"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, November 22, 2012

தமிழ்க்குழந்தையின் தந்தை தமிழனில்லையோ

ஒரு ஐந்துவயது குழந்தையையும் அக்குழந்தையின் தாயையும் சந்தித்தேன்................

இப்பதிவை படித்துத்தான் பாருங்களேன்!http://thiviyaranchiniyan.blogspot.com/2012/11/blog-post_22.html



நன்றி
சிவத்தமிழோன்
மேலும் படிக்க...

Sunday, November 18, 2012

அன்புள்ள சிவயோகர் சுவாமி அடியார்களுக்கு

அன்புள்ள சிவயோகர் சுவாமி அடியார்களுக்கு,"நான் கடவுள்" என்று சொல்லி பணந்திரட்டி கொண்டாடுகின்ற இக்காலகட்டத்தில் சிவஞானத்தை அள்ளி வழங்கிய சித்தர்களின் சிறப்பைப் பேசுவதும் எழுதுவதும் அருமைதான்! சிவபூமி என்று திருமூலநாயனாரால் சிறப்பிக்கப்பட்ட ஈழவளத் திருநாட்டில் பூத்து சைவத்தை தழைக்கச்செய்த சித்தர் பெருமக்களை இன்று சைவர்கள் நினைவுபடுத்துவதே ஆச்சரியமான அதிசயமானதாகவுள்ளது!
ஈழத்தில் தோன்றிய சித்தர்களை அத்தி பூத்தாற்போல் அங்கொன்று இங்கொன்றாக நினைவுபடுத்தும் நிகழ்வுகள் அரங்கேறினாலும் அவற்றை பிரபல்யப்படுத்தும் உத்திகளையும் எவரும் கையாள்வதில்லை! பத்திரிக்கைகளில் எங்கேனும் ஒரு மூலையில் ஒருசிறுசெய்தியாக அந்நிகழ்வு அமைந்துவிடுகின்றன!

இப்படியான இக்காலகட்டத்தில்,
சிவயோக சுவாமி நம்பிக்கை நிதியம் என்னும் அமைப்பு சிவயோகர் சுவாமி வழிபாட்டுக்கென்று ஒரு நிலையான இடமொன்றை தாபிக்கும் நோக்கில் துண்டுப்பிரசுரம் ஒன்றை சிவதொண்டன் சஞ்சிகையூடாக அனுப்பியிருந்தனர்.
நான் கடவுள் என்றும் நானே கல்கியென்றும் ஆன்மீக வியாபாரம் செய்கின்ற அமைப்புகளுக்கு பணம் கொழுத்துப்போய் இருப்பதால் ஆயிரத்தெட்டுவகையில் பணந்திரட்டும் வழிகளைக் கையாளுகின்றனர்! சுவரொட்டிகள்,பத்திரிக்கை விளம்பரங்கள்,தொலைக்காட்சி விளம்பரங்கள் என்று இவர்களின் அமைப்புகளுக்கு குறைவேயில்லை!
சிவப்பரம்பொருள் ஒன்றே கடவுள் என்றும் பிறப்பு இறப்பு என்னும் வினைகளுக்கு அப்பாற்பட்ட திருவருளே சிவப்பரம்பொருளென்றும் கொண்டாடுகின்ற சைவப்பாரம்பரியத்தில் சிவஞானம் பெருக்கி குருவருளைச் சுரந்து சிவனடியை உணர்ந்திட வழிகாட்டிய சித்தர்களினை போற்றுகின்ற அமைப்புக்கள் வியாபாரவழியை அறியாதவர்கள்! அதற்கு தலைசிறந்த உதாரணம் நம் ஈழத்து சிவயோகசுவாமி நம்பிக்கை நிதியத்தார். சிவஞானம் ஒன்றையே பொருளாகக் கொண்டு இயங்கும் இவ்வமைப்பினர் பல்லாண்டுகளாய் பல்வேறு கூட்டுவழிபாடுகளை மாதந்தோறும் ஒழுங்குசெய்து வருகின்றபோதும் இன்றுவரை ஒரு நிலையான வழிபாட்டு நிலையத்தை உருவாக்கிட முடியாதளவுக்கு உள்ளனர்.
ஆக; சிவஞானம் பெருக்கும் அமைப்பு ஒன்றுக்கு நாம் செய்யும் உதவி நிச்சயமாக நம்மை ஏதோவொருவழியில் வளப்படுத்தும் என்பதை உள்ளத்தில் இருத்தி, உதவமுன்வருமாறு
பணிவோடு வேண்டுகின்றேன்.
வங்கிக் கணக்கு :
SIVAYOGA SWAMI TRUST OF SRI LANKA
A/C 0000716822
BANK OF CEYLON
BRANCH: BAMBALAPITIYA
Swift Code : BCEYLKLXXXX
(BCEYLKLX)
SRI LANKA

