"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, September 6, 2010

சமணமா?சைவமா? கட்டுரை ஒன்றின் மறுப்புக் கட்டுரை



"தமிழை வளர்த்தது சைவமா? சமணமா?" என்ற கட்டுரைக்கு மறுப்பு கட்டுரையே இதுவாகும்.எனவே; குறித்த கட்டுரையைப் படிப்பதற்கு கீழ் உள்ள தொடுப்புகளைப் பாவிக்க




சிந்துவெளிப் பண்பாடு,தென்னகத்து சான்றுகளுடாக  "தமிழை வளர்த்தது சைவமா? சமணமா?" என்ற கட்டுரையின் உண்மைத்தன்மையை முதலில் ஆராய்வோம்.

சிந்துநாகரிகம் சிவநாகரிகம்

சிந்துவெளி நாகரீகத்தின் காலப்பகுதியை ஆய்வாளர்கள் பிந்திய கரப்பா நாகரீகம், ஆரம்பகால கரப்பா நாகரீகம் என்று பாகுபடுத்துவர்.கி.மு 3000ஆண்டுகளுக்கு முற்பட்டதாக பொதுவாக யாவரும் ஏற்பர். சிலர் கி.மு 7000 வரைக்கும் செல்வர். எது எப்படியோ சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் திராவிட மூதாதையரே (தமிழ் மூதாதையர்) என்ற கருத்துக்கு அமோக ஆதரவும் பெருமளவு ஆதாரமும் உண்டு.

சிந்துவெளி நாகரீக மக்களிடம் தாய்த்தெய்வ வழிபாடு இருந்தமையை தங்கள் கட்டுரை அழகுடன் ஏற்றுள்ளது.மகிழ்ச்சி! ஆனால் சிவசின்னங்கள் காணப்பட்டதை மெதுவாக மறைந்துள்ளது....அல்லது மறந்துவிட்டீர்கள் எனக் கருதுகிறேன்.

யோகி போன்ற அமர்ந்தநிலையில் உள்ள இறைவடிவத்தை சிவன் என்றே ஆய்வாளர்கள் சுட்டியுள்ளமையை எங்கனம் மறந்தீர்? இலிங்கவடிவ அம்சங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தமை மறக்கலாமா? விலங்குகளால் சூழப்பட்டநிலையில் யோகிபோல் அமர்ந்திருக்கும் சிவவடிவம் பசுபதித் தத்துவம் என்று ஆய்வாளர்கள் சுட்டியதை மறந்துவிட்டீரே!

"Among the many revelations that Mohenjadaro and Harappa have in store for us, none perhaps is more remarkable than this discovery that Saivism has a history going back to the chalcolithic age or perhaps even further still, and that it takes place on the most ancient living faith in the world- Sir John Marshall"

சிந்துவெளியை ஆய்வுசெய்த சேர்.ஜோன்.மார்சல் என்பாரின் கருத்தை உற்றுணர்க.
சிந்துவெளி ஆய்வை மேற்கொண்ட ஹொரஸ் பாதிரியார் கடவுள்,தாண்டவன்,கோவில்,வேலன் முதலான மூலத்தமிழ்ச் சொற்கள் அங்குள்ள முத்திரைகளில் உள்ளன என்றுள்ளார்.
எனவே சிந்துவெளி நாகரீக மக்கள் சிவவழிபாடுடையவர்கள் என்பது திண்ணம்!!!

இருக்கு வேதத்தில் "சிச்ன தேவர்களைச் சாய்த்து நூறுகதவுள்ள புரத்தில் மறைக்கப்பட்டிருந்த எல்லாச் செல்வங்களையும் தன் ஆற்றலால் வென்றான்" என்று இந்திரன் போற்றப்படுகின்றான்.  "சிச்னதேவர்கள் எங்கள் வேள்வியை கலைக்காமல் இருக்க இந்திரன் காப்பானாக" என்றும் இந்திரன் போற்றப்படுகின்றான்.  சிச்னம் என்றால் இலிங்கம்(குறி-ஆண்குறி) என்று பொருள். எனவே இலிங்கவழிபாட்டினர் என்றும் இலிங்கவழிபாட்டுக்குரிய தெய்வம் என்றும் சிச்னதேவர் என்பது பொருளாகும். (ம.ரா.ஐம்புநாதன் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டதும் சென்னைப்பல்கலைக்கழகத்து தமிழ் இலக்கியத்துறையின்  தலைவரும் பேராசிரியருமான வீ.அரசு என்பவரால் செவ்விதாக்கம் செய்யப்பட்டதுமான இருக்குவேதத்தில் இருந்து இந்த உதாரணங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.)

குடிவந்தேறிய ஆரியருக்கும் சிந்துவெளியில் வாழ்ந்த மக்களுக்கும் இடையிலான பகைமையின் விளைவால் இவ்வகையான கருத்து முதல்வேதமாகிய இருக்கு வேதத்தில் பதிவாகியுள்ளது. பின்னாளில் ஏற்பட்ட சமரசத்தன்மைகளும் இனக்கலப்புகளுமே சிவவழிபாட்டை வேதங்கள் உயர்த்தத் தொடங்கியமைக்கு ஏதுவாயிற்று.

எனவே சிந்துவெளி மக்கள் திராவிடர் என்பதும் அவர்களிடம் தாய்த் தெய்வவழிபாடு, யோகிச்சிவ வழிபாடு,இலிங்கவழிபாடு என்பன இருந்தமை தெளிவானது என்பதோடு முருகவழிபாட்டுக்குரிய அறிகுறிகள் இருக்கின்றன என்பதையும் கருத்தில் இருத்துக.

அண்மையில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டின் இலட்சிணையில்(சின்னம்) திருவள்ளுவருடன் சிந்துவெளி நாகரீக அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்கள் இணைக்கப்பட்டிருந்தமையும் அதில் யோகி போன்று அமர்ந்திருக்கும் "பசுபதி' தத்துவச் சிவசின்னம் பொறிக்கப்பட்டிருந்தமையுமே சிந்துவெளி முந்து-பழந்தமிழ் குடியென்பதையும் அக்குடியின் வழிபாடு சைவநெறி வழிபாடு(சிவவழிபாடு+தாய்த் தெய்வவழிபாடு+முருகவழிபாடு) என்பதையும் பூரணமாக ஆவணப்படுத்துகிறது என்க!

மொழியாரச்சியாளர்களின் ஆய்வுப்படி,  திராவிடமொழிகள் இன்றும் வடநாட்டில் ஒருசிலபகுதிகளில் அங்குள்ள திராவிடர்களிடம் புழக்கத்தில் உண்டு. இந்தத்திராவிடக்குடிகள் வாயிலாக வடநாட்டினை ஆரியருக்கு முன்னர் திராவிடர்கள் தாயகமாகக் கொண்டு வாழ்ந்ததை உறுதிசெய்யப்படுகின்றது. எனவே இந்தியத்துணைக் கண்டத்தின் மூத்தகுடியாகிய முந்து-பழந்தமிழ் குடிகளில் சிந்துமக்களிடம் இருந்த சிவவழிபாட்டை எக்காரணம் கொண்டும் ஆரியதூவேசங்களால் மறைக்கமுடியாது!!! அது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்தலுக்கு ஒப்பாம்!


முந்து-பழந்தமிழ்க் குடியினராகிய சிந்துவெளி மக்கள், ஆரியர் வருகையோடு குறிப்பிடக்குடிய அளவில் குடிபெயரவும் தொடங்கினராதலால், தென்னகம் நோக்கி குடிபெயர்ந்த முந்து-பழந்தமிழர் அங்கிருந்த முந்து-பழந்தமிழ்க்குடியினர் கலந்தே இருந்திருப்பர். எனவே சிவவழிபாடும் சைவநெறி வழிபாடுகளும் தென்னக்கத்தில் வளர்ச்சி பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை! அவ்வண்ணம் வளர்ச்சிபெற்ற சைவநெறி வழிபாட்டை தென்னக்கத்தே இனி ஆராய்வோம்!

தென்னகத்தில் சைவநெறி

சங்ககாலம் பொதுவாக கி.மு 3ம் நூற்றாண்டு தொட்டு,கி.பி3ம் நூற்றாண்டுவரையான காலப்பகுதி என்றே கருதப்படுகின்றது. அண்மையில் கோவையில் நடந்த செம்மொழி விழாவின் தமிழ் ஆய்வரங்கத்தில் கி.மு 6ம் நூற்றாண்டிலேயே சங்ககாலம் தொடங்கிற்று என்ற கருத்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் தோன்றிய நூல்கள் 
சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களுள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை  என்பன அடங்குகின்றன.
தொல்காப்பியம்
குறிஞ்சிப்பாட்டு
திருமுருகாற்றுப்படை
நெடுநல்வாடை
பட்டினப்பாலை
பெரும்பாணாற்றுப்படை
மலைபடு கடாம்
அகநானூறு
புறநானூறு
பரிபாடல்
பதிற்றுப் பத்து
ஐங்குறுநூறு
கலித்தொகை
குறுந்தொகை
நற்றிணை
சிறுபாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை
மதுரைக் காஞ்சி
முல்லைப்பாட்டு

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு எனப்படும்.
ஐங்குறுநூறு,அகநானூறு,புறநானூறு,கலித்தொகை,குறுந்தொகை,நற்றிணை,
பரிபாடல்,பதிற்றுப்பத்து என்பன எட்டுத்தொகை நூல்கள் எனப்படும்.

சங்கம் மருவிய காலம்
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப் படுகின்றன.
நீதி நூல்கள்
   1. திருக்குறள்
   2. நாலடியார்
   3. நான்மணிக்கடிகை
   4. இன்னா நாற்பது
   5. இனியவை நாற்பது
   6. திரிகடுகம்
   7. ஆசாரக்கோவை
   8. பழமொழி நானூறு
   9. சிறுபஞ்சமூலம்
  10. ஏலாதி
  11. முதுமொழிக்காஞ்சி
 அகத்திணை நூல்கள்
   1. ஐந்திணை ஐம்பது
   2. திணைமொழி ஐம்பது
   3. ஐந்திணை எழுபது
   4. திணைமாலை நூற்றைம்பது
   5. கைந்நிலை
   6. கார் நாற்பது
புறத்திணை நூல்
1.களவழி நாற்பது

சங்ககாலத்தில் பல்வேறு தெய்வங்களை தமிழகத்தில் நாம் காணக்கூடியதாக இருந்தாலும், எட்டுத் தொகைநூல்களுள் அகநானூறு,புறநானூறு,ஐங்குநூறு,பதிற்றுப்பத்து,கலித்தொகை என்பன வாழ்த்துப் பாவிற் சிவனையே துதிக்கின்றன. உலகை படைத்துக் காத்து அழிக்கும் இயல்புகளை உடையவன் என்று சிவனைப் போற்றுகின்றன.


புறநானூறு கடவுள் வாழ்த்து


"கண்ணி கார் நறுங்கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை;
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீர் அறவு அறியாக் கரகத்து
தாழ் சடை பொலிந்த அருந்தவத்தோற்கே"

அகநானூறு கடவுள் வாழ்த்து

கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு அத் தோலாதோற்கே!
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே;
செவ்வான் அன்ன மேனி; அவ்வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை;
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி;
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்
வரி கிளர் வயமான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்
தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே!

கி.பி 2ம் நூற்றாண்டளவில் அகநானூறும் புறநானூறும் தொகுக்கப்பட்டபோது இக்கடவுள் வாழ்த்துகள் இணைக்கப்பட்டதாக சில அறிஞர்கள் கூறுவர்.
எனினும் 450 ஆண்டுகால நீட்சியுடைய புறநானூற்று பாக்களில், சிவனுக்குரிய கோயில்கள் பற்றி குறிப்பிடுகையில் "கடவுள் ஆலத்து,ஆலமர் கடவுளன்ன,கள்ளி நீழற் கடவுள் என்று குறிப்பிடுகின்றன. "கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப் பிறைநுதல் விளங்கும் ஒருகண்போல" என்று நெற்றிக்கண்ணுடைய சிவன் புறநானூற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி
படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்
தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.

என்று கலித்தொகையில் கடவுள் வாழ்த்தில் இறைவனின் திருத்தாண்டவம் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.

"நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழல் கீழ்
மூவகை உலகு முகிழ்த்தன முறையே"
என்று ஐங்குறுநூறு சிவபெருமானின் அர்த்தநாரித்திருவடிவத்தை குறிக்கின்றது.'மூவகை உலகு முகிழ்த்தன முறையே" எனபதன் வாயிலாக சிவபெருமானின் முழுமுதற்தன்மை சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளமை புலனாகிறது.

"எரி எள்ளு அன்ன நிறத்தன் விரி இணர்க்
கொன்றை அம் பைந்தார் அகலத்தன் பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன் பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன் நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன் குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன் களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன் தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்க மா வலனே "
என்று பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்து சிவனை புகழ்ந்து பாடுகின்றது.

புராணக்கதைகளின் மூலம் தமிழகமே என்பதை இந்நூல்களின் கடவுள்வாழ்த்துப் பாடல்களில் இருந்து தெளிந்து கொள்ளலாம்!

சிறுபாணாற்றுப்படை "நீலநாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வர்க்கமர்ந்தனன் கொடுத்த" என்று சிவவழிபாட்டை குறிக்கின்றது. இவற்றின் வாயிலாக மரநிழல்களிற் அருள்தறிகள் அல்லது இலிங்கங்கள் வைத்து வழிபடப்பட்டமை உறுதியாகின்றது.

திருமுருகாற்றுப்படை ஆல்கெழுகடவுள் என்றும் சிலப்பதிகாரம் "நுதல் விழிநாட்டத்து இமையோன் கோயில் என்றும் "பிறவா யாக்கைப் பெரியோன் கோயில்" என்றும் குறிப்பிடுகின்றன. மணிமேகலை" நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலா" என்கின்றது.
மாயோன்,சேயோன்(முருகன்),வேந்தன்,வருணன்,கொற்றவை ஆகிய தெய்வங்களைக் குறிப்பிட்டு அத்தெய்வங்களைப் பற்றி விபரித்துவிட்டு,பின்னர் "வினையின் நீங்கி விளக்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூல் ஆகும்" என்கிறார் தொல்காப்பியர். ஆகமநூலையே குறிக்கின்றார் என்ற கருத்தும் உண்டு.

தொல்காப்பியத்தில் காணப்படும் கடவுள்,கந்தழி,சுட்டிறந்தவன் என்பன சைவசித்தாந்தக் கருத்துகள் செறிந்த இறைவனைச் சுட்டுகின்ற தமிழ்ப் பதங்களாகும். தொண்ணூற்றாறு தத்துவங்களையும் கடந்தவன்( எல்லாவற்றையும் கடந்தவன்) என்ற அருமையான பொருட்செறிவுடைய பதமே கடவுள். சுட்டிறந்தவன் என்பது எல்லாவற்றையும்(96 தத்துவங்களையும்) கடந்தது நிற்கும் இறைவன் தோற்றக்கேடில்லாதவன் என்ற பொருளைத் தருகின்றது.

கடைச் சங்ககாலத்திற்குபின் தோன்றிய மணிமேகலையில்
 "இறைவன் ஈசன் என
நின்ற சைவ வாதி நேர் படுதலும்
பரிசு நின் தெய்வ மெப்படித் தென்ன
இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையும் மாய்க்
கட்டி நிற்போனும் கலை உருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோனும்
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்
அன்னோன் இறைவன் ஆகுமென்று உரைத்தனன்"
என்று சமயக் கணக்கர் தந்திறம் கேட்ட காதையில் சைவசித்தாந்தம் விளங்கியமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகம அளவை அறிவன் நூலால் போக புவனம் உண்டு என்று சைவத்துறையின் ஆகமங்களை இறைவனே உரைத்தனன் என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது.மணிமேகலை நூல் கி.பி 3ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்ததாக கருதுவர்.

பிறவா யாக்கைப் பெரியோன் என்று பிறவாததன்மையையும் விண்கோரமுதுண்டுஞ் சாவ வொருவரும் உண்ணாத நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய்" என்று இளங்கோ அடிகள் சிவபெருமானின் தனிப்பெரும் முழுமுதற்தன்மையை குறிப்பிட்டுள்ளார்.அதுமட்டுமல்ல; சைவசித்தாந்தக் கருத்தின்படி சிவனுக்கு பிறந்தான் இறந்தான் என்ற வரலாறு இல்லை. இதை திருமந்திரம் தெளிவுறுத்துகிறது. எனவே; சைவசித்தாந்தக் கருத்துகள் சிலப்பதிகாரக்காலத்தில் இருந்துள்ளமைதெளிவாகிறது.

திருவாதிரைத் தெய்வமாகிய இறைவனுக்கு ஆகமங்களை உணர்ந்த அந்தணர் விழாவைத் தொடங்கினர் என்று மணிமேகலை காலத்துக்கு முன்னரே ஆகமவழிச் சைவநெறி விளங்கியதை "ஆதிரை விரிநூலந்தணர் விழவு தொடங்கப் புரிநூ லந்தணர் பொலங்கல மேற்ப" என்ற பரிபாடல் உணர்த்துகின்றது.

தொல்காப்பியத்தில் "முந்துநூல் கண்டு முறைப்படத் தொகுத்து"என்றவரி தொல்காப்பியத்திற்கு முன்னரே பலதமிழ் நூல்கள் இருந்தமையை உறுதிசெய்கின்றது. அகத்தியம்,அவிநயர் இயற்றிய நடன இலக்கணநூலகிய அவிநயம் போன்ற நூல்கள் கிடைக்காமற்போயிற்று.
திருவாசகத்தின் குறிப்புப்படி, தென்னாட்டிலேயே மகேந்திரமலையில் சிவபெருமான் ஆகமங்களை சொன்னார் என்பதை அறியக்கூடியதாகவுள்ளது. தமிழில் இவை எழுதாக் கிளவியாக தலைமுறை தலைமுறையாக பயன்பாட்டில் இருந்து கடற்கோளின் பின்னர் அழிந்து போயிற்று என்று ஆய்வாளர் சுட்டுவர்.தென்னாட்டை தாக்கிய கடற்கோளில் இந்த மகேந்திரமலை மூழ்கிற்று என்பர் ஆய்வாளர். மாணிக்கவாசகரை கி.பி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து வலுவிழந்து போயுள்ளது.  மறைமலையடிகள்,கா.சுப்பிரமணியப்பிள்ளை முதலானோர் இவர் கி.பி. 3ம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பதனை மணிமேகலையை கொண்டும் தில்லை மூதூரிற் புத்தரை வாதில் வென்றமையையும் கொண்டும் உறுதிப்படுத்துகின்றனர்.இவரை 63 நாயனாரில் சேர்க்கப்படாமைக்கு அரசியற் காரணங்களையே ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.சமய அறிஞர்கள் பல்வேறு சமயக்காரணங்களை முன்வைக்கின்றனர்.

`மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்``
என்பதன் வாயிலாக திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தென்னாட்டில் மகேந்திரமலையில் சிவனார் ஆகமத்தை கூறியருளினார் என்கின்றார். வடமொழி வழக்கில் கயிலையில் கூறியருளினார் என்பர். இனவே, இருமொழிகளிலும் ஆகமங்களை இறைவன் அருளியுள்ளான் என்பதையும் அவை ஒரேநேரத்தில் உமையுக்கு போதிக்கப்பட்டுள்ளது என்பதையும் திருமந்திரம் "ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே" என்று உறுதிசெய்கின்றார்.

ஜேர்மன் ஆய்வாளர் H.W.Schormerus ஆகம இலக்கியங்கள் முதலில் தமிழிலேயே இருந்தன என்றும் காலப்போக்கில் அவை வடமொழியில் பெயர்க்கப்பட்டு பின்னர் தமிழ்மொழி ஆகமங்கள் வழங்கிலந்து போயிற்று என்று கூறுகிறார்.

மகேந்திரமலையில் இருந்து இறைவன் அருளிய தமிழாகமங்கள் கடற்கோளில் மறைய பின்னர் மாணிக்கவாசகருக்கே அவ்வாகமப் பொருள் சிவபெருமானே குருவாக எழுந்தருளி உணர்த்துகின்றார். பின்னர் கிடைக்கப்பெற்ற ஆகமங்கள் வடமொழிப்படுத்கப்பட்டமையால் தமிழில் இருந்து வழக்கற்றுப் போயிற்று.  வடமொழி இலக்கியங்களில் ஆகமங்கள் இணைக்கப்படாமையினாலும் வடநாட்டில் ஆகமங்கள் புழக்கத்தில் காணப்பட்டிருக்கவில்லை என்பதாலும் தமிழில் இருந்து வடமொழிப்படுத்தப்பட்டவையே ஆகமங்கள் என்று கருதலாம்.(எது எப்படியோ ஆகமங்கள் கிடைக்கப்பெற்றதே பாக்கியம்.) பல்லவ மன்னன் இராஜசிம்மன் காலத்தில்(கி.பி.680 - 700) வழக்கில் இருந்த தமிழாகமங்கள் வடமொழிப்படுத்தப்பட்டன என்பர் ஆய்வாளர்கள்.
மறைமலையடிகள் வழக்கில் இருந்த தமிழாகமங்களை சமணர் அழித்திருக்கக்கூடும் எனக்கருதுவர்.  சைவக்கோயில்களை மூடிவைத்து வழிபடத்தடைவிதித்திருந்த சமணர் சைவநூல்களை அழித்தனர் என்பதில் உண்மை இருக்க வாய்புகள் உண்டே!

நாற்பதாண்டுக்கும்மேலாக கல்வெட்டுக்களை ஆராய்ந்துவரும் ஐராவதம் மகாதேவனின் ஆய்வுகளைக் கருத்தில் கொண்டு சங்க இலக்கியக்களை ஆய்வுசெய்துவரும் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் கருத்துப்படி,தொல்காப்பியம்,திருமுருகாற்றுப்படை,கலித்தொகை,பரிபாடல்கள்,திருக்குறள் என்பன கி.பி 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவையாகும்.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தனது ஆய்வின்படி பின்வருமாறு நூல்களை காலத்தின் அடிப்படையில் பகுக்கின்றார்.

1. திருமுருகாற்றுப்படை தவிர்ந்த பத்துப்பாட்டுப் பாடல்களும் கலித்தொகை, பரிபாடல் தவிர்ந்த எட்டுத்தொகை நூல்களும் சங்க காலத்துக்குரியன, அதன் வீரயுக மேலாண்மைக் காலம் கி.பி. 150 முதல் 250 வரை உள்ள காலம்.
2. திருக்குறள், கலித்தொகை, பரிபாடல், தொல்காப்பியம் ஆகியன ஏறத்தாழ கி.பி. 250 முதல் கி.பி. 400-450 வரையுள்ள நிலப்பிரபுத்துவ மேலாண்மைக் காலத்துக்குரியன.
3. சிலப்பதிகாரம் ஏறத்தாழ கி.பி. 400-450 முதல் ஏறத்தாழ கி.பி. 590-600 வரை எனப்படும் வணிக மேலாண்மைக் காலத்துக்குரியது

எனவே, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் ஆய்வின்படி, சிவவழிபாட்டை தொல்காப்பியத்துக்குள்ளும் திருக்குறளுக்குள்ளும் தேடிக்கொண்டிருப்பது தேவையற்ற ஒன்று! அது காலத்தால் பிந்தியதாகவே அமையும். ஆனால் சங்ககாலத்துக்குரிய புறநானூற்றிலும் ஏனைய சங்கநூல்களிலும் வாழ்த்துப்பாக்களிலும் பல்வேறு இடங்களிலும் சிவவழிபாட்டுக் குறிப்புகள் பலவுண்டு.

ஐராவதம் மகாதேவன் நூலில் இடம்பெறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் சமணத்துறவிகளுக்குக் கொடையாய் வழங்கிய குகை இருப்பிடங்கள் பற்றியவை,கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டின் இறுதிவரையான காலப்பகுதிக்குரியவை. தமிழ் எழுத்து முறைமைக்கு வந்தது கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே என்று ஐராவதம் மகாதேவன் கூறுவதைக் கொண்டு;சங்க இலக்கியங்கள், இந்த எழுத்துருவ வளர்ச்சிப் பின்புலத்திலேயே தோன்றியிருத்தல் வேண்டும் என்று பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார்.
எனவே இக்காலப்பகுதியில் சமணர் மன்னர்களின் அன்புக்குப் பாத்திரமாகி மன்னர்களிடம் இருந்து பல்வேறு நன்கொடைகளைப் பெற்றவண்ணம் இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. சமணர்களின் ஆதிக்கம் உள்ள காலத்தில் சைவ வழிபாடு இலக்கியங்களில் முதன்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுவது மடமையாகும்! எனவேதான் இங்கொன்று அங்கொன்றாக சங்கநூல்களில் சிவவழிபாட்டை தேடிப்பிடிக்க வேண்டியிருக்கின்றது.

இலங்கையில் சிவவழிபாட்டு தடையங்கள் கி.மு 1000- 900 ஆண்டுகளுக்கு வரலாற்றை பின்நகர வைக்கின்றது என்று ஆய்வாளர்கள் கூறுவர். கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாசனங்களில் "சிவ' என்ற பெயர் விளங்கியுள்ளமையை ஆராச்சியாளர் செ.குணசிங்கம் காட்டி, சிவவழிபாடு கி.மு6ம் நூற்றாண்டுகளில் காணப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றார்.

ஜே.டபிள்யூ.ரெனற் என்னும் வரலாற்றாசிரியர் இலங்கை சரித்திரம் என்னும் நூலில் கி.மு 306 இல் நடந்த கடற்கோளில் வரலாற்றுக்கு முற்பட்ட திருக்கோணேசுவர சிவாலயம் மூழ்கிவிட்டதாக கூறுகின்றார்.அதை உறுதிசெய்வதுபோல் 1961இல் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்த மைக்வில்சன் சமுத்திரத்தின் அடியில் கோயில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே சைவ வழிபாடு கி.மு 3ம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சீரும் சிறப்புடன் இலங்கையில் நிலவியுள்ளது தெளிவாகின்றது.இதுபோல் தமிழக அகழ்வாய்வுகளை கருத்தில் கொள்ளும்போது
சைவசமயத்தின் தோற்றம் ஆதியானது தெளிவாகின்றது.

கடற்கோளில் சைவநூல்கள் அழிந்துபோயிருக்க,
அதை உறுதிசெய்வதுபோல் தொல்காப்பியத்தில் "முந்துநூல் கண்டு முறைப்படத் தொகுத்து"  என்று தொல்காப்பியத்துக்கு முன்னரே பலநூல்கள் வழக்கில் இருந்தமை ஆவணப்படுத்தப்பட்டிருக்க,
சமணசமயம் அரச ஆதரவுடன் பெரும் விருட்சமாக விளங்கிய காலத்தில் எழுந்த இலக்கியங்களை மட்டுமே கொண்டு சைவசமயத்தின் தோற்றத்தை தேடுவதும் தமிழுக்கும் சைவத்துக்குமான பந்தத்தை ஆராய்வதும் உப்பில்லா பண்டத்தை சமைத்தமைக்கு ஒப்பாகும்.

சிவலிங்கவழிபாட்டின் தொன்மையையும் அது பார் முழுதும் பரவியிருந்த தன்மையையும் வெஸ்ட் ரோப் உட்பட கிராண்ட்,ஆலென்,டெய்லர் போன்ற அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளார்கள்.
"The practice of 'Linga Worship' was so general as to have spread itself over a large part of the habitable globe,for it flourished for many ages in Egypt and Syria,Persia,Asia minor,Greece and Italy;it still is in vigour in India and many parts of Africa and was even found in America on its discovery by the Spaniards, being regarded as the most sacred object of worship and consecrated by religion. The culture was associated with the very idea and sentiment which was regarded as ennobling to man" -Westroppe

தொல்காப்பியம் சொல்லும் கந்தழி சிவலிங்கமே என்றும் திருகுறளில் கையாளப்பட்டுள்ள செம்பொருள் சிவமே என்றும் அறிஞர்களில் பலர் கருதுகின்றமையை நினைவிற்கொள்வது நலம்.

ஜீ.யூ.போப் உடைய கருத்து தமிழர் சைவநெறிக்குரியோர் என்பதை தங்களுக்கு உணர்த்தும் எனக்கருதுகிறேன். ஏனெனில் வெள்ளைக்காரன் அதுவும் பாதிரியார் கோலத்தில் ஏதேனும் சொன்னால் அதை உண்மை என்று முழுமையாய் ஏற்கும் குணம் தமிழருக்கு உரித்தான ஒன்று!

the most ancient living faith in the world என்று சேர்.ஜோன்.மார்சல் குறிப்பிடுகின்ற சைவநெறியை தமிழரின் அரிய படைப்பாக ஜி.யூ.போப் காண்கின்றார்.
Saivism is the oldest prehistorian religion of South India, essentially existing from pre-Aryan times - Dr.G.U.Pope
The Saiva Philosophy is the choicest product of the Dravidian intellect. It is the most elaborate, influential and undoubtedly the most intrisically valuable of all religions of India. It is peculiarly the South Indian and Tamil Religion. - Dr.G.U. Pope

இனித் தாங்கள் தங்களுடைய கட்டுரையில் கையாண்டுள்ள பதங்களுக்கு விளக்கமளிக்க முனைகிறேன்.

"தமிழை வளர்த்தது சைவமா? சமணமா?" என்னும் கட்டுரையும் எனது பார்வையும்




////சிந்து சமவெளி நாகரிகத்தை எடுத்துக் கொண்டால்; அன்றைய சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்ததால் பெண்தெய்வ வழிபாடே முதன்மை வகித்தது.////

யோகிச்சிவ சின்னங்களும் இலிங்கங்களும் முருகவழிபாட்டின் ஆரம்பதடையங்களும் கண்டெடுக்கப்பட்டதை வசதிக்காய் மறந்துவிட்டீர்கள்! யோகிச்சிவ சின்னமே ஆய்வாளர்களை ஆச்சரியத்தின் எல்லைக்கு கொண்டுபோன அகழ்வாய்வுத் தடையம் என்பதையும் செம்மொழி மாநாட்டு இலட்சிணையில் இடம்பெற்றுள்ள சின்னங்களில் வலமிருந்து இடமாக முதலாவதாக பொறிக்கப்பட்டுள்ள சின்னம் என்பதையும் நினைவு கூறுவீராக.

////பிற்காலத்தில் புனையப் பட்ட புராணங்கள் எங்கிருந்தோ வந்த வாதாபி கணபதிக்கு அவரை தம்பியாக்கியது போல்தான் முருகன் சிவனுக்குப் பிள்ளையாக்கப்பட்டார். ////

ஆல்கெழு கடவுள் புதல்வ மால்வரை மலைமகள் மகனே என்று திருமுருகாற்றுப்படைக்காலத்தில் சிவனின் மகனாகத்தான் அடையாளம் காணப்பட்டுள்ளார்.எனவே தென்னாட்டு சிவனுக்கும் தென்னாட்டு முருகனுக்கும் உறவுமுறை தென்னாட்டு சங்கத்தமிழ் நூலால் ஏற்படுத்தப்பட்டுள்ளதில் தங்களுக்கு ஏன் தலையிடிவந்தது? சமணத்துக்கு வக்காளத்து வாக்கப்போனபோது,தங்களை அறியாமலே தங்களுக்கு கருப்புச்சட்டை குணம்வந்துள்ளதை பார்த்தீர்களா? கணபதி வடக்கு கடவுள் என்று முரண் சொல்கிறீர்! உண்மையே! ஆனால் முருகனுக்கும் சிவனுக்கும் உறவுவந்ததில் வடக்குக்கு சம்பந்தமே இல்லையே!!!


///சிவனைப் பற்றிய குறிப்புகள் முதன் முதலாக கடைச் சங்ககாலத்து நூல்களில்தான் குறிப்பிடப் படுகிறது. இருப்பினும் அப்போது சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு சைவம் என்ற பெயரில் ஒரு சமயம் இயங்கவில்லை////
போர்த்துக்கேயர் காலத்தில் ஈழத்தில் தமிழ்நூல்கள் எழவே இல்லை!!!! சமணர் காலத்தில் சைவநூலைத் தேடுவது அறியாமை!

"நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழல் கீழ்
மூவகை உலகு முகிழ்த்தன முறையே"
என்ற கலித்தொகைப் பாடலில் சிவபெருமானின் திருவடிகளிலிருந்து மூவகை உலகும் தோன்றியதாக சொல்லப்படுவது முழுமுதற்தன்மையையே உணர்த்துகின்றது. மேலும் அர்த்தநாதீசுவரவடிவமாகிய மாதொருபாகன் திருவடிவம் இப்பாடலில் சுட்டப்பட்டுள்ளதைக் காண்க.


மணிமேகலைகி.பி 3ம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகின்றது. அதாவது கடைச்சங்ககாலத்தின் இறுதிப்பகுதிக்கு அல்லது சங்கமருவிய காலத்தின் தொடக்ககாலத்தில் தோன்றியது எனக் கொள்ளலாம். இங்கு சைவவாதி என்ற பெயரில் சிவபெருமான் ஐம்பூதங்களிலும் சூரியன்,சந்திரன்,ஆன்மாக்களிலும் பரந்துள்ள தன்மை எடுத்துக்கூறப்பட்டுள்ளது. எனவே சைவநெறி என்றபெயர் இக்காலப்பகுதியில் எழுந்துவிட்டது என்பதையும் சிவபெருமானின் முழுமுதற்தன்மை கூறப்பட்டுவிட்டதையும் அறிக.

கி.பி 2ம் நூற்றாண்டுக்குரிய சிலப்பதிகாரத்தில் சிவபெருமானுக்கு பிறப்பு மற்றும் இறப்பு என்பன இல்லை என்ற தன்மையை இளங்கோ அடிகள் அருமையாக முறையே "பிறவா யாக்கைப் பெரியோன்" என்றும் "விண்கோரமுதுண்டுஞ் சாவ வொருவரும் உண்ணாத நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய்" என்றும் கூறி சிவபெருமானின் முழுமுதற்தன்மையை மணிமேகலை காலத்துக்கு முன்னரே எடுத்துக்கூறிவிட்டார்.


சைவநெறியை உருவாக்கி பெயரிட்டு தனிமனிதர் சமூகத்துக்கு வழங்கவில்லை! திராவிடமக்களிடம் இருந்த சிவவழிபாடு,தாய்த்தெய்வ வழிபாடு,முருகவழிபாடு,திருமால் வழிபாடு போன்றவை பண்பாட்டுப்பரிணாமங்களுக்கு இயற்கையால் உட்படுத்தப்பட்டு இயற்கையாக வளர்ந்த நெறி! இங்கு படைத்தவர் என்று தந்தை தானத்தில் எந்த மனிதரும் சைவநெறிக்கு இல்லை! சைவத்தின் தந்தை-இயற்கையாகிய இறைவன்!
தந்தையில்லாப் பிள்ளை தன்னை உணரத்தலைப்படும்போது ஒருபெயரை தனக்குத்தானே சூட்டிக்கொள்வதுபோன்று சைவநெறியும் தத்துவப்பரிமாணத்தில் சிந்தாந்தத்தை காணும்போது சைவநெறி என்ற பெயரைப் பெற்றிருக்கலாம்!

இன்று நிலவும் சமயங்கள் யாவும் தோன்றுதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே சிவநெறியாம் சைவம் செழிப்புற்றிலங்கியது என்றும் சைவம், வைணவம் என்ற பெயர்கள் இந்நெற்கட்கு இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது வேற்றுப் பெயர்களில் வழங்கியிருக்கலாம் எனவும் மணிமேகலையில்தான் முதன்முதலில் சைவம் என்ற சொல் காணப்படுவதாகவும் மறை.திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிடுகின்றார்.

