"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Tuesday, November 21, 2017

சைவசித்தாந்தம் தமிழருடையதா? சிவஞானபோதம் மொழிபெயர்ப்பா?

சைவசித்தாந்தம் தமிழருடையதா?
சைவசித்தாந்தத்தை ஒருசாரார் தமிழருடையதென்றும், ஒருசாரார் தமிழருடன் சம்பந்தம் செய்வது சிவத்துரோகம் என்றும் வாதிட்டவாறுள்ளனர். மெய்கண்டாரின் சிவஞானபோதத்தை ரௌரவ ஆகமத்திலுள்ள பன்னிரண்டு சூத்திரங்களின் மொழிபெயர்ப்பென்ற வாதப்பிரதிவாதங்கள் சைவசித்தாந்தத்தைத் தமிழருடன் சம்பந்தப்படுத்துவதில் ஏற்பட்டுமுள்ளது. சைவ சித்தாந்தத்தைத் தமிழருடன் சம்பந்தம் செய்வது ஏற்புடையதா என்பதை சைவ நூல்கள் கொண்டு ஆராய்வோம்.அதுவே தெளிவான விடையைத் தரும்.
நால்வேதங்கள் உலக மக்கள் யாவர்க்கும் பொதுவான நூலாயினும், வேதங்களை ஏற்றுக்கொள்ளும் வைதீகர்களுக்கே அவை சிறப்பானவையாம்.ஏனெனில் ஏனையோர் நால்வேதங்களை ஏற்கார். அதுபோல; இந்துப் பண்பாடானது உலகமக்கள் அனைவரும் ஒழுகுவதற்குரியதாயினும், அது இந்து பண்பாட்டினர் என்ற இந்திய மக்களுக்கே அப்பண்பாட்டு அமைவிடம் கருதி சிறப்புப் பெறுகின்றது.

பாரதமே திருநாடு பரசிவமே பரமபதி
ஆரணமே
ஆகமமே அருள்தருநூல் லதிற்சுரக்குஞ்
சாரமதே
சைவமெனுஞ் சற்சமய மெனநாயேன்
ஏரவருள்
செய்தனயே சீராசை கோமதியே
.

சித்தாந்த பண்டிதபூஷணம் .ஈசுரமூர்த்தியா பிள்ளையவர்கள் என்ற சைவ அறிஞரின் ஶ்ரீ கோமதி சதரத்ன மாலையில் உள்ள மேற்குறித்த பாடலை படிக்கும் வாய்ப்பை முகநூல் தந்தது.இதில் பாரதத்தோடே வேதாகமங்கள் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன. வேதாகமங்கள் உலகத்து மாந்தர் அனைவருக்கும் உரித்தானபோதும், அவை ஒழுகப்படும் அமைவிடமும் அவற்றின் தோற்றமும் கருதி; பாரதநாடு வேதாகமங்களோடு சம்பந்தப்படுத்தப்படுகின்றது.

நரர்பயில் தேயம் தன்னில்
நான்மறை பயிலா நாட்டில்
விரவுதல் ஒழித்து தோன்றல்
மிக்கபுண்ணியம் தானாகும்
தரையினில் கீழை விட்டுத்
தவம் செய்சாதியினில் வந்து
பரசம யங்கள் செல்லாப்
பாக்கியம் பண் ஒணாதே
                                -
சிவஞான சித்தியார்


சைவமாம்
சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது  - சிவஞான
சித்தியார்

மேற்குறித்த சிவஞானசித்தியார் பாடல் மேற்கோள்களிலிருந்து , வேதம் சிறந்தநாடே புண்ணியதேசம் என்பதும் சைவசமயத்தினை ஒழுகும் ஊழினைப் பெறுவது புண்ணியப்பலனே என்பதும் தெளிவாகின்றது.
பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித
மெய்கண்ட
நாதன்அருள் மேவுநாள்
எந்நாளோ – தாயுமானசுவாமிகள்
சைவசமயம் எனப்படுவது சுத்தாத்வைத சைவசித்தாந்த சமயத்தையே என்பதை தாயுமானசுவாமிகளின் திருப்பாடல்வரிகளாலும் சித்தியாரின் ஆசிரியரான அருணந்தி சிவாச்சாரியாரே
“மெய்கண்ட தேவன் மிகுசைவ நாதன்” என்று மெய்கண்டாரைப் போற்றிப்பாடியதிலிருந்தும்
துணியலாம்.

