல்லூரான் திருவடியை
நான் நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனெடி-கிளியே!
இரவுபகல் காணேனெடி

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி-கிளியே!
நல்லூரான் தஞ்சமெடி

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமெடி-கிளியே!
கவலையெல்லாம் போகுமெடி

எத்தொழிலைச் செய்தாலென்
ஏதவத்தைப் பட்டாலென்
கர்த்தன் திருவடிகள்-கிளியே!
காவல் அறிந்திடெடி

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களெடி-கிளியே!
ஆறுமுகன் தஞ்சமெடி

சுவாமி யோகநாதன்
சொன்னதிருப் பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலெடி-கிளியே!
பொல்லாங்கு தீருமெடி
மேலும் படிக்க...

Thursday, July 23, 2009

இந்து" மதம் சைவநெறிக்கும் தமிழுக்கும் இழைக்கும் கொடுமைகள்

தமிழை நீசமொழியாக கருதுபவர் இந்துமத அதிபதியாகிய சுமார்த்த பீடமான சங்கரபீடம். தமிழில் பாடுவது தமிழில் பேசுவது இறைவனுக்கு தீட்டை உருவாக்கும் என்பது இவர்களது நினைப்பு.கருவறையில் தமிழில் உரையாடினால் அது பாவம் என்பது இவர்களது பாணி.

சிவாலய பூசையில் வேதம் ஓதியபின் ஆசீர்வாதத்திற்கு முன் தமிழ்மறை ஓதும் வழக்கத்தை இந்த சுமார்த்த அடிவருடிகள் விரும்பவில்லை. திருமுறையைப் படித்தபின்னரே ஆசீர்வாதத்தை செய்யவேண்டும் என்பது அகோர சிவாச்சாரியார் பந்ததி ஆசீர்வாதப் படலம் விதித்துள்ள விதி. வேதமொழியில் ஓதப்படுகிற ஆசீர்வாதத்துக்கு முன் தமிழ்மறை ஓதல் வேதமொழிக்கு தீட்டை உருவாக்கும் என்பது சுமார்த்தரின் நினைப்பு. எனவே, சைவவிதியை மீறி ஆசீர்வாதத்துக்குப் பின்னரே திருமுறை ஓதுதல் என்று தமது கைகள் ஓங்கியுள்ள ஆலயங்களில் தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர் .

பூசகரால் தேவாரம் அருளிப்பாட திருவாசகம் அருளிப்பாட என அனுமதியளிக்க தமிழ்மறையை ஓதும் பழக்கமே சைவ வழக்கம். ஆனால் வழக்கத்தில் இல்லாத சொல்லான "பஞ்சபுராணம்' எனபதை புழக்கத்துக்குவிட்டு "பஞ்சபுராண அவதாரய" என்பதை வழக்கத்துக்கு கொண்டுவந்துள்ளனர். தமிழ் "மறை"யை புராணமாக்கிய கெட்டித்தனம் என இதைச் சொல்லலாம்.

இந்தச் சுமார்த்த மொழித்துவேச ஊடுருவல் சிதம்பரத்துப் பார்ப்பனருக்கு பல்லாண்டுகளுக்கு முன்னரே ஊடுருவிவிட்டது எனலாம். திருமுறைகளை ஒழித்துவைத்து கறையானுக்கு தீணியாக்கினர். தமிழ்ப்பற்றுமிக்க நம்பியாண்டார் நம்பிகள் எனும் அந்தணரும் இராஜ இராஜ சோழனும் முயன்றதால் சைவத் தமிழுலகிற்கு திருமுறைகள் கிட்டியது.

மிக அண்மையில், எந்த மேடையில் திருவாசகம் அரங்கேறியதோ.......எந்த மேடைக்கு வந்து எம்பெருமான் திருவாசகத்தை பிரதியெடுத்துச் சென்றாரோ அந்த திருச்சிற்றம்பல மேடையில் ஓதுவார் தமிழில் திருமுறைகள் ஓதக்கூடாது என்று தடைவிதித்தனர் சிதப்பரப் பார்பனீயர். காரணம் கேட்டால் சிதம்பர இறைவனுக்கு நீசமொழியான தமிழால் தீட்டுப்படுகிறதாம்.

ஊழிக் காலத்தில் தனியாக இருக்கும் சிவன் தனது தனிமையைப் போக்கவே திருவாசகத்தைப் பிரதியெடுத்துச் சென்றதாக சைவ அறிஞர் போற்றுவர். இத்தகு மேன்மையுடைய திருவாசகம் அரங்கேறிய மேடையில் திருவாசகம் அடங்கலாக தமிழ்த் திருமுறைகள் ஏதும் ஓதக்கூடாது என்று தடைபோடும் அளவிற்கு சிதப்பரப் பார்பனரை மூடராக்கியது சுமார்த்தம் ஊட்டிய மொழித்துவேசம் என்பது வெள்ளிடைமலை.

எவ்வளவு போராட்டங்களுக்குப்பின் ஓதுவார்கள் நீதித்துறையின் மூலம் நீதிபெற்றனர் என்பது கண்கண்ட செய்தி. சுமார்த்த அதிபதியான காஞ்சி சங்கராச்சாரியார் சிறைவைக்கப்பட்டபோது பதறியடித்து இலங்கைப் பிரபல பத்திரிக்கைகளுக்கு அவர் பற்றிய செய்திகளை பண்போடு வெளியிடும்படி அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டிக் கொண்டது. னால் தமிழ்த் திருமுறைகளை படிக்கத்தடைவிதித்தபோது இலங்கை இந்து மாமன்றம் என்ன செய்தி வெளியிட்டது என்று அறியவே முடியவில்லை. உலக இந்து குருமார் பீடம் என்று கொழும்பில் (சைவ குருமார் பீடத்துக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது) சுமார்த்த விசுவாசியால் உருவாக்கப்பட்ட அமைப்பு தலையிட்டு சிதம்பரப் பார்பனருக்கு கட்டளை ஏதும் பிறப்பித்திருக்கலாம் தானே? "உலக இந்து குருமார்" என்று அடைமொழியை கொண்ட குருமார் பீடம் என்பதால் உலகில் உள்ள குருமார் அனைவரையும் கட்டுப்படுத்தும் சர்வ வல்லமையும் உடையவர் என்று அறியாத சனங்களுக்கு கதைவிடுகின்றனர் இந்த பீடத்தார். அவர்களின் கட்டுக்கதைக்கு வந்த ஆப்பு இதுவென்றால் மிகையில்லை.
எந்த மேடையில் மாணிக்கவாசகர் பாடினாரோ அந்த மேடையில் திருவாசகம் பாடமுடியாது ஓதுவார் தவித்தபோது உதவிக்கு சைவநிறுவனங்கள் ஏதும் புறப்படாது ஒதுங்கிக் கொண்டதை வெட்கக்கேடாகவே கருதுகிறேன்.திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் வளர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட வெறு பல இயக்கங்களே அங்கு தமிழுக்காய் குரல் கொடுத்ததை இங்கு சுட்டியே ஆகவேண்டும்.

