"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, April 22, 2020

கோப்பாய் சிவம் அவர்களின் கண்டனமும் எம் மறுப்புரையும் பாகம் 1

கோப்பாய் சிவம் அவர்கள் (சிவானந்தசர்மா அவர்கள்) எமது பதிவுகள்,கண்டனங்களுக்கு தமது முகநூலில் பதிலளித்துள்ளார்கள்.
6
தனிப்பதிவுகளாக எழுதியுள்ளார்கள். ஏனையார் , இதற்கு முன்னையகாலத்திற் ஒன்று நட்புநீக்கம் செய்வர். அல்லது தூஷணங்களால் அலங்கரிப்பர்கோப்பாய் சிவம் அவர்கள் எமக்கு கண்டனம்/ பதிலெழுதி அறிவுடையார் சால்பை நிலைநாட்டியுள்ளார். அவருடைய இச்சால்புக்கு எமது நன்றிகள் முதலில் உரித்தாகுக.
எமது மறுப்புரை இருகட்டுரைகளாகத் தருகின்றோம். இது பாகம் ஒன்றாகும்.


1)
////பழைய வைதிக சைவம் பரக்கவே|| - உமாபதிசிவம்.////


வைதீகம், மாயை,வேதாந்தம், ஸ்மார்த்தம் என்பன இந்திய சமயங்கள் ஒவ்வொன்றிலும் ஒருபொருளை உடையனசைவத்தில் மாயை உட்பொருள். அதுவே ஆதிசங்கராச்சாரியாரின் கேவலாத்துவிதத்தில் உட்பொருளன்று. வேதாந்தம் என்பது உபநிடதங்கள். வேதத்தின் அந்தம். இதுவே நேரடிப்பொருள்அதேசமயம் பிரம்மசூத்திரங்களுக்கு விளக்கம் கண்ட மதங்களான ஆதிசங்கரரின் ஸ்மார்த்தம், இராமனூஜரின் விஷிட்டாத்வைத வைணவம், மத்வரின் துவைத வைணவம் முதலியனவும் இப்பெயராற் அழைக்கப்படும்.அதிலும், ஆதிசங்கரரின் கேவலாத்வைதக் கோட்பாடு இப்பெயரால் பிரபல்யமாகவிளங்குகின்றதுவேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் என்னும் சைவசித்தாந்த நூல்(சிவப்பிரகாசம்) கருத்துக்கு சங்கரரின் கொள்கையின் தெளிவே சைவசமயம் என்று எவரேனும் பொருளுரைத்தால் அது நகைப்புக்குரியது. உபநிடதங்களின் முடிந்த முடிவான தெளிவான கருத்தே சைவசித்தாந்தம் என்பதுவே அவ்வரிகளின் விளக்கமாம். அதுபோல் , ஸ்மார்த்தம்/ வைதீகம் என்பது வேதநூல்களையும் வேதவழிநூல்களையும் துணைநூல்களையும் மாத்திரம் ஏற்கும் சங்கரரின் ஸ்மார்த்தமதத்திற்கும், "வேதமரபு"என்னும் நேரடிப்பொருளுக்கும் உரியதாக விளங்குகின்றது. வைதீக சைவம் என்பது ஸ்மார்த்தமதத்தினை தழுவிய சைவசமயம் அன்றுவேதத்திற்கு மெய்ப்பொருள் கண்ட சைவம் என்பதுவே பொருள். எனவே வைதீகக்கிரியை/ஸ்மார்த்தக்கிரியை என்று சைவநூல்களில் புழகும் சொற்கள் "சிவபெருமானை பலரில் ஒருவராய்-அழித்தற்தொழில் செய்யும் தேவனாய்"கொள்ளும் ஸ்மார்த்தமதக்கிரியைகளைச் சுட்டாதுஅது சிவபெருமானை ஐந்தொழிற் தெய்வமாய் வேதத்திற்குப் பொருள்கொண்டு செய்யும் கிரியை என்பதுவே பொருளாகும். தக்கன் யாக அழிப்பும் தாருகாவனத்து முனிவர் பெற்ற பாடமும் இதையே விளக்குவனவாகும்.
சைவநூல்களிலுள்ள ஸ்மார்த்த/வைதீக போன்ற சொற்களெல்லாம் சைவ அடிப்படை நூல்களைக் கற்றாரே தெளியுமாறு இருப்பினும்,   சுமார்த்தமதப்பாசத்தாருக்கு இலகுவில் பொருளுணர்தல் கடினமாயிருத்தல் வியப்பன்று.

