"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Sunday, August 23, 2009

விநாயகர் சதுர்த்தி-விநாயகர் வழிபாடுபற்றி ஒரு தொகுப்பு

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா"

என்று முத்தமிழையும் வேண்டிப் பாடுகிறார் ஔவையார்.
முத்தமிழ் மட்டுமன்று; ஆய கலைகள் அறுபத்தினான்கினையும் ஏய உணர்விக்கின்ற செல்வம் ஐந்து கைகளையும் யானை முகத்தையும் இளம் பிறைச் சந்திரனைப் போன்ற தந்தத்தை உடையவரும் சிவனது திருமகனும் ஞானச் சிகரமாய் விளங்குபவரும் அறிவினில் வைத்து வணங்க வேண்டிய திருவடிகள் உடையவரும்மாகிய விநாயகப் பெருமான்.
"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே"
திருமந்திரம்.
சிவபெருமானின் திருவருட் சம்மதத்தோடு உமையம்மையால் ஆக்கப்பட்ட குழந்தையே விநாயகப் பெருமான். நந்தி(சிவன்) மகன் என திருமந்திரம் சிவபெருமானின் திருப்பிள்ளையை உரைக்கின்றது.

எல்லா உயிர்களுக்கும் தந்தையாகிய சிவனுக்கும் தாயாகிய உமைக்கும் முதல் பிள்ளையாய் பூத்ததால் பிள்ளையார் எனும் செல்லப் பெயருக்கு உரியவர். பார்வதி தேவி நீராடும்வேளையில் தனது பாதுகாப்புக்காக தோற்றுவித்த புதல்வனே விநாயகர் என்றும்
புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவி தான் நீராடும்போது பாதுகாப்புக்காக விநாயகரை உருவாக்க, கஜமுகசூரனின் வதமே சிவனின் திருவருட் சம்மதமாக இருந்தது. ஆற்றங்கரைகளிலும் கிணற்றுக் கரைகளிலும் பிள்ளையார் குடிகொண்டது பார்வதி தேவி நீராடும்போது தனது பாதுகாப்புக்கு உருவாக்கியதன் நிமித்தமே என்பர்.
ஆற்றங்கரைகள் மட்டுமல்ல, அரச மரத்தடியிலும் பிள்ளையாரைக் காணலாம்.

அரச மரத்தில் பதினொரு உருத்திரர்களும் அட்ட வசுக்களும் மும்மூர்த்திகளும் வாசம் புரிவதாக பிரமாண்ட புராணம் கூறுகின்றது. அரச மரத்தினை இறை சிந்தையோடு வலம் வந்தால் சனிசுவரனால் ஏற்படும் இன்னல்கள் சூழமாட்டாது என்பர். ஒருமுறை தசரதனுக்கும் சனிசுவரனுக்கும் போர் மூண்டதாகவும் அதன்போது தசரதன் அரசமரத்தடியில் இருந்து சனிசுவரனை நோக்கி வழிபாடுகளை மேற்கொண்டதனால் சனிசுவரன் அருள்பாலித்ததாகவும் புராண கதைகள் எடுத்து இயம்புகின்றன.
சனிசுவரனிடம் அகப்படாத கடவுள் பிள்ளையார் மட்டுமே! பிள்ளையாரைப் பிடிக்க வேண்டிய தருணம் சனீசுவரனுக்கு வந்ததும் பிள்ளையாரிடம் சென்றபோது, பிள்ளையார் பெருமான்,தான் இன்று ஆய்த்தமாக இல்லை என்றும் ஆதலால் நாளை வருமாரும் வேண்டியவர் தனக்கு நினைவூட்டும் வகையில் "நாளை வருவேன்" என எழுதி வைக்கச் சொல்லுகிறார். எனவே சனீசுவரன் மீண்டும் வரும் வேளைகளில் எல்லாம் எழுதியதைப் படிக்க வேண்டுவார். "நாளை வருவேன்" என சனிசுவரனும் படிக்க, அதுவே அவரது வாக்காக கருதி நாளை வரும்படி மீண்டும் வேண்டுவார். இப்படி, சனிசுவரரிடம் பிடிபட்டு இருக்கவேண்டிய காலத்தை பிடிபடாமல் புத்திசாதூரியமாக கழித்துவிடுவார். பிள்ளையாரிடம் ஏமாற்றம் அடைந்த சனிசுவரன் பிள்ளையாரை வழிபடுபவர்களுக்கு "அதிக இன்னல்களை கொடுக்கேன்" என வாக்குறுதி வழங்கினார்.இதனால் பிள்ளையாரை வழிபடுபவர்கள் சனிசுவரனின் இன்னல்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதில்லை. எனவே சனிசுவரனின் இன்னல்களில் இருந்து விடுவிக்கும் அரச மரமும் பிள்ளையாரும் ஒரே இடத்தில் இருப்பது வழக்கமாயிற்று.