Cheques,Bank Drafts,Pay Orders and International Money Orders should be Crossed "Account Payee Only" and made out in favour of SIVAYOGA SWAMI TRUST OF SRI LANKA.பண உதவி செய்யும் வசதியற்றோர், இச்செய்தியை வசதியும் மனமும் படைத்தோரிடம் கொண்டு சேர்க்கும் போற்றுதலுக்குரிய தொண்டை ஆற்றினால் அதுவே அருமையான தொண்டாகும்.
நேரில் சென்று ஏதேனும் உதவிகளை வழங்க விரும்புவோர் பின்வரும் விலாசத்தினைக் குறிப்பெடுத்து, அமைப்பின் உரியவர்களை சந்திக்கும்படி பணிவோடு வேண்டுகின்றேன்.The Secretary
No- 5, Moor Road,Colombo-06,Sri lanka
Tel:- +94 11 2580584




பிற்குறிப்பு: ஏதேனும் பண உதவி செய்வோர் தங்கள் தொலைபேசி இலக்கத்தையும் பெயரையும் அனுப்பி வைத்த பணத்தின் பெறுமானத்தையும் தங்கள் விலாசத்தையும்sivayogaswami@yahoo.com
என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைப்பீர்களேயானால், தங்களுக்கு பணம் அனுப்பி வைத்தமைக்குரிய சான்றினை இவ்வமைப்பினரிடம் இருந்து பெற்றுத்தர ஆவண செய்யமுடியும். மின்னஞ்சல் முகவரி இவ்வலைப்பூவின் பணிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட என்னுடைய தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியாகும்.இவ்வமைப்பின் சிறப்பான திருப்பணியை அறிந்து அவர்களின் சிவப்பணியில் ஏதேனுமொருவழியில் எளியேன் பங்குகொள்ள அவாக் கொண்டேன். எளியேனுக்கு இறைவன் அளித்த எழுத்துப்பணியினூடாக பணிசெய்யும் ஆர்வம் பூத்திடவே, வலைப்பூ ஒன்றினையும் முகநூலில் குழுமம் ஒன்றினையும் சிவயோகர் சுவாமிகளின் திருப்பெயரில் அமைத்துள்ளேன். எல்லாம் திருவருட் சம்மதம்.

நன்றி
சிவத்தமிழோன்

http://sivayogaswami.blogspot.com/2012/11/blog-post_18.html
(குருபரன் சிவயோக சுவாமிகள் என்னும் என்னுடைய வலைப்பூவில் இந்தமடலை பதிவாக பிரசுரித்துள்ளேன்.)
மேலும் படிக்க...

Tuesday, November 13, 2012

தீபாவளியும் கருப்புச்சட்டை அரசியலும் பெண்ணியமும் சின்னத்திரையும்!

தீபாவளித் திருநாளுக்கு பல்வேறு காரணங்களை பல்வேறு பகுதிகளில் பாரதத்திருநாடு எங்கும் கூறுவர். வடநாட்டின் பலபகுதிகளில் இராமனின் முடிசூட்டுவிழாவாகவும் இராவணனைக் கொன்ற நாளாகவும் இராமன் மீண்டும் அயோத்திக்கு வருகைதந்த நாளாகவும் கருதிக் கொண்டாடுவர். தமிழ்நாட்டில் கண்ணபிரான் நரகாசூரனை பூமாதேவியினூடாக வதைத்த நாளாகக் கொண்டாடுவர். இதனை கருப்புச்சட்டைக்காரர்கள் திராவிடனை ஆரியன் கொன்ற நாளென்று மோட்டுத்தனத்தில் உழறுவர்!

கருப்புக் கண்ணன்  ஆரியனாக இருக்க வாய்ப்பேயில்லை என்ற பொதுவறிவுகூட இல்லாத மோட்டுத்தனத்துள் மூழ்கியுள்ளது கருப்புச்சட்டை அரசியல்! வடநாட்டில் பிறந்தவரெல்லாம் ஆரியர் என்றால் சிந்துநதிப்பள்ளத்தாக்கில் வாழ்த்தவர் தமிழர் என்று சொல்வதில் என்ன நீதி? இன்றும் வடநாடெங்கும் ஆதிகுடிமக்களின் மொழி திராவிடமொழிக்குடும்பத்தை சார்ந்ததாகவே உள்ளதென்ற நீதியை எங்கனம் மறைக்கமுடியும்? ஆக; கருப்புச்சட்டை அணிந்து கருப்பனையே கேவலப்படுத்துகின்ற இழிவான அரசியல் செய்வதிலும் பார்க்க அம்மணமாக நிற்கலாம்!!!

அது சரி....தீபாவளிக்கும் பெண்ணியத்துக்கும் என்ன சம்பந்தம்?

