"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Sunday, November 8, 2009

திருவள்ளுவரின் திருநெறி மேன்மைமிகு சைவநீதி

"புலவர் திருவள் ளுவர் அன்றிப் பூமேல்
சிலவர் புலவர் எனச் செப்பல் - -நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள்மா லைக்கும் பெயர்" - மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழார்

"Tirukkural is the life, Tiruvasagam is the heart, and Tirumandiram is the soul of Tamil culture..." - Swami Shivanada -On the Tirukkural
நம் செந்தமிழ்ச் சைவ நூலாகவும் உலகப் பொதுநூலாகவும் விளங்கும் திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாம் இடத்தில் உள்ள மேன்மையைக் கொண்டது.



தமிழ்மறை,பொதுமறை,பொய்யாமொழி,வாயுறை வாழ்த்து, தெய்வ நூல்,முப்பால் நூல், உத்தர வேதம் என்று பலவாறு அழைக்கப்படும் திருக்குறளை சமணநூல் என சிலர் சொல்வார்கள். நாத்தீகவாத அரசியலின் ஆற்றாமையில் உருவாகிய கதையே இது. இன்று ஒருசில கிருஷ்தவ போதகர்கள் திருவள்ளுவர் தொட்டு ஔவையார்வரை கிருஷ்தவர் என்றும் சைவ சித்தாந்த நூல்கள் யாவும் ஆதிக் கிருஷ்தவத்துள் ஆரியம் கலந்ததால் விளைந்தவை என்றும் கதைகட்டித் திரிகின்றார்கள். பணபலம் கொண்ட இவர்கள் நாத்தீகவாதப் பீடங்களை தமக்கு தலையசைக்க வைத்துமுள்ளனர். எனவே இத்தருணத்தில் திருக்குறள் சித்தாந்த சைவநூலே என்பதை தெளியவைக்க வேண்டியது காலக்கடமை!

"அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்" என்கிறார் ஔவையார்.

"வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி " என்கிறார் மனோன்மணியம்

நாத்தீகவாத அரசியல்வாதிகள், திருக்குறளுக்கு ஏற்பட்ட மதிப்பை உணர்ந்து, திருக்குறளை எதிர்க்க முடியாது போகவே சமண சமயநூல் என புரளியைப் பரவவிட்டு அரசியல்மேடைகளில் அப்புரளியை அடிக்கடி ஆயிரம் தடவைகள் உண்மையென கூவி தமது ஆற்றாமையை சோற்றுக்குள் மறைத்த முழுப்பூசணிக்காயாக்கிவிட்டனர். திருக்குறளை ஆரியக் கருத்துக் கொண்ட நூல் என்றும் பகுத்தறிவுபற்றிக் கவலைப்படாமல் எழுதிய நூல் என்றும் பெரியார் எனப்படும் ஈ.வே.ராமசாமியார் தனது குடியரசு இதழில் குறிப்பிட்டுள்ளமையை அறியக்கூடியதாகவுள்ளது. ‘‘அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்" -20.01.1929 குடியரசு இதழ். ஆனாலும் பின்னர் திருக்குறளின் மகத்துவத்தை உணர்ந்த நாத்தீகவாத பெரியாரிசத்தால் அதை சைவநூல் என்பதை ஏற்றுக்கொள்ளும் திறனில்லாது போய்விடவே, சமண நூல் என்பதுபோலவும், பொதுநூல் ஆதலால் கிருஷ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக எதுவுமே இந்நூலில் இல்லை என்றும் இது இந்துமதக் கண்டன நூல் என்றும் கதைகட்டி விட்டனர். 14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் ‘‘(திருக்குறளில்) எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துக்களுக்கும் அதில் இடமில்லை" என்றும் ‘‘திருக்குறள் ஆரிய தர்மத்தை - மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்" என்றும் பெரியார் கூறியுள்ளார்.

23,24.10.1948 திராவிடர் கழக 19-வது மாநாட்டில், ‘‘குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்" "குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். நீங்களும் (கிறிஸ்தவர்கள்) குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாகக் குறளில் ஒன்றும் கிடையாது" என்றும் பெரியார் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் திருக்குறளை எதிர்த்த பெரியார் பின்னர் திருக்குறளை கிருஷ்தவர்க்கும் இஸ்லாமியருக்கும் ஏற்றநூல் என்றும் ஆரிய எதிர்ப்பு நூல் என்றும் தனது கருத்தை மாற்றியமை திருக்குறள் உள்ளவரை வேதநெறியை எதிர்க்கமுடியாது என்று உணர்ந்தமையை புலனாக்கிறது. இந்துமதம் என்பதும் இந்துத்துவா என்பதுவும் அழகுத் திருநெறிச் சைவத்துக்கு நன்மையை ஊட்டாதவை என்பதை ஏலவே பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டியுள்ளேன். இந்துமதம் என்னும் பெயரில் இன்று அறிமுகப்படுத்தப்படுகின்ற ஸ்மார்த்தம் வேறு. தென்னாட்டுச் சைவநெறி வேறு. இந்த வேறுபாடுகளை உணரக்கூடிய தெளிவு பெரியாரிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலையடிகள் தொட்டு, தனித் தமிழ் இயக்கத்துக்காய் உழைத்தவர்கள் சைவச் சான்றோர்களே என்ற உண்மையை புரிந்துகொள்ளும் ஆற்றல் பெரியாரிடத்தில் இருக்கவில்லை. தமிழரிடம் இலக்கியம் எதுவுமே இல்லை என்ற மனநிலையில் இருந்த பெரியாருக்கு இந்த அருமையை உணர முடியாமல் போனதில் வியப்பெதுவும் இல்லை. ஆனால் அரசியல் பலத்துடன் இருந்த நாத்தீகவாதம் தனது ஆற்றாமையில் உருவாக்கிய "சமணநூல்" என்னும் பதத்தை அற்புதமாக தமிழரிடம் பரவச்செய்திட்டு!

இஸ்லாமியர் திருக்குரானுக்கு இணையாக கருதும் திறன் திருக்குறளுக்கு இல்லை எனவும் பொதுமறையாகக் கருதமுடியாது எனவும் வெளிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி பெரியார் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை. கிருஷ்தவரில் திருவிவிலியத்தை ஆழமாய் நம்புகிறவர்கள் மறுத்துவிட்டனர். பொதுமறையாகக்கூட ஏற்கவில்லை.எனினும் கிருஷ்தவ மதத்தை ஒழுகும் தமிழ் இலக்கியப் பற்றாளர்கள் திருக்குறளை பொதுமறை என்பர். ஆனால் சில் விசமப் பிரச்சாரத் தரகுக்கூட்டத்தார் கிருஷ்துவின் அருளால் திருவள்ளுவர் எழுதிய நூல் என்று பிதற்றுகின்றனர்.ஆக; சைவரின்மேல் மட்டும் பெரியாரிசம் திணித்த ஒன்றே திருக்குறள் சைவநூல் அல்ல என்க.

