"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, May 9, 2011

சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 1

சைவசமயம் உள்ளத்தை உள்ளபடி உணர்ந்து பாருக்கு அளித்த அரிய ஞானம் சைவசித்தாந்தமாகும்.

Saivism is the oldest prehistorian religion of South India, essentially existing from pre-Aryan times - Dr.G.U.Pope


The Saiva Philosophy is the choicest product of the Dravidian intellect. It is the most elaborate, influential and undoubtedly the most intrisically valuable of all religions of India. It is peculiarly the South Indian and Tamil Religion. - Dr.G.U. Pope


In real truth, Saiva siddhanta has something to offer which is suited to all minds. its very strength lies in its infinite adaptability to the infinite diversities of human character and human tendencies -  Sir Monier William


Saiva Siddhanta attempts to comprehend the universe as a sum total of 36 categories. this exposition is purely a logical account on Scientific principles - Thaos Bernard



இப்படிப்பட்ட சைவசித்தாந்தம் இன்று இந்துமதம் என்னும் பெயரில் சங்கரரின் அத்வைத்தாலும் ஏனைய அந்நிய மதபோதனைகளாலும், அரசியல்-நாத்தீகவாதங்களாலும் மறைக்கப்பட்டு வருகின்றமை தென்னாட்டின் ஊழ்வினையின் விளைவே! தமிழ்நாட்டில் பள்ளிசெல்லும் மாணவர்களுடன் உரையாடியபோதுதான் சைவ நாயன்மார்களையே நான் கலந்துரையாடிவர்களில் எவரும் அறிந்திலர் என்பதை உணர்ந்தேன். ஈழவளநாட்டில் இந்தக்குறை இல்லை! அரசுப பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் சைவப்பிள்ளைகளுக்கு சைவசமயத்தை சமயப்பாடமாக கற்பிப்பதால் சைவசமயத்தைப்பற்றிய தெளிவு காணப்படுகின்றது. தமிழகத்தில் இக்குறையைப் போக்க, சைவாதீனங்கள் தமது பணிகளை இன்னும் வீரியமாக்க வேண்டும். 

இன்று பக்தி,சக்தி,ஆன்மீகம், இராமகிருஷ்ண விஜயம் என்று வெளியாகின்ற இதழ்களூடாகவே சமயம் பரப்பப்படுகின்றது. அவையும் சங்கரரின் அத்வைதத்தையே பெரிதும் புகட்டுகின்றது. இதன் தாக்கத்தை இந்துமதம் என்னும் போர்வையில் சுமார்த்த அத்வைதம் போதிக்கபடுவதன் விளைவை, சிவபூமி என்று திருமூலர் சுட்டிய இலங்கையிலும் காணக்கூடியதாகவுள்ளது. எனவே சைவசமயம் பற்றிய தெளிவை ஏற்படுத்தவேண்டியது சைவ சான்றோரின் கடமையாகும். 


இந்துமதம் என்றபதத்தினூடாக இன்று சைவசித்தாந்தம் மழுக்கடிக்கப்படுகின்றதென்பதை சைவர் யாவரும் முதலில் உணரவேண்டும். இரண்டாவது; சைவசித்தாந்தம் பற்றிய தெளிவு சைவர் யாவருக்கும் இருத்தல் வேண்டும்.எனவே; சைவசித்தாந்தம் பற்றிய தெளிவை சைவர் யாவரும் பெறவேண்டும் என்ற நோக்கில் தொடராக 'கற்றதும் பெற்றதும்" என்ற தலைப்பில் தருகின்றேன். அதன் பொருள்; யாம் நூல்களைத் தேடிக் கற்றது. நாடிச் சான்றோரிடமிருந்து பெற்றது.  


இத்தொடரில் சைவசித்தாந்தத்தின் முப்பொருள் உண்மையை எளிமையான முறையிலும் சுருக்கமான முறையிலும் தரவிரும்புகிறேன். பயப்படாதீர்கள்.........சின்னத்திரை நாடகங்கள்போல் நீட்சியாக நீளாது இத்தொடர். 

சரி; சைவசித்தாந்தம் பற்றி பார்ப்போம்.


சைவசித்தாந்தத்துக்கு பொதுநூலாக நான்மறையும் சிறப்புநூலாக சிவாகமங்களும் விளங்குகின்றன.  சைவசித்தாந்தம் பதினான்கு மெய்கண்ட சாத்திர நூல்களால் விளக்கப்படுகின்றது. இந்நூல்கள் சைவசித்தாந்தத்தின் சாத்திரநூல்கள் எனப்படும். பன்னிரு திருமுறைகள்  சைவசித்தாந்தத்தின் தோத்திரநூல்கள் எனப்படும்.