தீபாவளிக்கு கண்ணபிரான் கதையை பிரபல்யப்படுத்தியது ஒருவகையில் இந்த கருப்புச்சட்டைக்காரர்தான்! ஆரிய-திராவிட அரசியலுக்கு உதவும் என்பதால்த்தான் அப்படியொரு பிரபல்யத்தை கண்ணபிரான் கதைக்குக் கொடுத்தனர்!!! தமிழர் அறிவற்றவர் என்றனர்! நமக்கும் ஐயம் ஏற்படலாயிற்று!!!




சிவபெருமானின் இடப்பாகத்தை உமையம்மை பெற்ற திருநாளே தீபாவளித்திருநாள்!!! இவ்வண்ணமே பண்டுதொட்டு தமிழர் கொண்டாடினர்! பெண்ணியத்தின் பெருமை பேசும்படியான நற்திருநாளாக தீபாவளியைத் தமிழர் கொண்டாடினர் என்ற வரலாற்றையே தமிழர் மறக்கலாயிற்றனர்! தமிழருக்கு மறக்கச்சொல்லிக்கொடுக்க வேண்டுமா என்ன?

பெண்ணியம் என்றவுடன் இன்னொரு செய்தி !!!


நேற்று சின்னத்திரை நாடகம் ஒன்றை எதேற்சையாக பார்க்க வேண்டியேற்பட்டது! பல பெண்கள் தொலைக்காட்சிப்பெட்டியைச் சூழ இருந்து "அவள் படுபாவி" என்றெல்லாம் கடிந்துகொட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தனர்! ஒரு காட்சியில் நடிகை "பெண்களுக்கு எங்கு சுதந்திரம் உண்டு" என்று கூற நம் பெண்களும் உண்மைதான் என்று தலையாட்டினர்!!! நாட்டில் நடக்கும் செய்தியைக்கூட கேட்காது நாடகத்திற்காய் தொலைக்காட்சிப்பெட்டிக்குள் மூழ்கியிருந்தால் எப்படி பெண்களுக்கு சமவுரிமையும் சுதந்திரமும் கிடைக்கும்? சின்னத்திரைக்குள் வீழ்ந்திருப்பவர்கள் சிந்திக்க!!!

எல்லோருக்கும் தீவாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!
மாதொருபாகனின் திருவருள் எல்லோருக்கும் வாய்ப்பதாகுக!

மேலும் படிக்க...

Friday, September 14, 2012

அன்புடைய சீரடிபாபா பக்தர்களே.........

அன்புடைய சீரடிபாபா பக்தர்களே.........இப்பதிவு உங்களுக்குரியது! இப்பதிவால் மனம் நொந்தால் மன்னித்துவிடுக! ஒருசில சீரடிபாபாவின் பக்தர்களின் செயற்பாடுகளாலும் இலங்கையில் அவர்கள் அமைப்பின் செயற்பாட்டினாலும் எழுதப்படும் பதிவு!  அனைத்து சீரடிபாபா பக்தர்களையும் இப்பதிவு சுட்டமுனையவில்லை!

அண்மையில் முகநூலில் பலர் பகிர்ந்துகொண்ட ஒரு படம் பல சைவர்களின் மனதைப் புண்படுத்தியமையால் புண்பட்டவர்களின் சார்பில் இப்பதிவை எழுதுகின்றேன்.

குறித்த படம் தஞ்சைப்பெருங்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் எம்பெருமான் பெருவுடையாரின் படமாகும்!!! அட...பெருவுடையாரின் படத்தைப்பார்த்தால் சிவானந்தம்தானே பெருக வேண்டும்? மனம் புண்படக்காரணம் என்ன?

பெருவுடையாருக்கு அந்தணர்கள் பால் அபிடேகம் செய்யும் அருமையான படம்தான்! ஆனால் பெருவுடையாரின் இலிங்கத்திருமேனியில் சீரடிசாய்பாவாவின் படம் கணிணித்தொழில்நுட்பத்தின் உதவியுடன் வரையப்பட்டிருந்தது. அதாவது தஞ்சை பெருவுடையாரில் சீரடிசாய்பாபா காட்சியளிப்பதுபோல் குறித்தபடம் அமைந்திருந்தது.

இது எவ்வளவு அறிவீனமான செயல்!!! தமிழரின் மாண்புக்கும் சமய சால்புக்கும் இழுக்குத்தரும் செயல்!!!!

ஏன் குறித்தபடம் சைவமாண்புக்கு பங்கமானது?

சீரடிசாய்பாபா என்பவர் பிறப்பு இறப்பு என்னும் மனித இலக்கணத்துக்கு உட்பட்டவர்! அவரை மகானாக கருதுவதில் தவறில்லை......காரணம் ஆன்மீகத்தில் உயர்ந்தவர்களை மகான்களாக கருதுவது முறையானதே!

பிறப்பு-இறப்பு என்பது யாருக்கு அமையும்? சைவசமயத்தின்படி, வினையினால் பீடிக்கப்பட்டவர்களுக்கே பிறப்பு-இறப்பு உண்டு!!!!

