"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, December 27, 2008

விஞ்ஞானம் வியக்கும் வேதநெறி

ஆய கலைகள் அறுபத்தினான்கு, அதில் சோதிட சாத்திரம்(வான சாத்திரம்),கணிதம்,சித்த மருத்துவம் என்பன மணிகளாய் பூத்து வேதநெறியை அழகுபடுத்துகின்றன என்றால் மிகையாகாது.மெஞ்ஞானம் என்பது மூலமூர்த்தியாகவும் ஏனைய மருத்துவம்,கணித விஞ்ஞானம்,வான சாத்திரம்,அரசியல் என்ற ஏனையவை பிரகார மூர்த்திகளாகவும் கொண்ட மேன்மைகொள் நெறியே வேதநெறி.இதைத்தான் நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் என்றும் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க என்றும் திருமுறைகள் எடுத்தியம்புகின்றன.

வேதநெறியாயினும் சரி அதன் மூலாதாரமான சைவநெறியாயினும் சரி, இந்த அறுபத்தி நான்கு கலைகளையும் உலகுக்குத் தந்த பெருமையை உடையது எனலாம்.அன்றைய முனிவர்கள்(ஏன் இன்றும் தவத்தினுள் ஆழ்ந்தும் பரதேசிகள் என்ற திருப்பெயர்களோடும் உலாவருகின்றனர்) விஞ்ஞானிகள் என்றால் அது பொருந்தாப் பேச்சு அன்று.

சித்த மருத்துவம், சோதிடம், கணிதம்,இல்லற இன்பவியல் கலை என்று ஏராளமானவற்றுக்கு முன்னால் மேலைதேயம் விழிபிதுங்கி நிற்பது நம்மவர்களில் சிலருக்குப் புரியாது.

சித்த மருத்துவத்துக்கு இணையான மருத்துவம் இல்லவே இல்லை என்பேன். மேலைத்தேய மருத்துவம் வெளியோட்டமாய் பார்க்கும்போது ஆகா ஒகோ என்று இருக்கும். ஆனால் அதனுள் மூழ்கினால் பல மருந்துகள் இந்திய சித்த மருத்துவத்திற்கு பயன்படும் தாவரங்களை அறிந்து அதிலிருந்து உருவாக்கப்பட்டது என்பது மெல்ல மெல்லப் புலப்படும்.மேலைத்தேய மருத்துவத்தில் உள்ள மருந்துகள் யாவுமே உடலில் டோக்சின்(toxin) எனும் பொருளை உருவாக்கி மிகச் சிறிய அளவேனும் பாதகத்தையேனும் உண்டு பண்ணிவிட்டே செல்லுகின்றன. இந்த டோக்சின் பொருட்கள் உடலில் அதிகரிக்க அதிகரிக்க உடலும் இயற்கை நியதிகளுக்கு மாறாக செயற்பட ஆரம்பிக்கின்றது. ஈற்றில் புதிய புதிய நோய்களை ஏற்படுத்துகின்றது. இதய மாற்று சிகிச்சை, ஈரல் மாற்று சிகிச்சை,சிறு நீரக மாற்று சிகிச்சை எல்லாம் மேலைத்தேய மருத்துவ மேன்மைகளாக நினைக்கும் மூடரும் உள்ளர். ஆயுர்வேத வாழ்வியலை மேற்கொள்பவர்களுக்கு இதுபோன்ற சிகிச்சைகளுக்கு முகம் கொடுக்கும் துர்பாக்கியம் நிகழ்வதில்லை. ஏன் அறுவை சிகிச்சைகள் எல்லாம் ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் உண்டு என்பது மறக்கப்படக்கூடாதவை.

