சூரியவழிபாடு தொன்றுதொட்டு மனிதக்குடியில் இருந்தவந்த ஒன்றே! எந்தவொரு தனிப்பண்பாட்டுக்கும் உரிய அலகாக சூரியவழிபாடு இருந்ததில்லை!!! ஆயினும் பிற்காலந்தில் எழுந்த மதங்கள் முன்னர் இருந்த வழிபாடுகளை அழிப்பதிலும் தடுப்பதிலும் இருந்ததனால் உலகில் சூரியவழிபாடு மறையத்தொடங்கிற்று. ஆயினும் இந்தியப் பெருங்கண்டத்தில் சமயத்துறையில் எந்தவொரு தெய்வவழிபாடும் வெறுக்கப்படவில்லை! எனவே சூரியவழிபாடும் சைவ-வைணவ சமயத்துறைகளில் சிறப்பான இடம்பெற்றன!
அந்தவகையில்;
சூரியதேவனை சிவபெருமானின் அட்டமூர்த்தவடிவங்களில் ஒன்றாக சிறப்பித்து சூரியவழிபாட்டை சைவசமயம் சிறப்படையச்செய்துள்ளது என்றால் மிகையில்லை!!!
தைப்பொங்கல் திருநாள் என்பது சூரியனுக்கும் உழவர்களுக்கும் உழவுக்கு உதவுகின்ற பசு,காளை மாடுகளுக்கும் நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு தமிழர்கள் தமது வாழ்வில் தொன்றுதொட்டு கொண்டாடிவருகின்ற திருநாளாகும். இன்று சில அரசியல் விசமிகள் இந்த திருநாளுக்கும் மதவழிபாட்டுக்கும் எந்தத்தொடர்ப்பும் இல்லை என்பதுபோல் ஒருமாயையை ஏற்படுத்தி அதனூடாக தமது கருப்புச்சட்டை அரசியலை அரங்கேற்றி வருகின்றனர்!!! தமிழர்களின் உணர்வோடுகலந்த இந்த இனியநாளிளை சைவநெறிச்சால்பில் இருந்து பிரித்தெடுத்தால்த்தான் மதமாற்றங்களை எளிதே செய்யமுடியும் என்பதனாலும் புறச்சமயத்தவர் இது மதவிழா அல்ல என்பதுபோல் தலையாட்டுகின்றனர்!!!!
சூரியவழிபாட்டை கிருஷ்வமதமும் இஸ்லாமியமதமும் மறுக்கின்றன!!! எருது,பசு வழிபாட்டுக்குரிய மாட்டுப்பொங்கலும் இம்மதங்களின் புனிதநூல்களால் ஒதுக்கப்படும் மிருகவழிபாட்டு நிகழ்வுகளே!!!! எனவே; தைப்பொங்கல் என்பது யதார்த்தமாகவே கிருஷ்தவத்தமிழர்களிடமிருந்தும் இஸ்லாமியத் தமிழர்களிடமிருந்தும் மதரீதியாக அந்நியப்படுகின்றது!!! எனினும் சில தேவசபைகளில் தைப்பொங்கல் கொண்டாட்டங்களை மதமாற்றச்சூழ்ச்சிகளுக்காக தமது மதச்சட்டங்களை கண்டுகொள்ளாது ஏற்பாடுசெய்கின்றமை வழமையாகிவிட்டது.கொடியேற்றம்,மேள-தாள நாதசுவர இசை,தேரோட்டம் ஆகியவற்றை தமது திருச்சபைகளில் புகுத்தியவர்களுக்கு இதுவொன்றும் புதிதல்ல!!! திருவள்ளுவர் கிருஷ்வர் என்று ஆராய்ந்து கண்டுபிடித்தவர்களுக்கும் அதற்கு ஆமாம் போட்ட நாத்தீக அரசியல்வாதிகளுக்கும் இதுவொன்றும் விசித்திரமானதொன்றல்ல!!!
ஆனால்;
தைப்பொங்கலை சைவசமயத்தவர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும்வகையில் இது மதசார்பற்ற விழா என்று பாண்டித்தியம் பேசும் அறிஞர்களின்(?) உள்நோக்கத்தினை சைவத்தமிழர் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்!
சைவசமயத்தையும் தமிழையும் பிரித்துப் பார்ப்பதென்பது உயிரையும் உடலையும் பிரிக்க எத்தனிப்பதற்கு நிகரானது!!! இருகண்களில் ஒருகண் மட்டுமே போதும் மனிதனுக்கு என்னும் மடமைக்கு நிகரானது!!!! சைவமும் தமிழும் ஒன்றோடு ஒன்று கலந்த பந்தத்தை உடையது!!!!
அரசியல் ஒருதலைமுறைக்கு சாப்பாடு போடும்!!! தமிழர்சால்பு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது! அதை ஒருதலைமுறைச் சாப்பாட்டுக்காக சீர்குலைக்காதீர்!!!!
இருநிலனாய்த் தீயாகி நீருமாகி
இயமானனாயெறியுங் காற்றுமாகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி
ஆகாச மாயட்ட மூர்த்தியாகிப்
பெருநிலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவும் தம்முருவுந் தாமேயாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே பொழிப்புரை :பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும், ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.
"இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாயெறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாச மாயட்ட மூர்த்தியாகி"என்று அப்பர் பெருமான் அருளிய நின்ற திருத்தாண்டகத்தில் எம்பெருமானின் அட்டமூர்த்த வடிவங்கள் சிறப்பிக்கப்படுகின்றது.ஆக; சூரியதேவன் சிவபெருமானின் அட்டமூர்த்த வடிவமாமையால் தைப்பொங்கல் சைவநிகழ்வுகளில் முதன்மையான தொன்றாகும்.
பொங்கலோ பொங்கல்!!!!
தைத்திருநாள் வாழ்த்துகள்!!!!!
