தமிழை நீசமொழியாக கருதுபவர் இந்துமத அதிபதியாகிய சுமார்த்த பீடமான சங்கரபீடம். தமிழில் பாடுவது தமிழில் பேசுவது இறைவனுக்கு தீட்டை உருவாக்கும் என்பது இவர்களது நினைப்பு.கருவறையில் தமிழில் உரையாடினால் அது பாவம் என்பது இவர்களது பாணி.
சிவாலய பூசையில் வேதம் ஓதியபின் ஆசீர்வாதத்திற்கு முன் தமிழ்மறை ஓதும் வழக்கத்தை இந்த சுமார்த்த அடிவருடிகள் விரும்பவில்லை. திருமுறையைப் படித்தபின்னரே ஆசீர்வாதத்தை செய்யவேண்டும் என்பது அகோர சிவாச்சாரியார் பந்ததி ஆசீர்வாதப் படலம் விதித்துள்ள விதி. வேதமொழியில் ஓதப்படுகிற ஆசீர்வாதத்துக்கு முன் தமிழ்மறை ஓதல் வேதமொழிக்கு தீட்டை உருவாக்கும் என்பது சுமார்த்தரின் நினைப்பு. எனவே, சைவவிதியை மீறி ஆசீர்வாதத்துக்குப் பின்னரே திருமுறை ஓதுதல் என்று தமது கைகள் ஓங்கியுள்ள ஆலயங்களில் தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர் .
பூசகரால் தேவாரம் அருளிப்பாட திருவாசகம் அருளிப்பாட என அனுமதியளிக்க தமிழ்மறையை ஓதும் பழக்கமே சைவ வழக்கம். ஆனால் வழக்கத்தில் இல்லாத சொல்லான "பஞ்சபுராணம்' எனபதை புழக்கத்துக்குவிட்டு "பஞ்சபுராண அவதாரய" என்பதை வழக்கத்துக்கு கொண்டுவந்துள்ளனர். தமிழ் "மறை"யை புராணமாக்கிய கெட்டித்தனம் என இதைச் சொல்லலாம்.
இந்தச் சுமார்த்த மொழித்துவேச ஊடுருவல் சிதம்பரத்துப் பார்ப்பனருக்கு பல்லாண்டுகளுக்கு முன்னரே ஊடுருவிவிட்டது எனலாம். திருமுறைகளை ஒழித்துவைத்து கறையானுக்கு தீணியாக்கினர். தமிழ்ப்பற்றுமிக்க நம்பியாண்டார் நம்பிகள் எனும் அந்தணரும் இராஜ இராஜ சோழனும் முயன்றதால் சைவத் தமிழுலகிற்கு திருமுறைகள் கிட்டியது.
மிக அண்மையில், எந்த மேடையில் திருவாசகம் அரங்கேறியதோ.......எந்த மேடைக்கு வந்து எம்பெருமான் திருவாசகத்தை பிரதியெடுத்துச் சென்றாரோ அந்த திருச்சிற்றம்பல மேடையில் ஓதுவார் தமிழில் திருமுறைகள் ஓதக்கூடாது என்று தடைவிதித்தனர் சிதப்பரப் பார்பனீயர். காரணம் கேட்டால் சிதம்பர இறைவனுக்கு நீசமொழியான தமிழால் தீட்டுப்படுகிறதாம்.
ஊழிக் காலத்தில் தனியாக இருக்கும் சிவன் தனது தனிமையைப் போக்கவே திருவாசகத்தைப் பிரதியெடுத்துச் சென்றதாக சைவ அறிஞர் போற்றுவர். இத்தகு மேன்மையுடைய திருவாசகம் அரங்கேறிய மேடையில் திருவாசகம் அடங்கலாக தமிழ்த் திருமுறைகள் ஏதும் ஓதக்கூடாது என்று தடைபோடும் அளவிற்கு சிதப்பரப் பார்பனரை மூடராக்கியது சுமார்த்தம் ஊட்டிய மொழித்துவேசம் என்பது வெள்ளிடைமலை.
