"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, April 22, 2020

கோப்பாய் சிவம் அவர்களின் கண்டனமும் எம் மறுப்புரையும் பாகம் 2

7) /////திருமுறை பற்றிய குற்றச்சாட்டு பல காலத்திற்கு முந்தியது. இப்போது தொண்ணூறு வீதமான ஆலயங்களில் திருமுறை ஓதிய பின்னரே ஆசீர்வாதம் சொல்லப்படுகிறது. ஒரு சிவாசாரியர், ஆசீர்வாத வசனத்திலே ஆசீர்வதன, திராவிட ஸ்தோத்தர என வருவதால் முதலில் ஆசீர்வாதம்தான் என வாதிட்டபோது நான் அந்த ஆசீர்வாதம் இக்காலத்தில் யாரோ இயற்றியது எனக்கூறி அவரோடு எதிர்வாதம் புரிந்து அகோர சிவாசாரியர் பத்ததி வாக்கியத்தை எடுத்துரைத்து மாற்றியிருக்கிறேன்.////


தங்கள் கருதால் மகிழ்ந்தோம். ஆனால், எம் கேள்வி யாதாயின் சைவாலங்களினுள் கத்தோலிக்கரோ மௌலவிகளோ பூசைசெய்வதில்லை. பிறகு அகோரசிவாச்சாரியார் பத்ததியிற் திருமுறைகள் ஆசீர்வாதத்திற்கு முன்னென்று இருக்க, அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்கள் போன்ற ஆகமசீலர்கள் வாழ்ந்த நாட்டில் எங்ஙனம் இவ்வழமை வழக்கொழிந்து தங்கள்போன்றோருக்கு "உண்மையை எடுத்துரைக்குமாறு"ஓர் சூழ்நிலையை உண்டாக்கியுள்ளது?
ஸ்மார்த்தமதத்து கொள்கையான சமஸ்கிருதம் தேவபாஷை, ஏனையவை நீசபாஷை என்னும் மூடப்பழக்கம்  சைவத்தினைத் தாக்கியதனாற்தானே  ஆசீர்வாதத்திற்கு பிறகு தமிழென்னும் இழிநிலை ஏற்பட்டது. சைவத்தில் இருமொழியும் சிவனால் அருளப்பட்டதென்னும் கொள்கையிருக்க, ஆசீர்வாதத்திற்குப் பிறகென்று துரத்தியது யார்ஸ்மார்த்தமதத் தாக்கம் இலங்கை சைவாலயங்களின் பூசைக்குள் புகுத்தியது கிருஷ்தவ இஸ்லாமியர் வேலையா என்ன?
தங்களின் பதிலே ஸ்மார்த்தமதத்தாக்கம் சைவத்துள் ஊடுருவியுள்ளதென்னும் கருத்திற்கு சான்றாவதாற் மேலதிகமாய் உரைக்கத்தேவையில்லை.
90% ஆலயங்களென்ற தங்கள் கருத்து மிகைப்படுத்தல். 10 வீதமோ, 90 வீதமோ எதுவாயினும் நூறுவீதமாக்கித்தர தங்கள் பணியை எதிர்பார்க்கின்றோம்

8) 
ஆதிசங்கரர் பெருமைக்குரியவரா?