திருமால் பிருங்கிமுனிவரின் மனைவிமேல் கொண்ட மையல் காரணமாக பிருங்கிமுனிவரிடமிருந்து
பெற்ற சாபத்தின் விளைவால் பலபிறவிகள் எடுக்கவேண்டியேற்பட , சிவபெருமானிடம் சென்று யாதுசெய்வதென்று வேண்டிநின்றார். அப்போது சிவபெருமான் "உலகத்தில் அதர்மங்கள் ஓங்கும்போது அவற்றை நீக்கி தர்மத்தை நிலைநாட்டிட பத்துமுறை பிறப்பாயாக" என்று பிருங்கிமுனிவரின் சாபத்தை திருமாலுக்கு பெருமைசேர்க்கும் வகையில் அமைத்துக்கொடுக்கின்றார். இச்செய்தியை சைவசித்தாந்த சாத்திரநூல் கூறுகின்றது! ! அதாவது பிறப்பு என்பது வினையினால் வருவது!

பத்துமாதங்கள் கருவாசம் என்பது எவ்வளவு இடர்பாடுடையது என்பதை திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தெளிவாக உரைத்துள்ளார்!

"யானை முதலா எறும்பீ றாய
ஊனமி லியோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்
தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்

இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்

மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் நூறலர் பிழைத்தும்

ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்

எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படுந்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
" -திருவாசகம் (போற்றித் திருவகவல்)

பிறவிப் பெருங்கடல் - திருக்குறள்

ஆக தமிழரின் பொதுமறையாகிய திருக்குறளில் திருவள்ளுவர்கூட பிறவியை "பெருங்கடல்" என்று துன்பத்தோடுதான் ஒப்பிடுகின்றார்!

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை - திருக்குறள்

ஒருவன் ஒன்றை விரும்புவதானால், பிறவா நிலையை விரும்ப வேண்டும் என்று பிறத்தலை துன்பத்தோடுதான் ஒப்பிடுகின்றார். வினையின் பயன் என்றே சொல்கின்றார்.

சில குழந்தைகள் பிறந்தவுடனேயே இறப்பது ஏன்? கருவாசத்தில் படுகின்ற துன்பமளவுதான் அவர்களது வினை இருந்துள்ளது என்பதே அதற்கான விடை! இதை மகாபாரதத்தில் பிறந்தவுடனேயே கங்கையில் வீசப்பட்டு இறக்கின்ற சந்தனு மன்னனுடையதும் கங்காதேவியினுடையதுமான ஏழு குழந்தைகளின் கதை உணர்த்துகின்றது! அதாவது வசிட்டரின் காமதேனுவை அபகரிக்க சென்ற அட்டவசுக்கள் என்னும் எட்டுத்திசைக்காவலர்களுக்கும் வசிட்டமாமுனிவர் வழங்கிய சாபத்தினால் அவர்கள் கருவாசம் கொண்டு உடனேயே இறக்க வேண்டியிருந்தது! எட்டாவது குழந்தையாகிய அட்டவசுக்களில் ஒருவராகிய பிரபாசன், காமதேனுவை கொள்ளையிட விருப்பிய தலைமை நபர் என்பதால் பூமியில் தொடர்ந்து மீஷ்மராக வாழ்ந்து அவருக்குரிய வினையை போக்கவேண்டியிருந்தது! மீஷ்மராக நாம் காணும் நபர் மிகப்பெரும் மேதையாக, ஞானியாக மகாபாரதத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பினும் அவருடைய பிறப்புக்கு காரணமான வினை கொடூரமானது!

ஆக; இன்று நாம் ஞானிகளாகவும் மகான்களாகவும் போற்றுபவர்கள் அனைவரும் ஏதோவொரு வினையின் விளைவால் பூமிக்கு வந்தவர்களே! மகாபாரதத்தில் பீஷ்மர் போற்றப்படுவதுபோல் நாமும் அவர்களை மகான்களாக போற்றுவதில் குறையில்லை!

 பிறப்பு-இறப்பு என்னும் வலைக்குள் அகப்பட்ட அனைவரும் ஆன்மாக்களே! கடவுளர்கள் அல்ல! அவர்களால் எமக்கு பாவவிமோசனமும் தரமுடியாது! முக்தியும் தரமுடியாது! சிறந்த மகான்களை முன்னுதாரணமாக கொண்டு வாழ்க்கையை அமைப்பதுமட்டுமே அவர்களிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரேயொரு பயன்!!!