கும்மாவிஷேகத்துக்கு அழகு தமிழில் குடமுழுக்கு என்பர். சைவ ஆதீனங்கள்கூட குடமுழுக்கு என்ற சொல்லையே பயன்படுத்துவர். ஆனால் அண்மையில் வெளிநாடு ஒன்றில் குடமுழுக்கு என விளம்பரப் பிரசுரத்தில் வெளியிட்டதனால் கொதித்தெழுந்த சுமார்த்தக் குருக்கள் குடமுழுக்கை செய்யமாட்டேன் என பிடிவாதம் பிடித்துவிட்டார். அவர் சபித்துவிடுவர் என எண்ணி "சாமி"க்குற்றம் வந்துவிடும் என பயந்து குடமுழுக்கு என்று அச்சேற்றிய பிரசுரங்களை குப்பையில் போட்டு 'கும்பாவிஷேகம்" என்று மீள பிரசுரங்கள் செய்வித்து வெளியிடவேண்டியதாயிற்று ஆதீனகர்த்தாவுக்கு!

மேற்சொன்னவைகள் நல்ல உதாரணங்கள் தமிழ்மொழிமேலான துவேசத்தை எம்தமிழ் அந்தணர் குழாத்துக்குள் மெல்லமெல்ல சுமார்த்தவருடிகள் ஊட்டுகின்றனர் என்பதை நிறுவிப்பதற்கு.

சைவநெறி என்பது சிவஞானப் பேற்றை நோக்காகக் கொண்டது. ஆனால் சுமார்த்தருக்கு சைவம் அழிந்தால் சரி.மக்கள் எக்கேடு கெட்டாலும் கவலைகொள்ளாதது. அதனால் மக்களுக்கு காமியபூசைகளில் (ஆயுள் விருத்தி.....தாலி விருத்தி....பரீட்சைகளில் தேர்வுபெற(கொழும்பில் பிரபல சுமார்த்த கோயிலில் மாணவரைக் கவர இதுதாம் பெரும்பூசை) ஆசையையூட்டி சிவஞானத்துக்கு உதவாத பூசைகளை பெருக்குகின்றது.இதன்மூலம் பணம் பெருக்கி வயிற்றை கொழுக்கச் செய்வது ஒருவழி. எம்தமிழ் சாதியிடமே பணம்திரட்டி எம்தமிழ்ச்சாதியின் பண்பாடான சைவ சிவஞானபேறை சிதைப்பது. ஒருகல்லில் இரு மாங்காய் என்று உவகையில் உள்ளது சுமார்த்தம்.

கோயில்களை அர்ச்சனைக்கூடங்களாய் மாற்றியதில் பெரும்பங்கு இவர்களையே சாரும். சாதரண ஆகமவிதிமுறையற்ற கோயில்களுக்குள் சகல பரிவாரங்களையும் இருத்தி எந்த ஆகமமும் அனுமதிக்காத வழிபாட்டை சிறப்பாகச் செய்கின்றனர். நவக்கிரகங்களை வரிசையாக அடுக்கிவைத்து (கொழும்பு ஆஞ்சநேயர் ஆலயத்தில்) ஏதோ சக்தி என்று புரியாத சனங்களின் காதுகளில் பூச்சுற்றிவிடுகின்றனர் சமயவியாபாரிகள்

"அனுமானுக்கு உலகிலேயே தேர் நாம்தான் இழுத்தோம்" என்று கொழும்பில் றியபோதே சைவத் தமிழ்ச் சமுதாயம் விழித்திருக்க வேண்டும். அனுமான் கிராமிய வழிபாட்டுத் தெய்வம். அனுமானை சக்திதரவல்ல தெய்வமாகக் கருதுபவர் வைணவர். வைணவம் உள்ளநாடு தமிழகம். இராமருக்கும் அனுமானுக்கும் விசேடமரியாதை செய்யும் இடம் அயோத்தி. இங்கு எங்குமே அனுமானுக்கு தேர் இழுக்கவில்லை.கொழும்பில் இழுத்துவிட்டார்கள். கொழும்பில் இழுத்தால் "ஆகமமுறையை மீறி இழுக்க உமக்கு உத்தரவு தந்தது யாரு?" என்று கேள்விகேட்க வைணவ ஆதீனங்கள் இல்லை. இருக்கிற சைவ ஆதீனம் அமைதியானது. சைவநிறுவனங்கள் தடுக்கும் சக்தியில்லாதவை. கொழும்பில் உள்ள "இந்து" பெரும் நிறுவனங்கள் ஆதரவு. எனவே இழுத்தார்கள். அன்று சீதையைக் கவர்ந்ததால் அனுமான் இலங்கைக்கு தீ வைத்தார். இன்று முறையற்ற வழிபாட்டால் தமிழரின் எதிர்காலத்துக்கு கேள்விக்குறி வைத்துவிட்டார்.

இனிய சைவத் தமிழ்ச் சமுதாயமே, தொன்று தொட்டு காலம் காலமாக வைரவரை காவல்தெய்வமாக வழிபடுகிறோம். சிவனின் ஓர் மூர்த்தமே வைரபர்.
ஆனால் இன்று வைரவர் வழிபாடு அருகி வருகிறது. சைவ நிறுவனங்கள் சற்று சிந்திக்க வேண்டிய விடயம் இதுவாகும். ஆஞ்சநேயர் வழிபாட்டை பெருந்தெய்வ வழிபாடாக சித்தரிக்கும் சுமார்த்தத்தை அரவணைப்பதால் ஏற்பட்ட விளைவு இதுவாகும். அகில இலங்கை இந்து மாமன்றம் தீர்க்கதரிசனத்துடன் சிந்திக்க வேண்டிய விடயம் இது!!!