///
அச்சுவேலியார் தமது நூலில் தருகிறார். அந்த சங்கல்பத்தில் - ஷஷசிரௌத ஸ்மார்த்த விஹித நித்ய கர்மானுஷ்டான யோக்யதா சித்யர்த்தம்....|| என எழுதுகிறார். ஆதிசைவ சிவாசாரியார்களும் வைதிக, ஸ்மார்த்த நித்ய கர்மானுஷ்டானங்கள் செய்யவேண்டும் என்பதும் அதற்குத் தகுதியாகவே பூணூல் அணிவது என்பதும் இங்கு வலியுறுத்தப்படுகிறது
////
எனவே, மேலுள்ளவாறு சைவநூல்களில் வைதிகம்/ஸ்மார்த்தம் என்று சுட்டிய இடங்களுக்கு ஸ்மார்த்தமதத்தின் பொருள்களைக் கொண்டுவந்து இட்டுக்கட்டிய கோப்பாய் சிவம் அவர்களின் குற்றச்சாட்டுக்கள்/கண்டனங்கள் விலக்கத்தக்கனவாம்.


) சந்தியாவந்தனம் குறித்த சர்ச்சை.சைவ சந்தியாவந்தனம்
சைவசமயம் கூறும் வைதீக சந்தியாவந்தனம்
ஸ்மார்த்தமதம் கூறும் வைதீக சந்தியாவந்தனம்
ஆசமனம்
ஆன்மதத்துவாய /வித்தியா தத்துவாய /சிவ தத்துவாய
ஓம், ஓம்,ஓம்

அல்லது

ரிக்வேதாய / யசுர்வேதாய
/சாமவேதாய
அச்சுதாய /
அனந்தாய /
கோவிந்தாய
தொடுமிடம் தொடுதல்
ஹிருதாய நம:/ ஹிருதாய வௌஷட் (நாவலர் மரபு)
பிரணவம்(ஓம்)
கிருஷ்ணரின் நாமங்கள்
(அனுபட்சத்திருமாலின் நாமங்கள்)ஆதிசைவர்கள் முதலில் வைதீக சந்தியாவந்தனமும் அதனைத்தொடர்ந்து சைவசந்தியாவந்தனமும் செய்தல் வேண்டும் என்பது ஆகமம்,,பத்ததிகள்(அகோரசிவாச்சாரியார் பத்ததி) முதலியன விதித்துள்ள விதியே. அதில் மாற்றுக்கருத்தில்லை. உலகம் பொருட்டான வேதமும் வீடுபேறான ஆகமமும் என்றே சைவம் பொது,சிறப்பென்று கூறும். உலக மக்களின் நன்மைக்குப் பரார்த்தபூசைசெய்யும் பூசகர் வைதீகசந்தியாவந்தனத்தினை செய்து, தம்மை வீடுபேறுக்குத் தகுதிப்படுத்திக்கொள்ள சைவசந்தியாவந்தனத்தினைத் தொடர்ந்தல் மரபே. அதில் எவரும் குறைகாணவில்லை. ஆனால்வைதீக சந்தியாவந்தனம் என்று சைவசமய நூல்கள் உரைக்கும் சந்தியாவந்தனம் வேறு. ஸ்மார்த்தமத நூல்கள் உரைக்கும் சந்தியாவந்தனம் வேறு. கோப்பாய் சிவம் அவர்கள் சைவசமயம் கூறும் வைதீக சந்தியாவந்தனத்திற்கு ஸ்மார்த்தமதம் கூறும் வைதீகசந்தியாவந்தனத்தினை எழுதிப் பிரசுரித்தமையே நாம் தவறென்று சுட்டிக்காட்டிய விடயம். இதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியை ஆற்றும் அப்பெருமகனார் இன்னும் தெளியாமை ஏனோ?/// யஜுர்வேத சந்தியாவந்தனம் என்ற தலைப்பில் வைதிக சந்தியாவந்தனமும் - இது ஆபஸ்தம்ப சூத்திரருக்குரியது. இலங்கையில் 98 வீதமானவர்கள் ஆபஸ்தம்பரே////////