ஒரு திருச்சபைகூடி நூல்கள் உருவாக்கி மதம் படைக்கும்போதுதான் அந்த மதத்துக்கு பெயர் சூட்டப்படும். இயற்கையால் இயற்கையோடு வளர்க்கப்பட்ட ஆதியான சைவநெறிக்கு எப்போது பெயரிடப்பட்டது என்ற ஆராய்ச்சி எப்போது தமிழுக்கு தமிழ் என்று பெயரிடப்பட்டது என்ற ஆய்வுக்கு சமமானதாகும்.

///தமிழர் வழிபாடுகளில் நடுகல் வழிபாடு மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றது. களத்தில் வீரச் சாவை தழுவிக் கொண்ட மறவர்களின் நினைவாக நடுகல் நடும் வழிபாட்டையே இது குறிக்கிறது//////

கிராமிய தெய்வ நாட்டார் வழிபாடுகளாக இன்று அடையாளங்காணப்படுவது நடுகல் வழிபாட்டின் ஒருவடிவமே! நடுகல் வழிபாடே தனிப்பெரும் வழிபாடாக நிலவவேண்டுமென தாங்கள் எதிர்பார்த்தால்-முதலாம் ஆண்டிலேயே ஒரு குழந்தை காலம் முழுவதும் இருக்கவேண்டும் என்று கருதுவதற்கு ஒப்பாகும்!

////சைவத்தை தமிழர்கள் தழுவிக்கொள்ளும் முன்பே ஆசிவகத்தை பெருவாரியான தமிழர்கள் தழுவிக்கொண்டு விட்டார்கள். கடவுள் மறுப்பு, வருணாசிரம எதிர்ப்பு, வேத எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளைக் கொண்ட ஒன்றாகவே ஆசிவகம் விளங்கியிருக்கிறது/////
ஆசிவர்கூட தமிழ்நாட்டிற்கு புலத்திலிருந்து வந்தோரே!

 வேத எதிர்ப்பு,வர்ணாச்சிரம் எதிர்ப்பு,கடவுள் மறுப்பு இதன் கொள்கை என்றால்; கடவுள் நம்பிக்கை தமிழரிடம் இருந்துள்ளது என்றுதானே பொருளாகின்றது!  ஏற்றவர் இருந்தமையால்த்தானே மறுப்பவர் உருவானர்!!!


//ஆசிவகம் எனப்படுவது தமிழர்கள் தழுவிய சமயங்களில் மிகத் தொன்மையான சமயமாக கருதப் படுகிறது//
///ஒரு காலத்தில் தமிழர்களால் போற்றித் தழுவப்பட்ட ஆசிவகம் இன்று அழிந்து போய்விட்டது.// 
//ஆசிவகத்திற்குப் பின்னும் சைவத்திற்கு முன்னும் இருந்த இடைப்பட்ட காலத்தில் பெருவாரியான தமிழர்களால் தழுவப்பட்டு மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்த இரு பெரும் சமயங்கள்தாம் பௌத்தமும் சமணமும்//

மிகத்தொன்மையான காலத்தில் தமிழர் தழுவியிருந்த சமயம் எப்படி
தமிழரிடம் இருந்து அழிந்துபோனது? தங்கள் கருத்துப்படி; ஆசிவகத்துக்கு பின்னர் மிகப்பெரும் மதங்களாக சமணமும் பௌத்தமும் இருந்துள்ளதால் அவைதானே ஆசிவகத்தை அழித்திருக்க வேண்டும்!!!

 சமணம் பெருகி ஆசிவகத்தை அழித்தது என்ற கருத்துநிலை வரும்போது "அழிந்து போய்விட்டது" என்று மெதுவாக முடித்துவிட்டீர்களே? ஏன் அழிந்தது என்பதை மறைத்துவிட்டீர்களே? தங்களின் சமணத்தின்மீதான பாசத்துக்கு இதுவே தக்கசான்று!


///தமிழர்களின் மதமாக வருணிக்கப் படும் சைவம் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நிறுவனப் படுத்தப் படுகிறது///

தமிழர்களின்மதமாக வர்ணிக்கப்படுவது எந்தநெறி என்று யான் அறியேன். தமிழரின் நெறி சைவநெறி என்பதை நன்கறிவேன்.

சமணத் தீவிரவாதத்தை அகற்றி,அன்பே சிவம் என்று உயிருணர்வை தமிழருக்குள் மீண்டும் தழைக்கச் செய்து மீண்டும் விருட்சமாயிற்று இக்காலத்தில்!!! மணிமேகலையில் சைவசித்தாந்தம் கையாளப்பட்டுள்ளது. எனவே சைவசித்தாந்தம் காலத்தால் முந்தியது.

பி.டி.சிறிநிவாச ஐயங்கார் சிவதந்திரங்களின் கோட்பாடு தென்னாட்டிலேயே முதன்முதலில் ஒரு ஒழுங்கான கோட்பாடாக கிருத்து சகாப்தத்தின் தொடக்கநிலையில் நெறிப்படுத்தப்பட்டன என்றும் பின்னர் இத்தத்துவமே குசராட்டிற் இலகுலீச பாசுபதம் என்றும் காஸ்மீரில் பிரத்யபிஞ்ஞானதரிசனம் என்றும் பரிணமித்தன என்பார்.
புராணங்களின் வேர்கள் சங்கநூல்களில் ஏற்கனவே இருப்பதை உணர்த்தியுள்ளேன். மணிமேகலை சைவசித்தாந்தக் கருத்தை கையாண்டுள்ளது. சிலப்பதிகாரம் பிறவா யாக்கைப் பெரியோன் என்று சிவனின் பிறப்பற்ற தன்மையையும் நஞ்சுண்டும் இறவாத தன்மையுடையவன் என்று இறைவனின் மரணமற்றதன்மையையும் கூறி சிவனின் முழுமுதற்தன்மையை பகிவுசெய்துள்ளது. எனவே சமணத்தின் ஆதிக்கத்தில் மங்கி மறைந்துபோய்விட்ட சைவநெறி இடையிடையே சமண இலக்கியங்களிலும் சங்க இலக்கியங்களிலும் எட்டிப்பார்த்துள்ளது என்பதன் மூலம் ஒருசிறு பிரிவினரால் பேணிப்பாதுக்காக்கப்பட்டு வந்தமை தெளிவாகின்றது!

இலங்கையில் போர்த்துக்கேயர் காலத்தில் மறைந்து மங்கிப்போய் இருந்த சைவநெறி ஒல்லாந்தரின் காலத்தில் கடைசிப்பகுதியில் மெதுவாக துளிர்விட்டு வளர ஆரம்பித்தமைபோல் இக்காலத்தில் மெதுவாக துளிர்விட்டு வளர எத்தனித்துள்ளமை புலனாகிறது.
ஆனால் சைவநெறி 7-ம் நூற்றாண்டில்தான் தோன்றியது என்றால் அது ஒல்லாந்தர் காலத்துக்கு பிறகே இலங்கையில் சைவநெறி-தமிழ் இலக்கியங்கள் தோன்றின என்பதற்கு ஒப்பாகும்!

சிவவழிபாடு,முருகவழிபாடு,வேல்வழிபாடு,மால் வழிபாடு,கொற்றவை வழிபாடு எனபன தென்னகத்தமிழரிடம் இருந்தமை சங்க இலக்கியத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இலிங்கவழிபாடுகள் அகழ்வாராய்சிகளில் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிந்துவெளித் தமிழரிடமும் இலிங்கவழிபாடு,யோகிச் சிவன் வழிபாடு,தாய்த் தெய்வவழிபாடு,எருது வழிபாடு போன்ற பல்வேறு வழிபாடுகள் இருந்துள்ளமை உறுதியாயிற்று. இவற்றை எல்லாம் நன்கு ஆராய்ந்து வெளிநாட்டவர் யாவரும் தமிழரின் நெறி சைவநெறி பறைந்து பலகாலம் ஆயிற்று. சைவசித்தாந்தம் தமிழிலேயே உண்டு. அதன் சிறப்புநூலான ஆகமம் வடமொழிப் படுத்தப்பட்ட தமிழ்நூல்கள் என்ற கருத்துக்கு பெருமளவு ஆதாரம் உண்டு. பொதுநூல் என்று சொல்லப்படுகின்ற வேதங்கள் வடமொழி வேதங்களா அன்றி தமிழரிடம் நிலவிய அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற நான்மறைகளை எழுதாக் கிளவியாகப் பேணி பின்னர்;திருக்குறளாக மலர்ந்த நூலா என்பதில் கருத்துவேறுபாடுகள் உண்டு.மேலும் வடமொழி வேதங்களே என்று கொள்ளும்பட்சத்தில் அங்கு பொது என்ற நிலைப்பாட்டினூடாக சிவபரத்துவப்பகுதிகளை மட்டும் ஏற்றதாகவே ஆகின்றது.

பகவத்கீதை,பைபிள்,குரான் என்பன தோன்றிய மொழிகள் வேறு. சைவசித்தாந்தம் தமிழரிடம் தொன்றுதொட்டு நிலவிய கடவுள் வழிபாடுகளைக் கொண்டு;தமிழகத்தில்;தமிழில் உருவான நூல்.எனவே இதை தமிழர் நெறி என்று சொல்வது வர்ணனை அல்ல! உண்மை!!! ஜீ.யூ.போப்பை முட்டாளாக்காதீர்கள்!!!

சமணரைக் கழுவேற்றியமையின் உண்மைத்தன்மை என்ன?
சமணர்களை கழுவில் ஏற்றிவிட்டார்கள் என்று சைவத்தின்பால் பழிபோடுகின்றவர்கள் நடுநிலையுடன் ஆய்ந்தறியத் தவறிவிட்டார்கள் என்றே பொருள்! அப்படியொரு நிகழ்வு நடைபெறவில்லை என்று அறிஞர்கள் சுட்டுவர். அப்படியொன்று நடைபெற்றிருக்குமானால் அவை சமண இலக்கியங்களில் மட்டுமல்லாது பல்வேறு தடையங்களையும் பதிந்திருக்கும் தமிழக வரலாற்றில்! எனவே சமணர்கள் கழுவேறினர் என்பது சேக்கிழார் தவறாகக் கையாண்ட கருத்து என்பது இவர்கள் வாதம்! எனினும் சேக்கிழாரின் கருத்துநிலையில் நின்று இதனை ஆய்வோம் எனில், திருமுருக கிருபானந்தவாரியார் இதற்களித்துள்ள விளக்கம் உள்ளதை உள்ளபடி உணர கைகொடுக்கின்றது.அவரின் கருத்தை தொகுத்துத் தருகின்றேன்.

அன்பு வேறு;சைவம் வேறு அன்று.அன்பே சிவமாய் அமர்ந்திருத்தலினால் அன்பும் சைவமும் ஒன்றே. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்வது ஆன்றோர்களது அறம்.
இனி,கடவுளுக்கு எம்மதமும் சம்மதம்.எல்லா மதங்களும் இறைவன் கருணையினால் தோன்றியவையே. ஒரு கல்லூரியில் பல வகுப்புகள் இருப்பதுபோல் என்று அறிக. எல்லாச் சமயங்களும் முடிவில் ஓர் இடத்திற்கே சென்று சேருகின்றன.  ஆறாவது நூற்றாண்டில் இருந்த சமணசமய குருமார்கள் இந்த அருள்நெறியை விட்டுவிலகினார்கள். அன்பெனும் அரிய மணியை மருள் என்னுங் கடலில் எறிந்து இருள் கொண்ட மனத்தினராய்த் திரிந்தார்கள். மனிதன் மற்றொரு மனிதனைக் கண்டு அன்பினால் தழுவுதலும் உபசரிப்பதும் மக்கட்பண்பு.


திருநீறு பூசுகின்ற சைவர்களைக் கண்டால் அக்காலத்திருந்த சமணர்கள் "கண்டு முட்டு"(பார்த்தவுடன் தீட்டாகிவிட்டோம்) என்றார்கள். கண்டுமுட்டு என்றவுடன் "கேட்டு முட்டு" என்பார் சிலர். சைவர்களைக் கண்டால் குளிப்பார்கள். அத்துணைக் கொடிய சமயமாக அவர்கள் அந்நாள் கருதினார்கள். கண்டால் தீட்டு,கேட்டால்கூடத் தீட்டு என்றால். இது எத்துணை அநியாயம் என்பதனைச் சிந்தித்துப் பாருங்கள்.


இதுவுமன்றித் தங்கள் குழந்தைகள் அழுதால் அச்சுறுத்தும் பொருட்டு" பூச்சுக்காரன் வருகின்றான்;பூச்சாண்டி வருகின்றான்" என்று கூறுவார்கள். திருநீறு பூசுகின்றவர்களை அத்துணைப் பயங்கரமானவனாகக் கருதினார்கள். அதனால், திருவருள் அவர்களை அழிக்கத் துணை செய்தது.
வலிமையுள்ள ஒரு மகன் மெலிந்த தன் தம்பி அல்லது தமையனை அடிப்பானாயின் தந்தை யார்புறஞ் சேருவார்? அடிப்பவன் புறமா? அடிபடுவானுக்காக இரங்கி,அடிபட்டவனைத் எடுத்து அணைத்து, அடிப்பவனைத் தண்டிப்பார். இருவருக்கும் அவர் தந்தையானாலும் ,பொதுவாக இருவரையும் ஆதரிக்க வேண்டிய கடப்பாடு உடையவரானாலும், குற்றஞ் செய்த மைந்தனைத் தண்டிப்பது தந்தையின் இன்றியமையாத கடப்பாடு அன்றோ?


அதுபோல். சமண சமயத்தார், சைவ சமயத்தாரை ஒறுத்தபோது பரம்பொருள் சைவசமயத்தின்பால் நின்று சமணத்தை அழிக்கத் துணைபுரிந்தது எனவுணர்க.
திருஞானசம்பந்தர் பதினாறாயிரம் அடியார் திருக்கூட்டத்துடன் மதுரைக்கு வந்து திருவாலவாயுடைய அண்ணலை வழிபட்டு ஒரு திருமடத்தில் தங்கியிருந்தார். சமணர்கள் தாம் அறிந்த நெருப்பு மந்திரத்தைக்கூறி திருமடத்தைக் கொழுத்த முயன்றார்கள். அம்மந்திரத்தினால் நெருப்பு பற்றவில்லை. அதைக்கண்டு தளர்ந்த சமணர்கள் ஒளிந்து சென்று பதினாறாயிரம் பேர் கண்ணயர்ந்து துயிலும் திருமடத்தில் தீ மூட்டினார்கள். இது எத்துணைப் பெரிய தீமை என்பதை நினைத்துப் பாருங்கள்.
பின்னர், அனல்வாது செய்தார்கள். புனல்வாதந் தொடங்கும்போது, "தோற்றவர் என் செய்வது?" என்று குலச்சிறையராகிய முதலமைச்சர் கேட்டார்.


அங்கது கேட்டு நின்ற
அமணரும் அவர்மேற் சென்ற
பொங்கிய வெகுளி கூரப்
பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே
தனிவாதில் அழிந்தோ மாகில்
வெங்கெழு வேற்று வான் இவ்
வேந்தனே என்று சொன்னார்.


முடிவில் சமணர்கள் தோற்றார்கள். தோற்ற ஒரு காரணத்தினால் மட்டும் மன்னன் சமணரைக் கழுவிலேற்றவில்லை. பதினாறாயிரம் அடியார்கள் துயின்ற திருமடத்தில் தீவைத்த பெரும் பாதகத்தை நினைத்து, "இவர்களைக் கழுவில் ஏற்றுக" என்று முதலமைச்சருக்குக் கட்டளையிட்டார்.


அரசன் நீதிநெறியின்படி குற்றமுள்ளவரைத் தண்டிக்கும்போது ஞானாசிரியார் தடுத்தல் முறையாகாது. அங்கனந் தடுத்தால் அரச நீதி கோடும். பல கொலைகள் செய்த ஒருவனை நீதிபதி இந்நாள் மரணதண்டனை விதிக்கின்றார். அதை ஒரு ஞானி சென்று தடுக்கலாமா? தடுக்கப்படாது. ஆதலினால், கருணை வடிவாக விளங்கும் பிள்ளையார் அந்த அரசநீதியில் தாம் குறுக்கிடாது இருந்தார் என்று தெளிக. இதனை முதலமைச்சராகிய சேக்கிழார் பெருமானே விளக்கியருளுகின்றார். பெரியபுராணம் பாடியவர்.சட்டதிட்டங்களை நன்கு அறிந்த சோழநாட்டு முதன்மந்திரி என்பதை மறவற்க.
ஆகவே, தீமை புரிந்த சமணர்களைக் கழுவேறச் செய்தது மன்னறம் என்றும் , அது மறுமைக்கு அப்பாவஞ் சூழாதபடி செய்வதென்றும்,மன்னறத்தினைத் தடுத்தல் ஞானிகட்கு கடனன்றென்றும், பெரும் பாவஞ் செய்த அமணர் கழுவேறியது முறையே என்றும் அன்பர்கள் அறிக.

பதினாறாயிரம் அடியவருடன் மதுரைக்கு வந்து மடத்திலே திருஞானசம்பந்தப் பெருமான் தங்கியிருந்தபோது மடத்துக்கு தீவைத்தமை முறையா?
சைவரைக் கண்டாலே தீட்டு எனக்கருதி கண்டு முட்டு என்பாரும் அவ்வண்ணம் சொல்லும்போது ஏனைய சமணர் கேட்டுவிட்டால் கேட்டவர் கேட்டதாலேயே தீட்டுவந்ததெனக் கருதி கேட்டு முட்டு என்றும் சொல்லுகின்ற இழிவான பண்பாடு முறையாகுமா?
பூச்சாண்டி என்று சைவரை நிந்தனை செய்தமை சால்பா?
சைவநெறியை சமணராக இருப்பவர் எவரேனும் ஒழுக முனைந்தால்,அவருக்கு மரணதட்டனைகளை செயற்படுத்தியமை( கல்லிலே கட்டி கடலிலே வீசுதல்,சுண்ணாம்பு அறையில் இடல்,யானைகளைக் கொண்டு மிதித்துக் கொல்லுதல்) என்பன உண்மைச் சமயத்தின் கொள்கையா?
சைவக்கோயில்களை ஆக்கிரமித்து சமணக் கோயில்களாக்குதல் விரும்பக்கூடிய ஒன்றா?
சைவக்கோயில்களை பூசைகள் நடத்தவிடாது,பூட்டிவைத்தல் தர்மமாகுமா?

