"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Friday, December 28, 2012

ஈழத்திருநாட்டில் சம்புபட்ச நாராயணனின் சொர்க்கவாசல்!

மாலறியா நான்முகனும் காணா மலையினை – திருவெம்பாவை ஒருவ ராயிரு மூவரு மாயவன்  - அப்பர் தேவாரம் (திருக்கடம்பூர்)
ஓருவாயினானை மானாங்காரத்து ஈரியல்பாய் ஒரு விண்முதல் பூதலம்  படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை - திருஞானசம்பந்தர் தேவாரம் (திருவெழுகூற்றிருக்கை)


என்னடா இது நாராயணனால் காணமுடியாத சிவபெருமான் என்று திருமுறைகள் துதிக்கின்றன. அதே திருமுறைகள் நாராயணனாய் இருப்பவன் சிவபெருமான் என்றும் துதிக்கின்றன! பெரும் முரணாயிற்றே!!!! 
ஏன் இப்படியொரு முரண்?
பார்த்திடுவோம்!

மூன்று மலங்களாகிய ஆணவம்,கன்மம்,மாயை ஆகியனவற்றில் கடைசி இரண்டும் பக்குவத்தால் அழிவுற்று ஆணவம் மங்கிநிற்கும் நிலையில், ஆன்மாக்கள் விஞ்ஞானகலர் எனப்படுவர். இவர்களில் ஆணவம் மென்மையாகக் காணப்படும்.

இந்த ஆன்மாக்கள் தாம்செய்த புண்ணியத்தின் பலனாக, பிரம்ம,விஷ்ணுக்களாகப் பதவி பெறுவர். இவர்கள் சிவபெருமானின் அதட்டித்தலால், தமது பதவிகளுக்குரிய தொழிலைப் புரிவர். இவர்களில் மங்கிநிற்கும் ஆணவம் சிலசமயம் மேலோங்கிவிடும். இதன் காரணமாகவே "நானே முழுமுதல்" என்ற சண்டைசச்சரவுகள் ஏற்பட்டுவிடுகின்றன.
இவ்வகையான ஆன்மாக்கள் பிரம்ம,விஷ்ணுப்பதவிகளை அனுபவிக்கும்போது, அவ்வகையான பிரம்ம,விஷ்ணுக்களை அணுபட்ச பிரம்ம,விஷ்ணு என்பர். அதாவது காரியேசுவரர் என்று அழைக்கப்படுவர்.  அணுபட்சம் என்றால் ஆன்மா தொடர்பானது என்று பொருள்ப்படும்.
சிலசமயம், சிவபெருமானே பிரம்ம,விஷ்ணுக்களாய் திருவடிவம் கொண்டு  படைத்தல்,காத்தல் தொழில்களைச் செய்வார். இவ்வாறு சிவபெருமானின் திருவடிவங்களாக விளங்கும் பிரம்ம,விஷ்ணுக்களை சம்புபட்சம் என்பர். அதாவது காரணேசுவரர் என்று போற்றப்படுவர். சம்புபட்சம் என்றால் சிவசம்பந்தமுடையது என்று பொருள்ப்படும்

அதுசரி, சொர்க்கவாசல் பற்றி இங்கு என்ன தொடர்பு?

