"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, July 29, 2009

கந்தசட்டிக் கவசம் அரங்கேறிய திருத்தலம்

ஆதிசேடனுக்கும் வாயுதேவனுக்கும் ஒருமுறை கடுமையான பலப்பரீட்சை நடைபெற்றது. மாபெரும் மலையாகிய மாமேருவை அனந்தன் சுற்றி வளைத்துக் கொண்டான். வாயுதேவன் பெரும் காற்றை ஏற்படுத்தி அனந்தனிடம் இருந்து மாமேருவை மீட்க முயன்றான்.காற்றைபலமாக வீசியதால் மாமேருவின் சிகரப்பகுதி அனந்தனின் பிடியில் இருந்து நழுவிப் பறந்து சென்று வீழ்ந்தது. அப்படி விழுந்ததால் உருவாகிய மலையே சிரகிரி, சிகரகிரி,புஷ்பகிரி,மகுடகிரி,சென்னிமலை என்றெல்லாம் அழைக்கப்படலாயிற்று.இங்கு குடிகொண்டிருக்கும் சிரகிரி வேலவனை "சென்னிமலை முருகன்" என அடியார்கள் துதிப்பர்.


இங்கு முருகன் எழுந்தருளிய கதை முருகப் பெருமானின் அற்புதத்தை பாருக்கு உணர்த்துகின்றது.சென்னிமலைக்கு அருகில் நொய்தல் ஆற்றின் கரையில் கொடுமணல் என்னும் ஊரில் முற்காலத்தில் பண்ணையார் ஒருவர் ஒரு காராம் பசு உட்பட பல பசுக்களை வளர்த்து வந்தார். மாடுகளை மேய்க்கும் இடையன் ஒருசில நாட்களாக வனத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் வருகின்ற காராம் பசுவின் மடியில் பால் வற்றியிருப்பது கண்டு வியந்தான். பண்ணையாரிடம் தெரியப்படுத்தினான். இருவரும் காராம் பசுவையும் ஏனைய பசுக்களையும் வழமைபோல் புல்மேய வனத்துக்கு அனுப்பிவிட்டு பின்னால் சென்றனர். காராம் பசு ஏனைய பசுக்களை விட்டு நீங்கிச் சென்று மண்மேடு ஒன்றில் தானாகவே பால் சொரிவதை அவதானித்தனர். குறித்த மணல்மேட்டை தோண்டிப் பார்த்தபோது முருகப் பெருமானின் கல் விக்கிரகத்தை கண்டு மனம் மகிழ்ந்தார். அழகாக இருந்த குறித்த சிலையின் இடுப்புப் பகுதிக்கு கீழ் முறையற்ற வேலைப்பாடு இல்லாது கரடு முரடாக இருக்கக் கண்டார். சிற்பியை அழைத்து கீழ்ப்பகுதியை திருத்தப் பணித்தார்.

உளியால் சிற்பி தட்டியபோது உதிரம் கற்சிலையில் இருந்து பெருக்கெடுப்பதைக் கண்ட சிற்பி பதறியடித்து "சாமிக் குற்றம்" ஆகிவிட்டது என்று பண்ணையாரிடம் தெரிவிக்கவே, முருகப் பெருமானின் விருப்பம் இவ்வண்ணம் இருப்பதே என்று உணர்ந்து அப்படியே தாபித்து கோயில் எழுப்பினார். இன்றும் கருவறையில் உள்ள இச்சிலையின் இடுப்புக்கு கீழான பாகத்தை வெள்ளிக்கவசத்தால் மறைத்து பூசை செய்கின்றனர்.



கந்த சட்டிக் கவசத்தை இயற்றிய பாலன் தேவராயன் சுவாமிகள் காங்கேயம் அருகில் உள்ள மடவிளாகம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் மைசூர் தேராச உடையாரின் காரியதரிசிகளில் ஒருவராக இருந்தவர். முருகப் பெருமானின் பணித்தமைக்கு அமைவாகவே சென்னிமலை முருகன் ஆலயத்தில் கந்தசட்டிக் கவசத்தை அருளிப் பாடி அரங்கேற்றினார். 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்ற கந்தர் சட்டிக் கவச வரி இம்முருகப் பெருமானையே குறிக்கிறது.


அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடி படிக்காசு பெற்ற திருத்தலம் என்பது இவ்வாலய அருட்சிறப்பை மேலும் புலனாக்கிறது.

சிவாலயச் சோழன் கட்டப்பட்ட திருக்கோயில்வாகும். பிரம்மகித்தித் தோசம் பீடிக்கப்பட்ட மன்னன் தான் வழிபடும் சென்னிமலை முருகனை வழிபட்டு தோசத்தில் இருந்து மீள்வதற்கு ஆலயத்திற்கு வந்தார். அப்போது ஆலயத்தில் பூசகர் எவரும் இல்லாதது கண்டு மனம் நொந்து சகுனத் தடையென எண்ணி வாடினார். சிவாலயச் சோழனின் வாட்டத்தைப் போக்க அர்ச்சகர் உருவில் முருகப் பெருமானே எழுந்தருளி மன்னனுக்காக பூசை செய்து மன்னனைப் பீடித்திருந்த பிரம்மகித்தி தோசத்தைப் போக்கியருளினார்.

இத்தகு சிறப்புகள் கொண்ட
சென்னிமலை முருகனை வழிபட :- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
சென்னிமலை,பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம். தொலைபேசி:- 04294 250223, 04294 250263(மலைக் கோயில்)

காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.

சிரகிரி வேலவன் சீக்கிரம் வந்து தமிழர் துயரங்களை போக்க பக்தியோடு வழிபடுவோமாக.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

11 comments: on "கந்தசட்டிக் கவசம் அரங்கேறிய திருத்தலம்"

சிவத்தமிழோன் said...

1 ஆகஸ்ட் 2009 என நாள் குறிக்கப்பட்ட திரிசக்தி என்னும் சஞ்சிகையில் வெளியாகிய கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சீரிய சிந்தையில் வலைப்பதிவாக்கினேன்.

நன்றி
என் கடன் பணி செய்து கிடப்பதே

சிவத்தமிழோன் said...

படங்கள் மற்றும் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொண்ட இணையத்தளங்கள்.

http://ta.wikipedia.org/wiki/சென்னிமலை

http://www.kanthakottam.com/index.php?/2009050861/sennimalai.html

http://www.chennimalaitemple.org/special-t.htm

தமிழ் ஓவியா said...

//உளியால் சிற்பி தட்டியபோது உதிரம் கற்சிலையில் இருந்து பெருக்கெடுப்பதைக் கண்ட சிற்பி//

நம்ப முடியவில்லை!
நம்ப முடியவில்லை!!

சிவத்தமிழோன் said...

ஓரிடத்தில் கடவுள் இருப்பதை நம்பி, மனம் ஒன்ற அந்த நம்பிக்கையுடன் பார்த்தால் அங்கே அவர் இருப்பார். நம்பிக்கையில்லாதபோது அங்கே அவர் இருப்பதை உணரமுடியாது என்ற பொருளுணர்த்தும்

"ஆக்கில் அங்கேஉண்டாய் அல்லது அங்கு
இல்லையாய்ப் பார்க்கில் பரமது அன்று உந்தீபற
பாவனைக்கு எய்தாதுஎன்று உந்தீபற"

என்ற திருவுந்தியார் பாடல் தங்களுக்கு பொருந்தும்.