விநாயகரின் நாபி பிரம்ம அம்சம்,முகம் திருமாலின் அம்சம்,கண்கள் சிவமயம்,இடப்பாகம் சக்தி அம்சம், வலப்பாகம் சூரிய அம்சம்.அரச மரம் மும்மூர்த்திகளின் தெய்வாம்சம் நிறைந்த விருட்சமாதலால் மும்மூர்த்திகளின் திருவருள் நிறைந்த பிள்ளையார் அங்கு வீற்றிருந்து அருள்பாலிப்பதும் முறையே.

விநாயகப்பெருமானின் திருவுருவம் ஓம் எனும் ஓங்கார வடிவமானதாகும். "கண்ணெதிரே காணும் இந்த உலகனைத்தும் ஓங்கார வடிவம்.சென்றவை,இருப்பவை,வருபவை எல்லாம் ஓங்காரம்.காலத்தின் மூன்று பகுதிகளைக் கடந்து நிற்கிற ஒன்றும் ஓங்காரமே." என்கிறது மாண்டூக்ய உபநிடதம்.
"வேதங்கள் எந்த வார்த்தையைக் குறிக்கோளாய்க் கொண்டிருக்கின்றனவோ, எதை முன்னிட்டு எல்லா தன்னொழுக்க முறைகளும் (தவம்) மேற்கொள்ளப்படுகிறதோ, எதை நாடி பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கப்படுகிறதோ அந்தக் குறிக்கோளை அடைவதற்கான மந்திரம் ஓம் என்பதாகும்"
"ஓம் என்ற இந்த மந்திரமே இறைவன்.இதுவே கடைசி எல்லை. இம்மந்திரத்தை அறிந்தவன் எதை விரும்பினாலும் அது கிடைக்கும்.இதுவே மிகச் சிறந்த ஆதாரம்.இதுவே மிக உயர்ந்த ஆதாரமும்.இந்த ஆதாரப் பொருளை அறிந்தவன் பிரம்ம லோகத்தில் சிறப்படைகிறான்"
என ஓங்காரம் வேத சாரம் என்பதை தெளிவாக்கிறது கட உபநிடதம். விநாயகரின் வாயின் வலதுபுற ஓரம் தொடங்கி, கன்னம்,தலை வழியாகச் சுற்றிக் கொண்டு இடதுபுறத்தில் தும்பிக்கையின் வளைந்த நுனிவரை வந்தால் ஓம் எனும் வரி வடிவத்தைக் காணலாம்.

