"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Friday, March 5, 2010

சுமார்த்த அத்வைதம் பெருக கல்கிசாயிநித்தியானந்தா என்று பெருகும் சாமியார்கள்

இந்துமதம் என்ற கூட்டுச்சரக்குக்கு சங்கரபீடத்தின் சுமார்த்த அத்வைதக் கொள்கையால் துணியுடுத்தி, சைவம் என்றால் மாமிசம் அற்ற உணவுப் பண்டத்தை குறிக்கும் என்று பொருள்கொடுக்கும் அளவுக்கு தமிழகத்தில், சுமார்த்தம் வெற்றியீட்டியுள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிவரும் குமுதம் பக்தி, ஆனந்த விகடனின் சக்தி மற்றும் ஏனைய சமய இதழ்களாகிய திரிசக்தி, ஆன்மீகம், இராமகிருஷ்ண விஜயம் யாவுமே சுமார்த்த அத்வைதக் கொள்கையை போற்றுபவை. இவை சைவம் என்ற பெயரை தமிழகத்தில் சாப்பாட்டுப் பண்டத்தைக் குறிக்கும் வகையில் மாற்றியதில் முக்கியபங்கை வகுப்பவை.இவர்களுக்கு சிவனும் சும்மா. விஷ்ணுவும் சும்மா. எல்லாம் ஒன்று என்று "ஜால்ரா" அடித்து இந்தியா முழுவதும் ஒரேசமயமாக எந்தவிதமான கோட்பாட்டு வேறுபாடுகளும் இல்லாத இந்துமதத்தை உருவாக்கி, ஒற்றைப் பண்பாட்டை விதைக்க வேண்டும்.அவ்வளவுதான்!!!! இதன்மூலம் அகண்ட பாரதக் கனவை ஒருகால் நனவாக்கலாம் என்று கருதுகின்றனர். எனவே, இவர்களுக்கு சைவ சித்தாந்தம் தென்னாட்டில் இடைஞ்சலாக இருக்க, தென்னாட்டில் நிலவிய நாத்தீகவாதத்தை சாதகமாக்கி ஊடகபலத்தின் துணையால் சுமார்த்த அத்வைதக் கொள்கையை இலகுவாகப் பரப்பிவருகின்றனர். ஒருதசாப்த காலத்துக்கும் மேலாக இலங்கையிலும் இதே கதையை உருவாக்கிவிட்டனர்.அதற்கு ஏதுவாக இருந்தது "இந்து" என்கின்ற பெயர்!!!!


இவர்கள் தமது சுமார்த்த அத்வைதக் கருத்துகளைப் பரப்ப, "நான் கடவுள்" என்று பிதற்றும் சாமியார்களை உருவாக்கி உலாவவிட்டார்கள். இவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் மக்கள் "இந்து" என்ற பெயரில் அத்வைதத்தை ஒழுகினால் போதும்! ஆன்மீக முன்னேற்றம், ஞான விருத்தி, முக்தி இவைபற்றி அக்கறையில்லை!!! நாள்தோறும் விலைவாசி உயர்வாலும், வீட்டுப் பிரச்சினைகளாலும் வேலையில்லாப் பிரச்சினைகளாலும் வாடிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு ஏதேனும் புளுடாக் கதைகளை அவிட்டுவிட்டு, "நான் கடவுள்" என்று சொல்லித்திரிகின்ற யாரையேனும் பின்பற்றும்படி செய்துவிட்டால் போதும்!!!!

அத்வைதத்தை தாபித்த ஆதிசங்கரரை சிவனென்று கதையளந்து பார்த்தனர். பலிக்கவில்லை!!!! சிவனுக்கு இரத்தமும் சதையும் சேர்ந்த கருவறையில் பிறத்தல் என்பது ஒருக்காலும் இல்லை என்பது சைவம். எனவே, ஆதிசங்கரரை சிவனாக்க முயன்று தோற்றபின், கண்டவரையெல்லாம் கடவுளாக்கத் தொடங்கிவிட்டது.
 
திருஞானசம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் மற்றும் ஏனைய நாயன்மார்கள் யாவரும் இறையருளால் அற்புதங்கள் செய்து ஏனையோருக்கும் இறையருளை நுகர வாய்ப்பு வழங்கி மேன்மைகொண்ட சைவநீதியை பாரிலே நிலைபெற வழிசமைத்தனர். திருவாசகத்தை இறைவனே பிரதியெடுத்து "திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்பதை உலகறியச் செய்தான். சைவ சித்தாந்த நூல்களில் ஒன்றாகிய திருக்களிற்றுப்படியாரை சிற்றம்பலத்து பஞ்சாட்சர வாசற்படியில் வைத்தபோது இறைவனின் திருவருட்சம்மததால் அவ்வாசற்படிக்கு அருகாமையில் இருந்த கல்யானைகள் தமது துதிக்கைகளால் தூக்கி நடராசப்பெருமானின் திருவடியில் வைத்து சைவ சித்தாந்த நூலின் புனிதத்தை பாரறியச் செய்தன.