ஈழவளநாட்டில் இரண்டு பிரசித்தமுடைய திருமால் ஆலயங்கள் உண்டு. ஒன்று இந்திரனின் சாபத்தைப் போக்குவதற்காக ஆமையாகத் தோன்றி கல் ஆமையாக நிலைபெற்று அருளாட்சி செய்யும் பொன்னாலை வரதராசப்பெருமாள் ஆலயம். மற்றையது சக்கரமாக தோன்றி அருளாட்சி செய்யும் வல்லிபுர ஆழ்வார் ஆலயம்.  பொன்னாலை வரதராசப் பெருமாள் ஆலயத்துக்கும் எங்கள் குடுப்பத்துக்கும் பண்டுதொட்டு தொடர்பு இருந்துவருகின்றமையால் என்னுடைய குழந்தைப் பருவந்தொட்டு சிறுவயதுவரை இக்கோயிலோடுதான் என்னுடைய சைவசமய ஆன்மீக வாழ்வு பிணைந்திருந்தது. இடம்பெயர்வுகளாலும் புலம்பெயர்வுகளாலும் இக்கோயிலோடு மானசீகத்தொடர்பையே பதின்வயதின் பிற்பகுதியிலிருந்து பேணவேண்டியிருந்தது. ஆக, ஒரு தசாப்தத்தின் பிற்பாடு கோயிற் சொர்க்கவாசல் பூசைக்கு சென்றிருந்தேன்.சொர்க்கவாசல் பூசையும் அன்றைய தேரோட்டமும் எளியேனின் பெரியம்மாவுடைய பூசை என்பதால், வெளிநாட்டிலிருந்து வந்த பெரியம்மாவுடன் சென்றிருந்தேன். பெரியம்மாவின் மூப்பின் சிரமம் காரணமாக என்னையே தெற்பை(தர்ப்பை) போட்டு பூசையை மேற்கொள்ளப் பணித்திருந்தார். பல்லாண்டுகளின் பிற்பாடு ஈழத்துப் பாரம்பரியக்கோயில் ஒன்றின் பூசையில் கலந்துகொள்ளும் பேறை எம்பெருமான் எனக்கு அளித்திருந்தமையைக் கண்டு பூரித்தேன்.

ஆலயத்தில் அர்த்தமண்டபத்தில் கைமணியைத் தந்து அடிக்கும்படி ஆலய அந்தணர் வேண்டியிருந்தார். நானும் கைமணியை அடித்தபடி அபிடேகத்தை பார்த்தவண்ணம் இருந்தேன். சம்புபட்ச திருமாலாகவே கண்டு மகிழ்ந்தவண்ணம் இருந்தேன். நான் அடித்துக்கொண்டிருந்த கைமணியின் பிடியில் சங்கரம் இருந்தது. திடிரென ஆலயத்து தலைவர் வந்து, "இந்தாரும் இதை அடியும்" என்று என்னிடம் இருந்த சக்கரக்கைபிடி போட்ட கைமணியை வாங்கிக்கொண்டு, நந்திச்சின்னம் கைபிடியில் பொறிக்கப்பட்ட கைமணியை என்னிடம் தந்தார்.என்னே அதிசயம்! ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது! சம்புபட்ச திருமாலாய் நான் பொன்னாலையத்தில் நாராயணனைப் பார்த்து உள்ளத்தில் அவ்வண்ணம் உருவகித்து வழிபட்டுக்கொண்டிருந்தபோது, நந்திக்கைபிடிபோட்ட கைமணியை என்னிடம் அளித்த அந்த அருட்செயல் எம்பெருமானின் திருவருட்சம்மதம் என்றுதான் சொல்லவேண்டும்!!!!
பொன்னாலயத்தில் நடைபெற்ற பூசைகளின் போது, அந்தணர் ஓதிய மந்திரங்களை நன்றாக செவிமடுத்தவண்ணம் இருந்தேன்.

ஓம் சங்கரப் பிரியாய நம" என்று அந்தணர் சொல்லும்போது சிவதீட்சை பெற்று கிருஷ்ணர் செய்த சிவபூசையும், இராமர் இராமேசுவரத்தில் செய்த சிவபூசையும்,தனது கண்ணையே தாமரைப்பூவாக பிடுங்கி சிவபெருமானுக்கு திருமால் செய்த பூசையும் அதற்கு மகிழ்ந்து சிவபெருமான் திருமாலுக்கு அளித்த திருச்சக்கரமும் என் நினைவுகளில் வந்து என்னை ஆட்கொண்டது. அணுபட்சத் திருமால்கூட ஒரு சிவனடியாரே என்ற உணர்வை என்னுள் ஊட்டியது.ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ - திருவெம்பாவை

பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால் சிவபெருமான்மேல் கொண்ட அன்புடமைபோன்று அன்புடமை பூண்ட உனது திறம் இதுதானோ? என்று திருவெம்பாவையில் திருமாலின் சிவபக்தி ஒப்புவமையாகக் கையாளப்பட்டுள்ளது.
சம்புபட்சமாய் திருமால் விளங்கும்போது சிவனாகவும் அணுபட்சமாக திருமால் விளங்கும்போது சிவனடியாராகவும் உள்ள திருமால் வழிபாடு சைவவிரோதம் அன்று!


அதுவும் ஈழத்திருநாட்டில் சைவவழி நின்றுதான் திருமால்வழிபாடு பேணப்படுகின்றது. விபூதியே அந்தணர்களால் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. அந்தணர்களும் வீபூதியையே உடம்பெல்லாம் பூசியுள்ளனர்.

அதர்வண வேதத்திலுள்ள பஸ்மஜாபால உபநிஷத், "பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷா பரணா :தக்ஷிணாயாந் திகி விஷ்ணு " என்று கூறுகிறது. "திருமால் ஸ்ரீ காசி ஷேத்திரத்திலே தென்திசைக்கணிருந்து ,விபூதி ருத்திராக்ஷதாரணமுடியவராய் உபாசிக்கின்றனர்" என்பது பொருள். (நன்றி: http://vaidikasaivam2.blogspot.com/2012/11/blog-post.html?spref=fb)

"ராமம்...பஸ்மோத் தூளித சர்வாங்கம் " -ராம ரஹஸ்ய உபநிஷத்
இதன் பொருள்,"இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் " என்பதாகும்.
(நன்றி: http://vaidikasaivam2.blogspot.com/2012/11/blog-post.html?spref=fb)

"சிவஸ்ய விஷ்ணோர் தேவாநாம் " எனும் பராசர ஸ்மிருதி சுலோகம்,விபூதியை திருபுண்டரமாகத் தரிப்பதால்,கேசவ மூர்த்திக்கும் லக்ஷ்மி தேவியாருக்கும் திருப்தியுண்டாகிறது என்று நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
(நன்றி: http://vaidikasaivam2.blogspot.com/2012/11/blog-post.html?spref=fb)
திருமால் வழிபாடு பண்டைய காலத்தில் திருநீறுவழி சைவவழிபாடாகவே விளங்கியது. பிற்காலப்பகுதியில் அதில் மாறுதல்கள் ஏற்பட்டு வைணவமாக திரிபடைந்தபோதும், சிவபூமியாக ஈழவளத்திருநாடு விளங்கிய அருமையினால், திருமால் வழிபாடு சைவவழிசார்ந்த வழிபாடாகவே பண்டுதொட்டு பேணப்பட்டு வருகின்றது.
திருமாலை சைவவழிநின்று வழிபடும் ஈழத்துப் பாரம்பரியத்துக்கு இன்று ஸ்மார்த்தர்களின் ஊடுருவலால் கேடுவந்தவண்ணம் உள்ளதென்பதையும், திருமால் வழிபாட்டை வைணவவழிபாடாக இவர்கள் ஈழத்தில் மேற்கொள்ளத்துடிப்பதையும் இன்று சில இடங்களில் காணக்கூடியதாகவுள்ளது. இந்த ஆகமவிரோதத்துக்கு சைவர்கள் துணைபோகாது சைவ அறிவோடு சைவர்கள் விளங்க வேண்டுமென்று பணிவோடு வேண்டி, சம்புபட்ச திருமாலின் அருளை யாம் பெற்றதுபோன்று அனைவரும் பெற பொன்னாலையில் எழுந்தருளியுள்ள நாராயணனை வேண்டிக்கொள்கிறேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி




Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஈழத்திருநாட்டில் சம்புபட்ச நாராயணனின் சொர்க்கவாசல்! "

Post a Comment