எனவே, பூமிப்பந்தில் மாந்தர் வாழும் தேசங்கள் பலவாயினும் வேதங்கள் சிறந்து விளங்கும் தேசம் புண்ணியதேசமாகின்றது. அதிலும் சைவசித்தாந்த சமயத்தை ஒழுகுவது புண்ணியத்தின் பேறு என்பதை சித்தியார் சுட்டிநிற்கின்றது. அந்த சுத்தாத்துவித சைவசித்தாந்தம் சிறந்துவிளங்குவது பாரத நாட்டிலேயே தமிழர் தேசத்தில் என்னும்போது தமிழராய்ப் பிறந்தல் புண்ணியப்பேறாகத்தானே இருக்கமுடியும்!

எங்கனம் பாரதநாடு வேதத்தோடு சம்பந்தமுடையதோ அங்கனம் சைவசித்தாந்தம் தென்னாட்டோடு சம்பந்தமுடையது. பாரதநாடு வேதத்தின்பால் கொண்டுள்ள சிறப்புரிமையால் வேதம் உலக மாந்தருக்குரியதென்ற அறத்திற்கு எங்கனம் பழுதேற்படாதோ,அதுபோல் தென்னாடு சைவசித்தாந்த சமயத்தின்பால் கொண்டுள்ள சிறப்புரிமையால் சைவசித்தாந்தம் உலகமாந்தர்க்குரியதென்ற அறத்திற்கு பழுதேற்படாது.
சைவசமயம் மொழிக்கும் இனத்துக்கும் அப்பாற்பட்டதென்னும்போது சைவசமய குரவர்களும் அவ்வாரேயாவர். எனினும் திருஞானசம்பந்தர் தம்மை தமிழோடு சம்பந்தம் செய்து பாடுகின்றார். தமிழ்ஞானசம்பந்தன் என்று ஒரு மொழியோடு சமயகுரவரொருவர் தம்மை இணைத்து அடையாளப்படுத்தியது சைவ கற்புடமைக்கு ஏற்பானதா என்று திருஞானசம்பந்தரை எவரும் ஐயம்கொளார். அங்கனம் ஐயம் கொள்வாரை சைவசமயத்திலிருந்தே ஒதுக்கிவைத்துவிடுவர் ஆகமச்சைவர் என்பது திண்ணம்

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற மாணிக்கவாசகப் பெருமானின் திருவாக்கு அண்டங்கள் யாவற்றுக்கும் பதியாகிய சிவபெருமானுக்கும் தென்னாட்டுக்குமுரிய சிறப்புறவால் வந்த வாசகமேயாம். அது கயிலைப்பதியாகிய சிவபெருமானின் முழுமுதலுக்கு எந்தக்கேட்டினையும் உருவாக்கவில்லையெனும்போது, தென்னாடுடைய சைவசிந்தாந்தம் எந்நாட்டவர்க்குமுரியதென்னும்போது எக்கேடும் ஏற்படாது என்ற தெளிவு பிறக்கவேண்டும்.அதுபோல்; எந்நாட்டவர்க்குமுரிய சைவசித்தாந்தத்தை  தென்னாட்டவர்க்குரியதென்று பந்தம் கொண்டாடுவது சமயவிரோதமன்று!

சிவஞானபோதம் மொழிபெயர்ப்பா?

சைவ சித்தாந்த மெய்கண்ட சாத்திரநூல்களில் சிவஞானபோதம் காலத்தால் முந்தியதன்று!  அவ்விருநூல்களுக்கு காலத்தால் முந்தியது திருக்களிற்றுப்படியாரும் திருவுந்தியாரும். காலத்தால் முந்திய அப்பர் தேவாரத்தினைவிட, காலத்தால் பிந்திய திருஞானசம்பந்தர் தேவாரம் முதலாம் திருமுறையாகக் கொள்ளப்படுவதுபோன்று, சிவஞானபோதநூல் மெய்கண்ட சாத்திர நூல்களில் முதல்நூலாகக் கொள்ளப்படுகின்றது.
 
ஈறாய்
முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய்
மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறு ஆர்சுவை ஏழு ஒசையொடு எட்டுத் திசை தானாய்
வேறாய் உடன் ஆனான் இடம் விழிம் மிழலையே -திருஞானசம்பந்தர்
பெருமான்

மெய்கண்டாருக்கு முன்னரே சைவசித்தாந்த சுத்தாத்துவிதக் கொள்கை தமிழரிடம் வழக்கிலிருந்துள்ளது. திருஞானசம்பந்தர் பெருமான் தமது தேவாரத்தில் ஒன்றாய்,உடனாய்,வேறாய் நிற்கும் சிவபெருமானின் தன்மையைப் போற்றிப்பாடியதிலிருந்து இதனை நாம் தெளியலாம்.. எனவே, சுத்தாத்துவித சைவசித்தாந்தத்தை தமிழாகமமாக ஆவணப்படுத்திய முதல்நூலே சிவஞானபோதமாகும்.