//////ஆதிசைவர்
ஆன்மார்த்த பூஜை செய்வதோடு ஆலயங்களில் அடியவர்களை உய்விக்கும் நோக்கில் பரார்த்தபூஜை செய்யும் அதிகாரமும் உடையவர்கள். பிரதிஷ்டை, உற்சவம் முதலியன அவர்கள் மட்டுமே செய்யலாம். இவர்கள் பஞ்ச ரிஷி கோத்திரத்தை மட்டும் உடையவர்கள். பெரும்பாலும் போதாயன சூத்திரத்தை அனுசரிப்பவர்கள்

ஏனைய பிராமணர்கள் பரார்த்த பூஜை செய்ய முடியாது. ஆன்மார்த்த சிவபூஜை மட்டும் செய்யலாம். இவர்கள் பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆபஸ்தம்ப சூத்திரம், ஆஸ்வலாயன சூத்திரம் முதலிய பல்வேறு சூத்திர உட்பிரிவுகளைக் கொண்டவர்கள்.
ஆதிசைவர்கள் போதாயன சூத்திரத்தவர்கள் மட்டுமே என்கிற கொள்கை சிலரிடம் உண்டு. ஆனால் எனக்கு இதுவரை இவ்விடயங்களில் ஆதாரம் கிட்டவில்லை.////

மேலும், ஆபஸ்தம்ப சூத்திரத்தினை பிரமாணமாகக்காட்டி தாம் கூறிய சந்தியாவந்தனத்தினை நியாயம் செய்கின்றார்அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்கள் போதாயன சூத்திரத்தையும்தமிழக சிவாச்சாரியாரும் போதாயன சூத்திரத்தையும் கைக்கொண்டொழுக, இலங்கையிற் ஏனைய சிவப்பிராமணரிடம் ஸ்மார்த்தமதத்தார் அதிகம் பின்பற்றும் ஆபஸ்தம்ப சூத்திரம் பிரபல்யமாகியது? அதுவும் 98 வீதம் என்று கோப்பாய் சிவம் கூறியவாறு நோக்கின், ஏனைய 02 வீதமே சிவப்பிராமணர் என்பது தெளிவாகிறது. 98 வீதமானார் ஆபஸ்தம்ப சூத்திரத்தைப் பின்பற்ற, வெறும் 02 வீதமானவருக்காகவா போதாயன சூத்திரத்தைத் தழுவி வைதீக சந்தியாவந்தனத்தினை அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்கள் எழுதினார்? இப்போது நாம் இலங்கைப் பிராமணரில் பலர் பூர்வீகத்தாற் ஸ்மார்த்தமதத்தார் என்று கூறியது உண்மையாயிற்றே.

“பெரும்பாலும், சிலர் கூறுகின்றனர்,ஆனால் ஆதாரம் தமக்கு கிடைக்கவில்லை” போன்றன உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கும் ஸ்மார்த்தமதக்கொள்கைகளை மறைக்க கோப்பாய் சிவம் அவர்கள் கையாண்ட இலக்கியத்தமிழ்வித்துவமாகும்!!!!

3) /////சைவசமய நெறி நூலில்,

78. கொள்க சிவாகமத்தில் கூறுநெறி பூசாதி
கொள்ளல் புற நூல் விதியெல்லாம்.
79. அன்னிய நூலின் விதி அவிரோதமேல்
உன்னேல் பழுதென் றுளத்து
என்று கூறப்படுவதையும் காண்க. சிவாகம நெறியிலேயே சகலதையும் செய்க எனக் கூறிவிட்டு அடுத்த செய்யுளிலேயே அன்னிய நூல்களாகிய வேதம் முதலியவை ஆகமத்திற்கு விரோதமின்றி இருக்குமானால் அவற்றைக் குற்றமென்று எண்ணாது அவற்றையும் கொள்க என உரைவிளக்கத்தில் ஆறுமுக நாவலர் கூறுகிறார்////.


இப்பிரமாணம் அருமையானது. சைவாகமங்களுக்கும் அவைகூறும் சைவநீதிக்கும் சிவபரத்துவத்துக்கும் கேடாகாத ஸ்மிருதியையே கைக்கொள்ளாம் என்பதாகும்.
ஸ்மிருதிகள் பதினெட்டு உண்டு. அவற்றில் மனுஸ்மிருதியாயினும் சரி, அவை முதலியனவற்றினை பிரதானமாகக் கருதும் ஸ்மார்த்தமதம் முதலியனவாயிற்றிலும் சரி,
1. பெண்களுக்கு முத்தியில்லை.
2. பிராமணர் அல்லாத வர்ணத்தாருக்கும் வீடுபேறு இல்லை.

