"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, December 21, 2011

சைவசித்தாந்தமும் சங்கரர் அத்வைதமும் -சைவ சித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் - 7

பாரதசமய பண்பாடு என்பது சமய ஆராய்வுகளால் எழுப்பப்பட்டது. வெறுமனே ஒருவர் தோன்றி இதுதான் சமயம்,இதுதான் கடவுள்,இதுதான் சமயநூல்,இதுதான் கடவுளுக்கும் உயிருக்குமான தொடர்ப்பு என்று ஆணையிடப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டது பாரதசமயப் பண்பாட்டு அல்ல! அது பாரதசமயப் பண்பாட்டுக்கு முரணானது!

விஞ்ஞானிகள் ஆராய்வுகளை மேற்கொண்டு கருதுகோள்களை வெளிப்படுத்தி பரிசோதித்து பார்ப்பதுபோல், பாரதசமயப் பண்பாட்டு மெஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் என்ன தொடர்பு என்பதை தமது அனுபவ உணர்வுகள் வாயிலாக ஆராய்ந்து தத்துவநூல்களுடாக மானிடருக்கு வெளிப்படுத்தினர்.

விஞ்ஞானிகளிடம் பல கருதுகோள்கள் எழுவதுபோல் ஒவ்வொருவரும் தமது மெஞ்ஞான சித்திக்கு அமைவாக தமது அனுபவ உணர்வுகளை வெளிப்படுத்தினர். அவற்றை அவர்களுடைய சீடர்கள் மேலும் மேலும் அனுபவ வாயிலாக உணர்ந்து மெருகூட்டினார்கள். இப்படி வளர்ந்ததுதான் பாரதப்பண்பாட்டு சமயத்தத்துவங்கள்.

முன்னைய பகுதிகள்:-
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 1
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 2
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 3
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 4
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 5
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 6


இந்த சமயதத்துவ ஆய்வில் வெளிப்பட்டவையே அத்துவிதம்,துவைதம் என்பனவாம். இதில் அத்துவித தத்துவத்தை அதிகமாக பலர் அனுபவ உணர்வுகளுடாக பலஞானிகள் தமது ஞானசித்திக்கு அமைவாக கண்டறிந்து வெளிப்படுத்தினர். அவையாவன;

சங்கரரின் அத்துவிதம்
விஷிட்டாத்துவிதம்
மெய்கண்டார் அத்துவிதம்

துவைதம்,சங்கரரின் அத்வைதம்,விஷிட்டாத்வைதம் ஆகியவற்றை வேதாந்தம் என்பர். பிரம்மசூத்திரத்துக்கு விளக்கவுரை வழங்குவதனாலேயே வேதாந்தம் என்று கூறுவர். மெய்கண்டாரின் அத்வைதம் சைவசித்தாந்தம்  என்று போற்றப்படும். தென்னாட்டுச் சைவசமயத்தின் சால்பாக சைவசித்தாந்தம் விளங்குகின்றது.

சங்கரரின் அத்துவிதம் ஏகன்மவாதத்தை கொண்டது. அதாவது கடவுளும் ஆன்மாவும் ஒன்றே எனும் கருத்தை வலியுறுத்துவது. விஷிட்டாத்வைதம் ஆன்மா கடவுளிடம் இருந்து வெளிப்பட்டது என்கின்றது.

மெய்கண்டார், நாயன்மார்களால் இலைமறை காயாக சைவசமய திருமுறைகளில் சொல்லப்பட்ட அத்துவிதத்தை அகச்சந்தானகுரவராகிய சத்தியஞானதரிசினிகள் வாயிலாக தெளிவுற்று, அதனை வளர்ப்பதற்கு சிவஞானபோதம் என்னும் சைவசித்தாந்த தமிழாகமநூல் எழுதி குருபரம்பரையை நிறுவினார். இதன் காரணமாக சைவசித்தாந்த அத்துவிதத்தை மெய்கண்டார் அத்துவிதம் என்றும் அழைப்பர்.

சங்கரர், இராமனுசர் போன்றோரின் அத்துவிதக் கருத்துகளில் இருந்து முரண்பட்டு அத்துவிதத்திற்கு சைவத்திருமுறைகளில் காணபட்ட அருமையான விளக்கத்தை உணர்ந்து மெய்கண்டார் சிவஞானபோதமாக வெளிப்படுத்தினார். அதுவே சைவசித்தாந்த அத்துவிதமாகும்.

உலகம்,ஆன்மா ஆகியவை யாவுமே பிரம்மம் என்றால் பிரம்மத்தினை ஆன்மாவாகும் உலகமாகவும் ஆக்கியது எது என்னும் கேள்விக்கு சங்ரரின் அத்வைதம் மாயை என்கின்றது. அப்படியானால் மாயையால் பாதிக்கப்படக்கூடிய பிரம்மம் முழுமுதற்தன்மை உடையதல்ல என்பது உறுதியாகின்றது. குறையுடைய பொருள் என்று ஆகிவிடுகின்றது.

பிரம்மத்தில் இருந்தே ஆன்மாக்கள் வந்தன என்றால் முக்தி என்பது (பிரம்மத்துடன் சேருவது) நிலையற்றதாகின்றது. நிலையற்றதான முக்தியை நாடவேண்டிய அவசியம் என்ன?

ஆக; இவ்வாறான முரண்பாடுகளை.....ஐயங்களை அகற்றும்படி அத்துவிதத்துக்கு சைவசித்தாந்தம் அழகாக விளக்கம் அளிக்கின்றது.

இறைவன் ஆன்மாவுடன் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்கின்றான் என்பது சைவசித்தாந்த கொள்கையாகும்.
அதாவது சைவசித்தாந்தம் என்பது முப்பொருள் உண்மையை வலியுறுத்துகின்றது. பதி(இறைவன்),பசு(ஆன்மாக்கள்),பாசம்(மும்மலங்கள்-ஆணவம்-கன்மம்-மாயை).ஆன்மாக்கள் தொன்றுதொட்டு இருப்பவையாகும். யாராலும் தோற்றுவிக்கப்படாதவை. ஆணவமலத்துள் கட்டுண்டு இருக்கும் ஆன்மாக்களை ஆணவமலத்திலிருந்து விடுவித்து முக்தி அளிப்பதற்காக இறைவன் தனு,கரண,புவன போகங்களைப் படைத்து அவற்றை ஆன்மாக்கள் அனுபவிக்கச் செய்து பக்குவப்படவைத்து மும்மலங்களையும் அறுத்து வீடுபேற்றை நல்குகின்றான் என்கிறது சைவசித்தாந்தம். வீடுபேற்றை பெற்ற ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுப்பதில்லை.ஆக; நிலையான முக்தி!

ஆணவமலத்துள் கட்டுப்பட்டுள்ள ஆன்மா இறைவனை அடையும் வரை தானே இயங்கும் என்று சொன்னால் அது இறைவனின் முழுமுதற்தன்மைக்கு இழுக்கு! தானே யாவற்றையும் அறியும் என்று சொன்னால் அதுவும் இறைவனின் முழுமுதற்தன்மைக்கு இழுக்கு ஆகிவிடுகின்றது! தானே இயங்கும்.....தானே அறியும் அறிவுடையது என்றால் இறைவன் எதற்கு? அவை கடவுளை அண்டியிருக்க வேண்டிய தேவையில்லையே!!!!

தானோ இயங்கும் தானே சிந்திக்கும் எந்திர மனிதர்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயலுவது பற்றியும் அதனது விபரிதங்கள் பற்றியும் இன்று பரவலாக பேசப்படுகின்றது. மனிதனுக்கு சவாலாக இத்தகைய எந்திர மனிதர் அமைந்துவிடுவர் என்பதே மிகப்பெரிய விபரீதமாக பேசப்படுகின்றது. அதுபோல் இயக்கத்துக்கும் அறிவுக்கும் இறைவனிடத்தில் ஆன்மா தங்கியில்லை என்றால் அது இறைவனின் முழுமுதற்தன்மைக்கு இழுக்காகவே அமையும்!

எனவே சைவசித்தாந்தம் உயிர்கள் தானே அறியும் ஆற்றல் அற்றவை என்றும் இறைவன் அறிவிக்க அறிவன என்றும் கூறுகின்றது. அதுபோலவே இறைவன் உயிர்களோடு உடனாக இருந்து இயக்குகிறான் என்கிறது.கடவுள் உயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் உடனாகவும் இருந்து உயிர்களை இயக்குகின்றான்.உயிர்களுக்கு அறிவிக்கின்றான். உயிர்கள் இறைவன் அறிவிக்க இறைவனால் அறிந்து கொள்கின்றன.

கடவுளே தன்னில் இருந்து உயிர்களைப் படைத்தார் என்றால்,அவை மீண்டும் தன்னை வந்தடைய வேண்டும் என்று கருதுகின்றார் என்றால், எதற்காக உயிர்களைப் படைத்தார் என்கின்ற கேள்வி உருவாகின்றது?

ஆனால் இங்கு கடவுளோடு சேருவதே முக்தி ஆகையால்; தன்னோடு வந்து சேருவதற்காக உயிர்களைப் படைக்க வேண்டிய நோக்கம் ஏன் எழுந்தது?

எனவே உயிர்களும் அநாதியானவை என்கின்றது சைவசித்தாந்தம்!!!!

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அநாதி - திருமந்திரம்

அருளுடைய பரமென்றோ அன்று தானே யானுளன் - தாயுமானவர்


முக்தியில்; தன்னோடு நிலையாக இணைத்துக் கொண்டபோதும்; சீவனை சிவமாக்கியபோதும் சீவனால் சிவன்போல் ஐந்தொழில்கள் ஆற்ற முடியாது. சிவனோடு கலந்து சிவமாகி சிவானந்தத்தை நுகருமே ஒழிய; சிவன்போல் தொழில்கள் ஆற்ற முடியாது.

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே." -மாணிக்கவாசகர்


இப்பாடலை நெஞ்சுக்குள் நிறுத்தி உள்ளத்தால் உருகி படித்தால் இப்பாடலில் சூட்சுமமாக சொல்லப்பட்டுள்ள உண்மை புலனாகும்.

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை
-முக்திநெறி அறியாத மூர்க்கரோடு இருந்த என்னை என்பது பொருளாகும். அதாவது ஆணவமலத்துள் அழுத்தி கண்ணில்லாத தேனீபோல் தத்தளித்து துன்பப்பட்டுக்கொண்டிருந்த என்னை என்று பொருள் கொள்க.

பத்திநெறி அறிவித்துப் -பக்தி வழியைக் காட்டி -தனு,கரண,புவன போகங்களைப் படைத்தருளி அதனை அனுபவிக்கச் செய்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிதந்து பக்தி மார்க்கம் தந்து அதனூடாக

பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்து-பழைய வினைகள் எல்லாம் கெட்டொழியும்படி அறிவை பற்றியுள்ள மூலமலத்தை(ஆணவமலத்தை) போக்கி

சிவமாக்கி எனையாண்ட  - சிவமாக்கி என்னை ஆட்கொண்ட - சிவத்தன்மையாக்கி என்னை ஆட்கொண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார்  அச்சோவே - இறைவன் பெருங்கருணையினால் தானே வந்து தனக்கு அருளிய அத்தகைய அருமையை யார் தான் பெறுவர்! 

ஆணவமலத்துள் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த தன்னை அதிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இறைவன் ஆன்மாவாகிய தன்மீது கொண்ட பெருங்கருணையின் நிமித்தம் தன்னை தனு,கரண,புவன போகங்களை அனுபவிக்கச் செய்து பிறவிகள் தந்து அதனூடாக பக்குவப்படவைத்து இன்பம்-துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்கின்ற அருமையை ஏற்படவைத்து கன்மம்,மாயை ஆகியவற்றை உதரியபின் மூலமலமாகிய ஆணவமலத்தை தானே முன்வந்து நீக்கி சிவமாக்கி நிலையான பேரின்பத்தை தந்தருளிகின்றான் என்பதை சூட்சுமமாக இப்பாடலில் உணர்த்துகின்றார் மாணிக்கவாசகர்.