திருக்குறளை சொந்தம் கொண்டாடினால் தமிழில் நிலைத்திருக்கலாம் என கனவுகாணும் கிருஷ்வ விசமிகள் சிலர், தோமஸிடம் அருள்பெற்று வள்ளுவர் எழுதிய நூல் என்று நகைச்சுவை நாடகத்தை தமிழகத்தில் அரங்கேற்றியவண்ணம் உள்ளனர். தோமஸ் என்பவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதை கத்தோலிக்கபீடம் ஏற்கவில்லை. ஏனெனில் ஆதாரம் ஏதுமில்லை. தோமஸ் தமிழகத்துக்கு வந்தார் என்றும் அவர் திருவள்ளுவருக்கு போதித்தார் என்றும் கதையைக்கட்டிவிட்டனர் ஆங்கிலேய காலத்தில் தமிழ்கற்று கிருஷ்தவம் பரப்பிய பாதிரிகள். வரலாற்றுரீதியில் வராத ஒருவருக்கு வந்ததாக வைத்து படம்கூட எடுக்க இருந்தமையும் அதுபற்றிய விழாவில் கருணாநிதி தமிழக முதலமைச்சர் பதவியோடு பங்குபற்றி அவ்விழாவுக்கு அங்கீகாரம் அளித்தமையும் வெட்கக்கேடு! வராத ஒருவரை வந்தார் என நம்புவதுக்குப் பெயர்தான் மூடநம்பிக்கை! கருணாநிதியும் மூடநம்பிக்கைகளை விரட்ட முனைகிற கழகங்களும் இந்த மூடநம்பிக்கையை நம்புவது அவர்களது கொள்கையின் இழிநிலை என்க. இதற்கு கருணையில்லாத நிதியாகிய கருணாநிதி விலைபோனதில் வியப்பில்லை.
ஜீ.யூ.போப் தனது திருவாசக மொழிபெயர்ப்பு முன்னுரையில் சேர்ச்சில் மாணிக்கவாசகர் தன்னுடன் நிற்பதுபோலவும் முழந்தாளிட்டு வழிபடுவது போலவும் யேசுநாதரின் அடிச்சுவட்டைக் கண்டு மாணிக்கவாசகர் பின்பற்றியிருப்பார் என்றும் இல்லாவிட்டால் அவருக்கு எவ்வண்ணம் இத்தகு உருக்கம் இருக்கமுடியும் என்றும் அத்துடன் இவருடன் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகள் ஆகியோர் யேசுநாதரின் சரிதத்தை அறிந்துதான் இருப்பார்கள் என்றும் குறிப்பிடுகின்றார். அதாவது கிருஷ்தவாசத்தாலேயே மெய்யுணர்வு பெற்றதாக சுட்டுகிறார். தமிழின் சிகரங்களாகவுள்ள திருவாசகம், திருக்குறள் மற்றும் நாலடியார் என யாவற்றையும் கிருஷ்தவ தொடர்பின் விளைவு என்று ஜீ.யூ.போப் சொல்லியது "திருவாசகமும் திருக்குறளும் "சைவநெறியோடு பிணைந்துள்ளவரை கிருஷ்தவத்தை முழுமையாகப் பரப்ப முடியாது என்பதை உணர்ந்தே!

திருக்குறளை சைவநெறியில் இருந்து பிரித்து சமணநூல் என்று ஆரம்பத்தில் கதைபரப்ப பெரியாருக்கு உழைத்தது இக்கிருஷ்தவ விசம தரகுக்கூட்டம் எனலாம்.இரண்டாவதாக இப்போது வந்திராத தோமஸுடன் திருவள்ளுவருக்கு உறவுப்பாலத்தை ஊட்டுகின்றது தனது பணபலம் கொண்டு!

பெரியார் "திருக்குறளின் முதலாவது அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதை மாற்றி மனித இனத்தின் குறிக்கோள் என்று அதற்குத் தலைப்புத் தரவேண்டும்" என்று வேண்டியதாக க.அப்பாத்துரையார் குறிப்பிட்டுள்ளமை கடவுள் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையில் பெரியார் இருந்துள்ளார் என்பதைப் புலனாகின்றது. ஆரியர் இடையில் கலப்படம் செய்துவிட்டனர் என்று கதறுகின்ற பெரியார்வாதிகள் பெரியார் செய்யமுயன்ற கலப்படத்தை என்னவென்று சொல்வார்கள்? இன்னொருவரிடம் இவ்வண்ணம் வேண்டியவர் "தனது கொள்கைக்காக எவ்வளவு கலப்படம் செய்து பொருளை திரிவுபடுத்தி பேசியிருப்பார், எழுதியிருப்பார்" என்பதையும் உய்த்துணரலாம்.

பாரதிதாசன், சைவ சித்தாந்தத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு படித்தால், திருவள்ளுவருடைய கருத்துக்குப் போகலாம் "என்று குறிப்பிட்டார் என க.அப்பாத்துரையார் குறிப்பிடுகின்றார். இதிலிருந்து பாரதிதாசனும் சைவ சித்தாந்த நூலே திருக்குறள் என்று ஒப்புக்கொண்டமையை உணரமுடிகின்றது.

"அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பார் அவர்" என்பது திருக்களிற்றுப்படியாரில் (சைவ சித்தாந்த சாத்திர நூல்) கடவுள் வாழ்த்து பாடலாகும். உமையம்மை உடனாய அப்பனாகிய சிவமே உலகத்தாருக்கு அம்மையப்பர். அம்மையப்பராக வந்தே துணை செய்வர். எல்லா உலகத்துக்கும் அப்பாலும் இவ்வுலகில் இல்லாததுபோலும் தோன்றுவர். "ஆதி பகவன் முதற்றே உலகு" என வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஏலவே இதே சைவ சித்தாந்த கருத்தை முன்வைத்துள்ளார். ஆனால் நாத்தீகவாதபீடங்கள் பகவன் என்பது சமணச் சொல் என்றும் தனது அம்மாவாகிய ஆதியையும் தனது அப்பாவாகிய பகவனையும் பாடுகின்றார் என்றும் பிதற்றுவர்.

உலகப் பொதுமறையை இயற்ற விளைந்தவர் தனது சொந்த தாயையும் தந்தையையும் கடவுள் வாழ்த்தில் சுட்டுவார் என்பது எவ்வளவு அறியாமை! கடவுள் வாழ்த்தில் தமிழிலக்கியங்களில் எந்தவொரு ஆசிரியரும் இவ்வண்ணம் சுட்டியது இல்லை. ஆனால் திருவள்ளுவர் வழமைக்கு மாறாக உலகப் பொதுமறையாக இயற்றுகின்ற நூலில் சுட்டினார் என்பது நாத்தீகவாத கதைகட்டலில் ஏற்பட்ட பெரிய ஓட்டை என்க.

அந்நிய பண்பாட்டுச் சொற்கள் ஏராளமாக இன்று தமிழுக்குள் வாழுவது கண்கூடு. பகவன் எனும் சொல் சமணத்துடன் தொடர்பானதாயின் அது சமண நூல் ஆகிவிடுமா என்ன? இன்று வேதம்,வேதாகமம்,வீபூதித் திருநாள் என்பன கிருஷ்தவத்துள் புழக்கத்தில் இருப்பது கண்கூடு! சமண சமய அறிமுகத்தால் தமிழில் அச்சொல் புழக்கத்தில் இருந்தமையால் வள்ளுவர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டல்லவா? ஏனெனில் சமணநூலே திருக்குறள் என்பதற்கு எந்தவித சிந்தனையும் இன்றி இதையே சுட்டுகின்றனர்.