பேரூராதீனம் சீர்வளர்சீர் சாந்தலிங்கஇராமசாமிஅடிகளார் அவர்கள் உழவர்திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கிய அருளாசிச்செய்தி
திருவெம்பாவை நோன்பு 30ம் திகதி ஆரம்பமாகியுள்ளது, வருகின்ற 8ம் திகதி ஆதிரை நாளில் முடிவுறுகின்றது. திருவெம்பாவை நோன்பை நோற்கும் சைவப்பெருமக்கள் கேட்டு மகிழும் பொருட்டு; திருவெம்பாவை முழுப்பாடலையும் யூடியூப்பில் இருந்து இங்கு இணைத்துள்ளேன். எல்லாம் திருவருட் சம்மதம்
திருவெம்பாவை பாடல் முழுவதையும் பொருளுரையுடனும் குறிப்புரையுடனும் படித்து மகிழுவதற்கு கீழுள்ள "திருவெம்பாவை பாடல்கள்" என்னும் இணைப்பை அழுத்துக. நன்றி திருவெம்பாவை பாடல்கள்
திருவெம்பாவை,திருப்பள்ளியெழுச்சி என்பவற்றை தரவிறக்கம் செய்வதற்காக கீழுள்ள வலைத்தளங்களுக்கு செல்ல வேண்டுகிறேன். சைவமக்கள் யாவரும் பயன்பெறும் வண்ணம் ஏராளமான சைவசமய திருமுறைப் பாடல்களை தரவிறக்கம் செய்யும் வசதியுடன் இவ்வலைத்தளங்களில் இணைக்கப்பட்டுள்ளது. அருமையான ஒரு சிவப்பணி! ஈடு இணையற்ற சைவப்பெரும்பணி இது. சைவ உலகமே பயன்பெறும் வண்ணம் சிவப்பணியாற்றும் குறித்த வலைத்தள சைவ அன்பருக்கு எளியேனின் பணிவான நன்றிகள்.
பாரதசமய பண்பாடு என்பது சமய ஆராய்வுகளால் எழுப்பப்பட்டது. வெறுமனே ஒருவர் தோன்றி இதுதான் சமயம்,இதுதான் கடவுள்,இதுதான் சமயநூல்,இதுதான் கடவுளுக்கும் உயிருக்குமான தொடர்ப்பு என்று ஆணையிடப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டது பாரதசமயப் பண்பாட்டு அல்ல! அது பாரதசமயப் பண்பாட்டுக்கு முரணானது!
விஞ்ஞானிகள் ஆராய்வுகளை மேற்கொண்டு கருதுகோள்களை வெளிப்படுத்தி பரிசோதித்து பார்ப்பதுபோல், பாரதசமயப் பண்பாட்டு மெஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் என்ன தொடர்பு என்பதை தமது அனுபவ உணர்வுகள் வாயிலாக ஆராய்ந்து தத்துவநூல்களுடாக மானிடருக்கு வெளிப்படுத்தினர்.
விஞ்ஞானிகளிடம் பல கருதுகோள்கள் எழுவதுபோல் ஒவ்வொருவரும் தமது மெஞ்ஞான சித்திக்கு அமைவாக தமது அனுபவ உணர்வுகளை வெளிப்படுத்தினர். அவற்றை அவர்களுடைய சீடர்கள் மேலும் மேலும் அனுபவ வாயிலாக உணர்ந்து மெருகூட்டினார்கள். இப்படி வளர்ந்ததுதான் பாரதப்பண்பாட்டு சமயத்தத்துவங்கள்.
இந்த சமயதத்துவ ஆய்வில் வெளிப்பட்டவையே அத்துவிதம்,துவைதம் என்பனவாம். இதில் அத்துவித தத்துவத்தை அதிகமாக பலர் அனுபவ உணர்வுகளுடாக பலஞானிகள் தமது ஞானசித்திக்கு அமைவாக கண்டறிந்து வெளிப்படுத்தினர். அவையாவன;
துவைதம்,சங்கரரின் அத்வைதம்,விஷிட்டாத்வைதம் ஆகியவற்றை வேதாந்தம் என்பர். பிரம்மசூத்திரத்துக்கு விளக்கவுரை வழங்குவதனாலேயே வேதாந்தம் என்று கூறுவர். மெய்கண்டாரின் அத்வைதம் சைவசித்தாந்தம் என்று போற்றப்படும். தென்னாட்டுச் சைவசமயத்தின் சால்பாக சைவசித்தாந்தம் விளங்குகின்றது.
சங்கரரின் அத்துவிதம் ஏகன்மவாதத்தை கொண்டது. அதாவது கடவுளும் ஆன்மாவும் ஒன்றே எனும் கருத்தை வலியுறுத்துவது. விஷிட்டாத்வைதம் ஆன்மா கடவுளிடம் இருந்து வெளிப்பட்டது என்கின்றது.
மெய்கண்டார், நாயன்மார்களால் இலைமறை காயாக சைவசமய திருமுறைகளில் சொல்லப்பட்ட அத்துவிதத்தை அகச்சந்தானகுரவராகிய சத்தியஞானதரிசினிகள் வாயிலாக தெளிவுற்று, அதனை வளர்ப்பதற்கு சிவஞானபோதம் என்னும் சைவசித்தாந்த தமிழாகமநூல் எழுதி குருபரம்பரையை நிறுவினார். இதன் காரணமாக சைவசித்தாந்த அத்துவிதத்தை மெய்கண்டார் அத்துவிதம் என்றும் அழைப்பர்.
சங்கரர், இராமனுசர் போன்றோரின் அத்துவிதக் கருத்துகளில் இருந்து முரண்பட்டு அத்துவிதத்திற்கு சைவத்திருமுறைகளில் காணபட்ட அருமையான விளக்கத்தை உணர்ந்து மெய்கண்டார் சிவஞானபோதமாக வெளிப்படுத்தினார். அதுவே சைவசித்தாந்த அத்துவிதமாகும்.
உலகம்,ஆன்மா ஆகியவை யாவுமே பிரம்மம் என்றால் பிரம்மத்தினை ஆன்மாவாகும் உலகமாகவும் ஆக்கியது எது என்னும் கேள்விக்கு சங்ரரின் அத்வைதம் மாயை என்கின்றது. அப்படியானால் மாயையால் பாதிக்கப்படக்கூடிய பிரம்மம் முழுமுதற்தன்மை உடையதல்ல என்பது உறுதியாகின்றது. குறையுடைய பொருள் என்று ஆகிவிடுகின்றது.
பிரம்மத்தில் இருந்தே ஆன்மாக்கள் வந்தன என்றால் முக்தி என்பது (பிரம்மத்துடன் சேருவது) நிலையற்றதாகின்றது. நிலையற்றதான முக்தியை நாடவேண்டிய அவசியம் என்ன?
ஆக; இவ்வாறான முரண்பாடுகளை.....ஐயங்களை அகற்றும்படி அத்துவிதத்துக்கு சைவசித்தாந்தம் அழகாக விளக்கம் அளிக்கின்றது.
இறைவன் ஆன்மாவுடன் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்கின்றான் என்பது சைவசித்தாந்த கொள்கையாகும்.