சிவமாக்கி என்னை ஆண்ட என்ற பதமும் அத்தன் எனக்கு அருளியவாறு என்கின்ற பதமும் நமக்கு தெளிவாக ஒருசெய்தியை உணர்த்துகின்றது. அது யாதாயின்; இறைவனே நமக்குள் இருக்கின்ற சிவத்தன்மையை உணரவைத்து(ஒன்றாய்,வேறாய்,உடனாய் ஆன்மாக்களோடு இறைவன் கலந்திருக்கின்ற தன்மையை) நமக்கு வீடுபேறு அருளி நிலையான முக்தியை தந்தருளிகின்றான் என்பதையாகும். 

வேதாந்த அத்வைதத்துக்கும்(கேவலாத்வைதம்) சைவசித்தாந்த (சுத்தாத்வைதம்) அத்வைதத்தும்மும் உள்ள வேறுபாடுதான் என்ன?

வேதாந்திகள் அத்வைதத்துக்கு சொல்லும் பொருள் இரண்டின்மை( இரண்டு இன்மை). சைவ சித்தாந்தம் அத்வைதத்துக்கு சொல்லும் பொருள் இரண்டன்மை ( இரண்டு அன்மை).

ஒன்றா காமல் இரண்டா காமல்
ஒன்று மிரண்டு மின்றா காமல் - இருபா இருபது


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல்த்துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் நா.ஞானகுமாரன், எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டுச் சிறப்பு வெளியீடாக வந்த தனது நயந்தரும் சைவசித்தாந்தம் என்னும் நூலில் இரண்டின்மை, இரண்டன்மை என்னும் சொற்களில் உள்ள வேறுபாட்டை குறள் கொண்டு அழகாக தெளிவுபடுத்துகிறார்.

பொருள் அல்லவற்றைப் பொருளெண்றுணரும்
மருளானா மாணப்பிறப்பு -திருக்குறள்

-"அல்ல என்பதன் வழி பொருளின் இன்மைத்தன்மை எடுத்தாளப்படவில்லை. இதற்குப் பதிலாக பிரிதொரு பொருளின் இருப்பு உள்ளீடாக ஏற்கப்படுவதாகின்றது"

பொருள் இல்லை என்றால் இன்மையை வெளிப்படுத்துகின்றது. பொருள் அல்ல என்றால் அது மறைமுகமாக இன்னொரு பொருள் இருப்பதை வெளிப்படுத்துகின்றது.

நன்கொடை வாங்கும்போது "பொருள் அல்லது பணமாக தாருங்கள்" என்பர்! இது பொருள் இல்லை பணமாக தாருங்கள் என்று சொற்றொடர் அமைக்க முடியாது. ஏனெனில் இல்லை என்பது இன்னொரு பொருளை மறைமுகமாக சுட்டாது.  ஆனால் அல்ல என்பது இன்னொரு பொருளை மறைமுகமாக சுட்டும்.

எனவே இரண்டின்மை என்பது ஒன்றுதான் என்பதை சுட்டுகின்றது. ஆனால் இரண்டன்மை என்பது "ஒன்றுமல்ல;இரண்டும் அல்ல!" என்பதை சுட்டுகின்றது.

வேதத்தில் ஏகமேவ அத்துவதீயம் பிரமம் என்னும் அடியில் ஏகம்,அத்வைதம் என்னும் இரு சொற்களும் ஒன்று என்பதாகாது என்பதை சித்தாந்தம் தெளிவுபடுத்துகின்றது. ஏகம் என்பது ஒன்றென்பதையும் அத்வைதம் என்பது இரண்டல்ல என்பதையும் சுட்டுகின்றது என்று சித்தாந்தம் தெளிவுபடுத்துகின்றது.

இரண்டன்மை நிலை என்றால் என்ன?


கலப்பினால் ஒன்றாயும் பொருள் தன்மையால் வேறாயும் செயல்படுதன்மையில் உடனாயும் இறைவன் ஆன்மாவுடன் இருக்கும் தன்மையே அத்துவிதம் என்று சைவசித்தாந்தம் கண்டது. அதாவது ஒன்றும் அல்ல! இரண்டும் அல்ல! இப்படி இருக்கும் தன்மையே உண்மையான அத்துவிதத்தின் பொருள் என்று தெளிவுபடுத்தி விளக்குவதே சைவசித்தாந்தம்.

வேதாந்திகள் தத்துவம் அசி -அதுவே நீ என்கின்றனர். ஆனால் சைவசித்தாந்தம் "நீ அதுவாக வேண்டும்" என்று தத்துவம் அசி என்னும் மகாவாக்கியத்துக்கு பொருளுரைக்கின்றது. 

பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம் - அண்ணல்தாள்
அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்றென்னா
தத்துவிதம் என்றறையும் ஆங்கு -சிவஞானபோதம்


"பண்ணும் ஓசையும் போலவும் பழமுஞ் சுவையும் போலவும் இறைவன் எங்கும் கலந்திருக்கின்றான். இத்தன்மையை மறைகள் ஒன்றுமல்ல இரண்டுமல்ல அத்துவிதம் என்கின்றன" என்கின்றது சிவஞானபோதம்

சரி; ஆன்மாவோடு இறைவன் ஒன்றாய்,வேறாய்,உடனாய் கலந்துள்ளான் என்கிறதே சைவசித்தாந்தம்....அது என்ன? சற்று விரிவாக பார்ப்போம்!

ஒன்றாய்,வேறாய்,உடனாய் இறைவன் ஆன்மாவோடு இருக்கும் தன்மையை திருஞானசம்பந்தர் அழகாய் தெளிவுபடுத்துகின்றார்.

ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை யைந்தாய்
ஆறார்சுவை யேழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே.


பொழிப்புரை :
ஊழிக் காலத்தில் அனைத்தையும் ஒடுக்குவோனாய், ஒடுங்கிய உடலைத் தானொருவனே முதற்பொருளாய் நின்று தோற்றுவிப்பவனாய், சக்தி சிவம் என இருவகைப்பட்டவனாய், முக்குண வடிவினனாய், எக்காலத்தும் மாறுபடாத நான்மறை வடிவினனாய், ஐம்பெரும்பூதங்கள், ஆறுசுவை, ஏழு ஓசை, எட்டுத்திசை ஆகியவற்றில் நிறைந்தவனாய், உயிரோடு ஒன்றாகியும், வேறாகியும், உடனாகியும் விளங்கும் இறைவனது இடம் திருவீழிமிழலை.
நன்றி:-http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1011

ஒன்றாய் - உடலும் உயிரும் கலந்து இருப்பதுபோல் ஒன்றாய் - (கலப்புத்தன்மையில்)

வேறாய் -  உடலும் உயிரும் பொருட்தன்மையில் வேறுவேறுபோல்; பொருட்தன்மையில் கண்ணொளியும் சூரிய ஒளியும் வேறுவேறுபோல் - (பொருட்தன்மையில்)

உடனாய் - கண்ணொளியும் ஆன்மபோதமும் போல்- (இயங்குதன்மையில்)

              "சிவனருளாலே சிவன் தாள் வணங்கி" - மாணிக்கவாசகர்
                            விளக்கொளி பொருளைக் காட்டினாலும் கண்ணொளி அதைக் கண்டுவிடாது காணும்போது உயிரறிவும் உடன்நின்று காணுதல் வேண்டும்.  அதாவது தெருவில் யாரேனும் தெரிந்தவர் நம் எதிரே வந்துகொண்டு இருப்பர். ஆனால் நமது சிந்தனை ஓட்டம் வேறு எங்கோ இருக்கும். ஆனால் நாம் நடந்துகொண்டிருப்போம். வந்தவர் "என்னப்பா எதிரே வருகிறன்...தெரியாமல் மாதிரி போகிறியே!" என்பார். இது கண்ணில் விழுந்த காட்சியை உயிரறிவு பெற்றுக் கொள்ளாமையினால் வந்ததாகும். உயிரறிவு கண்ணொளியுடன் உடனாக செயற்படாமையால் வந்ததாகும்.

ஆக; இறைவன் ஆன்மாவோடு என்றுமே பிரிக்கப்படாதவராக; ஆன்மாவுடன் ஒன்றாய்,வேறாய்,உடனாய் அத்துவிதமாய் இருப்பார்.
முக்தி நிலையிலும் சரி; முக்திக்கு முன்னரும் சரி இந்தநிலையில் மாற்றமில்லை!!!

எனக்குள்நீ என்றும் இயற்கையாப் பின்னும்
உனக்குள்நான் என்ற உறுதிகொள்வ தெந்நாளோ - தாயுமானவர்


    (பொ - ள்.) (ஆருயிர்கள் கட்டு நிலையில் இருவினைத் தொழில்களை ஈட்டலுந்துய்த்தலும் செய்து கட்டறுத்தற்பொருட்டு முதல்வன் அவ்வுயிர்களினுள் மறைந்து நின்றருள்வன்) அம் முறையில் (ஆருயிர்கள்) எனக்குள் நீயென்று நிற்கும் இயற்கைபோல் (ஒட்டு நிலையில் திருவடித்துய்ப்பின் பொருட்டு அவ்வுயிர்களைத் தன்னுள்ளடக்கித் தான் முன்னருள்வன் சிவன்) ஒட்டு நிலையில் உனக்குள் நான் என்ற உறுதிகொள்வ தெந்நாளோ?

இப்படி இறைவன் ஆன்மாவின் பொருட்டு; ஆன்மாவோடு ஒன்றாய்,வேறாய்,உடனாய் புணர்ந்திருக்கும் புணர்ப்பே இரண்டன்மை ஆகும்.

சைவசித்தாந்தம் கூறும் அத்துவித விளக்கமாகிய இரண்டன்மையே உண்மையான அத்துவிதபொருள் என்பதை எப்படித் துணியலாம்?

வேதாந்தத் தெளிவாம் சைவ
சித்தாந்தத் திறன்இங்குத் தெரிக்கலுற்றாம்.- சிவப்பிரகாசம்


வேதத்தின் முடிவிற் தெளிவாகியுள்ள சைவசித்தாந்தம் - மதுரை சிவப்பிரகாசர்
வேதத்தின் முடிவிலே சொல்லப்பட்ட தெளிவான சைவசித்தாந்தம் - சிறி சிதம்பரநாதமுனிவர்
பதி,பசு,பாசம் என்னும் முப்பொருள்களைப் பிரதிபலிக்கும் வேதாந்தத்தின் தெளிவுப் போதமாகிய சைவசித்தாந்தம் - காசிவாசி செந்திநாதையர்
வேதாந்தத்தைத் தெளிந்து உரைக்கும் சைவசித்தாந்தம் - திருவிளங்கம் அவர்கள்
இவ்வாறு சமய அறிஞர் வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் என்பதற்கு பொருள்காண்கின்றனர்.

வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ் செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே -திருமந்திரம்

பொழிப்புரை :
வேதத்தின் முடிந்த பொருள் இன்னது எனத் தெளிவாக விளங்குவதாகிய சித்தாந்த சைவத்தில் நின்று, நாத முடிவான தத்துவங்களைக் கண்டு கழித்தோரே, பின் ஒரு காலும் அசைவில்லாத திண்ணிய மெய்யுணர்வைப் பெற்றவராவர். பின்னும் அவர் `நான்` என்னும் தற்போதமும் கழலும்படி உணர்வு திருந்தப் பெறுவாராயின், நாதமுடிவில் விளங்கும் நிறை பரம் பொருளாகிய சிவமாந்தன்மையைப் பெறுவர். அதனைப் பெற்றோரே உண்மை ஞானத்தால் உண்மை ஞேயத்தை எய்தினோராவர்.
நன்றி:- http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10501

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதம் மேலித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே -திருமந்திரம்

பொழிப்புரை :
கற்கத் தக்கனவாகிய சிவாகமங்களைக் கற்று, அவைகளிலே சிறப்பாகப் பொருந்தியுள்ள பிராசாத யோகத்தின் வழிப் பிரணவ ஞானத்தைப் படிமுறையால் பொருந்தி, சாலோகம் முதலாகச் சொல்லப்பட்ட பதமுத்திகளையும், அடைந்து, இவை யெல்லாவற்றின் விளைவாகவும் அதிதீவிரபரிபாகமும், அதிதீவிர சத்திநிபாதமும் வரப்பெற்று, அனைத்துப் பொருளுக்கும் மேலாய், ஆன்ம வியாபகத் திற்கும் மேலான வியாபகப் பொருளாகிய பரசிவப் பொருளைத் தலைப்பட்டவரே `சைவ சித்தாந்திகள்` எனப் படுகின்றனர்.
நன்றி:- http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10501

அத்துவித மென்ற அந்நியச்சொற் கண்டுணர்ந்து
சுத்த சிவத்தைத் தொடருநாள் எந்நாளோ -தாயுமானவர்


(பொ - ள்) இரண்டிணை ஒன்றென்னும் உண்மையே அத்துவிதம் என உணராது ஒன்றே அத்துவிதம் என்னும் வேற்று நெறியினர் சொல்லைக் கண்டகன்று தூயசிவத்தை யடையுநாள் எந்நாளோ?

