"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, July 31, 2008

ஈழச்சைவக்குடிமகனின் பார்வையில்.........................

என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற அப்பரின் சரியையும் ஞானப்பால் குடித்த திருஞானசம்பந்தரின் கிரியையும் ஒருங்கே தனது வாழ்வியலில் கடைப்பிடித்து சைவவாழ்விற்கு இலக்கணமாய் தனது வாழ்வியலை சைவ உலகிற்கு சமர்ப்பணம் செய்த திருநாவலர் பெருமானின் அவதாரபூமியாகிய ஈழவளநாடு எண்ணற்ற சைவ சான்றோர்களையும் சிவதொண்டர்களையும் காலத்துக்குகாலம் பெறுவது சிவபூமி இதுவென திருமூலர் நவின்றதை உறுதிப்படுத்துகின்றது எனலாம்.திருநாவலரின் காலத்தின்பின்னர் சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார், சேர்.பொன்.இராமநாதன் போன்ற சைவச்சான்றோர்கள் காலத்தால் மறக்கமுடியாத சமூகத்திற்காய் வாழ்ந்த சிவனடியார்கள். அவர்களின் பின்? கிழக்கு சுவாமி தந்திரதேவானந்தாவையும் வடக்கு அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியையும் பெற்றிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.கிழக்கில் 2005ம் 6ம் ஆண்டு காலப்பகுதிகளில் மறைந்த மட்டக்களப்பு இராமகிருசுணர் மடத்தலைவர் அவர்களின் சேவையையும் கிழக்கு சைவசமூகம் மறக்கவாய்ப்பேயிருக்காது.
இங்கு, அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியை இக்காலத்துக்குரிய ஈழத்து சைவ அடையாளமாக சைவர்கள் பார்த்தார்கள் என்று கூறலாம். தமிழகமுதலமைச்சரின் அனுதாபச்செய்தி ஈழத்தின் அடையாளமாக அன்னை இருந்துள்ளார் என்பதை ஆணித்தரமாக உறுதியாக்கியுள்ளது எனலாம். ஆனால் என்னதான் சொன்னாலும் சைவத்தமிழ் சமூகம் அன்னையை ஈழத்து தமிழ் அடையாளமாக பயன்படுத்த தவறிவிட்டது என்பது மறைக்கமுடியாத உண்மையாகும். கிருத்தவபாதிரிமார்கள் தமிழரின் ஆன்மீக அரசியல் அடையாளமாக சித்தரிக்கப்பட்டுவருகையில் அனைத்து தகுதிகளையும் கொண்டிருந்த அன்னையை அவ்வாறு பயன்படுத்த தவறிவிட்டது வெட்கப்படவேண்டிய ஒன்று.