அதாவது சைவசித்தாந்தம் என்பது முப்பொருள் உண்மையை வலியுறுத்துகின்றது. பதி(இறைவன்),பசு(ஆன்மாக்கள்),பாசம்(மும்மலங்கள்-ஆணவம்-கன்மம்-மாயை).ஆன்மாக்கள் தொன்றுதொட்டு இருப்பவையாகும். யாராலும் தோற்றுவிக்கப்படாதவை. ஆணவமலத்துள் கட்டுண்டு இருக்கும் ஆன்மாக்களை ஆணவமலத்திலிருந்து விடுவித்து முக்தி அளிப்பதற்காக இறைவன் தனு,கரண,புவன போகங்களைப் படைத்து அவற்றை ஆன்மாக்கள் அனுபவிக்கச் செய்து பக்குவப்படவைத்து மும்மலங்களையும் அறுத்து வீடுபேற்றை நல்குகின்றான் என்கிறது சைவசித்தாந்தம். வீடுபேற்றை பெற்ற ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுப்பதில்லை.ஆக; நிலையான முக்தி!
ஆணவமலத்துள் கட்டுப்பட்டுள்ள ஆன்மா இறைவனை அடையும் வரை தானே இயங்கும் என்று சொன்னால் அது இறைவனின் முழுமுதற்தன்மைக்கு இழுக்கு! தானே யாவற்றையும் அறியும் என்று சொன்னால் அதுவும் இறைவனின் முழுமுதற்தன்மைக்கு இழுக்கு ஆகிவிடுகின்றது! தானே இயங்கும்.....தானே அறியும் அறிவுடையது என்றால் இறைவன் எதற்கு? அவை கடவுளை அண்டியிருக்க வேண்டிய தேவையில்லையே!!!!
தானோ இயங்கும் தானே சிந்திக்கும் எந்திர மனிதர்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயலுவது பற்றியும் அதனது விபரிதங்கள் பற்றியும் இன்று பரவலாக பேசப்படுகின்றது. மனிதனுக்கு சவாலாக இத்தகைய எந்திர மனிதர் அமைந்துவிடுவர் என்பதே மிகப்பெரிய விபரீதமாக பேசப்படுகின்றது. அதுபோல் இயக்கத்துக்கும் அறிவுக்கும் இறைவனிடத்தில் ஆன்மா தங்கியில்லை என்றால் அது இறைவனின் முழுமுதற்தன்மைக்கு இழுக்காகவே அமையும்!
எனவே சைவசித்தாந்தம் உயிர்கள் தானே அறியும் ஆற்றல் அற்றவை என்றும் இறைவன் அறிவிக்க அறிவன என்றும் கூறுகின்றது. அதுபோலவே இறைவன் உயிர்களோடு உடனாக இருந்து இயக்குகிறான் என்கிறது.கடவுள் உயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் உடனாகவும் இருந்து உயிர்களை இயக்குகின்றான்.உயிர்களுக்கு அறிவிக்கின்றான். உயிர்கள் இறைவன் அறிவிக்க இறைவனால் அறிந்து கொள்கின்றன.
கடவுளே தன்னில் இருந்து உயிர்களைப் படைத்தார் என்றால்,அவை மீண்டும் தன்னை வந்தடைய வேண்டும் என்று கருதுகின்றார் என்றால், எதற்காக உயிர்களைப் படைத்தார் என்கின்ற கேள்வி உருவாகின்றது?
ஆனால் இங்கு கடவுளோடு சேருவதே முக்தி ஆகையால்; தன்னோடு வந்து சேருவதற்காக உயிர்களைப் படைக்க வேண்டிய நோக்கம் ஏன் எழுந்தது?
எனவே உயிர்களும் அநாதியானவை என்கின்றது சைவசித்தாந்தம்!!!!
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அநாதி - திருமந்திரம்
அருளுடைய பரமென்றோ அன்று தானே யானுளன் - தாயுமானவர்
முக்தியில்; தன்னோடு நிலையாக இணைத்துக் கொண்டபோதும்; சீவனை சிவமாக்கியபோதும் சீவனால் சிவன்போல் ஐந்தொழில்கள் ஆற்ற முடியாது. சிவனோடு கலந்து சிவமாகி சிவானந்தத்தை நுகருமே ஒழிய; சிவன்போல் தொழில்கள் ஆற்ற முடியாது.
இப்பாடலை நெஞ்சுக்குள் நிறுத்தி உள்ளத்தால் உருகி படித்தால் இப்பாடலில் சூட்சுமமாக சொல்லப்பட்டுள்ள உண்மை புலனாகும்.
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை -முக்திநெறி அறியாத மூர்க்கரோடு இருந்த என்னை என்பது பொருளாகும். அதாவது ஆணவமலத்துள் அழுத்தி கண்ணில்லாத தேனீபோல் தத்தளித்து துன்பப்பட்டுக்கொண்டிருந்த என்னை என்று பொருள் கொள்க.
பத்திநெறி அறிவித்துப் -பக்தி வழியைக் காட்டி -தனு,கரண,புவன போகங்களைப் படைத்தருளி அதனை அனுபவிக்கச் செய்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிதந்து பக்தி மார்க்கம் தந்து அதனூடாக
பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்து-பழைய வினைகள் எல்லாம் கெட்டொழியும்படி அறிவை பற்றியுள்ள மூலமலத்தை(ஆணவமலத்தை) போக்கி
சிவமாக்கி எனையாண்ட - சிவமாக்கி என்னை ஆட்கொண்ட - சிவத்தன்மையாக்கி என்னை ஆட்கொண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே - இறைவன் பெருங்கருணையினால் தானே வந்து தனக்கு அருளிய அத்தகைய அருமையை யார் தான் பெறுவர்!
ஆணவமலத்துள் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த தன்னை அதிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இறைவன் ஆன்மாவாகிய தன்மீது கொண்ட பெருங்கருணையின் நிமித்தம் தன்னை தனு,கரண,புவன போகங்களை அனுபவிக்கச் செய்து பிறவிகள் தந்து அதனூடாக பக்குவப்படவைத்து இன்பம்-துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்கின்ற அருமையை ஏற்படவைத்து கன்மம்,மாயை ஆகியவற்றை உதரியபின் மூலமலமாகிய ஆணவமலத்தை தானே முன்வந்து நீக்கி சிவமாக்கி நிலையான பேரின்பத்தை தந்தருளிகின்றான் என்பதை சூட்சுமமாக இப்பாடலில் உணர்த்துகின்றார் மாணிக்கவாசகர்.
சிவமாக்கி என்னை ஆண்ட என்ற பதமும் அத்தன் எனக்கு அருளியவாறு என்கின்ற பதமும் நமக்கு தெளிவாக ஒருசெய்தியை உணர்த்துகின்றது. அது யாதாயின்; இறைவனே நமக்குள் இருக்கின்ற சிவத்தன்மையை உணரவைத்து(ஒன்றாய்,வேறாய்,உடனாய் ஆன்மாக்களோடு இறைவன் கலந்திருக்கின்ற தன்மையை) நமக்கு வீடுபேறு அருளி நிலையான முக்தியை தந்தருளிகின்றான் என்பதையாகும்.