திருக்குறளுக்கு சமண நூல் எனும் மாயை சூட்டியவர்கள் மறுபிறப்புக் கொள்கையை மறந்துபோனது ஏனென்று விளங்கவே இல்லை. எண் குணத்தான் என கடவுளை திருக்குறள் கூறுகின்றது. நக்கீரர்,ஔவையார்,இடைக்காடர் எனப் பல சைவப் புலவர்களால் போற்றி புகழப்பட்ட நூலே திருக்குறள். சமண, பௌத்தப் புலவர்கள் திருவள்ளுவரையோ அன்றி திருக்குறளையோ போற்றிப் புகழ்ந்ததாக இட்டுக்கட்டிக்கூட காட்டமுடியாது.

அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் கோட்பாட்டில் முதல் மூன்றையும் விளக்கியுள்ளார் வள்ளுவர், எல்லா சமண நூல்களும் காமத்தை துறந்து துறவை நாடுவதில் முடிகின்றன.திருக்குறள் காமத்துப்பாலுடன் அல்லவா முடிகின்றது! வீடு பேற்றை விளக்கினால் சமய பொதுத்தன்மைக்கு இடைஞ்சல் ஆகிவிடும் என கருதியிருக்க வாய்ப்புண்டு.ஆனால் சைவ சித்தாந்தக் கருத்துகளை தவிர்க்காமல் எழுதமுடியவில்லை. சைவத்தை திணிக்கும் எண்ணம் சைவரிடம் இருந்ததில்லை. இதனாலேயே இந்தோனேசியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் சைவம் தழைக்கவில்லை. பொதுநூலாக எழுத வெளிக்கிட்டபிறகு சிவன் எனும் பெயரை தவிர்த்திருப்பார் வள்ளுவர்.

சமணத்தின் உட்பிரிவுகள், பௌத்தத்தின் உட்பிரிவுகள் எவற்றோடும் திருக்குறளுக்கு சம்பந்தம் இல்லை என்பதையும் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனப்தையும் திருவாவடுதுறை ஆதீனம் தெளிவாக விளக்கியிருந்தும் அரசியல் பலம், பணபலமாகியன அற்றதனால் மக்களை சென்றடையாமல் அக்கருத்துகள் உள்ளன.

"தேருங்கால்
உன்னை ஒழிய உறவு இல்லை என்னும் அது
தன்னை அறிவைத் தனிஅறிவை - முன்னம்
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை அவர் என்று - நிலைத் தமிழின்
தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த
மெய் வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கும் ஆவதுவே
செய்து அங்கு அவர்வழியைத் தப்பாமல்
பாவம் எனும் பௌவப் பரப்பு அழுந்திப்"

ஆராய்ந்து பார்க்கும்போது கடவுளாகிய உன்னைத்தவிர எனக்கு யாரும் உறவில்லை என்னும் கருத்தை, பசு ஞானம் எனப்படும் ஆன்மாவின் அறிவையும், பதி ஞானம் எனப்படும் பரம்பொருளின் மேலான மெய்யறிவையும் முன்பு எய்தியவர்கள் கூறினர்.இவ்வுடலையும் இவ்வுலக வாழ்வையும் முற்றாகத் துறந்தவர்களான அவர்கள் கூறிய இத்தகைய உண்மைகளை உணராதவர், மயங்கி மாயைகளின் வலையில் பட்டவர் என்று கூறிய தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் மெய்யான கருத்தையும் அறிந்து கொள்ள விரும்பாமல், ஐந்து புலன்களுக்கு விருப்பமானதையே செய்து, அவை காட்டும் வழியில் மட்டும் தவறாது நடந்து பாவக்கடலில் மூழ்கி வருந்துவார் என சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகப் போற்றப்படும் நெஞ்சுவிடு தூதுவில் உமாபதி சிவாச்சாரியார் திருவள்ளுவரையும் "தலைப்பட்டார் தீரத்து றந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்" என்னும் குறளையும் பயன்படுத்தி திருக்குறளை சைவநெறியுடன் சமபந்தஞ் செய்துள்ளார்.

சைவ சித்தாந்த சாத்திர நூல்களின் ஒன்றாகிய திருக்களிற்றுப்படியாரில்;

"அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பறிப்பீனும் விந்து"

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்" என்னும் குறள்களை;

"வேண்டும்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின் அஃது ஒன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்ட வரும் என்றமையால்
வேண்டிடுக வேண்டாமை வேண்டும் அவன்பால்"

என்னும் பாடலில் மேற்கோள்களாக காட்டப்பட்டிருப்பதும் திருக்குறள் சைவ சித்தாந்த நூலே என்பதை எளிதாகப் புலனாக்கின்றது.

"சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்று
ஆவி அறாதே என்று உந்தீபற
அவ்வுரை கேளாதே உந்தீபற" என்கிறது சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகிய திருவுந்தியார். உள்ளீடு இல்லாத பிறசமயங்களில் சென்று ஆவியை இழந்து மீண்டும் பிறப்பை ஏற்கக்கூடாது. அவற்றின் உரைகளைக் கேட்டுக் காலம் கடத்தல் கூடாது என்கின்றது. எனவே உள்ளீடு இல்லாத சமயங்களின் உரைகளை அச்சமயங்களின் நூல்களை படித்து கேட்டு காலத்தை வீணாக்குவது தவறு என்கின்ற சைவ சித்தாந்த மரபில் திருக்குறளை எடுத்துக்காட்டுகளாக நேரடியாக பயன்படுத்தியிருப்பதில் இருந்து திருக்குறள் சமணநூல் அல்ல என்பதும் சைவநூலே என்பதும் தெளிவாகிறது.

"நீறில்லா நெற்றி பாழ்" என்றும் "சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை" என்றும் உரைக்கின்ற நல்வழி நூலின் கடைசிப் பாடலாக ஔவையார்,
"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம் என்று உணர்" என்கிறார்.

திருவள்ளுவரின் திருக்குறளும் உயர்ந்த நான்கு வேதங்கள் உணர்த்தும் முடிவான பொருளும், தேவார முதலிகளாகிய திருஞான சம்பந்தர்,சுந்தர மூர்த்தி நாயனார், அப்பர் பெருமான் ஆகியோரின் தேவாரங்களும் மாணிக்கவாசகப் பெருமான் பாடியருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் திருமூலநாயனாரின் தமிழாகமம் எனப்படும் திருமந்திரமும் ஒரே பொருளை உணர்த்தும் நூல்கள் என உணர்வாயாக" என்று பாடுகின்றார்.

அதாவது திருநெறிச் சைவ சித்தாந்தந்த தோத்திர நூல்களான தேவாரங்கள், திருவாசகம், திருக்கோவையார்,திருமந்திரம் போன்றவற்றுடன் திருக்குறளையும் இணைத்து ஔவையார் சுட்டுவது, அவருக்கு ஏலவே இருந்திருந்த "முற்காலம்" உணருகின்ற யோகசித்தியையே காட்டுகின்றது எனலாம்.

"உணர்வாயாக" என்று ஔவையார் யாரையோ சுட்டிச் சொல்வது போல் உள்ளமையை இங்கு கவனிப்பீர்களானால் அது யாரை என்பது தெளிவாகப் புலனாகும். நாத்தீக அரசியலில் திருக்குறளை சைவநூல் அல்ல என்று கூசாது பொய்யுரைத்த பெரியார் தொட்டு அவரது பிள்ளைகள் என துடிக்கின்ற கருணையில்லா நிதி மற்றும் வீரமணி அடங்கலாக மதம்பரப்புதல் என்ற ஒரே குறிக்கோளுக்காய் தமது மதத்தையே விற்கத் துணிந்த ஒருசில கிருஷ்தவ விசமிகள் வரைக்கும் உள்ள அறிவற்ற அரசியல் மதபோதை பிடித்தவர்களுக்கே என்க.

