"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Sunday, December 11, 2011

திருவண்ணாமலை -கார்த்திகைத் திருவிழா

திருவண்ணாமலை பற்றிய காணொளி காட்சி









கார்த்திகைத் திருவிழா நிழற்படக் காட்சிகளைக் காண்பதற்கு கீழ் உள்ள சுட்டியை அழுத்துமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

கார்த்திகைத் திருவிழா
பிடாரி அம்மன் உற்சவம்
முதலாம் நாள்(கொடியேற்றம்)
இரண்டாம் நாள்
மூன்றாம் நாள்
நான்காம் நாள்
ஐந்தாம் நாள்
ஆறாம் நாள்
ஏழாம் நாள்
எட்டாம் நாள்
ஒன்பதாம் நாள்
பத்தாம் நாள்(மகா தீபம்)
தீர்த்தத் திருவிழா

எல்லாம் திருவருட் சம்மதம்

சைவநெறி என்று பறைவோம்
திருநெறித் தமிழராய் வாழ்வோம்

திருச்சிற்றம்பலம்
மேலும் படிக்க...

Wednesday, October 5, 2011

சகலகலாவல்லி மாலை-பொருளுரை

ஸ்ரீகுமரகுருபரர் காசிக்கு சென்றபோது அங்கு மீண்டும் சைவாலயம் அமைத்திட விரும்பினார். அதற்கு காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக இருந்த தாரா ஷிக்கோஹ் என்பவரிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. கொடுங்கோல் ஆட்சி செய்த அவர்களிடம் அனுமதி பெறுவதென்பது முயல் கொம்பு காரியம் என அனைவரும் அறிவுறுத்தியிருந்தனர். எனினும் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அவரிடம் சென்று ஹிந்துஸ்தானி மொழிபெயர்ப்பாளரை அழைத்துச் சென்று காசியில் ஆலயம் அமைக்க நிலம் கேட்டபோது ஹிந்துஸ்தானி தெரியாத காரணத்தினால் அவமதிக்கப்பட்டார். கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது! எனினும் சிந்தை கலங்காது, கலைவாணியைத் துதித்து சகலகலாவல்லி பாமாலை இயற்றிச் சூட்டி ஹிந்துஸ்தானி , உருது மொழியாற்றல்களை ஒரேநாளிலேயே பெற்றுக்கொண்டார்.


தனது தவச்சிறப்பால் சிங்கத்தை தன்வசப்படுத்தி அதன்மேல் அமர்ந்து தாரா ஷிக்கோஹ்யின் அவைக்குச் சென்று தனது கோரிக்கையை ஹிந்துஸ்தானியில் கேட்டு, ஹிந்துஸ்தானியிலே அவனுடன் சரளமாக கதைத்து நாணச்செய்து அவனிடம் இருந்து இடத்துக்குரிய அனுமதியைப் பெற்று காசிமடம் ஆகியவற்றை அமைத்துக் கொண்டார். 


இவையாவும் கலைவாணியின் அருள்மழையால் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளுக்கு  கைகூடியது.எனவே, நாமும் கலைவாணியின் அருள்மழையைப் பெற்றிட இயற்றிய தமிழ்மழையை கலைவாணிமேல் பொழிகின்ற சகலகலாவல்லி பாமாலையை பாடுவோமாக!


"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 
பல்லோரும் ஏத்தப் பணிந்து' என்று மாணிக்கவாசகப் பெருமான் பொருளுணர்ந்து பாட வேண்டியதன் சிறப்பை திருவாசகத்தின் சிவபுராணத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே பொருளுணர்ந்து பாடுவோமாக! 

1)வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் 
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் 
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் 
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 
பதம் பிரித்து அமைந்த பாடல்:

வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத் 
தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து 
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் 
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.


சகலகலாவல்லியே -
எல்லாக் கலைகளையும் அளிக்கின்ற வல்லமை உடையவளே

சகம் ஏழும்அளித்து உண்டான் உறங்க -
காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக அவற்றை உண்டு, (ஆலிலைமேல்) துயின்றான்.
ஊழிக் காலத்தில் உலகங்கள் அனைத்தையும் உண்டு காத்த வண்ணம் ஆல் இலைமேல் துயில்வார் என்பது புராணச்செய்தி.

ஒழித்தான்பித் தாக - அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான்.

உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே - உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே!

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாதுகொலோ - உனது திருவடிகளைத் தாங்கும் பேறு வெண்தாமரையைத் தவிர்த்து எனது உள்ளமாகிய வெண்தாமரைக்கு வாய்க்கப்பெறாதது முறையா?

காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக உண்டு, ஆலிலைமேல் துயின்றான். அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான். ஆனால், உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரமன், கலைமகளாகிய உன்னை மனைவியாகப் பெற்று மகிழ்ந்தான். பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே! சகலகலா வல்லியே! உனது திருவடிகளை வெள்ளைநிறத் தாமரையே தாங்கியுள்ளது! வஞ்சனையற்ற குளிர்ந்த எளியேனின் மனம் வெண்தாமரை போல் ஆகிவிட்டது. எனவே எளியேனின் வெண்தாமரை போன்ற மனதினை உனது திருவடிகளை தாங்கும் ஆசனம் ஆக்கிக்கொள்ளக்கூடாதா? இன்னும் அத்தகு தகுதியான வெண்மையுள்ளம் வாய்க்கப்பெறவில்லையா? இது தகுமா? 