எவ்வளவு போராட்டங்களுக்குப்பின் ஓதுவார்கள் நீதித்துறையின் மூலம் நீதிபெற்றனர் என்பது கண்கண்ட செய்தி. சுமார்த்த அதிபதியான காஞ்சி சங்கராச்சாரியார் சிறைவைக்கப்பட்டபோது பதறியடித்து இலங்கைப் பிரபல பத்திரிக்கைகளுக்கு அவர் பற்றிய செய்திகளை பண்போடு வெளியிடும்படி அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டிக் கொண்டது. ஆனால் தமிழ்த் திருமுறைகளை படிக்கத்தடைவிதித்தபோது இலங்கை இந்து மாமன்றம் என்ன செய்தி வெளியிட்டது என்று அறியவே முடியவில்லை. உலக இந்து குருமார் பீடம் என்று கொழும்பில் (சைவ குருமார் பீடத்துக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது) சுமார்த்த விசுவாசியால் உருவாக்கப்பட்ட அமைப்பு தலையிட்டு சிதம்பரப் பார்பனருக்கு கட்டளை ஏதும் பிறப்பித்திருக்கலாம் தானே? "உலக இந்து குருமார்" என்று அடைமொழியை கொண்ட குருமார் பீடம் என்பதால் உலகில் உள்ள குருமார் அனைவரையும் கட்டுப்படுத்தும் சர்வ வல்லமையும் உடையவர் என்று அறியாத சனங்களுக்கு கதைவிடுகின்றனர் இந்த பீடத்தார். அவர்களின் கட்டுக்கதைக்கு வந்த ஆப்பு இதுவென்றால் மிகையில்லை.
எந்த மேடையில் மாணிக்கவாசகர் பாடினாரோ அந்த மேடையில் திருவாசகம் பாடமுடியாது ஓதுவார் தவித்தபோது உதவிக்கு சைவநிறுவனங்கள் ஏதும் புறப்படாது ஒதுங்கிக் கொண்டதை வெட்கக்கேடாகவே கருதுகிறேன்.திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் வளர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட வெறு பல இயக்கங்களே அங்கு தமிழுக்காய் குரல் கொடுத்ததை இங்கு சுட்டியே ஆகவேண்டும்.
கும்மாவிஷேகத்துக்கு அழகு தமிழில் குடமுழுக்கு என்பர். சைவ ஆதீனங்கள்கூட குடமுழுக்கு என்ற சொல்லையே பயன்படுத்துவர். ஆனால் அண்மையில் வெளிநாடு ஒன்றில் குடமுழுக்கு என விளம்பரப் பிரசுரத்தில் வெளியிட்டதனால் கொதித்தெழுந்த சுமார்த்தக் குருக்கள் குடமுழுக்கை செய்யமாட்டேன் என பிடிவாதம் பிடித்துவிட்டார். அவர் சபித்துவிடுவர் என எண்ணி "சாமி"க்குற்றம் வந்துவிடும் என பயந்து குடமுழுக்கு என்று அச்சேற்றிய பிரசுரங்களை குப்பையில் போட்டு 'கும்பாவிஷேகம்" என்று மீள பிரசுரங்கள் செய்வித்து வெளியிடவேண்டியதாயிற்று ஆதீனகர்த்தாவுக்கு!
மேற்சொன்னவைகள் நல்ல உதாரணங்கள் தமிழ்மொழிமேலான துவேசத்தை எம்தமிழ் அந்தணர் குழாத்துக்குள் மெல்லமெல்ல சுமார்த்தவருடிகள் ஊட்டுகின்றனர் என்பதை நிறுவிப்பதற்கு.
சைவநெறி என்பது சிவஞானப் பேற்றை நோக்காகக் கொண்டது. ஆனால் சுமார்த்தருக்கு சைவம் அழிந்தால் சரி.மக்கள் எக்கேடு கெட்டாலும் கவலைகொள்ளாதது. அதனால் மக்களுக்கு காமியபூசைகளில் (ஆயுள் விருத்தி.....தாலி விருத்தி....பரீட்சைகளில் தேர்வுபெற(கொழும்பில் பிரபல சுமார்த்த கோயிலில் மாணவரைக் கவர இதுதாம் பெரும்பூசை) ஆசையையூட்டி சிவஞானத்துக்கு உதவாத பூசைகளை பெருக்குகின்றது.இதன்மூலம் பணம் பெருக்கி வயிற்றை கொழுக்கச் செய்வது ஒருவழி. எம்தமிழ் சாதியிடமே பணம்திரட்டி எம்தமிழ்ச்சாதியின் பண்பாடான சைவ சிவஞானபேறை சிதைப்பது. ஒருகல்லில் இரு மாங்காய் என்று உவகையில் உள்ளது சுமார்த்தம்.