A. பிராமண வர்ணத்தாருக்கு மட்டுமே முத்தியென்றார்.B. பெண்களுக்கு முத்தியில்லை என்றார்.
C. காமக்கலையைக் கற்கவேண்டிய தேவையேற்பட்டபோது, அரசனொருவனின் உடலிற் கூடுவிட்டுக்கூடுபாய்ந்து அந்த அரசனின் மனைவியை அனுபவித்தார். இது மாற்றான் மனைவியை இரகசியமாய் அனுபவித்த பஞ்சமாபாதகத்தில் ஒன்று. திருமூலர் இடையனின் உடலில் புகுந்தபோதும், அந்த இடையனின் மனைவியாரிலிருந்து விலத்தி வாழ்ந்தார். 
அன்பே
சிவம் என்ற திருமூலருக்கும் மேற்கூறப்பட்ட ஆதிசங்கரருக்கும் ஏணிவைத்தாலும் எட்டாப்பொருத்தம். ஆதிசங்கரரை சிவபெருமானின் அவதாரம் என்பர் ஸ்மார்த்தமதத்தார். சிவபெருமான் பிறப்பிலி என்பது சைவசமயம். எனவே,  சிவபெருமானின் அவதாரமென்று ஸ்மார்த்தர் இட்டுக்கட்டியதுபோன்று  ஏனைய ஆதிசங்கரர் சார்ந்தகதைகளும் இட்டுக்கட்டிய
தென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம்.

சுவாமி விவேகானந்தர் இந்த ஆதிசங்கரை அன்பில்லாதவர் என்று கூறியுள்ளமையை நோக்கின் அனைத்தும் விளங்கும்.

பெரியவாள் என்று அவர் பத்தரால் கூறப்படும் சந்திரசேகர சங்கராச்சாரியார் புனிதரா?

1. திருவானைக்கா,திருஞானசம்பந்தர் மடம் முதலிய பல்வேறு சைவாலயங்களைக் கபளீகரம் செய்த அவருடைய முன்னோர்களின் பிழைகளை மறைத்து, தமது நிர்வாகத்திலேயே பேணினார். இன்றும் அவ்வாறே.

2.  அவரை விழாதே இவரை விழாதே என்று தடுத்த மகான் என்று சிலர் புல்லரிக்கின்றார்கள். பிரிதொரு சமயத்தின் கோயிலை எங்ஙனம் நிர்வாகம் செய்யமுடியும்? தாமே தம் தெய்வத்தின்குரலில் "தாம் சைவசமயத்தவர் அல்லர்" என்று கூறிவிட்டு, சைவாலயங்களை நிர்வகித்தல் எந்தவிதமான ஒழுக்கம்?
ஆகா, அவையெல்லாம் புனைகதைகளாம். ஆதிசங்கரருக்கு சூட்டியதுபோன்ற புனைகதைகளே!

3.புனிதரென்றால், ஒருவருணத்துக்கே முத்தியென்றும் பெண்களுக்கு முத்தியில்லையென்றும் கூறுகின்ற மனித மாண்புக்கு மாறான சமயத்தை ஒழுகியிருப்பாரோ?

"மாலறநேயம்" என்னும் சிவஞானபோதத்தின் 12ம் சூத்திரத்தின் சொற்பதத்துக்கு பொருளுணர்ந்தார்க்கு அன்பில்லாதார் செய்யும் சிவபூசைக்கு எப்பலனும் இல்லையென்பதும் பெறப்படும்.

இங்குசிலர் காஞ்சி சங்கராச்சாரியார் சிவாகமப்பாடசாலைகள் நடத்துகின்றார் என்று சிலாகிக்கின்றார்கள். கிருஷ்தவர்கள் சிவஞானபோதம் நடத்தியதும், கிருஷ்தவப்பாடசாலைகளில் சைவப்பாடம் போதிக்கும் வழக்கமும் உலகம் இலகுவிற் தெளிந்த ஒன்று. ஸ்மார்த்தப்பாசத்தாருக்கு இதே கேட்டையே சங்கரமடம் செய்கின்றதென்ற உண்மை விளங்கவில்லையெனினும், ஈழத்து அந்தணர் பலர் ஆதிசங்கரரையும் பெரியவாளினையும் தம்குருநாதராய்ப் போற்றுவதிலிருந்து இவர்களின் சிவாகமப்பாடசாலையின் நோக்கம் அறிவுடையாருக்கு விளக்கமுறும்.