"வெள்ளைநிற மல்லிகையோ?

வேறெந்த மாமலரோ?

வள்ளல் அடியிணைக்கு

வாய்த்த மலரெதுவோ?

வெள்ளைநிறப் பூவுமல்ல!

வேறெந்த மலருமல்ல!

உள்ளக் கமலமடி

உத்தமனார் வேண்டுவது!" - என்ற சுவாமி விபுலானந்த அடிகளின் பாடலையும்

'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வர்' என்னும் திருக்குறளின் மலர்மிசை ஏகினான் என்பதன் பொருளையும் இங்கு பொருத்து உணர்க!



2)நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் 
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் 
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 
பதம் பிரித்து அமைந்த பாடல்:
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியில் பணித்தருள் வாய் பங்கயாசனத்தில் 
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால் 
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே. 

பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே- தாமரை மலராகிய ஆசனத்தில் வீற்றிருப்பவளே! பசும்பொன்கொடி போன்றவளே!
கனதனக் குன்றும்-குன்றுபோன்ற பெரிய தனங்களை உடையவளே!

ஐம்பால்- ஐந்து கால் எடுத்துப் பின்னப்பட்டிருக்கும் பெண்-கூந்தல் ஒப்பனை
ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே - ஐந்து பகுதிகளாக பகுத்து ஒப்பனை செய்யப்பட்ட காடுபோல் அடர்ந்த கூந்தலை தாங்கியுள்ளவளே! கருப்பாக இனிப்பவளே!

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் -  அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருள் சுவையும் சொல் சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிகளையும் ( ஆசுகவி,மதுரகவி,சித்திரக்கவி,வித்தாரக்கவி)

பாடும் பணியில் பணித் தருள்வாய்- இடையறாது பாடும் பணிக்கு எளியேனை பணித்து அருள் செய்வாயாக!

ஆசுகவி - யாரும் இதுவரை பாடியிராத வகையில் யாரும் பாடியிராத பொருளின்பத்தை தரும் வண்ணம் புதிய புதியதாக பாடல்களை இயற்றும் கலை


மதுரகவி- இசைநடையில் கவி எழுதும் கலை


சித்திரக்கவி - தேர் போன்ற சித்திரத்தில் அடுக்கி வைக்கலாம் போன்ற அமைப்பில் சொற்களை அழகுற அடுக்கி பாடுகின்ற கலை


வித்தாரக் கவி - பலவிதமான அமைப்புகளில் அமைத்து பாடுவது 


வெண்தாமரையை ஆசனமாகக் கொண்டிருப்பவளே! பசும்பொன் கொடி போன்றவளே! குன்றுபோலுள்ள் பெரிய தனங்களை உடையவளே! ஐந்து பகுதிகளாகப் பகுத்து அழங்கரிக்கப்பட்ட காடுபோல் அடர்த்தியான கூந்தலை தாங்கியிருப்பவளே! கரும்பாக இனிப்பவளே! சகலகலாவல்லியே! அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருட்சுவையும் சொற்சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிதைகளை இடையறாது பாடும் பணிக்கு எளியேனைப் பணித்து அருள் செய்வாயாக!

3)அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் 
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் 
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு 
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில் 
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித் 
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு 
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.

உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே -
எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே!

உளம் கொண்டு - விருப்பம் கொண்டு
களிக்கும் கலாப மயிலே - மகிழ்ச்சியடையும் மயில் போன்றவளே
சிந்தக்கண்டு - பொழியக்கண்டு

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்து -நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக

உன் அருள்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடும் கொலோ -  உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா?

எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே!
நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக ஆன்மீக அனுபவத்தை பெற்று உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா? அவ்வாறான அரும்பெரும் பேறை அருளுவாயாக!

4)தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் 
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலுந் 
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று 
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் 
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும் 
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று 
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

வடநூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே -  கடல் போன்ற வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 

செந்நாவில் நின்று -  நல்ல நாவினின்று 

தூக்கும் பனுவல் -  அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் 
துறைதோய்ந்த கல்வியும் - எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் 

சொற்சுவை தோய் வாக்கும் - சொற்சுவை நிரம்பிய வாக்கும் 

பெருகப் பணித்துஅருள் வாய்- பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக

கடல் போன்று விரிந்த எண்ணிலாத வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த அருஞ்செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 
அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் நாள்தோறும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக!

5)பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் 
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத் 
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக் 
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய பொற்பாத பங்கேருகம் என் 
நெஞ்சத் தடத்து அலராதது என்னே நெடுந் தாள் கமலத்து 
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக் 
கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே.


நெடுந் தாள் கமலத்து -  (திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த) நீண்ட தண்டிடைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும்
அஞ்சத்துவசம் உயர்த்தோன்- அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனும்

செந்நாவும் - சிறந்த நாவினையும்
அகமும் -மனதினையும் 

வெள்ளைக் கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய்-  ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! 

பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய - செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் 

பொற்பாத பங்கேருகம் -  பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள்

என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே - எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ?

தாள் - கால், கயிறு, முயற்சி,படி,காகிதம்,வைக்கோல்,கடையாணி,தாழ்ப்பாள்,திறவுகோல் (கழகத் தமிழ்க்கையகராதி) சிலர் நீண்ட இதழை உடைய தாமரை என்று பொருள் சொல்கின்றனர். அது பொருந்துமா என்று தெரியவில்லை! கழக அகராதிப்படி தாள் என்பது தாமரையின் தண்டையே பெரிதும் குறிக்கும்! 

திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த நீண்ட தண்டிடைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும் அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனுமாகிய நான்முகனின் சிறந்த நாவினையும் மனதினையும் ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! சகலகலாவல்லியே!
செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் செம்மையான பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள், எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ? 
பொய்கைகளில் தாமரை மலர்வது இயல்பு. எனது மனமும் நீர்போன்று மென்மையாக உள்ளது. குளிர்மையாக உள்ளது. நீர்நிலைகளில் எப்படித் தாமரை மலர்வது இயல்போ மென்மையாலும் குளிர்மையாலும் நீர்நிலை போல் ஆகிவிட்ட எனது மனமெனும் பொய்கையில் தாமரை என்னும்  உனது திருவடிகள் இன்னும் மலராது இருப்பது முறையோ என்று வருந்துகின்றார் குமரகுருபரர்.

6)பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் 
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும் 
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் 
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான் 
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும் 
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர் 
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 

எழுதா மறையும் - எழுதாமறையாகிய வேதத்திலும் 
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் -வானம்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று 
அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் - அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! 
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் - பண், பரதம்,நற்கல்வி, இனிய சொற்களால் கொண்டு கவிகள் (நூல்கள்) 
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய் - விரும்பும் காலத்தில் எளிதில் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக

வானம்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று என்னும் ஐம்பூதங்களிலும் எழுதாமறையாகிய வேதத்திலும் அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! சகலகலாவல்லியே!  பண், பரதம்,நற்கல்வி, இனிய சொற்களால் கொண்டு கவிகள் (நூல்கள்) இயற்றும் ஆற்றல் ஆகியனவற்றையெல்லாம் விரும்பும் காலத்தில் எளிதில் எளியேன் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக!

7)பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் 
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர் 
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம் 
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 



பதம் பிரித்து அமைந்த பாடல்:
பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால் 
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர் 
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் 
காட்டும் வெள் ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே!
உளம்கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் - அடியார்கள் விரும்பி எண்ணிப் புனைகின்ற முத்தமிழ்க் கலை நூல்களில் காணப்படுகின்ற தீம்பால் அமுதம் (போன்ற மெஞ்ஞானத்தை) தெளிவிக்கின்ற
ஓதி/ ஓதிமம்-அன்னம்
பேடு -பெண்
பாட்டும் பொருளும் - பாட்டும் பாட்டுக்குரிய பொருளும் 
பொருளால்பொருந்தும் பயனும்- பாடலில் பொருந்து நிற்கின்ற பயனும்
என்பால் கூட்டும்படி - எளியேனிடத்து வந்தடையும் வண்ணம் 
நின்கடைக்கண் நல்காய் - உனது கடைக்கண் பார்வையை அருள்வாயாக!

அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்ளும் என்பர் கவிஞர். பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு கலைமகள் வழங்கி அருள்பாலிப்பாள் என்பதை கலைமகளை வெண்மையான பெண் அன்னம் என்று சுட்டுவதன் வாயிலாக குமரகுருபரர் நமக்கு உணர்த்துகின்றார்.

அடியார்கள் நல்மனதால் எண்ணிப் புனைகின்ற நூல்களில் காணப்படுகின்ற வீடு பேற்றின்பமாகிய பாலையும் உலகியல் இன்பமாகிய நீரையும் தனித்தனியாக பிரித்தறிகின்ற தன்மையை உலக மக்களுக்கு உணர்த்தும் வெண்மையான பெண் அன்னம் போன்றவளே!
சகல கலாவல்லியே! பாட்டும் பாட்டுக்குரிய பொருளும் பாடலில் பொருந்து நிற்கின்ற பயனும் எளியேனிடத்து வந்தடையும் வண்ணம் எளியேனுக்கு கலைமகளே.....உமது கடைக்கண் பார்வையை அருள்வாயாக!
அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்ளும் என்பர் கவிஞர். பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு கலைமகள் வழங்கி அருள்பாலிப்பாள் என்பதை கலைமகளை வெண்மையான பெண் அன்னம் என்று சுட்டுவதன் வாயிலாக குமரகுருபரர் நமக்கு உணர்த்துகின்றார்.

8)சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல 
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர் 
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும் 
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல 
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம்சேர் 
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும் 
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 

நளினஆசனம்சேர் செல்வி- செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் 
ஒருகாலமும்- எக்காலத்திலும்
சிதையாமை நல்கும் -காலத்தால் அழியாத 
கல்விப் பெருஞ்செல்வப் பேறே- கல்வி என்னும் பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! 
 சொல் விற்பனமும்-சொல்வன்மையும்
அவதானமும்-அட்டாவதானம் தசாவதானம் சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும்( நினைவாற்றல் சக்தி) 
கவி சொல்லவல்ல நல்வித்தையும் -  சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத்தன்மையும்
தந்து அடிமைகொள் வாய்நளின - அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக!

செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளின் அருள் நமக்கு வாய்க்கப்பெறவில்லையே என்று வருந்துகின்ற நிலை எக்காலத்திலும் ஏற்படாவண்ணம் காலத்தால் அழியாத கல்வி என்னும் பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! சகல கலாவல்லியே! 
சொல்வன்மையும், அட்டாவதானம் தசாவதானம் சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும்( நினைவாற்றல் சக்தி) சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத்தன்மையும்
எளியேனுக்கு அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக!