1.ஸ்மிருதிகளைச் சைவம் ஏற்கின்றதென்ற தங்கள் கருத்துப்படி, காரைக்கால் அம்மையார், பாண்டிமாதேவியார் முதலியோரும் இளையான்குடிமாறநாயனாரின் மனைவியார்,திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மனைவியார் போன்றோருக்கும் முத்திகிடைக்கவில்லையா?

2. பிராமணர் அல்லாத அப்பர்,இளையான்குடிமாறநாயனார், கண்ணப்பர், திருநாளைப்போவார் நாயனார் முதலியோரெல்லாம்  முத்தியடையவில்லையா என்ன?

ஸ்மிருதிகளைப் பற்றிப்பிடித்திருப்போரை "மிருதிவழி உழன்றும்என்று  சகலாகமபண்டிதராகிய அருணந்தி சிவாச்சாரியார். சிவஞானசித்தியார் 8ம் சூத்திரம் 24ம் செய்யுளினால் ஸ்மிருதிகளைக் கடந்தோருக்கே சைவத்துறை வாய்க்கும் என்பது புலனாகும். சந்தானகுரவர்களில் ஒருவராகிய சகலாகமபண்டிதர் அருணந்தி சிவாச்சாரியாருக்கு மாற்றாக கோப்பாய் சிவம் அவர்கள் எடுக்கப்போகும் பிரமாணம் ஏதோ? அல்லது சைவசமயத்தைச் சாராது, உழன்றுகொண்டிருக்கவேண்டிய ஆசை கோப்பாய் சிவம் அவர்களுக்கும் அவரின் அன்பர்களும் இருக்குமானால், யாம் என்செய்வோம் பராபரமே!!!!


4) 
நாமதாரணம் குறித்த சர்ச்சை

பிராமணர் - சர்மா
சத்திரியர் - வர்மா
வைசியர் - குப்தர்
சூத்திரர் - தாசன்
என்ற வழக்கு சைவத்திற்கு ஏற்புடையதா?

வர்ணம் உலகாருக்குரியது. சைவநூல்களில் இவை கூறப்பட்டிருப்பது உலகார் பொருட்டு!  சைவத்துறையைச் சார்ந்தாருக்கு அன்று.
தீட்சைமுதலிய இல்லார் அவற்றைக் கைக்கொள்ளுதல் அவர் பிரார்த்தவினை சார்ந்தது. தீக்கையால் வர்ணம் கெடும் என்பதும், சைவம் அதிவர்ணாச்சிரமம் என்பதுவும் சைவசமயக்கொள்கைகளாம். தீட்சையால் வர்ணம் ஒழிந்தார் தீட்சாநாமத்தினைப் பாவியாது, பூர்வ வர்ண நாமத்தினைப் பாவித்தல் குளித்தபின்னும் தாமே விரும்பி அழுக்கைப் பூசிக்கொள்வாருக்கு ஒப்பானாது. ஆச்சாரியத்துவம் பெற்ற ஒருவர்(குருக்களாகிய ஒருவர்) தாமே உலகாருக்குரிய வர்ணத்துள் மூழ்கினால், சத்தினிபாதருக்குரிய சைவசமயிகளை எங்ஙனம் முத்தியை நோக்கி தீட்சைகள் வழங்கி நகர்த்திச்செல்வர்? குளித்து ஆடையலங்காரம் எல்லாம் செய்துவிட்டு மீண்டும் சேற்றினுள் வீழ்ந்து பிரதிட்டை அடிப்பதை ஒத்தது, நிர்வாண தீட்சை,ஆச்சாரிய அபிஷேகமெல்லாம் பெற்றுவிட்டு மீண்டும் வர்ணத்துள் மூழ்குவது!!!!
நடராஜ சர்மா என்ற ஒருவர், அகோர முகத்தால் தீட்சைபெற்றால் அகோர நடராஜ சிவம் என்றே கூறப்படுவர். இச்சிவம் சிறப்பாக சைவர்கள் அனைவருக்கும் பொதுவாக பிராமணருக்குமென்று ஆகமங்கள் கூறுகின்றன. திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆரம்பகால ஆதீனமுதல்வர்கள் சிவாச்சாரியார்கள் என்றே வழங்கப்பட்டமை இதன்பொருட்டேயாகும். மெய்கண்ட தேவர் மெய்கண்ட சிவனார் என்று போற்றப்பட்டமையும் இதன்பாலானதே. மெய்கண்ட சிவம்,அருணந்தி சிவம், உமாபதி சிவம் என்ற வழக்குகள் நூல்களில் உண்டு.
சர்மா முதலியன சைவக்குருமார்(வீரசைவக்குருமார், தீட்சைவழிக்குருமார்) இட்டுக்கொள்வதை நாம் கண்டிக்கவில்லை என்று கூறியுள்ளீர்கள். தீட்சைவழிக்குருமார் ஒருவர் எம் ஆலோசனைக்குப் பின்னர், தீட்சாநாமத்துடன் சிவம் என்றே பாவிக்கின்றார்சேற்றில் விழ விருப்பமா? முத்திக்கு  செல்ல விருப்பமா? என்று கேட்டேன். இரண்டாவதை அவர் தேர்ந்தெடுத்தார்.
"தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள். தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" - தேவாரம்
இதற்குப் பிறகும் வேறேதும் பிரமாணம் வேண்டுமோ?