9) //// சைவ காவலர் ஐந்தாம் குரவர் ஆறுமுக நாவலரின்/////

////ஆறுமுக
நாவலர் சாதி விடயத்தில் என்ன கொள்கை உடையவராயிருந்தார் என்பது பலருக்கும் தெரியும்………………………..
ஆனால், நாவலரது சில எழுத்துக்களை ஆதாரமாகக்கொண்டு அவர் சாதிமுறைக்கு எதிரானவர் என புதிய வடிவம் கொடுத்து/////////

நாவலர் பெருமானை ஐந்தாம் குரவர் என்று கோப்பாய் சிவம் அவர்கள் ஏற்றிருக்கின்றார். மகிழ்ச்சி.

அதேசமயம், நாம் அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்களும், கணிதமேதை சுந்தரலிங்கம் அவர்களும் "பிற்படுத்தப்பட்டோரை ஆலயத்தினுள் நுழையவிடுதல் கூடாது" என்றுநின்ற கோட்பாட்டைச் சுட்டிக்காட்டியதும்
எமக்கு அந்தணவிரோதியாக விம்பம் அணிவிக்க, “கணிதமேதை சுந்தரலிங்கம் அவர்களை நாம் சுட்டிக்காட்டினோம்” என்னும் செய்தியையே இருட்டடிப்புச்செய்ததோடு மாத்திரமல்லாது,
நாவலருக்குப் பிற்காலத்தியர் செய்த தவறுகளை நியாயம்செய்ய நாவலரை நிந்திக்கின்றார்.


நமக்கு
சைவநீதி ஒன்றுதான் முதன்மையானது. வேளாளக்குடியாகிய சுந்தரலிங்கனாரும் ஒன்றுதான். அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்களும் ஒன்றுதான். நாவலர் மாணாக்கரும் ஒன்றுதான். நாவலர் சாதிகள் பிறப்பாலில்லை என்று தெளிவாய்ச் சொன்னபிறகு, அவருக்கு பிற்காலத்தியவர்களான இவர்களெல்லாம் அக்கோட்பாட்டினை வினைத்திறனாகக் கொண்டுபோகாது பின்னோக்கி நகர்த்திய தவறினைச் செய்தவர்களாகும்.  நாவலரினை நியாயப்பக்கம் நிறுத்துவதற்கு சில எழுத்துக்களேனும் ஆதாரமாய் இருக்க, ஏனையாருக்கு இல்லையென்பது கோப்பாய் சிவம் அவர்களுக்கு உவப்பாகவிருக்கவில்லை. வர்ணபாசம் சமயஞானத்தினைத் தடைசெய்கின்றது இங்கு வெளிப்பட்டுநிற்கின்றது.

இலங்கை
சைவநெறிக் கழகத்தினாற் சிவபூசை முறைகளிற் சித்தாந்த விளக்கம் என்று சிவத்திரு.ஈசான சொர்ணலிங்க தேசிகர் எழுதிய நூலுக்கு, அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்கள் விருது கொடுத்து மகிழ்ந்தோம். அந்தணசமூகம் அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்களை கொண்டாட மறந்துநிற்கும் இக்காலத்திற், இலங்கை சைவநெறிக் கழகம் இச்சாதனையைச் செய்திருந்தது. இனிமேலும் இச்சாதனையை நாம் தொடர்வோம். நல்லனவற்றை சைவசமயத்தார் எவர்செய்தாலும் கொண்டாடும் வழக்கம் நமக்குரியது. அவர்களின் குறைகளை "கால இடர்"என்று கடக்கவும் வலுவுள்ளது.


ஆனால், தம்சாதியர் தவறிழைத்தால் மூடிமறைப்பதும் அடுத்தவர் செய்தால் தோலுரிப்பதும் போன்ற அநாகரீகம் நம்பால் இல்லை.. நமக்கு கணிதமேதை சுந்தரலிங்கமும் அவ்வாறே. நாவலர் மாணாக்கர் மட்டுமல்ல, நாவலரையும் "சாதிகள் பிறப்பால் அல்ல"என்ற கருத்தினை முன்வைத்திருக்காவிடின், அச்சுவேலிக்குமாரசுவாமிக்குருக்களுக்கு வழங்கிய இடத்தையே வழங்கியிருப்போம்.

