தமிழகம் சென்றதில் இருந்து திருவாவடுதுறை ஆதீன குருமுதல்வரை நேரில் கண்டு ஆசி பெற வேண்டும் என்ற அவா உள்ளத்தை தூண்டியவண்ணம் இருந்தது. சைவ சமயத்திற்குரிய ஆதீனங்களில் காலத்தால் பழமையும் ஞாலத்தில் தமிழ் தொண்டிற்கான பெருமையையும் தாங்கி நிற்கின்ற ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனமாகும். திருவாவடுதுறை ஆதீனத்துக்கும் ஈழத்து சைவப் பாரம்பரியத்துக்கும் நீண்டகால தொடர்பு உண்டு. இத்தகு பெருமையை உடைய திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமுதல்வரை தரிசனம் செய்து ஆசி பெறவேண்டும் என்ற அவா ஏற்படுவது இயல்பே!
எனவே; ஆலய தரிசன சுற்றுலாவுக்காக திட்டமிட்ட சமயம் திருவாவடுதுறை ஊடாக வாடகைக்கு அமர்த்திய மகிழூர்ந்து செல்லும்வகையில் பாதைகளை தெரிவுசெய்தேன். சீர்காழியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மகிழூர்ந்து இயங்க மறுக்க, அங்கிருந்து முகந்தெரியாத ஒருவரின் உதவியால் வேறொரு வாடகை மகிழூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு செல்லும் சமயம், திருவாவடுதுறையை அடைந்தபோது குறித்த ஓட்டுனர் "எல்லா இடங்களிலும் நிற்பாட்டமுடியாது" என மறுக்கவே தஞ்சாவூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு போய் சேர்ந்தால் காணும் என்று திருவாவடுதுறை ஆதீனத்தை தரிசிக்கும் பேறை இழந்தேன். வாகன ஓட்டுனர் "இலங்கைத் தமிழர்" என ஏமாற்ற முனைந்த சமயம் "இலங்கைத் தமிழர்" என பரிதாப முகத்துடன் நலம் விசாரித்த நல் நெஞ்சங்களின் முகங்கள் என் மனத்திரையில் வந்துபோயினர். இங்கு தஞ்சாவூரில் நடந்த சம்பத்தையும் சுட்ட விரும்புகிறேன். நெல்லிக்காய் வியாபாரி என்னை "இலங்கைத் தமிழர்" என தெரிந்துகொண்ட பின்னர் கொடுத்த நெல்லிக்காய்குரிய பணத்தை பெற மறுத்துவிட்டார். "வசதியில்லாமல் வன்னியில் மக்கள் துன்பப்படுகையில் உங்களிடம் பணம் கொடுக்காது அவர்கள்மேல் தங்களுக்குள்ள இரக்கத்தை நான் பயன்படுத்துவது சரியல்ல" என்றேன். உடனே "எனக்குத் தெரியும்.உங்களிடம் வசதி உண்டு. அதனாலேயே தமிழகத்துக்கு வரமுடிந்தது.ஆனால் எங்கள் தலைவர்கள் ஏதும் செய்யவில்லை.அதுதான் இது என்னுடைய மனசாட்சிக்காக" என்று இறுதிவரை பணம் வாங்க மறுத்துவிட்டார். இப்படி பல நல்ல முகங்கள் வாழும் தமிழகத்தில் ஏமாற்ற முயலும் இப்படிப்பட்டவர்கள் பிறந்தது திருஷ்ட்டிப் பொட்டு!
திருவாவடுதுறை ஆதீனத்தை தரிசிக்க முடியாமல் போன மனக்குறை நெஞ்சை வாட்டிய வண்ணமே இருந்தது. இப்படி ஆன்மீக சுற்றுலாவை முடித்துவிட்டு, திரும்பியபின் ஒருநாள் "மயிலை(மயிலாப்பூர்) கபாலீசுவரர் ஆலயத்திற்கு (எங்கள் வீட்டில் இருந்து பேரூந்தில் செல்வதாயின் 30 நிமிட தூரம்) சென்றபோது அங்கு சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளே ஆவலுடன் சொற்பொழிவு நடக்கும் இடத்திற்கு சென்றேன். ஆகா......என்ன அற்புதம்!!!!!!
திருவாவடுதுறை ஆதீன குருமுதல்வர் வீற்றிருந்து அருளாசி வழங்கிய வண்ணம் இருந்தார். நெஞ்சு ஆனந்தக் கண்ணீரைச் சொரிய கண் குளிரக் கண்டு இறைவனின் திருவருளை எண்ணி மகிழ்ந்தேன். அம்மையை இடப்பாகத்தே கொண்ட சிவபெருமானின் திருவருட் சம்மதம் எளியேனை ஆட்கொண்டுள்ளதை உணர்ந்து பூரித்தேன்.
(குரு முதல்வரிடம் திருநீற்று பிரசாதம் பெறும்பேறு பெற்ற எளியேன்)
குரு முதல்வரிடம் இருந்து திருநீறு பெறும் பேறையும் பெற்றேன். என்ன அற்புதம்!!!!!யாரை நான் சந்திக்க முடியவில்லை என்று வருந்தினேனோ அவர் இறைவனின் திருவருட் சம்மதத்தால் கபாலீசுவரர் ஆலயத்திற்கு அன்று வருகை தந்திருந்து எளியேனின் மன வருத்தத்தை போக்கி அருளினார். எல்லாம் திருவருட் சம்மதம்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
0 comments: on "சிவனருளாலே குருமுதல்வரின் தாள் வணங்கி சிந்தை மகிழ்ந்தேன்"
Post a Comment