இத்தனையும் செய்தவர்கள் சமணர்கள்! மன்னரை மயக்கி, மன்னரின் செங்கோலை தம்பக்கம் சரியவைத்து, தமக்கேற்றால்போல் ஆட்சியை நடத்தினர் சமணர்.

எனவே, சமணத்தின் பொய்த்தன்மையை உணர்ந்துகொண்ட மன்னன், தன்னை தவறான வழியில் நெறிப்படுத்தி தனது அரசாட்சிக்கு அபகீர்த்தி ஏற்படவைத்தமையாலும் சமணர்கள் தன்னை தீய ஆட்சியை நடத்தியவன் என்ற பெயரை கொண்டவனாக்கியமையாலும் கோபம் கொண்டு கழுவேற்றினான்! இது மன்னன் தனது புகழை மங்கச்செய்த சமணரின் தூரோகத்தன்மையை உணர்ந்துகொண்டமையால் வழங்கிய தண்டனை! இராசதுரோகம் என்றால் மிகையாகாது. இதே; திருஞானசம்பந்தர் தோற்றிருந்தால் நிச்சயம் அவரும் அவருடன் சேர்ந்து சைவத்தை ஒழுகுகின்றோம் என்பாரும் ஒன்று சமணத்தை தழுவியிருக்க வேண்டும்;அன்றி கழுவேறி இருக்க வேண்டியநிலை ஏற்பட்டிருக்கும்.

காரைக்கால் அம்மையார் கயிலையை நோக்கி சென்றமையை ஆய்வாளர்களில் சிலர், சைவநெறியை பரப்புகின்றவர்கள் வாழமுடியாத காலமாக சமணரின் கொடுமை நிறைந்த காலமாக தமிழகம் விளங்கியமையாலே என்று சுட்டுவர். அத்தகைய கொடுமைக்காரர்களாக சமணர்கள் விளங்கினர்.சமணநெறியில் இருந்து சைவத்துக்கு மாறிய அப்பர் பெருமானுக்கு ஏற்பட்ட இன்னல்களே சமணத்தை ஒழுகியவர்கள் எவ்வளவு கொடூரர்களாகி இருந்தனர் என்பதை உணர்வதற்கு போதுமானதாகும்!

பௌத்தநெறி அறத்தை வலியுறுத்தும் நெறி! உயிர்க் கொலையை வெறுக்கும் நெறி! போரினால் மனமுடைந்து அசோகன் தேர்ந்தெடுத்த நெறி! ஆனால் பௌத்தநாடொன்றில் பௌத்தநெறியின் பெயரால் உயிர்கள் அழிக்கப்பட்டது ஆவணமாகியுள்ளது. இதுபோல்த்தான் சமணநெறியின் பெயரால் சைவநெறிக்குரியோருக்கு வழங்கப்பட்ட இன்னல்களும் கொடுமைகளும் கொலைத்தண்டனைகளுக்கும் படுபாதகச்செயல்களையும் சம்பந்தப் பெருமான் மன்னனின் மனதை தெளிவவைத்து முடிவுக்கு கொண்டுவந்தார். விழிப்படைந்த மன்னர், கொடுங்கோல் புத்தியுடையோரை கழுவேற்றினான்; அவர்களில் சிலர் தோற்றதால் தோல்வியை தாங்கமுடியாது கழுவேறினர். கொடியவர்களை மன்னன் அழிக்க நினைத்தானே ஒழிய, சமணசமயத்தவரை அல்ல!!! சமணசமயக் கோயில்கள் தமிழகத்தில் இன்றும் உண்டு! சமண சமயத்தவர்கள் தமிழகத்தில் இன்றும் உள்ளனர்! எனவே கழுவேற்றியது கொடியவர்களை! சமணர்களை என்பது அறத்துக்கு முரணான மதவாதக்கண்ணோட்டம்!!!

'சைவத்தின்மேல் பழி போடுவதற்கு" கிடைத்த அல்வா போன்று ஒருசிலர் இக்கதையைக் கையாள்வர். இவர்கள் அறிவுக்கோளாறு உடையவர்கள்!
சிலர் சமணர் "அன்பே" உருவானவர்கள் என்றும் சைவக்கதைகளில் அவர்களை பொய்யாக காட்டியுள்ளனர் என்றும் மருளின் விளைவால் சொல்வர். சமணரைக் கழுவில் ஏற்றியமைக்கு சைவநூல்களே சான்று என்பதை இவர்கள் உணர எத்தனிக்கார்! சமணரைக் கழுவில் ஏற்றியமைக்கு சைவநூல்களை சான்றாக கொண்டுவரும் இக்கூட்டத்தார், சமணர் மருளில் மூழ்கியிருந்தனர் என்பதற்கு அதேசைவநூல்களில் காணப்படும் ஆதாரங்களை ஏற்கார். ஏனெனில் அவர்கள் இருப்பதும் மருளுக்குள்ளேயே!!!

இலங்கையில் மன்னாரில் கிருஷ்தவமதத்துக்கு மாறிய மக்களை சைவ மன்னனாகிய சங்கிலியன் கொன்றான் என்று "போதகர்கள்' சொன்னதை திரும்பத் திரும்ப சொல்லும் கிளிப்பிள்ளைகள் பலர். எனவே அதுபற்றியும் இங்கு அலசுவது நன்றென்று கருதுகிறேன்.

சங்கிலியன் கொன்றது எட்டப்பர் வேலைசெய்த கூட்டத்தை! யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்ற போர்த்துக்கேயருக்கு நம்பிக்கைக்குரிய உளவாளிகள் தேவைப்படவே, பாதிரிகளை அனுப்பி மதமாற்றம் செய்வித்தனர். போர்த்துக்கேயரின் சதியை உணர்ந்த மன்னன், உளவாளிகளாக மாறியவர்களை அழிக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகினான். கொல்லப்பட்டவர்களில் முழுவரும் உளவாளிகள் இல்லாவிட்டாலும்....யார் உளவாளி யார் உளவாளி அல்ல என்று பிரித்துப்பார்க்கக்கூடிய 'கருவிகள்' இந்த உலகில் எங்குமே இல்லை!
எனவே சங்கிலி மன்னனுக்கு வேறுவழி ஏதுமில்லை! மதம்மாறிய அனைவரையும் கொல்லவேண்டிய துர்பாக்கிய சூழல்! இது சைவத்தின்பால் மன்னனுக்கு இருந்த கரிசனையில் விளைந்தல்ல! அரசணையையும் நாட்டு மக்களையும் போர்த்துக்கேயரிடம் இருந்து காப்பாற்றுவதற்கு மன்னன் மேற்கொண்ட நடவடிக்கை!

இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்கா தொட்டு இந்தியா அடங்கலாக இலங்கை உட்பட அனைத்து நாடுகளும் அன்று தொட்டு இன்றுவரை செய்துவரும்  இராசதந்திர நடவடிக்கைகளே!
ஜேவிபி கிளர்ச்சி அடக்கப்பட்டது இவ்வண்ணமே!
தமிழ்போராளி இயக்கங்களில் பிரசித்தம் பெற்ற இயக்கம் மாற்று இயக்கக்குழுக்களை அழித்தமையும் இவ்வண்ணமே!
சந்தேகம் என்றால் மரணம் என்ற செயற்திட்டத்தை இஸ்லாமியர்மேல் செயற்படுத்தியபோது முகங்கொடுத்த பிரச்சினைகளின் விளைவாக;யாழ்ப்பாணத்தை விட்டு இஸ்லாமியரை வெளியேற்ற வேண்டிய துர்ப்பாக்கிய கொடுமைமிகு செயலை அரங்கேற்றியமையும் இந்த வடிவமே!
அமெரிக்காவிலும் நடந்துள்ளது. பாக்கிஷ்தானிலும் நடந்துள்ளது. இந்தியாவிலும் நடந்துள்ளது.இலங்கையிலும் நடந்துள்ளது. இது அரசுக்குரிய தர்மமாக அந்தந்த நாட்டு அரசு நோக்குகின்றது!

ஆனால் பாவப்பட்ட சைவநெறி..........பணபலமுடைய ஊடகபலமுடைய கிருஷ்தபோதகக் கூட்டத்தினரால் சங்கிலி மன்னனின் அரசு கடமையில் விளைந்த செயலுக்கு "பழி" ஏற்று நிற்கின்றது!!!

ஆனால், இதைவிடக் கொடுமைகளை உலகம் முழுவதும் 'கிருஷ்தவம் பரவவேண்டும்" என்ற ஒரே நோக்கிற்காக கிருஷ்தவமதம் நிகழ்த்தி அவற்றை சாதரண மக்களிடமிருந்து மறைத்து "உலக சமாதான மதம்" என்று  புகழ்மாலையை தனக்குத்தானே சூட்டிக் கொண்டு கௌரவாக நிற்கின்றது! பணபலம் யாரிடமோ அவர்களிடம்தான் இன்று உலகமே நிற்கின்றது!

இஸ்லாம் 'மதம் பரப்பும்" நோக்கத்திற்காக சிவனே என்று இருந்த அகண்ட இந்தியாமேல் படையெடுத்து இன்று ஆப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான்,பங்களாதேஷ் என்று மிகப்பெரிய இஸ்லாமிய நாடுகளை தோற்றுவித்து நிற்கின்றது! மதம் மாற மறுத்தவர்கள் கொல்லப்பட்டார்கள்! காசி தொட்டு வடமாநில ஆலயங்கள் யாவும் நிர்மூலமாக்கப்பட்டன!

 பிரிதிவிராஜன் கோரி முகமதுவை மன்னித்து விட்டமையால்த்தான் மீண்டும் அவன் வந்து போர்தொடுத்து பிரிதிவிராஜனின் கண்களை குத்தியெடுக்க முடிந்தது! "மன்னித்தல்' என்ற உயர்ந்த குணம், அரச தர்மத்தில் கூடாது என்று ஆகிவிட்டதற்கு இதுநல்ல உதாரணம்!

கிருஷ்தவம் பரப்ப வேண்டும் என்பதற்காக; தமிழகக் கோயில்கள் போல் கம்பீரமாகக் காட்சியளித்த சிவாலயங்களையும் ஏனைய சைவாலயங்களையும் இலங்கையில்  இடித்தழித்தமை வரலாறு. வாழை இலையில் உண்ணுவதற்கும் திருநீறு அணிவதற்கும் தடைவிதித்திருந்தமை வரலாறு. இதை நோக்காகக் கொண்டுதான் பாதிரியார்கள் முதலில் வந்து உளவு பார்த்து உளவாளிகளை உள்நாட்டிலேயே உருவாக்கினார்கள்.மன்னன் விழிப்புடைந்தது அரசைக் காக்க, உளவாளிகளை அழித்தான்.ஆனால் போர்த்துக்கேயர் படையெடுத்தபோது உளவாளிகள் உளவுபார்த்து ஏற்கனவே முழுத்தகவல்களையும் சொல்லியிருந்தமையாலும் ஆயுதங்களில் சமபலமற்று இருந்தமையாலும் வீழ்ச்சி கொண்டான். போர்த்துக்கேயப் பாதிரிகளின் கனவு நனவானது! அப்படியே மன்னனின் மேல் கொடூரமானவன் என்று புனைவும் சூட்டப்பட்டது! சைவநெறி பலிக்கடா ஆக்கப்பட்டது!

இராச இராச சோழன் ஆளாத கிழக்காசிய நாடில்லை! ஆனால் எங்குமே சைவநெறியை திணித்ததாக வரலாறில்லை! சைவநெறியைப் போற்றிக் காத்த சைவ மன்னர்கள் பலர் வைணவ ஆலயங்களுக்கு தொண்டு செய்தமையும் வைணவ ஆலயங்களை கட்டிவித்தமையும் வரலாறாக இன்றும் உண்டு.பௌத்த ஆலயங்களைக் கட்டுவித்தமையும் வரலாறாக உண்டு. கோச்செங்கண் என்னும் சைவ மன்னன் சமயக்காழ்ப்பின்றி வைணவ ஆலயங்களை கட்டுவித்துள்ளமை வரலாறு.
எனவே 'அன்பே சிவம்' என்பது சைவசாரம். அந்த சமயத்தின்மேல் களங்கம் சுமத்த துடிப்பவர்கள் உலக சமயங்களின் வளர்ச்சி வரலாற்றைப் படித்து தெளிந்தபின்னர், மன்னர்களின் ஆட்சி நீதியை உணர்ந்து கொண்டு, சைவநெறியின் ஒழுக்கத்தை ஆராய்வுக்கு உட்படுத்த விளைதல் நலம்.


//////////பௌத்தத்தையும் சமணத்தையும் பின்னாளில் வந்தவர்கள் மதமாக வரித்துக் கொண்டாலும் உண்மையில் அவை மதங்கள் அல்ல. அவை கடவுளை அடிப்படையாகக் கொள்ளாமல் அன்பை அடிப்படையாகக் கொண்டவை. வன்முறைக்கு எதிரானவை.///////

அப்பரடிகளுக்கு சமணர் செய்த தீங்குகளை அறியீரோ? திருஞானசம்பந்தக் குழந்தைக்கு கொடுத்த தொல்லைகளை மறந்தீரோ? சைவ வழிபாடு செய்வோரை கடலில் கட்டிப் போடுதல்,சுண்ணாம்பு அறையில் இடுதல், யானைகளால் மிதிக்கவிடல், நஞ்சுகலந்த உணவை வழங்கி கொல்லல் என்று பெருந் தொல்லைகளை வழங்கியதாக பெரியபுராணம் எடுத்தியம்புகின்றது!!! பெரியபுராணம் சைவநூல் ஆதலால் சமணரை தீயவராகக் காட்டியது என்பீர்!!! சமணரைக் கழுவேற்றியதை சைவநூல் தவிர்ந்த ஏதேனும் நூலில் நீர் காட்டுவீரா? சமணரைக் கழுவேற்றினர் என்று சைவர்மேல் பழிபோட பெரியபுராணத்தை ஆதாரமாக் கொள்ளும்போது சைவரை சமணர் துன்புறுத்திய வரலாறை எப்படி ஏற்காமல் இருக்கமுடியும்?
சமணர்கள் கொடுங்கோலர்களாக விளங்கியமைக்கு போதுமான சான்றுகளை சமணர்களை கழுவேற்றினமை தொடர்பாக ஆராயும்போது அளிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் பௌத்தம் என்னமாதிரி உள்ளது?

சமணமும் பௌத்தமும் அன்பு நெறிகளே! ஆனால் ஒழுகியவர்கள் "தமது மதமே நிலவ வேண்டும்" என்ற மதத்தீவிரவாதத்தை கைக்கொண்டனர்!
சமணரை நல்லபிள்ளைகளாக்கியுள்ள கருப்புச்சட்டை அரசியலில் மூழ்க வேண்டாம்! தற்காலத்தில் அன்பு மதங்களின் அடாவடித்தனத்தைப் பார்த்தேனும் இதைப் புரியமுயலுங்கள்!


////////சைவர்களால் படைக்கப் பட்ட இலக்கியங்களில் சமணத்திற்கு எதிரான காழ்புணர்ச்சி பல இடங்களில் காணப் படுகிறது. பெரிய புராணத்தில் அது மிக அதிகமாகவே காணப் படுகிறது./////////
////////சமணத்தின் மீது சைவம் காட்டிய இத்தகைய காழ்புணர்ச்சிக்கு என்ன காரணம்? ////////
நெருப்பில்லாமல் புகையுமா?
தாக்கம் இல்லாமல் மறுதாக்கம் ஏற்படுமா?

நாயன்மார்கள் சமணரை வசைபாடினர் என்றால் அந்தளவு கொடுமையை சமணர்கள் செய்தார்கள் என்றே பொருள்! சிறுபான்மையாக சிறுகுழுக்களாக அன்று இருந்த சைவர்கள்மேல் தமது ஆதீக்க அட்டகாசங்களைச் செய்தார்கள் என்பதே உண்மை!
தமிழரிடம் இலங்கைப் பெரும்பான்மை மக்கள்மேல் கோபம் உள்ளதென்றால் கோபத்துக்கான காரணம் என்ன? இந்தி எதிர்ப்பு போராட்டம் என்றால் அப்படி இந்திமொழி மேல் வெறுப்புவரக் காரணம் என்ன?

பெரியார் தூசணங்களால் பார்பனரை வசைபாடினார் என்றால் பாம்பும் பார்ப்பானும் வந்தால் முதலில் பார்ப்பானை அடி என்று ஒருசாதிப் பிரிவை கீழ்த்தரமாகத் சபித்துள்ளார் என்றால் பார்ப்பனரால் ஏனையோர் பட்ட துன்பங்களின் விளைவால் உருவான கோபக்கணையென்றல்லவா கருப்புச்சட்டைக்காரர்கள் தர்மம் போதிக்கின்றார்கள்!

இலக்குவனன் கோபத்தின் உச்சியில் படித்தோருக்குரிய பண்பை இழந்து  நாயோடு பரதனை உவமித்துள்ளார் என்றால் அந்தக் கோபத்துக்கு பின்னால் நியாயத்தை கம்பன் காட்டுகின்றான் என்பதை மறக்கலாமா?

எனவே, பாதிக்கப்பட்டவர்கள் இறைவனிடம் தம்மை சமண பௌத்தரிடம் இருந்து காக்கும்படி வேண்டிப்பாடினர். அதில் பாதிப்பால் ஏற்பட்ட தாக்கம் தெரிந்தது!!! எல்லாத்தாக்கத்துக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு!!! அது சமணர்களின் வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது!

சமணொடு புத்தம் ஆக்கியவாறு என்று சம்பந்தரும் விரிவிலா அறிவினோர்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாமே என்ற நாவுக்கரசரும் அறிவினால் மிக்க அறுவகைச் சமயம் அவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து என்று சுந்தரரும் சமயசமரசத்தை சைவர்களிடையே பதியவைக்கின்றனரே.......தங்களுடைய அறிவுத்தேடலில் இவற்றை கண்டறியமுடியவில்லையே...ஏன் தானோ?