ஓம் எனும் பிரணவ மந்திரம் அகரம்,உகரம்,மகரம் எனும் மூன்றெழுந்துகளால் ஆனது. "அ" படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவையும், "உ" காத்தல் தொழிலுக்குரிய திருமாலையும், "ம" அழித்தல் தொழிலுக்குரிய உருத்திரனையும் குறிக்கின்றது. ஓம் எனும் பிரணவ வடிவாய் இருக்கும் பிள்ளையார் மும்மூர்த்திகளின் அம்சமாய் விளங்குகின்றார் என்பது தெளிவாகும்.
எதை எழுதத் தொடங்கினாலும் "உ" என அடையாளம் இட்டு எழுதுவர். "உ" என்பது சிவசக்தியை குறிக்கும் நாதம்,விந்து ஆகியவற்றின் சேர்க்கையே ஆகும். இதனைப் பிள்ளையார் சுழி என்பர். சிவசக்தி இணைந்த நிலையை பிள்ளையாராகக் கருதுவதாலேயே அவ்வாறு அழைப்பர்.
முதல் வழிபாட்டுக்குரியவர் விநாயகப் பெருமான்.சிவ பூதகணங்களின் பதி என்பதால் கணபதி எனப் போற்றப்படுவார்.
கணேசன்,ஏகதந்தன்,சிந்தாமணி,விநாயகன்,டுண்டிராஜன்,மயூரேசன்,லம்போதரன்,கஜானனன்,ஹேரம்பன்,வக்ர துண்டன்,ஜேஷ்டராஜன்,நிஜஸ்திதி,ஆசாபூரன்,வரதன்,விகடராஜன்,தரணிதரன்,சித்தி புத்தி பதி,பிரும்மணஸ்தபதி,மாங்கல்யேசர்,சர்வ பூஜ்யர்,விக்னராஜன் என்று இருபத்தியொரு திருப்பெயர்கள் உடையவர் பிள்ளையார் என புராணங்கள் கூறுகின்றன.
விநாயகரின் பெண் வடிவமே விநாயகியாகும். அதாவது பெண் உருவப் பிள்ளையார். மதுரை,சுசீந்திரம்,திருச்செந்தூர் கோயில்,திருவண்ணாமலை அம்மன் ஆலயத் தூணிலும் ,ஏனைய ஒரு சில இடங்களிலும் தமிழ்நாட்டில் இப்பிள்ளையாரைக் காணலாம். எனினும் வடநாட்டில் ஏராளமான பெண் பிள்ளையார் சிலைகள் காணப்படுகின்றன. சித்தி,புத்தி என மனைவியர் இருவர் பிள்ளையாருக்கு உண்டு என வடநாட்டில் கருதுவர்.
விநாயகப் பெருமானின் திருநடனத்தை கண்டு சிரித்தமையால் சந்திரன் தேயத் தொடங்கினான். விநாயகர் நிந்தை செய்வோருக்கு ஞானத்தில் தேய்பிறை என்பது திண்ணம்.ஞானம் கைகூடாது. கைகூடிய ஞானமும் கைவிட்டுப் போகும் என்க.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது கொன்றைவேந்தனில் ஔவையாரின் வாக்கு.
மாங்கனிக்காய் உலகை சுற்றிவர வேண்டியிருக்கையில் தாயையும் தந்தையையும் சுற்றி வந்து மாங்கனியை வென்றவர் பிள்ளையார். "தாயும் தந்தையுமே உலகு" என்பதையும் சிவசக்திக்குள் உலகம் அடக்கம் என்பதையும் உணர்த்தவே மாங்கனித் திருவிளையாடல் என்க.

முருகனோடு வள்ளி காதல் கொள்ள யானையாக வந்து உதவியவர் பிள்ளையார்.
வள்ளி என்னும் ஆன்மாவை இறைவனாகிய முருகன் தேடி வந்து தன்பால் ஈர்க்க முயலும்போது இறைவனாகிய விநாயகர் உதவுதல் என்பதே இதில் உள்ள தத்துவம் என்க.


பாசங்களில் இருந்து பசுக்களை மீட்டு தன்பால் ஈர்க்கும் பதியின் கருணையை சுட்டுவதே இதன் பொருளாகும். வள்ளியைத் தேடி முருகன் காடுகளிலும் அருவிகளிலும் அலைவது ஆன்மாவை பற்றுகளில் இருந்துவிடுபட இறைவன் எடுக்கும் முயற்சியைக் குறிக்கிறது. விநாயகர் யானையாக வந்து வள்ளியை முருகன்பால் திருப்புவது, இறைவன் ஆன்மாவை பற்றுகளில் இருந்துவிடுபட்டு பதியை நோக்கி நகர இறைவனே சோதனைகளை உருவாக்கி இறைவனை உணர்த்துவான் என்பதாகும்.