சைவ சித்தாந்த புறச் சந்தான குரவர்களுக்கும் சரி, ஔவையாருக்கும் சரி, மற்றும் ஏனைய புலவர் பெருமக்களுக்கும் சரி, திருக்குறள் சமணநூல் என்றால் அதை சைவநூலாக்க வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. அதேவேளையில் அத்தகைய இழிவான பண்பாடு அன்றைய தமிழ்ப் புலவர்களிடம் இருந்திருக்கவில்லை. பெரியாரின் வழியில் உருவாகிய அரசியல் பண்பாடே இத்தகு இழிநிலையை தமிழில் அறிமுகப்படுத்தியது.சில கிருஷ்தவ தரகர்கள் தொடருகின்றனர்.

"ஓதுசம யங்கள்பொருள் உணரு நூல்கள்
ஒன்றோடுஒன்று ஒவ்வாமல் உளபலவும் - இவற்றுள்
யாதுசம யம்பொருள்நூல் யாதிங்கு என்னின் இதுவாகும்
அதுஅல்லது எனும்பிணக்கம் இன்றி நீதியினால்
இவைஎல்லாம் ஓரிடத்தே காண நின்றதுயாதொருசமயம்
அதுசமயம் பொருள்நூல் ஆதலினான் இவைஎல்லாம்
அருமறைஆ கமத்தே அடங்கியிடும்
இவைஇரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்"

உலகில் உள்ள சமயங்களும் அவற்றின் கொள்கைகளை விளக்கும் நூல்களும் தமக்குள் முரண்பட்டனவாக உள்ளன. இவற்றுள் சிறந்த சமயம் எது? சிறந்த நூல் எது? என வினவினால், விடையாக இது அது ஆகும் அது இது ஆகும் என்று குழம்பாமல், எல்லாக் கொள்கைகளும் உரியமுறையில் உரிய இடத்தில் இருப்பதைக் கூறுவதே சரியானதாகும்.அவ்வாறான சமயம் சிறப்பான சமயம்.அத்தகு நூல் சிறப்பு வாய்ந்த நூல்.எனவே இத்தகைய சைவ சமயக் கொள்கைகளே அரிய வேதத்திலும் ஆகமங்களிலும் அடக்கம்.இவை இரண்டும் இறைவன் திருவடிகளை விளக்கி அங்கு அடங்கும். சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகிய சிவஞானசித்தியார் அழகாக அருமையாக உலகில் உள்ள எல்லா சமயங்களின் கருத்தையும் தன்னகத்தே கொண்ட ஒருநெறி எனின் அது சைவநெறி என விளக்கியுள்ளார். எனவே இத்தகு நெறியில் பூக்கும் எந்த நூலிலும் பிறசமயத்தவர் தமது சமயக் கருத்துகளை மட்டும் சுட்டிக்காட்டி, தமது சமயக் கருத்தைக் கொண்ட நூல் என வாதிட இடமுண்டு. தற்போது இது கண்கண்ட காட்சி! கிருஷ்தவ விவிலியக் கல்லூரிகள் தொட்டு கிருஷ்தவ பள்ளிவரை தமிழகத்தில் திருக்குறள், சைவ சித்தாந்த நூல்கள்,நாலடியார், ஆத்திசூடி என்பன கிருஷ்துவின் அருளைப் பெற்று எழுதிய நூல்கள் என நச்சுக் கருத்தை விதைக்கின்றனர். ஜீ.யூ.போப் ஏலவே திருவாசகத்தை கிருஷ்துவின் அருளையுணர்ந்து எழுதிய நூலென சுட்டியுள்ளார். இவற்றுக்கெல்லாம் சைவ நூல்கள் பொதுநூல்களாக விளங்கும் உன்னத உயர்ந்த தன்மையே காரணம்.

எனவே உலகப் பொதுமறையாக சைவநெறி வழங்கிய திருக்குறளை எளிதாக இந்த விசமிகள் திரிவுபடுத்தி சமணநூல், பௌத்த நூல், கிருஷ்தவ நூலென எளிதாக கதைபரப்பக் கூடியதாகவுள்ளது. சமண, பௌத்த,கிருஷ்தவத்தவர்களுக்கு உலகில் உள்ள எல்லா சமயங்களையும் சமயங்கள் என ஏற்கின்ற உணர்வுநிலை இருந்தமைக்கான அல்லது இருக்கின்றமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை. எனவே இத்தகு சமய உணர்வுடன் நூல்யாக்க முனைபவர் நேரடியாகவே தமது சமயநிலையை உயர்த்தி எழுதியிருப்பர். ஆனால் திருவள்ளுவர் பெருமானார் சைவநெறி ஒழுகி,அதன் பயனாக உலகுக்கு பொதுமறையாக நூல்யாக்க விளைந்து யாத்தநூலே திருக்குறள் என்பது திண்ணம்.

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்ற சமயசார்பற்ற தன்மை கொண்டு இதை உறுதிசெய்வர். தமிழ் தாத்தாவும் இதனை ஒப்புக் கொண்டுள்ளமையை அறியக்கூடியதாகவுள்ளது. எனவே சமயசார்பற்ற இலக்கியங்கள் படைப்பதற்கு சைவநெறி வாழ்வே பக்குவத்தை வழங்கியுள்ளதை உய்த்துணரலாம்.

இன்று மதசார்பற்ற நாடக இந்தியா விளங்குகின்றதெனில், நாத்தீகம் பேசி;வேதநெறி,சைவ நெறி என்பவற்றை உணராது அரசியலுக்காய் எள்ளி நகையாடுகின்ற கருணையில்லா நிதி அரியணையை மீண்டும் மீண்டும் சுகிக்க ஏதுவாயிருப்பதும் சமயசகிப்புணர்வுச் சால்பை சைவப் பெருமக்களும் வேதப் பண்பாட்டு மக்களும் பெற்றுள்ள ஒரேயொரு காரணத்தால் என்பது வெள்ளிடைமலை!

"தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறமுதலா அந் நான்கும் - ஏனோருக்(கு)
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என் ஆற்று மற்று"
- நக்கீரனார்

புளுகு பலநாளுக்கு தாக்குப்பிடிக்காது என்பர். எத்தனை காலத்துக்கு நாத்தீவ வாதப் புளுகுகள் தாக்குப்பிடிக்கின்றது என்று பார்ப்போம்!!!!!!

குறிப்பு:- திருக்குறள் ஏனைய சமயங்களுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கொண்டது என்பதையும் சைவ சித்தாந்த நூலே என்பதையும் திருக்குறளை ஆராய்வுசெய்து வாலையானந்த அடிகள் 1926- 27களில் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்த திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்னும் நூல் மெய்கண்டதேவரின் குருபூசையன்று மறுபதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது. இந்நூலை இணையத்தில் திருவாவடுதுறை ஆதீனப் புலவர் தமது இணைய முகவரியில் ஏற்றியிருந்தார். எனினும் இன்று யாகூ தற்காலிகமாக தமது இலவச சேவையை நிறுத்திக் கொண்டதனால் அவ்விணைய முகவரி செயலிழந்துவிட்டது. எனினும் பிரிதொரு இணையவசதியூடாக ஆறுமுகநாவலர் என்னும் பெயரில் அன்பர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.குறித்த வலைத்தளத்திற்கு சென்று இந்நூலைப் படித்துப் பயனடையலாம். திருவள்ளுவர் சித்தாந்த சைவர் நன்றி.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"

"தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

21 comments: on "திருவள்ளுவரின் திருநெறி மேன்மைமிகு சைவநீதி"

நிகழ்காலத்தில்... said...

