"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, April 22, 2020

சிவஶ்ரீ VS பிரம்மஶ்ரீ?

(23 ஜீலை 2019ம் நாள் முகநூலில் நாம் எழுதிய கட்டுரை.தற்போது இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.)

இலங்கையில் அந்தணர் தம்பெயரைப் பாவிக்கும் போது பிரம்மஶ்ரீ என்பது பெரிதும் புழக்கத்திலுண்டு.பெரும்பாலான குருக்கள்மாரும் ஏனைய பூசகர்களும் இங்ஙனம் பெயருக்கு முன்னால் இட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர்களாகவுள்ளனர். ஆச்சாரிய அபிடேகம் செய்துகொள்ளாதவர்கள், தாம் சிவஶ்ரீ(சிவத்திரு) என்று போட்டுக்கொள்ள முடியாதென்பதால், பிரம்மஶ்ரீ போட்டுக்கொள்வதாக கூறுகின்றனர்.
ஏனைய பூசகர்பணி செய்யாதவரும் பிரம்மஶ்ரீ போட்டுக்கொள்வதற்கு இதையே விளக்கமாக உரைக்கின்றனர்.
1) இறைவன்(பிரம்மம்) என்பது பொதுப்பெயர்.
சிவம் என்பது சிறப்புப் பெயர். எதற்கு மங்கலமும் திருவருட்சிறப்பும் மிகுதியாய் உண்டென்றால், ஒப்பற்ற தன்மையில் மிகுந்து உயர்ந்ததாய் இருப்பது சிவம் என்னும் சொல்லுக்கேயாகும்.
" சிவனெனும் ஓசை அல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே" என்கிறார் அப்பர் பெருமான்.
ஆயிரம் பேருகந்தானும் ஆரூர் அமர்ந்தவம்மானே - என்று அப்பர் பெருமான் கூறுவதிலிருந்து, பிரம்மம்(இறைவன்) முதலிய பலபொதுப்பெயர்களும் எம்பெருமானுக்கு உகந்ததேயாயினும், சிவம் என்பது நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்திற்குரியது. '' சிவ'' என்பது காரண பஞ்சாட்சர மந்திரம். பிரம்மம் என்னும் சொல்லிலும், சிவனென்னும் சொல் மந்திரமாகவே விளங்கும் சிறப்பை உடையது.
"கற்றுணைப் பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" - திருநாவுக்கரசர்
"நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க" - மாணிக்கவாசகர்
சிவாயநம என்று சிந்தித்திருப் போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" - ஔவையார்.
இப்பிரமாணங்களுக்கு அமைவாக தெளியக்கூடியது யாதாயின், சிவஶ்ரீ(சிவத்திரு) என்பதற்குப் பதிலாக பிரம்மஶ்ரீ என்று இட்டுக்கொள்வது, கனியிருக்க காய் கவர்ந்த நிலைக்கு ஒப்பாவதோடு, சிவநிந்தனையும்கூட!
2) ஆச்சாரிய அபிடேகம் செய்துகொள்ளாத பூசகப்புனிதர்கள், தமக்கு சிவஶ்ரீ(சிவத்திரு) இட்டுக்கொள்ளக்கூடாதென்பது மயக்கமேயாம். சிவஶ்ரீ(சிவத்திரு) என்பது சிவபெருமான் எழுந்தருளுமாறு புனிதம் காப்போன், சிவபெருமானே மெய்ப்பொருள் என்பதை தெளிந்தோன் முதலிய கருத்துகளை உணர்த்தவேயாம்.
சமயதீட்சை, விசேடதீட்சை எடுத்து ஆன்மார்த்த சிவபூசை செய்யும் நல்லார் அனைவருக்கும் உகந்ததே சிவஶ்ரீ(சிவத்திரு).
ஆச்சாரிய அபிடேகம் செய்யப்பெற்றோர் குருக்கள் என்னும் பதத்தினைப் பயன்படுத்துவதால், குருக்கள்மாருக்கும் குருக்கள் அல்லாத ஏனைய பூசகர்களுக்குமிடையில் எந்தக்குழப்பத்தையும் சிவஶ்ரீ(சிவத்திரு) பாவிப்பது ஏற்படுத்தாது.
3) ஸ்மார்த்த மதத்தினை ஒழுகும் பிராமணர் முதலியோர் பிரம்மஶ்ரீ என்று இட்டுக்கொள்வதால், பிரம்மஶ்ரீ என்று இட்டுக்கொள்ளும் சைவ அந்தணரை ஸ்மார்த்தராகச் சைவர் குழம்பும் நிலையும் இப்பிரம்மஶ்ரீயினால் உண்டாகும்.
பிரம்மஶ்ரீ என்பது பிரம்மத்தை உணர்ந்தோன் என்னும் பொருளை வெளிப்படுத்தி நிற்கும். பிரம்மஞானம் என்பது சைவசமய சுத்தாத்துவிதம் தவிர்ந்த ஏனைய சங்கர அத்வைதம் முதலியன, சைவசமயப்பிரகாரம் பிரம்மஞானம் ஆகா.எனவே சங்கர ஸ்மார்த்தமதத்தார் தம்மை பிரம்மஶ்ரீ என்பது சைவரைப்பொறுத்தமட்டில் அரைகுறை வைத்தியப்படிப்பு படித்து, ஐயம் திரிபுகளின்றி கற்காது குறையில்விட்டவர் தமக்கு மருத்துவர் என்று பட்டம்சூட்டிக்கொள்ளலை ஒத்தது.