9)சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றம்என்ன 
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலம் தோய்புழைக்கை 
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை 
கற்கும் பதாம்புயத் தாளே சகல கலாவல்லியே. 

பதம் பிரித்து அமைந்த பாடல்:
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன 
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை 
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை 
கற்கும் பதாம்புயத் தாளே! சகலகலா வல்லியே! 

நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடி - நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானை
அரசன்னம்- அரச அன்னமும்
நாண-நாணும்படி 
நடை கற்கும் பதாம்புயத் தாளே-அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே
சொற்கும் பொருட்கும் -சொல்லுக்கும் பொருளுக்கும் 
உயிராம் மெய்ஞ்ஞானத்தின் - உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவத்தின்
தோற்றம் என்ன நிற்கின்ற - (தோற்றமென  நிற்கின்ற) - தோன்றி நிற்கின்ற 
நின்னை நினைப்பவர் யார் - நினைப்பவர்கள் யாரும் இல்லை

நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானையும் அரச அன்னமும் நாணும்படி அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே! சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவமாக தோன்றி நிற்கின்ற உன்னை நினைத்து உணர்ந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள் யாரும் இல்லை! (அவ்வாறு உணர்ந்து கொள்வது எளிதான ஒன்றல்ல என்று சுட்டுகிறார் குமரகுருபரர் ) அவ்வாறான பக்குவ ஆற்றலை எளியேனுக்கு அருள்வாயாக! 

10) மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என் 
பண்கண்ட அளவில் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் 
விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் விளம்பில்உன்போல் 
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் 
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம் 
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் 
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

படைப்போன் - படைக்கும் தெய்வம் நான்முகன் 
முதலாம் விண்கண்ட தெய்வம் - முதலாக சிறப்புடைய தெய்வங்கள் 
பல்கோடி உண்டேனும்  - பலகோடி இருந்தாலும் 
விளம்பில்- தெளிந்து கூறில்
உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ - உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை 
மண்கண்ட வெண்குடைக் கீழாக- மண்ணுலகம் முழுவதையும் தன் வெண்கொற்றக்குடையின் கீழ்
மேற்பட்ட மன்னரும்- சிறப்புடைய மன்னரும்  
பண்கண்ட அளவில் - பாடலைக் கேட்ட மாத்திரத்தில் 
பணியச் செய்வாய்- பணிந்து வணங்க அருள்செய்வாயாக!

படைக்கும் தெய்வம் நான்முகன் முதலாக சிறப்புடைய தெய்வங்கள் பலகோடி இருந்தாலும் உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை என்று தெளிந்து கூறும்படியாக விளங்குபவளே! சகலகலாவல்லியே!
மண்ணுலகம் முழுவதையும் தன் வெண் கொற்றக்குடையின் கீழ் கொண்டு ஆட்சிசெய்யும் மன்னரும் எளியேனின் இனிய தமிழ்ப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பணிந்து வணங்க அருள்செய்வாயாக!
குறிப்பு:- தமிழ்ப் பெரியசாமி என்னும் அறிஞரின் உரையை எளியேனின் பதவுரையில் பெருமளவில் பயன்படுத்திக் கொண்டேன். அறிஞர் தமிழ்ப் பெரியசாமி அவர்கட்கு நன்றி. இணையத்தில் சகலகலாவல்லி மாலைக்கு பொருள் விளக்கம் பெருமளவில் உண்டெனினும் அவற்றில் பெருமளவு பொருட்பிழைகளும் உண்டு. பொருட்பிழைகள் இல்லாத விளக்கவுரையை இணையத்தில் எளியேனால் காணமுடியவில்லை! எனவேதான் தமிழறிஞர் ஒருவரின் உரையைத் தேடினேன். தமிழ்ப் பெரியசாமி என்னும் நல்லறிஞரின் உரையை கண்டேன். அவருடைய உரையை பெருமளவு பயன்படுத்தியே எளியேன் விளக்கவுரை எழுதியுள்ளேன். 

முறையான பொருளுரையுடன் கூடிய சகலகலாவல்லி மாலை இணையத்தில் இடம்பெற வேண்டும் என்ற அவா எளியேனின் நெஞ்சுள் பெருக்கெடுத்து."சகலகலாவல்லி மாலை-பொருளுரை" ஆகியுள்ளது! இங்கு ஏதேனும் இலக்கணக்குற்றம் இருக்கும் என்றால் எளியேனுக்கு எடுத்தியம்புக. இருந்தால் திருத்த வேண்டியது கடமையல்லவா? 

நன்றி
மேலும் படிக்க...

Wednesday, August 31, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-6

ஐந்தொழில் தத்துவத்தை விளக்கும் சிவபெருமானின் கூத்தைக் கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்து நிற்கும் அருமையை கடந்த பதிவில் பார்த்தோம். இப்பகுதியில் ஐந்தொழில்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.

வழமைபோலவே ஒரு வேண்டுகோள்!  முன்னைய பகுதிகளை படித்து தெளிவுபெற்றுக் கொண்டு இப்பதிவை படித்தால் பூரணமான தெளிவு ஏற்பட வாய்ப்புண்டு.