(கிருத்தவபாதிரிமார்கள் போர்ச்சூழலில் ஆன்மீக அரசியல் அடையாளத்தை பயன்படுத்தி மதமாற்றத்தில் சுறுசுறுப்பாக இருந்தாலும் அவர்களுடைய தக்கதருணத்தில் மக்களோடு மக்களாய் நின்று வழங்கும் சேவையை மத அடையாளம் கொண்டு நான் மறைக்கவிரும்பவில்லை.அவ்வாறு செய்தால் ஜீ.யு.போப் வீரமாமுனிவர் ஆகியோருக்கும் அன்னையாய் விளங்கிய தமிழ் என்னை மன்னிக்க மாட்டாள். ) அல்லது நமக்கு ஏன் உந்தவம்பு என்று அன்னை நினைத்து கொண்டாரோ...........ம்ம்ம்!ஆனால் ஒன்று, கிருத்தவர்களுக்கும், இசுலாமியருக்கும் மதரீதியான அரசியல் பாதுகாப்பரண் உண்டு. சைவர்களுக்கு "இந்து"மாமன்றம் செயற்படுகின்றது என்று கூறலாம். ஆனால் யுத்தசூழ்னிலையில் மக்களோடு மக்களாய் நின்று சேவைசெய்யும் சைவப்பிரதிநிதிகள் இல்லையென்றுதான் கூறவேண்டும். எங்கள் மதகுருமார்கள்............குடும்பம் குட்டியென்று பாதுகாப்பாய் ஓடவேண்டியனிலை.ம்ம்ம்........இவர்களும் பாவம் தான்! அரசியல்ரீதியான பாதுகாப்பு கவசம் இவர்களிடம் இல்லையே!காலியில் உயிரோடு கோயில் ஐயரை எரித்ததை கேட்பதற்கு என்ன.........போப் பாண்டவர் வரவா போறார்? அல்லது இந்தியா ஆரியச்சதியின் அத்திவாரமான சங்கரமடமா வரும்? இனிமேல் சங்கரமடத்தை நினைத்தே பார்க்கமுடியாது. அதுவே இந்தியப்பிரதமரையே நடுங்கவைக்கும் ஜெயலலிதாவின் கடும் நடவடிக்கையில் இறையே......இறையே......இறையே......என்பதற்குப்பதிலாக சிறையோ.......சிறையோ.......சிறையோ.......என்று இருக்கின்றது. 83கலவரத்தின்போது கொழும்பில் பலதமிழரைத்துரத்திக்கொண்டு கொழும்பு இராமகிருசுணர் மடத்தை நோக்கி வந்த காடையர்கள் அங்கிருந்ததுறவியைக்கண்டதும் திரும்பி சென்றுவிட்டனர் என்று செவிவழிச்செய்தியாய் நான் கேட்டதுண்டு. துறவிக்கு பிள்ளையில்லை.........குட்டியில்லை; ஆதலால் மக்களுக்காய் நிற்கும் திறனும் இயல்பாய் உருவாகும்.(துறவியர் எல்லோரும் சமயகுருவாக முடியாது. சமய பிரதிநிதியாக அவர்களைக் கருதலாம். சிவாகமங்கள், சைவசித்தாந்தம் யாவையும் கற்றுத்தேர்ந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட துறவியர் சைவசமய குருமாராக உருவாகவேண்டியது அவசியமாகும்.)