சுத்தாத்துவிதம் (சுத்தாத்வைதம்) என்றால் என்ன?

கலப்பால் ஒன்றாய், அறிவாளும் பொருட்தன்மையாலும் வேறாய் (பதி-முற்றறி; பசு -சிற்றறிவு;அறிவித்தால் அறிவது) இயங்குதன்மையில் உடனாய் பதி பசுவோடு வேறறப் புணர்ந்திருக்கும் புணர்ப்பே தூய்மையான(சுத்தமான) அத்துவிதம்! இரண்டன்மை!

பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித
மெய்கண்ட நாதன்அருள் மேவுநாள் எந்நாளோ -தாயுமானவர்


(பொ - ள்) புன்னெறியாம் பொய்ச்சமயம் கூறியவற்றை உண்மையென மயங்கி உழலும் முக்கூற்றுப் புறச்சமயத்தாரும் காணமுடியாத அடைமுதலியன சேர்க்கப்படாத தூய அத்துவிதத்தை மொழிந்தருளிய மெய்கண்ட நாதனருன் பொருந்துநாள் எந்நாளோ?

வேதாந்தத்துக்கும் சித்தாந்தத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?

வேதாந்த சித்தாந்த தொடர்பை குமரகுருபரர் பண்டாரமும்மணிக் கோவையில் தெளிவுபடுத்துகின்றார்.

"வேதாந்த மென்றுச்சியிற் பழுத்த ஆரா இன்பம்
அருங்கனி பிழிந்து சாரங் கொண்ட
சைவசித்தாந்தத் தேனமு தருத்தினர்"


தெவிட்டாத சுவையுடைய பழமாக வேதாந்தத்தையும் அந்த வேதாந்தப் பழத்தை பிழித்தெடுத்த சாரமாகச் சைவசித்தாந்தத்தையும் சுட்டுகின்றார்.

ஆக; வேதாந்தத் தெளிவே சைவசித்தாந்தம்!

ஆக; வேதாந்தம் வேறு; அதற்கு சங்கரர் கொடுத்த அத்துவித விளக்கமாகிய கேவலாத்துவிதம் வேறு! இந்த நுனி இழை வேறுபாட்டை உணர்ந்து கொள்வது சைவசமயத்தவர்களுக்கு அவசியமான ஒன்றாகும். வேதாந்தத்துக்கு சங்கரர் பிழையான வியாக்கியானம் கொடுத்துள்ளார். அதுதான் அந்த நுனியிழை வேறுபாடு!!!!

சங்கரரின் அத்வைதத்தை பின்பற்றின் என்ன குறை?

நான் கடவுள் என்பது ஆணவம்! போலிச்சாமியார்கள் கடவுள்களாகி பெருமாளிகை கட்டி; தங்கத்தை தலையணையில் வைத்துபடுத்துறங்க வசதியேற்படுத்திய அபச்சாரமே நான் கடவுள் தத்துவம்! அதனால்த்தான் "நான் கடவுள்" என்பவர் அனைவரும் சங்கரரின் அத்வைதத்தை தமது கருத்துகளாலாக முன்வைக்கின்றனர்! நான் கடவுள்....நீ கடவுள் என்று கூறி தான்மட்டும் பணம் சம்பாதிக்கின்றனர்! நான் கடவுள்....நீயும் கடவுள் என்றால் பிறகு நீ ஏன் என்னை வழிபட வருகிறாய் என்று இவர்கள் இதுவரை கேட்டதாய் சரித்திரம் இல்லை!

நான் கடவுள் என்றால் ஆணவம்!
நீ கடவுள் என்றால் அபச்சாரம்!
நம்முள் கடவுள் என்றால் அழகு!

நாம்பிரம மென்றால் நடுவேயொன் றுண்டாமால்
தேம்பிஎல்லா மொன்றாய்த் திகழுநாள் எந்நாளோ -தாயுமானவர்


(பொ - ள்) ஏகான்மவாதக் கொள்கைப்படி நானே பிரமம் என்று கூறிக்கொண்டால் நான் என்னும் அகங்காரமே தோன்றும். அது பசுஞானம் என்றே சொல்லப்படும்; எல்லாம் ஒன்றாகத் திருவருளால் உணர்ந்து மெய்ப்புணர்ப்புற்று நிறைந்து நிற்கும்நாள் எந்நாளோ?

எனவே; ஆணவமலத்தை ஊட்டும் இயல்புடையதால் சங்கரரின் அத்வைதக்கொள்கை கேவலாத்வைதம் எனப்படும்.

சிவோகம் பாவணை என்றால் என்ன?

ஆன்மாவோடு இறைவன் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிறைந்திருக்கின்ற தன்மை - அதாவது ஒன்றல்ல.....அதேசமயத்தில் இரண்டும் அல்ல என்கின்ற இரண்டன்மை புணர்வே தூய்மையான அத்துவிதம்.
இது அநாதி தொட்டு நிலவிவரும் புணர்ப்பு!

இத்தகைய அநாதிகாலமாய் இருந்துவரும் இரண்டன்மை புணர்ப்பை ஆன்மா உணரும்போது சிவோகம் பாவணை வாய்க்கப் பெறும்.
நான் என்னும் நினைப்பு ஒழியும்போது தன்னுணர்வை இழக்கும் ஆன்மா தன்னோடு இரண்டன்மையாய் இருக்கும் சிவத்தை மட்டுமே உணரும்! சிவமாய் உணரும்!

நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ - திருத்தெள்ளேணம் (திருவாசகம்)


சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட - கண்டப்பத்து (திருவாசம்)

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட - அச்சோப் பதிகம் (திருவாசம்)


    ஒருவனவன் யானைகெடக் குடத்துட் செங்கை
        ஓட்டுதல்போல் நான்பேதை உப்போ டப்பை
    மருவவிட்டுங் கர்ப்பூர மதனில் தீபம்
        வயங்கவிட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன்
    அருளுடைய பரமென்றோ அன்று தானே
        யானுளனென் றும்மெனக்கே ஆணவாதி
    பெருகுவினைக் கட்டென்றும் என்னாற் கட்டிப்
        பேசியதன் றேஅருள்நூல் பேசிற் றன்றே - தாயுமானவர்

எளியேனுக்கு அருள்பாலிக்கின்ற இறைவன் என்றுள்ளானோ அன்றுதொட்டு நானும் உள்ளேன். எனவே அநாதி காலம் தொட்டு உப்பும் நீரும் கலந்த உப்புத்தண்ணீர் போன்றும் கற்பூரமும் நெருப்பும் கலந்திருக்கும் கலப்புப்போலவும் அநாதிகாலம் தொட்டு இறைவனோடு கலந்து நிற்கையில், புணர்ப்பாகிய ஐக்கியத்தை வேண்டி வருந்துகிறேனே!
                                                     வேடனொருவன் தான்கண்ட யானை மறைந்துவிட அதனைத் தேடி அலைந்து அலுத்து சோர்வுற்ற நிலையில் ஏற்படும் மயக்க உணர்வால் யானை இருப்பதற்கு எள்ளளவுக்கும் வாய்ப்பில்லாத குடத்துக்குள் கூட கைவிட்டு தேடுவான். அப்படியான ஒருநிலையில் உனது ஐக்கியத்தை தேடி அலையும் நான் நிற்கின்றேன். இந்த மயக்கம் எனக்கு ஏன் வந்தது என்றால் ஆணவம்,வினை ஆகிய மலங்களினால் வந்தது. இந்த மலங்களோடு இருப்பதால் உன்னோடான எனது இரண்டன்மை நிலையை நான் உணராமல் வருந்துகிறேன்; இது எளியேனது கருத்தல்லவே? அருள்நூல்(மறைநூல்/சிவாகமநூல்/திருமுறை/சித்தாந்தநூல்) அல்லவா கூறுகின்றது!

இப்படியான சிவோகம் பாவணையே சிவனடியார்கள் பூணுவது. தானெனும் உணர்விழந்து சிவத்தை மட்டுமே உணருகின்ற உன்னதநிலை!!!! சிவம் மட்டுமே புலப்படுகின்ற முக்திநிலை!!!! சுத்தாத்துவித நிலை!!!!

குறிப்பு:-"ஒருவனவன் யானைகெடக்..." என்னும் பாடல் தவிர்த்து ஏனைய தாயுமானவர் சுவாமிகளின் திருப்பாடல்களுக்கு சித்தாந்த பண்டிதர்,சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகப்புலவர் ப.இராமநாத பிள்ளை ஐயாவின் உரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி:-http://www.tamilvu.org/library/l5F40/html/l5F40ind.htm


இந்தப் பகுதியில் சைவசித்தாந்தமே உண்மையான அத்வைதம் என்பதை பார்த்தோம். அடுத்த பகுதி இப்பகுதியின் நீட்சியாக அமையும்; அது என்ன நீட்சி? அடுத்த பகுதியில் பார்ப்போம்! எல்லாம் திருவருட் சம்மதம்!
மேலும் படிக்க...

Sunday, December 11, 2011

திருவண்ணாமலை -கார்த்திகைத் திருவிழா

திருவண்ணாமலை பற்றிய காணொளி காட்சி









கார்த்திகைத் திருவிழா நிழற்படக் காட்சிகளைக் காண்பதற்கு கீழ் உள்ள சுட்டியை அழுத்துமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

கார்த்திகைத் திருவிழா
பிடாரி அம்மன் உற்சவம்
முதலாம் நாள்(கொடியேற்றம்)
இரண்டாம் நாள்
மூன்றாம் நாள்
நான்காம் நாள்
ஐந்தாம் நாள்
ஆறாம் நாள்
ஏழாம் நாள்
எட்டாம் நாள்
ஒன்பதாம் நாள்
பத்தாம் நாள்(மகா தீபம்)
தீர்த்தத் திருவிழா

எல்லாம் திருவருட் சம்மதம்

சைவநெறி என்று பறைவோம்
திருநெறித் தமிழராய் வாழ்வோம்

திருச்சிற்றம்பலம்
மேலும் படிக்க...

Wednesday, October 5, 2011

சகலகலாவல்லி மாலை-பொருளுரை

ஸ்ரீகுமரகுருபரர் காசிக்கு சென்றபோது அங்கு மீண்டும் சைவாலயம் அமைத்திட விரும்பினார். அதற்கு காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக இருந்த தாரா ஷிக்கோஹ் என்பவரிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. கொடுங்கோல் ஆட்சி செய்த அவர்களிடம் அனுமதி பெறுவதென்பது முயல் கொம்பு காரியம் என அனைவரும் அறிவுறுத்தியிருந்தனர். எனினும் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அவரிடம் சென்று ஹிந்துஸ்தானி மொழிபெயர்ப்பாளரை அழைத்துச் சென்று காசியில் ஆலயம் அமைக்க நிலம் கேட்டபோது ஹிந்துஸ்தானி தெரியாத காரணத்தினால் அவமதிக்கப்பட்டார். கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது! எனினும் சிந்தை கலங்காது, கலைவாணியைத் துதித்து சகலகலாவல்லி பாமாலை இயற்றிச் சூட்டி ஹிந்துஸ்தானி , உருது மொழியாற்றல்களை ஒரேநாளிலேயே பெற்றுக்கொண்டார்.


தனது தவச்சிறப்பால் சிங்கத்தை தன்வசப்படுத்தி அதன்மேல் அமர்ந்து தாரா ஷிக்கோஹ்யின் அவைக்குச் சென்று தனது கோரிக்கையை ஹிந்துஸ்தானியில் கேட்டு, ஹிந்துஸ்தானியிலே அவனுடன் சரளமாக கதைத்து நாணச்செய்து அவனிடம் இருந்து இடத்துக்குரிய அனுமதியைப் பெற்று காசிமடம் ஆகியவற்றை அமைத்துக் கொண்டார். 