நல்லதொரு ஆய்வுக்கட்டுரை வழங்கியமைக்கு நன்றி

Anonymous said...

அன்பு சிவத்தமிழோன்,

நல்ல கட்டுரை. அறவாழி அந்தணன், மலர்மிசை ஏகினான், ஐந்தவித்தான் போன்ற குறட்களுக்கு சைவ நோக்கில் கட்டுரை வரையுங்களேன்!

இரா.பா,
சென்னை

banukumar_r.blogspot.com

Sathyan said...

நன்றி! அருமையான பதிவு. உங்கள் பதிவிலிருந்து சில குறிப்புக்கள் எடுத்துள்ளேன். வெகு விரைவில் என்னுடைய வலைப்பூவில் ஆசான் திருவள்ளுவர் பற்றி பதிவொன்று இடவுள்ளேன்.

திருவள்ளுவர் 'facebook group'
http://www.facebook.com/group.php?gid=9333357425

Unknown said...

YOUR திருவள்ளுவரின் திருநெறி மேன்மைமிகு சைவநீதி SUPER

சிவத்தமிழோன் said...

அன்பர் இரா.பா அவர்கட்கு,
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள்

மலர்மிசை ஏகினான்:- அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நினைத்திருப்பர்.

“வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த சுவாமிகளின் பாடலை நினைவுபடுத்தின் உள்ளக் கமலத்தையே அக்குறள் குறிப்பதை உய்த்துணரலாம். மலர்மிசை ஏகினான் என்பதை மலரின்கண் நடந்தான்/சென்றான் எனக் கொண்டு புத்தரையோ அல்லது அருக்கரையோ சுட்ட முனைவது பொருந்தாத ஒன்றே! உயர்ந்த பொதுமறையை படைத்த வள்ளுவர் விபுலானந்தர் பாடுவதுபோல் இறைவன் உள்ளமெனும் மலரின்கண் சென்று இருப்பவர் எனப் பொருள் கொண்டே எழுதியிருப்பர். உள்ளம் என்பது எப்போது மலராகின்றது? அன்பு குடிகொள்ளும் போது! எனவே அன்பு குடிகொண்ட உள்ளத்தை நாடிச் சென்று இறைவன் எழுந்தருளி அங்கு குடிகொண்டு இருப்பார் என்பதையே சுட்டுகிறது என்பதில் ஐயமில்லை.

மேலும் சமணநூல்கள், பௌத்தநூல்கள் ஏதேனும் திருவள்ளுவரையோ அன்றி திருக்குறளையோ மேற்கோள்களாகவும் அல்லது நேரடியாகவும் ஏற்கனவே பயன்படுத்தியுண்டா?

மலர்மிசை ஏகினான் என்னும் பதம் மலர்மிசை அமர்ந்தான் என்றால் சைவக் கருத்துக்கு ஏற்றது என்றும் அருக்கரைச் சுட்டாது என்றும் பொருள்படும் வண்ணம் தங்கள் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியானால் மலர்மிசை நடத்தான்/சென்றான் என்று ஏனைய சமணநூல்கள் சுட்டுவதுபோல் வள்ளுவரும் நேரடியாகவே நடந்தான்/சென்றான் என்று குறிப்பிட்டிருக்கலாமே? அது ஏன் திருக்குறள் என்னும் இந்த சமணநூல் மட்டும் நேரடியாக அவ்வாறு குறிப்பிடவில்லை? அப்படிக் குறிப்பிட்டுயிருந்தால் சமணநூல் என்னும் தங்கள் வாதம் வலுவுடையதே!

சமணநூல்கள் யாவும் பௌத்தநூல்கள் யாவும் நேரடியாக தத்தமது கடவுளைக் குறிக்கும் நூல்களையே யாத்துள்ளன. பொதுமறை எழுதும் அதாவது எல்லாச் சமயங்களையும் மதித்து அச்சமயங்களையும் அரவணைத்து நூல் எழுதவேண்டுமெனில் அது ஏலவே கட்டுரையில் குறிப்பிட்ட வண்ணம் சைவ சித்தாந்தம் கூறுகின்ற "எல்லாச் சமயக் கருத்துகளையும் கொண்ட நெறியாகவும் அதுபோல் ஏனைய சமயங்களில் இல்லாத கருத்துகளையும் கொண்டதாகவும் விளங்கும்" சைவ சமயத்தினாலேயே எளிதாகப் படைக்க இயலும் என்பதை உய்த்துணர்வது உங்கள் மதிகொண்ட ஆற்றல் என்க.

சிவத்தமிழோன் said...

ஐந்தவித்தான்:-ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்கநெறியில் நின்றவர் நிலைபெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

திருமந்திரம் கடவுள் வாழ்த்தில் "ஐந்து வென்றனன்" என்னும் பதமும் ஐந்துவித்தான் என்பதையே சொல்கிறது.

"ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நாண்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் எழும்பர்ச்
சென்றனன் தானிருந்து தானுணர்ந் தெட்டே"

அதாவது ஐந்து புலன்களையும் வென்றவன் எனப் பொருள்படும். ஐந்து புலன்களையும் வெல்வதற்கு அருள்பாலிக்கும் இறைவன் சிவன் என குறிக்கின்றது. "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்கிறார் மாணிக்கவாசகர். ஐந்து புலன்களையும் வெல்வதற்கு ஐந்துபுலன்களையும் வென்ற இறைவனின் அருள் வேண்டுமல்லவா? எவ்வளவு அழகாக சைவ சித்தாந்தக் கருத்து புதைந்திருக்கின்றது குறளுக்குள் என்பதைக் கவனிக்க.


அறவாழி அந்தணன்:-அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல் , மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.

தங்கள் மேற்கூறிய திருக்குறள்களுக்கு சைவ சித்தாந்தக் கருத்துகளை விட்டு அகன்று இதற்கு பொருள்கூற முடியாது. எந்த சமயத்துடன் இக்குறள்களை இணைத்துப் பொருள்கூறினாலும் அவை சைவ சித்தாந்தக் கருத்துகளில் இருந்து விலகியிருக்க மாட்டாது என்பதைக் கவனிக்க.

சிவத்தமிழோன் said...

உதாரணத்துக்கு "அன்பே சிவம்" என்கின்றது சைவம். ஏனைய சமயங்களிலும் அன்பு போதிக்கப்படுகின்றது. ஏனைய சமயங்களில் உள்ள அன்பு என்னும் ஒழுக்கத்தை சைவநெறியில் "அன்பே சிவம்" என்கிற திருமந்திரம் மூலம் ஆழமாக கடவுளாகவே தரிசிக்கலாம்.


ஆனால் ஏனைய சமயங்களில் இல்லாத பல கருத்துகள் திருக்குறளில் உண்டு என்பதையும் அவை சைவ சித்தாந்தத்தில் மட்டுமே உண்டு என்பதையும் எளியேன் கட்டுரையின் ஈற்றில் கொடுத்துள்ள இணையச் சுட்டியை அழுத்துவதன் மூலம் திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட கட்டுரையை சென்று படித்து அறிந்து கொள்ளலாம்.

புத்த பெருமான் நடக்கும்போது தாமரை மலர் தாங்கியதையும் ஏனைய கதைகளையும் இதற்கு கொண்டு வந்து விளக்கம் கொடுப்பது "தோமஸின் அருளால் ஞானம் பெற்று வள்ளுவர் எழுதிய நூல்" என ஒருசில விசமிகள் பரப்புவதும் ஒன்றுதான்!