அன்று எல்லாவகையான உணவுகளும் எல்லாக் காலங்களிலும் பெறமுடியாது. குறித்த உணவு குறித்த பருவத்தில்த்தான் விளையும்.அவை நிறைவான முறையில் சமிபாட்டிற்கு உள்ளாகும் வகையில் உணவு சமிபாட்டுத்தொகுதியும் பருவமாற்றத்திற்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்துகொள்ளும். ஆனால் இன்று உணவுப்புரட்சி என்று எல்லாப் பருவத்திலும் எல்லா உணவும் கிடைக்கும் விந்தையால் உணவு சமிபாட்டுத்தொகுதி ஈற்றில் கெட்டுப்போகின்றது.நோய் வந்து சேருகின்றது. உணவுப்பழக்கமே ஆரோக்கியத்தின் அத்திவாரம் என்பர். ஆதலால்த்தான் சிலசமயங்களில் சித்த மருத்துவத்தில் உணவுக்கட்டுப்பாடு அவசியமாகின்றது
ஜேர்மனியில் பல்லாயிரம் ஏடுகள் உள்ளன என்று வீரகேசரியில் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த நினைவு உண்டு. ஜேர்மன்காரர்கள் வெளிநாட்டவர்கள் எல்லோரும் வந்து இந்தியாவில் கொட்டிக்கிடந்த அறிவு வளங்களை எல்லாம் திரட்டிச் சென்றனர். நம்மவர்கள் நாத்தீகம் கதைப்பதிலேயே அறிவை இழந்து தம்மிடம் இருக்கும் வளங்களை மறந்து மேலைதேயத்தை துதிபாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் அன்றும் இருந்தனர். இன்றும் உள்ளனர். என்றும் இருப்பர். திருந்தவே மாட்டார்கள்.
கல்ப சூத்திரம் எனும் நூலில் போதாயனர் பைதகரஸ் தேற்றத்தை என்றோ சொல்லிவிட்டார். நம்மவர்களுக்கு இது தெரியாது.பைதகரஸ் எந்த இந்திய ஏட்டைப் படித்தறிந்து கொண்டாரோ யாரறிவர்!திரிகோண மீதி என்ற சமஸ்கிருதம் Trigonometry என்றும் ஜியோமீதி என்ற சமஸ்கிருதம் Geometry என்றும் ஆனது இவர்களுக்கு புலனாகாது.பாஸ்கராச்சாரியார் என்பவர் எண் கணிதத்தையும்(Arithmetic) வடிவ கணிதத்தையும்(Geometry) லீலாவதி என்ற நூலிலும் இயல் கணிதத்தை பீஜகணிதம் எனும் நூலிலும் விளக்கியிருப்பது எத்தனை பேருக்குத்தான் தெரியும்?அவர் பூச்சியத்திற்கும் எண்ணிலிக்கும் விளக்கம் கொடுத்துள்ளார்.Permutation and Combination என்று இப்போது அழைக்கப்படும் கணக்குமுறையை "அங்கபாச வ்யவகாரம்" எனும் பெயரில் விளக்கியுள்ளார்.ஏன் பூச்சியத்தையும் ஒன்றில் இருந்து ஒன்பது வரையுள்ள எண்களையும் கண்டுபிடித்தது வேதநெறி மக்களே என்பது யாவரும் அறிந்தது. இவ் எண்கள் இந்து அரேபியா எண்கள் என்று இன்று வழங்கப்படுகின்றன. (ஏனெனில் அரேபியரே வர்த்தகத்திற்கு இலகுவான எண் நடைமுறையாய் இருப்பதுகண்டு பாரில் பரப்பினர் என்பதால்.)

இல்லறத்தின் அத்திவாரமே சேக்கைப்போர்தான் என்பதை உணர்ந்து காமசூத்திரா,திருக்குறளின் காமத்துப்பால் என்று நின்றுவிடாமல் ஆலயங்கள் வரை காமக்கலையை வடித்து சமூகத்தோடு வாழ்ந்த சமய வாழ்வியல் பண்பாடு நமது பண்பாடு என்றுணர்க.