வேதாந்த அத்வைதத்துக்கும்(கேவலாத்வைதம்) சைவசித்தாந்த (சுத்தாத்வைதம்) அத்வைதத்தும்மும் உள்ள வேறுபாடுதான் என்ன?
வேதாந்திகள் அத்வைதத்துக்கு சொல்லும் பொருள் இரண்டின்மை( இரண்டு இன்மை). சைவ சித்தாந்தம் அத்வைதத்துக்கு சொல்லும் பொருள் இரண்டன்மை ( இரண்டு அன்மை).
ஒன்றா காமல் இரண்டா காமல்
ஒன்று மிரண்டு மின்றா காமல் - இருபா இருபது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல்த்துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் நா.ஞானகுமாரன், எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டுச் சிறப்பு வெளியீடாக வந்த தனது நயந்தரும் சைவசித்தாந்தம் என்னும் நூலில் இரண்டின்மை, இரண்டன்மை என்னும் சொற்களில் உள்ள வேறுபாட்டை குறள் கொண்டு அழகாக தெளிவுபடுத்துகிறார்.
பொருள் அல்லவற்றைப் பொருளெண்றுணரும்
மருளானா மாணப்பிறப்பு -திருக்குறள்
-"அல்ல என்பதன் வழி பொருளின் இன்மைத்தன்மை எடுத்தாளப்படவில்லை. இதற்குப் பதிலாக பிரிதொரு பொருளின் இருப்பு உள்ளீடாக ஏற்கப்படுவதாகின்றது"
பொருள் இல்லை என்றால் இன்மையை வெளிப்படுத்துகின்றது. பொருள் அல்ல என்றால் அது மறைமுகமாக இன்னொரு பொருள் இருப்பதை வெளிப்படுத்துகின்றது.
நன்கொடை வாங்கும்போது "பொருள் அல்லது பணமாக தாருங்கள்" என்பர்! இது பொருள் இல்லை பணமாக தாருங்கள் என்று சொற்றொடர் அமைக்க முடியாது. ஏனெனில் இல்லை என்பது இன்னொரு பொருளை மறைமுகமாக சுட்டாது. ஆனால் அல்ல என்பது இன்னொரு பொருளை மறைமுகமாக சுட்டும்.
எனவே இரண்டின்மை என்பது ஒன்றுதான் என்பதை சுட்டுகின்றது. ஆனால் இரண்டன்மை என்பது "ஒன்றுமல்ல;இரண்டும் அல்ல!" என்பதை சுட்டுகின்றது.
வேதத்தில் ஏகமேவ அத்துவதீயம் பிரமம் என்னும் அடியில் ஏகம்,அத்வைதம் என்னும் இரு சொற்களும் ஒன்று என்பதாகாது என்பதை சித்தாந்தம் தெளிவுபடுத்துகின்றது. ஏகம் என்பது ஒன்றென்பதையும் அத்வைதம் என்பது இரண்டல்ல என்பதையும் சுட்டுகின்றது என்று சித்தாந்தம் தெளிவுபடுத்துகின்றது. இரண்டன்மை நிலை என்றால் என்ன?
கலப்பினால் ஒன்றாயும் பொருள் தன்மையால் வேறாயும் செயல்படுதன்மையில் உடனாயும் இறைவன் ஆன்மாவுடன் இருக்கும் தன்மையே அத்துவிதம் என்று சைவசித்தாந்தம் கண்டது. அதாவது ஒன்றும் அல்ல! இரண்டும் அல்ல! இப்படி இருக்கும் தன்மையே உண்மையான அத்துவிதத்தின் பொருள் என்று தெளிவுபடுத்தி விளக்குவதே சைவசித்தாந்தம்.
வேதாந்திகள் தத்துவம் அசி -அதுவே நீ என்கின்றனர். ஆனால் சைவசித்தாந்தம் "நீ அதுவாக வேண்டும்" என்று தத்துவம் அசி என்னும் மகாவாக்கியத்துக்கு பொருளுரைக்கின்றது.
பொழிப்புரை :
ஊழிக் காலத்தில் அனைத்தையும் ஒடுக்குவோனாய், ஒடுங்கிய உடலைத் தானொருவனே முதற்பொருளாய் நின்று தோற்றுவிப்பவனாய், சக்தி சிவம் என இருவகைப்பட்டவனாய், முக்குண வடிவினனாய், எக்காலத்தும் மாறுபடாத நான்மறை வடிவினனாய், ஐம்பெரும்பூதங்கள், ஆறுசுவை, ஏழு ஓசை, எட்டுத்திசை ஆகியவற்றில் நிறைந்தவனாய், உயிரோடு ஒன்றாகியும், வேறாகியும், உடனாகியும் விளங்கும் இறைவனது இடம் திருவீழிமிழலை. நன்றி:-http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1011
ஒன்றாய் - உடலும் உயிரும் கலந்து இருப்பதுபோல் ஒன்றாய் - (கலப்புத்தன்மையில்)
"சிவனருளாலே சிவன் தாள் வணங்கி" - மாணிக்கவாசகர்
விளக்கொளி பொருளைக் காட்டினாலும் கண்ணொளி அதைக் கண்டுவிடாது காணும்போது உயிரறிவும் உடன்நின்று காணுதல் வேண்டும். அதாவது தெருவில் யாரேனும் தெரிந்தவர் நம் எதிரே வந்துகொண்டு இருப்பர். ஆனால் நமது சிந்தனை ஓட்டம் வேறு எங்கோ இருக்கும். ஆனால் நாம் நடந்துகொண்டிருப்போம். வந்தவர் "என்னப்பா எதிரே வருகிறன்...தெரியாமல் மாதிரி போகிறியே!" என்பார். இது கண்ணில் விழுந்த காட்சியை உயிரறிவு பெற்றுக் கொள்ளாமையினால் வந்ததாகும். உயிரறிவு கண்ணொளியுடன் உடனாக செயற்படாமையால் வந்ததாகும்.
ஆக; இறைவன் ஆன்மாவோடு என்றுமே பிரிக்கப்படாதவராக; ஆன்மாவுடன் ஒன்றாய்,வேறாய்,உடனாய் அத்துவிதமாய் இருப்பார்.
முக்தி நிலையிலும் சரி; முக்திக்கு முன்னரும் சரி இந்தநிலையில் மாற்றமில்லை!!!