சாதிகள் பிறப்பால் அல்ல என்று கூறிய ஒருவரை, கூறாதாருடன் சமப்படுத்துவது சமயத்திலும் சாதியதிகம் என்னும் உள்ளுணர்வு ஊந்துதலால்!!! இத்தகைய உள்ளுணர்வைக்கொண்டவாறு "அன்பும், அடக்கமும்தான் சைவத்தின் முதற்படி. அதுவும் சமயப் பொறை என்பது நமது பெரும் சொத்து "என்று வகுப்பெடுத்தல் கல்லாதார் கற்ற கவிபோலாம்.


10)  
திருமால் வழிபாடு குறித்த விமர்சனம்

சைவ உபாகம நூலாகிய சிவதருமோத்திரத்தில், சம்புபட்சமாக திருமாலை வழிபட்டால் வைகுண்டம் வாய்க்குமென்றுள்ளது. அவ்வைகுண்டம் சைவ போகமுத்தி உலகேயாம்.  இலங்கையிற் சைவர்களென்றாலே திருமாலைச் சம்புபட்சமாக வழிபடுகின்றவர்களேயாம். இதனை பறாளாய் முருகன் ஆலய வரலாற்று நூலிற் காண்க. இக்காலத்திற் நாமதாரணம் செய்து, வைணவ ஆகமங்கள் அறியாமையாற் புகுத்தப்பட்டுள்ளனவேயொழிய, ஆதியிற் அவை முழுமையான சைவாகமக்கோயில்களேயாம்.போர்த்துக்கேயர் இடிக்கமுதற் அங்ஙனம்தான் விளங்கியதென்பதை குறித்த பறாளாய் முருகன் ஆலய வரலாற்று நூலிற் காணலாம்.

நாம் சம்புபட்சம் என்று எழுதியுள்ளதன் பொருள் கோப்பாய் சிவம் அவர்களுக்கு விளங்கவில்லைப்போலும். சம்புபட்சமென்றால் சிவனே திருமாலாய் விளங்கும் வடிவம்.  ஹரிஓம்,சந்தியாவந்தனம் போன்றவை ஸ்மார்த்தமத திருமாலைக் குறித்தது. அத்திருமால் அனுபட்சம்.
சைவத்திலும்
திருமால் உண்டு. வைணவத்திலும் திருமால் உண்டு. ஸ்மார்த்தமதத்திலும் திருமால் உண்டு. ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் வேறுவேறு. இவையெல்லாம் அடிப்படைச் சமய அறிவுக்கு அத்தியாவசியமானவையாகும்.

11) 
தாங்கள் பிறப்புவழியிற் பார்க்கின் மகாசைவப் பிராமணரும் பூசைசெய்யலாம் என்று காட்டிய பிரமாணம் ஆத்மார்த்த பூசைக்குரியதுவடநாட்டுக்கோயில்களில் இப்படி பூசகர் ஒருவர் பரார்த்தத்துக்கும், அதுபோல் அடியவர் தாமே சென்று ஆன்மார்த்தபூசையையும் மேற்கொள்ளும் வழக்குண்டு.
அயன்முகத்திற் தோன்றிய அந்தணர் அர்சித்து
பயன்டைதற்கு  இட்டலிங்கம் பாங்கு - குறள் 436