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 1

சைவநெறி கூறும் ஐந்தொழில்களாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளல் என்பனவாகும். முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான் தானே இவையனைத்தையும் செய்வதும் உண்டு. பிரம்மா திருமால் உருத்திரனைக் கொண்டு செய்விப்பதும் உண்டு. இவர்கள் தமது புண்ணிய விசேடத்தால் முழுமுதற்பொருளாகிய சிவப்பரம்பொருளிடம் அதிகாரசக்தியை அவருடைய ஏவலால் பெற்று படைத்தல்,காத்தல்,அருளல் ஆகியவற்றை ஆற்றுவர்.

மறைத்தலை மகேசுவரனும் அருளலை சதாசிவனும் ஆற்றுவர்.

இறைவனாகிய சிவப்பரம்பொருள் எந்தவொரு கருவி காரணங்களும் இன்றி நினைத்த மாத்திரத்தில் ஐந்தொழில்களை மேற்கொள்வார்.

வேதமரபுப்படி படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய மூன்று தொழில்களே பேசப்படும். ஆனால் சிவாகம மரபுப்படி ஐந்தொழில்கள் சொல்லப்படுகின்றன.
காக்கும்போது மறைந்து நிற்றலால் மறைத்தல் காத்தலிலும் உயிர்கள் இளைப்பாறும் பொருட்டு அழித்தல் நடைபெறுவதால் அருளல் அழித்தலிலும் அடங்கும்.

படைத்தல் - உள்ளதைத் தோற்றுவித்தல் (இல்லாததை தோற்றுவித்தல் எனப்பொருள் படமாட்டாது. உதாரணமாக பனிக்கட்டியைத் தோற்றுவித்தனர் என்றால் அங்கு நீர் பனிக்கட்டியாக மாறியுள்ளது என்றுதான் பொருள்படும். அதுபோலவே சூக்குமநிலையில் இருந்ததை(மாயையில் இருந்து) தூலநிலைக்கு கொண்டு வருதலே படைத்தல் எனப்படும்.அதாவது காரணநிலை(சூக்குமநிலை)யில் இருந்து காரியநிலைக்கு(தூலநிலைக்கு) கொண்டு வருதல். மாயையில் இருந்து தனு,கரண,புவன போகங்களைப் படைத்தல்.

காத்தல் - தூலநிலைக்கு கொணர்ந்தவற்றை அந்தநிலையில் தொடர்ந்தும் நிலைபெறச்செய்தல். அதாவது தனு,கரண,புவன போகங்களை உயிர்களின் வினைப்பயனுக்கு ஏற்ப அனுபவிக்கும் வரை நிலை பெறச்செய்தல்

அழித்தல் - தூலநிலையில் இருந்ந்து சூட்சும்ச் நிலைக்கு வருதல், அழித்தல் என்பது முற்றாக இல்லாமல் செய்தல் என்று பொருள் அன்று.
பிறவிச்சுழற்சியால் உயிர்களுக்கு ஏற்படும் களைப்பு நீங்கும் பொருட்டு படைத்தவகைகளை மீளவும் மாயையில் ஒடுக்குதல்.

மறைத்தல் - பற்றுக் கொண்ட உயிர்கள் பக்குவம் பெறுவதற்காக இறைவன் தன்னை மறைத்து உலகத்தையே அவ்வுயிர்கள் காணுமாறு காட்டுதல்.

ஆணவம் காரணமாக இறைவனே உயிர்களுக்கு கன்மம்,மாயை ஆகியவற்றை கூட்டுவித்தான். அதாவது ஆணவ நோய்க்கு மருந்தாக ஏனைய இருமலங்களை கூட்டுவித்தான். மும்மலங்களும் சடப்பொருட்கள். தாமாகத் தொழிற்படாது. இறைவன் அவற்றைத் தொழிற்பட வைத்து அவற்றின் சக்தியை குறைவடையச் செய்கின்றான். சடப்பொருள் தொழிற்பட அதன் சக்தி தேயும் என்பது பௌதீக விஞ்ஞானம்! அதை இங்கு பொருத்தி உணர்க.

அருளல்
- பக்குவம் பெற்று தன்னை நோக்கும் உயிர்களுக்கு தன்னைக் காட்டித் தன்னுடைய திருவடியில் சேர்த்தல்.

எனவே படைத்தல், காத்தல்,அழித்தல் என்பன மாயையிலும் மறைத்தல்,அருளல் உயிர்களிடத்திலும் நிகழ்கின்றன.


சிவபெருமான் ஐந்தொழில்களை தனது திருநடனத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றார்.சிவப்பரம்பொருளின் திருநடனத்தை மூன்று வகையாக நோக்கலாம்.
1.ஊன நடனம்
2.ஞான நடனம்
3.ஆனந்த நடனம்

ஊன நடனம்
ஊன நடனத்தினூடாக உயிர்களுக்கு கட்டுண்ட உலகவாழ்வை அளிக்கின்றார். அதாவது உயிர்களுக்கு பிறப்பை வழங்குவது. இவ்நடனத்தின் வழியாக உயிர்கள் உலகச்சிற்றின்பத்தை துய்க்கின்றன. ஊன நடனத்தை குறை கூத்து என்றும் வழங்குவர். குறைவான கால அளவுடைய இன்பங்களை(உலகியல் சிற்றின்பங்கள்) தருவதால் குறைகூத்து என்ப்ர்.


தூல ஐந்தொழில் - உலகத்தை படைத்து காத்து அழித்து மறைத்து அருளுகின்ற ஐந்தொழில்.

சூக்கும ஐந்தொழில் -  சர்வ சங்கார காலத்தில் உலகம் முழுவதையும் அழித்த பின்னர் மீண்டும் தோற்றுவிக்க ஆற்றும் ஐந்தொழில்.