ஆனால் இன்று? சீரடிபாபாவை கடவுளாக சிலர் வணங்குகின்றனர்!!! சரி; அது அவரவர் மனித உரிமை! அதில் குறைகாண்பது தேவையற்ற ஒன்று!
ஆனால் பிறப்பு-இறப்பு என்னும் இயற்கை நியதிக்கு உட்பட்ட சீரடி சாயிபாபாவை, அனைத்து விதிகளையும் கடந்த கடவுள் என்னும் தமிழரின் சொல்லுக்கு பண்டுதொட்டு பொருளாக விளங்குகின்ற பிறப்பு- இறப்பற்ற சிவபெருமானுடன் ஒப்பிடுவது முறையானதா? சைவர்களின் மனதை நோகடிக்காதா?

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே - திருமந்திரம்

பதவுரை:-
சிவபெருமான் என்றும் பிறப்பில்லாதவன். பின்னற் சடையினையுடையவன். அளவிடப்படாத பேரருளாளன். என்றும் அழிவிலாதவன். யாவர்க்கும் குறைவிலா நிறையின்பம் அருளி அவரை விட்டு நீங்காதவன். அவனைத் தொழுங்கள். அங்ஙனம் தொழுதால் அவன் உங்களை ஒருபோதும் மறவான். மாயைக்கு மறுதலையாகிய இயற்கைப் பேரறிவினன்.
(நன்றி:-http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=118&pno=12)

சிவனொடொக்குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை - திருமந்திரம்

உங்களைப்போன்றவர்கள் யாரேனும் ஒருவரை நாளை சிவபெருமானோடு ஒப்பிடுவர் என்பதை உணர்ந்துதான் திருமூலர் சிவபெருமானோடு ஒப்பிடக்கூடிய ஒருவரோ அவருக்கு இணையான ஒருவரோ எங்கனும் இல்லை என்று அறிவுறித்தியுள்ளார்.

ஆக; சிவபெருமான் பிறப்பு இறப்பு அற்றவர் என்று திருமந்திரம் கொடுத்துள்ள இலக்கணத்தை படித்ததேயில்லையா?
சிவபெருமானோடு யாரையும் ஒப்பிடக்கூடாது என்று திருமந்திரம் சொல்லியுள்ளதை கண்டதேயில்லையா? கண்ணிருந்தும் குருடர்களாக இருப்பது எவ்வளவு அறிவீனம்!

தமிழில் இருப்பதை தமிழரே அறியாவிட்டால் தமிழரின் மாண்பை யார்தான் காப்பது?

இலங்கையில்  கொழும்பில் உள்ள ஆலயம் ஒன்றில் சீரடிசாய்பாபாவுக்கு சிலைவைத்து வழிபாடு நடைபெறுகின்றது! நாளை நித்தியானந்தாவின் பக்தர்கள் அவருக்கும் ஆலயத்துள் சிலைவைத்து வழிபட உரிமைகேட்டால் எங்கள் சமயத்தின் நிலை எவ்வளவு தாழ்ந்துவிடும்???







எனக்கு என்னுடைய தாய்-தந்தையரை கடவுளாகக் கருத உரிமையுண்டு! அதற்காக, ஆலயத்தில் என் தாய்-தந்தையருக்கும் சிலை வைத்து வழிபட நான் விரும்பினால் எல்லோரும் தங்கள் தங்கள் தாய்-தந்தையருக்கும் சிலைவைத்து வழிபட உரிமைகேட்டு வந்துநிற்பர் அல்லவா?
ஆக; நான் கடவுளாகக் கருதும் என் பெற்றோருக்கு ஆலயத்துள் சிலைவைத்து வழிபாடு நடத்தினால்
எப்படிப்பட்ட இழிநிலை எங்கள் சமயமரபுக்கு ஏற்படும்?

ஆக; குஷ்பூவுக்கும் கோயில்கட்டினார்கள்! யார் இடைஞ்சல் செய்தது! அதுபோல் அவரவர் தாம்விரும்பும் நபருக்கு தனிக்கோயிலை தமது சொந்த இடத்தில் கட்டிக்கொள்வதில் எவருக்கும் தலையிடியில்லை!
ஆனால் சைவாலயத்துக்குள் குஷ்பூவுக்கு சிலைவத்தால்? வைக்ககூடாது என்று எப்படி வாதிடமுடியும்? அவரையும் சிலர் கடவுளாகக் கருதலாம்தானே? அது அவர்களின் தனிப்பட்ட உரிமைதானே?

ஆக; ஒன்றுக்கு வழிவிட்டால் எல்லாவற்றுக்கும் வழிவிடவேண்டிவரும்! சைவம் சீர்கெட்டு தமிழர் மரபு சிதைந்துதான் போகும்!!!!
பணபலத்தால் எதையும் சாதிக்கலாம் என்று வந்துவிட்ட கலிகாலம் இக்காலம் என்பதால் பணபலம் உள்ளோர் சாதிக்கின்றனர்!!!! அவ்வளவுதான்!