பெரியாரின் பெரிய கொள்கை சாதியத்தை இல்லாது ஒழித்தல். ஆனால் திமுக அதிமுக என்னும் பெரிய அரசியலுக்குள் மூழ்கி கொள்கையைத் தொலைத்த நீங்கள் பெரியார் விசுவாசிகள் என உலகுக்கு நடிக்க சிவனே என்று இருக்கும் சைவத்தை சீண்டுவது அழகல்ல. சாதி எதிர்ப்பு சாதி எதிர்ப்பு என்று வெறும் பிராமண எதிர்ப்பை கொள்கையாக்கிய உங்களின் மடமையாலேயே இன்னொரு பாரதி பூக்காமலேயே போய்விட்டான். இன்னொரு பரிதிமாற்கலைஞர் என்னும் சூரியநாராயண சாத்திரி தோன்றாது போய்விட்டார். மீண்ட்ம் ஒரு உ.வே.சாமிநாதையர் இன்றுவரை பிறக்கவில்லை. திராவிடம் என்ற சொல்லின்மேல் பார்ப்பனர்க்கு பயத்தை உருவாக்கி அந்நியப் படுத்தி தமிழர் இல்லை என்ற உணர்வூட்டி மடமைக்கு வர்ணம் பூசி அழகுபார்த்தீர்கள். இலங்கையில் சிங்களவர் நீர்கொழும்பு புத்தளம் எனும் பண்டைய தமிழ் நிலத்தில் இருந்த தமிழரை சிங்களவராக்கி சிங்களவராகவே நடத்துவதால் "தமிழர்" என்ற உணர்வு அவர்கட்கு வரவேயில்லை. முஸ்லீம்களை தவறாக தமிழர் கையாள அதை சாதகமாக்கி முஸ்லீம் என்பதை தனி இனமாக்கி அழகுபார்த்தது சிங்களம். எங்கும் தமிழன் "அரவணைத்தல்" என்ற பதத்தையே மறந்து எதிரிகளை கூட்டிக் கொள்வதை வாடிக்கையாக்கிவிட்டான். இதுபோலவே தமிழகத்திலும் பார்ப்பனரில் "தமிழர் " என்ற உணர்விருந்தவர்கள் இன்று அருகிவிட்டனர். அல்லது இல்லை என்றே சொல்லலாம்.
எல்லாம் நீங்கள் செய்த மோட்டுத்தனம்.

பார்ப்பனரை எதிர்க்காது தமிழை நீசபாசை என்ற சுமார்த்தர்களை எதிர்த்திருக்க வேண்டியதே அறிவுடமை. இன்று நீங்கள் செய்த மடமைத்தனத்தால் சைவத் தமிழ் பிராமணர்களும் "சுமார்த்த வலையில்" சிக்கும் சூழ்நிலை.

அதுசரி, பார்ப்பனர் என்ற சாதியை எதிர்த்த நீங்கள் சாதித்தது என்ன? இன்றுவரை சாதிப் பெயர் இல்லாத பிறப்புச் சான்றிதழை உருவாக்க முடிந்ததா? சாதி அடிப்படையில் கல்வி என்றால் எங்கனம் சாதி மறையும்?

வன்னியில் ஒருகாலப் பகுதியில் சாதி என்பதே இல்லாது இருந்தது. சாதியில் ஊறிய யாழ்ப்பாணத்திலும் பெருமாற்றத்தை உருவாக்கி மறுமலர்ச்சிக்கு வித்திடப்பட்டது. இத்தனையும் "பார்ப்பன" எதிர்ப்பால் விளைந்ததல்ல. எல்லோருக்கும் தமிழுணர்வை ஊட்டியதால் விளைந்தது. எனவே முடிந்தால் முயற்சி எடுங்கள். முடியாது என்றால் வேடம் போடாது வேறு ஏதும் செய்யுங்கள்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் தி.க கொலைஞருடன் சேர்ந்து ஈழத்தமிழரின் இரத்தத்துக்கு காரணமானதை எவரும் மறக்கர். செத்துக் கொண்டிருந்தபோது "போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது" என்று ஊருக்கு அறிவித்து உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்திய கொலைஞரின் உதவியாட்கள் தானே நீங்கள். (நேர்மையோடு பெரியாரின் வழியில் நின்ற பெரியார் திராவிடர் கழகத்திற்கு ஈழத்தமிழர் சார்பில் மனமார்ந்த நன்றிகள்)

பெரியாரின் கொள்கைகளில் "சாதி அழிப்பில்" பற்றுண்டு, ஆனால் ஒரு குறித்த சாதியை மட்டும் எதிர்ப்பது மத எதிர்ப்பு என்ற பெயரில் அரசியல் அடியாள் பலமற்ற அமைதியான சைவத்தை சீரழிப்பதையோ ஏற்க முடியாது.


நீங்கள் பெரியார் பக்தர் என்றால் தங்கள் சிந்தைக்கு எட்டாத சிவன் பக்தன். நீங்களும் ஏதோ விதத்தில் கடவுள் பக்தி உடையர் என்பதை மனோவியல் அறிஞரிடம் சென்றால் உணர்விப்பர். உங்கள் கடவுள் பெரியார். அவர் சொன்னது எதுவானாலும் ஆய்ந்தறியாது கீதை எனப்போற்றும் அவரின் அடியவர் நீங்கள். எனவே தயவுசெய்து "கடவுள் நம்பிக்கை" இல்லை என்று எங்கும் சொல்லிவிடாதீர்.