"சிவ சிவ" என்று சும்மா தானும் தன்பாடும் என்று இருக்கின்ற சைவ சித்தாந்தத்தையே தோமஸின் கருத்துகளில் ஆரியம் கலந்ததால் விளைந்த நூல்கள் என குறித்த விசமிகள் கதைபாடும்போது பொதுமறையாக சைவநெறி உலகிற்கு வழங்கிய திருக்குறளை வெள்ளையருடன் வந்த கிருஷ்தவமே உரிமைகொண்டாடும்போது, நாத்தீகவாதிகள் கிழப்பிவிட்ட சமண பௌத்த நூல் என்னும் புரளிகள் அவ்வளவு எளிதில் வலுவிழந்து போகுமா என்ன?

சிவத்தமிழோன் said...

பின்னூட்டமிட்ட ஏனைய அன்பர்களுக்கும் நன்றிகள்

Anonymous said...

ஐயா,
//மேலும் சமணநூல்கள், பௌத்தநூல்கள் ஏதேனும் திருவள்ளுவரையோ அன்றி திருக்குறளையோ மேற்கோள்களாகவும் அல்லது நேரடியாகவும் ஏற்கனவே பயன்படுத்தியுண்டா?
//

:-)


அப்படி வாங்க வழிக்கு! ஒண்ணு செய்வோமா?

1.கடவுள் வாழ்த்தில் உள்ள குறிச்சொற்களான ”ஆதிபகவன்”, “வாலறிவன்”, “அறவாழி அந்தணன்”, “மலர்மிசை ஏகினான்”, ”எண்குணத்தான்”, ”ஐந்தவித்தான்” போன்ற சொற்கள் சைவத் தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் வருகிறது என்று பட்டியல் இடுங்கள். நானுக் அவ்வாறே பட்டியல் தயார் செய்கிறேன். சைவத்தில் அதிகமாக பயின்று வருகிறதா? அல்லது சமணத்தில் அதிகம் இருக்கிறதா? என்று பார்க்கலாம். ;-)

2. அப்படியே, நிகண்டுகள் எவ்வளவு இருக்கிறதோ அத்தனையும் அலசுவோம். மேலே சொன்ன குறிச்சொற்கள் எந்தக் கடவுளுக்கு உரியதாகச் சொல்கிறார்கள் என்றுப் பார்ப்போம்! ;-)

3. திருக்குறள் எங்கள் வேதம் என்று எந்த சைவ நூலில் கூறியிருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

///அப்படியானால் மலர்மிசை நடத்தான்/சென்றான் என்று ஏனைய சமணநூல்கள் சுட்டுவதுபோல் வள்ளுவரும் நேரடியாகவே நடந்தான்/சென்றான் என்று குறிப்பிட்டிருக்கலாமே? அது ஏன் திருக்குறள் என்னும் இந்த சமணநூல் மட்டும் நேரடியாக அவ்வாறு குறிப்பிடவில்லை? அப்படிக் குறிப்பிட்டுயிருந்தால் சமணநூல் என்னும் தங்கள் வாதம் வலுவுடையதே! //

ஏகினான் என்பதற்கு சென்றான் என்பதே பொருள். “பரிமேலழகரை” படிக்கவும். “மலர்மிசை ஏகினான்” என்ற சொற்றோடர் சிலப்பதிகாரத்தில் அருக பகவானுக்கு சுட்டி வருவதைக் காண்க!

//அறவாழி அந்தணன்:-அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல் , மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது//

தங்கள் உரை பொருத்தமன்று! பொருள் குற்றம் உண்டு!

http://banukumar_r.blogspot.com/2008/02/blog-post_16.html

தொடர்வோம்!

வணக்கத்துடன்,

இரா.பா,
http://banukumar_r.blogspot.com/

சிவத்தமிழோன் said...

ஏலவே கட்டுரையில் யான் குறிப்பிட்டதுபோல, சமண சமயத்தில் குறித்த சொற்றொடர்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு வேதாகமம் என்னும் சொல் இன்று கிருஷ்தவ சமயத்திலேயே அதிக பயன்பாட்டில் உண்டு. வேதக்காரர் என்றால் இலங்கையில் பொதுவாக கிருஷ்தவர்களையே இன்று குறிக்கும் அளவுக்கு வேதம் என்னும் சொல் கிருஷ்தவமயமாக்கப்பட்டுள்ளது. எனவே சொல்லை வைத்து திருக்குறளை சமணநூல் என வாதாடுவதில் பயனில்லை.

திருக்குறளை சமணம் தமது வேதநூல் என்கின்றதா? சைவ சித்தாந்த நூல்களில் நேரடியாக திருக்குறள் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சுட்டப்பட்டுள்ளார். சமணநூல்களில் சுட்டப்பட்டுள்ளாரா? திருக்குறளை சைவ வேதநூல் என்று எவர் தமக்கு விடையளித்தது? வேதங்கள்
இருக்கு,யசுர்,சாம,அதர்வம் ஆகிய நான்குமே வேதங்கள். சைவ சித்தாந்தமானது, வேதத்தை பொதுவாகவும் ஆகமத்தை சிறப்பாகவும் கொண்டு எழுந்த நெறி.இச்சைவ சித்தாந்த நூல்களில் திருவள்ளுவர் சுட்டப்பட்டுள்ளார் என கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.மீண்டும் வாசிக்க.

அருகபகவானை நேரடியாகவே திருவள்ளுவர் சுட்டியிருக்கலாமே? ஏன் சுட்டவில்லை? பொதுமறை எழுதும் பக்குவம் சமணத்தில் உண்டோ? சைவத்தில் உண்டென்பதற்கு தகுந்த விளக்கம் கட்டுரையில் எழுதியுள்ளேன்.படிக்க.

மு.வரதராசனாரின் விளக்கவுரையில் பொருட்பிழை கண்டுபிடித்துள்ளீர்! வாழ்த்துகள். 150 பதிப்புகளை தொட்ட அவரது பதிப்பில் பொருட்பிழையை அதுவும் 60 வருடங்களாகப் பாவனையில் உள்ள விளக்கவுரையில் பொருட்பிழை கண்டுபிடித்த தங்களை வாழ்த்துகிறேன்.தயவுசெய்து என்ன பொருட்பிழை எனச் சுட்டினால்; தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திடம் தெரியப்படுத்துகிறேன்.

அதுசரி,தங்கள் கேள்விகளுக்கு விடையளித்துள்ளேன்.ஆனால் யாம் வழங்கிய சைவ சித்தாந்த விளக்கங்களுக்கு எக்கருத்தையும் காணவில்லையே? யாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு விடையெதுவையும் எழுதவில்லையே? மறுபிறப்புக் கொள்கையைக் கேட்டதும் சாதிக்கும் "மௌனம்"இதுதானோ?

தங்கள் ஐயங்களைத் தீர்க்க எளியேனால் இயன்றளவு முயலுகின்றேன். ஆனால்;சமண நூல் அல்ல என்பதற்கும் சைவநூலே என்பதற்கும் யாம் வழங்கியுள்ள விளக்கங்களை வாசித்து அவற்றில் ஐயங்கள் இருப்பின் சுட்டுக. அப்படியிருப்பின் மட்டுமே நமது வாதங்கள் பலனுடையதாக இருக்கும்.