சுமார்த்தரின் சிவாகமத்தில் இல்லாத வழிபாடுகளுக்கும் இந்துவுக்கும் வக்காளத்துவாங்கும் விசுவாசிகள் "யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்" என்று சிவஞான சித்தியாரை வம்புக்கு இழுப்பார்கள்.
சுடர் ஒளி(வாரப் பத்திரிக்கை) பத்திரிக்கையில் பலவருடங்களுக்கு முன் சர்ச்சை அடிபட்டபோது ஒருவர் இப்படித்தான் வித்துவத்தனத்தைக் காட்டினார். அவரது வித்துவத்தனத்துடன் சர்ச்சை ஓய்ந்தது எம்தமிழ்சாதியின் இழிநிலையைக் காட்டுகின்றது. சைவ சித்தாந்த பண்டிதர்களின் அறிவுரைகள் பூக்காமலே சர்ச்சை ஓய்ந்துவிட்டது. மரபுக் கவி எழுதத் தெரியாதவர்கள் புதுக்கவிதையை போற்றுவர். புதுக் கவிதையின் வரவேற்பு மரபுக் கவிதையை மங்கச் செய்ததன் விளைவு கிருத்தவக் கம்பனுக்குப் பின்னர் இன்னொரு கம்பன் இன்னும் பூக்கவேயில்லை.அதுபோல்தான் சைவப் பண்டிதர்கள் அருகிவருகிற காலமிது. அவர்களை போற்றி பண்டிதர்களை உருவாக்க வேண்டியது தமிழ்ச்சாதியின் கடமை. ஆனால் அவர்களது கருத்துகளையும் அறிவுரைகளையும் செவிமடுக்கத் தவறுகிற இழிநிலைக்கு எம்மை இட்டுவந்தது யார்?

பண்டிதமணி மு.கந்தையா ஐயா தனது சைவஞான விளக்கம் எனும் நூலில்"யாதொரு தெய்வம் கொண்டீரத்" என்ற சிவஞான சித்தியார் பாடலுக்கு விளக்கம் அளிக்கிறார்.குறித்த ஒரு செய்யுட் பொருளை அறியவேண்டுமானால் அதனோடு இணைந்த ஏனைய செய்யுள்களையும் கருத்தில் எடுத்தல் அவசியம் என வலியுறுத்துகிறார். குறித்த செய்யுளுக்கு முன் உள்ள செய்யுள்களையும் பின் உள்ள செய்யுள்களையும் விளக்கி, மயக்க உணர்வால் தேவதைகளை தெய்வங்களாக பூசிப்பவர்களுக்கு அவர்களது நல்வினைக்கு ஏற்ப சிவபெருமானே வரமளிப்பார். ஆதலால் எல்லாவற்றுக்கும் உரியவர் என்ற உத்தரவாதமுள்ள சிவனையே அன்பு செய்து பூசித்தல் அறமாகும் என்றே சிவஞான சித்தியாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அறிவுறுத்தியுள்ளார்.

117ஆவது செய்யுள் சிவன் ஒருவனே வழிபாட்டுக்குரியவன் என்று வலியுறுத்தியிருக்க,

"யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வமாகி யாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்
வேதனைப் படுமிறக்கும் பிறர்க்குமேல் வினையுஞ் செய்யும்
ஆதால னிவையி லாதா னறிந்தருள் செய்வனன்றே"

எனும் 115ம் செய்யுளை சாதரண பொதுசனத்திடம் திணிக்கும் கெட்டிக்காரர்களுக்கு சைவ சமூகம் வரவேற்பளிப்பது துயரான ஒன்றே. பண்டிதமணி மு.கந்தையா ஐயாவின் மறைவு கெட்டிக்காரர்களுக்கு வசதியாயிற்று. மறுப்பு அறிக்கைவிட எவரும் இலர் என்று உவகையடையக்கூடும்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் திருமந்திரம் இவர்களுக்கு கைகொடுக்கும் இன்னொரு பாடல். ஆனால் பண்டிதமணி மு.கந்தையா ஐயா அவர்கள் தனது சைவ ஞான விளக்க நூலிலே இதற்கும் விளக்கம் அளித்துவிட்டார்.
சைவத்தில் சிவன், அவனல்லாத உயிர்கள் என இருவகை மாத்திரமே உண்டு.ஒன்றே குலம் என்பது சிவனல்லாத உயிர்களையும் ஒருவனே தேவன் என்பது ஒருவனாக நிற்கின்ற சிவனையும் குறிக்கும். இது இப்படியிருக்க "எல்லா கடவுளும் ஒரே கடவுள்தான்" என்று சைவச் சனங்களுக்கு போதிக்கும் சுமார்த்த விசுவாசிகளின் உள்நோக்கு சைவர் உளரீதியாக பலவீனமானவர்களாக இருக்க வேண்டும் என்பதாகும்.
.
மேலைத்தேயத்தவர் தமிழகத்துக்கு வந்தவுடன் சைவநூல்களை கற்பது தமது மதம்மாற்றும்திட்டத்திற்கு உதவும் என்று கருதினர்,எனவே இவர்கள் சைவ சித்தாந்தங்கள் திருமுறைகளை கற்றுத் தேர்ந்தனர்.தமிழர்களை உளவியல்ரீதியாக பலமற்றவர்களாக்க "ஒருவனே தேவன்" "யாதொரு தெய்வம்" இவர்களுக்கு கைகொடுத்தது.
சைவ சித்தாந்தத்தில் தெளிவில்லாத சாதரண பொதுசனம் இவர்களது தவறான பிரசாரத்தில் வீழ்ந்தனர். இன்று சுமார்த்தத்தைப் பரப்ப, இந்துவை வாழவைக்க சுமார்த்திகள் இதையே பயன்படுத்துகிறார்கள். உண்மையான விளக்கம் எங்கும் எந்த ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படுவதில்லை.எவருக்கும் சரியான பொருள் தெரிவதில்லை. மேலைத்தேயத்தவர்களின் பரப்புரையின் தாக்கம் எத்தகையது என்பதை இதன்மூலம் உய்த்துணரலாம்.


அம்மன்,முருகன்,பிள்ளையார்,பைரவர்,சோமஸ்கந்தர் போன்றோரை வழிபடலாமா என்று நையாண்டிக் கேள்விவேறு கேட்பர். சிவனே சக்தி, சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மா என்ற நிலைகளை எய்துவதாக சிவாகமம் எடுத்தியம்புகிறது.எனவே இவை அனைத்தும் சிவ வழிபாடே!

புராண,இதிகாச கதாப்பாத்திரங்கள்,தொண்டர்கள்,அவர்களின் தொண்டர்கள் என்று இவர்களுக்கு செய்யும் வழிபாடு சிவாகம துரோகம்.

