"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, August 11, 2008

ஈழ நாட்டிலே நல்லூரும் கத்திரகம ஆகிவிட்ட கதிர்காமமும்

இன்றைய ஈழ பண்பாட்டின் அடையாளம் நல்லூர் என்றால் அது மிகையாகாது. ஈழ வள நாட்டில் தொன்று தொட்டு வழிபடப்படும் வழிபாடுகளில் முருக வழிபாடு தனித்துவமான சிறப்பாக பின்பற்றப்படும் வழிபாடாகும்.அன்றைய கால மன்னர்களின் நாணயங்களில் வேல் குறியீடு காணப்படுவது முருக வழிபாடு எவ்வளவு மக்களோடு ஒன்றியிருந்தது என்பதை வெள்ளிடை மலையாய் நிருபணமாக்குகின்றது. ஈழத்தின் சமய சின்னமாக கதிர்காமம் அன்றைய காலங்களில் விளங்கியது எனலாம்."கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா " என்ற தேவராய சுவாமிகளுடைய கந்தர் சட்டி கவசமெனினும் அருணகிரிநாதரின் தெய்வீக திருப்புகழாகட்டும் கதிர்காமத்தின் புகழை தீட்டத்தவறவில்லை. ஏன் கமலகாசனின் தெனாலி திரைப்படத்தில் கண்டிக்கதிர்காமம் (இறுதிக்காலத்தில் கண்டி இராச்சியத்திற்கு உட்பட்டு இருந்தமையால் அவ்வாறு அழைக்கப்பட்டதாக அறியாமல் நான் வினாவியபோது ஒருவர் கூறியிருந்தார்.) என்று ஈழ சமய சின்னமாகக் காட்டப்பட்டது.அந்தளவு கதிர்காமப்புகழ் தமிழகம் எங்கும் ஈழ சமய சின்னமாக பிரபல்யம் அடைந்துள்ளது. ஆனால் வருத்தத்துடன் ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்வது கதிர்காமம் ஈழ சமயச்சின்னத்தை இழந்துவிட்டது என்பதையேயாகும். இந்த உண்மை ஈழத்தை தவிர கதிர்காமத்தை ஈழ சமய சின்னமாக கருதும் தமிழகத்திற்கு தெரியாது. தெரிய வர அவர்களின் ஊடகங்களும் வழிசமைக்காது.யாழ்பாணத்தில் இருந்து யாத்திரிகர் கூட்டம் கூட்டமாக நடைபயின்று கதிர்காம விழாவிற்கு செல்லும் மரபு இன்று அருகிவிட்டது. மட்டக்களப்பில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு பக்தர்கள் நடையாக கதிர்காமம் சென்றாலும் சொற்பமே என்பது வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளவேண்டியுள்ளது. ஈழப்பிரச்சினை ஒரு காரணியாக இதற்கு அமைந்தாலும் ஈழப்பிரச்சினைக்கு வேராகவிருக்கும் சிங்கள ஆக்கிரமிப்பே காரணமெனலாம். கதிர்காமம் கத்திரகம என்று சிங்களமானது எப்படி என்று பாருங்கள்; முதலில் முருகனின் அருகில் சிங்கள புத்தர் வந்தார். (சிங்கள புத்தர் என்று அடைமொழி நான் இங்கு வழங்குவதற்கு காரணம் உண்மையான புத்தர் யுத்தத்தை எதிர்ப்பவர். அன்பின் வடிவம்.அரசாட்சியை துறந்தவர். ஆனால் இலங்கையில் அப்படியில்லை.பௌத்ததுறவிகள் அரசியலில் வாக்குகேட்டு பாராளுமன்றம் சென்றுள்ளனர்.யுத்தத்தை ஆதரிக்கின்றனர்.) பின்னர் ஆலய நிலத்தையே தனதாக்கினார். பின்னர் ஆலய நடுநாயகமாக மாறிவிட்டார். ஆரம்பத்தில் சிங்களர் முருகனை கும்பிட கதிர்காமம் வந்தனர். இன்று கதிர்காமம் வருவது புத்தரைக் கும்பிட என்ற நிலையாகிவிட்டது.முருகனைத் தேடவேண்டும் இன்று கதிர்காமத்தில். முருகன் கதிர்காமத்தில் "சப்"கடவுள் ஆகிவிட்டார். 1996இல் நான் முதன்முறை கதிர்காமம் செல்லும் வாய்ப்பு பெற்றேன். அப்போது மலையுச்சியில் நடுநாயகமாக முருகன் விளங்க, அண்மையில் ஒரு கட்டிடத்தில் பெரிய சிவலிங்கம் இருந்தது. அந்த சிவலிங்கம் முன் நின்று மௌனமாய் சில நிமிடம் தியானம் செய்து வரம் கேட்டால் பலிக்கும் என்பது நம்பிக்கையாக இருந்தது. அந்த கட்டிடத்தில் நுழைவதற்கு கட்டணம் வேறு அறவிடப்பட்டது. 1996இன் பின் பல தடவை கதிர்காமம் செல்லும் பாக்கியம் அமையப்பெற்றது. என் அம்மா இறைவன் விரும்பிவிட்டால் அடிக்கடி அவரே தானாக அழைப்பார் என்று நவின்றார். ஏன் என்றால் நான் சென்று பல தடவைகளின் பின்னர்தான் என் பெற்றோர் கதிர்காமம் செல்லும் பாக்கியம் பெற்றனர்.