பெரியார் சாதியை எதிர்க்க வெளிக்கிட அது " சாதி எதிர்ப்பை" எதிர்த்த பார்ப்பன எதிர்ப்பாகவே மாறி பாதை மாறியது. இன்று அவர் தொண்டர் என உலகுக்கு நினைவுபடுத்த சாதரண சைவம் உங்கள் கைகளுக்கு அல்வா ஆகிவிட்டது.

சிவத்தமிழோன் said...

மலேசியா பண்டைத் திராவிட நாடுகளில் ஒன்று. இஸ்லாமியர் அங்கிருந்த அகழ்வாய்வுச் சின்னங்களை அழித்தது கண்கூடு. மோல்டிவீஸ் என்ற மாலைதீவு அதற்கு இன்னொரு உதாரணம். ஆபிரிக்க கவிஞன் ஒருவன் "நீங்கள் வரும் போது உங்கள் கைகளில் பையிளும் எங்கள் கைகளில் நில உரிமையும் இருந்தது. இன்று எங்கள் கைகளில் பைபிளும் உங்கள் கைகளில் எங்கள் நில உரிமையும்" என்று கவிவடித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆப்கானிஸ்தானில் உள்ள புத்தர் சிலையை உடைத்தழித்த ஈனச்செயல் நினைவிருக்கும் என நினைக்கிறேன். எனவே சைவம் இல்லாவிட்டால் தமிழன் என்று பெருமைகொள்ள எந்த நினைவுச் சின்னங்களும் இருக்காது. ஏன் பெரியார் என்றும் கருப்புச் சட்டை என்றும் எவரும் உலாவமுடியாது. எனவே சைவத்தை வாழவிடுங்கள். உங்கள் வயிறை வளர்ப்பதற்கு உங்கள் பெயரை பிரபல்யப்படுத்துவதற்கு மத எதிர்ப்பென்று மடமையை வளர்க்காதீர்.


உருப்படியாக ஏதேனும் செய்யுங்கள். தமிழை நீசபாசை என்று முழக்கமிட்டால் எதிர்த்துக் குரல்கொடுங்கள். தமிழருக்கு ஆபத்து என்றால் கொலைஞரின் வேட்டிக்குள் ஒழியாது பெரியாரின் தடியைத் தூக்குங்கள். நானும் உங்களுடன் வருகிறேன். ஏன் என்றால் மதக்காழ்ப்புணர்ச்சி ஏதும் அற்று "சமண பௌத்த" நூல்களைக் காத்து தமிழ் உலகிற்கு வழங்கி தமிழின் அழகை ஆவணப்படுத்திய தமிழ் ஆதீனங்களான சைவ ஆதீனங்களின் சீடன். நன்றி.

Unknown said...

தமிழை வளர்ப்போம் சரி. அதுக்காக சஸ்டி என்பதை சட்டி என்று போடலாமா?
சஸ்டின்னா ஆறு. சட்டின்னா சமையல் பண்ற பாத்திரம். நல்லவேளை ஜட்டின்னு
போடாமல் விட்டீங்க. ஜட்டீன்னா வயத்துக்கு கீழே போடுற ஒரு ரெடிமேடு ஐட்டம்.
பாலன் தேவ ராயன் கோமனத்தோட வந்து உங்களை உதைக்கப் போறதா நேற்று என்னிடம் சொன்னார்.

சிவத்தமிழோன் said...

@அன்பர் ashokha

/////தமிழை வளர்ப்போம் சரி. அதுக்காக சஸ்டி என்பதை சட்டி என்று போடலாமா?/////

சட்டியில் இருந்தால்த்தானே அகப்பையில் வரும் என்பது தமிழில் வழக்கத்திலுள்ள பழங்காலப் பழமொழி! அதன் பொருள் கந்தசட்டி விரதம் இருந்தால் அகப்பையாகிய கருப்பையில் பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை பிறக்க வாய்ப்பு உண்டாகும் என்பதாகும். விஞ்ஞானபூர்வமாக சொல்வதென்றால் கருப்பையில் படிந்துள்ள மிதமிஞ்சிய கொழுப்பு கரைவதனால் பிள்ளை உருவாக வாய்ப்புண்டாகிறது. ஆக; பழமொழில் வழக்கத்தில் உள்ள சொல்தான் சட்டி! எளியேன் புகுத்திய சொல் அல்ல!!!