கோயில்களை அர்ச்சனைக்கூடங்களாய் மாற்றியதில் பெரும்பங்கு இவர்களையே சாரும். சாதரண ஆகமவிதிமுறையற்ற கோயில்களுக்குள் சகல பரிவாரங்களையும் இருத்தி எந்த ஆகமமும் அனுமதிக்காத வழிபாட்டை சிறப்பாகச் செய்கின்றனர். நவக்கிரகங்களை வரிசையாக அடுக்கிவைத்து (கொழும்பு ஆஞ்சநேயர் ஆலயத்தில்) ஏதோ சக்தி என்று புரியாத சனங்களின் காதுகளில் பூச்சுற்றிவிடுகின்றனர் சமயவியாபாரிகள்
"அனுமானுக்கு உலகிலேயே தேர் நாம்தான் இழுத்தோம்" என்று கொழும்பில் உலறியபோதே சைவத் தமிழ்ச் சமுதாயம் விழித்திருக்க வேண்டும். அனுமான் கிராமிய வழிபாட்டுத் தெய்வம். அனுமானை சக்திதரவல்ல தெய்வமாகக் கருதுபவர் வைணவர். வைணவம் உள்ளநாடு தமிழகம். இராமருக்கும் அனுமானுக்கும் விசேடமரியாதை செய்யும் இடம் அயோத்தி. இங்கு எங்குமே அனுமானுக்கு தேர் இழுக்கவில்லை.கொழும்பில் இழுத்துவிட்டார்கள். கொழும்பில் இழுத்தால் "ஆகமமுறையை மீறி இழுக்க உமக்கு உத்தரவு தந்தது யாரு?" என்று கேள்விகேட்க வைணவ ஆதீனங்கள் இல்லை. இருக்கிற சைவ ஆதீனம் அமைதியானது. சைவநிறுவனங்கள் தடுக்கும் சக்தியில்லாதவை. கொழும்பில் உள்ள "இந்து" பெரும் நிறுவனங்கள் ஆதரவு. எனவே இழுத்தார்கள். அன்று சீதையைக் கவர்ந்ததால் அனுமான் இலங்கைக்கு தீ வைத்தார். இன்று முறையற்ற வழிபாட்டால் தமிழரின் எதிர்காலத்துக்கு கேள்விக்குறி வைத்துவிட்டார்.
இனிய சைவத் தமிழ்ச் சமுதாயமே, தொன்று தொட்டு காலம் காலமாக வைரவரை காவல்தெய்வமாக வழிபடுகிறோம். சிவனின் ஓர் மூர்த்தமே வைரபர்.
ஆனால் இன்று வைரவர் வழிபாடு அருகி வருகிறது. சைவ நிறுவனங்கள் சற்று சிந்திக்க வேண்டிய விடயம் இதுவாகும். ஆஞ்சநேயர் வழிபாட்டை பெருந்தெய்வ வழிபாடாக சித்தரிக்கும் சுமார்த்தத்தை அரவணைப்பதால் ஏற்பட்ட விளைவு இதுவாகும். அகில இலங்கை இந்து மாமன்றம் தீர்க்கதரிசனத்துடன் சிந்திக்க வேண்டிய விடயம் இது!!!
சுமார்த்தரின் சிவாகமத்தில் இல்லாத வழிபாடுகளுக்கும் இந்துவுக்கும் வக்காளத்துவாங்கும் விசுவாசிகள் "யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்" என்று சிவஞான சித்தியாரை வம்புக்கு இழுப்பார்கள்.