திருமாலை வணங்கலாம் என்றால் ஏன் திருமாலின் அடியவரை வணங்கக்கூடாது என்று கேள்வி கேட்பர் அறிவிலார்.
திருமாலை வழிபடலாம் என்று வரையறுத்துள்ளது சிவாகமம். திருமாலின் அடியவரை வழிபடலாம் என்பது வைணவ ஆகமம். திருமாலின் அடியவரை வழிபடுபவர்கள் வைணவ ஆகமத்தை ஏற்பவர்கள்.எனவே சைவர்கள் அல்ல. திருமாலை சிவாகமவிதிக்கு ஏற்ப வழிபடுவது சைவரின் சால்பு. சைவர்களிடம் அனுமான் உட்பட புதுப்புது தெய்வங்களை இறக்குமதி செய்து பரப்பும் சுமார்த்தர் வைணவத்தாரிடம் சைவக் கடவுள்களான பைரவர் உட்பட எவரையேனும் அறிமுகஞ் செய்கின்றனரா? இல்லை!!!!
வைணவ ஆதீனங்கள் சுமார்த்தரை வைணவ ஆலயங்களுக்குள் அனுமதிப்பதில்லை. சங்கரமடத்துக்கு பெரும் அவமானத்தை இவை ஏற்படுத்திவிட்டன.சைவ ஆதீனங்கள் அமைதி காக்க; சுமார்த்தம் தமது விருப்புக்கு ஏற்ப சைவத்துள் புகுந்துவிளையாடுகிறார்கள். இலங்கையில் "இந்து" மூலம் வந்து தமது கைவண்ணத்தைக் காட்டுகிறார்கள்.

இன்று கொழும்பில் உள்ள சில தரகு நிறுவனங்கள் கொழும்பு,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,திருகோணமலை உட்பட ஏனைய இலங்கையின் பிரதேசங்களில் இருந்து சைவ அந்தணர்களின் பிள்ளைகளை திரட்டி சங்கரபீடத்துக்கு சிவாச்சாரியார் பட்டப்படிப்புக்கு அனுப்புகிறார்கள். சலுகைகள்,இலவசங்கள் இவர்களுக்கு கைகொடுக்கின்றது.
இதுகால்வரையும் சைவ ஆதீனங்களான திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் போன்றவற்றுக்கே அனுப்புவது மரபு. இந்த மரபை அழிக்க வேண்டிய அவசியம் என்ன?
தமிழ்ச் சைவ அந்தணர்களிடம் தமிழ்மொழிமேல் கசப்புணர்வை ஊட்டவேண்டுமாயின் சிறுபிராயத்திலேயே ஊட்டுவதே சாலச் சிறந்தது என்பதுவே இவர்கள் திட்டம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்னும் பழமொழி நினைவிருக்கிறதா? பள்ளிப் பருவத்திலேயே தமிழ்ச் சைவ அந்தணர் குழாத்திடம் "தமிழ் நீசமொழி/தீட்டு மொழி" என்று போதிக்கும் திட்டம்தான் சுமார்த்தபீடமாகிய சங்கரமடத்துக்கு எம் அந்தணக் குழந்தைகள் அனுப்பப்படுதல்!
"பஞ்சபுராண அவதாரய" தொடர இது கைகொடுக்கும் என்பது இவர்கள் கணிப்பு.

தமிழ் சைவ அந்தணர்கள் தமிழ் சைவ ஆதீனங்களுக்கு செல்வதே அழகு; மரபு. தமிழ்மறை காத்த ஆதீனங்களிடம் இருந்து சைவ அந்தணரைப் பிரிப்பது காலத்தால் மன்னிக்க முடியாத குற்றமாகும். அண்மையில் சிதம்பரத்தில் "தமிழ்த்" திருமுறைகள் ஓதக்கூடாது என்று பிடிவாதம் பிடித்த பார்ப்பனரை இலங்கையில் உருவாக்கும் முயற்சியை அந்தணப் பெற்றோர் இனங்கண்டு தமிழுணர்வும் சைவ உணர்வும் கொண்டு முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

இன்றைய தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் சைவர்களுடன் சங்கரர் வாதிட்டுள்ளார்.எனவே, சைவநெறியை சங்கரபீடம் வளர்க்குமா என்ன? சிவாச்சாரியார்கள் சங்கரபீடத்தில் சைவ மேன்மையைப் படிப்பார்கள் என்பது பகற்கனவே!
ஆட்டைக் காக்க ஓநாயிடம் விட்டகதைதான் சங்கரபீடத்திடம் சிவாச்சாரியர் பட்டப்படிப்பு. 'தமிழரை சூத்திரர்" என்று திட்டும் மடத்திற்கு தமிழ் அந்தணக் குழந்தைகள் சிவாச்சாரியார் படிப்புக்கு!!!! என்ன கொடுமை!!!!!!!

எங்கள் சனங்கள் எதுக்கும் தலையாட்டும் என்பது இந்திய வடநாட்டு விசுவாசிகளான சுமார்த்த இந்துபீடங்களும் குருமார்களும் கண்டுவைத்துள்ள தவறான கணிப்பு. நாவலர் பூத்தபோது எழுந்த சமூகம் எம் சமூகம். விழிப்புக்கு உள்ளாகும்வரைதான் இவர்கள் சதிகள் அரங்கேறும்.எம் சைவச் சாதி விழிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இந்த "இந்து"விசுவாசிகள் இந்து என்பதன் வாயிலாக வடநாடு எங்கும் தொடர்பு ஏற்படும். உலகம் பூராகவும் ஒருகுடையில் நிற்கலாம் என்று கதையடிப்பர்.கவனம்!!!!!!
யுத்தத்தால் வாடியபோது சங்கரபீடம் ஏதும் அழுததா? சைவ ஆதீனங்களுக்கு அரசியல் வலுவில்லை. உண்ணாவிரதங்களுடன் சரி. ஆனால் வடநாட்டு அரசியல் பலமுடைய சங்கரபீடம் சிரித்துக் கொண்டுதானே இருந்தது. அவர்களுக்கு தமிழ்மொழிமேல் என்றுமே துவேசம் உண்டு.மாறாத துவேசம்.இராவணன் காலந்தொட்டு இன்றுவரை தொடரும் தமிழ்மேலான துவேசத்தின் இன்றைய வடிவமே சங்கரபீடம் என்றுணர்க.. சங்கரபீடம் இதன் ஒரு வடிவம். அது நூற்ற சுமார்த்தம் இன்று இந்து எனும் பெயரில் இலங்கை வந்து இறங்கியுள்ளது.