அதிசூக்கும ஐந்தொழில் - உயிர்களின் அறிவுக்கு அறிவாய் இருந்து அறிவைத் தோற்றுவித்தல் ஒடுக்குதல் செய்தல். இறைவன் உயிருக்கு உயிராக உள்நின்று உணர்த்துவதனாலேயே உயிருக்கு அறிவு நிகழுகின்றது.

ஞான நடனம் 
உயிர்களுக்கு வீட்டைத் தருவது.
ஊன நடனத்தால் உலக இன்பங்களை உயிர்கள் அனுபவிக்கின்றன.படிப்படியாக உலக இன்பம் நிலையற்றது என்பதை உணர்ந்து பக்குவப்பட்டு; சிவபெருமானை அடைய நாடிநிற்கும்போது அவ்வுயிர்களின் மலங்களை நீக்கும்பொருட்டு ஆற்றும் ஐந்தொழில்.

ஞான நடனத்தில் இறைவனின் ஐந்தொழில்கள்
படைத்தல் - மாயையை உதறுதல்
காத்தல் - வல்வினையைச் சுடுதல்
அழித்தல் - மலம் சாய அமுக்கல்
மறைத்தல் - உலகத்தை மறைத்தல்
அருளல் - உயிர்களை ஆனந்த ஒளியில் அழுத்துதல்

ஆனந்த நடனம்
ஞான நடனத்தால் பேரின்பத்தை நுகர தலைப்பட்ட சுத்த ஆன்மாக்கள் தொடர்ந்து பேரின்பத்தை நுகரும் பொருட்டு, அவர்களின் அறிவு இச்சை செயல்களைத் தன்னையே பொருளாகப்பற்றி அழுந்தி இன்பத்தை நுகருமாறு செய்தற்கு ஆற்றும் ஐந்தொழில்.

 ஆனந்த நடனத்தில் இறைவனின் ஐந்தொழில்கள்
படைத்தல் - சிவானந்த அனுபவத்தை தோற்றுவித்தல்
காத்தல் - அந்த அனுபவத்தை காத்தல்
அழித்தல் - தற்போதத்தை அழித்தல்
மறைத்தல் - உயிர்,சிவம் இரண்டு என்பதை மறைத்தல்
அருளல் - பேரின்பத்தை அழுந்தி அனுபவித்தல்

சிவபெருமான் ஆடுகின்ற நடனம் ஒன்றுதான். ஆனால் உயிர்களின் பக்குவத்தன்மைக்கு ஏற்ப அது ஊன,ஞான,ஆனந்த நடனமாக அவ்வுயிர்களுக்கு தோன்றுகின்றது.

இறைவனின் ஐந்தொழிலை விளக்கும் இறைவனின் திருக்கூத்துப்பற்றி விரிவாக அறிந்து கொள்வதற்கு தமிழர் கண்ட தாண்டவக்கோன் என்னும் கட்டுரையைப் படிக்க. அடுத்த பகுதியில் அத்துவிதம் என்றால் என்ன? சங்கரரின் அத்துவிதத்தை கேவலாத்துவிதம் என்று ஏன் சொல்வர்? சுத்தாத்துவிதம் என்றால் என்ன? இவற்றை சற்று விளக்கமாகவும் விரிவாகவும் பார்ப்போம்.

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்7

மேலும் படிக்க...

Monday, August 15, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-5

பகுத்தறிவுள்ளோர் சைவசித்தாந்திகளா? அன்றி பகுத்தறிவுப்பகலவன் என்று கொளுத்துகின்ற கடும் வெய்யிலிலும் கருப்புச்சட்டை போட்டு விஞ்ஞான அறிவுக்கு முரணாக திரிகின்றவர்களா?  விடையை இந்தப்பதிவை முழுமையாகப் படித்தால் பெற்றுக்கொள்ள முடியும்.சரி; நாங்கள் பகுதி ஐந்துக்குள் நுழைவோம். சைவசித்தாந்தத்தை அறிந்து கொள்வோம்.
சிவபெருமான் அருவம்,உருவம்,அருவுருவம் ஆகிய வடிவங்களைக் கடந்தவன் என்றும், அருவம்,உருவம்,அருவுருவம் ஆகிய வடிவங்களை ஏன் பூணுகின்றார் என்றும் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். ஐந்தொழில்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர், இறைவனின் வடிவங்கள்பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது என்று கருதுகிறேன். பூரணமான தெளிவை ஏற்படுத்த அவை உதவும்.

உருவத்திருவடிவங்கள் மூன்றுவகையாக கருதப்படுகின்றன.

1.போக வடிவம்:
உயிர்களுக்கு உலக இன்பத்தை வழங்கும் பொருட்டு, மணக்கோலம் பூண்டிருப்பது.உயிர்களின் பொருட்டு கல்யாண சுந்தரவடிவம் தாங்கினும் சிவபெருமான் போகம் நுகருபவதில்லை.

உ+ம் - கல்யாண சுந்தர மூர்த்தி வடிவம்



2.யோக வடிவம் - உயிர்களுக்கு ஞானத்தை வழங்கும் பொருட்டு, குருவடிவம் கொண்டிருப்பது.