கட்டுரைப் பொருளாக சைவநெறியை சாடி எழுதவேண்டும் என்று முடிவெடுத்து எழுதத்தொடங்கினால்;எப்படி தேவாரங்களை நடுநிலையோடு ஆய்ந்தறியமுடியும்?

மதத்தீவிரவாதத்தை ஒழுகியவர்களையே நாயன்மார்கள் சாடினர்.மதத்தை அல்ல!!! உற்று உணர்க!!!

//////தன் சமயத்தை புகழ்ந்து இன்னொரு சமயத்தை இகழும் தன்மை இளங்கோவடிகளிடத்தில் காணப்படவில்லை./////

இளங்கோ அடிகளைக் கொண்டு சமணத்துக்கு நல்லபெயர் சூட்டமுனைந்துள்ளீர்!

வல்பொல இராகுல தேரர் இலங்கையில் பௌத்த வரலாறு என்னும் நூலில் இலங்கைக்கு விஜயன் வருவதற்கு முன்னரே இலங்கையில் சைவம் செழிப்புற்று இருந்தது என்கின்றார்.
பூவைவிடுதூது(சலலிகினி சந்தேஸய) என்னும் சிங்கள பௌத்தநூல் ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் கோட்டை நகருக்கு புறத்தே அழகிய ஈசுவரன் ஆலயம் இருந்தமையையும் அங்கு வாத்திய இசைகளுடன் தமிழில் பக்திப் பாடல்கள் பாடப்பட்டமையையும் ஆவணப்படுத்துகின்றது.மேலும் சவுல் சந்தேஸய(சேவல்விடுதூது),திஸர சந்தேஸய(அன்னம் விடுதூது),பரவி சந்தேஸய(புறாவிடுதூது) போன்ற ஏனைய பௌத்தநூல்களும் சைவசமய வழிபாடுகள் நிலவியமையை குறிப்பிடுகின்றன.

பௌத்தநூல்கள் சைவவழிபாடுகளை ஆவணப்படுத்தியமையை வைத்து பௌத்தம் இலங்கையில் சைவத்தின்பால் கரிசணை கொண்டு இருந்ததென்று அர்த்தப்படுத்தமுடியாது.

அதுபோல் சமணநூல்கள் சைவவழிபாடுகளை பதிந்தமையை வைத்து சமணம் "மதத்தீவிரவாதத்தை"  தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறமுடியாது.

/// சமண சமயத்தைச் சேர்ந்த கண்ணகிக்கு சைவ சமயத்தை சேர்ந்த சேரன் செங்குட்டுவன் சிலை எழுப்பினான்////

சைவர்களின் பண்பு அது!

//////தமிழர்களின் மாபெரும் செல்வமான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் தழுவியிதும் சமணமாகத்தான் இருந்திருக்க முடியும் என தமிழாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சென்ற நூற்றாண்டின் சிறந்த தமிழாராய்ச்சியாளர்களான தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் வள்ளுவர் சமணரே என தனது ஆய்வுகளில் நிறுவியுள்ளார். இவர்களது கருத்துககளையொட்டி சமகால எழுத்தாளர்களான அ.மார்க்ஸ் மற்றும் கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றவர்கள் வள்ளுவர் சமணரே என்பதை அண்மையில் நிறுவியிருக்கின்றனர்//////

பெரியார் ஆரம்ப காலத்தில் திருக்குறள்மீதும் வசைபாடினார். பின்னாளில் போற்றினார். இந்த மாற்றம் ஏன் வந்தது? திருக்குறள் சைவநூல் என்ற கருத்து மேலோங்கியிருந்தபோது வசைபாடினார். திருக்குறளின் உயர்ந்த தன்மைகண்டு, அதை எப்படியேனும் 'தற்போது நிலவும் சமயத்தின்" நூலாக காட்டவிரும்பாத கருப்புத்தோழர்கள் சமணநூல் என்ற கருத்தை மேலோங்க வைத்தனர்!!!  இதுபற்றி ஏற்கனவே தனிப்பதிவு இட்டுள்ளேன். திருவாவடுதுறை ஆதீன வெளிவீடுகளை ஆராயாமல் "சமணநூல்" என்று புலம்புவது ஏற்புடையதல்ல!!! இதுபற்றி விரிவாக சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஆராய்வோம்.

திருவள்ளுவர்பற்றி தெளிந்துகொள்வதற்கு இவ்வலைப்பூக்கள் உதவுமென நம்புகிறேன்.

திருவள்ளுவர் சித்தாந்த சைவர்
திருக்குறள் பொதுநூலா?
நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்: ஜெயமோகன் கட்டுரை குறித்து
திருவள்ளுவரின் திருநெறி மேன்மைமிகு சைவநீதி



மேலும்;
திருவள்ளுவர் பற்றிய கட்டுரை -அர்த்தமுள்ள இந்துமதம்-கண்ணதாசன்

////தேவாரம் திருவாசகம் போன்றவற்றை நாம் சைவ இலக்கியங்கள் என வகைப் படுத்த முடியும். ஆனால் சிலப்பதிகாரம், நன்னூல், சீவக சிந்தாமணி போன்ற நூல்களை நாம் சமண இலக்கியங்கள் என வகைப் படுத்த முடியாது. அவற்றை சமண இலக்கியங்கள் என்று சொல்வதைக் காட்டிலும் சமணத் துறவிகள் படைத்த தமிழ் இலக்கியங்கள் என்பதே சரியானது/////



பெரியபுராணம் காப்பியநூல்! சீவகசிந்தாமணியிலும் உயர்ந்த நூல்! சீவகசிந்தாமணியில் மூழ்கியிருந்த அநபாயச்சோழ மன்னனை நல்வழிப்படுத்த அதனைக்காட்டிலும் சிறந்த நூலாகப் படைக்கப்பட்ட நூல்! அநபாயச்சோழ மன்னனே சேக்கிழாருக்கு பெரியபுராணத்துக்கும் விழா எடுத்து பெருமைபடுத்திய தன்மையைக் கொண்டமை இதற்கு தக்கசான்று!

நூலை நூலால் அணுகும் அறிவுடமை கொண்டது சைவச்சால்பு! சமணருக்கு தெரியாத சால்பு!!! அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தீவைத்தலும்.....கல்லில் கட்டி கடலில் வீசுவதும்!!!

கம்பனின் இராமாயணம் தமிழுக்கு பெருமைசேர்த்த காப்பியம்!
ஆனால்; கருப்புச்சட்டை அரசியல் சமணநூல்களை அரவணைத்தும் சைவ-வைண இலக்கியநூல்களை வெறுத்தும் அரசியலை நடத்தியதால் சமணநூல்களுக்கு தமிழ் இலக்கியங்கள் என்ற பொதுமுத்திரை ஏற்படலாயிற்று!

///சைவர்களின் இலக்கியங்கள் பக்தி மார்க்கத்திற்குள் முடங்கிவிட்டன. அறிவியல், அணுவியல், கணிதம், மருத்துவம் என சமணர்களின் இலக்கியங்கள் பல கூறுகளைத் தொட்டது./////

சைவநெறி கோள்களின் இயக்கத்தால் உலகமும் உயிர்களும் பாதிக்கப்படுகின்றன என்று தொட்டு, அவற்றை வெல்ல வழியும் கண்டதோடு மட்டுமல்ல....அணு இயக்கத்தையும் பிரபஞ்ச இயக்கத்தையும் திருத்தாண்டவமாக கண்டு மேற்குலகை மூக்கில் விரல் வைக்க வைத்துள்ளமையை என்னவென்று சொல்வது?

விஞ்ஞானமயமான திருவாசகத்தின் திருவண்டப்பகுதி படித்ததில்லைப்போலும்!!!


The unique position of Saiva Siddhanta in the history of thought is the fact that it expounds by careful reflection the systematic account of the process of cosmic evolution which attempts to comprehemd the universe as a sum total of 36 categories. this exposition is no more metaphysical speculation but is a purely logical account on scientific principles. -Theos Bernad

The recent developments of Western Philosophy and Physical Science, go very inch to prove the truth and value of all the fundamental doctrines that are peculiar only to Saiva siddhantha and not to any other religion or philosophy, ancient or modern என்கிறார் பேராசிரியர் மறைமலை அடிகள்.

As a system of relgious thought, as an expression of faith and life, the saiva siddhantha is by far the best that South India possess என்று ரெவரண்ட் கௌடி சைவசித்தாந்தத்தைப் போற்றுகின்றார்.

சைவசமயத்தின் ஒவ்வொரு தத்துவமும் விஞ்ஞானத்துடன் பிணைந்துள்ளதை தாங்கள் கற்கவில்லைப்போலும்!!!
சைவசமய இலக்கியங்களை கற்றுத் தெளிக.


///////புலால் உண்ணுவதும் மது அருந்துவதும் பரத்தையர் தொடர்பும் சங்க இலக்கியங்களில்கூட கண்டிக்கப் படவில்லை அவற்றைக் கடுமையாகக் கண்டித்தவர்கள் சமணத் துறவிகளே///////
/////சங்க காலத்தில் தமிழர்களால் வணங்கப் பட்ட முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு ஆடு, கோழி போன்றவைகள் உணவாகப் படைக்கப் பட்டுள்ளன என்பதை சங்க இலக்கியங்களே எடுத்துக் காட்டுகின்றன/////////

"மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇத் தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து"
என்றும்

"சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து "
என்றும்

சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து வைத்து,ஆட்டுக்கிடாவை அறுத்து; மிருகபலிவாயிலாக பழமுதிர்ச்சோலையில் முருகக்கடவுள் வழிபடப்பட்டதை கூறும் திருமுருகாற்றுப்படை திருவேரகமாகிய சுவாமிமலையில் ஆகமப்பூசை நடைபெறுவதை ஆவணப்படுத்துகின்றது.

"இருமூன் றெய்திய இயல்பினன் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்
டாறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்
தாறெழுத் தடங்கிய அருமறைக் கேள்வி
நாவியன் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்
தேரகத் துறைதலும் உரியன்"

இருபிறாப்பாளராகிய அந்தணர், தொழவேண்டிய காலமறிந்து தவறாமல் வணங்குவர். அவர்கள் தாய்வழியிலும் தந்தை வழியிலும் மதித்த பழைய பல குடிகளிலே தோன்றியவர்கள்.அவர்கள் தங்களுக்குரிய ஆறுதொழில்களிலும் வழுவிலாதது நடப்பவர்கள்.நாற்பதெட்டு வருடங்களை நன்மையாக பிரமசரியத்திற் கழித்தவர்கள்.தருமத்தை சொல்லும் உறுதியுடையர்கள். மூன்று வகையாக அமைத்து வளர்க்கும் முத்தீயாகிய செல்வத்தை உடையவர்கள்.ஒன்பது இழைகளால் முப்புரிகளாகச் செய்த பூணூலை அணிந்தவர்கள்.கைகளை சிரசின்மேல் குவிந்து ஆறு எழுத்தாகிய மந்திரத்தை வாய்க்குள்ளே உச்சரித்து,மணம் பொருந்திய நல்ல மலர்களை ஏந்தி முருகனை வழிபடுவார்கள்.இவர்களின் வழிபாட்டில் முருகன் மகிழ்ந்து திருவேரகத்தில்(சுவாமிமலையில்) குடிகொண்டுள்ளான் என்கிறது திருமுருகாற்றுப்படை!

காளத்திநாதருக்கு பிராமணர் மலர்கொண்டு சிவபூசைசெய்ய; வேடுவராகிய கண்ணப்பர் இறைச்சி கொண்டு படையல் வைத்து வழிபடுகின்றார்.
அதுபோல் வேடுவரால் வழிபடப்பட்ட பழமுதிர்ச்சோலை முருகனுக்கு மிருகபலி வழங்கப்பட்டது. சுவாமிமலையில் அந்தணர்க்குரிய ஆகமவழிப்பட்ட பூசை நடைபெற்றது.

எனவே; இறைவழிபாட்டை தமிழர் மிருகபலியை முதன்மைப்படுத்தி வழிபட்டனர் என்பது உதாவக்கருத்து! தமிழரில் ஒருபகுதியினரின் வழிபாட்டை முழுத்தமிழரின் வழிபாடாகக் காட்டுவது கருப்புச்சட்டை அரசியல்!

சமணசமயமும் பௌத்தமும் மிருகபலியை எதிர்த்தமை உணமையே! மரக்கறி உணவை முதன்மைப்படுத்தியமையும் உண்மையே! ஆனால் சைவநெறி முதன்மைப்படுத்தவில்லை என்றகூற்று ஏற்புடையதல்ல!

சைவநெறி என்பது பல்வேறுபட்ட பண்பாட்டுப்பரிணாமங்களையுடைய மக்கள்கூட்டத்தொகுதியின் இறைவழிபாடுகளின் கூட்டினால் இயற்கையால் தேர்வுக்குள்ளாக்கப்பட்ட இயற்கைநெறி. திடிரென ஒருவர் வந்து 'சட்டப்புத்தகத்தை' வழங்கி நடைமுறைக்கு கொண்டுவந்த செயற்கை நெறியல்ல!!! எனவே; மரக்கறி உணவை உன்னத உணவாக உயர்த்திய சைவநெறி;அதை வேடுவர்மீது திணிங்கவில்லை!!!
தமிழர்கள் யாவரும் மாமிசபோசகராக இருந்தமைக்கு சான்றுகள் ஏதுமில்லை!

குறிஞ்சி நிலமக்களின் பிரதான உணவு தேனும் தினையுமாகும்.முல்லை மக்கள் சோறுடன் பாலுணவுகளையே(பால்,தயிர்,நெய்,மோர்) பிரதானமாக உண்டனர்.அதற்காக; இவர்கள் ஊன் உணவுகளை உட்கொள்ளவில்லை என்று காரணம் கற்பிக்க இயலாது.அதேவேளையில் இங்கிருந்த மக்கள் யாவரும் ஊன் உணவை உட்கொண்டார்களே என்றும் உரைக்கமுடியாது.

பழங்கால ஐவானிய மக்கள் சமாதி கருதி நோற்கும் நோன்புக்காலத்தில் ஊன் உண்பதில்லையாம்! அப்படியானால் சமணமா இவர்களுக்கு இக்கருத்தை ஊட்டீற்று? உலகம் ஊன் உண்ணலை பகுத்தறிவுகொண்டு உயிருக்கு துன்பம் விளைவிக்கும் செயல் என்று என்றோ உணர்ந்திற்று.ஆனால் நடைமுறை உணவுப்பழக்கவழக்கத்தில் தவிர்க்கமுடியவில்லை.


எனவே;மரக்கறி உணவு என்பது சமணம் அறிமுகஞ் செய்ததாகக் கருதமுடியாது. மரக்கறி உணவை எல்லாப் பிரிவினர்களிடமும் கட்டாயப்படுத்தியது சமணம் என்பது உண்மையே!
சமணம் மரக்கறி உணவை திணித்தது. சைவம் மரக்கறி உணவை மட்டுமல்ல; எந்தவொரு பழக்கவழக்கத்தையும் திணித்தது கிடையாது!


////தமிழ் மொழிக்கு புது இரத்தம் பாய்ச்சியவர்கள் சமணத் துறவிகளே. தமிழ் மொழியின் இலக்கணங்களை எல்லாம் வகுத்தவர்களும் அவர்கள்தாம். ///////

உண்மை! தமிழை வளப்படுத்தியதில் சமணருக்கு பெரும்பங்கு உண்டு. மேற்கத்திய கிருஷ்தவபாதிரிமார்கள் தமிழுக்கு சமணரைக்காட்டிலும் புதுஇரத்தம் பாய்ச்சியுள்ளார்கள்!
உரைநடை,எழுத்துச் சீர்திருத்தம்,செம்மொழித்தன்மையை வெளிப்படுத்தியமை என்று அவர்களுடைய தொண்டு பெருந்தொண்டு! தமிழ்கூறும் நல்லுலகம் அவர்களுக்கு கடமைப்பட்டதே! அதற்காக தமிழ் அவர்கள் வீட்டுச் சொத்தாகுமா என்ன?
வடநாட்டில் இருந்து வந்த சமணத்துறவிகள் தமிழ் கற்கவேண்டிய தேவையிருந்தது, தாம் கற்றதை தமது சீடர்களுக்கு போதிக்க வேண்டிய தேவையிருந்தது. எனவே இலக்கணநூல்களை எழுதினார்கள். எங்கனம் தமிழாகமங்கள் எழுதாக்கிளவியாக பேணப்பட்டிருந்ததோ அங்கனம் இலக்கணமும் முன்னர் பேணப்பட்டே இருந்திருக்கும். வடநாட்டில் இருந்துவந்த அகத்தியர் அகத்தியத்தை தந்தார். அவரது சீடர்களே தொல்காப்பியரும் அவிநயரும். இன்றும் அகத்தியமும் அவிநயமும் எம்மிடம் இல்லை . அதற்காக அகத்தியர் எதுவுமே செய்யவில்லை என்று ஆகிவிடுமா? அவிநயர் தமிழுக்கு நாட்டிய இலக்கணம் வகுக்கவில்லை என்று ஆகிவிடுமா? எனவே "அவர்கள்தாம்" என்ற அழுத்திச் சொல்லும் சொற்பதம் ஏற்புடையதல்ல!
தொல்காப்பியம் பல நூல்கள் தமிழில் ஏற்கனவே வழக்கில் இருந்ததை குறிப்பிட்டுள்ளதை நினைவில் கொள்க.