எனக்குள்நீ என்றும் இயற்கையாப் பின்னும்
உனக்குள்நான் என்ற உறுதிகொள்வ தெந்நாளோ - தாயுமானவர்
(பொ - ள்.) (ஆருயிர்கள் கட்டு நிலையில் இருவினைத் தொழில்களை ஈட்டலுந்துய்த்தலும் செய்து கட்டறுத்தற்பொருட்டு முதல்வன் அவ்வுயிர்களினுள் மறைந்து நின்றருள்வன்) அம் முறையில் (ஆருயிர்கள்) எனக்குள் நீயென்று நிற்கும் இயற்கைபோல் (ஒட்டு நிலையில் திருவடித்துய்ப்பின் பொருட்டு அவ்வுயிர்களைத் தன்னுள்ளடக்கித் தான் முன்னருள்வன் சிவன்) ஒட்டு நிலையில் உனக்குள் நான் என்ற உறுதிகொள்வ தெந்நாளோ?
இப்படி இறைவன் ஆன்மாவின் பொருட்டு; ஆன்மாவோடு ஒன்றாய்,வேறாய்,உடனாய் புணர்ந்திருக்கும் புணர்ப்பே இரண்டன்மை ஆகும்.
சைவசித்தாந்தம் கூறும் அத்துவித விளக்கமாகிய இரண்டன்மையே உண்மையான அத்துவிதபொருள் என்பதை எப்படித் துணியலாம்? வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன்இங்குத் தெரிக்கலுற்றாம்.- சிவப்பிரகாசம்
வேதத்தின் முடிவிற் தெளிவாகியுள்ள சைவசித்தாந்தம் - மதுரை சிவப்பிரகாசர்
வேதத்தின் முடிவிலே சொல்லப்பட்ட தெளிவான சைவசித்தாந்தம் - சிறி சிதம்பரநாதமுனிவர்
பதி,பசு,பாசம் என்னும் முப்பொருள்களைப் பிரதிபலிக்கும் வேதாந்தத்தின் தெளிவுப் போதமாகிய சைவசித்தாந்தம் - காசிவாசி செந்திநாதையர்
வேதாந்தத்தைத் தெளிந்து உரைக்கும் சைவசித்தாந்தம் - திருவிளங்கம் அவர்கள்
இவ்வாறு சமய அறிஞர் வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் என்பதற்கு பொருள்காண்கின்றனர்.
வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ் செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே -திருமந்திரம்
பொழிப்புரை :
வேதத்தின் முடிந்த பொருள் இன்னது எனத் தெளிவாக விளங்குவதாகிய சித்தாந்த சைவத்தில் நின்று, நாத முடிவான தத்துவங்களைக் கண்டு கழித்தோரே, பின் ஒரு காலும் அசைவில்லாத திண்ணிய மெய்யுணர்வைப் பெற்றவராவர். பின்னும் அவர் `நான்` என்னும் தற்போதமும் கழலும்படி உணர்வு திருந்தப் பெறுவாராயின், நாதமுடிவில் விளங்கும் நிறை பரம் பொருளாகிய சிவமாந்தன்மையைப் பெறுவர். அதனைப் பெற்றோரே உண்மை ஞானத்தால் உண்மை ஞேயத்தை எய்தினோராவர். நன்றி:- http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10501
கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதம் மேலித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே -திருமந்திரம்
பொழிப்புரை :
கற்கத் தக்கனவாகிய சிவாகமங்களைக் கற்று, அவைகளிலே சிறப்பாகப் பொருந்தியுள்ள பிராசாத யோகத்தின் வழிப் பிரணவ ஞானத்தைப் படிமுறையால் பொருந்தி, சாலோகம் முதலாகச் சொல்லப்பட்ட பதமுத்திகளையும், அடைந்து, இவை யெல்லாவற்றின் விளைவாகவும் அதிதீவிரபரிபாகமும், அதிதீவிர சத்திநிபாதமும் வரப்பெற்று, அனைத்துப் பொருளுக்கும் மேலாய், ஆன்ம வியாபகத் திற்கும் மேலான வியாபகப் பொருளாகிய பரசிவப் பொருளைத் தலைப்பட்டவரே `சைவ சித்தாந்திகள்` எனப் படுகின்றனர். நன்றி:- http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10501
அத்துவித மென்ற அந்நியச்சொற் கண்டுணர்ந்து
சுத்த சிவத்தைத் தொடருநாள் எந்நாளோ -தாயுமானவர்
(பொ - ள்) இரண்டிணை ஒன்றென்னும் உண்மையே அத்துவிதம் என உணராது ஒன்றே அத்துவிதம் என்னும் வேற்று நெறியினர் சொல்லைக் கண்டகன்று தூயசிவத்தை யடையுநாள் எந்நாளோ?
ஆக; வேதாந்தம் வேறு; அதற்கு சங்கரர் கொடுத்த அத்துவித விளக்கமாகிய கேவலாத்துவிதம் வேறு! இந்த நுனி இழை வேறுபாட்டை உணர்ந்து கொள்வது சைவசமயத்தவர்களுக்கு அவசியமான ஒன்றாகும். வேதாந்தத்துக்கு சங்கரர் பிழையான வியாக்கியானம் கொடுத்துள்ளார். அதுதான் அந்த நுனியிழை வேறுபாடு!!!!
சங்கரரின் அத்வைதத்தை பின்பற்றின் என்ன குறை?
நான் கடவுள் என்பது ஆணவம்! போலிச்சாமியார்கள் கடவுள்களாகி பெருமாளிகை கட்டி; தங்கத்தை தலையணையில் வைத்துபடுத்துறங்க வசதியேற்படுத்திய அபச்சாரமே நான் கடவுள் தத்துவம்! அதனால்த்தான் "நான் கடவுள்" என்பவர் அனைவரும் சங்கரரின் அத்வைதத்தை தமது கருத்துகளாலாக முன்வைக்கின்றனர்! நான் கடவுள்....நீ கடவுள் என்று கூறி தான்மட்டும் பணம் சம்பாதிக்கின்றனர்! நான் கடவுள்....நீயும் கடவுள் என்றால் பிறகு நீ ஏன் என்னை வழிபட வருகிறாய் என்று இவர்கள் இதுவரை கேட்டதாய் சரித்திரம் இல்லை!
நான் கடவுள் என்றால் ஆணவம்!
நீ கடவுள் என்றால் அபச்சாரம்!
நம்முள் கடவுள் என்றால் அழகு!