வானத்துக்கோள்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றது என்பதை உணர்ந்தவர்கள் வேத நெறி மக்களே என்பது வெள்ளிடைமலை. சோதிடத்தை இகழ்பவர்கள் ஒருகணம் சிந்திக்க எளியேன் இங்கு வேண்டுகின்றேன்.அமாவாசை பௌர்ணமிகளில் சிலருக்கு சித்த சுவாதீனம் இல்லாமல் போவது ஏன்?குறித்த நாட்களில் புவியீர்ப்பு மாறுவதால்த்தான் கடல் அலைகளே ஆர்ப்பரிக்கின்றன . பருவ காலங்களே இக்கோள்களின் அசைவின் தாக்கங்களை சுமந்து பூப்பது என்று விஞ்ஞானம் நவில்வதை உணர்க.. எனவே மனித வாழ்க்கையும் நாளும் கோளுடனும் ஒன்றாய் கலந்திருப்பது புலப்படும்.உலகில் பன்னிரண்டு மாதங்களைக் கொண்ட ஆண்டு நடைமுறையைக் கொண்டிருந்தது வேதநெறிப் பண்பாடே.

ஆங்கிலேய ஆண்டில் வெறும் பத்து மாதங்களே இருந்தன.ஜீலியர் சீசரின் நினைவாக ஜீலை என்றும் அகஸ்டஸ் சக்கரவர்த்தியின் நினைவாக ஆகஸ்ட் என்றும் பெயரிட்டனர்.அதற்கு முதல்க்கூட பத்தாவது மாதத்தைக் குறிக்கும் டிசம்பர் தசம்(பத்து) சமஸ்கிருதத்தில் இருந்தே உருவாயிற்று என்றும் நவமி எனும் சமஸ்கிருதத்தில் இருந்தே நவம்பர் என்றும் அதாவது ஒன்பதாவது மாதம் என்றும் அஷ்டம் எனும் சமஸ்கிருதத்தில் இருந்தே எட்டாவது மாதத்தைக் குறிக்கும் அக்டோபர் உருவானது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.ஏன் யேசு பிறந்த திகதியில்க்கூட அவர்களுக்கு குழப்பம். ஈற்றில் டிசம்பர் 25 என்பது கத்தோலிக்க சபை ஒருமனதாக யேசுவின் பிறந்த நாளாய்க் கொண்டாடுவோம் என்று எடுத்துக்கொண்ட முடிவு என்பது பலருக்குத் தெரியாது.தெரிந்தவர்கள் மௌனிகளாய் உள்ளனர். இரசியாவில் யேசு பிறந்ததாக பெப்பிரவரி ஏழைக் கொண்டாடும் ஒரு கிருத்தவப் பிரிவினர் உள்ளனர். இது இப்படியிருக்கையில் வெறும் கற்பனை ஆண்டு முறையல்லாது நமது சோதிடவிஞ்ஞானம் திதி,இலக்கணம்,ராசி,நட்சத்திரம் என்று நாம் பிறந்தபோது அமைந்த வான அமைப்பை ஆதாரமாய்க் கொண்டு நமது பிறந்த நாளை தந்து நிற்கின்றது தெட்டத் தெளிவாகசூரிய சித்தாந்தத்தின்படி உலகம் தோன்றி கி.மு.198,67,71,100 என்று பறைசாற்றுகின்றது.இது விஞ்ஞானம் ஏற்ற காலக்கணிப்பு.ஆனால் பைபிள் வெறும் கி.மு 4004 என்று விஞ்ஞானம் முன் தோற்று நிற்கின்றது. இப்போது சொல்லுங்கள் சோதிடம் என்பது பகட்டுவித்தையா என்ன?
இன்று முறைப்படி சோதிடக்கலையை கற்பவர் குறைவு.அரைகுறை சோதிடர்கள் தவறாகக் கணிக்க, அவர்களிடம் ஏமாந்த அறிவற்ற கூட்டம் சோதிடத்தை இகழத்தான் செய்யும்.