///சமணர்கள் மட்டுமல்ல அவர்களது இலக்கியக் கருவூலங்கள் அனல் புனல் வாதம் என்ற பெயரில் அழித்தொழிக்கப் பட்டன. இவை பெரிய புராணம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகள். அவற்றுள் குறிப்பிடப்படாமல் துடைத்துத் தள்ளப்பட்ட சமணர்களும் அவர்களின் இலக்கியங்களும் ஏராளம். சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, நாலடியார் போன்றவைகள் தப்பிப் பிழைத்ததே பெரிய விடயம்......சமணப் பள்ளிகள் இடிக்கப் பட்டன, அவர்களது நிலபுலன்கள் கவரப்பட்டன, யானைகளைக் கொண்டு அவர்களது தலைகள் இடறப்பட்டன//////

இவற்றைக் காத்தவர்களுக்கு அவற்றை அழிக்கவேண்டிய தேவையேன் ஏற்பட்டது?
சமணக்கோயில்கள் தமிழகத்தில் தற்போதும் உள்ளன! அதைக் காப்பாற்றியது யார்?
அனல்வாதத்துக்கும் புனல்வாதத்துக்கும் யார் வரச்சொன்னது? யாரேனும் கட்டாயப்படுத்தினார்களா? பெரியபுராணத்தின் படி சமணர்களே வலிந்து திருஞானசம்பந்தரை அழைத்தனர். பெரியபுராணத்தின்படி கழுவேறியதை கையிலெடுத்து சைவநெறியை வசைபாடமுனையும் தாங்கள் பெரியபுராணப்படி 'சமணரே வலிய அழைத்தனர்' என்பதை எவ்வாறு மறுக்கலாம்?
தங்கள் கருத்துக்கு ஆதரவானது என்றால் பெரியபுராணம் தேவை! தங்கள் கருத்துக்கு கசப்பானது என்றால் பெரியபுராணம் 'காழ்ப்புணர்ச்சி' நூல்!!! என்னே அறிவுத்திறன்!!!

சமணர்கள் ஓங்கியிருந்தபோது சைவர்களுக்கு அவர்கள் செய்த துன்பத்தை அப்படியே மெதுவாக சைவர்கள் சமணர்களுக்கு செய்ததாக கற்பித்துள்ளீர்கள்!!! கெட்டித்தனத்தின் உச்சம்!

////வேதங்கள் பிறவி ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தன...யாகங்களில் வளர்க்கப்படும் ஓமத்தீயில் உயிர்கள் வெட்டிப் பலியிடப் பட்டன. சைவம் இவைகளை ஏற்றுக் கொண்டது. சமணம் இவைகளைக் கண்டித்தது.////

மன்னிக்க வேண்டும்! தாங்கள் சைவநெறியை முழுமையாக கற்காமல் சைவநெறிபால் பழிபோட முனையக்கூடாது. விசேடதீட்சை பெற்றோர் சிவபூசை செய்யும் உரித்துடையோர் என்பதை அறிந்து கொள்க. பூணூல் போட்டுக்கொள்ளும் உரிமையுடையோர் என்பதை தெளிக. சைவநெறி வர்ணாச்சிரமத்தை ஒருக்காலும் ஏற்றதில்லை!!!


வேதங்களில் இருந்துதான் பலியிடலை தமிழர் ஏற்றனர் என்ற தொனியில் தங்கள் ஆதங்கம் உள்ளது வருத்தத்துக்குரியது. வேதவேள்விகளில் பலியிடல்கள் எப்படி நடைபெற்றனவோ அப்படியே தமிழரில் ஒருசாராரில் பலியிடல்கள் நடைபெற்றே வந்துள்ளன.உலகம் முழுதும் இந்தப் பலியிடல்கள் நடைபெற்றே உள்ளன. இன்றும் நடைபெற்றே வருகின்றன. எனவே பலியிடலுக்கு மூலமே வேதம் என்ற தொனி பிழையானது.

வேதம் என்பது ஆரியமக்களின் வாழ்க்கை,சமூக பொருளாதார நிலைகள் என்பவற்றை பல இடங்களில் படம்பிடித்துக்காட்டும் கருவியாக விளங்குகின்றது, எனவே ஆரியமக்களில் ஒருசாராரிடம் இருந்த பலியிடல்கள்பற்றி அது கூறிற்று என்பதில் என்னதவறு உண்டு?

வேத சங்கிதைகள் பல முனிவர்களால் எழுதாக் கிளவியாகப் பேணப்பட்டு காலம்காலமாக க்டத்தப்பட்டு, பின்னர் வேதவியாசரால் தொகுக்கப்பட்டவையாகும்.பிற்சேர்க்கைகள் ஏராளம் உண்டு. அகற்றப்பட்ட பகுதிகளும் ஏராளம் உண்டு. காசிவாசி செந்திநாதையர் வேதத்தில் இருந்து பலபகுதிகள் அகற்றப்பட்டுள்ளதை தனது ஆராய்ச்சி முடிவாக தெரிவித்திருந்தார்.எனவே இன்று நம்மிடம் உள்ள வேதம் பிற்சேர்க்கைகளையும் வெட்டி ஒட்டல்களையும் கொண்டுள்ள ஒரு நூற்தொகுதியாகும். எனவேதான் சைவநெறி வேதத்தை பொதுநூலாகக் மட்டுமே கொண்டு அதில் உள்ள சிவபரத்துவத்தை மட்டுமே ஏற்று ஆகமங்களை சிறப்புநூலாகக் கொண்டு விளங்குகின்றதென்ற உண்மையை உணர்க.

இன்றும் பலியிடல்கள் நடைபெறுகின்ற சிறுதெய்வவழிபாட்டில் பலியிடல் பூசைகளை மேற்கொள்ளும் பூசாரி பரம்பரை பரம்பரையாக வேதமும் அறியார். ஆகமமும் தெரியார். எனவே இவர்கள் வேதத்தில் இருந்து எப்படி பலியிடலைப் பெற்றிருக்க முடியும்?

ஏற்கனவே கூறியுள்ளதுபோல் திருமுருகாற்றுப்படையில் பலியிடல் வழிபாடுகள் பழமுதிர்ச்சோலையில் நடைபெற்றது என்பது வேதத்தின் அடிப்படையில் அல்ல!!! அது வேடுவரின் வழிபாட்டின் அடிப்படையில்!! அதே திருமுருகாற்றுப்படை ஆகமவழிபாடு ஏனைய முருகன் ஆலயங்களில் நடைபெற்றதை ஆவணப்படுத்தியுள்ளது.

இன்றும் பலியிடல்களைப் பார்த்தீர்களானால்; பலியிட்டபின்னர் இறைஞ்சியை அனைவரும் விருந்தாக உண்பர். இது மாமிசபோசணையை மட்டுமே தெரிந்தவர்கள் இறைவனை வழிபடத்தொடங்கியபோது தமக்குத் தெரிந்த உணவை இறைவனுக்குப் படைத்து பின்னர் உண்டனர் என்ற உண்மையை உணர்த்துகின்றது. கண்ணநாயனார் கதைபோல்!எனவே அன்பு ஒன்றே இங்கு இவர்கள் உள்ளத்தில் இருப்பது. இவர்களிடம் படித்து நூலறிவு கொண்டவர்கள் "படைக்காதே" என்பது நியாயமற்றது!!! குறிப்பாக வேட்டுவத்தொழில் செய்வோர் அந்த உணவை இறைவனுக்குப் படைப்பதில் என்ன தவறுண்டு? ஆகமம் அறியாத மக்களிடம் ஆகமவழிபாட்டை எப்படித் திணிக்கமுடியும்?


வடமொழி வேதத்தில் பலியிடல்கள் என்பவை தவறுதலாக பொருள்புரிந்து அரங்கேறியவை என்று சமஸ்கிருத ஆய்வாளர்களும் தத்துவஞானிகளும் கூறியுள்ளனர்.

"அஜேநயஷ்டவ்யம்"என்பதில் அஜம் என்பது ஆடு என்ற பொருளையும் அதேசமயத்தில் முளைக்கும் தன்மையை இழந்துவிட்ட வறுத்த நெல்மணி என்கின்ற பொருளையும் கொடுக்கின்றது. ஆடு என்று பொருள்கொண்டோர் ஆட்டுக்கடாவை ஆகுதியாக்கின்றனர். இப்படித்தான் வேதத்தில் உள்ள வார்த்தைகள் தவறுதலாக சிலரால் பொருள்கொள்ளப்பட்டு;வேதவேள்வியில் ஊன் சமப்பிக்கும் பழக்கம் உருவாயிற்று என்று அறிஞர் கூறுவர்.

மகாபாரத்தத்தில் இதை உணர்த்தும்படியாக கதையும் காணப்படுகின்றது. இந்திரனால் நடத்தப்பட்ட வேள்வியில் குருவான வியாழபகவான் மாவிலங்கு பண்ணும்படி அறிவுறுத்த,ஊன் உண்ணும் விருப்புடன் தேவர்கள் தவறாகப் பொருள்கொள்ள,முனிவர்கள் அதை எதிர்க்கவே, நடுவராக அமர்ந்து அரசன் வசு தேவர்புறம் சாய்ந்து தீர்ப்பு வழங்கி நரகடைந்தான். இக்கதை உணர்த்துவதும் தவறான பொருளை சிற்றறிவு பெற்றோர் ஆராயாமல் கொள்வதை உணர்த்துகின்றது. இதனால்த்தான் என்னவோ வேதம்படிப்பதற்கு பல கட்டுப்பாடுகள் ஏற்படலாயிற்றுப் போலும்!!!

மாஅரிசியினாலேயே ஆரம்பகாலங்களில் வேதவேள்வி நடைபெற்றதென்றும் பின்னர் அது ஊனாகப் பொருள்கொள்ளப்பட்டு அவ்வழிபாடு திரிபடைந்து வேதவேள்வியின் மகத்துவம் குறைந்ததென்றும் ஆய்வாளர்கள் கருதுவர்.


நான்மறை என்பவை வடமொழி நாலு வேதங்களைச் சுட்டாது என்று வாதிடும் சைவசித்தாந்திகளும் உண்டு. அதற்கு அவர்கள் கற்பிக்கும் காரணங்களில் ஒன்று இந்திரன்,வர்ணன் போன்றோரும் கடவுளாகக் காட்டப்பட்டுள்ளமையே!!! மேலும் சைவசித்தாந்தப்படி வேதம் என்பன சிவபெருமானால் உரைக்கப்பட்டவை.ஆனால் வேதாந்திகளின்படி, வேதம் தொன்று தொட்டு இருந்துவரும் ஒன்று. எவராலும் உரைக்கப்படாதது.இப்படி சைவசித்தாந்தம் பொதுநூல் என்று கருதுகின்ற வேதம் எதுவென்பதிலேயே பல்வேறு கருத்துகள் உண்டு. அவற்றினை ஆய்வது தற்போதைய கட்டுரையின் நோக்கம் அல்ல.

வேதம் சைவத்துறையில் பொது என்ற நிலைப்பாட்டில் நிற்பதால் வடமொழி வேதங்களை முழுமையாக ஏற்றுள்ளன என்று பொருள் அல்ல!!!  வடமொழி வேதத்தில் சிவபரத்துவத்தை உரைக்கின்ற பகுதிகளை ஏற்றது என்பதே அதன் பொருளாகும். சைவநெறி வேள்வியில் பலியிடலை ஏற்றுக் கொண்டதில்லை.  தக்கனின் கதையும் தாருகா வனத்தில் சிவபெருமான் நடத்திய திருவிளையாடலும் வேதவேள்வியில் ஆகமவழிச் சைவத்துறையையின் நீதிநெறிகளை ஏற்றுக்கொள்ள அந்தணர்களைப் பணித்தமையை உணர்த்துவதை அறியீரோ!!!

ஆனால் சைவநெறி வேடுவவழிபாட்டில் இடைஞ்சல் செய்ததில்லை! ஆகமவழிபாட்டில் உயிர்க்கொலையை அனுமதித்ததில்லை!!!

தமிழில் உயர்ந்த பொருட்களுடனையே உவமை சொல்லவேண்டும் என்ற விதி உண்டு. ஆனால் சேக்கிழாரும் கம்பரும் அதை மீறியவர்கள்!!! கம்பன் இலக்குவனின் கோபத்தின் எல்லையை உணர்த்த அவ்வண்ணம் செய்தார். சேக்கிழார் வேடுவனின் வாய்ச்சொல்லாக சொல்ல வந்தபோது உடும்புபோல் கண்ணப்பர் இலிங்கத்தை கட்டியணைத்துள்ளான் என்றார். எனவே வேடுவர் தமக்குத்தெரிந்த சொற்களைக் கொண்டே தாம் கண்ட காட்சியை வர்ணிப்பர்.அவருக்கு நூலறிவு இல்லை.அதுபோல் வேடுவர் தமக்குத்தெரிந்த முறையிலேயே இறைவனை வழிபடுவர். அவரிடம் வேதாமங்களை சைவம் திணிக்கவில்லை.

ஆதியினம் முழுமையாக வேடுவராக இருந்து,பின்னர் நதிக்கரைகளுக்கு நகர்ந்து பயிர்ச்செய்கையாளர்களாக மாறினர் என்ற மனித இனத்தின் உண்வுப் பண்பாட்டுப்பரிமாண தன்மைகளை கற்றதில்லையோ? நன்றியறிதலை உணரத்தொடங்கியபோதே பாலுக்காக வளர்க்கப்படும் பசுவைக் கொல்லுதலில் இருந்து தவிர்க்கத் தொடங்கியிருப்பர். இவ்வாறு பண்பாட்டு பரிமாணவிருத்தியில் ஒவ்வொரு படிநிலைகளாக கொல்லாமையுணர்வு வளர்ந்திருக்க வேண்டும்! எனவே இருந்த ஒன்றை சமணம் பல்வேறு சமூகக்கட்டமைப்புகளுக்கு பரவ ஊந்துசக்தியாக விளங்கிற்று.

இன்றும் இந்த மிருகபலி தமிழகங்களில் உண்டு.ஆனால் அதுதான் தமிழரின் பண்பாடு என்பது ஒட்டுமொத்த தமிழரையும் வேடுவராக காட்டும் மூடத்தனம்!
அந்த மிருகபலி இன்றும் தொடருகின்றது என்றால், ஆகமநெறிச் சைவம் தனது கருத்துக்களை எவரிடமும் திணிக்கவில்லை என்பதையே உணர்த்துகின்றது!

////சுமார் 14 நூற்றாண்டுகளாக தமிழ் மண்ணில் தழைத்தோங்கியிருக்கும் சைவம் சாதியத்திற்கு எதிராக எந்த விதிகளையும் வகுக்கவில்லை. ////

பெரியபுராணம் தெய்வத்தின் முன் யாவரும் சமன் எனக்காட்டவிளைந்த நூல் என்பதை தாங்கள் அறியாதது பெரியபுராணத்தை தாங்கள் திறந்தே பார்த்ததில்லை என்பதை புலனாக்குகின்றது.

"புறக்கோலத்தையும் சாதிமத வேறுபாடுகளினையும் பொருளற்றன என ஒழிந்து அகநிலை வாழ்வினையே சைவத்தின் உயிர்நிலை எனக் காட்டுவதே பெரியபுராண உண்மையாம்"-திரு.தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்

திருஞானசம்பந்தர் திருநீலகண்டயாழ்பாணருடன் கூடித்திரிந்தது சாதிய கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட புரட்சி என்று அறிஞர் சுட்டுவதை கேட்டிலையோ?
நாமார்க்கும் குடியல்லோம் என்ற புரட்சிகரமான சிந்தனைகளை ஊட்டியது சைவநெறி.
சிவனாரை சுடலையாண்டியாகக் காட்டி, மலைமகளை மணஞ்செய்வித்து சாதியத்தை அழிக்க முனைந்தது சைவநெறி! முருகன் - வள்ளி என்று கலப்புத் திருமண உறவை ஊருக்கு நினைவுபடுத்தியது சைவநெறி!

பல்லக்கில் போகும் சமூகமேலாண்மைத் தன்மையை சந்தானகுரவர்கள் சாடினதை அறியீரோ? உமாபதி சிவாச்சாரியார் பல்லக்கில் போகும்போது "பட்டகட்டையில் பகற்குருடு போகிறது" என்கிறார் மறைஞானசம்பந்தர். அந்த மறைஞான சம்பந்தர் சேரி மக்களிடம் மோர் வாங்கி குடித்தபோது அவரது புறக்கையால் வழிந்த மோரை உண்டு குருபக்தியை காட்டுகிறார் உமாபதி சிவாச்சாரியார்.

அரிசனம் பூசி மாலை அணிந்து பொன்னாடை சாத்தி

பரிசனம் பின்பு செல்ல பாரகர் பரிக்க கொட்ட

வரிசின்னம் ஊத தொங்கல் வந்திட உணர்வு மாண்டு

பெரியவர் பேச்சும் இன்றிக் கிடத்தலால் பிணத்தொடு ஒப்பர்.

பல்லக்கில் பவனி செய்து சமூகத்தில் பெரியவர் என்னும் தன்மையை நிலைநாட்டும் பழக்கத்தை உடையோர்களை உயிருள்ள பிணம் என்று மறைஞானசம்பந்தரின் குருவாகிய அருணந்திசிவாச்சாரியார் சிவஞானசித்தியாரில் குறிப்பிடுகின்றார்.

 மேடைப்பேச்சுக்களாலும் நூல்களாலும் ஊடகங்களாலும் சிற்றார் தொட்டு,கற்றார் கல்லாதார் என்ற சமூகப்பிரிவுகள் யாவரும் அறிந்துள்ள அன்பே சிவம், ஒன்றே குலம் போன்ற திருமந்திர வாசகங்கள் தங்கள் நினைவுக்கு வராதமை சைவத்தின்பால் தாங்கள் கொண்டுள்ள காழ்ப்புணர்வையும் சமணத்தின்பால் தாங்கள் பெற்றுள்ள பக்தியையும் புடம்போடுகின்றது! பிறகென்ன நடுநிலையாக நின்று ஆய்வுசெய்தல் வேண்டுமென்ற போதனை!!!