ஆகமங்கள் சமயகுரவருக்கு முன்னரே தமிழ்நாட்டில் வழக்கத்திலிருந்துள்ளமைக்கு அகச்சான்றுகளும் புறச்சான்றுகளும் அதிகமுண்டு. எனவே; திருஞானசம்பந்தரின் தேவாரத்தில் இடம்பெற்ற சுத்தாத்துவிதக் கருத்தானது, ஆகமத்திலும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

@ரௌரவ ஆகமத்தில் உள்ளதாகக் கூறப்பட்டு வழக்கத்திலுள்ள பன்னிரண்டு சங்கதமொழி சிவஞானபோத சூத்திரங்கள் காலத்தால் பிற்பட்டவையாக உள்ளனவே? அருளாளர்கள் ரௌரவ ஆகமத்திலுள்ள பன்னிரு சூத்திரங்களின் மொழிபெயர்ப்பே மெய்கண்டாரின் சிவஞானபோதநூலென்று கூறியுள்ளனரே?


ரௌரவ ஆகமத்தில் உள்ளதென்று வழக்கத்திலுள்ள பன்னிரண்டு சூத்திரங்களும் காலத்தால் பிற்பட்டவையாகவும்; காலத்தால் முந்தியவர்களால் ஆவணப்படுத்தப்படாதவையாகவும் விளங்குவதுகொண்டும், மெய்கண்டாரும் அருணநந்தி சிவாச்சாரியாரும் சிவஞானபோதத்தை மொழிபெயர்ப்பு நூலென்று கூறியிருக்கவில்லை என்பதன்பொருட்டும்,  சிவஞானபோதம் மொழிபெயர்ப்பல்ல என்பது ஆய்வாளர் நிலைப்பாடாகும். ஆனால்; அருளாளர்களென்று சைவ உலகம் போற்றுவோரில்ச் சிலர் சிவஞானபோதத்தை மொழிபெயர்ப்பு நூலென்றே கூறியுள்ளமை ஆய்வாளர் நிலைப்பாட்டோடு சைவசமூகத்தில் ஆகமப்பிடிப்புடையாருக்கு இணக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆகமம் என்பது தென்னாட்டோடு சம்பந்தச் சிறப்புடையது. அவ்வாறு கூறல்; சமயவிரோதமாகாது! வேதம் பாரததேசத்தோடு சம்பந்தச் சிறப்புடையது என்பது நால்வேதம் உலகமாந்தருக்கு உரியதென்ற தெய்வநோக்கிற்கு எங்கனம் விரோதமாகாதோ, அதுபோலவே என்க. இந்த உண்மையை உணர்வோர்; ஆகமத்தில் இருப்பதாயினும்சரி; தமிழ்நூல்களாய் வழக்கிலிருப்பினும் சரி; இரண்டுமே தென்னாட்டுக்கே சம்பந்தச் சிறப்புடையதென்பதை உணர்வர். எனவே; நூல்கள் எழுதப்பட்டுள்ள மொழிகொண்டு நூல்கள்பால் கசப்புணர்வு கொள்ளார்.
பந்தமுறும் மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால் அந்த முறை நான்கினொடும் முறைபதினொன்றாக்கினார் - திருமுறை கண்ட புராணம்
மந்திரங்கள் பதினொன்றும் என்பது ஈசானம்தத்புருஷம்அகோரம்வாமதேவம்சத்தியோஜாதம் ஆகிய ஐந்து பிரம்ம மந்திரங்களும்இருதயம்சிரசுசிகைகவசம்நேத்திரம்அஸ்திரம்ஆகிய ஆறு அங்க மந்திரங்களும் கொண்டதாம் நம்பியாண்டார் நம்பியவர்கள் பதினொறு திருமுறைகளாக பதினொறு மந்திரங்களின் பொருட்டு திருமுறைகளை வகுக்கின்றார். அதன்பொருள், அவ்மந்திரங்களின் மொழிபெயர்ப்பாகாதுஅப்பதினொறு மந்திரங்களைப் பற்றி திருமுறைகள் பதினொன்றாக வகுக்கப்பட்டதுகொண்டு, அவ்மந்திரங்களின் மொழிபெயர்ப்பென்று திருமுறைகளைக் கூறமுடியாது. ஆனால்; அவ்மந்திரங்களுக்கும் திருமுறைகளுக்கும் சம்பந்தம் உண்டென்பது புலப்படும்.