அறிவு வளர வளர நாம் பெற்ற அறிவு முடிவானது இல்லை என்பது புலப்படும்.விஞ்ஞானிகளும் இதை அறிவர். உலமகே போற்றும் விஞ்ஞான மேதை நாத்தீகர்களின் கன்னத்தில் அறைவதுபோல் பின்வறுமாறு சொல்லுகின்றார்."அறிவு அறிவு என்று பேசுகின்றோம்.அப்படிப் பேசும்போதெல்லாம் நாம் எவ்வளவு சிறுமை உடையவர்கள் என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகின்றது.அந்த நேரத்தில் வெட்கம் அடைந்து தலை குனிகின்றேன். காரணம் இயற்கையின் இயங்கும் தன்மை விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகின்றது. இந்தவிதி முறைகள் எல்லா நேரத்திற்கும் எல்லா இடத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு சிலவற்றைத்தான் தெரிந்து கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வு மனதை உறுத்துகிறது.அதற்கு அப்பால், நாம் அறிந்திராத ஒரு சக்தி எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி முறைப்படி நடத்திச் செல்கின்றது. இது உணர்வுக்கும் அப்பால் உள்ள உண்மை.அந்த ஒரு மாபெரும் சக்தியை கற்பனை செய்து பார்க்கும் போது என்னை அறியாமலேயே நான் சமயத்துள் நிற்கின்றேன்!"யார் அந்த விஞ்ஞான மேதையா? ஜன்ஸ்டீன் என்றால் நம்புவீர்களா என்ன நாத்தீகர்களே?
சந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய இந்திய விஞ்ஞானி சோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்லி விஞ்ஞானி என பெருமை கொள்ள, விஞ்ஞான மேதை சமயத்தில் தான் தன்னையறியாமலே நிற்பதாகச் சொல்லி தனதறிவை மெருகூட்டுகின்றார்.

சின்மியாமிஷன் தாபகர் சுவாமி சின்மியானந்தர் நாத்தீகராய் இருந்து தவசிகளின் தோலை உரித்துக்காட்டப்போவதாக சபதமிட்டு இமயமலை சென்றவர். மீண்டும் திரும்பியபோது தவக்கோலத்திலேயே மீண்டார்.ஆராய்வில் ஈடுபடுவோர் விஞ்ஞானிகள் ஆவதுபோல் வேதநெறி ஆராய்வில் ஈடுபடுபவர் மெஞ்ஞானி ஆவதுதான் யதார்த்தம் நவிலுகின்ற உண்மை.இதுபோல்த்தான் கவியரசர் கண்ணதாசனும் கடவுளே இல்லை என்ற நாத்தீகத்தில் கருப்புச்சட்டை போட்டு; சோதிடம்,சாத்திரங்கள்,மந்திரங்கள், என்று யாவற்றையும் நையாண்டி செய்தார். நையாண்டி செய்த அவரே ஈற்றில் அர்த்தமுள்ள இந்து(வேதநெறி என்றே வழங்கப்படவேண்டும்.) மதம் எனும் பெயரில் கட்டுரை வரையும் பக்குவம் பெற்றது கண்கூடு.

ஆராயாமல் சிலர் வெளியே நின்று பிதற்றுவர். இவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள். செவியிருந்தும் செவிடர்கள். காலிருந்தும் நொண்டிகள்.

"வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்குக."
மேலும் படிக்க...