நாம்பிரம மென்றால் நடுவேயொன் றுண்டாமால்
தேம்பிஎல்லா மொன்றாய்த் திகழுநாள் எந்நாளோ -தாயுமானவர்
(பொ - ள்) ஏகான்மவாதக் கொள்கைப்படி நானே பிரமம் என்று கூறிக்கொண்டால் நான் என்னும் அகங்காரமே தோன்றும். அது பசுஞானம் என்றே சொல்லப்படும்; எல்லாம் ஒன்றாகத் திருவருளால் உணர்ந்து மெய்ப்புணர்ப்புற்று நிறைந்து நிற்கும்நாள் எந்நாளோ?
எனவே; ஆணவமலத்தை ஊட்டும் இயல்புடையதால் சங்கரரின் அத்வைதக்கொள்கை கேவலாத்வைதம் எனப்படும்.
சிவோகம் பாவணை என்றால் என்ன?
ஆன்மாவோடு இறைவன் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிறைந்திருக்கின்ற தன்மை - அதாவது ஒன்றல்ல.....அதேசமயத்தில் இரண்டும் அல்ல என்கின்ற இரண்டன்மை புணர்வே தூய்மையான அத்துவிதம்.
இது அநாதி தொட்டு நிலவிவரும் புணர்ப்பு!
இத்தகைய அநாதிகாலமாய் இருந்துவரும் இரண்டன்மை புணர்ப்பை ஆன்மா உணரும்போது சிவோகம் பாவணை வாய்க்கப் பெறும்.
நான் என்னும் நினைப்பு ஒழியும்போது தன்னுணர்வை இழக்கும் ஆன்மா தன்னோடு இரண்டன்மையாய் இருக்கும் சிவத்தை மட்டுமே உணரும்! சிவமாய் உணரும்! நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ - திருத்தெள்ளேணம் (திருவாசகம்)
ஒருவனவன் யானைகெடக் குடத்துட் செங்கை
ஓட்டுதல்போல் நான்பேதை உப்போ டப்பை
மருவவிட்டுங் கர்ப்பூர மதனில் தீபம்
வயங்கவிட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன்
அருளுடைய பரமென்றோ அன்று தானே
யானுளனென் றும்மெனக்கே ஆணவாதி
பெருகுவினைக் கட்டென்றும் என்னாற் கட்டிப்
பேசியதன் றேஅருள்நூல் பேசிற் றன்றே - தாயுமானவர்
எளியேனுக்கு அருள்பாலிக்கின்ற இறைவன் என்றுள்ளானோ அன்றுதொட்டு நானும் உள்ளேன். எனவே அநாதி காலம் தொட்டு உப்பும் நீரும் கலந்த உப்புத்தண்ணீர் போன்றும் கற்பூரமும் நெருப்பும் கலந்திருக்கும் கலப்புப்போலவும் அநாதிகாலம் தொட்டு இறைவனோடு கலந்து நிற்கையில், புணர்ப்பாகிய ஐக்கியத்தை வேண்டி வருந்துகிறேனே!
வேடனொருவன் தான்கண்ட யானை மறைந்துவிட அதனைத் தேடி அலைந்து அலுத்து சோர்வுற்ற நிலையில் ஏற்படும் மயக்க உணர்வால் யானை இருப்பதற்கு எள்ளளவுக்கும் வாய்ப்பில்லாத குடத்துக்குள் கூட கைவிட்டு தேடுவான். அப்படியான ஒருநிலையில் உனது ஐக்கியத்தை தேடி அலையும் நான் நிற்கின்றேன். இந்த மயக்கம் எனக்கு ஏன் வந்தது என்றால் ஆணவம்,வினை ஆகிய மலங்களினால் வந்தது. இந்த மலங்களோடு இருப்பதால் உன்னோடான எனது இரண்டன்மை நிலையை நான் உணராமல் வருந்துகிறேன்; இது எளியேனது கருத்தல்லவே? அருள்நூல்(மறைநூல்/சிவாகமநூல்/திருமுறை/சித்தாந்தநூல்) அல்லவா கூறுகின்றது!
இப்படியான சிவோகம் பாவணையே சிவனடியார்கள் பூணுவது. தானெனும் உணர்விழந்து சிவத்தை மட்டுமே உணருகின்ற உன்னதநிலை!!!! சிவம் மட்டுமே புலப்படுகின்ற முக்திநிலை!!!! சுத்தாத்துவித நிலை!!!!
குறிப்பு:-"ஒருவனவன் யானைகெடக்..." என்னும் பாடல் தவிர்த்து ஏனைய தாயுமானவர் சுவாமிகளின் திருப்பாடல்களுக்கு சித்தாந்த பண்டிதர்,சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகப்புலவர் ப.இராமநாத பிள்ளை ஐயாவின் உரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி:-http://www.tamilvu.org/library/l5F40/html/l5F40ind.htm
இந்தப் பகுதியில் சைவசித்தாந்தமே உண்மையான அத்வைதம் என்பதை பார்த்தோம். அடுத்த பகுதி இப்பகுதியின் நீட்சியாக அமையும்; அது என்ன நீட்சி? அடுத்த பகுதியில் பார்ப்போம்! எல்லாம் திருவருட் சம்மதம்!
ஸ்ரீகுமரகுருபரர் காசிக்கு சென்றபோது அங்கு மீண்டும் சைவாலயம் அமைத்திட விரும்பினார். அதற்கு காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக இருந்த தாரா ஷிக்கோஹ் என்பவரிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. கொடுங்கோல் ஆட்சி செய்த அவர்களிடம் அனுமதி பெறுவதென்பது முயல் கொம்பு காரியம் என அனைவரும் அறிவுறுத்தியிருந்தனர். எனினும் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அவரிடம் சென்று ஹிந்துஸ்தானி மொழிபெயர்ப்பாளரை அழைத்துச் சென்று காசியில் ஆலயம் அமைக்க நிலம் கேட்டபோது ஹிந்துஸ்தானி தெரியாத காரணத்தினால் அவமதிக்கப்பட்டார். கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது! எனினும் சிந்தை கலங்காது, கலைவாணியைத் துதித்து சகலகலாவல்லி பாமாலை இயற்றிச் சூட்டி ஹிந்துஸ்தானி , உருது மொழியாற்றல்களை ஒரேநாளிலேயே பெற்றுக்கொண்டார்.
தனது தவச்சிறப்பால் சிங்கத்தை தன்வசப்படுத்தி அதன்மேல் அமர்ந்து தாரா ஷிக்கோஹ்யின் அவைக்குச் சென்று தனது கோரிக்கையை ஹிந்துஸ்தானியில் கேட்டு, ஹிந்துஸ்தானியிலே அவனுடன் சரளமாக கதைத்து நாணச்செய்து அவனிடம் இருந்து இடத்துக்குரிய அனுமதியைப் பெற்று காசிமடம் ஆகியவற்றை அமைத்துக் கொண்டார்.