யுத்தத்தால் வாடியபோது இந்து எனும் பெயர்தாங்கிய இந்தியப் பத்திரிக்கைகள்,நிறுவனங்கள்,அதன் விசுவாசிகள் யாவரும் மகிழ்ந்தார்கள். இதுபோதும் எம்சனங்களுக்கு "இந்து" என்பது எவ்வளவு அபயமான ஒன்று என்பதை நிறுவிக்க!
நாம் அழுதபோது "இந்து"குருமாருக்கு அதிபதி அழுதாரா ? அரசியல்வாதிகளுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்பது சிவாச்சாரியார்களுக்கு உள்ள விதிகளில் ஒன்று. வாக்களிக்கச் சொல்லி வேண்டி கடந்த சனாதிபதித் தேர்தலில் இவர்களிடம் இருந்து மடல்கள் வந்தபோதே தமிழ்ச்சாதி திருந்தியிருக்க வேண்டும்.


"சைவ சமயமே சமயம்" என்ற தாயுமானசுவாமிகளின் திருவரிகளையும் "சைவம் சிவனுடன் சம்பந்தமாவது" என்ற திருமந்திரத்தையும் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றதன் உண்மையான விளக்கத்தையும் போதிக்காது, இந்திய இந்துமத மிசனரிகளின் ஸ்தாபகர்களையும் அவர்களது பெருமைகளையும் போதிக்கும் நூலாகவும் வெறும் வரலாற்று மனப்பாடப் புத்தகமாகவும் இன்றைய சைவநெறி பாடத்திட்டம் அமைந்திருக்கின்றது. காரணம் யார்? பாடத்திட்டத்தை தொகுப்பவர்கள், பாடத்திட்டத்தை தொகுப்பதற்கு உதவுபவர்கள் யார் என்ற பெயர்ப்பட்டியலே சுமார்த்த ஊடுருவலுக்கு சான்று.

ஆனால் இன்று சைவநெறி என்று பெயர்தாங்கி சைவக்குழந்தைகளிடம் தவழுகிற பாடத்திட்டநூலிலேயே சைவத்திற்கு குந்தகம் விளைவிக்கும் பாடங்கள் புகட்டப்படுவது எமது தமிழ்ச் சாதியின் இழிந்தநிலையையே எடுத்துக் காட்டுகிறது. இன்னும் கொஞ்சக் காலத்தில் "அம்மா பகவான்" "பாபா" பாடங்களும் சேர்க்கப்பட்டுவிடும். யேசு கிருஷ்துவைப்பற்றி போதித்தாலும் தவறேயில்லை.

"தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகமநூல் நெறி எத்தண்டமும் செயும் அம்மையில்" என்பது திருமந்திரம்.

பூசுவது திருநீறு இடிப்பது சிவன் கோயில் என்பதுவே சுமார்த்த
இந்துவாதிகளின் செயல்கள்."இந்து" என்பது தமிழ்மொழிக்கு தீட்டான ஒன்று. தமிழர்கள் "சைவநெறி" என்பதை வலியுறுத்துகிற பீடங்களையும் ஆதீனங்களையும் மாமன்றங்களையும் பேரவைகளையுமே சார்ந்திருத்தல் வேண்டும். எவன் ஒருவன் இந்து மதம் என்று பிதற்றுகிறானோ அவனே முதலில் தமிழ்மேல் துவேசம் கொண்டவன் என்பதை உணர வேண்டும். சைவநெறியை "இந்து"விடம் இருந்தும் நாத்தீகவாதிகளிடம் இருந்தும் பணமுதலைகளாகிய கிருத்தவமிசனரிகளிடம் இருந்தும் காக்க வேண்டிய கடமை தமிழரிடம் உண்டு. சைவநெறியைக் காப்பதனூடாகவே தமிழரின் பாரம்பரியத்தைப் பேணமுடியும் என்பது திண்ணம். அதற்கு புத்தளம் நல்ல உதாரணம்.

சி.வை.தாமோதரப்பிள்ளை "தேசப்பற்றும் மொழிப்பற்றும் சமயப் பற்றும் இல்லாதவர் பெருமையும் பெருமையா? " என்றார். தமிழ்ச்சாதியே என்ன செய்யப் போகிறாய்! பண்பாட்டை சிதைத்து சுய பண்பாடற்ற இனமாக மாற்ற வடநாடு முனைகிறது. சுமார்த்த இந்து உதவுகிறது. உன் கதிதான் என்ன?????
மேலும் படிக்க...

Wednesday, July 22, 2009

சைவநெறி என்று பறைவோம்

பிந்திவந்த கொம்பு முன்பிருந்த செவியை மறைப்பது போல்"இந்து" மதம், சிவனுஞ் சீவனும் என்றுண்டோ அன்றுதொட்டிருந்து வரும் சைவத்தை மறைக்க எத்தனிக்கிறது. இந்து சமயம் என்பது கூட்டுச் சரக்கு.அதன் ஆறுபிரிவுகளில் ஒன்றென கூறப்படும் சைவம் தென்னாட்டில் பெரும்பான்மையோரால் கடைப்பிடிக்கப்படும் நெறி. வைணவம்கூட தென்னாட்டிலேயே சிறப்பாக வழிபடப்படுகிறது. சாக்தம் கல்கத்தாவுடன் சரி.