நல்லூர் தேரடியிலிருந்து அற்புதங்கள் பலசெய்த யோகர் சுவாமிகளுக்கு நல்லூர் உட்பட சைவாலயங்கள் எங்குமே சிலையில்லை!!! காரணம் பணபலம் யோகர்சுவாமி மடத்திற்கு உண்டு! இத்தனைக்கும் அவரொரு சிவனடியார்! சைவசமயி! சிவனடியார் வழிபாடு சிவமுக்தி தரும் என்று சைவநெறி உரைக்கின்றது!  ஆனால் நாயன்மார்களைத் தவிர வேறு எவருக்கும் சிவாலயத்துள் சிலைவைப்பதில்லை என்ற மரபுகாரணமாகவே அவருக்கு இன்றுவரை சிலை எழுப்ப யாரும் முனையவில்லை!
பிரபல்ய ஆசையும் சைவசமயநிந்தையும் யோகர்சுவாமி பக்தர்களுக்கு இல்லை!!!! கடவுள் சிவபெருமான் ஒருவரே என்ற சைவசிந்தை அவர்களிடம் உண்டு! முக்தியையும் சித்தியையும் வினைகளில் இருந்து விடுதலையையும் சிவபெருமான் ஒருவராலேயே வழங்கமுடியும் என்ற தெளிவும் உண்டு!

எனக்கு ஒன்றுமட்டும் தெரியவேயில்லை......தமிழகத்தில் எத்தனையோ சித்தர்களும் மகான்களும் வாழ்ந்துள்ளனர்! அனைவரும் மகான்களாகவும் சித்தர்களாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர்! ஆனால் தமிழகத்திற்கு அப்பால் பிறந்து மகான்களாக மிளர்ந்தவர்கள் கடவுள்களாய் வடிவம் கொள்கின்றனர்! அது எப்படி அவர்கள் மட்டும் கடவுள்கள் ஆகுகின்றனர்?

இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்ற பழமொழி நினைவுக்கு வருகின்றது!!!! அமெரிக்கனுக்கு அமெரிக்க சுதந்திரதேவிச்சிலையின் அருமை தெரியாது என்பார்கள்! உண்மைதான்! நம்மவர்களுக்கு நம் சமயம் எது? நம் மாண்பு எத்தகையது? எதுவுமே தெரியாதே!!!!



ஆக; பிறப்பு இறப்பு என்று வலைக்குள் அகப்பட்ட எவரையுமே சிவபெருமானுடன் ஒப்பிடுதல் பாவமாகும்! சைவசமயத்தை நிந்தித்த விசமச்செயலாகும்! சீரடிசாய்பாபா என்பவர் சைவசமயி அல்லர்! எனவே அவரை கடவுளாக கருதுபவர்கள் சைவசமயிகளாய் இருப்பது முரணாகும்! எனவே சைவசமயத்தைச்சாராதோர் சைவசமயக்கடவுளாகிய சிவபெருமானோடு , அதுவும் தமிழரின் மாண்பின் வடிவமாக விளங்கும் தஞ்சைப்பெருங்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருவுடையார் சிலையில் சீரடிசாய்பாபாவை வரைந்து கணிணியில் உலாவவிடுவதென்பது எவ்வளவு அநாகரீகமான செயலாகும்!!!

சீரடி சாய்பாபாவின் பக்தர்கள் அவரை சிவனாகவும் அல்லாவாகவும் யேசுவாகவும் யோகோவாவாகவும் கருதிட உரிமையுண்டு! ஆனால் இஸ்லாமியரின் மக்காவிலும் கிருஷ்தவர்களின் ஜெருசலேத்திலும் சைவர்களினது சைவக்கோயிலிலும் சீரடிபாபாவின் படத்தை வரைந்து சமூகத்தில் விநியோகிக்க எள்ளளவும் உரிமையில்லை!!! சீரடிபாபா இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்தானே? அவர் படத்தை மக்காவில் தெரிவதுபோல் வரைந்து பாருங்களேன்........முடியாது! ஏனெனில் சமயசண்டைகளை உருவாக்கிய குற்றத்தில் சிறைசெல்வீர்கள்!
ஆனால் சைவசமயம் அன்பே சிவம் என்பதாலும்
சிவஞானமே சைவரின்வழி என்பதாலும் உங்களின் அநாகரீகச்செயல்களுக்கு அமைதியாய் இருக்கின்றது!

 
சைவக்கோயிலுக்குள் அதுவும் தமிழரின் மாண்பின் வடிவமாக விளங்கும் சோழநாட்டின் சரித்திரமாக காட்சியளிக்கும் தஞ்சைப்பெருங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருவுடையாரில் நீங்கள் பிறப்பு-இறப்புக்கு அகப்பட்ட ஒருவரின் படத்தை கணிணித்தொழில்நுட்பத்தால் புகுத்தியிருப்பது நீங்கள் எவ்வளவு இழிவான தரம்தாழ்ந்த நிலையில் உள்ளீர்கள் என்பதை சைவ உலகிற்கு காட்டியிருக்கின்றது!