வாழ்த்துகள்
தொடர்வோம்.

Anonymous said...

அன்புசால் ஐயா,

தாங்கள்:
//உதாரணத்திற்கு வேதாகமம் என்னும் சொல் இன்று கிருஷ்தவ சமயத்திலேயே அதிக பயன்பாட்டில் உண்டு. வேதக்காரர் என்றால் இலங்கையில் பொதுவாக கிருஷ்தவர்களையே இன்று குறிக்கும் அளவுக்கு வேதம் என்னும் சொல் கிருஷ்தவமயமாக்கப்பட்டுள்ளது. எனவே சொல்லை வைத்து திருக்குறளை சமணநூல் என வாதாடுவதில் பயனில்லை. //

:-)

ஐயா, விவாதம் இந்தியச் சமயங்களைப் பற்றியது. ஏன் அபரமிக் மதங்களைப் பற்றி பேசுகிறீர்கள்.

திரு.வி.க அவர்களின் கட்டுரையை கீழே கொடுத்திருக்கிறேன்.
http://www.treasurehouseofagathiyar.net/37300/37332.htm

http://www.treasurehouseofagathiyar.net/37300/37357.htm


இரா.பா

சிவத்தமிழோன் said...
This comment has been removed by the author.
சிவத்தமிழோன் said...

//யா, விவாதம் இந்தியச் சமயங்களைப் பற்றியது. ஏன் அபரமிக் மதங்களைப் பற்றி பேசுகிறீர்கள்.//

அறிந்திராத இராமனின் வதனத்தை அறிந்த பங்கயத்திற்கு சிரித்தல் எனும் இயல்பை ஏற்றி சிரித்த பங்கயம் என்று நம்கண்முன்னே கம்பன் கொண்டுவந்ததை பிழை என்பீர் போலுள்ளது. கண்முன்னே நடப்பதைக் கொண்டு நடந்ததை உய்த்தறிய முடியாத என்ன? அதுதான் கிருஷ்தவ சமயத்தை சுட்டவேண்டியதாயிற்று. கத்தோலிக்கபீடங்கள் இருப்பதால் பயவுணர்வோ தங்களுக்கு? கருத்துச் சுதந்திரம் ஏனைய மதத்தவரை கேலி செய்யாதிருந்தல் வரவேற்கக்கூடியதுதானே!

என் கடன் பணி செய்து கிடப்பதே
நன்றி.

சுகுணாதிவாகர் said...

திருக்குறள் சமணநூல் என்பதாக மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார் தொடங்கி தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் தொ.பரமசிவன் வரை பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கான தரவுகளாக அவர்கள் முன்வைக்கும் தரவுகளோடு நீங்கள் குறிப்பிடும் தரவுகளை ஒப்பிடும்போது உங்கள் தரப்பு மிகவும் பலவீனமாக உள்ளது. பொதுத் தன்மையில் எழுத நேர்ந்ததால் அவர் சிவன் பற்றிக் குறிப்பிடவில்லை என்று யூகிக்கிறீர்கள். இத்தகைய யூகங்கள் மட்டுமே ஆராய்ச்சியாகாது. மேலும் அவர் அப்படி கருதியது உங்களுக்குத் தெரிந்த அளவுக்குத் திருவள்ளுவர் உங்களுக்கு நெருக்கமானவரா என்பதை நான் அறியேன். சைவநெறிகள் என்று அறியப்பட்டவற்றுள் எவற்றைக் குறள் மொழிகிறது என்பதி விளக்கின்னால்தான் மேலும் உரையாட ஏதுவாயிருக்கும்.

/பெரியார் "திருக்குறளின் முதலாவது அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதை மாற்றி மனித இனத்தின் குறிக்கோள் என்று அதற்குத் தலைப்புத் தரவேண்டும்" என்று வேண்டியதாக க.அப்பாத்துரையார் குறிப்பிட்டுள்ளமை கடவுள் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையில் பெரியார் இருந்துள்ளார் என்பதைப் புலனாகின்றது. ஆரியர் இடையில் கலப்படம் செய்துவிட்டனர் என்று கதறுகின்ற பெரியார்வாதிகள் பெரியார் செய்யமுயன்ற கலப்படத்தை என்னவென்று சொல்வார்கள்? /

முதலில் க.அப்பாதுரையார் எங்கு இந்த கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்றே தெரியவில்லை. நீங்கள் இத்தகைய கட்டுரகள் எழுதும்போது பயன்பட்ட நூல்கள் குறித்த விவரங்களைத் தந்திருக்க வேண்டும். அல்லது தொடர்புடைய இடத்திலாவது கா.அப்பாத்துரை, இந்த நூலில் இப்படி கூறுகின்றார் என்றாவது குறிப்பிட வேண்டும். நான் கா.அப்பாத்துரையாரை அதிகம் படித்ததில்லை. ஆனால் ஒருவேளை நீங்கள் சொன்னது போல்தான் கா.அ கூறியிருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியாயின் அது அப்பாத்துரையின் புரிதைலில் இருக்கும் குறைபாடு. பெரியார் 'கடவுள் வாழ்த்து' குறித்த விமர்சனத்தில், 'கடவுள்' என்கிற வார்த்தை திருக்குறளின் எந்தவொரு அத்தியாயத்திலும் எந்தவொரு குறளிலும் பயன்படுத்தப் படாமையைச் சுட்டிக் காட்டுகிறார். பொதுவாக அவர் 'அடக்கம்' என்று ஒரு அத்தியாயத்திற்குத் தலைப்பிட்டால் அது அஎந்த அத்தியாயத்தில் உள்ள ஏதேனுமொரு குறளிலாவது 'அடக்கம்' என்னும் சொல் பயப்டௌத்தப்படுகிறது. ஆனால் 'கடவுள் வாழ்த்து' என்னும் அத்தியாயத்தில் ஒரு குறளில் கூட 'கடவுள்' என்னும் வார்த்தை பயன்படுத்தப் படாததையும் அதுமட்டுமின்றி 1330 குறள்களில் எந்தவொரு இடத்திலும் 'கடவுள்' என்னும் வார்த்தை பயன்படுத்தப்படாதையும் அவர் தெளிவாகவே சுட்டிக்காட்டுகிறார். எனவே 'கடவுள்' என்பதே திருவள்ளுவர் காலத்து வார்த்தை இல்லை என்று தர்க்கபூர்வமாக வாதிடும் பெரியார் அந்த பத்துக் குறள்களுக்கும் வைக்கப்பட்ட 'கடவுள் வாழ்த்து' என்னும் தலைப்பு பிற்கால இடைச்செருகல் என்கிறார். தர்க்கரீதியாக பெரியாரின் வாதம் சரிதான். ஆனால் நீங்களொ பெரியாரே ஏதோ இடைச்செருகல் செய்ததைப் போல் திரிக்கிறீர்கள். பெரியாரைப் பற்றிய ஆய்வே இந்த லட்சணத்தில் இருக்கும்போது

/பாரதிதாசன், சைவ சித்தாந்தத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு படித்தால், திருவள்ளுவருடைய கருத்துக்குப் போகலாம் "என்று குறிப்பிட்டார் என க.அப்பாத்துரையார் குறிப்பிடுகின்றார். /

என்னும் உங்கள் வார்த்தைகள் குறித்து எனக்கு நல்லவிதமான அபிமானம் தோன்றவில்லை.