Sunday, December 14, 2008

நெறிதவறும் பிராமணரும் ஈழத்தில் சைவத்தை சிதைக்கும் வடநாடும்

கடற் கன்னிகளின் தமிழிசையால் அழகான ஈழமணி நாட்டை அழகுபடுத்தும் மட்டக்களப்பு மாநகரிலே அண்மையில் நடந்த திருமால் ஆலய சங்காபிடேகத்தின் இறுதியில் பிரசங்கம் நடைபெற்றது. ஆலயந் தோறும் பிரசங்கம் நடைபெறல் வேண்டும் என்ற நாவலர் பெருமானின் ஆவலை சில ஆலயங்களே சிறப்பாகக் கையாளுகின்றன. இவ்வாலயத்திலும் அவ்வாறு நடைபெற்ற பிரசங்கத்திலே சங்காபிடேகம் செய்வித்த பிரதமகுருக்கள் தமிழின விரோத விதைகளை மக்கள் மத்தியில் பதியவைக்க முயன்றவேளை தன்னையறியாமலேயே தனது உட்கிடக்கையை வெளிப்படுத்திவிட்டார். பாவம் ஓளி ஒலிப்பதிவு வலைப்பூ ஏறும்.......தமிழரை தமிழ் பற்றாளர்களாக வாழும் தமிழ் பிரமணர்களை சிந்திக்கவைக்கும் என்று அவர் எண்ணியிருக்க வாய்ப்பில்லை. இங்கே அடியேன் குறித்த ஒளி ஒலிப்பதிவை இணைத்துள்ளேன் YOUTUBEமூலமாக. PLAYபண்ணி சிறிது நேரம் பொறுத்திருந்து BUFFERING ஆகவிட்டு ஒலி ஒளிப்பதிவை அவதானியுங்கள்இங்கு சிவாகம்பற்றி நவிலமுயன்ற இவர், வைதீக ஆகமம் என்ற ஒன்று உண்டென்றும் அது பிராமணர்களின் வீட்டிலேயும் வைதீகர்களின் சம்பிரயாயத்திலேயும்.......... என்று ஏதோ சொல்லுகின்றார்.
இவர் திருமாலுக்கு பூசை செய்கின்ற பிராமணர் என்ற கோதாவில் பார்த்தால் சிலவேளைகளில் இவர் வைணவ ஆகமத்தை பின்பற்ற நீதியுண்டு. ஆனால் வைதீக ஆகமம் இங்கு ஏன் வந்தது? பிரமணர் பின்பற்றுவர் என்று கூறுகின்றார். அப்படியானால் சிவாச்சாரியார்கள் எல்லோரும் அதைப் பின்பற்றுகின்றனரா? சிவாச்சாரியார்கள் சிவாகமவழி நடப்பவர்கள். இலங்கையில் இராவணன் காலந்தொட்டு சைவமே சமயமாக இருந்துவர இவர் எங்கிருந்து வைதீக ஆகமத்தாராக பிறந்தார்? ஹரியே முழுமுதல் தெய்வம் என்கின்றார். வைணவத்தை இவர் பின்பற்றுபவராக இருக்கலாம். ஆனால் ஈழவள நாட்டில் இராவணனும் அவன் குடியும் சைவமே என்பதை இவர் மறக்கக்கூடாது என்பது யான் வேண்டும் வரம். அந்த சைவக்குடிக்குள் இவருக்கு ஏன் இந்தக் குதர்கவாதம்? இலங்கையில் சைவ சமய வரம்புக்கு உட்பட்டு காத்தற் கடவுளாக திருமாலை வழிபடும் தமிழ் பண்பாட்டை பேணி வருகையில் இவர் இப்படி ஒரு போதனையை மக்களுக்கு ஊட்டவேண்டிய அவசியம் என்ன? ஊட்டும் துணிவை எப்படிப் பெற்றார்? இவர் பேச்சில் சைவ பண்பாட்டுக்கு எதிரான இலங்கையில் இல்லாத ஒரு பண்பாட்டுக்கு வித்திடும் போக்கான தன்மையை வெள்ளிடைமலையாய் அம்பலமாகி நிற்கின்றது. சட்டித்தனம் செய்யும் போக்கல்லவா இவர் பேச்சில் உறைந்துள்ளது.