மாணிக்கவாசகப் பெருமானுக்கு நரி-பரி என்று பல்வேறு சோதனைகளையூட்டி ஆட்கொண்டமை இந்தத் தத்துவத்தை தெளிவுபடுத்துகிறது. "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்று மணிவாசகராகிய மாணிக்கவாசகர் உருகுவதும் இதனையே ஆகும்.
கஜமுகசூரனின் மனைவியார் உமையை வழிபட்ட காரணத்தால் கஜமுகசூரனுடனான போரில் அவனை வதைக்காது மூசிக வாகனமாக மாற்றி ஏற்றருளியவர் விநாயகப் பெருமான்.
சிவபெருமான் விநாயகரை மறந்து திரிபுர தகனத்திற்கு சென்றதனாலேயே சிவபெருமானின் தேர் அச்சு முறிவுக்கு உள்ளாகியது என்பர். பரம்பொருளான சிவபெருமான் காரிய சித்தி தங்குதடையின்றி கைகூட வேண்டுமென்றால் விநாயகரை வழிபட வேண்டும் என்பதை பாருக்கு அறிவிக்கவே அவ்வாறு திருவருட்சம்மதம் பூண்டார் எனலாம்.

"நற்றவா உன்னை நான் மறக்கினுஞ் சொல்லுநா நமசிவாயவே" என்கின்றார் சுந்தர மூர்த்தி நாயனார். அதுபோல் பிள்ளையாரைக் கண்டதும் மனம் மறந்தாலும் உடல் அவயவங்கள் தோப்புக்கரணம் போட மறக்காது என்பது மனதார யாவரும் உணர்ந்ததே! கஜமுகாசூரனிடமிருந்து தேவர்களை மீட்ட பிள்ளையாருக்கு செலுத்தும் நன்றியுணர்வாக அசூரன் முன்னேயிட்டு வந்த தோப்புக்கரணத்தை, தேவர்கள் பிள்ளையார் முன் இட விரும்பி வரமாக பிள்ளையாரிடம் வேண்டினர். அசூரனிடம் இருந்து தேவர்களை மட்டுமா மீட்டார்? உலகையே மீட்டார் என்பதாலேயே நாமும் தோப்புக்கரணம் நன்றியுணர்வுடன் போடும் பழக்கம் உருவாயிற்று.
மகாவியாச முனிவர் மகாபாரதத்தைப் சொல்லச்சொல்ல எழுதிக் கொண்டிருந்த விநாயகப் பெருமானின் எழுத்தாணியின் முனை மழுங்க, தனது வலது தந்தத்தை முறித்து அதையே எழுத்தாணியாகப் பயன்படுத்தி மகாபாரதத்தை தொடர்ந்து எழுதினார். அதேபோல் ஒருமுறை பரசுராமர் சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயம் வந்தபோது, இடைமறித்த விநாயகருடன் போர் தொடுத்தார். அப்போது சிவபெருமானால் அளிக்கப்பட்ட பரசு ஆயுதத்தை விநாயகப் பெருமான் மீது ஏவ அது சிவாம்சம் பொருந்திய ஆயுதம் என்பதால் அதை எதிர்ப்பின்றி தனது இடது தந்தத்தால் தாங்கியபோது, அவரது இடது தந்தமும் உடைந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு இருதந்தமும் இல்லாத நிலையில் அருள்பாலிக்கின்ற விநாயகரை திருவாரூர் தியாகேசர் கோயிலில் பாதிரி மரத்தடியில் காணலாம்.

மாணிக்கவாசகப் பொருமான் சிதம்பரத்துக்கும் தில்லைக் காளியம்மன் ஆலயத்திற்கும் இடையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சதுர்முடி விநாயகர் ஆலயத்தை வழிபட்ட பின்னரே திருவாசகத்தைப் பாடினார் என்கின்றது அவ்வாலயத்துக்குரிய கர்ணபரம்பரை கதை.

சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் வாழ்ந்த ஔவையார் (பல ஔவையார்கள் உண்டு.), சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீது ஏறிக்கொண்டு திருக்கயிலைக்குச் சென்று கொண்டிருக்க, விநாயகர் பூசையை செய்து விநாயகர் அகவலைப் பாடி, விநாயகப்பெருமானின் துதிக்கையின் உதவியுடன்(துதிக்கையால் ஔவையாரை தூக்கி கைலாயத்தில் இறக்கிவிட்டார்) அவர்களுக்கு முன்னரே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார்.விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவ் ஔவையார் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார் என்பர் தமிழறிஞர்கள்.
"ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே." என்று ஆத்தி சூடியிலும் (ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும்)"கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே" என்று கொன்றை வேந்தனிலும் ("கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். ) "வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு" என்று மூதுரையிலும்
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் "
என்று நல்வழியிலும் பிள்ளையாரை கடவுள் வாழ்த்தில் பாடும் ஔவையார்; பிள்ளையாருக்கு,
"சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
............."
என்று "விநாயகர் அகவல்" என்னும் பாமாலையையும் சூட்டியுள்ளார்.

முருகன் மீது தமிழை திருப்புகழாக்கி சூட்டிய அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பிள்ளையாருக்கு உகந்த இருபத்தியொருவகையான படையல்(நிவேதன) பொருட்களை பட்டியல் இடுகின்றார்.
"இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடனெய்
எட்பொரிய வற்று வரையிள நீர்வண்
டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டு
வெளரிப்பழமிடிப் பல்வகை தினிமூலம்
மிக்க அடிசிற் கடலை பட்சணமெனக் கொளொரு
விக்கின சமார்த்தனெனு மருளாழி
வெற்ப குடி லச்சடிவ விற்பரம ரப்பரருள்
வித்தக மருப்புடைய பெருமாளே"

இக்கு(கரும்பு), அவரைக்காய், நற்கனிகள்,சர்க்கரை,பருப்பு, நெய்,எள்,பொரி,அவல்,துவரை,இளநீர், வண்டு எச்சில்(தேன்),பயறு,அப்பம்,பச்சரிசி,அரிசி மாவினால் செய்யப்பட்ட பிட்டு, வெள்ளரிப்பழம், இடிப்பல் வகை(அரிசியை இடித்து செய்யப்படும் மோதகம்) தனி மூலம்(ஒப்பற்ற கிழங்குகள்) மிக்க அடிசில்(சிறந்த உணவு வகைகளான சித்ரான்னம்),கடலை என விநாயகப் பெருமானுக்கு உவந்த நிவேதனப் பொருட்களை திருப்புகழில் தீட்டியுள்ளார் அருணகிரிநாதர்.