இவையாவும் கலைவாணியின் அருள்மழையால் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளுக்கு  கைகூடியது.எனவே, நாமும் கலைவாணியின் அருள்மழையைப் பெற்றிட இயற்றிய தமிழ்மழையை கலைவாணிமேல் பொழிகின்ற சகலகலாவல்லி பாமாலையை பாடுவோமாக!


"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 
பல்லோரும் ஏத்தப் பணிந்து' என்று மாணிக்கவாசகப் பெருமான் பொருளுணர்ந்து பாட வேண்டியதன் சிறப்பை திருவாசகத்தின் சிவபுராணத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே பொருளுணர்ந்து பாடுவோமாக! 

1)வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் 
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் 
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் 
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 
பதம் பிரித்து அமைந்த பாடல்:

வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத் 
தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து 
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் 
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.


சகலகலாவல்லியே -
எல்லாக் கலைகளையும் அளிக்கின்ற வல்லமை உடையவளே

சகம் ஏழும்அளித்து உண்டான் உறங்க -
காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக அவற்றை உண்டு, (ஆலிலைமேல்) துயின்றான்.
ஊழிக் காலத்தில் உலகங்கள் அனைத்தையும் உண்டு காத்த வண்ணம் ஆல் இலைமேல் துயில்வார் என்பது புராணச்செய்தி.

ஒழித்தான்பித் தாக - அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான்.

உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே - உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே!

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாதுகொலோ - உனது திருவடிகளைத் தாங்கும் பேறு வெண்தாமரையைத் தவிர்த்து எனது உள்ளமாகிய வெண்தாமரைக்கு வாய்க்கப்பெறாதது முறையா?

காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக உண்டு, ஆலிலைமேல் துயின்றான். அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான். ஆனால், உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரமன், கலைமகளாகிய உன்னை மனைவியாகப் பெற்று மகிழ்ந்தான். பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே! சகலகலா வல்லியே! உனது திருவடிகளை வெள்ளைநிறத் தாமரையே தாங்கியுள்ளது! வஞ்சனையற்ற குளிர்ந்த எளியேனின் மனம் வெண்தாமரை போல் ஆகிவிட்டது. எனவே எளியேனின் வெண்தாமரை போன்ற மனதினை உனது திருவடிகளை தாங்கும் ஆசனம் ஆக்கிக்கொள்ளக்கூடாதா? இன்னும் அத்தகு தகுதியான வெண்மையுள்ளம் வாய்க்கப்பெறவில்லையா? இது தகுமா? 

"வெள்ளைநிற மல்லிகையோ?

வேறெந்த மாமலரோ?

வள்ளல் அடியிணைக்கு

வாய்த்த மலரெதுவோ?

வெள்ளைநிறப் பூவுமல்ல!

வேறெந்த மலருமல்ல!

உள்ளக் கமலமடி

உத்தமனார் வேண்டுவது!" - என்ற சுவாமி விபுலானந்த அடிகளின் பாடலையும்

'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வர்' என்னும் திருக்குறளின் மலர்மிசை ஏகினான் என்பதன் பொருளையும் இங்கு பொருத்து உணர்க!



2)நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் 
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் 
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 
பதம் பிரித்து அமைந்த பாடல்:
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியில் பணித்தருள் வாய் பங்கயாசனத்தில் 
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால் 
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே. 

பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே- தாமரை மலராகிய ஆசனத்தில் வீற்றிருப்பவளே! பசும்பொன்கொடி போன்றவளே!
கனதனக் குன்றும்-குன்றுபோன்ற பெரிய தனங்களை உடையவளே!

ஐம்பால்- ஐந்து கால் எடுத்துப் பின்னப்பட்டிருக்கும் பெண்-கூந்தல் ஒப்பனை
ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே - ஐந்து பகுதிகளாக பகுத்து ஒப்பனை செய்யப்பட்ட காடுபோல் அடர்ந்த கூந்தலை தாங்கியுள்ளவளே! கருப்பாக இனிப்பவளே!

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் -  அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருள் சுவையும் சொல் சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிகளையும் ( ஆசுகவி,மதுரகவி,சித்திரக்கவி,வித்தாரக்கவி)

பாடும் பணியில் பணித் தருள்வாய்- இடையறாது பாடும் பணிக்கு எளியேனை பணித்து அருள் செய்வாயாக!

ஆசுகவி - யாரும் இதுவரை பாடியிராத வகையில் யாரும் பாடியிராத பொருளின்பத்தை தரும் வண்ணம் புதிய புதியதாக பாடல்களை இயற்றும் கலை


மதுரகவி- இசைநடையில் கவி எழுதும் கலை


சித்திரக்கவி - தேர் போன்ற சித்திரத்தில் அடுக்கி வைக்கலாம் போன்ற அமைப்பில் சொற்களை அழகுற அடுக்கி பாடுகின்ற கலை


வித்தாரக் கவி - பலவிதமான அமைப்புகளில் அமைத்து பாடுவது 


வெண்தாமரையை ஆசனமாகக் கொண்டிருப்பவளே! பசும்பொன் கொடி போன்றவளே! குன்றுபோலுள்ள் பெரிய தனங்களை உடையவளே! ஐந்து பகுதிகளாகப் பகுத்து அழங்கரிக்கப்பட்ட காடுபோல் அடர்த்தியான கூந்தலை தாங்கியிருப்பவளே! கரும்பாக இனிப்பவளே! சகலகலாவல்லியே! அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருட்சுவையும் சொற்சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிதைகளை இடையறாது பாடும் பணிக்கு எளியேனைப் பணித்து அருள் செய்வாயாக!

3)அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் 
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் 
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு 
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில் 
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித் 
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு 
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.

உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே -
எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே!

உளம் கொண்டு - விருப்பம் கொண்டு
களிக்கும் கலாப மயிலே - மகிழ்ச்சியடையும் மயில் போன்றவளே
சிந்தக்கண்டு - பொழியக்கண்டு

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்து -நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக

உன் அருள்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடும் கொலோ -  உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா?

எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே!
நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக ஆன்மீக அனுபவத்தை பெற்று உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா? அவ்வாறான அரும்பெரும் பேறை அருளுவாயாக!

4)தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் 
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலுந் 
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று 
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் 
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும் 
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று 
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

வடநூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே -  கடல் போன்ற வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 

செந்நாவில் நின்று -  நல்ல நாவினின்று 

தூக்கும் பனுவல் -  அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் 
துறைதோய்ந்த கல்வியும் - எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் 

சொற்சுவை தோய் வாக்கும் - சொற்சுவை நிரம்பிய வாக்கும் 

பெருகப் பணித்துஅருள் வாய்- பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக

கடல் போன்று விரிந்த எண்ணிலாத வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த அருஞ்செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 
அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் நாள்தோறும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக!

5)பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் 
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத் 
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக் 
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய பொற்பாத பங்கேருகம் என் 
நெஞ்சத் தடத்து அலராதது என்னே நெடுந் தாள் கமலத்து 
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக் 
கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே.


நெடுந் தாள் கமலத்து -  (திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த) நீண்ட தண்டிடைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும்
அஞ்சத்துவசம் உயர்த்தோன்- அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனும்

செந்நாவும் - சிறந்த நாவினையும்
அகமும் -மனதினையும் 

வெள்ளைக் கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய்-  ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! 

பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய - செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் 

பொற்பாத பங்கேருகம் -  பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள்

என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே - எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ?

தாள் - கால், கயிறு, முயற்சி,படி,காகிதம்,வைக்கோல்,கடையாணி,தாழ்ப்பாள்,திறவுகோல் (கழகத் தமிழ்க்கையகராதி) சிலர் நீண்ட இதழை உடைய தாமரை என்று பொருள் சொல்கின்றனர். அது பொருந்துமா என்று தெரியவில்லை! கழக அகராதிப்படி தாள் என்பது தாமரையின் தண்டையே பெரிதும் குறிக்கும்! 

திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த நீண்ட தண்டிடைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும் அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனுமாகிய நான்முகனின் சிறந்த நாவினையும் மனதினையும் ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! சகலகலாவல்லியே!
செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் செம்மையான பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள், எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ? 
பொய்கைகளில் தாமரை மலர்வது இயல்பு. எனது மனமும் நீர்போன்று மென்மையாக உள்ளது. குளிர்மையாக உள்ளது. நீர்நிலைகளில் எப்படித் தாமரை மலர்வது இயல்போ மென்மையாலும் குளிர்மையாலும் நீர்நிலை போல் ஆகிவிட்ட எனது மனமெனும் பொய்கையில் தாமரை என்னும்  உனது திருவடிகள் இன்னும் மலராது இருப்பது முறையோ என்று வருந்துகின்றார் குமரகுருபரர்.

6)பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் 
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும் 
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் 
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான் 
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும் 
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர் 
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 

எழுதா மறையும் - எழுதாமறையாகிய வேதத்திலும் 
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் -வானம்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று 
அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் - அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! 
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் - பண், பரதம்,நற்கல்வி, இனிய சொற்களால் கொண்டு கவிகள் (நூல்கள்) 
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய் - விரும்பும் காலத்தில் எளிதில் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக

வானம்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று என்னும் ஐம்பூதங்களிலும் எழுதாமறையாகிய வேதத்திலும் அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! சகலகலாவல்லியே!  பண், பரதம்,நற்கல்வி, இனிய சொற்களால் கொண்டு கவிகள் (நூல்கள்) இயற்றும் ஆற்றல் ஆகியனவற்றையெல்லாம் விரும்பும் காலத்தில் எளிதில் எளியேன் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக!

7)பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் 
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர் 
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம் 
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 



பதம் பிரித்து அமைந்த பாடல்:
பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால் 
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர் 
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் 
காட்டும் வெள் ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே!
உளம்கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் - அடியார்கள் விரும்பி எண்ணிப் புனைகின்ற முத்தமிழ்க் கலை நூல்களில் காணப்படுகின்ற தீம்பால் அமுதம் (போன்ற மெஞ்ஞானத்தை) தெளிவிக்கின்ற
ஓதி/ ஓதிமம்-அன்னம்
பேடு -பெண்
பாட்டும் பொருளும் - பாட்டும் பாட்டுக்குரிய பொருளும் 
பொருளால்பொருந்தும் பயனும்- பாடலில் பொருந்து நிற்கின்ற பயனும்
என்பால் கூட்டும்படி - எளியேனிடத்து வந்தடையும் வண்ணம் 
நின்கடைக்கண் நல்காய் - உனது கடைக்கண் பார்வையை அருள்வாயாக!

அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்ளும் என்பர் கவிஞர். பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு கலைமகள் வழங்கி அருள்பாலிப்பாள் என்பதை கலைமகளை வெண்மையான பெண் அன்னம் என்று சுட்டுவதன் வாயிலாக குமரகுருபரர் நமக்கு உணர்த்துகின்றார்.

அடியார்கள் நல்மனதால் எண்ணிப் புனைகின்ற நூல்களில் காணப்படுகின்ற வீடு பேற்றின்பமாகிய பாலையும் உலகியல் இன்பமாகிய நீரையும் தனித்தனியாக பிரித்தறிகின்ற தன்மையை உலக மக்களுக்கு உணர்த்தும் வெண்மையான பெண் அன்னம் போன்றவளே!
சகல கலாவல்லியே! பாட்டும் பாட்டுக்குரிய பொருளும் பாடலில் பொருந்து நிற்கின்ற பயனும் எளியேனிடத்து வந்தடையும் வண்ணம் எளியேனுக்கு கலைமகளே.....உமது கடைக்கண் பார்வையை அருள்வாயாக!
அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்ளும் என்பர் கவிஞர். பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு கலைமகள் வழங்கி அருள்பாலிப்பாள் என்பதை கலைமகளை வெண்மையான பெண் அன்னம் என்று சுட்டுவதன் வாயிலாக குமரகுருபரர் நமக்கு உணர்த்துகின்றார்.