இவ்வண்ணம் இறைவனின் திருவருட்சம்மதம் பொருந்திய சைவநீதியை "நான் கடவுள்" மாயாவிகளை வளர்த்து அவர்களின் துணையால் இந்துமதக் கூட்டுச்சரக்குக்குள் சைவநெறியை ஒழித்து வைத்து காலவெள்ளத்தில் மூழ்கடிக்கச் செய்துவிடலாம் என்று கற்பனை காணுகின்றனர் சுமார்த்த பீடங்கள்!!!!!

சமணர் சுண்ணாம்புக்குள் போடுதல், கடலில் கல்லோடுகட்டி வீசுதல், யானையால் மிதிக்கச் செய்தல் என்று பல்வேறுவழிகளில் சைவரைத் துன்புறுத்தி, சமணத்தை வளர்த்தபோது அத்தனை கொடுமைகளையும் சிவனருளால் தகர்த்து சைவநெறியை நால்வர் மீண்டும் தழைத்தோங்கச் செய்தனர். மேற்குநாடுகளில் ஆட்சியில் தென்னாட்டில் சைவம் தளர்வுற்றபோது யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் தோன்றி தென்னாடெங்கும் சைவம் தழைக்க வழிசமைத்தார். இவ்வண்ணம் சைவநெறிக்கு பங்கம் உச்சமடையும்போதெல்லாம் சைவநெறியை-சைவ சித்தாந்தத்தை காத்து வளர்க்க அருளாளர்கள் பூப்பது சுமார்த்தர் அறியவில்லைப் போலும்!!!!!!!!

இவர்கள் வளர்த்துவிட்ட கல்கி பகவான்,சாயி பகவான் மற்றும் நித்தியானந்தரை இனிப் பார்ப்போம்!!!!!!

கல்கி என்பது வைணவம் சொல்லுகின்ற விஷ்ணுவின் பத்தாவது அவதாரம். கலி முற்றி பிரளயக் காலத்தில் கல்கியாக விஷ்ணு அவதரிப்பார் என்கின்றது வைணவம். ஆனால் விஜய்குமார் நாயுடு என்கிற இயற்பெயருடையவர் "தானே கல்கி" என்று கல்கிபகவான் என்று பெயர்பூண்டு கடவுளாக பிரபல்யமாகியுள்ளார்.இவருக்கு ஆந்திர மாநிலந்தொட்டு கொழும்பு-யாழ்ப்பாணம் என்று பெரு வரவேற்பு!

இவரை பிரபல்யமாக்கியது யார் என்றால் "இந்து"மதம் என்கிற சுமார்த்தக் கொள்கையே!!!!! இன்று இவரது ஆச்சிரமத்தின் ஒருபகுதியான வரதபாளையத்தில் உள்ள தொழில்நுட்பப் பகுதியை அங்குள்ள மக்கள் அடித்து நொருக்குமளவுக்கு அங்குள்ள மக்களுக்கு அசுரனாகியுள்ளார். ஏனைய வெளியூர்காரருக்கு தேவாதி தேவன்! இவர் "தப்புத்தாளங்கள்" செய்வதாக ஆந்திரா தொலைக்காட்சியொன்று அடிக்கடி செய்தி வெளியிட்டு சூடேற்றியுள்ளது. உண்மை இறைவனுக்குத்தான் தெரியும்!!!!!

ஆச்சிரமத்தில் போதைப்பொருள் இருப்பதாகவும் போதைப்பொருளே பிரசாதகமாக வழங்கப்பட்டு ஒருவித பரவசநிலையை ஊட்டப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் காவற்துறையில் புகார் செய்துள்ளனர். அதன் உண்மைத்தன்மையும் இறைவனுக்கே வெளிச்சம்!!!!

எனவே இப்பிரச்சினைகள் யாரும் உருவாக்கிவிட்ட வதந்திகளின் விளைவாகக்கூட இருக்கலாம்.அதனால் இப்பிரச்சினைகள்பற்றி ஆராயவிரும்பவில்லை.

ஆனால் ஏனைய சில கேள்விகள் கல்கிபகவான் என்று சுயபிரகடனம் செய்துள்ள விஜயநாயுடு மற்றும் அவரது துணைவியாரான இறைவியாகப் போற்றப்படும் அம்மா பகவான் பத்மாவதி தேவி தொடர்பாக எழுந்துள்ளது. அவற்றின் விடைகள் "இவர்கள் போலிகள்" என்றே புலனாக்குகின்றது. அவைதான் என்ன???