முருக பக்தரான அருணகிரிநாதர் ஏன் பிள்ளையாரின் படையலுக்கு ஏற்ற பொருட்களை பாடலாக்க வேண்டும் என ஐயம் எழலாம். வயலூர் எனும் தலத்திற்கு வந்த அருணகிரிநாதருக்கு எதைப்பற்றி பாடுவதென்று உணரமுடியாது குழப்பம் ஏற்படவே திருப்புகழை தொடர்ந்து பாட முடியாமல் போயிற்று. அப்போது அங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்ற பொள்ளாப் பிள்ளையார்(உளியால் செதுக்கப்படாது தானாகத் தோன்றிய பிள்ளையார்) ஆறுமுகன் புகழைப் பாட வழிகாட்டினார். ஆதலால் ஐம்முகனுக்கு நன்றி செலுத்தவே பிள்ளையார்மீதும் திருப்புகழைப் பாடிப்பரவசம் அடைந்தார்.
எருக்கம் பூ, அருகம் புல் போன்ற எளிய பொருட்களால் வழிபடக் கூடியவனும் ஆகம முறை, ஆகமம் அற்ற முறை என இருமுறைகளிலும் எழுந்தருளியிருப்பவனும் கோமயமும் அருகம்புல்லும் இருந்தாலே திருவுருவம் தாங்கும் தன்மையினால் ஏழை எளியவர்களின் குடிசைகள் தொட்டு செல்வந்தர்களின் மாளிகைகள்வரை எளிமையாக எழுந்தருளக்கூடியவனுமாக விளங்குபவன் விநாயகப் பெருமான்.
அருகம்புல்லுக்கு இணையானது என்று வன்னி மர இலையும் மந்தார மலரும் கருதப்படுகின்றது. இரு திருடர்கள் வன்னி மரத்தின் மேலேறி நின்று சண்டையிட்டு கிழே விழுந்து மரணித்தபோதும், அவர்கள் சண்டை செய்கையில் உதிர்ந்த வன்னி மர இலைகள் கிழே இருந்த விநாயகப் பெருமான் மீது வீழ்ந்த காரணத்தால் தேவலோக வாழ்வை பெற்றனர் என்று ஓர் கதையும் உண்டு.
காசியப்ப முனிவரின் யாகத்தினைக் குழைக்க முயன்ற அசுரனை யாகத்திற்காக வைத்திருந்த கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை எடுத்து அவன் மீது வீசி அவ்வசூரனை அழித்தார். யாகத்திற்கு ஏற்பட்ட இடையூறை தேங்காயைக் கொண்டு அழிந்ததனால், விக்கினங்கள் தீர்க்கும் விக்னேசுவரன் முன்னால் "இடர்களை உடைத்து காப்பான்" என்பதை உணர்த்தும் பொருட்டு தேங்காய் உடைக்கும் பழக்கம் உண்டாயிற்று.
மிகுந்த வெப்ப தேகம் கொண்ட அனலாசுரன் என்ற அசுரனை விழுங்கியதால் விநாயகரின் திருமேனி வெப்பத்தால் தகித்தது.இந்த வெப்பத்தைப் போக்கி விநாயகரை குளிர்வித்த மகிமையுடையது அருகம்புல். அகரம் புல் என்பதுவே அருகம்புல் என வழங்கலாயிற்று என்பர். இவ் அருகம்புல் விநாயகரை வழிபட எளிய பூசைப் பொருளானதும் இதன் பொருட்டே!

பிள்ளையாருக்கும் அனந்தேசர் என்பவரின் பிள்ளையாகிய நம்பியாண்டார் நம்பிக்கும் உள்ள பந்தம் மூலம் திருமுறைகளை சைவத்தமிழ் உலகுக்கு அளித்த அருமை பிள்ளையாரின் பெருமையாகும்.அனந்தேசர் என்ற அந்தணர் திருநாரையூரில் உள்ள சுயம்பு பிள்ளையாராகிய பொள்ளாப் பிள்ளையாருக்கு பூசை செய்து வந்தார். சுவாமிக்குப் படைக்கும் நைவேத்தியத்தை பக்தர்களுக்கு கொடுத்துவிட்டு வீட்டிற்கு செல்வது அவரது வழக்கம். வீட்டிலிருக்கும் அவரது மகன் (சிறுவன்) நம்பியாண்டார்நம்பி அவரிடம் நைவேத்தியத்தை கேட்கும்போது, "விநாயகர் சாப்பிட்டுவிட்டார்" என சொல்லிவிடுவார். ஒருசமயம் அனந்தேசர் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், மகனை பூசை செய்ய அனுப்பினார். அவன் விநாயகருக்கு நைவேத்தியம் படைத்தான். தந்தை சொன்னபடி, விநாயகர் அதை சாப்பிடுவார் என நினைத்து காத்திருந்தான். ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ மன்றாடி மனமுருகிப் பார்த்தான். ஆனாலும், நைவேத்தியம் அப்படியே இருந்தது. இதனால் சிறுவன் நம்பி, சுவாமி சிலையில் முட்டி நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்படி முறையிட்டான். விநாயகர் அவனுக்கு காட்சி தந்து நைவேத்தியத்தை எடுத்துக் கொண்டார். இதை அறிந்த தந்தை அனந்தேசர் "நம்பி உண்டுவிட்டு பொய் சொல்கிறான் பிள்ளையார் எப்படி சாப்பிடுவார்?" என ஐயம் கொண்டு அதட்டியபோது நம்பி பிள்ளையாரே உண்டார் என பதிலளிக்கவே, மறுநாளும் நம்பியையே பூசைக்கு அனுப்பி சோதித்தபோது பிள்ளையார் உண்பதை உணர்ந்து நம்பி பொய்யுரைப்பதாக தவறாக கருதி தண்டித்ததை எண்ணி வருந்துகிறார். இப்படி நம்பியுடன் விளையாடியதால் "பொல்லாப்"பிள்ளையார் என்றும் இப்பிள்ளையார் வழங்கப்படலானார்.
நம்பியாண்டார் நம்பிக்கு வேதாகமங்களை ஓதாமல் உணர்வித்த இப்பொள்ளாப் பிள்ளையாரை "திருமுறை காட்டிய விநாயகர்" என்றும் அழைப்பர். திருமுறைகள் இருக்கும் இடத்தை அசரீரியாக நம்பியாண்டார் நம்பிக்கு கூறி,உலகுக்கு கிடைக்க வழிசெய்தமையால் இக்காரணப் பெயரும் உருவாயிற்று.
"பொள்ளா" என்றால் உளி கொண்டு செதுக்காத சுயம்பு என்று பொருள் - இது காழியூரார் அளித்த விளக்கம்.
கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணத்தில்
,"கேடில்பிதா உரைத்தமொழிப் படியேஅந்தி
இளமதிச் செஞ்சடைப் பொல்லாப் பிள்ளையாரை
ஏத்திஆ ராதிப்பான் இனிதின் ஏகி
உளமலி அன்பொடு திருமஞ் சனமுன்னாகும்
உரியஎலாஞ் செய்துநிவே தனமுன் வைத்து"
என்று "பொல்லாப் பிள்ளையார்" எனக் குறிப்பிடுதல் நம்பியாண்டார் நம்பிக்கு செய்த திருவிளையாடல்களை கருத்தில் கொண்டே என்க.