கோயிலில் மணியடிப்பவர், மாலை கட்டுபவர், கோயிலை சுத்தம் செய்பவர் ஆகியோர் செய்வது சரியைத்தொண்டு.ஐயர்மார் செய்வது கிரியைத்தொண்டு. சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகிய இந்த நான்கு மார்க்கங்களுமே ஒன்றுக்கொன்று நிகர். அப்படியானால் கோயிலில் மணியடிப்பவர், மாலை கட்டுபவர், கோயிலை சுத்தம் செய்பவர் எல்லோருமே சமயகுருவாகிவிடுவர். எனவே சமயகுரு என்பவர் யார் என்பதில் தெளிவுபெறுவது அவசியமாகும். கட்டுரை பாதைமாறிச்செல்வது புரிகிறது.

மீண்டும் விடயத்திற்கு வருகின்றேன். 2002 சமாதான காலத்தில் யாழ் செல்லும் பாக்கியம் எனக்குகிட்டியிருந்தது. அவ்வேளை, தெல்லிப்பளைக்கு சென்றிருந்தேன். அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் அருமையை அவருடைய படம் இல்லாத தெல்லிப்பளை வீடுகள் கண்ணில்படுவது அருமையாய் இருந்தது கண்டு உணர்ந்துகொண்டேன். தெல்லிப்பளை ஆலயத்திற்கு சென்றபோது அன்னையைக்காணும் பாக்கியமும் பெற்றேன். சிலர் ஆலயத்துள் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியிடம் சென்று வீழ்ந்து வணங்கு என்றனர். ஆலயத்துள் ஒருவரின் காலில் இன்னொருவர் வீழ்ந்துவணங்குவது கூடாதசெயல் என்று அன்று நான் அறிந்திருக்கவில்லை. நின்ற கூட்டத்தினை சமாளித்துக்கொண்டு அன்னையை அடைந்துவிட என்னால் முடியவில்லை.அங்கு நின்றவர்கள் ஆலயத்திருவிழாக்கூட்டமே ஒழிய அன்னையை நெருங்குவதற்கான கூட்டமில்லை. அன்னை தன்பாட்டிற்கு ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார்.அப்போது மெல்ல எனக்கு புரியத்தொடங்கியது இங்கு நிற்கும் கூட்டம் தெல்லிப்பளை மக்கள் திரள் என்று. அமைச்சர்களுக்கு அரசனைப்பார்ப்பதில் புதினமிருக்காது. அது இயல்புதானே! (இன்று ஆலயத்தினுள் அர்ச்சகரின் காலில் விழுந்து வணங்குதல்.........அவர் இவர் என்று காலில்விழுந்து கும்பிடுதல்.......சாதரண நிகழ்வுகளாகிவிட்டன. வணக்கத்தைப்பெறுவோர் கூட வணங்குபவர்களிடம் எடுத்துவிளக்குவது இல்லை. ஏன் ஆலயத்தில் அப்படி செய்தல் ஆகாது? ஆலயத்தினுள் எல்லோரும் சமன். வணக்கத்திற்குரிய ஒரே ஒருபொருள் ஆலய இறைவன்.)பின்னர் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டிபற்றி அறியும் ஆவலில் என் தெல்லிப்பளை உறவினர்களிடம் கேட்டறிந்துகொண்டேன்.சைவத்தை சிதைக்கும் நோக்கில் சைவத்தில் இல்லாத ஆஞ்சனேயர் வழிபாட்டை அன்னை ஆதரித்தார் என்னும் செய்திகேட்டு வருந்திய சைவக்குடிமக்களில் நானும் ஒருவன்.(1995களில்த்தான் இலங்கைக்கு ஆஞ்சநேயர் வழிபாடு அறிமுகப்படுத்தப்பட்டது.) சேர்.பொன்.இராமநாதன் புகழை பேசும் சமூகம் அவர்விட்ட தவறுகளை (புத்தளத்தமிழரை கவனிப்பாரன்றி கைவிட்டமை, இலங்கைத்தமிழரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியமை) "ஏன் அவர் அப்படிச்செய்திட்டார்?" என்று நெஞ்சில் மீட்டு கவலையடைவதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. அதுபோல் அன்னைவிட்ட இந்தந்தவறு அடுத்தசந்ததிக்கு "சைவம்" என்னும் சொல் நமது புழக்கத்தில் இருந்ததே தெரியாமல் போய்விடும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. அடுத்த சந்ததி "ஏன் அவர் அப்படிச்செய்திட்டார்?" என்று அன்னையை நோக்கி கேள்வி கேட்பது அன்னையின் மகத்துவத்திற்கு அழகும் இல்லை. பல கொழும்பு பணக்கார "இந்து" நிறுவனங்களை பகைத்திட்டால் ஆலய அறசெயல்களுக்கான நிதிக்கு ஆபத்துவந்துவிடும் என அஞ்சினாரோ தெரியவில்லை.

சிவபதம் அடைந்த அன்னை நிச்சயமாக ஈழப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் சைவத்தை பணக்கார சுமார்த்ததிடம் இருந்து பாதுகாப்பதற்கும் ஆயிரம் நாவலர்களின் பிறப்பிற்கு சிவபெருமானிடம் வரம் கேட்டிருப்பார் என்று திடமாக எண்ணி அன்னையின் சிவலோகவாழ்வை உள்ளத்திலே கண்டு சிவானந்தம் அடைவோமாக.