தமிழ் என்பதை ஆங்கிலத்தில் டமில் என்று எழுதுகின்றனர் ஆங்கிலேயர். ஏனெனில் தமிழ் என்னும் உச்சரிப்பைத் முழுமையாகத் தரக்கூடிய ஆங்கில எழுத்து எதுவும் இல்லை. அதற்காக ஆங்கிலேயர் வருந்துவதும் இல்லை. நாமும் சங்கடப்படுவது இல்லை. ஐயோ....உச்சரிப்பை பூரணப்படுத்த முடியவில்லையே என்று வருந்தி "த" வையும் 'ழ்' யையும் தமிழ்மொழியில் இருந்து கடன்வாங்கி ஆங்கிலத்தில் சேர்த்துக் கொள்ளவும் இல்லை!!!!

ஆனால் தமிழர்களாகிய நாம் மட்டும்......ஐயோ உச்சரிப்பு பிழைக்கிறதே என்று குய்யோ மைய்யோ என்று ஒப்பாரி வைத்து சமஸ்கிருத எழுத்துகளை தமிழுக்குள் கலந்து எழுதுகின்றோம்!!!! வெட்கம்!!!! வெட்கம்!!!!!

பத்து மொழிகளை கடன்வாங்கி உருவாகிய ஆங்கிலமொழியே ஏனைய மொழிகளின் உச்சரிப்பை பூர்த்திசெய்ய அவ்மொழிகளின் எழுத்துக்களை தன்னோடு இணைத்துக் கொள்ள முனையாதபோது...செம்மொழிக்கு ஏன் இந்த தேவை?

உலகத்தில் வழக்கத்திலுள்ள சொற்கள் எல்லாவற்றையும் தமிழில் அதே உச்சரிப்பில் எழுத வேண்டும் என்று தாங்கள் துடித்தால்....தமிழ் தமிழாக இருக்காது!!! சமசுகிருதமொழியில் தமிழைக் கலந்து எழுத முனையுங்கள்......முடிந்தால்? ஆலயக் கருவறையிலேயே தமிழில் பேசுவது தீட்டு என்று சொல்வர்!!!!

சங்கதமொழியை அவமரியாதை செய்யவில்லை! தமிழ்மொழியை சங்கதமொழிச் சொற்களை தேவையில்லாமல் கலந்து தமிழின் அழகைக் கெடுக்கவிரும்பவில்லை!!! எளியேன் ஏற்கனவே பழமொழிகளில் புழக்கத்தில் சஷ்டி என்பதற்கு சட்டி என்று இருந்ததால்த்தான் கந்தசட்டி என்று எழுதினேன்.

/////ஜட்டின்னு
போடாமல் விட்டீங்க/////


உங்களுடைய வலைப்பூ பார்த்தேன். உங்களுடைய வயதை மதிக்ககூடியதாக இருந்தது தங்களின் நிழற்படத்தைக் கொண்டு தங்களின் வயதையும் மதிக்கக்கூடியதாக இருந்தது.

இது தங்களின் வயதுக்கு அழகான எழுத்தா? தங்களின் வயதுக்கு அழகை ஏற்படுத்தும் சொற் பிரயோகங்களா?


"சிங்கக் குருளைக்கிடும் தீஞ்சுவை ஊனை நாயின் வெங்கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினளே"
என்று இலக்குவணன் தனது கல்விச்சிறப்பையும் குலச்சிறப்பையும் மறந்து கொடுஞ்சொற்களை பாவித்து கைகேயியை பேசுகின்றமை வாயிலாக இலக்குவணனின் கொடுங்கோப நிலையை கம்பன் காட்டினார். அது கம்பனின் கைவண்ணம்!!!