1) சிறப்புத் தரிசனத்துக்கு 25,000 கட்டணம், ஓமம் செய்ய 60,000 ருபாய் கட்டணம், என்று கட்டணத் தொகை பணக்காரரின் கடவுளாக இவரை வெளிக்காட்டியுள்ளது.

2) இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்கின்றார் என்று செய்திகள் கூறுகின்றன. இவர்மீதும் சிலர் காவற்துறையில் புகார் பதிவுசெய்துள்ளனர். கடவுளுக்கு மகன் உண்டா? அப்படியானால் இல்லற சுகத்தை இனிக்க இனிக்க சுவைத்தாரா? அல்குல் சுவையில் மயங்கி சேக்கைப்போர் செய்தாரா? விஷ்ணுவின் அவதாரம் என்று போற்றப்படும் இராமன் - கிருஷ்ணர் இருவரும் மனைவி பந்தம் கொண்டவர்களாகவும் புத்திரர்கள் கொண்டவர்களாகவும் காட்டப்படுவதால் இதை ஏற்பதில் என்ன தவறு? இராமர் பட்டாபிடேகத்துடன் கம்பராமாயணம் முற்றுப்பெறுகின்றது. காரணம் லவ-குச கதைகள் தென்னாட்டு கடவுள் மரபுக்கு இயல்பில்லை என்பதால்!!! கிருஷ்ணர் கதையும் இதற்கு விதிவிலக்கல்ல!

எனவே கடவுள் சேக்கைப்போர் புரிந்தார் என்பது தென்னாட்டு ஆன்மீகமரபில் வரவேற்கப்படாத ஒன்று! இராம அவதாரம்-கிருஷ்ண அவதாரம் யாவும் சேக்கைப்போரின் விளைவால் உருவாகாதவை!!! சீதையும் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவே சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் கல்கி என்று பிரகடனப்படுத்தியுள்ள இவருடைய பிறப்பு அதிசயப் பிறப்பா என்ன? இவரது துணைவியாரும் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டவரா என்ன?கடவுளின் மகன் ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்வது முறையாகுமா என்ன?

வரதராஜுலுவு-வைதர்பி எனும் தம்பதியரின் மஞ்சப் போரில் இவர்களின் விந்துவும் முட்டையும்(சூல்) இணைவினால் உருவானவரே கல்கி என்று அழைக்கப்படும் விஜயநாயுடு.அதுபோல் வெங்கய்யா - பென்சலம்மா தம்பதியரின் மஞ்சத்து மோகத்தில் அவர்களுடைய விந்துவும் சூலும் இணைந்ததன் விளைவால் உருவானவரே பத்மாவதி இறைவி என்று கல்கியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவரது துணைவியார். எனவே, இவர்களின் பிறப்பு எமது சமயமரபு கூறும் இறை இலக்கணத்துக்கு ஏற்புடையதன்று! வைணவம் கூறும் கல்கி அவதார இலக்கணத்துக்கு எள்ளளவும் தொடர்பற்றது. ஆனால் இதுபற்றி சுமார்த்த அத்வைத இந்துமத முகவர்களுக்கு அக்கறையில்லை. அவர்களுக்கு வைணவமும்-சைவமும் தீண்டத்தகாதவை!!!

கண்ணன் ஆயர்குல மக்களுடன் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது. இராமன் குகனுடனும் குரங்கினங்களுடனும் தோழமைபூண்டு சகோதர உறவு கொண்டு வாழ்ந்ததாக இராமாயணம் தெரிவிக்கின்றது. ஆனால் கணனியுகத்தில் தோற்றிய இவர் 25,000 ரூபாயில் சிறப்புத் தரிசனம் கொடுக்கும் "பணம் நாடும்" கடவுளாகியுள்ளார்............என்ன கொடுமை? ஆலயங்களில் அன்று சிறப்புத்தரிசனம் என்று கட்டணம் வாங்கும் பழக்கத்தை மனிதர் புகுத்தினர். இவரும் அதே விதியைப் புகுத்தியுள்ளார். அப்படியானால் இவரும் வெறும் பணத்தேவையுள்ள மனிதராகியுள்ளார் என்பது வெள்ளிடைமலை!

ஏழைக் குசேலரின் அவலை உண்ட கண்ணன், சபரி கடித்துக் கொடுத்த எச்சில் பழத்தை உண்ட இராமன் என்று திருமாலின் அவதாரங்கள் போற்றப்படுகின்றன.ஆனால் இவரது கட்டண வசூலைக் கருத்தில் கொள்ளும்போது எள்ளளவுக்கும் இவருக்கு அவதாரங்களோடு தொடர்பில்லை என்பது தெளிவாகின்றது.