சுடர் ஒளி(வாரப் பத்திரிக்கை) பத்திரிக்கையில் பலவருடங்களுக்கு முன் சர்ச்சை அடிபட்டபோது ஒருவர் இப்படித்தான் வித்துவத்தனத்தைக் காட்டினார். அவரது வித்துவத்தனத்துடன் சர்ச்சை ஓய்ந்தது எம்தமிழ்சாதியின் இழிநிலையைக் காட்டுகின்றது. சைவ சித்தாந்த பண்டிதர்களின் அறிவுரைகள் பூக்காமலே சர்ச்சை ஓய்ந்துவிட்டது. மரபுக் கவி எழுதத் தெரியாதவர்கள் புதுக்கவிதையை போற்றுவர். புதுக் கவிதையின் வரவேற்பு மரபுக் கவிதையை மங்கச் செய்ததன் விளைவு கிருத்தவக் கம்பனுக்குப் பின்னர் இன்னொரு கம்பன் இன்னும் பூக்கவேயில்லை.அதுபோல்தான் சைவப் பண்டிதர்கள் அருகிவருகிற காலமிது. அவர்களை போற்றி பண்டிதர்களை உருவாக்க வேண்டியது தமிழ்ச்சாதியின் கடமை. ஆனால் அவர்களது கருத்துகளையும் அறிவுரைகளையும் செவிமடுக்கத் தவறுகிற இழிநிலைக்கு எம்மை இட்டுவந்தது யார்?
பண்டிதமணி மு.கந்தையா ஐயா தனது சைவஞான விளக்கம் எனும் நூலில்"யாதொரு தெய்வம் கொண்டீரத்" என்ற சிவஞான சித்தியார் பாடலுக்கு விளக்கம் அளிக்கிறார்.குறித்த ஒரு செய்யுட் பொருளை அறியவேண்டுமானால் அதனோடு இணைந்த ஏனைய செய்யுள்களையும் கருத்தில் எடுத்தல் அவசியம் என வலியுறுத்துகிறார். குறித்த செய்யுளுக்கு முன் உள்ள செய்யுள்களையும் பின் உள்ள செய்யுள்களையும் விளக்கி, மயக்க உணர்வால் தேவதைகளை தெய்வங்களாக பூசிப்பவர்களுக்கு அவர்களது நல்வினைக்கு ஏற்ப சிவபெருமானே வரமளிப்பார். ஆதலால் எல்லாவற்றுக்கும் உரியவர் என்ற உத்தரவாதமுள்ள சிவனையே அன்பு செய்து பூசித்தல் அறமாகும் என்றே சிவஞான சித்தியாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அறிவுறுத்தியுள்ளார்.
117ஆவது செய்யுள் சிவன் ஒருவனே வழிபாட்டுக்குரியவன் என்று வலியுறுத்தியிருக்க,
"யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வமாகி யாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்
வேதனைப் படுமிறக்கும் பிறர்க்குமேல் வினையுஞ் செய்யும்
ஆதால னிவையி லாதா னறிந்தருள் செய்வனன்றே"
எனும் 115ம் செய்யுளை சாதரண பொதுசனத்திடம் திணிக்கும் கெட்டிக்காரர்களுக்கு சைவ சமூகம் வரவேற்பளிப்பது துயரான ஒன்றே. பண்டிதமணி மு.கந்தையா ஐயாவின் மறைவு கெட்டிக்காரர்களுக்கு வசதியாயிற்று. மறுப்பு அறிக்கைவிட எவரும் இலர் என்று உவகையடையக்கூடும்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் திருமந்திரம் இவர்களுக்கு கைகொடுக்கும் இன்னொரு பாடல். ஆனால் பண்டிதமணி மு.கந்தையா ஐயா அவர்கள் தனது சைவ ஞான விளக்க நூலிலே இதற்கும் விளக்கம் அளித்துவிட்டார்.
சைவத்தில் சிவன், அவனல்லாத உயிர்கள் என இருவகை மாத்திரமே உண்டு.ஒன்றே குலம் என்பது சிவனல்லாத உயிர்களையும் ஒருவனே தேவன் என்பது ஒருவனாக நிற்கின்ற சிவனையும் குறிக்கும். இது இப்படியிருக்க "எல்லா கடவுளும் ஒரே கடவுள்தான்" என்று சைவச் சனங்களுக்கு போதிக்கும் சுமார்த்த விசுவாசிகளின் உள்நோக்கு சைவர் உளரீதியாக பலவீனமானவர்களாக இருக்க வேண்டும் என்பதாகும்.
.
மேலைத்தேயத்தவர் தமிழகத்துக்கு வந்தவுடன் சைவநூல்களை கற்பது தமது மதம்மாற்றும்திட்டத்திற்கு உதவும் என்று கருதினர்,எனவே இவர்கள் சைவ சித்தாந்தங்கள் திருமுறைகளை கற்றுத் தேர்ந்தனர்.தமிழர்களை உளவியல்ரீதியாக பலமற்றவர்களாக்க "ஒருவனே தேவன்" "யாதொரு தெய்வம்" இவர்களுக்கு கைகொடுத்தது.