தமிழ்நாட்டுச் ஆதிசைவச் சிவாச்சாரியாரிடம் வர்ணநாமப்பழக்கம் ஒழிந்ததும் இதன்நிமித்தமேயாம்.

சேற்றினுள் வீழ்வதுதான் விருப்பம் என்றால், விரும்பி விழுக!!!!( சைவசமயம் அதிவர்ணாச்சரமம் என்பதை கற்றும் தெளியாதாருக்கு விளங்கப்படுத்தும் முகமாக எம்குருநாதர் எழுதிய கையெழுத்துப்பிரதி நூல், விரைவில் அச்சேற்றப்படவுள்ளது. வெளிவந்ததும் அங்கு சுட்டப்பட்ட பிரமாணங்கள் வெளிப்படுத்கப்படும்.)

5) பிரம்மஸ்ரீ - சிவஸ்ரீ சர்ச்சை


வேதங்கள்
பிரம்மம் என்று பொதுப்படையாகவும் சிவத்தை உள்ளுறையாகவும் கூறும்சிவாகமங்கள் பிரம்மம் சிவனே என்று அறுதியிட்டுக்கூறும்.

சிவ
-ஈரெழுத்துப் பஞ்சாட்சரம் - மந்திரம்- முத்திக்குரியது
சிவமங்கலமானது
சிவ - செம்பொருளைச் சுட்டுவது


சிவசிவ
என்கிலார் தீவினையாளர்
சிவசிவ
என்றிட தீவினை மாளும்
சிவசிவ
என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ
என்றிட சிவகதி தானேதிருமந்திரம்


கையில் வெண்ணெய் இருப்பதை அறியார்  
நெய்க்கு அலைவது போல,

ஆலை
இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை போல,

பிரம்மத்தைக் கட்டிப்பிடித்திருங்கள். உள்ளுற ஸ்மார்த்தமத சம்பிரதாயங்களைக் கைவிட மனமில்லையென்று கூறிட வழியில்லாது, "எமக்கு பிரம்மம் என்பது சிவம் தான்" என்று மழுப்பல் உரைகள் வரையாதீர்கள்.  பிரம்மத்தை சிவம் என்று தெளிந்தபின், மந்திரச்சொல்லான சிவத்திலும் பொதுச்சொல்லான பிரம்மம் இனிக்குமென்றால் "சமய,விசேட,நிர்வாண,ஆச்சாரிய தீக்கைகளால்"பெற்ற பலன் யாதோ?

சிவனெனும் ஓசை அல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே"
-அப்பர் பெருமான்
சிவசிவ என்கிலர் தீவினையாளர் என்பதை நினைவிற் கொள்க.
(
இதுபற்றி ஏற்கனவே தனிப்பதிவு சிறப்பாக எழுதியுள்ளமையாற் இங்கு விரிக்கவில்லை. அப்பதிவிற் சென்று படிக்க.)
 
வலைப்பூவிற் படிக்க இங்கு சொடுக்குக.
இதுபற்றி மேலும் படிக்க இச்சொடுக்கியினை அழுத்துக.