உள்ளம் உருகில் உடனாவர் என்று சைவ சித்தாந்த நூல் திருவுந்தியார் கூறுகின்றது. உள்ளக் கமலமே உத்தமனார் வேண்டுவது என்றார் விபுலானந்த சுவாமி. மலர்மிசை ஏகினான் என்றார் வள்ளுவர்.கடவுளுக்கு வேண்டியது மலர்போன்ற உள்ளம் ஒன்றே; கடவுள் என்று பிரகடனப்படுத்திய இவரோ 25,000 ருபாயை சிறப்புத் தரிசனத்துக்கு வசூலிக்கிறார் என்றால் வசூல்ராஜாக் கடவுள்தான் இவர்!!!!

கல்கியைவிட சாயிபாபாவுக்கு பக்தர்களும் "மவுசும்" அதிகம் எனலாம். சாயி பாபாவைப் பற்றி புகார்களை பிரித்தானிய வானொலி சேவையகம்- பிபிசி வெளியிட்டிருந்தமையும் டில்லி அமெரிக்க தூதரகம் தனது நாட்டவர்களுக்கு இவர்பற்றி அவதானமாக இருக்கும்படி எச்சரித்திருந்ததும் இவர்பற்றிய ஐயத்தை ஊட்டியுள்ளது ஒருப்பக்கம் இருக்கட்டும். கிருஷ்தவர்கள் இவரைப் பின்பற்றுவதாலும் இவரை சார்ந்துள்ளோரை மதம்மாற்ற முடியாது மிசனரிகள் பாடும்பாடாலும் எழுந்த வதந்திகளாக இவையிருக்கக்கூடும்!


ஆனால், இவரது பிறப்புக்கு அற்புதக்கதை கூறப்பட்டாலும் அது அவரது சுயசரிதையாக இருப்பதையே அறியக்கூடியதாகவே உள்ளது.

திருநீறையும் தங்க நகைகளையும் கையைச் சுழற்றி வித்தைக்காட்டி வரவைப்பவர் ஏன் பெரிய பெரிய பொருட்களை வரவைப்பதில்லை?
இலிங்கத்தை வாய்க்குள் இருந்து எடுக்கும் இவர் பாம்புகளை எடுத்து வித்தைகாட்டினால் கொஞ்சம் ஆச்சரியப்பட நியாயமுண்டு!


சாயி பாபாபற்றி யூடியூப்பில் உலாவிவருகின்ற காணொளி


கண்ணன் தன்னை நம்பிய கோபியரை கோவர்த்தன மலையைத் தூக்கி காத்தார் என்று கண்ணன் கதைகள் கண்ணன் பெருமைகளைக் கூற, இவரோ தங்கச் சங்கிலி(ஆபரணம்) வரவைப்பதுடன் நிறுத்திக் கொண்டது ஏன்? சுனாமியைத் தடுக்காதது ஏன்? ஈழ யுத்த அழிவை தடுக்காதது ஏன்? நடமாடும் கடவுளாயிற்றே?

இவரே இராமன், இவரே கிருஷ்ணன், இவரே சிவன், இவரே அல்லா, இவரே இயேசு என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்; அல்லது பிரகடனப்படுத்தியுள்ளார். போதாக்குறைக்கு சீரடி பாபாவும் இவரே என்று கூறியும் உள்ளார்.


சாயி பாபாபற்றி யூடியூப்பில் உலாவிவருகின்ற காணொளி


இராமனாக இருக்கட்டும்! கண்ணனாக இருக்கட்டும்! அற்புதங்கள் வெறும் "மஜிக்மான்" செய்வதுபோன்ற ஆபரணங்கள் எடுக்கும் வித்தைகளை செய்யட்டும்! அதுபற்றி கவலையில்லை! ஆனால் பிறவாத, கருவறையில் உருண்டு பிரண்ட கதையில்லாத சிவனும் இவரே என்று கதையளப்பது அத்வைத சுமார்த்தம் இவரை வருடிவிடுவதை புலனாக்குகின்றது. ஆதிசங்கரருக்கு கட்டி எடுபடாதுபோன கதையை இப்போது திரைமறைவிலிருந்து சாயிபாபாவுக்கு கட்டிவிட்டுள்ளது.

"சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார் இங்கு யாவரும் இல்லை" (5)


"அவனை ஒழிய அமரரும் இல்லை " (6)
'தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்" (7)

என்கிறது திருமந்திரம். சிவனைவிட மேம்பட்ட அமரர்கள் எவரும் இலர் என்பதையும் சிவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் எவரும் இலர் என்பதையும் திருமந்திரம் வலியுறுத்தியிருக்க;

"பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்" (25)

பிறப்பிலி இறப்பிலி என்று சிவனைப் போற்றியிருக்க;

பிறந்து மூப்பு,நரை, தோல் சுருக்கம் என்று அத்தனையும் அமைந்த இரத்தமும் சதையும் கூடிய உடலை அந்த உடலினுள் உள்ள குடலினுள் புழுக்களையெல்லாம் சுமக்கும் ஒருவரை மலம்,சலம் என்று இயற்கை உபாதைகள் என்று அத்தனையும் கொண்ட ஒருவரை பிறந்தான் வளர்ந்தான் சாமதியானான் என்று வரலாறு இல்லாத சிவனோடு ஒப்பிடுவதும் சிவனென்றே சொல்வதும் கிஞ்சித்தும் ஏற்கமுடியாத வொன்று.

திருமால் பிருகு முனிவரின் மனைவியை அடைய விரும்பியதால் பிருகுமுனிவர் "சிவனைத் தவிர வேறு தெய்வம் தொழுது அறியேன் என்பது உண்மையானால் திருமாலுக்கு பத்துப்பிறவிகள் உண்டாகட்டும்" என்று சாபமிட்டதன் விளைவே திருமாலுக்கு பத்து அவதாரங்கள் என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது. எனவே மாலன் அயன் அறியாத பரமனை தானே என்றும் பின்னர் மால் எடுத்த பத்து அவதாரங்களும் தானே என்றும் பாபாவைச் சொல்லவைத்தது சுமார்த்தம். சொல்லும் அளவுக்கு வளர்த்து விட்டதும் சுமார்த்தம்

அடுத்து நித்தியானந்தா........?

சந்தி சிரிக்கும் அளவுக்கு சுமார்த்த ஊடகம் வளர்த்துவிட்ட நித்தியானந்தா நடிகையோடு நடத்தும் மஞ்சப் போர் இணையத்தில் உலாவுவது இந்துசமயத்தவரை தலைகுனிய வைத்துவிட்டது என்று பலர் வாடிப்போய்யுள்ளனர்.ஆனால் உண்மையில் வாடிப்போய்யுள்ளவர்கள் சுமார்த்த முகவர்களே!!!!

தாம் வளர்த்துவிட்ட ஒருவரின் அந்தரங்க கூத்து ஊரெங்கும் உலாவருவதால் வாடிப்போய்யுள்ளனர். சைவர்களும் சுமார்த்த இந்துவை உணராது அறியாமையில் தலைகுனிந்துவிட்டனர். இந்த அறியாமையை சுமார்த்தம் இந்து என்ற போர்வையில் இத்தனைகாலமும் சைவர்களுக்கு ஊட்டிவிட்டது என்றே சொல்லவேண்டும்!
பக்தர்களின் முகத்தை அவர்களின் நன்மைகருதி மறைத்துள்ளேன்.


இந்த நித்தியானந்தா யார்? சுமார்த்த அத்வைதத்தை இந்துமதம் என்று போதிக்க சுமார்த்த சங்கராச்சாரியார்களின் ஊடகங்களால் வளர்க்கப்பட்ட ஆசாமி!!!! இன்று கையும் களவுமாகப் பிடிபட்டுப் போனார்.

இந்த நித்தியானந்தா சிவனே முழுமுதற் பொருள் என்றுணர்ந்து சிவபூசை செய்தாரா? சைவ சமயத்தை ஒழுகினாரா? இவரது வண்டவாளம் தண்டவாளங்கள் ஊரறிய உலகறிய இணையமெங்கும் தொலைகாட்சி செய்தியெங்கும் உலாவருவதைக் கண்டு நாம் தலைகுனிவதற்கு?


"நரர்பயில் தேயம் தன்னில்
நான்மறை பயிலா நாட்டில்
விரவுதல் ஒழித்து தோன்றல்
மிக்கபுண்ணியம் தானாகும்
தரையினில் கீழை விட்டுத்
தவம் செய்சாதியினில் வந்து
பரசம யங்கள் செல்லாப்
பாக்கியம் பண் ஒணாதே"
                                - சிவஞான சித்தியார்

சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது
                               -சிவஞான சித்தியார்

மானிடர் வாழுகின்ற பூமியில் பிறந்தாலும் வேதம் பயிலாத நாட்டில் பிறக்காமல் வேதம் சிறந்த நாட்டில் தவம் செய்யும் குடியில் புறச்சமயங்கள் சாராது பிறத்தல் மிகுந்த பாக்கியம் என்றும் சைவமாம் சமயத்தை ஒழுகுவது நல்லூழ் தரும் பயன் என்றும் மேலே உள்ள பாடல்கள் உணர்த்துகின்றன.