சைவசித்தாந்தம் பதி(இறைவன்),பசு(உயிர்கள்),பாசம் எனும் முப்பொருள் உண்மையை தெளிவாக விளக்குவது சைவசித்தாந்தமாகும். சைவசித்தாந்தம் என்பது வேதாகமங்களின் தெளிவு. சித்தனையின் முடிந்த முடிவு.

வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கலுற்றாம் - சிவப்பிரகாசம் (சைவசித்தாந்தநூல்)

பலகலை ஆகம வேதம் யாவையினும் கருத்துப்
பதி பசு பாசம் தெரிதல் - சிவப்பிரகாசம் (சைவசித்தாந்தநூல்)

சைவசித்தாந்தத்தை சிவபெருமான் திருநந்திதேவருக்கு உபதேசித்து அருளினார். திருநந்திதேவரிடம் இருந்து சனற்குமாரர் உபதேசம் பெற்றார். சனற்குமாரரிடம் இருந்து சத்தியஞானதரிசினி உபதேசம் பெற்றார். சத்தியஞானதரிசினியிடம் பரஞ்சோதி முனிவர் உபதேசம் பெற்றார்.

பரஞ்சோதி முனிவர் ஒருமுறை அகத்தியரைக் காண்பதற்காக, ஒளியை விமானமாக்கி வான்வழியாக பொதிகைமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது திருவெண்ணெய் நல்லூரில் அவரது விமானம் திடிரென நின்றுவிட்டது. அங்கு சுவேதவனப் பெருமான் என்னும் சிவஞானம் பெருகியிருந்த குழந்தையைக் கண்டார். அக்குழந்தைக்கு மெய்யுணர்வு அருளி மெய்கண்டார் என்று பெயரிட்டார். பரஞ்சோதி முனிவரின் குருநாதராகிய சத்தியஞானதரிசினியின் பெயரையே சுவேதவனப் பெருமானுக்கும் இட்டார். அதாவது சத்தியம் -மெய், ஞானதரிசினி - கண்டார் என்று பொருள்படும்.

மெய்கண்டார் தமது தந்தையாரின் குலகுருவாக விளங்கிய அருள்நந்திசிவாச்சாரியாரை தனது சீடராக; தலை மாணக்கராக   ஆட்கொண்டார்.அருணநந்தி சிவாச்சாரியாரிடம் மறைஞான சம்பந்தர் உபதேசம் பெற்றார். மறைஞான சம்பந்தரிடம் உமாபதி சிவாச்சாரியார் உபதேசம் பெற்றார்.

இங்கு திருநந்திதேவர்,சனற்குமாரர்,சத்தியஞானதரிசினி,பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வரும் அகச்சந்தானகுரவர் என்று போற்றப்படுவர். மெய்கண்டார்,அருணநந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகியோர் புறச்சந்தானகுரவர் எனப்போற்றப்படுவர்.

சைவசித்தாந்த சந்தானகுரவரின் வாழ்க்கையை விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். தற்போது, சைவசித்தாந்தத்தின் முப்பொருள் உண்மையை உணர்ந்து கொள்வதற்கு, சந்தானகுரவர் பற்றிய இத்தரவு போதுமானதாகும்.

சைவசித்தாந்த தொடரில் அடுத்து நாம் பார்க்க இருப்பது பதியாகிய சிவபெருமானின் இயல்புகளைப் பற்றியாகும். சிவபெருமான் உருவம்,அருவுருவம்,அருவம் ஆகிய மூன்றுதன்மைகளையும் கடந்த இயல்புக்குரியவர். அதுவென்ன அருவத்தையும் கடந்த இறைவனின் இயல்பு? கடவுளுக்குச் சொல்லப்பட்ட மிகச்சிறந்த இலக்கணம் சைவசித்தாந்தம் கண்ட இலக்கணமே! அப்படியென்ன இலக்கணத்தை சைவசித்தாந்தம் கண்டது? அடுத்த தொடரில் பார்ப்போம்.

சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 2
சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 3
சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 4
சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 5
சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 6
சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 7

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 1"

ம.தி.சுதா said...

தங்கள் விளக்கம் அருமையாக இருக்கிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?

Brammagnani said...

தெளிவு பெற்ற ஒருவராலேயே பிறிதொருவரைத்தெளிவு படுத்த முடியும் தாங்கள் இங்கு கூறியுள்ளவை மிகத்தெளிவாக உணரத்தக்கதாக உள்ளது.பொதுவாக இலங்கைத்தமிழரது சைவம் சார்ந்த நூல்களும் விளக்கங்களும் ஆழமானதாகவும் பொருட்ச்செறிவுடன் கூடியதாகவும் அதே நேரத்தில் மிக எளிமையாகவும் இருக்கும். மிக அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் . சு.முத்துக்கிருஷ்ணன் , பாளையங்கோட்டை தமிழ்நாடு.

Post a Comment