பாங்கில்லை தீண்டப் பரார்த்த மவர் தீண்டிற்
தீங்குலகுக்குக் காமென்று தேறு
437


மகாசைவப் பிராமணர் ஆத்மார்த்தபூசையே செய்யமுடியும். பரார்த்தபூசை செய்தால் நாட்டிற்கு கேடு என்கின்றது சைவசமயநெறி.  (பிறப்புவழியை நம்புவார் பொருட்டு இப்பதில்.).
இதுவரைகாலமும்
கோயில்களில் பூசைசெய்வதென்றால் சைவமக்கள் சைவக்குருக்களிலும் பிராமணக்குருக்கள்தான் தேவை என்பர்.
பிறப்புவழியிற் பொருள்கொண்டால்  பிராமணக்குருக்களில்,
1)
சிவப்பிராமணர்
2)மகாசைவப்பிராமணர்
3) ஆதிசங்கரரை வணங்கும் ஸ்மார்த்தமதப் பிராமணர்முதலியோர் உள்ளனர் என்னும் செய்தி நம்மக்களிடம் சென்று சேரவேண்டும்.
இதிற், சிவப்பிராமணர் மாத்திரமே ஆகமப்படி பிறப்புவழியிற் பொருள்கொள்ளின் கோயிற் பூசைக்குரியார் என்னும் தெளிவை நம்மக்கள் பெறவேண்டும். அதிலும், ஆதிசங்கரரைக் குருவாக ஏற்றுக்கொண்டவர்கள், சைவசமயத்தவர் அல்லர் என்பதால் அவர்களுக்கு கோயிலில் பூசை உரிமை ஆகமப்பிரமாணம் இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்தவேண்டும்.

எமக்கு
கோத்திரமும் குலமும் கொண்டென்செய்வீர் என்ற அப்பர்வாக்கிற்தான் நம்பிக்கையுண்டு. எனினும், இவற்றின் பொருட்டே கோத்திரம் நாடவேண்டியதாயிற்று. இது முள்ளினை முள்ளால் எடுப்பதுபோல் என்க. சிவபெருமானைத் தீண்டிப்பூசிப்பதற்கு கௌசிக,காசிப,கௌதம,பரத்வாஜர்,அத்திரி(அகத்தியர்) கோத்திரத்தாருக்கே உரிமையுண்டென்பதால், கோத்திரம் என்பது சிவபெருமானின் உபதேசப்பரம்பரையென்பதால், அது ஞானப்பரம்பரையே என்று தெளிவதால் ஞானமுடையாருக்கு கருவாசக் கோத்திரம் முதன்மையா? சிவபெருமானின்பால் பெறும் ஞானத்தீட்சையால் விளையும் கோத்திரம் முதன்மையா ? என்பது புலனாகும். சிவபெருமானின் முகத்தில் (பதியிலிருந்து) குறித்த ஐந்து முனிவர்களும் தோன்றினர் எனின், பதியிலிருந்தே பசுக்கள் தோன்றின என்னும் சித்தாந்த முரணுக்கே இட்டுச்செல்லும். எனவே, ஆகமங்களின் ஞானபாதம் அறிந்தார் கிரியாபாதம் கூறும் உட்பொருளை உணர்வர்.
ஸ்மிருதிகளின் தரம் ஏற்கனவே விளக்கப்பட்டுவிட்ட்டதால் அவைகொண்டு கோத்திரத்தை விளக்கல் பயனில்லையாம்.

12) சைவசமயத்துக்குருமார் சைவக்குருமார்  என்றுதானே அழைக்கபடவேண்டும் பிராமணக்குருக்கள், இந்துக்குருக்கள் என்றெல்லாம் அழைக்கபடலாயினதேன்? சைவக்குருக்களிலிருந்து வேறானோர் என்னும் வர்ணப்பாசத்தினைக் காட்டிடத்தானே?