"நான் கடவுள்" என்று ஒன்றுக்கு பலர் கதைவிட யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்று கலங்குவதைவிட மானிடரை கடவுளாக மாற்றும் சுமார்த்த அத்வைத இந்துத்துவாவை உதாசீனஞ்செய்து, சிவாகமவழி நின்று, சிவாலய தரிசனம், சிவபூசை என்று உயர்வழியில் ஒழுகுவதே உத்தமமானது.உயர்வை அளிப்பது.


போலிகள் பெருக்கெடுக்க வைக்கப்பட்டுள்ளனவேயொழிய தானாக பெருகவில்லை என்பதை உணருங்கள்! இந்த மானிடருக்கு தம்மைக் காக்கவே வழிதெரியவில்லை........எம்மைக் காப்பது எப்படி? எனவே, மனிதர்களை கடவுளாக்கி உலாவரவிட்டுள்ள சங்கரபீட சுமார்த்த அத்வைத இந்துமத வலைப்பின்னலை உணர்ந்து, அவற்றுள் மூழ்காது; உன்னத சைவநெறியின்பால் நின்று உய்வடைவதே உயர்ந்த மார்க்கமாகும்.
 
"மேன்மைகொள் சைவநீதி
விளங்குக உலகமெலாம்"

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

14 comments: on "சுமார்த்த அத்வைதம் பெருக கல்கிசாயிநித்தியானந்தா என்று பெருகும் சாமியார்கள்"

சிவத்தமிழோன் said...

"Sai baba, A shameless Fraud", "Satya sai baba fraud" என்னும் யூட்டியூப்பில் தோன்றும் தலைப்புக்கும் சிவத்தமிழோன் வலைப்பூவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.கருத்தை தெரிவிக்கவேண்டியது எளியேனின் கடமை. எனவே யூட்டியூப்பில் உள்ள காணொளிகளை இணைத்துள்ளேன். கட்டுரையின் பொருளை படித்து காணொளிகளை ஆராய்ந்து தீர்மானிக்கவேண்டியது வாசகர் கடமை.

THANGAMANI said...

நன்று.வாழ்க வளமுடன்.

சிவத்தமிழோன் said...

சுமார்த்தம் தொடர்பாக ஏற்கனவே எழுதிய கட்டுரைகள்:-

சைவநெறி என்று பறைவோம் http://sivathamiloan.blogspot.com/2009/07/blog-post_22.html

இந்து" மதம் சைவநெறிக்கும் தமிழுக்கும் இழைக்கும் கொடுமைகள்
http://sivathamiloan.blogspot.com/2009/07/blog-post_23.html


ஸ்மார்த்தரிடம் நாவலர் தொடுத்த ஐந்து வினாக்களும் நாவலர் விளக்கிய சைவ சாதிமுறையும்
http://sivathamiloan.blogspot.com/2009/09/blog-post_13.html

சோழர் தலைவன் said...

மிகச்சிறந்த கட்டுரை நண்பரே வாழ்த்துக்கள் ........ மனிதன் ஒரு போதும் கடவுளாக முடியாது .............

Sathyan said...

அருமையான பதிவு. காலத்தின் தேவையும் கூட. வாழ்த்துக்கள் நண்பரே.

கோவி.கண்ணன் said...

இந்த இடுகையில் உங்கள் சிவபுராணங்கள் தவிர்த்து, மற்ற கருத்துகளுடன் உடன்படுகிறேன்

ஆதிசங்கரரின் 'அத்வைத' தத்துவமே போலிசாமியார்களின் பெருக்கத்திற்கும், அவர்கள் தங்களை அவதாரம் என்று கூறிக் கொள்வதாற்கும் காரணம் என்பதே என் எண்ணமும்.

மூடநம்பிக்கையின் தோற்றுவாய் அத்வைதம் தான்.

கோவி.கண்ணன் said...

//சமணர் சுண்ணாம்புக்குள் போடுதல், கடலில் கல்லோடுகட்டி வீசுதல், யானையால் மிதிக்கச் செய்தல் என்று பல்வேறுவழிகளில் சைவரைத் துன்புறுத்தி, சமணத்தை வளர்த்தபோது அத்தனை கொடுமைகளையும் சிவனருளால் தகர்த்து சைவநெறியை நால்வர் மீண்டும் தழைத்தோங்கச் செய்தனர்//

அதுமட்டுமா 63 நாயண்மார்கள் கதை என்று கூறி பிள்ளைக்கறி சமைத்தல், நரியை பரி ஆக்கியது, நந்தனாரை தீயில் இறக்கி முக்தி அடைந்ததாகச் சொல்லி நடக்காத கதைகளையும் நடந்ததாகக் கூறி வளர்த்தனர் :)

கோவி.கண்ணன் said...