உ+ம் :- தென்முகக்கடவுள் வடிவம்


3. வேக வடிவம் - இறைவனை நினைத்து வழிபடும் அன்பர்களின் துன்பத்தைப் போக்கும் பொருட்டு வேகம் கொண்டவராக போர்க்கோலம் பூண்டிருப்பது. உயிர்களின் வினையைப் போக்குவதற்கு தாங்கும் வடிவம் இதுவாகும்.
அட்ட வீரட்டச் செயல்கள் ஆற்றியபோது எடுத்த வடிவங்கள் இவற்றுக்கு உதாரணங்களாகும்.காலனை உதைத்தது,சலந்திரனைத் தண்டித்தது,திரிபுரம் எரித்தது என்பன உதாரணங்களாகும்.

உ+ம் - காலசம்கார மூர்த்தி

இறைவன் பூணுகின்ற தாதான்மிய சம்பந்தத்தில் மூவகை வடிவங்களாகிய அருவம்,அருவுருவம்,உருவம் தாங்குதலையும்; உருவவடிவத்தின் மூவகைத்தன்மைகளையும் பார்த்தோம். இனி; தாதான்மிய சம்பந்தத்தினால் இறைவன் ஆற்றும் ஐந்தொழில் பற்றி பார்ப்போம்.


சிவபெருமானின் ஐந்தொழிலை சிவபெருமானின் திருநடனத்தினூடு காண்பது சைவசமயமாகும்.எனவே; இறைவனின் ஐந்தொழில்களை உணர்த்தும் இறைவனின் கூத்தை வெளிநாட்டாரும் அறிஞர்களும் விஞ்ஞானிகளும் கண்டு வியப்படைந்துள்ளர்.  விஞ்ஞானத்தை விஞ்சிய மெஞ்ஞான திருநடனத்தைக் கண்டு எமது பண்பாட்டுச்சிறப்பை பாராட்டாதோர் எவரும் இலர்.

முதலில்; இறைவனின் ஐந்தொழில் ஆற்றும் கூத்தினைக் கண்டு விஞ்ஞானிகளும் அறிஞர்களும் கூறிய கருத்தைக் காண்போம்.

FRITJOF CAPRA எனும் மேலைத்தேய இயற்பியல் வல்லுனர்; நவீன இயற்பியலையும் நடராசப் பெருமானின் திருநடனத்தையும் அழகாக தொடர்புபடுத்தி "every subatomic particle not only performs an energy dance, but also is an energy dance; a pulsating process of creation and destruction…without end…For the modern physicists, then Shiva's dance is the dance of subatomic matter. As in Hindu mythology, it is a continual dance of creation and destruction involving the whole cosmos; the basis of all existence and of all natural phenomena." என்கிறார்.

பண்டைய கால இந்திய மக்கள் ஆக்கல்,காத்தல்,அழித்தல் அடங்கிய தாண்டவத்தை இறைவடிவாகக் கண்டு சிலைகளாய் வடித்ததாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் CARL SAGAN குறிப்பிடுகின்றார்.

பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது முதற்சில கணங்களில் நடந்த நிகழ்வுகளை ஆராயும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள ஜெனிவாவில் உள்ள ஐரோப்பிய அணு இயற்பியல் ஆராய்ச்சிக்கூடத்தின்(EUROPEAN CENTER FOR PARTICLE PHYSICS RESEARCH-CERN) முகப்பில் ஆறு அடி உயரமுள்ள நடராசர் சிலை நிறுவப்பட்டிருக்கின்றது. இது தமிழர் பண்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள மகுடம் என்றால் மிகையில்லை. இச்சிலையடியில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய நடராசரின் சமசுகிரத துதியுடன் "Hundreds of years ago, Indian artists created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. In our time, physicists have used the most advanced technology to portray the patterns of the cosmic dance. The metaphor of the cosmic dance thus unifies ancient mythology, religious art and modern physics." எனும் CAPRA இன் வசனம் பொறிக்கப்பட்டிருக்கின்றது.

இப்போது சொல்லுங்கள் பகுத்தறிவுள்ளோர் சைவசித்தாந்திகளா? அன்றி கொளுத்துகிற கடும் வெய்யிலும் கருப்புச்சட்டை போட்டு விஞ்ஞான அறிவுக்கு முரணாக திரிகின்றவர்களா?

சரி; அடுத்த பகுதியில் ஐந்தொழில் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.


சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 6




மேலும் படிக்க...

Sunday, July 31, 2011

சைவக்காவலர் சிவத்திரு.இ.நமசிவாயம் ஐயா சிவபதம் பெற்றார்!


திருக்கேதீசுவரத் திருத்தலத்தின் தலைவரும் ஈழத்து சைவக்காவலருமான சிவத்திரு இராசப்பிள்ளை நமசிவாயம் ஐயா 99ம் அகவையில் சனிக்கிழமை காலை கொழும்பில் தனது பூதவுடலை விட்டு நீங்கி சிவபதம் பெற்றார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகக் கொண்ட சிவனடியார் நமசிவாயம் ஐயா, 1912ஆம் ஆண்டு சித்திரை மாதம் 11ஆம் நாள் பூவுலகில் இராசப்பிள்ளை, சிதம்பரனாச்சியார் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார்.  ஐயா ஆரம்பக்கல்வியை வடமராச்சியில் உள்ள விக்டோரியா கல்லூரியிலும் உயர்கல்வியை யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியிலும் கற்றார். சட்டத்துறையில் தனது மேற்படிப்பை மேற்கொண்டு 1941 இல் சட்டத்தரணியாக பணியாற்ற தொடங்கினார். விஜயலஷ்மி அம்மையாரை திருமணம் செய்தார். இவர்கள் நான்கு பிள்ளைகளுக்கு பெற்றோராயினர்.