8)சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல 
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர் 
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும் 
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல 
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம்சேர் 
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும் 
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 

நளினஆசனம்சேர் செல்வி- செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் 
ஒருகாலமும்- எக்காலத்திலும்
சிதையாமை நல்கும் -காலத்தால் அழியாத 
கல்விப் பெருஞ்செல்வப் பேறே- கல்வி என்னும் பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! 
 சொல் விற்பனமும்-சொல்வன்மையும்
அவதானமும்-அட்டாவதானம் தசாவதானம் சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும்( நினைவாற்றல் சக்தி) 
கவி சொல்லவல்ல நல்வித்தையும் -  சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத்தன்மையும்
தந்து அடிமைகொள் வாய்நளின - அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக!

செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளின் அருள் நமக்கு வாய்க்கப்பெறவில்லையே என்று வருந்துகின்ற நிலை எக்காலத்திலும் ஏற்படாவண்ணம் காலத்தால் அழியாத கல்வி என்னும் பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! சகல கலாவல்லியே! 
சொல்வன்மையும், அட்டாவதானம் தசாவதானம் சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும்( நினைவாற்றல் சக்தி) சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத்தன்மையும்
எளியேனுக்கு அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக!

9)சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றம்என்ன 
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலம் தோய்புழைக்கை 
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை 
கற்கும் பதாம்புயத் தாளே சகல கலாவல்லியே. 

பதம் பிரித்து அமைந்த பாடல்:
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன 
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை 
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை 
கற்கும் பதாம்புயத் தாளே! சகலகலா வல்லியே! 

நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடி - நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானை
அரசன்னம்- அரச அன்னமும்
நாண-நாணும்படி 
நடை கற்கும் பதாம்புயத் தாளே-அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே
சொற்கும் பொருட்கும் -சொல்லுக்கும் பொருளுக்கும் 
உயிராம் மெய்ஞ்ஞானத்தின் - உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவத்தின்
தோற்றம் என்ன நிற்கின்ற - (தோற்றமென  நிற்கின்ற) - தோன்றி நிற்கின்ற 
நின்னை நினைப்பவர் யார் - நினைப்பவர்கள் யாரும் இல்லை

நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானையும் அரச அன்னமும் நாணும்படி அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே! சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவமாக தோன்றி நிற்கின்ற உன்னை நினைத்து உணர்ந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள் யாரும் இல்லை! (அவ்வாறு உணர்ந்து கொள்வது எளிதான ஒன்றல்ல என்று சுட்டுகிறார் குமரகுருபரர் ) அவ்வாறான பக்குவ ஆற்றலை எளியேனுக்கு அருள்வாயாக! 

10) மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என் 
பண்கண்ட அளவில் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் 
விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் விளம்பில்உன்போல் 
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் 
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம் 
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் 
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

படைப்போன் - படைக்கும் தெய்வம் நான்முகன் 
முதலாம் விண்கண்ட தெய்வம் - முதலாக சிறப்புடைய தெய்வங்கள் 
பல்கோடி உண்டேனும்  - பலகோடி இருந்தாலும் 
விளம்பில்- தெளிந்து கூறில்
உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ - உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை 
மண்கண்ட வெண்குடைக் கீழாக- மண்ணுலகம் முழுவதையும் தன் வெண்கொற்றக்குடையின் கீழ்
மேற்பட்ட மன்னரும்- சிறப்புடைய மன்னரும்  
பண்கண்ட அளவில் - பாடலைக் கேட்ட மாத்திரத்தில் 
பணியச் செய்வாய்- பணிந்து வணங்க அருள்செய்வாயாக!

படைக்கும் தெய்வம் நான்முகன் முதலாக சிறப்புடைய தெய்வங்கள் பலகோடி இருந்தாலும் உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை என்று தெளிந்து கூறும்படியாக விளங்குபவளே! சகலகலாவல்லியே!
மண்ணுலகம் முழுவதையும் தன் வெண் கொற்றக்குடையின் கீழ் கொண்டு ஆட்சிசெய்யும் மன்னரும் எளியேனின் இனிய தமிழ்ப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பணிந்து வணங்க அருள்செய்வாயாக!
குறிப்பு:- தமிழ்ப் பெரியசாமி என்னும் அறிஞரின் உரையை எளியேனின் பதவுரையில் பெருமளவில் பயன்படுத்திக் கொண்டேன். அறிஞர் தமிழ்ப் பெரியசாமி அவர்கட்கு நன்றி. இணையத்தில் சகலகலாவல்லி மாலைக்கு பொருள் விளக்கம் பெருமளவில் உண்டெனினும் அவற்றில் பெருமளவு பொருட்பிழைகளும் உண்டு. பொருட்பிழைகள் இல்லாத விளக்கவுரையை இணையத்தில் எளியேனால் காணமுடியவில்லை! எனவேதான் தமிழறிஞர் ஒருவரின் உரையைத் தேடினேன். தமிழ்ப் பெரியசாமி என்னும் நல்லறிஞரின் உரையை கண்டேன். அவருடைய உரையை பெருமளவு பயன்படுத்தியே எளியேன் விளக்கவுரை எழுதியுள்ளேன். 

முறையான பொருளுரையுடன் கூடிய சகலகலாவல்லி மாலை இணையத்தில் இடம்பெற வேண்டும் என்ற அவா எளியேனின் நெஞ்சுள் பெருக்கெடுத்து."சகலகலாவல்லி மாலை-பொருளுரை" ஆகியுள்ளது! இங்கு ஏதேனும் இலக்கணக்குற்றம் இருக்கும் என்றால் எளியேனுக்கு எடுத்தியம்புக. இருந்தால் திருத்த வேண்டியது கடமையல்லவா? 

நன்றி
மேலும் படிக்க...

Wednesday, August 31, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-6

ஐந்தொழில் தத்துவத்தை விளக்கும் சிவபெருமானின் கூத்தைக் கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்து நிற்கும் அருமையை கடந்த பதிவில் பார்த்தோம். இப்பகுதியில் ஐந்தொழில்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.

வழமைபோலவே ஒரு வேண்டுகோள்!  முன்னைய பகுதிகளை படித்து தெளிவுபெற்றுக் கொண்டு இப்பதிவை படித்தால் பூரணமான தெளிவு ஏற்பட வாய்ப்புண்டு.

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 1

சைவநெறி கூறும் ஐந்தொழில்களாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளல் என்பனவாகும். முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான் தானே இவையனைத்தையும் செய்வதும் உண்டு. பிரம்மா திருமால் உருத்திரனைக் கொண்டு செய்விப்பதும் உண்டு. இவர்கள் தமது புண்ணிய விசேடத்தால் முழுமுதற்பொருளாகிய சிவப்பரம்பொருளிடம் அதிகாரசக்தியை அவருடைய ஏவலால் பெற்று படைத்தல்,காத்தல்,அருளல் ஆகியவற்றை ஆற்றுவர்.

மறைத்தலை மகேசுவரனும் அருளலை சதாசிவனும் ஆற்றுவர்.

இறைவனாகிய சிவப்பரம்பொருள் எந்தவொரு கருவி காரணங்களும் இன்றி நினைத்த மாத்திரத்தில் ஐந்தொழில்களை மேற்கொள்வார்.

வேதமரபுப்படி படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய மூன்று தொழில்களே பேசப்படும். ஆனால் சிவாகம மரபுப்படி ஐந்தொழில்கள் சொல்லப்படுகின்றன.
காக்கும்போது மறைந்து நிற்றலால் மறைத்தல் காத்தலிலும் உயிர்கள் இளைப்பாறும் பொருட்டு அழித்தல் நடைபெறுவதால் அருளல் அழித்தலிலும் அடங்கும்.

படைத்தல் - உள்ளதைத் தோற்றுவித்தல் (இல்லாததை தோற்றுவித்தல் எனப்பொருள் படமாட்டாது. உதாரணமாக பனிக்கட்டியைத் தோற்றுவித்தனர் என்றால் அங்கு நீர் பனிக்கட்டியாக மாறியுள்ளது என்றுதான் பொருள்படும். அதுபோலவே சூக்குமநிலையில் இருந்ததை(மாயையில் இருந்து) தூலநிலைக்கு கொண்டு வருதலே படைத்தல் எனப்படும்.அதாவது காரணநிலை(சூக்குமநிலை)யில் இருந்து காரியநிலைக்கு(தூலநிலைக்கு) கொண்டு வருதல். மாயையில் இருந்து தனு,கரண,புவன போகங்களைப் படைத்தல்.

காத்தல் - தூலநிலைக்கு கொணர்ந்தவற்றை அந்தநிலையில் தொடர்ந்தும் நிலைபெறச்செய்தல். அதாவது தனு,கரண,புவன போகங்களை உயிர்களின் வினைப்பயனுக்கு ஏற்ப அனுபவிக்கும் வரை நிலை பெறச்செய்தல்

அழித்தல் - தூலநிலையில் இருந்ந்து சூட்சும்ச் நிலைக்கு வருதல், அழித்தல் என்பது முற்றாக இல்லாமல் செய்தல் என்று பொருள் அன்று.
பிறவிச்சுழற்சியால் உயிர்களுக்கு ஏற்படும் களைப்பு நீங்கும் பொருட்டு படைத்தவகைகளை மீளவும் மாயையில் ஒடுக்குதல்.

மறைத்தல் - பற்றுக் கொண்ட உயிர்கள் பக்குவம் பெறுவதற்காக இறைவன் தன்னை மறைத்து உலகத்தையே அவ்வுயிர்கள் காணுமாறு காட்டுதல்.

ஆணவம் காரணமாக இறைவனே உயிர்களுக்கு கன்மம்,மாயை ஆகியவற்றை கூட்டுவித்தான். அதாவது ஆணவ நோய்க்கு மருந்தாக ஏனைய இருமலங்களை கூட்டுவித்தான். மும்மலங்களும் சடப்பொருட்கள். தாமாகத் தொழிற்படாது. இறைவன் அவற்றைத் தொழிற்பட வைத்து அவற்றின் சக்தியை குறைவடையச் செய்கின்றான். சடப்பொருள் தொழிற்பட அதன் சக்தி தேயும் என்பது பௌதீக விஞ்ஞானம்! அதை இங்கு பொருத்தி உணர்க.

அருளல்
- பக்குவம் பெற்று தன்னை நோக்கும் உயிர்களுக்கு தன்னைக் காட்டித் தன்னுடைய திருவடியில் சேர்த்தல்.

எனவே படைத்தல், காத்தல்,அழித்தல் என்பன மாயையிலும் மறைத்தல்,அருளல் உயிர்களிடத்திலும் நிகழ்கின்றன.


சிவபெருமான் ஐந்தொழில்களை தனது திருநடனத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றார்.சிவப்பரம்பொருளின் திருநடனத்தை மூன்று வகையாக நோக்கலாம்.
1.ஊன நடனம்
2.ஞான நடனம்
3.ஆனந்த நடனம்

ஊன நடனம்
ஊன நடனத்தினூடாக உயிர்களுக்கு கட்டுண்ட உலகவாழ்வை அளிக்கின்றார். அதாவது உயிர்களுக்கு பிறப்பை வழங்குவது. இவ்நடனத்தின் வழியாக உயிர்கள் உலகச்சிற்றின்பத்தை துய்க்கின்றன. ஊன நடனத்தை குறை கூத்து என்றும் வழங்குவர். குறைவான கால அளவுடைய இன்பங்களை(உலகியல் சிற்றின்பங்கள்) தருவதால் குறைகூத்து என்ப்ர்.


தூல ஐந்தொழில் - உலகத்தை படைத்து காத்து அழித்து மறைத்து அருளுகின்ற ஐந்தொழில்.

சூக்கும ஐந்தொழில் -  சர்வ சங்கார காலத்தில் உலகம் முழுவதையும் அழித்த பின்னர் மீண்டும் தோற்றுவிக்க ஆற்றும் ஐந்தொழில்.

அதிசூக்கும ஐந்தொழில் - உயிர்களின் அறிவுக்கு அறிவாய் இருந்து அறிவைத் தோற்றுவித்தல் ஒடுக்குதல் செய்தல். இறைவன் உயிருக்கு உயிராக உள்நின்று உணர்த்துவதனாலேயே உயிருக்கு அறிவு நிகழுகின்றது.