சைவ சித்தாந்தத்தில் தெளிவில்லாத சாதரண பொதுசனம் இவர்களது தவறான பிரசாரத்தில் வீழ்ந்தனர். இன்று சுமார்த்தத்தைப் பரப்ப, இந்துவை வாழவைக்க சுமார்த்திகள் இதையே பயன்படுத்துகிறார்கள். உண்மையான விளக்கம் எங்கும் எந்த ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படுவதில்லை.எவருக்கும் சரியான பொருள் தெரிவதில்லை. மேலைத்தேயத்தவர்களின் பரப்புரையின் தாக்கம் எத்தகையது என்பதை இதன்மூலம் உய்த்துணரலாம்.
அம்மன்,முருகன்,பிள்ளையார்,பைரவர்,சோமஸ்கந்தர் போன்றோரை வழிபடலாமா என்று நையாண்டிக் கேள்விவேறு கேட்பர். சிவனே சக்தி, சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மா என்ற நிலைகளை எய்துவதாக சிவாகமம் எடுத்தியம்புகிறது.எனவே இவை அனைத்தும் சிவ வழிபாடே!
புராண,இதிகாச கதாப்பாத்திரங்கள்,தொண்டர்கள்,அவர்களின் தொண்டர்கள் என்று இவர்களுக்கு செய்யும் வழிபாடு சிவாகம துரோகம்.
திருமாலை வணங்கலாம் என்றால் ஏன் திருமாலின் அடியவரை வணங்கக்கூடாது என்று கேள்வி கேட்பர் அறிவிலார்.
திருமாலை வழிபடலாம் என்று வரையறுத்துள்ளது சிவாகமம். திருமாலின் அடியவரை வழிபடலாம் என்பது வைணவ ஆகமம். திருமாலின் அடியவரை வழிபடுபவர்கள் வைணவ ஆகமத்தை ஏற்பவர்கள்.எனவே சைவர்கள் அல்ல. திருமாலை சிவாகமவிதிக்கு ஏற்ப வழிபடுவது சைவரின் சால்பு. சைவர்களிடம் அனுமான் உட்பட புதுப்புது தெய்வங்களை இறக்குமதி செய்து பரப்பும் சுமார்த்தர் வைணவத்தாரிடம் சைவக் கடவுள்களான பைரவர் உட்பட எவரையேனும் அறிமுகஞ் செய்கின்றனரா? இல்லை!!!!
வைணவ ஆதீனங்கள் சுமார்த்தரை வைணவ ஆலயங்களுக்குள் அனுமதிப்பதில்லை. சங்கரமடத்துக்கு பெரும் அவமானத்தை இவை ஏற்படுத்திவிட்டன.சைவ ஆதீனங்கள் அமைதி காக்க; சுமார்த்தம் தமது விருப்புக்கு ஏற்ப சைவத்துள் புகுந்துவிளையாடுகிறார்கள். இலங்கையில் "இந்து" மூலம் வந்து தமது கைவண்ணத்தைக் காட்டுகிறார்கள்.
இன்று கொழும்பில் உள்ள சில தரகு நிறுவனங்கள் கொழும்பு,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,திருகோணமலை உட்பட ஏனைய இலங்கையின் பிரதேசங்களில் இருந்து சைவ அந்தணர்களின் பிள்ளைகளை திரட்டி சங்கரபீடத்துக்கு சிவாச்சாரியார் பட்டப்படிப்புக்கு அனுப்புகிறார்கள். சலுகைகள்,இலவசங்கள் இவர்களுக்கு கைகொடுக்கின்றது.
இதுகால்வரையும் சைவ ஆதீனங்களான திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் போன்றவற்றுக்கே அனுப்புவது மரபு. இந்த மரபை அழிக்க வேண்டிய அவசியம் என்ன?