சுவாமி தந்திரதேவானந்தா, அமெரிக்காவில் பிறந்த வெள்ளைக்காரராகிய இவர் வேதநெறியில் ஈர்ப்புக்கொண்டு, வேதங்கள், உப நிடதங்கள் எனயாவும் கற்று இந்துத்துறவி/வேதத்துறவியாக மாறி திருகோணமலையில் சிவதொண்டு ஆற்றிய மகான். இவர் அமெரிக்கா வெள்ளைக்காரராக இருந்ததன்மையினால் கிருத்தவத்தின் நெளிவு சுழிவுகள் யாவும் அறிந்திருந்தார். அதன்மூலம் மதம்மாற்றிகளின் பிரச்சாரங்களை தவிடு பொடியாக்கினார். சுவாமி மதம் மாற்றும் தரகர் கூட்டத்திற்கு சிம்மசொப்பனமாக விளங்கினார் என்றால் மிகையாகாது.அவருடைய சொற்பொழிவுகளை வாசிக்கும் பேறு பெற்றிருந்தேன். அவருடைய சொற்பொழிவு மூலம்தான் கிருத்தவம் கிருத்துவுக்கு முன்னர் 5000ஆண்டில்தான் உலகம் தோன்றியதாக கூறுகின்றது என்று அறிந்துகொண்டேன்.( வேத உப நிடதக்கணக்குப்படி எங்கள் வைதீகநெறி அண்ணளவாக 198 கோடிமட்டில் ஒரு பெறுமதியை வரையறுக்கின்றது. விஞ்ஞானம் அண்ணளவாக 200 கோடி என்கின்றது)சாத்தனுக்கு கல்லெறிதல்.....இறைவனின் குருதியென்று "வைன்" குடித்தல் போன்ற பல்வேறு மூட நம்பிக்கைகள் ஏனையமதங்களிலும் உண்டு...........இயேசு நாதர் இமயமலை வந்து ஆன்மீகம் பயின்றார்..........போன்ற பல்வேறு விடயங்கள் அவர் சொற்பொழிவுகளை வாசித்து நான் பெற்ற அறிவாகும்.சுவாமியை நேரில் காணும் பாக்கியம் எளியேனுக்கு கிட்டவில்லை. சுவாமி பிறப்பால் அமெரிக்கராக இருப்பதனால் இலங்கையில் தொன்றுதொட்டு நிலவிவருகின்ற சைவப்பாரம்பரியம் அவரால் உணரக்கூடியதாக இருந்திருக்குமென எதிர்பார்க்கமுடியாது. இங்கு பிறந்து இங்கேயே வளர்ந்த பலருக்கு இந்து என்னும் புறமொழி ஆக்கிரமிப்பும் அதற்குள் மறைந்திருக்கும் பாரிய சதியும் விளங்கக்கடினமாக இருக்கையில் சுவாமியிற்கு விளங்கியிருக்கவேண்டுமென்பது கடினமான எதிர்பார்ப்பாகும்.சுவாமியுனுடைய சமூகசேவையை ஈழச்சமூகம் மறக்கவாய்ப்பேயிருக்காது. சிவபதம் அடைந்த சுவாமியினுடைய தொண்டுகளைத்தொடர்வதே அவருக்கு ஈழமக்கள் செயயக்கூடிய அதியுயர்ந்த நன்றிக்கடனாகும்.