"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து' என்று மாணிக்கவாசகப் பெருமான் பொருளுணர்ந்து பாட வேண்டியதன் சிறப்பை திருவாசகத்தின் சிவபுராணத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே பொருளுணர்ந்து பாடுவோமாக!
வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத் தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
சகலகலாவல்லியே -
எல்லாக் கலைகளையும் அளிக்கின்ற வல்லமை உடையவளே
சகம் ஏழும்அளித்து உண்டான் உறங்க -
காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக அவற்றை உண்டு, (ஆலிலைமேல்) துயின்றான்.
ஊழிக் காலத்தில் உலகங்கள் அனைத்தையும் உண்டு காத்த வண்ணம் ஆல் இலைமேல் துயில்வார் என்பது புராணச்செய்தி.
ஒழித்தான்பித் தாக - அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான்.
உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே - உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே!
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாதுகொலோ - உனது திருவடிகளைத் தாங்கும் பேறு வெண்தாமரையைத் தவிர்த்து எனது உள்ளமாகிய வெண்தாமரைக்கு வாய்க்கப்பெறாதது முறையா?
காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக உண்டு, ஆலிலைமேல் துயின்றான். அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான். ஆனால், உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரமன், கலைமகளாகிய உன்னை மனைவியாகப் பெற்று மகிழ்ந்தான். பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே! சகலகலா வல்லியே! உனது திருவடிகளை வெள்ளைநிறத் தாமரையே தாங்கியுள்ளது! வஞ்சனையற்ற குளிர்ந்த எளியேனின் மனம் வெண்தாமரை போல் ஆகிவிட்டது. எனவே எளியேனின் வெண்தாமரை போன்ற மனதினை உனது திருவடிகளை தாங்கும் ஆசனம் ஆக்கிக்கொள்ளக்கூடாதா? இன்னும் அத்தகு தகுதியான வெண்மையுள்ளம் வாய்க்கப்பெறவில்லையா? இது தகுமா?
"வெள்ளைநிற மல்லிகையோ?
வேறெந்த மாமலரோ?
வள்ளல் அடியிணைக்கு
வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல!
வேறெந்த மலருமல்ல!
உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது!" - என்ற சுவாமி விபுலானந்த அடிகளின் பாடலையும்
'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வர்' என்னும் திருக்குறளின் மலர்மிசை ஏகினான் என்பதன் பொருளையும் இங்கு பொருத்து உணர்க!
2)நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்: நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள் வாய் பங்கயாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே.
பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே- தாமரை மலராகிய ஆசனத்தில் வீற்றிருப்பவளே! பசும்பொன்கொடி போன்றவளே!
கனதனக் குன்றும்-குன்றுபோன்ற பெரிய தனங்களை உடையவளே!
ஐம்பால்- ஐந்து கால் எடுத்துப் பின்னப்பட்டிருக்கும் பெண்-கூந்தல் ஒப்பனை
ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே - ஐந்து பகுதிகளாக பகுத்து ஒப்பனை செய்யப்பட்ட காடுபோல் அடர்ந்த கூந்தலை தாங்கியுள்ளவளே! கருப்பாக இனிப்பவளே!
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் - அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருள் சுவையும் சொல் சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிகளையும் ( ஆசுகவி,மதுரகவி,சித்திரக்கவி,வித்தாரக்கவி)
பாடும் பணியில் பணித் தருள்வாய்- இடையறாது பாடும் பணிக்கு எளியேனை பணித்து அருள் செய்வாயாக!
ஆசுகவி - யாரும் இதுவரை பாடியிராத வகையில் யாரும் பாடியிராத பொருளின்பத்தை தரும் வண்ணம் புதிய புதியதாக பாடல்களை இயற்றும் கலை
மதுரகவி- இசைநடையில் கவி எழுதும் கலை
சித்திரக்கவி - தேர் போன்ற சித்திரத்தில் அடுக்கி வைக்கலாம் போன்ற அமைப்பில் சொற்களை அழகுற அடுக்கி பாடுகின்ற கலை
வித்தாரக் கவி - பலவிதமான அமைப்புகளில் அமைத்து பாடுவது
வெண்தாமரையை ஆசனமாகக் கொண்டிருப்பவளே! பசும்பொன் கொடி போன்றவளே! குன்றுபோலுள்ள் பெரிய தனங்களை உடையவளே! ஐந்து பகுதிகளாகப் பகுத்து அழங்கரிக்கப்பட்ட காடுபோல் அடர்த்தியான கூந்தலை தாங்கியிருப்பவளே! கரும்பாக இனிப்பவளே! சகலகலாவல்லியே! அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருட்சுவையும் சொற்சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிதைகளை இடையறாது பாடும் பணிக்கு எளியேனைப் பணித்து அருள் செய்வாயாக!
பதம் பிரித்து அமைந்த பாடல்: அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.
உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே -
எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே!
உளம் கொண்டு - விருப்பம் கொண்டு
களிக்கும் கலாப மயிலே - மகிழ்ச்சியடையும் மயில் போன்றவளே
சிந்தக்கண்டு - பொழியக்கண்டு
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்து -நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக
உன் அருள்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடும் கொலோ - உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா?
எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே! நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக ஆன்மீக அனுபவத்தை பெற்று உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா? அவ்வாறான அரும்பெரும் பேறை அருளுவாயாக!
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
வடநூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே - கடல் போன்ற வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!
செந்நாவில் நின்று - நல்ல நாவினின்று
தூக்கும் பனுவல் - அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும்
பெருகப் பணித்துஅருள் வாய்- பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக
கடல் போன்று விரிந்த எண்ணிலாத வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த அருஞ்செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!
அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் நாள்தோறும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக!
வெள்ளைக் கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய்- ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே!
பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய - செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும்
பொற்பாத பங்கேருகம் - பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள்
என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே - எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ?
தாள் - கால், கயிறு, முயற்சி,படி,காகிதம்,வைக்கோல்,கடையாணி,தாழ்ப்பாள்,திறவுகோல் (கழகத் தமிழ்க்கையகராதி) சிலர் நீண்ட இதழை உடைய தாமரை என்று பொருள் சொல்கின்றனர். அது பொருந்துமா என்று தெரியவில்லை! கழக அகராதிப்படி தாள் என்பது தாமரையின் தண்டையே பெரிதும் குறிக்கும்!
திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த நீண்ட தண்டிடைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும் அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனுமாகிய நான்முகனின் சிறந்த நாவினையும் மனதினையும் ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! சகலகலாவல்லியே!
செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் செம்மையான பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள், எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ?