உலக ஒற்றுமையை கருத்தாகக்கொண்ட தமிழரின் மேன்மையையும் சித்தாந்தச்சிறப்பையும் கருப்பொருளாகக் கொண்டு கொழும்பில் 1950இல் நடைபெற்ற சைவர் மாநாடு- 44ஆவது ஆண்டு விழாவில் தனது தலைமைப் பேருரையில் திரு.தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ""ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று முகமதுநபி பாடுவதற்கு முன்னரே தமிழ்ச் சித்தனாம் திருமூலர் பாடவில்லையா?" என்று தமிழரிடம் வினாவுகின்றார். தங்களைப் போன்றவர்கள் நம்மவர்களில் அதிகம் ஆதலாலேயே இப்படி வினாவவேண்டி ஆயிற்று பெருந்தகையிற்கு.


"ஆசூச மாசூச மென்பர் அறிவிலார்
ஆசூச மாமிட மாரு மறிகிலர்
ஆசூச மாமிட மாரு மறிந்தபின்
ஆசூச மானிட மாசூச மாமே"

"ஆசூச மில்லை யருநிய மத்தருக்கு
ஆசூச மில்லை யரனையர்ச் சிப்பவர்க்கு
ஆசூச மில்லை யங்கிவளர்ப் போர்க்கு
ஆசூச மில்லை யருமறை ஞானிக்கே"
என்று திருமூலர் தீண்டாமைக்குரிய தீட்டுப்பற்றி குறிப்பிட்டுள்ளதை ஆராய்க.


"சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள்
கோத்திரமுங் குலமுங் கொண்டு என் செய்வீர்......
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே"
என்ற அப்பர் பெருமான் பாடுகின்றார்.

"ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராயின்
அவர் கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே"
என்று சாதியத்துக்கு மரண அடிகொடுத்துள்ளார் அப்பர் பெருமான்.

அப்பர் பெருமானின் தேவாரத்தை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் பன்னிருதிருமுறைகள் சமூகசாதிய உணர்வை பழிக்கின்ற,எதிர்கின்ற தன்மைக்கு பதமாக இங்கு தந்துள்ளேன்.
தேவாரங்களை ஆய்ந்தறிந்து சமணக்காழ்ப்புணர்வைக் கண்டுபிடித்த கெட்டித்தனமுடைய தாங்கள் தேவாரங்கள் முழுதும் கொட்டிக்கிடக்கும் சாதிஎதிர்ப்புணர்வை கண்டறிந்து கொள்வீர்களாக!!!



////தமிழர்கள் மத்தியில் சைவம் எழுச்சிபெறத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை பார்த்தால் அதன் காலம் சுமார் 1400 ஆண்டுகள், ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் தனிப்பெரும் சமயமாக சமணம் விளங்கியிருக்கிறது. ////

2000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழரின் தனிப்பெரும் சமயமாக சமணம் விளங்கியது என்கிறீர்கள். கி.பி 7ம் நூற்றாண்டோடு சமணம் மங்கத்தொடங்கிவிட்டது. தனிப்பெரும் சமயம் என்ற தன்மையை இழந்துவிட்டது. எனவே; இந்த 2000 எக்காலம் தொட்டு என்பதில் விளக்கம் போதமையாக உள்ளது உங்கள் குறிப்பில்!!!
கி.மு 2000 ஆண்டுகள் என்றாலும் அல்லது கி.பி 7ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 2000 ஆண்டுகள் என்று கொண்டாலும் அது மிகப்படுத்தப்பட்ட ஒன்றே!!!

அப்படியானால் முருகன்,கொற்றவை எல்லோரும் எங்கே போயினர்? இலிங்க வழிபாடுடைய இராவணனின் காலம் எது? கடற்கோளால் கடலில் மூழ்கியுள்ள திருக்கோணேச்சுரத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கால அளவீடு என்ன சொல்கின்றது?
ஆண்டுக்கு ஒரு முறை ஒரு பாடலென மூவாயிரம் ஆண்டுகளாக திருமூலர் திருமந்திரம் இயற்றினார் என்ற சைவக்கருத்தைக் கொண்டால் இலக்கியவளமுடைய சைவநெறி கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே சிறப்போடு விளங்கிற்று என்று பொருளாயிடும்.
எனவே தமிழகத்துக்கு கி.மு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சமணம் வந்துவிட்டது என்பது "நடுநிலை" ஆய்வுமல்ல!!! பகுத்தறிவுடைய ஆய்வுமல்ல!
ஆய்வுகளின்படி கி.மு 3ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் தமிழகத்துக்கு வந்ததாகவே அறியக்கூடியதாகவுள்ளது.

/////சமணம் தமிழ் மண்ணில் தோன்றிய மார்க்கம் அல்ல. அது தோன்றியது வடநாட்டில்தான்////
மனதுக்கு நிம்மதியாகவுள்ளது இதிலேனும் தெளிவுள்ளமைக்கு!
கணபதியின் பிறப்பிடத்தை வம்புக்கு இழுத்து  வேதத்தையும் வடவர்,பார்ப்பனர்களை புட்டுப்புட்டு வைத்த தாங்கள்....வடக்கில் இருந்துவந்த சமணம் இல்லாமல் போனதில் வருந்தம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை!!!

 "நடுநிலை'யாக ஆரியமும் தமிழும் சமனே எனக்கருதுவோர் வருந்த வேண்டியது முறைமை!!! ஏனென்றால் எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு என்ற திருக்குறளை தந்த சைவச்சால்பில் ஊறியவர்கள் அன்பு நிறைந்த ஒரு மதம்; அதை ஒழுகியவர்கள் மருளில் மூழ்கி ஆணவத்தில் அடாவடித்தனம் செய்தமையால் அழிந்துபோயிற்றே என்று வருந்துவர்.

 ///மாணிக்கவாசகர், சேக்கிழார் போன்ற சைவப் புலவர்கள் தங்கள் பாடல்களில் உணர்த்தியிருக்கின்றனர் என்பது உண்மைதான் ஆனால் அவர்களின் நோக்கம் சைவத்தை உயர்த்தும் பொருட்டு இருந்ததேயன்றி தமிழை உயர்த்தும் பொருட்டு அல்ல///

தங்கள் பெரியபுராணத்தை படித்ததேயில்லை என்பதை சான்றோடு முன்னர் காட்டியுள்ளேன். திருவாசகம்,தேவாரம் போன்ற திருமுறைகளையும் தாங்கள் கற்றத்தில்லை என்பதை இப்போது உணர்ந்துள்ளேன். ஏன் சைவ மறுமலர்ச்சி இயக்கத்தின் வரலாற்றில் கூட தங்களுக்கு பரீட்சியம் இல்லைப்போலும்!!!!

ஞானவழியில் ஒழுகும் சைவநெறிக்கு மொழி என்ற வட்டம் என்றுமே இருந்ததில்லை. ஆனால் தமிழை மட்டந்தட்டவோ எள்ளி நகையாடவோ எவரையும் அனுமதித்ததில்லை. ஏனெனில் தமிழை இறைவன் அளித்தமொழியாகவே சைவநெறி கருதுகின்றது.

திருஞானசம்பந்தர் பதிகத்துக்கு பதிகம் தமிழை ஏற்றிப் போற்றிப் பாடியதை தாங்கள் அறியாது இருந்தீர்கள்!!! திருஞானசம்பந்தர் சமணத்தை திட்டித்தீர்த்துள்ளார் என்பதை கண்டுபிடித்த தங்கள் ஞானக்கண்ணுக்கு தமிழாக இறைவனே இருப்பதாகக் கண்டதை எங்கனம் அறியமுடியாமல் போயிற்று!

பண்ணும் பதமும் பலவோசை தமிழ் அவையும் ...........விண்ணும் முழுதானான் இடம் வீழிம்மிழலையே என்கிறார் திருஞானசம்பந்தர்.
"பண்ணார் இன் தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே" என்கிறார் சுந்தரர்.
சொற்றமிழில் பாடுக என்று இறைவன் பணித்ததாக சேக்கிழார் சுந்தரர் வரலாற்றில் சுட்டுகிறார். திருவாசகத்தை இறைவனே எழுதி கையெழுத்து இட்டார் என்றால் தமிழின் பெருமையை வேறு என்னென்று சொல்வது?  திருவிளையாடல்கள் நாயன்மார்களின் வரலாற்றில் நிகழ்தது தமிழ்ப் பாட்டைக் கேட்டு இரசிக்க அல்லவா!


"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்றே திருமந்திரத்தை நினைவில் நிறுத்துக.


"தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே"

"ஆரிய முந்தமி ழும் உடனே சொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே"


என்று திருமந்திரம் தமிழை தெய்வமொழியாக உயர்த்தியுள்ளதை அறிக.

தமிழை வளர்க்கவே சைவ நாயன்மார்கள் உழைத்தார்கள் என்பதை அறிஞர்கள் யாவரும் உணர்ந்த ஒன்றே! திருவிளையாடல்களில் தமிழுக்காய் திருவிளையாடல்கள் செய்த இறைவனின் திருவரலாறுகளை படித்தறிக. திருமுறைகளை முழுமையாக படிக்க. அது தொகுக்கப்பட்ட வரலாற்றை கற்க.

முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி - அரணிலா
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்
ஆனந்தஞ் சேர்க சுவா கா

ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானை - சீரிய
அந்தண் பொதியில் அகத்தியனா ராணையால்
செந்தமிழே தீர்க்க சுவாகா

இவை இரண்டும் சமய நக்கீரரின் பாடல்கள்! இப்பாடல்கள் ஏன் சமய நக்கீரரிடம் பிறந்தன?
கொண்டான் என்னும் குயவன் ஆரியம் நன்று என்றும் தமிழ் தீதென்றும் உரைத்தமை கண்டு சினங்கொண்ட நக்கீரர், ஆரியத்தின் பெயராலையே உன்னை அழிக்கிறேன் என்றும் அவ்வாறு நீ அழியாவிட்டால் தமிழ் தீதென்பதை ஏற்கிறேன் என்றும் சபதம் செய்து, முதல்ப் பாடலால் அவனை  அழித்து பின்னர் ஏனையோர் இறைஞ்சிக் கேட்டதற்கு அமைவாக இரண்டாம் பாடலைப்பாடி அவனை உயிர்ப்பிக்கின்றார்.

வடமொழியிற் சதுமா மறைபயிறற்கு இழிவாம்
மரபுளர்கட்கு அதிகாரம் இலையெனச் சொலினும்
இடரறு பத்திமை ஞானம் இவைகள் சொற்றிடும் நூல்
இனியதமிழ்க் கவியாதிகளில் இவர்க்கு இலையோ?
சுடர்பரவைக்கு இனியார் அடியவர்மெய்ப் பெயரே
சொனபதி கத்திடையே உளர்குலம் எக்குலமோ?
மடமது ஒழிந்து உணர்வால் உணர்திரெனச் சொலும்மேல்
மதியர் பழிச்சுமதா குமரன்எனக் கொளுமே!

வடமொழி வேதங்களைக் கேட்கவோ படிக்கவோ நான்காம் வர்ணத்தாருக்கு(ஸ்மார்த்தத்தின்படி) தடைவிதித்தால் என்ன? அடியார் பெயர்களைத் தொகுத்துக் கூறிடும் திருத்தொண்டர்தொகை ஒன்றே போதுமே! அதை ஓதியே வீடுபேறு பெற்றிடுவோம் என்று பாடுகின்றார் பாம்பன் சுவாமிகள். எனவே சைவசித்தாந்த நெறி தமிழ்மொழியை வடமொழிக்கு இணையாக உயர்த்துவதில் குறியாக இருந்துள்ளதை நன்குணர்க.


தமிழுக்கு மந்திரசக்தியும் தெய்வீகத்தன்மையும் உண்டு என்பதை நிறுபிக்க சைவநாயன்மார்களும் புலவர்களும் முயன்றனர். நிறுபித்தனர்.
சைவநாயன்மார்களும் புலவர்களும் சைவத்தை உயர்த்தவில்லை! மாறாக; சைவத்தின்பெயரால் வடமொழிக்கு இணையாக தமிழ்மொழியை உயர்த்தினர் என்ற உண்மையை தங்கள் ஞானக்கண்ணால் எப்போது உணர்ந்து கொள்வீர்களோ?

தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கிய மறைமலையடிகள் சைவசித்தாந்தி என்பதை அறியீரோ? திருவாவடுதுறை ஆதீனம் தமிழும் சமஸ்கிருதமும் இறைவனால் படைக்கப்பட்ட தெய்வீகமொழிகள் என்பதை நிலைநாட்டிவருவதை அறியீரோ? திருமந்திரம் தமிழை இறைவன் சொன்னதாக சொல்லியதை கேட்டிலையோ? போரூர் ஆதீனம் தனித்தமிழ் வழிபாட்டை முன்னெடுத்துச் செல்வதை அறிந்திலீரோ?
தமிழை தெய்வமொழியாக கருதிய ஒரேநெறி சைவநெறியே!!!

/////வ.உ.சி நாத்திகரல்ல சைவப் பராம்பரியத்திலிருந்து வந்தவர்தான். சைவத்தின் குறைகளை அவரும் வெளிக்காட்டியுள்ளார்////
சைவநெறியில் உள்ள கருத்துச் சுதந்திரத்துக்கு இதுவே சான்று. நாமார்க்கும் குடியல்லோம் என்பது சைவநெறி!!!

திருஞானசம்பந்தர் தொடங்கிவைத்த சாதியொழிப்பு போராட்டத்துக்கு "சாதிச்சான்றிதழ்" வழங்கலை நடைமுறைப்படுத்தியுள்ள அரசு இயந்திரத்தால் தற்போது முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது!!! சைவத்தின் குறைகளை சைவர்கள் கண்டறிந்து ஆவண செய்யும் பக்குவம் உடையவர்கள்! எனவே; சாதியொழிப்புக்கு சைவத்தை சாடும் "கெட்ட"பழக்கத்தை கைவிட்டு, உரியமுறையில் அரசு இயந்திரங்களை சாடுக!!!!





முடிவுரை


சமணமும் பௌத்தமும் அறத்தை வலியுறுத்திய நெறிகள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் ஏதுமில்லை.ஆனால் அதை ஒழுகியவர்களான சமணரும் பௌத்தரும் மருளில் மூழ்கி மதத்தீவிரவாதிகளாக விளங்கியமையால் தெய்வத்திருவருள் அவர்களை ஒடுக்கியது என்பதே மெத்தச்சரி!!!  எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காணும் சைவத்திற்கு சமணக்கருத்துக்களை அரவணைப்பதில் எந்த இடரும் இல்லை!


ஆதித்திராவிடரின் பண்பாடுகளான, நெற்றியில் நிறப்பூச்சுக்களைப் பூசுதலே திருநீறாகவும் நாமமாகவும் குங்குமப் பொட்டாகவும் சந்தனப் பொட்டாகவும் மாறின! அவுஸ்ரேலிய பழங்குடியினர்(திராவிடர்) இன்றும் வெண்ணிறப் பூச்சுக்களை நெற்றிமுழுவதும் பூசுகின்றனர். ஆனால் இன்று ஆரியரும் திருநீறு,குங்குமம்,பொட்டு,நாமம் என்று தமிழரின் பண்பாட்டை உள்வாங்கியுள்ளனர்.

சிவவழிபாடு,இலிங்கவழிபாடு,சக்தி வழிபாடு,முருகவழிபாடு,திருமால் வழிபாடு என்று தமிழரின் வழிபாடுகளை ஆரியரும் ஏற்று வழிபடுகின்றனர்.

விவேகானந்தர் தென்னாட்டில் இருந்தே ஆடல் பாடல்களால் இறைவனை வழிபடும் பண்பாட்டை வடநாட்டினர் பெற்றனர் என்றார். ஆடல் பாடல்களால் இறைவனை வழிபடும் பண்பாட்டையும் ஆரியர் தமிழரிடம் இருந்து கற்றுக் கொண்டனர்.

ஆனால் கணபதியையும்,சமஸ்கிருதத்தையும் காட்டி சைவநெறியை தமிழரிடம் இருந்து கருப்புச்சட்டை அரசியல் பிரிக்க எத்தனிக்கிறது.அதற்கு சமணத்தை உயர்த்திக்காட்டவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆரியரிடம் பெருந்தன்மை உண்டு! தமிழரிடம் தாழ்வுமனப்பான்மை உண்டு! அந்தத் தாழ்வுமனப்பான்மையின் விளைவுதான் தமிழினம் மங்கிப்போய் இருப்பதற்கான காரணம்!


இதன்(சமணம்)மாபெரும் வீழ்சிக்கு என்ன காரணம்?

நடமுறைச் சாத்தியமற்ற விடயங்களை வலியுறுத்தியமை!
கடுமையான துறவறத்தை வலியுறுத்தியமை!
எல்லாவற்றுக்கும் மேலாக மருளில் மூழ்கியமை!



//// சமயச் சார்பு அற்று, அறிவுத் தளத்திலிருந்து நாம் சமயங்களை ஆராய்ந்தால் பல உண்மைகளை விளங்கிக் கொள்ள முடியும்./////
மதசார்பின்மை அல்லது நடுநிலமை என்பது;

  • கிருஷ்தவர்கள் துன்பப்படும்போது ஓடிச்சென்று உதவுகின்ற அதேசமயம் காஷ்மீர் சைவர்கள் அநாதைகளாக;டெல்லியிலும் ஏனைய பிரதேசங்களிலும் உள்நாட்டு அகதிகளாகத் திரியும்போது அவர்களுக்கு அடிப்படைவசதிகளைக்கூட செய்துகொடுக்காது பாராமுகமாக இருத்தல் அல்ல!



  • குறைந்தவட்டியில் கல்விக்கு கடனுதவி என்ற சலுகைகளை கிருஷ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வழங்கி "சிறுபான்மையினர்" என்று நியாயம் கற்பித்து, கடன்பெறுவதற்காக; ஏனைச் சைவர்களையும் ஏனைய வேதநெறியினர்களையும் இந்தச் சிறுபான்மை மதங்களுக்கு மதம்மாறத்தூண்டுவது மதசார்பின்மையே அல்ல!!! ஏழைகள் எந்தமதத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களுக்கு கடனுதவி என்பதே முறையானது!!!