ஆறுமுகநாவலருக்கு பின்னர் சேர்.பொன்.இராமநாதன், சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் போன்றார் சிவாகமத்தை பேணும் சைவசமூக பிரதிநிதிகளாக மிளிர்ந்தபோதும் நாவலர் போல் சாதாரண மக்களிடம் சமயக்கருத்துக்களை கொண்டுசேர்க்கும் திறனைப்பெற்றிருக்கவில்லை. அதன்பின்னர் சைவச்சான்றோராக சாதாரணமக்களால் போற்றப்பட்ட அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி, சுவாமி தந்திரதேவானந்தா போன்றோர் ஆறுமுகநாவலர் காட்டியபாதையில் சைவத்தை வழிநடத்தத்தவறிவிட்டனர். இன்று இருக்கும் நல்லை ஆதினமுதல்வரும் மௌனியாய் இவர்கள்போல் இருந்துவிடக்கூடாது என்பது சாதரண சைவக்குடிமக்களின் வேண்டுதலாகும். ஆதினத்தின் வாரிசாக சிவாகமங்களில் அனுபவமுள்ள சிவக்கொழுந்தை நியமிக்கவேண்டுமென்பது காலம் அவரிடம் எதிர்பாக்கும் சைவக்கடமையாகும்.எங்கள் கல்லூரி அதிபர் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய ஆன்மீகவாதியான மாணவனிடம் "ஆதினவாரிசாகப் போரியா?" என்று கேட்டிருந்தார். ஆனால் அந்தமாணவன் ஆஞ்சநேய பக்தன்.ஆனால் ஒழுக்கத்தில் சிறந்துவிளங்கும் தன்மை ஆதினவாரிசுவுக்கான தகுதிகளில் ஒன்றே ஒழிய அதுவே ஆதினவாரிசுவுக்கான தகுதியல்ல என்பது அதிபருக்கு விளங்கவில்லை. அதுவொன்றே தகுதியென்றால் ஒழுக்கத்தில் சிறந்த கிருத்துவரையும் இசுலாமியரையும் நல்லூர் ஆதினவாரிசாக நியமிக்கலாம் தானே? சிவாகமங்களையும் சைவசித்தாந்தங்களையும் கற்றுத்தேர்ந்த வாரிசுவை நியமிப்பது காலத்தின் கட்டாயமாகும். வாரிசு இல்லாமல் ஆதினமிருப்பதும் அழகுயில்லை.


(இந்து, சுமார்த்தம் போன்றவற்றிற்கு என்னுடைய முன்னைய கட்டுரைகள் விளக்கம் கொடுத்திருக்குக்கின்றன. மீட்டிப்பார்க்க.)

வலைப்பூ:- இங்கேயும் சிறுபொழுதை கழியுங்கள்.
http://nirshan.blogspot.com/2008/06/blog-post_5427.html
( அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவாக வெளியிடப்பட்டுள்ள ஒரு சிறந்த நினைவுக்கட்டுரை.)
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "ஈழச்சைவக்குடிமகனின் பார்வையில்........................."

இறக்குவானை நிர்ஷன் said...

வணக்கம் ஐயா,
என்ன சொல்லி எப்படிப் பின்னூட்டம் இடுவது என்றே தெரியவில்லை. சைவத்தின் மீதும் தமிழின் மீதும் தாங்கள் கொண்டுள்ள பற்றுக்கு பாராட்டுக்கள். வெகுசிலரே தங்களைப் போன்று பதிவிடுகிறார்கள்.

சமயப் பணியில் ஈடுபடுவோருக்கு சிறந்த கட்டுரைகளை வழங்கியுள்ளீர்கள். சில விடயங்களை எனது மாணவர்களுடனும் பகிர்ந்து கொண்டேன். இந்தப் பதிவில் எனதுபதிவையும் இணைத்தமைக்கு நன்றிகள்.

சைவத்தமிழ் வளர்த்தோரில் யாழ் சித்ததர் பரம்பரையையும் விபுலானந்தர் போன்ற தமிழ்ப்பெரியோரையும் மறந்துவிடக் கூடாது. அதேவேளை மறைந்த மில்க்வைற் அதிபர் போன்ற சில பணம் படைத்தோரும் தமிழ் வளர்க்கும் மனம் கொண்டிருந்தனர்.

உங்களது வலைத்தளத்தில் சுமார் 1 மணிநேரத்துக்கும் அதிகமாக மேய்ந்து தகவல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நன்றி.

Post a Comment