"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, August 18, 2008

புராணத்தில் இருந்து காவடி பற்றியும் நந்தி பற்றியும்

முருகனுக்கு காவடி தோன்றிய கதை


அகத்தியர் பெருமான் கயிலையில் பூசித்த சிவகிரி, சக்திகிரி எனும் குன்றுகளை தென் திசைக்கு எடுத்துச்செல்ல விரும்பி தன்னுடைய சீடனான மிகவும் பலசாலியுமான இடும்பனை பணித்தார். இடும்பன் உடனே அவ்விரு குன்றுகளையும் பெயர்த்து காவுதடி ஒன்றில் அவற்றைக் கோர்த்து தன்னுடைய தோளிலே சுமந்தவாறு தென் திசையை நோக்கிப்புறப்பட்டான்.நீண்ட நடையால் களைப்புற்ற இடும்பன் சிறிதுநேரம் இளைப்பாற எண்ணி காவுதடியை இறக்கிவைத்தான். சற்றுநேரம் இளைப்பாறிய இடும்பன், மீண்டும் புறப்பட ஆய்த்தமாகி காவுதடியை மீண்டும் தூக்கமுயன்றபோது மலைகள் அசையவில்லை. காவுதடியும் மலைகளும் இம்மியளவும் அசையாததால் வெறுப்புற்று நின்றபோது அங்கு ஒரு சிறுவன் சிரித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான். இவன் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று எண்ணி கோபங்கொண்டு போர் தொடுத்தான் அந்தச் சிறுவனோடு. போரின் இறுதியில் தோற்றுவீழ்ந்தான். இவற்றை அறிந்துகொண்ட அகத்தியர் உடனே விரைந்து வந்தார். வந்து நிற்கின்ற சிறுவன் முருகன் என்று உணர்ந்து வணங்கினார்.அன்று தொட்டு முருகனுக்கு காவுதடி தூக்கும் வழக்கம் உருவாயிற்று. காவுதடி காவடியாகவும் மருவிற்று.

நந்திசிலாதர் எனும் சிவனடியார் குழந்தைப்பேறு இல்லாமல் வருந்துவதால் வருந்திய இறைவன் பிளைப்பேறுக்கு வரம் அருளினார். அதன் பலனாக எட்டு வயது ஆயுளுடைய நந்தி பிறந்தார். தனது ஆயுளை அறிந்துகொண்ட நந்தி சிவபெருமானை நோக்கி தவமிருந்து கயிலைக்கு காவலனாகும் பேறடைந்தார்.உருத்திர கணங்களின் தலைவராகவும் இறைவனால் நியமிக்கப்பட்டார். இறைவனே முன்னின்று நடத்தும் திருமணப்பேறையும் பெற்றுக்கொண்டார். அதிகார நந்தி எனும் சிறப்புப்பெயருக்கு உரியவரானார்.
நந்தியின் வகைகள்
ஆகம விதிமுறைக்கமைந்த சிவாலயங்களில் இருக்கக்கூடிய அதிகூடிய நந்திகளின் எண்ணிக்கை ஐந்து என்று முன்னமே கூறியிருந்தேன்.அவைபற்றி இங்கு பார்ப்போம்.போக நந்தி,பிரம்ம நந்தி, ஆன்ம நந்தி, மால்(விடை)நந்தி,தரும நந்தி என்பனவே அவ்வைந்துமாகும்.

ஒருமுறை போகங்களின் பதியாகிய இந்திரன் சிவபெருமானுக்கு நந்தியாக வந்து வாகனமாக பக்திசெலுத்தினான். அதனால் அந்த நந்தியை போகநந்தி என்பர்.இதனை கோயிலுக்கு வெளியே காணலாம். இது போகங்களைத் துறந்து அதாவது ஆலயத்திற்கு வரும்போது சுக துக்கங்களைத் துறந்து வரும்படி குறித்துநிற்கின்றது.

பிரம்மதேவன் தனது படைக்கும் தொழிலை மேற்கொள்ளமுதல் சிவபெருமானிடம் சென்று உபதேசம் பெற்றார். அப்போது நந்தியாகமாறி இறைவனைத் தாங்கி நின்றார். இதனால் இந்த நந்தியை பிரம்மநந்தி என்பர்.பிரகார மண்டபத்தில் சுதையால் செதுக்கப்பட்டு காணப்படும்.

ஆன்மநந்தி என்பது கொடிமரத்துக்கு அருகில் மூலமூர்த்தியை நோக்கியவாறு காணப்படும். ஆன்மாக்கள் எல்லாவற்றிலும் இறைவனாகிய சிவபெருமான் நிறைந்துயிருப்பதால் ஆன்மாவின் வடிவமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இது பிரதோச காலபூசைக்குரியது.

மால் என்றால் திருமால்.விடை என்றால் நந்தி. திருமால் விடையாகமாறி சிவபெருமானை தாங்கியதால் இப்பெயர் உருவாயிற்று. திரிபுரங்களையும் எரிக்க சிவபெருமான் புறப்பட்டபோது இடையிலே இறைவனின் தேர் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. அப்போது திருவிளையாடல் நாயகனாகிய சிவபெருமானை கீழேவிழாது தாங்கிட திருமால் நந்தி(விடை)யாக மாறி சிவபெருமானை தாங்கி வாகனமாகி நின்றார். இவ்வாறு திருமால் நந்தியாக மாறிய நந்தியை மால்விடை என்பர். இதனை கொடிமரத்துக்கும் மகா மண்டபத்திற்கும் இடையில் காணலாம்.

கருவறையில் சிவலிங்கத்திற்கு அருகிலிருப்பது தருமநந்தி என அழைக்கப்படும். ஊழிகால இறுதியில் இறைவனாகிய சிவபெருமானிடத்தில் எல்லாமே ஒடுங்கிவிடும். தர்மத்தைத் தவிர. இந்த தர்மம் நந்தியாகமாறி இறைவனை தாங்கிநிற்கும்.


(என் கைகளை எட்டிய நூல்களிலிருந்து தொகுத்து எனது எழுத்து நடையில் தந்துள்ளேன்.)


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "புராணத்தில் இருந்து காவடி பற்றியும் நந்தி பற்றியும்"

இறக்குவானை நிர்ஷன் said...

நல்லதொரு பதிவு. நந்திகளின் வகைகள் எனக்குப் புதியசெய்தியாக இருந்தன.

முடியுமானால் தீட்சா விதிகளையும் சந்தியாவந்தன முறைகளையும் விரிவாக எழுதுங்கள். நம்மவர்கள் பலர் தீட்சை எடுத்தும்கூட விதியைக் கடைபிடிப்பதில்லை.

சிவத்தமிழோன் said...

விரைவில் எழுதமுயலுகின்றேன். தாங்கள் தருகின்ற ஊக்கத்திற்கு நன்றியுடையவனாவேன்.

சிவத்தமிழோன் said...

விரைவில் எழுதமுயலுகின்றேன். தாங்கள் தருகின்ற ஊக்கத்திற்கு நன்றியுடையவனாவேன்.

TWBF said...

உங்கள் பதிவில் உள்ள நாட்காட்டி

எங்களது பதிவில் வைக்க உதவுங்கள்

திரு அண்ணாமலை ஜோதிடம்

www.jothidam.tk

Post a Comment