ஞான நடனம் 
உயிர்களுக்கு வீட்டைத் தருவது.
ஊன நடனத்தால் உலக இன்பங்களை உயிர்கள் அனுபவிக்கின்றன.படிப்படியாக உலக இன்பம் நிலையற்றது என்பதை உணர்ந்து பக்குவப்பட்டு; சிவபெருமானை அடைய நாடிநிற்கும்போது அவ்வுயிர்களின் மலங்களை நீக்கும்பொருட்டு ஆற்றும் ஐந்தொழில்.

ஞான நடனத்தில் இறைவனின் ஐந்தொழில்கள்
படைத்தல் - மாயையை உதறுதல்
காத்தல் - வல்வினையைச் சுடுதல்
அழித்தல் - மலம் சாய அமுக்கல்
மறைத்தல் - உலகத்தை மறைத்தல்
அருளல் - உயிர்களை ஆனந்த ஒளியில் அழுத்துதல்

ஆனந்த நடனம்
ஞான நடனத்தால் பேரின்பத்தை நுகர தலைப்பட்ட சுத்த ஆன்மாக்கள் தொடர்ந்து பேரின்பத்தை நுகரும் பொருட்டு, அவர்களின் அறிவு இச்சை செயல்களைத் தன்னையே பொருளாகப்பற்றி அழுந்தி இன்பத்தை நுகருமாறு செய்தற்கு ஆற்றும் ஐந்தொழில்.

 ஆனந்த நடனத்தில் இறைவனின் ஐந்தொழில்கள்
படைத்தல் - சிவானந்த அனுபவத்தை தோற்றுவித்தல்
காத்தல் - அந்த அனுபவத்தை காத்தல்
அழித்தல் - தற்போதத்தை அழித்தல்
மறைத்தல் - உயிர்,சிவம் இரண்டு என்பதை மறைத்தல்
அருளல் - பேரின்பத்தை அழுந்தி அனுபவித்தல்

சிவபெருமான் ஆடுகின்ற நடனம் ஒன்றுதான். ஆனால் உயிர்களின் பக்குவத்தன்மைக்கு ஏற்ப அது ஊன,ஞான,ஆனந்த நடனமாக அவ்வுயிர்களுக்கு தோன்றுகின்றது.

இறைவனின் ஐந்தொழிலை விளக்கும் இறைவனின் திருக்கூத்துப்பற்றி விரிவாக அறிந்து கொள்வதற்கு தமிழர் கண்ட தாண்டவக்கோன் என்னும் கட்டுரையைப் படிக்க. அடுத்த பகுதியில் அத்துவிதம் என்றால் என்ன? சங்கரரின் அத்துவிதத்தை கேவலாத்துவிதம் என்று ஏன் சொல்வர்? சுத்தாத்துவிதம் என்றால் என்ன? இவற்றை சற்று விளக்கமாகவும் விரிவாகவும் பார்ப்போம்.

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்7

மேலும் படிக்க...

Monday, August 15, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-5

பகுத்தறிவுள்ளோர் சைவசித்தாந்திகளா? அன்றி பகுத்தறிவுப்பகலவன் என்று கொளுத்துகின்ற கடும் வெய்யிலிலும் கருப்புச்சட்டை போட்டு விஞ்ஞான அறிவுக்கு முரணாக திரிகின்றவர்களா?  விடையை இந்தப்பதிவை முழுமையாகப் படித்தால் பெற்றுக்கொள்ள முடியும்.சரி; நாங்கள் பகுதி ஐந்துக்குள் நுழைவோம். சைவசித்தாந்தத்தை அறிந்து கொள்வோம்.
சிவபெருமான் அருவம்,உருவம்,அருவுருவம் ஆகிய வடிவங்களைக் கடந்தவன் என்றும், அருவம்,உருவம்,அருவுருவம் ஆகிய வடிவங்களை ஏன் பூணுகின்றார் என்றும் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். ஐந்தொழில்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர், இறைவனின் வடிவங்கள்பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது என்று கருதுகிறேன். பூரணமான தெளிவை ஏற்படுத்த அவை உதவும்.

உருவத்திருவடிவங்கள் மூன்றுவகையாக கருதப்படுகின்றன.

1.போக வடிவம்:
உயிர்களுக்கு உலக இன்பத்தை வழங்கும் பொருட்டு, மணக்கோலம் பூண்டிருப்பது.உயிர்களின் பொருட்டு கல்யாண சுந்தரவடிவம் தாங்கினும் சிவபெருமான் போகம் நுகருபவதில்லை.

உ+ம் - கல்யாண சுந்தர மூர்த்தி வடிவம்



2.யோக வடிவம் - உயிர்களுக்கு ஞானத்தை வழங்கும் பொருட்டு, குருவடிவம் கொண்டிருப்பது.

உ+ம் :- தென்முகக்கடவுள் வடிவம்


3. வேக வடிவம் - இறைவனை நினைத்து வழிபடும் அன்பர்களின் துன்பத்தைப் போக்கும் பொருட்டு வேகம் கொண்டவராக போர்க்கோலம் பூண்டிருப்பது. உயிர்களின் வினையைப் போக்குவதற்கு தாங்கும் வடிவம் இதுவாகும்.
அட்ட வீரட்டச் செயல்கள் ஆற்றியபோது எடுத்த வடிவங்கள் இவற்றுக்கு உதாரணங்களாகும்.காலனை உதைத்தது,சலந்திரனைத் தண்டித்தது,திரிபுரம் எரித்தது என்பன உதாரணங்களாகும்.

உ+ம் - காலசம்கார மூர்த்தி

இறைவன் பூணுகின்ற தாதான்மிய சம்பந்தத்தில் மூவகை வடிவங்களாகிய அருவம்,அருவுருவம்,உருவம் தாங்குதலையும்; உருவவடிவத்தின் மூவகைத்தன்மைகளையும் பார்த்தோம். இனி; தாதான்மிய சம்பந்தத்தினால் இறைவன் ஆற்றும் ஐந்தொழில் பற்றி பார்ப்போம்.


சிவபெருமானின் ஐந்தொழிலை சிவபெருமானின் திருநடனத்தினூடு காண்பது சைவசமயமாகும்.எனவே; இறைவனின் ஐந்தொழில்களை உணர்த்தும் இறைவனின் கூத்தை வெளிநாட்டாரும் அறிஞர்களும் விஞ்ஞானிகளும் கண்டு வியப்படைந்துள்ளர்.  விஞ்ஞானத்தை விஞ்சிய மெஞ்ஞான திருநடனத்தைக் கண்டு எமது பண்பாட்டுச்சிறப்பை பாராட்டாதோர் எவரும் இலர்.

முதலில்; இறைவனின் ஐந்தொழில் ஆற்றும் கூத்தினைக் கண்டு விஞ்ஞானிகளும் அறிஞர்களும் கூறிய கருத்தைக் காண்போம்.

FRITJOF CAPRA எனும் மேலைத்தேய இயற்பியல் வல்லுனர்; நவீன இயற்பியலையும் நடராசப் பெருமானின் திருநடனத்தையும் அழகாக தொடர்புபடுத்தி "every subatomic particle not only performs an energy dance, but also is an energy dance; a pulsating process of creation and destruction…without end…For the modern physicists, then Shiva's dance is the dance of subatomic matter. As in Hindu mythology, it is a continual dance of creation and destruction involving the whole cosmos; the basis of all existence and of all natural phenomena." என்கிறார்.

பண்டைய கால இந்திய மக்கள் ஆக்கல்,காத்தல்,அழித்தல் அடங்கிய தாண்டவத்தை இறைவடிவாகக் கண்டு சிலைகளாய் வடித்ததாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் CARL SAGAN குறிப்பிடுகின்றார்.

பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது முதற்சில கணங்களில் நடந்த நிகழ்வுகளை ஆராயும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள ஜெனிவாவில் உள்ள ஐரோப்பிய அணு இயற்பியல் ஆராய்ச்சிக்கூடத்தின்(EUROPEAN CENTER FOR PARTICLE PHYSICS RESEARCH-CERN) முகப்பில் ஆறு அடி உயரமுள்ள நடராசர் சிலை நிறுவப்பட்டிருக்கின்றது. இது தமிழர் பண்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள மகுடம் என்றால் மிகையில்லை. இச்சிலையடியில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய நடராசரின் சமசுகிரத துதியுடன் "Hundreds of years ago, Indian artists created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. In our time, physicists have used the most advanced technology to portray the patterns of the cosmic dance. The metaphor of the cosmic dance thus unifies ancient mythology, religious art and modern physics." எனும் CAPRA இன் வசனம் பொறிக்கப்பட்டிருக்கின்றது.

இப்போது சொல்லுங்கள் பகுத்தறிவுள்ளோர் சைவசித்தாந்திகளா? அன்றி கொளுத்துகிற கடும் வெய்யிலும் கருப்புச்சட்டை போட்டு விஞ்ஞான அறிவுக்கு முரணாக திரிகின்றவர்களா?

சரி; அடுத்த பகுதியில் ஐந்தொழில் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.


சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 6




மேலும் படிக்க...

Sunday, July 31, 2011

சைவக்காவலர் சிவத்திரு.இ.நமசிவாயம் ஐயா சிவபதம் பெற்றார்!


திருக்கேதீசுவரத் திருத்தலத்தின் தலைவரும் ஈழத்து சைவக்காவலருமான சிவத்திரு இராசப்பிள்ளை நமசிவாயம் ஐயா 99ம் அகவையில் சனிக்கிழமை காலை கொழும்பில் தனது பூதவுடலை விட்டு நீங்கி சிவபதம் பெற்றார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகக் கொண்ட சிவனடியார் நமசிவாயம் ஐயா, 1912ஆம் ஆண்டு சித்திரை மாதம் 11ஆம் நாள் பூவுலகில் இராசப்பிள்ளை, சிதம்பரனாச்சியார் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார்.  ஐயா ஆரம்பக்கல்வியை வடமராச்சியில் உள்ள விக்டோரியா கல்லூரியிலும் உயர்கல்வியை யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியிலும் கற்றார். சட்டத்துறையில் தனது மேற்படிப்பை மேற்கொண்டு 1941 இல் சட்டத்தரணியாக பணியாற்ற தொடங்கினார். விஜயலஷ்மி அம்மையாரை திருமணம் செய்தார். இவர்கள் நான்கு பிள்ளைகளுக்கு பெற்றோராயினர்.

ஈழத்தில் மட்டுமற்றி தமிழகத்திலும் சைவப்பணிகள் ஆற்றி 64ஆம் நாயனாராக போற்றத்தக்க பேறைப்பெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாலவரால் ஆரம்பிக்கப்பட்ட திருக்கேதீசுவரத் திருப்பணி சைவப்பெரியார் சிவபாதசுந்தரம் அவர்களாலும், சேர். கந்தையா வைத்தியநாதன் அவர்களாலும் தொடரப்பட்டு சிவத்திரு.இ.நமசிவாயம் ஐயாவால் பெரிதும் வளர்த்தெடுக்கப்பட்டது.

பல்வேறு கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி சைவசமயத்தின் மேன்மைகளை ஊடகங்களூடாக நிலைநாட்டினார். திருநெறிச்சைவ சித்தாந்த வளர்ச்சிக்கு ஈழத்தில் பெரும்பங்காற்றினார். இந்து என்ற சொல்லால் சைவம் என்ற சொல் மழுங்கடிக்கப்படுவதையும்,ஸ்மார்த்த மதம் இந்துமதம் என்ற பெயரில் சைவர்களுக்குள் புகுத்தப்படுகின்றதென்பதையும் சைவமக்களுக்கு உணர்த்தி சைவத்திருநெறிக் காவலராக விளங்கினார். சைவநெறிக்கு முரணான வழிபாடுகளையும் அவ்வழிபாடுகளை நடத்துகின்ற சிவாச்சாரியார் அந்தணர்களையும் கண்டித்தார். எவருக்கும் அஞ்சாது உண்மையை உள்ளபடி உரைத்தார்.சைவத்திருநெறியை பாதுகாக்க தன்னாலான தன்சக்திக்கு மீறிய பணிகளையெல்லாம் ஆற்றினார்.

