"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, July 31, 2010

தேவாரம் மின்னப்பலத்தளம்- சைவர்களின் பாக்கியம்

இணையத்தில் சைவத்திருமுறைகள் பன்னிரண்டையும் மற்றும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் முழுமையாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெற்றுக்கொள்ள வழிசமைத்துள்ளது தேவாரம் மின்னம்பலம். தெலுங்கு,மலையாளம் போன்ற ஏனைய இந்திய மொழிகளில் ஒலிபெயர்ப்புகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் இரசியன் மொழியிலும் ஏனைய சர்வதேச மொழிகளிலும் ஒலிபெயர்ப்புகள் காணப்படுகின்றன.
தமிழ்ப் பொழிப்புரைகள் சைவத்தமிழ் உலகம் செய்த தவப்பயன்.!

இதோ தேவாரம் மின்னம்பலத்தளத்தின் உரலி:-
http://www.thevaaram.org/

சைவ உலகிற்கு கிடைத்த பேறாகிய தேவாரம் மின்னம்பலத்தளத்தை நிறுவி காக்கும் சிவப்பணி புரியும் சிவனடியார் மறவன்புலவு.க.சச்சிதானந்தன் ஆவார். சிவநேயச் செல்வர் மறவன்புலவு.க,சச்சிதானந்தன் ஐயா சிவனடியார் கூட்டத்திற்கு பெருமைகூட்டும் மெய்யடியார் என்பதை அவரது சைவத் தமிழ்ப் பணிகள் எடுத்தியம்புகின்றன.அவரது பெயரை இப்பதிவில் எழுதும்போது உடலெல்லாம் ஒரு மின்னல் அலை உருவாகியது. நல்லூழ் காரணமாக மெய்யடியார் கூட்டத்தை நினைக்கும் பேறு பெற்றமையை உருவாகிய ஆன்மீக மின்னலை உணர்த்திற்று.

சிவனடியார் சிவநேயச்செல்வர் மறவன்புலவு.க.சச்சிதானந்தன் ஐயாவுக்கு அம்மை சிவகாமியுடனாய அப்பன் எம்பெருமான் சிவபெருமானின் திருவருள் என்றும் உண்டு.

அண்ணாகண்ணன் என்னும் அன்பர் மறவன்புலவு. க. சச்சிதானந்தன் ஐயா பற்றி எழுதியுள்ள குறிப்பை இங்கு தருகின்றேன்.

தமிழுக்கும் தமிழருக்கும் நாளும் பொழுதும் வலிவும் பொலிவும் சேர்க்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்கள், கார்த்திகை 17ஆம் நாள், மிருகசீரிட நடத்திரத்து அன்று (டிசம்பர் 3ஆம் தேதி) பிறந்த நாள் காண்கிறார். ஆங்கில நாட்காட்டியின்படி இவர் பிறந்த நாள், டிசம்பர் 5ஆம் நாள் என்றாலும் தமிழ்  நாட்காட்டியின்படி இவர் பிறந்த நாள், டிசம்பர் 3ஆம் தேதியே.

நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; ஐ.நா. உணவு - வேளாண் கழக முன்னாள் ஆலோசகர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம் (http://www.tamilnool.com), தேவாரம்.ஆர்க்
(http://thevaaram.org) தளங்களின் நிறுவனர் - வழிகாட்டி - காப்பாளர்; அண்மையில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர்....... எனப் பற்பல பெருமைகளுக்கு உரியவர், நம் சச்சிதானந்தன்.

ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு: The Photosynthesis Day என்பதாகும். இத்தகைய அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர், இவர்.

தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டபூர்வ - தனி நபர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்துள்ளவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டும் வண்ணம்
செயலாற்றி வருகிறார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டவர்.

எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி.

புதிய சிந்தனைகள், ஆக்கபூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழிநடை..... ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார்.

மனிதன், மரணத்தை வெல்லும் நாள் நெருங்கி வருவதால், ஒரு நூற்றாண்டு வாழ்க என்பதே கூட சுருக்கமாக வாழ்த்தாகலாம். எனவே சச்சிதானந்தன், காலத்தை வென்று வாழ்க என வாழ்த்துகிறேன்.

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்
நன்றி: -http://groups.google.co.in/group/mintamil/browse_thread/thread/1bd917bebed25efc

ஐயாபற்றி மேலும் அறிய http://sachithananthan.blogspot.com/  என்னும் வலைப்ப்பூ உதவுகின்றது.

சைவக்கட்டுரைகளை, சைவசமயத் தேடல்களில் மூழ்கும்போது மறவன்புலவு.க.சச்சிதானந்தன் என்னும் திருப்பெயர் பலமுறை என் விழிகளில் பதிந்தபோதெல்லாம் அவர் பெரும் சைவ அறிஞர் என்றே என்னுள் தோன்றிற்று, ஆனால் அவர்பற்றிய தேடலில் மூழ்கியபோது ஒப்பில்லா சிவனடியார் என்பதை உணர்ந்துகொள்ளும் பேறு பெற்றேன். 

பலமொழிகளில் பன்னிரு திருமுறைகள் என்னும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை கீழே உள்ள இணையத்தளத்தில் காணலாம்.
http://groups.google.co.in/group/mintamil/browse_thread/thread/a1673ed85d1a14fd/1c8010604f9a0604?#1c8010604f9a0604

சைவத் திருமுறைகள், பன்னிரு சைவசித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றை இணையத்தில் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏதுமில்லாது செய்த தேவாரம் மின்னம்பலம்தளத்தை பல்லாண்டு பாடி வாழ்த்துவோமாக.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தேவாரம் மின்னப்பலத்தளம்- சைவர்களின் பாக்கியம்"

Post a Comment