கௌமாரம்,காணபத்தியம்,சௌரம் எனும் நெறிகள் வெறும் கட்டுக்கதைகளே. இத்தனைக்கும் முருகன் என்பது தமிழ்க் கடவுள்.காலம் காலமாக சைவநெறிக் கடவுள். இத்தகு முருகனை கௌமாரக் கடவுளாக எழுத்தில் எழுதி கட்டுக்கதைகளை பரப்புகின்றனர். பிள்ளையார் வழிபாடு சைவத்திலும் வைணவத்திலும் சிறப்பாக உள்ள வழிபாடுகளில் ஒன்று. இரண்டு நெறிகளுக்கும் பொதுவான வழிபாடாக பிள்ளையார் வழிபாடு விளங்குகிறது. சூரிய வழிபாடு என்பது சௌரம்.காலையில் சூரிய வந்தனம் செய்யும் ஒரு வழிபாட்டை நெறியாக்கிய கெட்டித்தனத்தைப் பாராட்ட வேண்டியது அவசியம். எனவே, இந்துமதம் என்பது சைவத்தினதும் வைணவத்தினதும் தனித்தன்மைகளை சிதைத்து வேறு ஏதோ ஒரு நெறியைப் புகுத்த உருவாக்கப்பட்ட கூட்டுச் சரக்கு என்பது இந்துவைப் பகுக்கும் போதே உணரக்கூடியதாகவுள்ளது. அப்படியானால் அது என்ன நெறி? அத்வைதம்.உருவாக்கியவர் ஆதிசங்கரர். வைணவ
இராமனுஜரின் புகழால் அத்வைதத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்ற காரணத்தால் அவரை காசிக்கு அழைத்துச் சென்று கொல்ல சதிதீட்டியவர்கள் அத்வைதர்கள். இராமனுஜரை அவரது சீடர்கள் காத்தார்கள்.இத்தகு உதாரணம் போதும் அத்வைதம் எவ்வண்ணம் தன்னை காக்க எண்ணியது என்பதை உணர்ந்து கொள்வதற்கு. எனவே, தமிழரின் தனிப்பெரும் சமயமாகிய சைவநெறியை சிறுமைப்படுத்த அத்வைதம் எவ்வளவு முயற்சி எடுக்கும் என்பதை உய்த்துணரலாம். அத்வைதமே சுமார்த்தம் என்க. வடவரின் வைதிகத்திற்கு சாமரைவீசுகிற இந்தச் சுமார்த்தநெறியை திரைமறைவில் பரப்ப கண்டுபிடித்த மதமே "இந்து" மதமாகும்.

சிந்துவெளி மக்களை பாரசீகமொழியில் இந்து என உச்சரித்தனர். சிந்துவெளி மக்கள்மேல் கொண்டிருந்த வெறுப்பால் "இந்து"வை கள்ளர் எனப் பொருள்படுத்தினர், இந்த இந்து ஆங்கிலேயரால் "இந்தியா"வாயிற்று. சுவாமி விவேகானந்தரின் அமெரிக்க சர்வசமய மாநாட்டு வீரகர்ச்சனையால் உலகப் பிரபல்யம் பெற்றதாயிற்று. சந்திரனைக் குறிக்கும் அருஞ்சொல்லாகிய இந்துவும் "இந்து"மத இந்துவும் வேறுவேறானவை. "HINDU"வை தமிழில் இ"IN" ந்து என உச்சரிக்கிறோம். இந்த வேறுபாட்டை உணராது தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்று "ஸ்ரீ" யை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்த சனம். எதிரி நேர்மையாக நேராக வந்தும் மோதுவான். மறைமுகமாக நேர்மையற்று முதுகில் வந்தும் தாக்குவான். வடநாடு "நேர்மையற்ற" எதிரி. அதுதான் "இந்து" மதமாகி சைவத்தை அழித்து தமிழரின் தனித்துவப் பண்பாட்டை சிதைக்கத் துடிக்கிறான். தமிழரே அதற்கு துணையாகி நிற்கின்றனர்.

அமெரிக்காவில் பெருவெற்றியீட்டி 1987இல் இலங்கை வந்த
சுவாமி விவேகானந்தர் "இந்து என்ற பெயர்க்குப் பதில் சைவன் எனக் கூறவேண்டும்" என்றார். சுவாமிக்கு உவகையளிக்கும் என எண்ணி இந்துமதம்....இந்து....என்று பேச்சாளர்கள் பேசியபோதே சுவாமி இவ்வண்ணம் தெரிவித்தார். திருமூல நாயனாரால் சிவபூமி என திருமந்திரத்தில் சிறப்பிக்கப்பட்ட இலங்கையில் சைவம் என்னும் அழகுபொதிந்த அர்த்தம் நிறைந்த சொல்லாடல் சிதையக்கூடாது என அவர் எண்ணினார் போலும். சுவாமிக்கு உவப்பாக இருக்கும் என எண்ணி சுவாமியை வரவேற்றுப் பேசியபோது , "We, the inhabitants of Jaffna professing the Hindu religion, desire to offer our most hearty welcome to our land, the chief centre of Hinduism in Ceylon" என்றெல்லாம் இந்துவைப் போற்றித் துதிபாடினர் எம் சில ஆங்கிலம் மெத்தப்படித்த பண்டிதர்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கட்கு பதிலளித்துப் பேசும்போது "The word Hindu has lost its meaning, for this word merely meant those who lived on the other side of river Indus.This name was altered by ancient Persians, and all people living on the other side of the river Sindhu were called by them as Hindus... I, therefore, would not use the word Hindu" என்று எம்மவர்களில் அறீவினத்தை சுட்டிக்காட்டினார். சுவாமி விவேகானந்தர் இவ்வண்ணம் சுட்டிக்காட்டியதை Lectures from Colombo to Almora, Advaita Ashram, Delhi, 1995 . 14th edition இல் காணலாம்.(இதனை உலக சைவப் பேரவையின் இணையத்தளப் பிரசுரத்தில் சித்தாந்தரத்தினம் கணேசலிங்கம் ஐயா சுட்டிக்காட்டியுள்ளார். ஐயாவுக்கு நன்றிகள்).

இலங்கையில் சுவாமி விவேகானந்தரைப் போற்றுபவர்கள் சுவாமி விவேகானந்தர் "சைவம்" என்பதை பேணவேண்டும் என எடுத்துக்கூறியதை கருத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுவே அவர்மேல் கொண்டுள்ள பக்திக்கு அழகு.

1906இல் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருந்த
சேர்.பொன்.இராமநாதனை கப்பலில் சந்தித்த அமெரிக்கர் ஒருவர் "ஐயா நீங்கள் இந்துவா?" எனக் கேட்டபோது சிரித்துவிட்டு நாங்கள் சிவபெருமானை வழிபடுபவர்கள்.அக்கருத்தில் நாங்கள் சைவர்கள்.விபரம் அறியாத வெளிநாட்டவர்கள் எங்களை இந்துக்கள் என்கிறார்கள் அதற்காக நாங்கள் அப்பெயருக்கு உரியவர் ஆகமாட்டோம்" என்றார். "Eastern pictures to Western Students" எனும் நூலில் இன்றும் காணக்கிடைக்கும் செய்தியிது. அன்று விபரம் அறியாதவர்களாக சேர்.பொன்.இராமநாதன் சுட்டுவது வெளிநாட்டவர்களை! இன்று விபரம் அறியாதவர்கள் என்றால் நாங்கள் தானே? வெளிநாட்டவரா என்ன?