//திருமால் பிருகு முனிவரின் மனைவியை அடைய விரும்பியதால் பிருகுமுனிவர் "சிவனைத் தவிர வேறு தெய்வம் தொழுது அறியேன் என்பது உண்மையானால் திருமாலுக்கு பத்துப்பிறவிகள் உண்டாகட்டும்" என்று சாபமிட்டதன் விளைவே திருமாலுக்கு பத்து அவதாரங்கள் என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது. எனவே //

தேவை இல்லாமல் வைணவர் மனங்களை புண்படுத்துகிறீர்கள், சைவ நெறி என்ற பெயரில் வைணவர்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படையாக எழுதுகிறீர்கள்.

உங்கள் சைவ இலக்கியதிலேயே ஒரு பெண்ணை ஆடை இல்லாமல் சிவன் உணவு பறிமாறச் சொல்ல, அவள் சிவனை குழந்தையாக மாற்றி பின்னர் ஆடைகளை கழைந்துவிட்டு உணவு படைத்தாளாம்.

கேவலக் கதைகள் சைவத்திலும் உண்டு. ஆனால் அவை உங்கள் கண்களுக்கெல்லாம் தெரியாது.
:(

நான் வைணவனும் இல்லை சைவனும் இல்லை.

சிவத்தமிழோன் said...

கோவி.கண்ணன் அவர்கட்கு,

வைணவ சமயத்தை புண்படுத்த அவ்வண்ணம் எழுதவில்லை. மூவரில் முதல்வனாக சிவனை சைவம் கருதும்போது, அந்தச் சிவனை கருவில் பிறந்த மனிதருடன் ஒப்பிடுவது எவ்வளவு கீழ்மையுடைய செயல் என்பதை தெளியவைக்க அவ்வண்ணம் சுட்டியுள்ளேன். சைவநெறியில் அருவம்,உருவம்,அருவுருவம் என்று யாவாகவும் அவற்றிற்கு அப்பால் சொல்லுக்குள் அடங்காத சிவம் தனிப்பெரும் முதல்வனாகப் போற்றப்படுவது எவ்வண்ணம் இயல்போ அவ்வண்ணமே வைணவத்தில் விஷ்ணுவைப் போற்றுவர். வைணவத்தில் சிவனை நீங்கள் சொன்னதுபோல் சித்தரித்திருப்பர். இதில் சைவ-வைணவ கதைகளை ஒன்றாக கலந்து "கொத்துப் பரோட்டா" செய்த அத்வைத கொள்கைகளின் தாக்கத்தால் சிவன் - விஷ்ணு கதைகளில் உள்ள யதார்த்தத்தை தாங்கள் உணரவில்லை என்று நினைக்கிறேன்.

தாங்கள் நடவாத கதைகள் என்று கருதியவற்றின் பின்னால் பாருக்கு ஒளியூட்டும் ஆன்மீக உள்ளர்த்தங்கள் எவ்வளவு உண்டு என்பவற்றை சைவவழி நின்றால் தானாகவே புரியம்.குறைந்தபட்சம் ஆன்மீகவழி நின்று நோக்கின் புரியும்.


தமிழகத்தில் இன்று அத்வைதமே இந்துமதமாகப் போதிக்கப்படுகின. அதன் தாக்கமே போலிகளின் மலிவு!!!!
தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்.

Anonymous said...

நல்லது நண்பரே,

போலிகள் இனங்காணப் படவேண்டும்!
மக்களின் அறியாமையையும் ஆன்மீக உணர்வுகளையும்
தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் போலிச் சாமியார்களுக்கு
குழறக் குழற சவுக்கடி கொடுக்க வேண்டும்.
உண்மையாக தெரியாமல் கேட்கிறேன்.
சாயி பாபா தன்னைச் சிவவதாரம் என்றாரா?

சிவத்தமிழோன் said...

Anonymous அவர்களே,

தங்கள் கருத்தை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்.

அவரது பாடல்கள் கேட்டதில்லையா? சாயிசிவம் என்ற மந்திரம் தாரகமந்திரம்.
இராமன்+கண்ணன்+சிவன் ஆகியோரின் அவதாரம் என்றே பிரபயல்யப்படுத்தப்படுகின்றார்.

சிவராத்திரிக்கு அவரது சமித்திகளில் சிவனாமகாக திருவைந்தெழுத்து ஓதப்படுகிறதோ இல்லையோ, "சாயிசிவம்/சாயிசிவா" ஓதப்படுவது அவர்கள் மரபுவிதி.

Unknown said...