மாணிக்கவாசகர் அழகாக இதனை சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்று. அதாவது சிவபெருமானுடைய அருளால்தான் தான் அவருடைய திருவடிகளை வணங்கும் பாக்கியம் பெற்றேன் என்கின்றார். அதாவது விளக்கிச் சொன்னால் இறைவன் அருள் இருந்தால்தான் இறைவனையே வழிபடமுடியும். அடையமுடியும் என்பதாகும். புகழுக்கு சொல்லவில்லை. கதிர்காமம் செல்லும் பாக்கியம் அடிக்கடி என்னைத் தேடி தானே வரும்.அப்படி அடிக்கடி சென்றதால் அங்கு மெல்லமெல்ல நடந்த இன ஆக்கிரமிப்பை எளிதில் உணரக்கூடியதாக இருந்தது. நான் முதன்முறை செல்லும் போது உடைந்து சிதைவடைந்திருந்த நவக்கிரக சன்னதி 2005வரை அப்படியே தான் இருந்தது. மாற்றமேதும் இல்லை. ஆனால் முதல்முறை சென்றபோது மலையில் காணப்பட்ட சிவன் சன்னதி அகற்றப்பட்டு மிகப்பெரிய புத்தர் சன்னதி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த புத்தர் சன்னதிதான் மலை சிகரத்தில் ஆலய நடுநாயகமாக விளங்குகின்றது. அங்கு அண்மையில் நடப்பட்டிருந்த பெரியவேலும் தூரத்தே ஒரு மூலையில் அரக்கப்பட்டிருந்தது. பெரிய கதிர்காமம் கோவில் என்று அழைக்கப்படும் கோவிலில் 1996இல் சிறிய சன்னதியாக இருந்த புத்தர் 2005இல் நன்றாகவே வளர்ந்து ஆலய நடுநாயகமாய் மாறிவிட்டார். 1995இல் இருந்து 2005வரை( கடைசியாக நான் கதிர்காமம் செல்லும் பாக்கியம் பெற்ற ஆண்டு) வளர்ந்த.......புதிது புதிதாக முளைத்த புத்தர் அன்று தொட்டு 2005வரை( இன்று கூட இருக்கலாம்) சிதைவடைந்து கவனிப்பார் அற்று கைவிடப்பட்ட மலைசிகரத்தில் உள்ள நவக்கிரகங்களைப் பார்த்து முறுவல் பூப்பது அங்கு செல்லும் அனைவரும் உணரும் ஒன்று. இடையிடையே சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் மாணிக்ககங்கையோரத்தில் வீற்றிருக்கும் பிள்ளையார் புத்தபிக்குகளால் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய நிலையை ஏற்று கள்ளச்சிரிப்பொன்று பூப்பார். பெரிய கதிர்காமத்தில் தமிழில் இருக்கும் ஓம் என்ற அடையாயளத்தை அடிக்கடி அகற்றி பின் தமிழ் பாராளுமன்ற உருப்பினர்கள் விழவேண்டியோர் காலில் எல்லாம் விழுந்தபின் மீண்டும் மாட்டுவது அரசியல்.இவற்றால் ஏற்பட்டவிரக்தியால் கதிர்காமம் ஈழத்தமிழரின் மனதில் இருந்து மெதுவாக விலகத்தொடங்கி இன்று ஈழத்தவரின் சமய பண்பாட்டின் சின்னம் என்ற தகுதியை இழந்து நிற்கின்றது அருளுக்கு பஞ்சம் இல்லாக் கதிர்காமம். இவ்வாறு படிப்படியாக கதிர்காமம் தனது நிலையை இழக்க, ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தின் சமயச் சின்னங்களில் ஒன்றாய் காணப்பட்ட நல்லூர் படிப்படியாக யாழ் மக்கள் மனதுக்குள் ஒன்றி யாழ்ப்பாணம் என்றதும் நல்லூரே நினைவுக்கு மீளும்வகையில் யாழ்ப்பாண சமயப் பண்பாட்டின் சின்னமாகி கதிர்காமம் வகித்துவந்த ஈழ சமய சின்னம் என்கின்ற உரிமையை, புகழை எப்போது கதிர்காமம் இழக்கத்தொடங்கியதோ அப்போது முதல் நல்லூர் பெறத்தொடங்கி இன்று அந்த உரிமையை முழுமையாய்ப் பெற்றுவிட்டது எனலாம்.
பரமேசுவராக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி எனும் இரு உயர்ந்த தரம் மிக்க கல்லூரிகளை அழித்துத்தான் யாழ்.பல்கலைக்கழகத்தை தமிழருக்கு வழங்கியது அரசு. அதுபோல்த்தான் கதிர்காமம் என்கின்ற வரலாற்று புராண தலத்தை இழந்த துயரில் வளர்த்து எடுக்கப்பட்டதுதான் நல்லூர்............கதிர்காமத்தில் மழுங்கடிக்கப்பட்ட முருகன் நல்லூருக்கு செல்லுங்கள் என்று சொல்வதைப்புரிந்த கொண்ட தமிழன் கதிர்காமத்தை இழந்த துயரத்துடன் நல்லூரையே தனது சமய பண்பாட்டின் சின்னமாக மாற்றிவிட்டான்.
நான் இங்கு நல்லூர் திருவிழாக்காலத்தில் நல்லூரையும் கதிர்காமத்தையும் ஒப்பிட்டதன் நோக்கம் யாதெனில் இனியாவது கமலகாசனோ அன்றி யாரேனும் படமெடுத்தால் ஈழத்தமிழரின் உணர்வுகளையுணர்ந்து ஈழத்தமிழரின் சமய அடையாளத்தை காட்டும்போது நல்லூரின் பெயரைக் கொஞ்சம் சொல்லுங்கள் அல்லது கதிர்காமத்தை இழந்து துடிக்கும் ஈழத்தமிழனது உணர்வுகளைப் பிரதிபலியுங்கள் என்ற வேண்டுகோளை விடுக்கவே!