இலங்கையில் பிறக்கும் ஒவ்வோரு குழந்தையும் சமய பாடமாக சைவ நெறியையோ,கிருத்தவ சமயத்தையோ அன்றி இசுலாம் சமயத்தையோதான் தமிழ்மொழி மொழிமூலம் தெரிவுசெய்து படிக்கமுடியும். எனவே இவர் சைவ நெறியையே படித்திருக்கவேண்டும். சிவபெருமானே முழுமுதற்பொருள் என்றும் அவனுக்கு ஒப்பாய் எவரும் இலர் என்றும் படித்து சித்திபெற்ற( சாதரண தர பரீட்சையில் சித்திபெற்றார் என்ற எடுகோளில்) இவர் எங்கேபோய் ஹரியேதான் முழுமுதல் என்ற ஞானத்தைப் பெற்றார் என்பது; தமிழர்களே, உங்களுக்கு விளக்கவில்லையா?
சுமார்த்தபீடமான சங்கரபீடமாகத்தான் இருக்கும். தமிழரின் தேசியம் சைவசமயத்தால் பேணப்படும் என்று கருதி அன்றே சைவத்தின் தனித்தன்மையை அழிக்க வடக்கின் வைதீக நெறி கங்கணங்கட்டி சுமார்த்தத்தைப் படைத்து தமிழரிடையே ஊடுருவவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக கறையான் புற்றாக சைவத்தை (திருமுறைகளையும்) அழிக்க முயன்று தோற்று பின்னர் இந்து என்ற பெயரில் விசுவருபம் எடுத்து தமிழ் நாட்டைத் தாங்கி, 95களில் இலங்கையின் கொழும்பையும் தாங்கி, அங்கு தளம் அமைத்து இன்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு திருகோணமலை என்று தமிழரின் தேசிய மண்ணிலும் காலடி எடுத்துவைத்து விட்டது. இதற்கான ஆணித்தரமான சாட்சிதான் இந்த ஒளி ஒலிப்பதிவு.தமிழனே, இந்து என்ற பெயரில் சைவத்தைத் தொலைத்து வைதீகத்தை ஏற்றுவிட்டாயேயானால் உனது தேசியம் அழிந்துவிடும். உணர்க. உனக்கென்று ஒரு பண்பாடு இருந்ததென்ற வரலாறுகூட இல்லாமல் போய்விடும். தமிழா, உனக்கு என்றுமே "கண் கெட்டபின் சூரிய வழிபாடு" என்ற பழமொழி பொருத்தமடா. அதை மேலும் வலுச்சேர்ப்பதுபோல் சைவத் தனித்துவத்தை இழந்து ஏமாந்து வேதனைப்படாதே! நித்திரையில் இருந்து விழித்தெழு.
பூணூல் போட்டவர் சொல்லுகின்றாரே என்று வாயைப்பிழந்து கேட்டுக்கொண்டு இருக்காதே. என்ன சொல்கின்றார் என்னத்தைச் சொல்லுகின்றார் என்பதை உணர்ந்துகொள். இந்த விசமி இப்படிச் சொல்கையில், ஒருவர் எழுந்து இல்லை இது சிவபூமி. நாங்கள் சைவர். எங்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமான். நாங்கள் அறிந்தது சிவாகமம் ஒன்றே! நீங்கள் எங்கே இந்த வியாக்கியானத்தைப் படித்தீர்கள்......எங்கள் நாட்டில் தமிழர் அழிவதை தூண்டிவிடும் ஆரியக்கூட்டத்திடம் இருந்தா? " என்று கேள்வி தொடுத்திருந்தால் பூணூல்போட்டு சைவம் படித்து பணத்துக்கு சுமார்த்தராய் விலைபோன இவர் தலைகுனிந்து நின்றிருப்பார். இன்னொரு பிரசங்கத்துக்கு மேடையேறவும் மாட்டார். தமிழா.....இனியாவது விழித்துக்கொள்!