சிவனடியார் நமசிவாயம் ஐயாவின் பணிகளை நன்குணர்ந்துகொண்ட தமிழக திருவாவடுதுறை ஆதீனம் 2002ஆம் ஆண்டு பொன்னாடை போர்த்தி தங்கமோதிரம் அணிவித்து பொற்கிழி வழங்கி கௌரவித்தமை அனைவருக்கும் மகிழ்வை ஊட்டியது.
 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருக்கு பின்னர் ஈழத்தவர் ஒருவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய கௌரவம் என்றால் அது சிவனடியார் சிவத்திரு.இ.நமசிவாயம் அவர்களுக்கே என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய விடயமாகும்.

இராச இராச சோழனுக்கும் நம்பியாண்டார் நம்பிக்கும் திருக்கேதீசுவர ஆலயத்தில் சிலை அமைத்தார். இவர்களுக்கு முதன் சிலை அமைத்த சைவப்பெரியார் சிவத்திரு .இ.நமசிவாயம் அவர்களே என்றால் மிகையில்லை! கல்கி சஞ்சிகையும் இராச இராச சோழனுக்கு சிலை அமைக்கப்பட்டதை தமிழகத்தில் பதிவுசெய்தது.

போர்த்துக்கேயரால் இடித்தழிக்பட்ட தேவார முதலிகளான திருஞானசம்பந்தப்பெருமான்,சுந்தரமூர்த்தி நாயனார்
ஆகியோரால் பாடல்பெற்ற தலமாக விளங்கிய திருக்கேதீசுவர
ஆலயத்துக்கு கட்டிடப்பணி, சிலை உருவாக்கப்பணி,தேர் உருவாக்கப்பணி என்று எண்ணற்ற பணிகளை சிவனடியார் இ.நமசிவாயம் ஐயா மேற்கொண்டிருந்தமையை பாராட்டி திருக்கேதீசுவர ஆலய திருப்பணிச்சபையின் ஆயுட்காலத்தலைவராக மன்றம் தமக்கு நியமித்து ஐயாவை கௌரவப்படுத்தியது. சபையினால் முதன்முதலில் இவ்வாறான கௌரவம் ஐயாவுக்கே வழங்கப்பட்டமை குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும்.

சிவனடியார் இ.நமசிவாயம் ஐயாவின் இழப்பானது சைவத்தமிழ் உலகிற்கு ஈடுகட்டமுடியாத பேரிழப்பே!
திருக்கைலாயத்திற்கு ஐயாவின் ஆன்மாவை திருநந்திதேவர் அழைத்துச் சென்றிருப்பார் என்பதும் சிவானந்தப்பேறை நிலையாக நுகரும் திருப்பேறு ஐயாவுக்கு வாய்க்கபெற்றது என்பதும் சிவனடியாரின் துணிபு.

ஐயாவின் பூதவுடல் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 4 மணிக்கு பொரளை மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.சிவனடியார் நமசிவாயம் ஐயாவின் பூதவுடலை இறுதியாக வணங்க விரும்பும் சைவ ஆர்வலர்கள்,சைவமக்கள்,சிவனடியார் திருக்கூட்டத்தவர்கள் இலக்கம் 2,அடம்ஸ் அவன்யூ,கொழும்பு -04 என்னும் முகவரியிலுள்ள ஐயாவின் இல்லத்திற்கு செல்லுமாறு பணிவோடு வேண்டிக்கொள்கிறேன்.

எல்லாம் திருவருட் சம்மதம்
திருச்சிற்றம்பலம்

மேலும் படிக்க...

Monday, June 13, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-4

இப்பகுதியில் பௌதீகவிஞ்ஞானத்தின் துணையுடன் சைவசித்தாந்த கருத்து விளக்கப்பட்டுள்ளது. முன்னைய சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் தொடர்களை படிக்காது; இப்பகுதியை படிக்க முனைய வேண்டாம். ஏனெனில் இப்பகுதியின் அருமையை உணர்ந்துகொள்வதற்கு முன்னைய பகுதிகளில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் ஓரளவு தெளிவு பெற்றிருத்தல் வேண்டும்.
சொற்பதம் கடந்த சொரூபநிலையில் உள்ள சிவபெருமான் ஆன்மாக்களின் மேற்கொண்ட பெருங்கருணை காரணமாக;
தனது எண்குணங்களில் ஒன்றாகிய பேரருள் உடைமையால்;தடத்தநிலைகளை பூணுகின்றார்.

தடத்தநிலை என்றால் என்ன? குழப்பம் வேண்டாம்! சும்மா இருக்கும் இறைவனின் இயல்புதான் சொரூப இயல்பு என்று முன்னர் பார்த்தோம். அதாவது சிவனே என்று சும்மா இருக்கின்ற நிலை! தடத்தநிலை என்பது இறைவனின் இயங்குநிலை எனலாம்.

தடத்தநிலைகள் மூன்றுவகைப்படும்.அவையாவன;
1.அருவம்,அருவுருவம்,உருவம் என்னும் மூவகை வடிவம் தாங்குதல்
2.ஐந்தொழில் ஆற்றுதல்
3.ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்றல் 
தாய்ப் பன்றியை இழந்த பன்றிக்குட்டிகளுக்கு தாய்ப்பன்றி வடிவெடுத்து பாலூட்டிய பரமனின் பெருங்கருணை, பாலுக்காக அழுத உபமன்யு குழந்தைக்கு பாற்கடலையே வரவைத்து வழங்கிய பெருங்கருணை, குளத்தில் குளிக்கச்சென்ற தந்தையைக் காணாது தவித்த ஞானசம்பந்தக்குழந்தைக்கு ஞானப்பாலை உமையைக் கொண்டு பொற்கிண்ணத்தினால் ஊட்டிவிட்ட பெருங்கருணை, யாவற்றையும் கடந்த அதிசூட்சுமமான சொரூபநிலையையுடைய சிவபெருமான், தடத்தநிலைகளை ஏன் பூணுகின்றார் என்பதை அஞ்ஞானபிடியிலுள்ள நம்மனைவருக்கும் உணர்த்தும் என்பது தெளிவு.

தடத்தநிலைகளின் பொருட்டு; சிவபெருமான் பெருங்கருணையினால் தாதான்மிய சம்பந்தம்,அத்துவித சம்பந்தம் ஆகியவற்றை பூணுகின்றார்.

அது என்ன தாதான்மிய சம்பந்தம்? 

தாதான்மிய சம்பந்தம் என்பது; உயிர்களை உய்விக்கும் பொருட்டு மூவகைத் திருவடிவங்களை தாங்கவும்,ஐந்தொழில்களை மேற்கொள்ளவும் சக்தியோடு இறைவன் கொள்ளுகின்ற சம்பந்தம் ஆகும்.


மூவகைத் திருவடிவங்கள் யாவை?
அருவம்,அருவுருவம்,உருவம் என்பவையாகும்.

அருவம் = கண்ணிற்கு புலனாகாது சக்தி வடிவமாக இருந்தே, காரியங்களை செய்வது. இலயசிவன்(நிஷ்கள சிவன்,சத்தர்) என்று அழைக்கபடுவர். சிவபெருமான் ஞானசக்தியுடன் மட்டுமே பொருந்தியிருக்கும் தன்மையால் அருவ வடிவம் தாங்குகின்றார்.

அருவுருவம் = ஞானசக்தியையும் கிரியாசக்தியையும் சம அளவில் கொள்வதன் மூலம் பூணுகின்ற வடிவம். ஒருமுறை புலனாகியும், புலனாகாமலும் இருப்பது இவ்வடிவமாகும். புலனாகும்போது முகம்,கை,கால் போன்ற உறுப்புக்கள் ஏதுமின்றி காட்சியளிப்பது. ஒளி, இலிங்கம் ஆகியன அருவுருவத் திருவடிவங்களாகும்.

உருவம் = ஞானசக்தியைவிட கிரியாசக்தியை மிகுவித்து; அதன்மூலம் கண்களுக்கு புலனாகும்வகையில் முகம்,கை,கால் போன்ற உறுப்புகளுடன் தெளிவாகத் தோன்றுவது உருவத் திருவடிவமாகும். தென்முகக்கடவுள்,சோமஸ்கந்தர்,அர்த்தநாதீசுவரர்,நடராசர் போன்ற மகேசுவர மூர்த்தங்கள் இதற்குள் அடங்கும்.
இறைவன் சக்தியுடன் பொருந்துகின்ற தன்மைகளுக்கு ஏற்ப திருவடிவங்களை தாங்குகின்றமையால் தாதான்மிய சம்பந்தம் ஒருமையுள் இருமை எனப்படும். இறை,சக்தி ஆகியன பொருட்தன்மையில் ஒன்றாயினும்;செயற்பாட்டில் இருதிறப்படுவதால் ஒருமையுள் இருமை என்று தாதான்மிய சம்பந்தத்தை அழைப்பர்.

அதாவது சிவமே சக்தி. சும்மா இருக்கும் நிலையில் சிவன் என்றும் இயங்கும் நிலையில் சக்தி என்றும் இறைவன் அறியப்படுகின்றான். பௌதீகவிஞ்ஞானத்தில் இயக்கசக்தி,அழுத்தசக்தி என்று சக்தி பலவாறு வகைப்படுத்தப்படும்.
உராய்வற்ற இலட்சிய தொகுதியில் பந்தின் நிலையை கீழுள்ள படம் காட்டுகின்றது. இங்கு, சக்தியின் தன்மைக்கு ஏற்ப பொருளின் நிலை வேறுபடுகின்றது. அழுத்தசக்தியாக இருக்கும்போது பொருள் இயங்காது நிற்கின்றது. சாய்தளத்தில் கீழ்நோக்கி உருளுகின்றபோது அழுத்தசக்தி குறைவதுடன் இயக்கசக்தி கூடுகின்றது.  கிடையான தளத்தை பந்து அடைந்ததும் பெற்ற வேகத்துடன் பந்து உருண்டபடி இருக்கும். இப்போது இயக்கசக்தி மாத்திரமே உள்ளது. எனவே, சக்தியின் வடிவம்மாற பொருளின் இயல்பும் மாறுகின்றது. இதுபோல்த்தான், சக்தியின் தன்மைக்கு ஏற்ப சிவத்தின் திருவடிவங்கள்(அருவம்,அருவுருவம்,உருவம்) ஏற்படுகின்றன.

தாதான்மிய சம்பந்தத்தின் விளைவால் இறைவன் ஆற்றும் ஐந்தொழில்கள் யாவை? விஞ்ஞானம் எங்கனம் இறைவனின் ஐந்தொழில் தத்துவத்தைக் கண்டு வியந்து நிற்கின்றது?அத்துவித சம்பந்தம் என்றால் என்ன? சைவசித்தாந்தத்தின் அத்துவிதத்துக்கும் சங்கரரின் அத்துவிதத்துக்கும்(கேவலாத்துவிதம்) என்ன் வேறுபாடு? மலர இருக்கின்ற தொடர்களில் ஆராய்வோம்.

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 5
மேலும் படிக்க...

Friday, May 20, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 3

ஜன்ஸ்டீனை விஞ்சிய சைவசித்தாந்தம் என்று தலைப்பிட்டு, இப்பகுதியை வெளியிடுவோம் என்று நினைத்தேன். பின்னர்; சாதரண மானிடரோடு, தத்துவ ஆய்வைத்தந்த சித்தாந்திகளை ஒப்பிடுவதா? அவர்களின் அரிய முடிந்த முடிவான சிந்தாந்தத்தை ஒப்பிடுவது அழகானதா? இப்படியான எண்ணங்கள் தோன்றியமையால் தவிர்த்துவிட்டேன். சரி; ஜன்ஸ்டீனுக்கு இங்கு என்ன சம்பந்தம்? பார்ப்போம்.