எளியேனின் விண்ணப்பம் யாதாயின்;

உங்கள் ஆன்மீக வியாபாரத்தை கச்சிதமாக காசுபார்க்க நடத்துங்கள்! அரசியல்-பணபலம் எதுவுமற்ற சிவஞானம் ஒன்றையே சொத்தாகக்கொண்டுள்ள
சைவசமயத்தை சிதைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

உங்களின் வழிப்பாட்டு விருப்பம் எதுவாகவும் இருக்கலாம் ! ஆனால் ஏனையவர்களின் மனங்களை நோகடிக்காது உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்!
யாதொரு தெய்வம் கொண்டீர்
அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம்
வருவர் மற்றத்தெய்வங்கள்

வேதனைப் படும் இறக்கும்
பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலான் இவைஇ லாதான்
அறிந்துஅருள் செய்வன் அன்றே!
-
சிவஞானசித்தியார் (சைவசித்தாந்த சாத்திரநூல்)


பதவுரை:-
எந்தத் தெய்வத்தை வணங்கினும் மாதொருபாகனாகிய சிவனே வந்து அருள்செய்வான்.
பிறதெய்வங்கள் யாவும் உயிர்களே! ஆகையால் அவைகள் வினைகள் செய்யும்.இன்ப துன்பம் அனுபவிக்கும்.இறக்கும்.பிறக்கும்.ஆனால் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இக்குறைபாடுகள் இல்லையாதலால், செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக் கொடுக்கவல்லவன் ஆவனே ஆவான்.


"சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது சால
உயர்சிவ ஞானத் தாலே
போழ் இள மதியினானைப்
போற்றுவார் அருள்பெற் றாரே" -சிவஞானசித்தியார் (சைவசித்தாந்த சாத்திரநூல்)
மேலும் படிக்க...

Monday, August 6, 2012

சீனத்தில் தமிழ்!! சென்னையில் சைவநெறி?

சீன வானொலியில் தமிழ்மொழிப்பிரிவு சீனர்களால் நடத்தப்படுகின்றமைக்கான காணொளியை இங்கு இணைத்துள்ளேன். இந்தக்காணொளியை இணையமொன்றினூடாக பார்க்கும் வாய்ப்புக்கிட்டியது.



இதுபோல் இரசியாவிலும் தமிழ்மொழியை பயிற்றுவிக்கப்படுவதாக அறிந்துள்ளேன். ஜெர்மனி பல்கலைக்கழகம் ஒன்றில் தனித்தமிழ்த்துறை இருப்பதை பொதுவாக செம்மொழிமாநாட்டின்மூலம் பலர் அறிந்திருப்பர். பெருமைப்படக்கூடிய விடயங்கள்தான் இவை.

ஆனால் தமிழ்மொழிக்கு அழகு சேர்க்கும் நெறியாகிய சைவசமயத்தை இவ்வண்ணம் பரப்பும் முயற்சிகள் உண்டா? விடை பூச்சியம்தான்!

கிருஷ்ணபக்திக்கழகம், இராமகிருஷ்ண மிஷன், பாபா மிஷன், அம்மாபகவான் மிஷன், மாதா அமிர்தானந்தமாயி மிஷன், சின்மியாமிஷன் என்று அத்தனையும் "சங்கர அத்வைதத்தை" போதிக்கும் மிஷன்களும் வைணவமிஷன்களுமே உலகம் முழுக்க கிளைபரப்பி "இந்து" மதமாக மிளிர்கின்றன!!! நாம் "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" என்று பாடியவண்ணம் சாதி வளர்த்து நம் தமிழுலகில் நம்மவர்களை பிறமதங்களுக்கு அனுப்பி வேடிக்கை பார்த்து இன்னும் கிணற்றுத்தவளையாகவே இருக்கின்றோம்........எப்போது எமக்கு அறிவு வரும்?

பிள்ளைவாள்......முதலியார்.....என்று பெயருக்கு பின்னால் சாதியை கொட்டை எழுத்தில் எழுதிக்கொண்டு பசு என்னும் ஒரேசாதியை சார்த்தவர்களே ஆன்மாக்கள் என்பதை மறந்து சைவம் பேசுகின்றோம்!!!! ஆதீனமுதல்வராக இன்னென்ன சாதியுடையோரே வரலாம் என்று வரையறை செய்து வியாக்கியானம் பேசுகின்றோம்.....ஆக சைவசமயம் வளர நாம் என்ன செய்தோம்???