வேதம் பசுவதன்பால் மெய்யாகமம் நால்வ
ரோதுந்  தமிழதனி னுள்ளுறுநெய்-போதமிகு
நெய்யி ணுறுசுவைபா நீள்வெண்ணெய் மெய்கண்டான்
செய்ததமிழ் நூலின்
நிறம்
வேதம் என்பது பசு, அந்தப் பசுவின்பால் ஆகமம், திருமுறைகள் அப்பாலின் நெய்; சிவஞானபோதம் அந்நெய்யின் இனிய நறுஞ்சுவை என்பதுவே சைவமரபு.
பன்னிருதிருமுறைகளை ஆகமங்களின் மொழிபெயர்ப்பு என்று கூறமுடியாது.
திருமந்திரத்தை ஆகமத்தின் மொழிபெயர்ப்பென்று கூறமுடியாது.
ஆனால்;ஆகமத்தினைப் பழமாகக் கொண்டால்; அப்பழத்தின் சாறாக திருமுறைகளைக் கொள்ளமுடியும். அதுபோலவே; மெய்கண்ட சாத்திர நூல்களும் என்க.
ஆரியமும் தமிழும் உடனே சொலிக்
காரியையார்க்குக் கருணை செய்தானே - திருமந்திரம்.

ஆகமங்களை வடமொழி,தமிழ்மொழி இரண்டிலுமே இறைவன் அருளினான் என்பதிலிருந்து சிவஞானபோதம் மொழிபெயர்பல்ல என்பதும்; ஆகமம் என்னும் பழத்தின் சாறே சிவஞானபோதம் என்பதும் தெளிவாகும்.

"பரமன் அருள் மொழியாய ரௌரவச் சுருதியின்
பனிரண்டு சூத்திரத்தைப்
பற்றியுள்ள தென்மொழிச் சிவஞானபோதநல்
பனுவல் பொருட்கு இயைந்த" - பாம்பன் சுவாமிகள்

பழத்தைப் பற்றியுள்ளதே அதன் சாறாகும்.அருளாளர் வாக்கு பொய்யாகா!அதேசமயம்; வித்துவான்களின் வாக்குகளை அருளாளர் வாக்காகக் கொள்வது தவறாகும். சைவசமயத்தில் அருளாளர் என்று அதிகாரபூர்வமாக கூறப்படக்கூடியவர்கள் சமயகுரவரும் சந்தான குரவரும் ஏனைய நாயன்மார்களுமே!  ஏனையோர்க்கு அவர்கள் வாழ்வின் அகச்சான்றுகளே சமய அருளாளர் என்ற வரையறையை அவர்களுக்கு வழங்கிநிற்கும்.

@ரௌரவ
ஆகமத்திலுள்ளதாக கூறப்படுகின்ற பன்னிரண்டு சூத்திரங்கள் காலத்தால் பிந்தியது போன்றுள்ளதே?
ஆகமங்களில் பல காலத்தால் மறைக்கப்பட்டுவிட்டன. மறைந்துபோன ஆகமப்பகுதிகளை மீட்கும் பொருட்டும் பாரதம் முழுதும் பரவச்செய்யும் பொருட்டும், சிவஞானபோதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகவே தற்போது புழகத்திலுள்ள சங்கதமொழிச் சூத்திரங்கள் இருக்கவாய்ப்புண்டு. அந்த மொழிபெயர்ப்பை பாம்பன் சுவாமிகள் போன்ற அருளாளர் தமது அருட்கண்களால்க் கண்ட மறைந்துபோனபழமாக விளங்கிய” ஆகமச்சூத்திரங்களோடு தொடர்புபடுத்துவதால் உருவாகும் முரணே அருளாளர் கூற்றும் ஆய்வாளர் கூற்றும் முரண்படக் காரணமெனத் துணியலாம்.

தமிழில் இருந்தால்த்தான் தமிழருடையதென்ற மாயை தமிழ்த்தேசியவாதிகளுக்கு மொழிப்பற்றால் வருவதென்க. தமிழோடும் தென்னாடோடும் சம்பந்தப்படுத்தும் மரபு சைவமரபில் தொன்றுதொட்டு விளங்கும்போது; தமிழோடு சம்பந்தப்படுத்தி உரிமைகொண்டாடும் வழக்கு இன்றைய சைவாகமப் பற்றுடையார்க்கு கசப்பாக இருப்பதற்கு ஸ்மார்த்தத் தாக்கமும் தனித்தமிழ் இயக்கத்தாரின் சங்கதமொழி வெறுப்புகளால் ஏற்பட்ட மனத்தாக்கமுமே காரணமாகும். ஆக; இருசாராரின் நிலைப்பாடுகளும் சைவசமயத்திற்கு ஏற்புடையதன்று!

மேலும் படிக்க...