காகமாய் வந்து அகத்தியரின் கமண்டலத்தை தட்டிவிட்டு காவேரியை பெருக்கெடுத்து ஓடச் செய்தமை, விபூடணனின் கைகளில் இருந்த திருவரங்கப் பெருமானை காவேரிக் கரையில் எழுந்தருளச் செய்தமை என பிள்ளையார் பெருமைகள் ஏராளம்.
"பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை மீதிலே அரசமர நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார்" பெருமைகளை மனதில் நிறுத்தி விநாயகர் சதுர்த்தியை அநுட்டித்து சிவஞானம் சித்திக்க வேண்டுவோமாக.
"பிடியத னுருவுகை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வெளி வலமுறை இறையே"
என்கின்ற ஞானக்குழந்தை திருஞானசம்பந்தனின் தமிழால் பார் முழுதும் அமைதியும் சமாதானமும் உண்டாக பிரார்த்தித்துக் கொள்வோம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "விநாயகர் சதுர்த்தி-விநாயகர் வழிபாடுபற்றி ஒரு தொகுப்பு"

தங்க முகுந்தன் said...

அருமையான கட்டுரை! கட்டுரையை பார்க்கும்போது எமக்கு எமது ஊர்களில் நாம் கொண்டாடிய திருவிழாக்கள் நினைவுக்கு வருகின்றன. விநாயகர் தற்போது இந்தியாவிலிருக்கும் நீர் ஒரு பிள்ளையார் கோவில் படத்தைப் பதிவிலிட்டிருக்கலாமே!

? said...

அருடச்செல்வத்தோடு தமிழ்ச்செல்வமும் நல்கிய கட்டுரை!

வைதீக சைவம் said...

சனீஸ்வரன் என்பது தவறு,சநைஸ்வர என்பதே சரியான பெயர்...ஏஸ்வரத்வம் சிவனுக்கும் ,நந்திகேஸ்வரருக்கும் சண்டேஸ்வரருக்கு மட்டுமே உரிதான பதம்...தவறு இருந்தால் மனிக்கவும்...

Post a Comment