சைவம் சிவனுடம் சம்பந்தமாவது - திருமந்திரம்
வர்ணமா? சமயச்சொல்லா? என்னும்போது வர்ணப்பக்கம் சாய்ந்தமையினாற், பிறப்புவழி சிவப்பிராமணர் அரிது (தங்கள் விகிதாசாரக் கூற்றுப்படிதான்) என்பதை நிறுவவேண்டியதாயிற்று. சைவமக்கள் பிராமணக்குருக்கள் என்றால் பூசைசெய்யலாம் என்று எண்ணிய அறிவீனத்தினாற்தானே, சைவக்குருக்கள் என்ற பெயரினை உவக்காது புறந்தள்ளினீர்கள்!!! எமக்கு சைவசமயம் என்னும் பெயரில் பத்தியும், ஸ்மார்த்தமத வழக்கங்கள் இன்றியும், சிவநெறியிற் கற்போடும் நின்று பூசைசெய்யும் எவரேனும் எம்வழிபாட்டுக்குரியாரேயாம். எனவே அத்தகையாரிடம் எக்கேள்வியும் எழுவதில்லை. அவர் பூர்வீகம் ஸ்மார்த்தமதமா இல்லையா என்பதுகூட எமக்கு அநாவசியமேயாம்.

13) முடிவுரை:- 1
ஒரு மருத்துவர் உருவாகவேண்டுமென்றால் ஆறு ஆண்டுகள் கடினப்பட்டு படிக்கவேண்டும். பல பரீட்சைகளே எழுதவேண்டும். அனடொமி,பிசியலோஜி,பார்மகலோஜி போன்ற பாடங்களை தெரியாது ஒருவர் மருத்துவர் ஆகமுடியாது. அப்படியொருவர் உருவானால் அவரால் விளையும் பாதகம் உலகமறியும்அதுபோல்குருக்கள் ஆகவேண்டுமென்றால் சிவாகமங்களைப் படித்திருக்கவேண்டும். ஆனால், சிவப்பிராமணக் கோத்திரங்கள் ஐந்தினையும் நாம் கூறித் தெரிந்துகொண்டபின்னும், ஆகமங்களை ஏற்கமாட்டேன் என்று கூறுகின்ற அளவுக்கு நம்சமயக்குருமார். இதனாலேயே சைவசமயம் வெறும் கிரியைச்சமயமாய் ஒடுங்கியுள்ளதைத் தெளிந்து, சைவாகமக்கல்வியையும் கற்போடு அதையொழுகும் நெறியையும் வளர்த்தெடுக்கவேண்டும் என்பதுவே எம் அவாஇல்லை; சேற்றுக்குள் வீழ்ந்தேயிருக்கப்போகின்றோம் என்றால், அது அவரவர் விருப்பம்.ஆனால், சைவப்பெருஞ்சமயம் அவர்களைக் கடந்து ஏளனமாய்ப் பார்த்தபடி வளரும்.

முடிவுரை 2 -  எம்மை அந்தணவெறுப்பாளனாக திட்டமிட்டுச் சிலர் செய்யும் பிரச்சாரங்களைக் குறித்துக் கவலைப்படப்போவதில்லை. மருத்துவன் ஒருவன் மருத்துவனாக இருக்காவிடத்து சமூகம் பழிக்கும்.அதுவே சமயகுருமார் என்னும் நிலையை உடையாருக்கும்.  மருத்துவமனையிற் பௌத்தகுரு,கத்தோலிக்ககுரு என்போர் பெறும் குருத்துவப்பயன்களை நம்பூசகக்குருமார் பெறவேண்டும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிற் எமது விடுதியிற் நடைமுறையும் படுத்தினோம். எமது வலக்கரத்தால் பூசகருக்கு உதவிக்கரமாய் நின்ற செய்திகள் எம் இடக்கரத்துக்குத் தெரியாதென்பதால், அவற்றையெல்லாம் எழுதி எமது தரத்தினைக் குறைத்துக்கொள்ளவிரும்பவில்லை.


முதற்பாகம் படிக்க இங்கே சொடுக்குக.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கோப்பாய் சிவம் அவர்களின் கண்டனமும் எம் மறுப்புரையும் பாகம் 2"

Post a Comment