முன்னைய பதிவுகளை படித்தவர்களுக்கு இப்பகுதி இலகுவாக விளங்கும். முன்னைய பகுதிகளை படித்திராவிட்டால்;  சிதம்பர சக்கரமாக இப்பகுதி தோன்றிவிடும். எனவே முன்னைய பகுதிகளுக்குரிய சொடுக்கிகளை கீழே தந்துள்ளேன்.
கடந்த பகுதியில் இறைவனின் சொரூபநிலையை/இயற்கை இயல்பைப் பார்த்தோம்.  இறைவனின் இயற்கை இயல்பே சத்து, சித்து, ஆனந்தம் என்னும் சச்சிதானந்தம் என்று பார்த்தோம். சத்து,சித்து,ஆனந்தம் என்றால் என்ன என்பதையும் பார்த்தோம். இப்பகுதியில் சத்து,சித்து,ஆனந்தத்தை விரித்து எப்படி எண்குணம் உடையவனாக இறைவனை சைவசித்தாந்தம் காணுகின்றது என்பதை பார்க்கவுள்ளோம். 

அதற்கு முதல்; இறைவனின் சொரூப இயல்புக்கும் ஜன்ஸ்டீனின் இறைகோட்ப்பாட்டுக்கும் உள்ள தொடர்ப்பை தெரிந்து கொண்டால் விஞ்ஞானத்தை மிஞ்சிய நெறி சைவநெறி என்பதை உணர்ந்து கொள்ள ஏதுவாக அமையும்.

ஜன்ஸ்டீன் ஆளுமையுள்ள இறைவன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றார்."ஆளுமைத்துவமுடைய இறைவன் இல்லை என நான் உங்களுக்கு நிரூபிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நான் அத்தகைய இறைவனைக் குறித்து பேசுவதாக இருந்தால், என்னைப் பொய்யன் என்றுதான் சொல்லவேண்டும்" என்கிறார்.
சைவசித்தாந்தம் இறைவனின் சொரூப இயல்பை/ இயற்கை இயல்பை அப்படித்தான் காணுகின்றது. ஆனால் ஜன்ஸ்டீனின் கருத்தை கடந்து இன்னும் தெளிவாக இறைவனின் இயற்கை இயல்பை விளக்குகின்றது.

அனைத்து ஆளுமைகளையும் கொண்ட இறைவனின் இயற்கை இயல்பு(சொரூப இயல்பு) எத்தொழிலும் செய்யாது ஆளுமையற்று இருத்தலே என்கின்றது.

சிவன் அருவுருவுமல்லன் சித்தினோடு அசித்தும் அல்லன்
பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடுவானும் அல்லன்
தவமுதலி யோகபோகத் தரிப்பவனும் அல்லன் தானே
இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பினானே -  சிவஞானசித்தியார்

இப்பாடலையும் அதற்குரிய பொருளையும் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். இப்பகுதியில்  மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.

"தனியே சிவபெருமானைப் பற்றிக் கருதினால்;  அவர் உருவம்,அருவுருவம்,அருவம் எனும் வடிவங்கள் அற்றவர். அறிவுள்ள பொருட்களாகவும் அறிவற்ற பொருட்களாகவும் உள்ள எந்த உலகப்பொருட்களாகவும் இல்லை. படைப்பு முதலான தொழில்களைத் தானே செய்பவனாகவும் இல்லை. தவம்,யோகம்,போகம் ஆகிய எதனையும் அவர் மேற்கொள்வதில்லை. இவற்றை ஆன்மாக்களுக்கு வழங்குவதன்றி எதையும் அவர் தனக்கு ஏற்பதில்லை.  இவை அவரோடு பொருந்தினாலும், இவை எவற்றாலும் அவர் பற்றப்படுவதில்லை" என்பதே சைவசித்தாந்த சாத்திர நூலாகிய சிவஞானசித்தியார் இறைவனின் சொரூப இயல்புக்கு தரும் இலக்கணம்.

ஆக; ஐந்தொழில்கள் பண்ணுகின்ற இயல்பையெல்லாம் கடந்து, "சும்மா" இருக்கின்ற நிலை!  "சிவனே என்று சும்மா இருந்த என்னை..........." என்று நாம் பேச்சுவழக்கில் கையாளுக்கின்றோமே.......அதுதான் சைவசித்தாந்தம் கண்ட அருமை!   அதனால்த்தான் சித்தாந்தம் என்பதன் பொருள் அனைத்தையும் ஆய்ந்தறிந்து சிந்தித்து ஏற்பட்ட முடிந்த முடிவு என்கின்றோம்.

பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது முதற்சில கணங்களில் நடந்த நிகழ்வுகளை ஆராயும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள ஜெனிவாவில் உள்ள ஐரோப்பிய அணு இயற்பியல் ஆராய்ச்சிக்கூடத்தின்(EUROPEAN CENTER FOR PARTICLE PHYSICS RESEARCH-CERN) முகப்பில் ஆறு அடி உயரமுள்ள நடராசர் சிலை நிறுவப்பட்டிருக்கின்றது.ஏன் என்று தெரியுமா? இறைவனின் ஆனந்த தாண்டவ திருவடிவத்தில் பிரபஞ்சப் படைப்பு தொட்டு, ஒடுக்கம் வரையான அனைத்தும் விளக்கப்பட்டிருக்கும் அருமையை விஞ்ஞானிகள் கண்டு வியந்தமையால் ஆகும்.திருவாசகத்தின் திருவண்டப்பகுதியினைக் கண்டு, விஞ்ஞானம் மலைத்துப்போய் நிற்பது சைவரில் பலருக்குத் தெரியாது. உலகம் உருண்டை வடிவானது என்று கூறியதோடு மட்டுமல்லாது, அண்ட பிரபஞ்சங்களின் காட்சியை அழகாக சொல்லிய அருமையோடு, பிரபஞ்ச ஒடுக்கம் -விரிவையும் தெளிவாக விளக்கியுள்ளார். இவற்றை ஏன் நினைவூட்டுகின்றேன் என்றால், சைவசித்தாந்தம் என்பது தத்துவ ஆராய்வின் முடிவு என்பதை சைவர் யாவரும் உணர்ந்திருக்க வேண்டும் என்பதற்காகவே!

சரி, இறைவனின் இயற்கை இயல்பில்(அதாவது சொரூப இயல்பில்) "சும்மா" என்று இருந்த சிவப்பரம்பொருள் எண்குணனாக தடத்தநிலையில் தன்னை வெளிப்படுத்துகின்றார். அவ்வாறு எண்குணனாக தடத்தநிலையில் தன்னை வெளிப்படுத்தும் சொரூப இயல்புடைய சிவப்பரம்பொருள் சச்சிதானந்தம் என்று போற்றப்படுவார்.

அதுவென்ன தடத்தநிலை? அடுத்தபகுதியில் அதை விரிவாகப் பார்ப்போம். இப்போது எண்குணங்கள் யாவை என்பதைப் பார்ப்போம்.

தன்வயத்தனாதல் - சுதந்திரம் உடையவனாக இருத்தல். அதாவது பிறர் வயப்பட்டு தொழிற்படாது, அனைத்திலும் சுதந்திரம் உடையவன். இவனது ஆணைவழியே அனைத்தும்.

தூய உடம்புடைமை - உயிரின் இருப்பை எமக்கு அறிய உதவுவது உடம்பு. அதுபோல் இறைவனது இருப்பை அறிந்து கொள்வதற்கு அவனது அருள் உதவுகின்றது. எனவே உவமைகளைக் கடந்த, இப்படிப்பட்டது,இத்தகையது என்ற வர்ணனைகளுக்குள் அடங்காத அருளையே தனது உடலாகக் கொண்டிருப்பவன். அருளே அவனது திருமேனி.

முடிவிலா ஆற்றல் உடையவன் / அளவிலா ஆற்றல் உடையவன் -  அறிவித்தாலன்றித் தாமே அறியமாட்டாத உயிர்களையும் அசைவித்தாலன்றி தாமே அசையமாட்டாத பிரபஞ்சங்களையும் ஏககாலத்தில் அறிவித்து, அசைவித்து அனைத்தையும் ஆளுகின்ற ஆற்றல். எச்செயலையும் எக்காலத்திலும் செய்ய வல்லமை உடைவனாக இருத்தல்.

இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன் - இறைவன் இயல்பாகவே  ஆணவம்,கன்மம்,மாயை என்னும் பாசத்துக்குள் அகப்படாதவன். ஆணவம்,கன்மம்,மாயை என்னும் பாசம் இறைவனை அணுகும் திறனற்றவை. இறைவனும் இயல்பாகவே அவற்றில் இருந்து விலகி; தூய்மையானவனாக இருப்பவன்.

பேரருள் உடையவன் - பயன் கருதாது அருள் வழங்கும் தன்மையுடையவன். ஆன்மாக்கள் தங்களைப் பிடித்துள்ள ஆணவம்,கன்மம்,மாயை ஆகிய மும்மலங்களாகிய பாசங்களின் நிமித்தம் அறிவு சுருங்கி, பேரின்பத்தை அனுபவிக்கமுடியாது துன்புறுவது கண்டு; அவற்றுக்கு பாசநீக்கம் செய்து பேரின்பம் அனுபவிக்கச் செய்தல் வேண்டும் என்று எழுகின்ற பெரு இரக்கமே இறைவனின் பேரருள். உயிர்களுக்கு பிறவிகள் தந்து, வினைகளைப் போக்கி, ஆன்மாவை மெதுமெதுவாக பக்குவப்படச்செய்து, பாசங்களிலிருந்து நீக்கி விடுவித்து முக்தி வழங்குகின்ற இறைவனின் ஒப்புவமையற்ற பெரு இரக்கம்.


இயற்கை உணர்வினன் -  ஆன்மா கருவி கரணங்களின் துணையினால் அறிவிக்க அறிவது.( ஐம்புலன்களின் துணையோடும் ஐம்பொறிகளின் மூலம் அறிந்து கொள்வது) ஆனால் இறைவன் தன்னியல்பால் அறிவுடையவானாக விளங்குதல். அனைத்தையும் இயல்பாகவே தானே அறியும் தன்மை உடையவன்.

முற்றுணர்வினன் - அறிவு இயற்கையாகவே விளங்குவதுடன்;  ஏக காலத்தில் அனைத்தையும் உணருகின்ற முற்றறிவு உடையவன்.அதாவது ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொன்றாக அறியாமல் எல்லாப் பொருள்களையும் ஒரே நேரத்தில் அறிதல்.


வரம்பிலா இன்பம் உடையவன் / அளவிலா ஆனந்தம் உடையன் -  பேரின்பம் உடையனாக விளங்குதல். அதாவது யாதொரு குறையும் இல்லாதவன்.


தன்வயத்தனாதல்,தூய உடம்புடைமை,முடிவிலா ஆற்றல் உடைமை,இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கிய தன்மை 
ஆகிய நான்கும் இறைவனின் சத்து தன்மைக்குள் அடங்கும். 

முற்றுணர்வு உடைமை, பேரருள் உடைமை, இயற்கை உணர்வுடமை ஆகிய மூன்றும் சித்து தன்மைக்குள் அடங்கும். 

வரம்பிலா இன்பம் உடைமை ஆனந்தத்தன்மைக்குள் அடங்கும். 

எனவே சச்சிதானந்த நிலையாகிய இறைவனின் இயற்கைத்தன்மையை சைவசித்தாந்தம் அழகுற விரித்து தெளிவுபடுத்துகின்றது என்றால் மிகையில்லை! 


நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்- சிவஞான போதம் 

அதுசரி, சைவநூல்கள் இறைவனை நிர்க்குணன் என்றும் குறிக்கின்றது. எண்குணன் என்றும் குறிக்கின்றது. குழப்பமாக இருக்கே?
மும்மலப்பிணிப்பால் வருகின்ற சாத்வீகம்,இராசதம்,தாமதம் என்னும் முக்குணங்களைக் கொண்டிருப்பவன் அல்லன் என்ற பொருளிலேயே நிர்க்குணன் என்று சைவநூல்கள் குறிக்கின்றன.

தடத்தநிலையில் எண்குணனாக வெளிப்படும் இறைவனின் எண்குணங்கள் சொரூபநிலையில் வெளிப்படுத்தப்படாது "சும்மா" இருக்கும் சிவமாக சிவப்பரம்பொருள் விளங்கும். இந்நிலையில் சச்சிதானந்தம் என்று போற்றப்படுகின்றார் என்று விரிவாகப் பார்த்தோம்.எம்பெருமான் சிவபெருமான் தன்னுடைய எண்குணங்களை வெளிப்படுத்தி நிற்கும் தடத்தநிலை பற்றி  சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பகுதி 4 இல் பார்ப்போம்.



மேலும் படிக்க...