6)
////ஒருமுறை வேதங்கள் அசுரனால் கடலுக்கடியில் மறைத்துவைக்கப்பட்டபோது மஹாவிஷ்ணு மத்ஸ்யாவதாரம் எடுத்து அவற்றை மீட்டுக்கொண்டுவந்தார் என்று புராணங்கள் செப்புகின்றன. அந்த நன்றிக்கடனுக்காக வேதங்களை ஆரம்பிக்கும்போதும் முடிக்கும்போதும் அவரை நினைத்து ஹரி ஓம் என உச்சரிப்பது நீண்டகால மரபு./////

இந்த மரபு ஸ்மார்த்தமதத்தார் மரபு என்பதுதானே நாம் பலமுறையாக எடுத்துரைப்பது. தமிழக சிவாச்சாரியாரிடம் இல்லாத இந்த மரபு, இலங்கைச் சிவாச்சாரியாரிடம் எங்ஙனம் வந்தது?
ஸ்மார்த்தர் கூறும் இக்கதை சைவப்பிரமாணம் தவறென்று தாங்கள் விளங்காமை யார் தவக்குறைவோ?


சைவத்தின்பிரகாரம் திருமால் இருவகையினர். ஒருவர் சம்புபட்சம்.சிவபெருமானே எடுக்கும் திருமால் வடிவம்மதுரைப்பிராட்டியை எம்பெருமான் திருமணம் செய்துகொள்ளும்போது திருமால் தம் ஆணவத்தினாற் வரமுடியாதுபோகவே, சிவபெருமான் திருமால் வடிவெடுத்து மதுரைப்பிராட்டியை மகிழ்வித்தார் என்னும் புராணச்செய்தி இதற்கொரு உதாரணம். மற்றையது ஆன்மாக்கள் பெறும் திருமால் பதவி. இது அனுபட்சம் எனப்படும் . இத்திருமால்கள் தாம்பெற்ற சாபத்தினால்(வினையினால்) பத்து அவதாரங்கள் எடுக்கவேண்டியதாயிற்று என்பதுவே சைவக்கொள்கைஇதனைச் சிவஞானசித்தியாரிற் காண்க. மேலும் நரசிம்மர் இரண்யவதத்தின் பிறகு ஆணவம் கொண்டதுவும், அதுபோற் மச்சம்,கூர்மம்,வராக வடிவங்கள் திருமால் எடுத்தபோது அவ்வடிவங்களும் ஆணவம் கொண்டதும் புராணங்களால்  தெரிவதாகும். இவற்றை அடக்க சிவபெருமான்  சரபேசுவரர்,கூர்ம சம்காரமூர்த்தி,மச்ச சம்காரமூர்த்தி, வராக சம்கார மூர்த்தி முதலிய வடிவங்களை எடுத்ததுவும் சிவமூர்த்தங்களின் புராணச்செய்திகளாகும்வேதங்களை மீட்ட திருமால் சைவசமயப் பிரகாரம் அனுபட்சத் திருமால். அவர் ஆணவத்தால் தன்னிலையிழந்தபோது அவரை அடக்கியது சிவபெருமான்.

அனுபட்சத் திருமால் காத்தற்தொழிலைச் செய்வதே சிவபெருமானின்கருவியாக நின்றேயொழிய தாமாக அல்ல. சிவபெருமான் அதட்டிக்க அனுபட்சத்திருமால் அசைவதுதான் சைவம்சொல்லும் திருமாலாகும்ஸ்மார்த்தமதத்தாரின் ஹரிஓம் கதையினைச் சைவர்களும் கைக்கொள்ளின்,

கருவியை பாராட்டிஅதட்டித்து அருளும் மகாகாரணனை மறந்த பாவம் கூடாதா?
அழகிய வதனம் என்பதாற் வதனத்திற்கு சிறப்புண்டாகும். ஓம் என்பது பிரணவம். அப்பிரணவத்திற்கு ஆணவவயப்படும் பிறந்து இறந்து உழலும் ஆன்மாவாகிய அனுபட்ச(அவதார)த்திருமாலால் பெருமையுண்டாகுமா? ஸ்மார்த்தமத மரபை சைவத்துள் நியாயம்செய்ய எடுத்தாண்ட பிரமாணம் சிவபரத்துவத்துக்கு மட்டுமல்ல, ஓம் என்னும் பிரணவத்திற்கே உவப்பாகவில்லை.


தொடரும்:பாகம் 2

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கோப்பாய் சிவம் அவர்களின் கண்டனமும் எம் மறுப்புரையும் பாகம் 1"

Post a Comment