தமிழ்ச் சைவ அந்தணர்களிடம் தமிழ்மொழிமேல் கசப்புணர்வை ஊட்டவேண்டுமாயின் சிறுபிராயத்திலேயே ஊட்டுவதே சாலச் சிறந்தது என்பதுவே இவர்கள் திட்டம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்னும் பழமொழி நினைவிருக்கிறதா? பள்ளிப் பருவத்திலேயே தமிழ்ச் சைவ அந்தணர் குழாத்திடம் "தமிழ் நீசமொழி/தீட்டு மொழி" என்று போதிக்கும் திட்டம்தான் சுமார்த்தபீடமாகிய சங்கரமடத்துக்கு எம் அந்தணக் குழந்தைகள் அனுப்பப்படுதல்!
"பஞ்சபுராண அவதாரய" தொடர இது கைகொடுக்கும் என்பது இவர்கள் கணிப்பு.
தமிழ் சைவ அந்தணர்கள் தமிழ் சைவ ஆதீனங்களுக்கு செல்வதே அழகு; மரபு. தமிழ்மறை காத்த ஆதீனங்களிடம் இருந்து சைவ அந்தணரைப் பிரிப்பது காலத்தால் மன்னிக்க முடியாத குற்றமாகும். அண்மையில் சிதம்பரத்தில் "தமிழ்த்" திருமுறைகள் ஓதக்கூடாது என்று பிடிவாதம் பிடித்த பார்ப்பனரை இலங்கையில் உருவாக்கும் முயற்சியை அந்தணப் பெற்றோர் இனங்கண்டு தமிழுணர்வும் சைவ உணர்வும் கொண்டு முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
இன்றைய தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் சைவர்களுடன் சங்கரர் வாதிட்டுள்ளார்.எனவே, சைவநெறியை சங்கரபீடம் வளர்க்குமா என்ன? சிவாச்சாரியார்கள் சங்கரபீடத்தில் சைவ மேன்மையைப் படிப்பார்கள் என்பது பகற்கனவே!
ஆட்டைக் காக்க ஓநாயிடம் விட்டகதைதான் சங்கரபீடத்திடம் சிவாச்சாரியர் பட்டப்படிப்பு. 'தமிழரை சூத்திரர்" என்று திட்டும் மடத்திற்கு தமிழ் அந்தணக் குழந்தைகள் சிவாச்சாரியார் படிப்புக்கு!!!! என்ன கொடுமை!!!!!!!
எங்கள் சனங்கள் எதுக்கும் தலையாட்டும் என்பது இந்திய வடநாட்டு விசுவாசிகளான சுமார்த்த இந்துபீடங்களும் குருமார்களும் கண்டுவைத்துள்ள தவறான கணிப்பு. நாவலர் பூத்தபோது எழுந்த சமூகம் எம் சமூகம். விழிப்புக்கு உள்ளாகும்வரைதான் இவர்கள் சதிகள் அரங்கேறும்.எம் சைவச் சாதி விழிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
இந்த "இந்து"விசுவாசிகள் இந்து என்பதன் வாயிலாக வடநாடு எங்கும் தொடர்பு ஏற்படும். உலகம் பூராகவும் ஒருகுடையில் நிற்கலாம் என்று கதையடிப்பர்.கவனம்!!!!!!
யுத்தத்தால் வாடியபோது சங்கரபீடம் ஏதும் அழுததா? சைவ ஆதீனங்களுக்கு அரசியல் வலுவில்லை. உண்ணாவிரதங்களுடன் சரி. ஆனால் வடநாட்டு அரசியல் பலமுடைய சங்கரபீடம் சிரித்துக் கொண்டுதானே இருந்தது. அவர்களுக்கு தமிழ்மொழிமேல் என்றுமே துவேசம் உண்டு.மாறாத துவேசம்.இராவணன் காலந்தொட்டு இன்றுவரை தொடரும் தமிழ்மேலான துவேசத்தின் இன்றைய வடிவமே சங்கரபீடம் என்றுணர்க.. சங்கரபீடம் இதன் ஒரு வடிவம். அது நூற்ற சுமார்த்தம் இன்று இந்து எனும் பெயரில் இலங்கை வந்து இறங்கியுள்ளது.
யுத்தத்தால் வாடியபோது இந்து எனும் பெயர்தாங்கிய இந்தியப் பத்திரிக்கைகள்,நிறுவனங்கள்,அதன் விசுவாசிகள் யாவரும் மகிழ்ந்தார்கள். இதுபோதும் எம்சனங்களுக்கு "இந்து" என்பது எவ்வளவு அபயமான ஒன்று என்பதை நிறுவிக்க!