சைவசமயத்தாருக்கு இச்சொல் தேவையோவெனின், ஏற்கனவே கூறியவாறு பிரம்மம் சிவஞானமேயென்று தெளிந்தபிறகு காரண பஞ்சாட்சரமாகச் சிவஶ்ரீ(சிவத்திரு) இருக்க, பிரம்மஶ்ரீயைப்பற்றி நிற்பது சிவநிந்தையும் ஸ்மார்த்த அறியாமையுமே!!!
4)சத்தியகாமன் பிராமணன் என்று வைதீகம் ஏற்பதாலும், சுவாமி ஞானப்பிரகாசரை பிராமணனென்று ஏற்றுக்கொண்ட அண்மைய வரலாற்றுப் பிரமாணத்தாலும், கேரளநாடு முதலிய பல்வேறு இந்தியப்பூர்விகமுடைய ஸ்மார்த்தவம்சாவழியுடைய இலங்கைப் பூசகர், குருக்கள் முதலியோரை ஈழத்துச் சைவசமூகம் எக்கேள்வியும் எழுப்பாது. எனவே, சிவபெருமானால் தீட்சிக்கப்பட்ட கோத்திரங்களில் ஒன்றை தீட்சைவழி தேர்வுசெய்து, சிவப்பிராமணராகவே பூசைசெய்க. சைவசமூகம் மகிழ்வுறும். ஆனால், ஸ்மார்த்தர் என்னும் நிலைபற்றியே வாழவிருப்பின், சைவக்கோயில்களில் பூசைசெய்வதை கைவிடுதலே அறம். உரிமையில்லாத ஒன்றில் உரிமை எடுத்தல் தவறாகும். ஒரு இஸ்லாமிய இமாம், தேவாலயத்தில் பூசையைச் செய்தலுக்கு ஒப்பான காரியத்தை இந்துமதமென்ற ஒற்றைப்படுத்தல் ஸ்மார்த்தமதத்தார்க்கு சைவசமயத்துள் ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது.
அண்மையில் கோயிலொன்றில் அருமையாக பண்டிதர் மு. கந்தையா பெருமானார் கூறியவாறான, சைவசமய நெறிக்கு அமைந்த பூசையைப் பார்த்து, மெய்யுருகி நின்றேன். அக்குருக்களுடன் பூசைமுடிந்தபிறகு அவரின் பத்திச்சிறப்பையும் பூசைச்சிறப்பையும் கூறி மகிழ்ந்தபோதுதான், அவர் தாம் கேரளநாட்டு ஸ்மார்த்தப்பாரம்பரியத்தை உடையவரென்றும், ஆனால் தமது தந்தையார் சிவப்பிராமணருக்குரிய பூசைகளையே மேற்கொள்ளவேண்டுமென்று தமக்கு போதித்ததாகவும் கூறி, தாம் சிவப்பிராமணராகவே வாழ்வதாகவும் கூறினார். ஆலயங்களினுள் எவர்காலிலும் விழேன் என்னும் கொள்கையை மனதால் மறந்து, அவர்பாதம் தொட்டு வணங்கினேன். இவரைப்போல் ஏனைய ஸ்மார்த்தமதப் பரம்பரையினரும் நேர்மையோடு நடந்துகொண்டால், சைவசமயம் தழைத்தோங்கும்.
5)சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்னும் நாற்பாதங்களில் ஒன்றினை சிவபூசையாகக்கொண்டொழுகும் நல்லாரே சிவஶ்ரீ(சிவத்திரு) இட்டுக்கொள்ளலாம் என்பதால், பிரம்மத்தை உணராதாருக்கு பிரம்மஶ்ரீயும் பொருத்தமில்லையென்பதால், ஏனையவர் பிறப்பால் யாராயினும் திரு /திருவாளர்/திருமதி/செல்வி என்று இட்டுக்கொள்வதே சால்புடையது. அங்ஙனம் இன்றி, தமக்கு சிவஶ்ரீ(சிவத்திரு) /பிரம்மஶ்ரீ என்று இட்டுக்கொள்வது நாடிபிடித்து இதயத்துடிப்பை உணரமுடியாவொருத்தன் மருத்துவனென்று கூறிக்கொள்வதற்கு ஒப்பாகும் என்பதோடு, சிவநிந்தைக்குரிய பாவமும் சேரும்.
6)சிலர், விஷ்ணுஶ்ரீ, ஐயப்பன்ஶ்ரீ என்றும் பாவிக்கின்றனர்.எல்லாம் சிவன் என்னும் ஞானம் எய்திய சிவப்பிராமணர், இங்ஙனம் பாவித்தல் சிவநிந்தையும் அறியாமையுமேயாகும். பூசைசெய்யும் ஆலயத்திற்கு ஏற்ப தம்முன்னால் இட்டுக்கொள்ளவேண்டிய சிவஶ்ரீயை கழட்டுவதும் பூட்டுவதுமாக இருக்கும் அறியாமையை,சிவநிந்தையை
என்னென்று கூறுவது?
7)ஒருசொல்த்தானேயென்று சிலர் நினைக்கலாம்.இதில் என்ன.... எல்லாம் ஒன்றுதானேயென்றும் சிலர் நினைக்கலாம். ஆனால், இந்தவொரு சொல்த்தான் நம்மையும் நம்பண்பாட்டையும் திருத்துவதற்கும் மீட்பதற்கும் நாம்செய்யவேண்டிய முதற்படியான மாற்றம்.
" சிவனெனும் ஓசை அல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே"
-அப்பர் பெருமான்
சைவசமயமாய் எழுவோம்!
சைவசமயமாய் எழுவோம்!
சைவசமயமாய் எழுவோம்!
🙏🙏🙏எல்லாம் திருவருட்சம்மதம் 🙏🙏🙏

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சிவஶ்ரீ VS பிரம்மஶ்ரீ?"

Post a Comment