ஈழத்தில் மட்டுமற்றி தமிழகத்திலும் சைவப்பணிகள் ஆற்றி 64ஆம் நாயனாராக போற்றத்தக்க பேறைப்பெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாலவரால் ஆரம்பிக்கப்பட்ட திருக்கேதீசுவரத் திருப்பணி சைவப்பெரியார் சிவபாதசுந்தரம் அவர்களாலும், சேர். கந்தையா வைத்தியநாதன் அவர்களாலும் தொடரப்பட்டு சிவத்திரு.இ.நமசிவாயம் ஐயாவால் பெரிதும் வளர்த்தெடுக்கப்பட்டது.

பல்வேறு கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி சைவசமயத்தின் மேன்மைகளை ஊடகங்களூடாக நிலைநாட்டினார். திருநெறிச்சைவ சித்தாந்த வளர்ச்சிக்கு ஈழத்தில் பெரும்பங்காற்றினார். இந்து என்ற சொல்லால் சைவம் என்ற சொல் மழுங்கடிக்கப்படுவதையும்,ஸ்மார்த்த மதம் இந்துமதம் என்ற பெயரில் சைவர்களுக்குள் புகுத்தப்படுகின்றதென்பதையும் சைவமக்களுக்கு உணர்த்தி சைவத்திருநெறிக் காவலராக விளங்கினார். சைவநெறிக்கு முரணான வழிபாடுகளையும் அவ்வழிபாடுகளை நடத்துகின்ற சிவாச்சாரியார் அந்தணர்களையும் கண்டித்தார். எவருக்கும் அஞ்சாது உண்மையை உள்ளபடி உரைத்தார்.சைவத்திருநெறியை பாதுகாக்க தன்னாலான தன்சக்திக்கு மீறிய பணிகளையெல்லாம் ஆற்றினார்.

சிவனடியார் நமசிவாயம் ஐயாவின் பணிகளை நன்குணர்ந்துகொண்ட தமிழக திருவாவடுதுறை ஆதீனம் 2002ஆம் ஆண்டு பொன்னாடை போர்த்தி தங்கமோதிரம் அணிவித்து பொற்கிழி வழங்கி கௌரவித்தமை அனைவருக்கும் மகிழ்வை ஊட்டியது.
 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருக்கு பின்னர் ஈழத்தவர் ஒருவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய கௌரவம் என்றால் அது சிவனடியார் சிவத்திரு.இ.நமசிவாயம் அவர்களுக்கே என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய விடயமாகும்.

இராச இராச சோழனுக்கும் நம்பியாண்டார் நம்பிக்கும் திருக்கேதீசுவர ஆலயத்தில் சிலை அமைத்தார். இவர்களுக்கு முதன் சிலை அமைத்த சைவப்பெரியார் சிவத்திரு .இ.நமசிவாயம் அவர்களே என்றால் மிகையில்லை! கல்கி சஞ்சிகையும் இராச இராச சோழனுக்கு சிலை அமைக்கப்பட்டதை தமிழகத்தில் பதிவுசெய்தது.

போர்த்துக்கேயரால் இடித்தழிக்பட்ட தேவார முதலிகளான திருஞானசம்பந்தப்பெருமான்,சுந்தரமூர்த்தி நாயனார்
ஆகியோரால் பாடல்பெற்ற தலமாக விளங்கிய திருக்கேதீசுவர
ஆலயத்துக்கு கட்டிடப்பணி, சிலை உருவாக்கப்பணி,தேர் உருவாக்கப்பணி என்று எண்ணற்ற பணிகளை சிவனடியார் இ.நமசிவாயம் ஐயா மேற்கொண்டிருந்தமையை பாராட்டி திருக்கேதீசுவர ஆலய திருப்பணிச்சபையின் ஆயுட்காலத்தலைவராக மன்றம் தமக்கு நியமித்து ஐயாவை கௌரவப்படுத்தியது. சபையினால் முதன்முதலில் இவ்வாறான கௌரவம் ஐயாவுக்கே வழங்கப்பட்டமை குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும்.

சிவனடியார் இ.நமசிவாயம் ஐயாவின் இழப்பானது சைவத்தமிழ் உலகிற்கு ஈடுகட்டமுடியாத பேரிழப்பே!
திருக்கைலாயத்திற்கு ஐயாவின் ஆன்மாவை திருநந்திதேவர் அழைத்துச் சென்றிருப்பார் என்பதும் சிவானந்தப்பேறை நிலையாக நுகரும் திருப்பேறு ஐயாவுக்கு வாய்க்கபெற்றது என்பதும் சிவனடியாரின் துணிபு.

ஐயாவின் பூதவுடல் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 4 மணிக்கு பொரளை மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.சிவனடியார் நமசிவாயம் ஐயாவின் பூதவுடலை இறுதியாக வணங்க விரும்பும் சைவ ஆர்வலர்கள்,சைவமக்கள்,சிவனடியார் திருக்கூட்டத்தவர்கள் இலக்கம் 2,அடம்ஸ் அவன்யூ,கொழும்பு -04 என்னும் முகவரியிலுள்ள ஐயாவின் இல்லத்திற்கு செல்லுமாறு பணிவோடு வேண்டிக்கொள்கிறேன்.

எல்லாம் திருவருட் சம்மதம்
திருச்சிற்றம்பலம்

மேலும் படிக்க...