நாம் அழுதபோது "இந்து"குருமாருக்கு அதிபதி அழுதாரா ? அரசியல்வாதிகளுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்பது சிவாச்சாரியார்களுக்கு உள்ள விதிகளில் ஒன்று. வாக்களிக்கச் சொல்லி வேண்டி கடந்த சனாதிபதித் தேர்தலில் இவர்களிடம் இருந்து மடல்கள் வந்தபோதே தமிழ்ச்சாதி திருந்தியிருக்க வேண்டும்.
"சைவ சமயமே சமயம்" என்ற தாயுமானசுவாமிகளின் திருவரிகளையும் "சைவம் சிவனுடன் சம்பந்தமாவது" என்ற திருமந்திரத்தையும் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றதன் உண்மையான விளக்கத்தையும் போதிக்காது, இந்திய இந்துமத மிசனரிகளின் ஸ்தாபகர்களையும் அவர்களது பெருமைகளையும் போதிக்கும் நூலாகவும் வெறும் வரலாற்று மனப்பாடப் புத்தகமாகவும் இன்றைய சைவநெறி பாடத்திட்டம் அமைந்திருக்கின்றது. காரணம் யார்? பாடத்திட்டத்தை தொகுப்பவர்கள், பாடத்திட்டத்தை தொகுப்பதற்கு உதவுபவர்கள் யார் என்ற பெயர்ப்பட்டியலே சுமார்த்த ஊடுருவலுக்கு சான்று.
ஆனால் இன்று சைவநெறி என்று பெயர்தாங்கி சைவக்குழந்தைகளிடம் தவழுகிற பாடத்திட்டநூலிலேயே சைவத்திற்கு குந்தகம் விளைவிக்கும் பாடங்கள் புகட்டப்படுவது எமது தமிழ்ச் சாதியின் இழிந்தநிலையையே எடுத்துக் காட்டுகிறது. இன்னும் கொஞ்சக் காலத்தில் "அம்மா பகவான்" "பாபா" பாடங்களும் சேர்க்கப்பட்டுவிடும். யேசு கிருஷ்துவைப்பற்றி போதித்தாலும் தவறேயில்லை.
"தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகமநூல் நெறி எத்தண்டமும் செயும் அம்மையில்" என்பது திருமந்திரம்.
பூசுவது திருநீறு இடிப்பது சிவன் கோயில் என்பதுவே சுமார்த்த
இந்துவாதிகளின் செயல்கள்."இந்து" என்பது தமிழ்மொழிக்கு தீட்டான ஒன்று. தமிழர்கள் "சைவநெறி" என்பதை வலியுறுத்துகிற பீடங்களையும் ஆதீனங்களையும் மாமன்றங்களையும் பேரவைகளையுமே சார்ந்திருத்தல் வேண்டும். எவன் ஒருவன் இந்து மதம் என்று பிதற்றுகிறானோ அவனே முதலில் தமிழ்மேல் துவேசம் கொண்டவன் என்பதை உணர வேண்டும். சைவநெறியை "இந்து"விடம் இருந்தும் நாத்தீகவாதிகளிடம் இருந்தும் பணமுதலைகளாகிய கிருத்தவமிசனரிகளிடம் இருந்தும் காக்க வேண்டிய கடமை தமிழரிடம் உண்டு. சைவநெறியைக் காப்பதனூடாகவே தமிழரின் பாரம்பரியத்தைப் பேணமுடியும் என்பது திண்ணம். அதற்கு புத்தளம் நல்ல உதாரணம்.
சி.வை.தாமோதரப்பிள்ளை "தேசப்பற்றும் மொழிப்பற்றும் சமயப் பற்றும் இல்லாதவர் பெருமையும் பெருமையா? " என்றார். தமிழ்ச்சாதியே என்ன செய்யப் போகிறாய்! பண்பாட்டை சிதைத்து சுய பண்பாடற்ற இனமாக மாற்ற வடநாடு முனைகிறது. சுமார்த்த இந்து உதவுகிறது. உன் கதிதான் என்ன?????
0 comments: on "இந்து" மதம் சைவநெறிக்கும் தமிழுக்கும் இழைக்கும் கொடுமைகள்"
Post a Comment