அருமை சிவத்தமிழோன்,
காலத்தால் அழியாத சைதையும் தமிழையும் சில நரிகள் அழிக்க நினைக்கின்றன.
உண்மையில் நானும் எனது சமயம் யாதெனில் இந்து சமயம் என்றே கூறி வந்தேன், இப்போது அல்ல. இங்கு இளம் சந்ததியை கேட்டால் என்னை போன்றே பதிலளிக்கும். அந்த அளவிர்க்கு பரப்பபடுகிறது.

சைவத்தை அழிப்பது இந்து மத முகவர்கள் மட்டுமல்ல, ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்கத்திய சுகங்களுக்கு அடிமைப்பட்டு சைவர் என்ற அடையாளத்தை தொலைத்துநிற்கும் கிறிஸ்தவ முகவர்களும் தான். இப்போது எம்மிடையே இருக்கும் கிறிஸ்தவர்கள் சிலர் வெளிநாட்டிலிருந்து மிசனரிகளால் அனுப்ப படும் ................... பணத்தை வறிய சைவ மக்களுக்கு வழங்கி மதம் மாற்றுகின்றனர்.
இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று.

MACHAMUNI BLOGSPOT said...

சைவம் என்பது தன்னுயிர் போல மன்னுயிர் எண்ணுதல்.அது மட்டுமல்ல தன்னுயிர் அழியாமல் (கொல்லப்படாமல்) காத்து மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்தலே சைவம்.சித்தர்களின் வழியும் அதுவே!!! சோழர் தலைவன் சொன்னது ///மனிதன் ஒரு போதும் கடவுளாக முடியாது///
மேற்கண்ட கருத்தை நான் மறுக்கிறேன். நான் மட்டுமல்ல சித்தர்களின் கருத்தும் அப்படியே. இதையே சிவவாக்கியர் ''நெருப்பறை திறந்த பின் நீயும் நானும் ஈசனே''என்று கூறுகிறார்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

சிவத்தமிழோன் said...

பேரன்புகுரிய சாமீ அழகப்பன் அவர்கட்கு,
சித்தமலம் அறிவித்து சிவமாக்கி என்னை ஆண்ட என்று மாணிக்கவாசகரும் அத்துவிதக்கலப்பை பாடுகின்றார். ஆனால் மாணிக்கவாசகர் பாடும் அத்துவிதக்கலப்பு என்பது சைவசித்தாந்தம் கண்ட சுத்தாத்துவிதக்கலப்பு ஆகும். அதாவது ஆன்மாவுடன் வேறாய்,உடனாய்,ஒன்றாய் நிற்கின்ற இறைவனின் நிலையே சுத்தாத்துவிதம் என்படும். அதுவே அத்வைதத்தின் தெளிவான விளக்கம். நான் கடவுள் என்னும் கொள்கை அல்ல! அதுபோல்த்தான் சித்தர்களும் சுத்தாத்துவிதகலப்பை சுட்டுகின்றனரே ஒழிய, நான் கடவுள் என்றும் கேவலாத்துவிதக்கொள்கையை அல்ல!சிவவாக்கியரின் ஏனைய பாடல்களில் இருந்து வரிகள் கீழே எடுத்தாளப்பட்டுள்ள்ன.
///உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்///

////என்னுளே இருப்பனே எங்குமாகி நிற்பனே////

////வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லீரேல்
திடுக்கமுற்ற ஈசனைச் சென்றுகூட லாகுமே///

//நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே////

///யாவரும் பரத்துளே யானும் அப்பரத்துளே///

///யானும்நீயு மேகலந்த தென்னதன்மை ஈசனே///

//நானும்நீயும் உண்டடா//

http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D

இங்கு சிவவாக்கியர் ஆன்மாவுக்குள் இறைவன் இருப்பதை சுட்டுகின்றாரே ஒழிய, ஆன்மாவே இறைவன் என்று சுட்டவில்லை. சைவசித்தாந்த அத்துவிதம் ஆன்மாவுக்குள் இறைவன் உள்ளான் என்கின்றது. நான் கடவுள் என்னும் கேவலாத்துவிதம்(ஆன்மாவே கடவுள் என்னும் சங்கரரின் கருத்து) சிவவாக்கியரின் பாடல்களில் எந்தவொரு இடத்திலும் கூறப்படவில்லை. எனவே நீயும் நானும் ஈசனே என்று சிவவாக்கியர் கூறுவதும் சிவமாக்கி என்னை ஆண்ட என்று மாணிக்கவாசகர் பாடுவதும் ஒன்றாய்,வேறாய்,உடனாய் இறைவன் ஆன்மாவுடன் கலந்திருக்கின்ற தன்மையினை உணர்ந்து பேசப்படுகின்ற சைவசித்தாந்த சுத்தாத்துவிதக்கலப்பு ஆகும்.

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்

Post a Comment