  • "கட்டாய"மதமாற்றத்தடைச்சட்டம் என்பதில் என்ன தவறுண்டு? எவரையும் கட்டாயப்படுத்தி என்ன செய்வித்தாலும் அது குற்றம்தானே? மதமாற்றத்தடைச்சட்டம் என்பது முறையல்லத்தான்!!! ஆனால் "கட்டாய"மதமாற்றத்தை எப்படி ஒரு மதசார்பற்ற அரசு அனுமதிக்கமுடியும்? ஆனால் இந்தச் சட்டத்துக்கு கருப்புச்சட்டை அணியினர் தொடக்கம் சமூகசீர்த்திருத்தவாதிகள் என்று தம்மைத்தாமே முத்திரை குத்துபவர்கள் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்ப்புத்தெரிவித்தது அவர்களின் அறிவுக்கு இழிவல்லவா?



  • டாவின்சிக்கோட் திரைப்படம் கிருஷ்தவர்களின் மனதை புண்படுத்துகின்றதென்று தடைசெய்த அரசு.....சைவர்களினதும் வைணவர்களினதும் ஏனைய வேதநெறியினரினதும் மனதைப் புண்படுத்தும்படி மேடைப்பேச்சுக்களை அரங்கேற்றுவதும் நடந்துகொள்வதும் எவ்வகையில் நடுநிலமையை சுட்டிநிற்கும்?

  • இந்துமதம் மூடநம்பிக்கை மதம் என்று கதையளந்து கொண்டு, வரலாற்று அறிஞர்களால் மிஸ்தாய்நாட்டில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற தமிழகத்தை அறிந்திராத தோமாவை; தமிழகத்துக்கு வந்து திருவள்ளுவரை சந்தித்து திருக்குறள் தொட்டு, சைவசித்தாந்தம் வைணவம் போன்றவற்றுக்கு அடித்தளம் இட்டார் என்று பொய்பரப்பும் மூடநம்பிக்கை விழாவில் கலந்து சிறப்பித்தல் மதசார்பின்மை அல்ல!!!


சமய சார்பற்று ஆராய்கிறேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்து எழுதத் தொடங்கிய தங்களின் கட்டுரை இந்தத்தரத்தில்தான் உள்ளது!உற்றுணர்க!வாழிய உங்கள் நடுநிலை!!!

சைவநெறியை தாக்குவதை கருப்பொருளாகக் கொண்டு எழுதத்தொடங்கியபின்; நடுநிலை என்ற தற்புழ்ச்சி எதற்கு பெருந்தகையீரே?


"ஓதுசமயங்கள் பொருள் உணரு நூல்கள்
ஒன்றோடுஒன்று ஒவ்வாமல் உளபலவும் இவற்றுள்
யாதுசம யம்பொருள்நூல் யாதிங்கு என்னின்
இதுவாகும் அதுஅல்லது எனும்பிணக்கது இன்றி
நீதியினால் இவைஎல்லாம் ஓரிடத்தே காண
நின்றதுயாதொருசமயம் அதுசமயம் பொருள்நூல்
ஆதலினான் இவைஎல்லாம் அருமறைஆ கமத்தே
அடங்கியிடும் இவைஇரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்"
                                                                                          -சிவஞானசித்தியார்

உங்கள் நடுநிலை ஆய்வு "எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு" என்ற திருக்குறளுக்குப் பொருத்தமான சைவநெறியை சித்தியாரால் சமயம் என்பதற்கு இலக்கணம் கொடுக்கப்பட்டதற்கு அமைவாக விளங்கும் சைவத்துறையை இம்மியளவும் மாசுபடுத்தாது!!!

அப்படியாயின் ஏன் மறுப்புக் கட்டுரை வரையவேண்டிய தேவை எளியேனுக்கு ஏற்பட்டது?

/////////அப்போது நான் சைவ சமயம் நல்ல சமயம் என்றால் கெட்ட சமயம் எது தாத்தா என கேட்டேன். அவர் சமணம் என பதிலளித்தார்///////

தங்கள் தாத்தாவின் பெயர் கெட்டுவிடக்கூடாது பாருங்கள்.....அதற்குத்தான்!!! தங்கள் தாத்தா சொன்னது மருளில் மூழ்கியிருந்த சமணரையே! சமணநெறியை அல்ல!!!

மருளில் மூழ்கிய சமணருக்கும் சமணநெறிக்கும் இடையிலான வேறுபாட்டை தங்கள் தாத்தா உணராதது அவர் குற்றமல்ல!!! சமணநெறிக்கு கலங்கம் ஏற்படுத்திய மருளில் மூழ்கிய சமணர்களின் குற்றம்!!!  பௌத்தம் பல்லாயிரம் பேரைக் கொன்றது என்று நாளிதழில்களில் படித்தபோது மருளில் மூழ்கிய பௌத்தரின் அறியாமையை எண்ணிக் கலங்கினேனே ஒழிய நாளிதழ்களின் அறியாமையை அல்ல!!!

///ஆங்கில அறிஞர் கால்டுவேல் அவர்கள் பின்வருமாறு கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்."சமணர்களின் காலமே தமிழர் நாகரிகத்தின் பொற்காலம்"////

அவர்கள் காலமே தமிழர் மதவாதிகளாய் மதத்தீவிரவாதிகளாய் இருந்தகாலம். தமிழர் நெறி மங்கியிருந்த காலம்.

Saiva Siddhantham is a permanent living philosophy original in its contents,universal in its outlook and unique in its practicability என்று டாக்டர்.எஸ்.என்.கந்தசாமி கூறுவதை நினைவில் கொள்வோமாக.

வெள்ளைக்காரர்களின் கருத்தோடு தங்கள் கட்டுரைக்கு முற்றுப்புள்ளி வைத்தீர்கள்! தமிழருக்கு இருக்கும் தாழ்வுமனப்பான்மையை நன்கு உணர்ந்துள்ளீர்கள். அதாவது வெள்ளைக்காரர் யாரேனும் எதுவேனும் சொன்னால் அதை ஆராயாது வள்ளுவர் 'மெய்ப்பொருள்" காணச்சொன்னதுபற்றி விளக்கம் ஏதுமில்லாது அப்படியே உள்வாக்கிக் கொள்வது தமிழரின் தன்மை! எனவே உங்கள் கட்டுரைக்கு வலுச்சேர்க்க ஈற்றில் அந்த நுட்பத்தை கையாண்டுள்ளீர்கள்.எனவே யாமும் அதே நுட்பத்தை கையாளுகின்றேன்.ஆனால் 'மெய்ப்பொருள்' காணும்படி தமிழரை வேண்டுகிறேன்.

Saivism is the oldest prehistorian religion of South India, essentially existing from pre-Aryan times - Dr.G.U.Pope
The Saiva Philosophy is the choicest product of the Dravidian intellect. It is the most elaborate, influential and undoubtedly the most intrisically valuable of all religions of India. It is peculiarly the South Indian and Tamil Religion. - Dr.G.U. Pope


உசாத்துணை -
சைவசித்தாந்தமும் விஞ்ஞான உலகமும் -தனபாக்கியம்-குணபாலசிங்கம் எம்.ஏ
சைவ சித்தாந்தப் பெருமன்ற மாநாட்டுத் தலைமைப் பேருரைகள் -நூற்றாண்டு விழா வெளியீடு 1905- 2005
இலங்கை சைவநெறிப் பாடத்திட்ட நூல்கள்(2001ம் ஆண்டுப் பதிப்பு,2006ம் ஆண்டுப் பதிப்பு தரம் 10க்குரிய நூல்கள்)
சரியா தவறா -தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
இணையத்தள பதிவுகள்,விக்கிபீடியா
திணை இசை சமிக்ஞையின் எழுத்தை வெட்டும் கல்






Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 comments: on "சமணமா?சைவமா? கட்டுரை ஒன்றின் மறுப்புக் கட்டுரை"

ம.தி.சுதா said...

நன்றாக அலசியாராய்ந்திருக்கிறிர்கள் வாழ்த்துக்கள்... சகோதரா..

இளங்கோ said...

மிக நல்ல ஆய்வு, இதைப் படித்தவுடன் குமுறுவதற்கு நான் சமயவாதி அல்ல, சமயங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதும், அதன் மீது விமர்சனங்களை வைப்பதும் வரவேற்கப்பட வேண்டியவையே! சமணத்தின் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு! தமிழ் வளர்ச்சியில் அதன் பங்கையே நான் உயர்வாக எழுதியிருந்தேன். இன்றைய அறிவியல் உலகோடு அதை நான் பொருத்திப் பார்க்கவில்லை!

உங்களின் இந்த கட்டுரை பல தேடல்களுக்கு வழி வகுக்கின்றது.

என் அறிவுக்கு எட்டியவரை சில வற்றை மறுக்கின்றேன் ஆசிவகம்தான் தமிழரின் தொன் சமயம் என அறிந்துள்ளேன் இல்லை சைவம்தான் தமிழர்களின் தொன் சமயம் என்றால் அதனை ஒத்துக் கொள்வதற்கு எனக்கு தயக்கம் இல்லை!

கடைச் சங்க காலத்தில் சிவ வழிபாடு இருந்ததில் உங்களுக்கும் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை! தொல்காப்பியக் காலத்தில் அது இல்லை என்பதே எனது வாதம். முருகனைக் குறிக்கும் இடத்தில் கொற்றவை மகன் என்றே தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

சிலப்பதிகாரம் வெறும் இலக்கியம் அல்ல. அது ஒரு காலக் கண்ணாடி அன்றைய தமிழகத்தின் நிலையை அது படம் பிடித்துக் காட்டியது. அந்த வகையில் அப்போது இருந்த அனைத்து சமயங்களின் குறிப்புக்களும் அதில் உள்ளன. ஆசிவகம், ஏன் வைதீக சமயமான வேத சமயத்தின் குறிப்புகளும் உள்ளன, சைவத்தைப் பற்றியும் வைணவத்தைப் பற்றயும் குறிப்புக்கள் இல்லை! மால் வழிபாடு தொல்காப்பியத்தில் உள்ளது. ஆனால் திருமாலை வைத்து ஒரு சமயம் உருப் பெறவில்லை!

தற்போது தமிழகத்தில், மதுரைவீரன் வழிபாடு உள்ளது, ஆனால் அவரை வைத்து ஒரு சமயம் உருவாகவில்லையல்லவா அது போலவே!

சைவமும் அதுபோலவே!

உங்களது கட்டுரையில் என்னை கருஞ்சட்டைக் காரர் சமண அபிமானி என்றெல்லாம் எழுதியுள்ளீர்கள். சமணத்தின் மீது மட்டுமல்ல பெரியார் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபோது பெரியார் போதிய அக்கறையைக் காட்டவில்லையே என்ற ஆதங்கம் நிறையவே உண்டு!அதற்காக அவரது பணியை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது! பெரியாரைத் தவிர்த்து இருபதாம் நூற்றாண்டுக்குப் பிந்திய தமிழரின் வரலாற்றை எழுத முடியாது.

உங்களின் கட்டுரைக்கு சரியான விளக்கம் பின்னாட்களில் கொடுக்கிறேன்.சில தேடல்கள் அவசியம்.

எதையும் திட்டமிட்டு மறைக்க முயற்சிக்கவில்லை! நான் தேடிய தரவுகளில் இருந்தே தகவல்களைப் பெற்றேன்! குறிப்பாக சிவ வழிபாடு தமிழரின் தொன்மையான வழிபாடு அல்ல என்பது பேரா.க. கைலாசபதியின் 'பண்டைத் தமிழர் வாழ்வும் மதமும்' என்ற நூலில் இருந்து பெறக்கூடியதாக இருந்தது.

சமணத்தை சைவம் அழித்தது என்றால் ஆசிவகத்தை பெளத்தமோ சமணமோதாம் அழித்திருக்க வேண்டும் என்ற உங்களின் கேள்வி நியாயமானதே!

'ஆசிவகம் அழிந்துபோன தமிழர் சமயம்' என்று போராசிரியர் நெடுஞ்செழியன் எழுதிய நூல் ஒன்று உள்ளது. அதனைப் படிக்கும் காலச் சூழல் எனக்கில்லை. தமிழறிஞர் யாரிடமாவது கேட்டு நேர்மையான பதிலை தருகிறேன்.

உங்களின் கட்டுரை எனக்குப் பிடித்திருக்கிறது. நன்றி தோழரே!

இளங்கோ said...

மிக நல்ல ஆய்வு, இதைப் படித்தவுடன் குமுறுவதற்கு நான் சமயவாதி அல்ல, சமயங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதும், அதன் மீது விமர்சனங்களை வைப்பதும் வரவேற்கப்பட வேண்டியவையே! சமணத்தின் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு! தமிழ் வளர்ச்சியில் அதன் பங்கையே நான் உயர்வாக எழுதியிருந்தேன். இன்றைய அறிவியல் உலகோடு அதை நான் பொருத்திப் பார்க்கவில்லை!

உங்களின் இந்த கட்டுரை பல தேடல்களுக்கு வழி வகுக்கின்றது.

என் அறிவுக்கு எட்டியவரை சில வற்றை மறுக்கின்றேன் ஆசிவகம்தான் தமிழரின் தொன் சமயம் என அறிந்துள்ளேன் இல்லை சைவம்தான் தமிழர்களின் தொன் சமயம் என்றால் அதனை ஒத்துக் கொள்வதற்கு எனக்கு தயக்கம் இல்லை!

கடைச் சங்க காலத்தில் சிவ வழிபாடு இருந்ததில் உங்களுக்கும் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை! தொல்காப்பியக் காலத்தில் அது இல்லை என்பதே எனது வாதம். முருகனைக் குறிக்கும் இடத்தில் கொற்றவை மகன் என்றே தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

சிலப்பதிகாரம் வெறும் இலக்கியம் அல்ல. அது ஒரு காலக் கண்ணாடி அன்றைய தமிழகத்தின் நிலையை அது படம் பிடித்துக் காட்டியது. அந்த வகையில் அப்போது இருந்த அனைத்து சமயங்களின் குறிப்புக்களும் அதில் உள்ளன. ஆசிவகம், ஏன் வைதீக சமயமான வேத சமயத்தின் குறிப்புகளும் உள்ளன, சைவத்தைப் பற்றியும் வைணவத்தைப் பற்றயும் குறிப்புக்கள் இல்லை! மால் வழிபாடு தொல்காப்பியத்தில் உள்ளது. ஆனால் திருமாலை வைத்து ஒரு சமயம் உருப் பெறவில்லை!

தற்போது தமிழகத்தில், மதுரைவீரன் வழிபாடு உள்ளது, ஆனால் அவரை வைத்து ஒரு சமயம் உருவாகவில்லையல்லவா அது போலவே!

சைவமும் அதுபோலவே!

உங்களது கட்டுரையில் என்னை கருஞ்சட்டைக் காரர் சமண அபிமானி என்றெல்லாம் எழுதியுள்ளீர்கள். சமணத்தின் மீது மட்டுமல்ல பெரியார் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபோது பெரியார் போதிய அக்கறையைக் காட்டவில்லையே என்ற ஆதங்கம் நிறையவே உண்டு!அதற்காக அவரது பணியை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது! பெரியாரைத் தவிர்த்து இருபதாம் நூற்றாண்டுக்குப் பிந்திய தமிழரின் வரலாற்றை எழுத முடியாது.

உங்களின் கட்டுரைக்கு சரியான விளக்கம் பின்னாட்களில் கொடுக்கிறேன்.சில தேடல்கள் அவசியம்.

எதையும் திட்டமிட்டு மறைக்க முயற்சிக்கவில்லை! நான் தேடிய தரவுகளில் இருந்தே தகவல்களைப் பெற்றேன்! குறிப்பாக சிவ வழிபாடு தமிழரின் தொன்மையான வழிபாடு அல்ல என்பது பேரா.க. கைலாசபதியின் 'பண்டைத் தமிழர் வாழ்வும் மதமும்' என்ற நூலில் இருந்து பெறக்கூடியதாக இருந்தது.

சமணத்தை சைவம் அழித்தது என்றால் ஆசிவகத்தை பெளத்தமோ சமணமோதாம் அழித்திருக்க வேண்டும் என்ற உங்களின் கேள்வி நியாயமானதே!

'ஆசிவகம் அழிந்துபோன தமிழர் சமயம்' என்று போராசிரியர் நெடுஞ்செழியன் எழுதிய நூல் ஒன்று உள்ளது. அதனைப் படிக்கும் காலச் சூழல் எனக்கில்லை. தமிழறிஞர் யாரிடமாவது கேட்டு நேர்மையான பதிலை தருகிறேன்.

உங்களின் கட்டுரை எனக்குப் பிடித்திருக்கிறது. நன்றி தோழரே!

ANGOOR said...

தமிழர்களுக்கு & அடியார்களுக்கு உதவும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள், உங்கள் வலைத்தளம் மூலம் நிறைய தெரிந்துகொண்டேன்.மேலும் என் வலைத்தளத்தில் தேவாரம் & திருமுறை பாடல்களை ஏற்றி வைத்துள்ளேன், அதை பதிவிறக்கம் செய்து கேட்கவும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு கொடுக்கவும் ,

தேவாரம் & திருமுறை பாடல்கள் இலவசமாக கேட்க & பதிவிறக்கம் செய்ய :
www.devarathirumurai.blogspot.com

www.devarathirumurai.wordpress.com

நன்றி
தர்மா

krishguna said...

ஓம் நமசிவாய சிவாயநம ஓம் !!!

தென்னாடுடைய சிவனெ போற்றி !
என்னாட்டவற்க்கும் இறைவா போற்றி !

மென்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்
ஹரஹர நம பார்வதி பதயே
ஹரஹர மஹா தேவா !!!

Mayuram Swami said...

"அன்பே சிவம்".

இந்த கட்டுரை "பொற் தகட்டில்" பொறித்து காக்க வேண்டிய ஆய்வு பெட்டகம்.

தரவிறக்கம் செய்து கொண்டேன்....

அந்நாளைய சமணம் இன்றைய திராவிட கட்சிகளாக திரிகின்றன......

"குருடும் குருடும் சேர்ந்து குருட்டாடம் ஆடியது போல்", சமணமும் / பெளத்தமும் - தற்கால திராவிட கட்சி கூட்டங்களும் திரிகின்றன....

Post a Comment