சங்கரபீடத்துக்கு கொடிபிடிக்கும் அறிவு மங்கிய தமிழர்களே, திரைப்படத்துறை தொட்டு திரு நங்கையர் சங்கம் ஈறாய் தமிழருக்காக குரல்கொடுக்கையில் தமிழகத்தில், சுமார்த்தைத்தை ஆதரிக்கும் இராமகோபலன், சோ போன்ற மேதாவிகள் தொட்டு சிறையனுபவித்த மதுரை சங்கரபீடம் வரை ஒருவர்கூட தமிழனுக்காய் குரல்கொடுக்கவில்லை. ஏன்?
தமிழா, சைவன் ஆன உன்னை இந்துவாய் சுமார்த்த வைதீகனாய் மாற்றி உன் அடையாளத்தை அழித்து உன்மொழியை அழிக்க திட்டம் தீட்டியுள்ள கூட்டமே வட இந்தியப் பார்பனீயமும் அதன் அடிவருடைகளான தமிழகத்தின் இந்த பார்ப்பன மேதாவிகளுமடா. உணர்க. இவர்கள் உனது நண்பரல்ல. ஆன்மீகப் பேரொளிகள் அல்ல.
உனது இனத்தை அழிக்கத்துடிக்கும் எதிரிகள். ஈழத்துப் பிராமணர் இவர்களில் இருந்து வேறுபட்டு சைவ வாழ்வை தமிழோடு நுகர்பவர்கள். ஆனால் இன்று கொழும்பில் சிலர் பிறழ்வடைந்து பெரியபெரிய பதவிகளையெல்லாம் அனுசரித்து, உயர்தானங்களைப் பெற்று இன்று ஈழத்து பிராமணக் குழந்தையை சுமார்த்தபீடமான சங்கரபீடத்துக்கு அனுப்பி குருபட்டம் பெற வழிசமைத்துள்ளனர். இதுவரைகாலமும் சைவ ஆதீனமான திருவாவடுதுறை ஆதீனமே ஈழத்து பிராமணக் குழந்தைகளுக்கு பயிற்சியளித்து வந்தனர். ஆனால் இன்று திடிர் மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளைய பிராமண சமுதாயத்தை தமிழர் என்ற வட்டத்துக்குள் இருந்து (தமிழகத்தில் நடந்ததுபோல்) அகற்றவேண்டும் என்ற பேராசையா இவர்களின் செயலின் நோக்கம்?
பிராமண சமூதாயத்திடம் சிவத்தமிழோன் மன்றாடுவது உங்கள் பிள்ளைகளை சைவ ஆதீனங்களுக்கு அனுப்பிவையுங்கள் குருபட்டம் படிப்பதற்கு. இலவசம்...........சலுகைகள்.......என்பவற்றுக்கு மயங்கி தமிழின விரோத சுமார்த்த பீடங்களுக்கு மறந்தும் அனுப்பிவைத்து சிவத்துரோகம் செய்யாதீர். திருஞான சம்பந்தர் போன்ற சைவக்கொழுந்துகளே உங்கள் வீடுகளில் பூக்கவேண்டும்.இல்லையேல் தமிழன்னை நாளை மன்னிக்காது. மறவாதீர்.

சமயத் தலைவர்களே, நீங்கள் நித்திரையிலா உள்ளீகள்? கொதிக்கும் கோபத்தை என் நெஞ்சு சுமக்கின்றது உங்களின் அறிவற்ற ..........கொழும்பின் சுமார்த்த பணத்திற்கு கைப்பிள்ளையாக நடக்கும் போக்கால். தமிழரின் தேசியமான சைவம் அழிக்கப்படுவது உங்கள் கனவா? திருந்துங்கள்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பர். எழுதுகிறேன்.................எழுதுகிறேன்.......விழிப்புணர்வு கொண்ட தமிழினம் உருவாகும் என்ற நம்பிக்கையில். நீங்கள் விழித்து தீர்ப்பு வழங்கினால் சுமார்த்த ஆரியச் சதி ஒரு தூசி மாதிரிபோய்விடும்.
மேலும் படிக்க...