/நக்கீரர்,ஔவையார்,இடைக்காடர் எனப் பல சைவப் புலவர்களால் போற்றி புகழப்பட்ட நூலே திருக்குறள்./

என்று போகிற போக்கில் வேறு வெடிகுண்டுகளை வீசி விட்டுப் போகிறார்கள். நக்கிரர், அவ்வையார் என்ற பெயர்களில் வழங்கப்பட்டவர்கள் எல்லாம் ஒரே நபர்கள் இல்லை என்பதும் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பல நபர்கள் என்பதும் தமிழ் இலக்கியம் குறித்த சிற்றறிவு அனுபவம் உள்ளவர்களுக்கே தெரிந்த விடயம். அவ்வையாரையே 'துணிந்து' சைவர் ஆக்கிவிட்டபிறகு

/சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது./

என்று நீங்கள் சொல்வதிலே என்ன தடை இருக்கப் போகிறது? சரி, உங்கள் கட்டுரைக்குத் துணை சேர்க்கும் 'ஆய்வுகள்' என்ன என்று பார்த்தால் ஒருபக்கம் பெரியாரும் பாரதிதாசனும் 'சொன்னதாக' கா.அப்பாத்துரை 'சொன்னதாக' நீங்கள் சொல்வது, இன்னொருபுறம் திருவாவடுதுறை ஆதினத்தின் 'ஆய்வு'. நடத்துங்கள் உங்கள் நகைச்சுவைநாடகத்தை.

சிவத்தமிழோன் said...

அப்பாத்துரையார் பற்றிய தகவலின் மூலம்:-
நூல்-பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் பக்கம் 306.

http://thamizhoviya.blogspot.com/2008/03/blog-post_20.html
பெரியாரின் கொள்கைகளை எழுதிவருகிற தமிழ் ஓவியா என்னும் நபருடைய வலைப்பூவிலேயே இதுபற்றியுள்ளது.எனவே எனது கருத்தின் நம்பகத்தன்மைக்கு கேடில்லை என நினைக்கிறேன்!!!!

///////சரி, உங்கள் கட்டுரைக்குத் துணை சேர்க்கும் 'ஆய்வுகள்' என்ன என்று பார்த்தால் ஒருபக்கம் பெரியாரும் பாரதிதாசனும் 'சொன்னதாக' கா.அப்பாத்துரை 'சொன்னதாக' நீங்கள் சொல்வது, இன்னொருபுறம் திருவாவடுதுறை ஆதினத்தின் 'ஆய்வு'. நடத்துங்கள் உங்கள் நகைச்சுவைநாடகத்தை.///

க.அப்பாத்துரையார் விடயத்துக்கு இனிக்கேடு ஏதும் சுமத்தமாட்டீராதலால் தங்களின் கருத்துப்படி எனது ஆய்வின் ஒரு பகுதி ஏற்கக்கூடியது.திருவாவடுதுறை ஆதீன ஆசியுடன் வெளியான
"திருவள்ளுவர் சித்தாந்த சைவர்" என்னும் நூலுக்கு விமர்சனத்தை வழங்கமுன்;தயவுசெய்து அதைப் படிக்குமாறு வேண்டுகிறேன்.

நாடகம்? பெரியாரிசம் தொடக்கிவைத்த சமணநாடகம் வலுப்பெறக் காரணமே "திராவிட இயக்கக் கருத்துக்கு மாற்றுக் கருத்து வரைபவரை துரோகியாக்கி பார்ப்பன விசுவாசி என்று முத்திரை குத்தும் இழிவான பண்பாடு என்க.அதுதான் நீங்கள் சுட்டியுள்ள சமணநூல் என வாதிடும் பண்டிதர்களின் பெயர்பட்டியல் பெருகக் காரணம் என்க!!!!!

////////நக்கிரர், அவ்வையார் என்ற பெயர்களில் வழங்கப்பட்டவர்கள் எல்லாம் ஒரே நபர்கள் இல்லை என்பதும் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பல நபர்கள் என்பதும் தமிழ் இலக்கியம் குறித்த சிற்றறிவு அனுபவம் உள்ளவர்களுக்கே தெரிந்த விடயம். அவ்வையாரையே 'துணிந்து' சைவர் ஆக்கிவிட்டபிறகு/////////

ஔவையார்,நக்கீரர் பலவுண்டு என்பதை நாமறிவோம். திருக்குறளைப் போற்றிய நக்கீரர் சமணரா என்ன?

நல்வழியில் நீறில்லா நெற்றி பாழ்,சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்ற ஔவையாரும் அதே நல்வழியில் நாற்பதாவது பாடலில் திருக்குறள்,வேதங்களின் முடிவு,தேவாரம்,திருவாசகம்,திருக்கோவையார்,திருமந்திரம் யாவும் ஒருபொருளையே சுட்டுகின்றது என்ற ஔவையாரும் வேறு வேறாக எப்படி இருக்க முடியும்?


இப்படிப் பார்த்தால் காமத்துப்பால் பாடிய வள்ளுவர் வேறு...பொருட்பால் பாடிய வள்ளுவர் வேறு என்றெல்லாம் வள்ளுவரை பிரித்து துண்டுதுண்டாக்கிவிடுவீர்கள் போல் உள்ளதே!!!

மூன்று அல்லது இரண்டு ஔவையார்கள் இருந்தனர் என்பதை ஆய்வாளர்கள் பொதுவாக ஏற்கின்றனர்.ஔவையார் என்னும் பெயரில் நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்கள் சிவபெருமானைத் துதிப்பதைத்தானே பார்க்க முடிகிறது!!!!! எனவே......ஔவையார் என்னும் பெயருடன் வாழ்ந்தவர்கள் சைவர்கள் என்று சொல்வது சாலச் சிறந்ததுதானே? சிவபெருமானைத் துதித்துப் பாடுபவர்கள் சமணர்களா என்ன? :-D

கோவி.கண்ணன் said...

///நக்கீரர்,ஔவையார்,இடைக்காடர் எனப் பல சைவப் புலவர்களால் போற்றி புகழப்பட்ட நூலே திருக்குறள்.///

கம்ப இராமயணம் எழுதிய கம்பர் வைணவராக இருக்கனும் என்பது போல் இருக்கு, உங்கள் வாதம், இலக்கிய மரபில் முன்னோடிகளாக உள்ளவர்களை பாராட்ட அந்த சமயம் சார்ந்தவராக இருக்கனுமா ?

Anonymous said...

சைவரை சரிக்க நினைக்கும் பணமழைக்காளான்களுக்கு அருமையான விளக்கம்.

Anonymous said...

your expression and explanations are true and honest. iam able to clear my doubts and i will think it over to form my own ideas and approach towards SAIVA SAMAYAM way of life and thoughts. thanks a lot.

Anonymous said...

your expression and explanations are true and honest. iam able to clear my doubts and i will think it over to form my own ideas and approach towards SAIVA SAMAYAM way of life and thoughts. thanks a lot.

ஜாபர் அலி said...

சமணம் ‘கொல்லாமை’க்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுத்ததால்தான், உழவுத் தொழில்கூட செய்ய முடியாமல், வாயில் துணியைக் கட்டிக்கொண்டும், தரையைக் கூட்டிக்கொண்டும் நடமாடுகிறார்கள் சமணர்கள். ’உழவை’ தனது இரண்டாவது அத்தியாயமாய் கொண்டது திருக்குறள் என்பதை சமண ஆராய்ச்சியாளர்கள் மறந்துவிட்டார்களோ?

Anonymous said...

There is a good article by Java Kumar:

http://www.tamilhindu.net/t195-topic

Post a Comment