சைவப் பெரியார் க.சிவபாதசுந்தரம் ஐயா பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு மடல் வரைந்து "இந்து எம்மொழிச் சொல்?" என வினாவி என்ன அர்த்தத்தில் வழங்குகிறது என ஆய்வித்து அந்நியச்சொல் என்பதையும் அதன் அர்த்தம்(திருடர்) அமங்கலமானது என்பதையும் அறிந்து 1956களில் யாழ்ப்பாணத்தில் இருந்த இந்து வாலிபர் சங்கத்தை சைவ வாலிபர் சங்கமாக பெயர் மாற்றம் செய்தமை அறிந்த ஒன்றே!

சிவாகமங்களிலோ சித்தாந்த சாத்திரங்களிலோ கந்தபுராணம்,பெரிய புராணம், தேவாரங்கள், திருவாசகம்,திருமந்திரம் மற்றும் ஏனைய திருமுறைகள் என்று எங்குமே இந்துமதம் எனும் சொல் இல்லை. அமங்கலமான இந்து எனும் சொல்லை எங்கனம் சைவத்துக்கு சூட்டமுடியும்? தமிழை சிதைக்கும் திட்டத்துடன்கூடிய இந்துவை தமிழர் எங்கனம் ஏற்க முடியும்?

இராவணன் காலந்தொட்டு சீரும்சிறப்புமாக விளங்கிவருவது சைவநெறி. நாவலரால் மேலைத்தேயத்தவரிடம் இருந்து மீட்டு தமிழ்ச்சாதிக்கு வழங்கபட்ட உன்னத நெறி. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் மறைவுடன் இலைமறை காயாக இருந்த இந்து எனும் சொல்லாடல் பின்னர் இந்து சாதனம், இந்துக்கல்லூரி, இந்துபோர்ட் எனப் பெருத்து மாமன்றம்,பேரவை,குருமார்பீடம் என்று கொழுத்துப் போய்விட்டது.

ஏலவே சைவகுருமார் பீடம் இலங்கையில் சீரும்சிறப்புடன் இருக்க, கொழும்பில் சுமார்த்தவிசுவாசிக்கு "இந்து'குருமார் பீடம் தேவைப்பட்டுள்ளது. ஏனெனில் இவரது சிவாகமவிரோத வழிபாட்டுக்கு "சைவகுருமார்" உதவார் என்றதனால், அவர்களிலும் தான் பெரியபீடத்துக்கு உரியவன் என்பதை நிலைநிறுத்த "இந்து"குருமார்பீடம் உருவாக்கிவிட்டார். எங்கள் தமிழ்ச்சாதி எதற்கும் தலையசைக்கும் இழிசாதி என்ன இவர்கள் எண்ணிவிட்டனர் போலும்.

"சிவனெனும் ஓசை அல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை உனதே" என்றார் நாவுக்கு அரசராகிய திருநாவுக்கரசர் நாயனார். சிவனெனும் ஓசைக்கு அல்லாது வேறு எவற்றுக்கும் செம்மையில்லை.சபதம் பிடிக்கவா? என்கிறார். 'சைவம் சிவனுடன் சம்பந்தமாவது" என்கிறது திருமந்திரம். சைவம் என்பது சிவனெனும் ஓசையுடையது. இந்துவுக்கு எந்த மண்ணாங்கட்டியும் கிடையாது.

ஒரு சமயப் பெயர் அச்சமயத்தை பண்பும் பயனும் விளங்கும் உயிரோட்டமான அர்த்தம் பொதிந்ததாக இருத்தல் அவசியம். எள்ளில் எண்ணெய் இருப்பதுபோல் சமயப் பெயரில் சமயத் தத்துவங்கள் புலனாக வேண்டும். சைவம்-சிவம் என்பதே அழகு நிறைந்தது. தமிழருக்கு உரியது. தமிழ்ச்சாதியே உன் விதியை வடநாட்டின் தரகர்களுக்கு விற்காதே!!!!!!!!
மேலும் படிக்க...

Friday, July 10, 2009

இந்து முன்னணியே, சங்கர மடத்துக்கு இரண்டு கொம்பா முளைத்துள்ளது?????

இராமேசுவரம் ராமநாதர் கோயிலில் சைவ ஆதீனங்களான மதுரை ஆதீனம்,குன்றக்குடி ஆதீனம் ஆகியவற்றின் ஆதீன முதல்வர்கள் ஆலயக் கருவறைக்குள் நுழைந்தமையால் ஏற்பட்ட சர்ச்சையை 11-07-2009 நாளிட்ட நக்கீரனில் வெளியிட்டுள்ளார்கள். தமிழுக்கு உழைக்கும் நக்கீரனுக்கு முதலில் நன்றிகள்.

நுழைந்தமை தவறு என்று குரல் கொடுப்பவர்கள் இந்து முன்னணியினர். நேபாள மன்னர்,சிருங்கேரி மடாதிபதி(சங்கராச்சாரியார் பீடம்), காஞ்சி மடாதிபதி(சங்கராச்சாரியார் பீடம்) ஆகியோருக்கு மட்டுமே இவ்வாரு நுழையும் உரிமையுண்டு. இது இப்படியிருக்க இவ்விரு ஆதீனங்களுக்கு உரிமையளித்தது யார் என்று கர்ச்சித்துள்ளனர்.

என்னுடைய ஒருசில கட்டுரைகளில் இந்துமதம் என்பது பெரும்பாலான தமிழரின் திராவிடரின் தனித்துவ அடையாளமாக விளங்கும் சைவநெறியை மறைத்து வடநாட்டு கோலத்தை தமிழினத்துக்கு பூச எத்தனிக்கும் சதி என சுட்டிக்காட்டியுள்ளேன். இதோ நிறுபனமாகியுள்ளது!!!!

ராமேசுவர காஞ்சிமட நிர்வாகி "காஞ்சி சங்கராச்சாரியாரை" மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாலயக் கருவறைக்குள் நுழைய அனுமதியளிக்காதபோது இப்போது "இவர்களுக்கு" எப்படி அனுமதி கொடுத்தனர் என்று கோபப்படுகிறார்.

இராமேசுவரம் இராமநாதர் கோயில் ஓர் சைவக் கோயில். சைவக் கோயிலில் "சைவநெறியின் கோட்பாடுகள் தவறு" என்று வாதிட்ட அத்வைத சங்கரரின் அடியார்களான சங்கராச்சாரியார்கள் நுழைவது முதல்தவறு.கருவறைக்குள் நுழைய நினைப்பது மாபெரும் தவறு. எனவே காஞ்சி சங்கராச்சாரியார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வந்தபோது அவரை சிவாச்சாரியார்கள் நுழையவிடவில்லை. குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம் ஆகியோர் சைவ ஆதீனந்தார். எனவே நுழைவதற்கு சிவாச்சாரியார் அனுமதியளித்துள்ளனர். எனவே, என்ன தவறு இதில் உண்டு??????