உலகம் முழுக்க "இந்து" மத அமைப்புகளாக சங்கர அத்வைத அமைப்புக்களும் கிருஷ்ணபக்திக்கழகங்களும் பெருகியவண்ணம் இருக்கின்றன..........சைவசித்தாந்தத்தை வளர்க்க நாம் என்ன செய்தோம்???
எவரேனும் மேல்நாட்டுக்காரன் சைவசித்தாந்தத்தை தானே தேடிவந்து படித்து இரண்டு வார்த்தை புகழ்ந்து சொன்னால் அப்படிப்பட்ட அந்த மேல்நாட்டுக்காரரை தலையில்தூக்கி கொண்டாடியதைத்தவிர நாம் ஏதேனும் உருப்படியாக செய்தோமா???

ஆங்கிலமொழியில் சைவசித்தாந்தம் எழுதியதைத்தவிர நாம் உருப்படியாக ஏதேனும் செய்திருக்கின்றோமா? புத்தகங்கள் எழுதுவது பயனுடையதே! ஆனால் அது தேடிப்படிக்கும் ஆர்வமுடைய ஒருசிலரையே சென்றடையும்!!! கிருஷ்ணபக்திக்கழகங்கள் போன்று நாம் ஏதேனும் நடைமுறையில் செயற்படுத்தியிருக்கின்றோமா?

பெலரஸ்(BELARUS) என்னும் முன்னைய இரசியாவில் நான் இருந்தபோது நடைபாதையில் நின்று இரசியமொழியில் உள்ள "கிருஷ்ணர் கதை" புத்தகத்தை ஒரு இரசியர் விற்ற வண்ணம் இருந்தார். நான் ஆர்வமுடன் வாங்கினேன். ஏனெனில் சைவசித்தாந்தம் வேதநெறியில் ஏதேனும் ஒன்றை தழுவியிருத்தல் புண்ணியத்தின் விளைவு என்று கூறுகின்றது. பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் பேராசிரியர் சிலர் என்னிடம் பலமுறை உங்கள் சமயப்பழக்கவழக்கங்களை அறிய ஆவல் என்று கூறியுள்ளனர்.எனவே அவர்களுக்கு இப்புத்தகத்தை வழங்கலாம் என்று வாங்கி வழங்கினேன்.

ஆனால் அப்போது என்மனதை வாட்டியது இதுபோல் சைவசித்தாந்த புத்தகமொன்றை இரசியமொழியில் வாங்கக்கூடியதாக இருக்குமா? ஒரு இரசியர் மொட்டைவழித்து சிறு குடுமிவைத்து நடைபாதையில் நின்று கிருஷ்ணபக்திபற்றி எடுத்துரைக்கின்றாரே......ஏன் இவ்வண்ணம் நமது சைவசமயம் வளர்க்கப்படவில்லை? இவ்வாறான கேள்விகள் என்னுள் எழுந்து வாட்டியது!!! நம்மவர்கள் "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" என்று கோயிலுக்குள் உரைப்பதோடு சரி......செயலில் எதுவும் இல்லை என்பதை புரிந்துகொண்டேன்!!!

சென்னையில் ஒரு இந்துப்பாடசாலையில் கற்ற மாணவர் சிலரை சந்தித்தபோது "திருஞானசம்பந்தர்,சுந்தரமூர்த்தி நாயனார்,திருநாவுக்கரசர்,
மாணிக்கவாசகர் "  ஆகியோர் யார் என்றே தெரியாதநிலையை அறிந்தபோது நமது சமயம் எப்படி "இந்து"வாக வளர்க்கப்படுகின்றது என்பதை உணர்ந்துகொண்டேன்!!! அவர்களிடம் காலை பிரார்த்தனை என்று ஒரு கையேடு இருந்தது. வாங்கிப்பார்த்தால் எல்லாமே மந்திரம்தான்!!! குருபிரம்மா.... என்று தொடங்கி ஓம் பூர் புவச... என்று மந்திரங்கள் பிரசுரிக்கப்பட்ட கையேடு அது. அவர்கள் என்னிடம் இவற்றையே தாம் பிரார்த்தனையின்போது படிப்பது என்றனர்.

நான் அவர்களுக்கு "தோடுடைய செவியன்" தெரியுமா என்று பார்த்தேன்......பாவம் அவர்களுக்கு தெரியவில்லை!!!
தேவாரம் என்றால் என்னென்று கேட்டேன்......திருவாசகம் என்றால் என்னென்று கேட்டேன்.....!!!!  திருவாசகத்திற்கு விடை வந்தது.....ஆம் இளையராஜாவின் சிம்பொனி வெளியீடு என்றனர்!!!!
கொஞ்சம் மனதை ஆறுதல்செய்துகொண்டு நீங்கள் சைவசமயமா என்று கேட்டேன்? இல்லை நொன்வேஜ் என்றனர்!!!!!

இப்போது சொல்லுங்கள் நமது சைவசமயம் நமது மண்ணில் வளருகின்றதா??? ஆக; நமது மண்ணிலேனும் நமது சமயத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க முன்வருவோமாக!!!

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
திருச்சிற்றம்பலம்
மேலும் படிக்க...