தாங்களும் தங்கள் மேன்நிலையை மறந்து இழிவான உதாரணங்கள் கொண்டு பின்னூட்டமிட்டமை கொண்டு தங்களின் கோபத்தின் உச்சத்தை புரிந்து கொள்ளமுடிகிறது!!! தனது அண்ணனின் அரசுரிமை பறிக்கப்பட்டமையால் இலக்குவணன் கோபம் கொண்டமை நியாயம்!!!! சங்கதமொழிச் சொல் பயன்படுத்தாமைக்கு இப்படி கோபம் கொள்கின்றீர்களே..........நீங்கள் தமிழரா? வடக்கரா?

//பாலன் தேவ ராயன் கோமனத்தோட வந்து உங்களை உதைக்கப் போறதா நேற்று என்னிடம் சொன்னா////

உபநிடதம்...ஆன்மீகம் பற்றியெல்லாம் எழுதுகின்றீர்களே.........சைவ அடியாரை இப்படி அவமாரியாதை செய்தா எளியேனை நிந்திக்க வேண்டும்? எளியேனை நிந்திக்க சைவ அடியாரை கேவலப்படுத்தி கோவணம் கீவணம் என்று எழுதுகின்ற அளவுக்கு சங்கதமொழி வெறி பிடித்துவிட்டதோ?

அது எப்படியென்று தெரியவில்லை....தமிழினத்தில் மட்டும் இப்படி ஒரு இழி சிந்தனை உண்டு!!! இரசியர்களுக்கோ......பிரச்சுக்காரர்களுக்கோ.....ஆங்கிலேயர்களுக்கோ இல்லாத சிந்தனை செம்மொழித் தமிழரிடம் ஏன் ஏற்பட்டது? பிரஞ்சு நாட்டுக்குப்போனால் அவனுடைய உச்சரிப்புக்கு ஏற்றாற்போல் நமது பெயரையே சுருக்கிக்கொள்கிறோம்....அல்லது மாற்றிக் கொள்கிறோம்!!!! ஆனால் அவனுடைய பெயரை ஒழுங்காக உச்சரிக்க வேண்டுமென்று சொல்லி சங்கதமொழியிடம் ஒலியை கடன் வாங்குகின்றோம்!!!! என்னே அசிங்கம்!!!! ஏதேனும் ஒரு மொழி தமிழ்மொழிச் சொல்லை கடன் வாங்கி இன்னொரு மொழியின் சொல்லுக்கு தனது மொழியில் முழுமையான உச்சரிப்பைக் கொடுத்துவருவதாக சரித்திரம் உண்டா? சிந்திக்க!!!!

Unknown said...

சரி...சரி...திட்டாதீங்க... நான் நல்ல முருக பக்தன்...பாலன் தேவராயன் பற்றி தேடி கடைசியில் உங்களிடம்தான் தெரிந்து கொண்டேன். ரொம்ப நன்றி..நேரம் கிடைத்தால் என் படைப்பைப் பாருங்கள்...

Unknown said...

சிவத் தமிழா சீறும்தமிழனாக மாறிவிட்டாயே...உன்னைக் கோபப் படுத்தியதற்கு
மன்னிப்பாயா...ஒரு பதிலை எழுதிவிட்டு அப்புறம்தான் உன் பதிலைப் படித்தேன். அப்புறம்தான் தெரிந்தது என் வலைத் தளங்களைப் பார்த்துவிட்டாய் என்று. பஸ்ஸில் ஏறிவிட்டு அதன் பின் எந்த ஊர் போகிறது என்று போர்டை எட்டிப் பார்க்கும் இந்த அவசரக் குடுக்கையை மன்னித்துவிடு.. பாவம் பிழைத்துப் போகிறான் அசோகச் சிறு பயல்....

சிவத்தமிழோன் said...

எளியேன் திட்டியதாக நினைக்கும் வண்ணம் எளியேனின் பின்னூட்டம் இருக்குமானால் மன்னித்துவிடுக.நம் இருவரின் கருத்துப்பகிர்வும் முருகப்பெருமானின் திருவருளே!!!

Unknown said...

புலவர்களே, தங்களுக்குள் போட்டி இருக்கட்டும் ஆணால் சண்டை வேண்டாம், அமைதியாக உரையாடினால் யாம் மிகவும் மகிழ்வோம்....ஹி...ஹி...ஹி...திருவிளையாடல் சிவாஜி கணேசன்.

Post a Comment