அடுத்ததாக;
கருவறைக்குள் நேபாள மன்னருக்கு செல்ல உரிமையுண்டாம். மன்னர்கள் செல்லலாம் என்று மன்னர் உத்தரவு போட்டிருந்துள்ளார். மறுக்க முடியுமா என்ன?????? மறுத்தால் பிழைக்கலாமா என்ன???? ஆனால், சங்கராச்சாரியார்கள் நுழையலாம் என்று யார் உத்தரவிட்டது? ஏனைய ஆதீனங்களைவிட சங்கர ஆதீனங்களுக்கு கொம்பா முளைத்துள்ளது???????சைவ ஆதீனங்கள் கருவறைக்குள் நுழையக்கூடாது!!!!அதுவும் சைவக் கோயிலில்! ஆனால் அத்வைத சங்கரர்கள் எக்கோயிலில் உள்ள கருவறைகளுக்கும் நுழையலாம் என்று புதுநீதி!!!!!!!!

வைணவ ஆலயங்கள் ஏலவே சங்கராச்சாரியார்களை கணக்கெடுப்பதில்லை. எனவே இவர்கள் சிவனே என்று இருக்கும் சைவநெறியை சிதைக்க, சீரழிக்க முனைகின்றனர். இந்துமதம் எனும் பெயரில் சைவநெறியை மறைத்து(பெரும்பாலும் திராவிடரால் பின்பற்றப்படுவதும் திராவிடத்துடன் தொன்று தொட்டு கலந்திருப்பதுமானான நெறியாகிய சைவநெறி)அத்வைதநெறியைப் பரப்பி பார்ப்பன ஆதீக்கத்தை நிலைநாட்ட முயலுகின்றனர் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இந்து முன்னணிக்கு சைவ ஆலயத்தில் நடப்பவற்றுக்கு சர்ச்சை எழுப்ப அனுமதியளித்த இழிச்சவாய்த் தமிழரை நினைக்கும்போது மனம் நோகிறது. இந்து பத்திரிக்கை, இந்து விசுவாசி சோ, இந்து சுப்பிரமணியசுவாமி எல்லோருமே தமிழனுக்கு எதிரானவர்கள். சைவ ஆதீனங்களை எதிர்த்து காஞ்சி சங்கர பார்ப்பன ஆதீனத்துக்கு குடைபிடித்து குரல் எழுப்பும் இந்து முன்னணியின் சதியில் திருநெறித் தமிழர்களே மயங்கிடாதீர். இந்து மதம் எனும் பெயருக்கு குடைபிடிப்பவர்களே, இனியாவது சிந்தியுங்கள்!!!!!!!

சைவ ஆதீனங்களின் முதல்வர்கள் பிறப்பால் பார்ப்பனர் அல்லர். இதுகூட சங்கர காஞ்சி விசுவாசிகளுக்கு "கருவறை" பிரச்சினையை எழுப்ப காரணமாயிற்று. துறவிகளுக்கு சாதியில்லை. ஆனால் சங்கர மடங்களுக்கு பார்ப்பனர் மட்டுமே தெரிவாவது பார்ப்பன மடம் என்பதை தெளிவாக்குகிறது. எனவேதான் பிறப்பால் பார்ப்பனராகவுள்ள சங்கராச்சாரியார்கள் கருவறைக்குள் நுழையலாம். எங்கள் சைவ ஆதீன முதல்வர்கள் நுழையக்கூடாது. காரணம் பிறப்பால் இவர்கள் பார்ப்பனர் அல்லர்.

நக்கீரன் நிறுபர்கள் தொடர்புகொண்டபோது "ஏன் தேவையில்லாத சர்ச்சை" என்று தமது பக்க கருத்துக்களையும் சங்கரபீடத்துக்கு இதுபற்றி கொதிப்படைய உரிமையில்லை என்ற உண்மையையும் சுட்டிக்காட்டாது ஒதுங்கிக் கொண்ட சைவ ஆதீன நிர்வாகிகளின் சமூக அக்கறைக்கு தலை வணங்குகிறேன்.

என் இனிய சைவப் பெருமக்களே, இந்து மதம் என்பது பார்ப்பன மதம். சைவநெறி என்பது தமிழர் வாழ்வியல்.விழித்தெழுக!!!!!!!!!!!!!!!!!

இந்து நிறுவனங்களை சைவ ஆலய வளாகத்துக்குள் விடாதீர். இந்து எனும் பெயரில் சைவம் எனும் இனிய தமிழை சிதைத்துவிடாதீர். சைவ ஆலயத்து விசயத்தில் அத்வைத இந்துவுக்கு நுழையும் உரிமை இல்லை என்பதை தெரிவித்துக் கொண்டு; சைவர்களே, இந்த விசமிகளுக்கு சைவ விசயத்தில் தலையிடுவதற்கு "தடா...பொடா...." இடும்படி வேண்டுகிறேன்.

அதுசரி சிவபூமியாகிய இலங்கையில் உள்ள அகில இலங்கை இந்துமாமன்றம் சங்காராச்சாரியார் கைதானபோது விழுந்தடித்து இலங்கைத் தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர். இந்த விசயத்தில் என்ன செய்கின்றனர்????????? ஏலவே சைவ குருமார்பீடம் இருக்க அவர்களைவிட பெரியவர் எனக் காட்டிக் கொள்ள அகில உலக இந்து குருமார் பீடம் என்று இலங்கையில் உருவாக்கிய சங்கரத்தார் இந்து முன்னணிக்கு ஆதரவு அளித்திருப்பாரே!!! முடிந்தால் அவரிடம் கருத்துக் கேட்டுச் சொல்லுங்களன்!!!!!!!

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது வெறும் வாசகம் அல்ல. அது தமிழரின் வீரகோசம்! வெற்றி வேல் வீர வேல் என்பது தமிழரின் வீர முழக்கம். ஆன்மீகம் என்னும் மயக்க மருந்து கொண்டு தமிழரின் சைவப் பண்பாட்டை சிதைக்கத் துடிக்கும் இந்துத்துவாவுக்கு துணையாகாதீர். எங்கள் பரம்பரை காத்த பண்பாடை அடகு வைக்காதீர்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்
மேலும் படிக்க...