அப்படியே நல்லூரின் நினைவில் நான் கிறுக்கியதையும் பாருங்களேன்!


அழகே முருகா
தமிழே முருகா
சிவமே முருகா
அரோகரா முருகா
நல்லூர் குமரா

கதிர்காமமும் நீயே
உகந்தையும் நீயே
செல்வசந்நிதியும் நீயே
மண்டூரும் நீயே
மாவிட்டபுரமும் நீயே
என் நல்லூரா

ஆறுமுகம் கொண்டவனே
ஆறுபடை நாயகனே
அல்லல்கள் அறுப்பவனே
என் நல்லூரா

சேவல் கொடியுடையோனே
மயில் வாகனனே
சங்கம் ஆண்ட
சண்முகனே
என் நல்லூரா

வள்ளி தெய்வானை
மணவாளனே
வந்தோரின் வினையாவும்
விரட்டுகின்ற வேலவனே
என் நல்லூரா

ஈழ தமிழரசே
ஈழக் குரல்
கேட்கலையோ
இன்னல்கள் களைய
இன்னும் சித்தம்
பூணலையோ
இனிய செய்தி
தாராயோ
என் நல்லூரா!

http://mayasphotoblog.blogspot.com/
இல் (நல்லூர் என்னும் வகைப்படுத்தலுக்குள்) நல்லூர் மகோற்சவ புகைப்படங்களை கண்டு இறையானந்தம் அடையலாம்.


சிவத்தமிழோன்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 comments: on "ஈழ நாட்டிலே நல்லூரும் கத்திரகம ஆகிவிட்ட கதிர்காமமும்"

மாயா said...

கதிர்காமத்தில் இடம்பெற்றுவரும் இன/மத ஆக்கிரமிப்பை அழகாக எடுத்துக்காட்டியிருந்தீர் நன்றி

Word Verification இனை நீக்கிவிடுங்கள் அது பின்னூட்டமிடுவோருக்ககு சிரமமாயிருக்கும் !

சிவத்தமிழோன் said...

உங்கள் ஆலோசனைப்படி Word Verificationஐ நீக்கிவிட்டேன். பின்னூட்டத்தின் மூலம் வழங்கும் ஊக்கத்திற்கு நன்றிகள்.

சிவத்தமிழோன் said...

உங்கள் ஆலோசனைப்படி Word Verificationஐ நீக்கிவிட்டேன். பின்னூட்டத்தின் மூலம் வழங்கும் ஊக்கத்திற்கு நன்றிகள்.

சிவத்தமிழோன் said...
This comment has been removed by the author.
sanjika said...

your all articles are very nice. i read all of them.add more

Post a Comment