பொய்கைகளில் தாமரை மலர்வது இயல்பு. எனது மனமும் நீர்போன்று மென்மையாக உள்ளது. குளிர்மையாக உள்ளது. நீர்நிலைகளில் எப்படித் தாமரை மலர்வது இயல்போ மென்மையாலும் குளிர்மையாலும் நீர்நிலை போல் ஆகிவிட்ட எனது மனமெனும் பொய்கையில் தாமரை என்னும் உனது திருவடிகள் இன்னும் மலராது இருப்பது முறையோ என்று வருந்துகின்றார் குமரகுருபரர்.
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய் - விரும்பும் காலத்தில் எளிதில் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக
வானம்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று என்னும் ஐம்பூதங்களிலும் எழுதாமறையாகிய வேதத்திலும் அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! சகலகலாவல்லியே! பண், பரதம்,நற்கல்வி, இனிய சொற்களால் கொண்டு கவிகள் (நூல்கள்) இயற்றும் ஆற்றல் ஆகியனவற்றையெல்லாம் விரும்பும் காலத்தில் எளிதில் எளியேன் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக!
7)பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்ளும் என்பர் கவிஞர். பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு கலைமகள் வழங்கி அருள்பாலிப்பாள் என்பதை கலைமகளை வெண்மையான பெண் அன்னம் என்று சுட்டுவதன் வாயிலாக குமரகுருபரர் நமக்கு உணர்த்துகின்றார்.
அடியார்கள் நல்மனதால் எண்ணிப் புனைகின்ற நூல்களில் காணப்படுகின்ற வீடு பேற்றின்பமாகிய பாலையும் உலகியல் இன்பமாகிய நீரையும் தனித்தனியாக பிரித்தறிகின்ற தன்மையை உலக மக்களுக்கு உணர்த்தும் வெண்மையான பெண் அன்னம் போன்றவளே!
சகல கலாவல்லியே! பாட்டும் பாட்டுக்குரிய பொருளும் பாடலில் பொருந்து நிற்கின்ற பயனும் எளியேனிடத்து வந்தடையும் வண்ணம் எளியேனுக்கு கலைமகளே.....உமது கடைக்கண் பார்வையை அருள்வாயாக!
அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்ளும் என்பர் கவிஞர். பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு கலைமகள் வழங்கி அருள்பாலிப்பாள் என்பதை கலைமகளை வெண்மையான பெண் அன்னம் என்று சுட்டுவதன் வாயிலாக குமரகுருபரர் நமக்கு உணர்த்துகின்றார்.
தந்து அடிமைகொள் வாய்நளின - அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக!
செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளின் அருள் நமக்கு வாய்க்கப்பெறவில்லையே என்று வருந்துகின்ற நிலை எக்காலத்திலும் ஏற்படாவண்ணம் காலத்தால் அழியாத கல்வி என்னும் பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! சகல கலாவல்லியே!
தோற்றம் என்ன நிற்கின்ற - (தோற்றமென நிற்கின்ற) - தோன்றி நிற்கின்ற
நின்னை நினைப்பவர் யார் - நினைப்பவர்கள் யாரும் இல்லை
நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானையும் அரச அன்னமும் நாணும்படி அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே! சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவமாக தோன்றி நிற்கின்ற உன்னை நினைத்து உணர்ந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள் யாரும் இல்லை! (அவ்வாறு உணர்ந்து கொள்வது எளிதான ஒன்றல்ல என்று சுட்டுகிறார் குமரகுருபரர் ) அவ்வாறான பக்குவ ஆற்றலை எளியேனுக்கு அருள்வாயாக!
முதலாம் விண்கண்ட தெய்வம் - முதலாக சிறப்புடைய தெய்வங்கள்
பல்கோடி உண்டேனும் - பலகோடி இருந்தாலும்
விளம்பில்- தெளிந்து கூறில்
உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ - உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை
மண்கண்ட வெண்குடைக் கீழாக- மண்ணுலகம் முழுவதையும் தன் வெண்கொற்றக்குடையின் கீழ்
மேற்பட்ட மன்னரும்- சிறப்புடைய மன்னரும்
பண்கண்ட அளவில் - பாடலைக் கேட்ட மாத்திரத்தில்
பணியச் செய்வாய்- பணிந்து வணங்க அருள்செய்வாயாக!
படைக்கும் தெய்வம் நான்முகன் முதலாக சிறப்புடைய தெய்வங்கள் பலகோடி இருந்தாலும் உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை என்று தெளிந்து கூறும்படியாக விளங்குபவளே! சகலகலாவல்லியே!
மண்ணுலகம் முழுவதையும் தன் வெண் கொற்றக்குடையின் கீழ் கொண்டு ஆட்சிசெய்யும் மன்னரும் எளியேனின் இனிய தமிழ்ப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பணிந்து வணங்க அருள்செய்வாயாக!
குறிப்பு:- தமிழ்ப் பெரியசாமி என்னும் அறிஞரின் உரையை எளியேனின் பதவுரையில் பெருமளவில் பயன்படுத்திக் கொண்டேன். அறிஞர் தமிழ்ப் பெரியசாமி அவர்கட்கு நன்றி. இணையத்தில் சகலகலாவல்லி மாலைக்கு பொருள் விளக்கம் பெருமளவில் உண்டெனினும் அவற்றில் பெருமளவு பொருட்பிழைகளும் உண்டு. பொருட்பிழைகள் இல்லாத விளக்கவுரையை இணையத்தில் எளியேனால் காணமுடியவில்லை! எனவேதான் தமிழறிஞர் ஒருவரின் உரையைத் தேடினேன். தமிழ்ப் பெரியசாமி என்னும் நல்லறிஞரின் உரையை கண்டேன். அவருடைய உரையை பெருமளவு பயன்படுத்தியே எளியேன் விளக்கவுரை எழுதியுள்ளேன்.
முறையான பொருளுரையுடன் கூடிய சகலகலாவல்லி மாலை இணையத்தில் இடம்பெற வேண்டும் என்ற அவா எளியேனின் நெஞ்சுள் பெருக்கெடுத்து."சகலகலாவல்லி மாலை-பொருளுரை" ஆகியுள்ளது! இங்கு ஏதேனும் இலக்கணக்குற்றம் இருக்கும் என்றால் எளியேனுக்கு எடுத்தியம்புக. இருந்தால் திருத்த வேண்டியது கடமையல்லவா?
சைவ ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக;சைவசமயம் பற்றிய அடிப்படை அறிவையும் சைவசமய தத்துவங்களில் தெளிவையும் சைவர்கள் யாவரும் பெற்றிருக்கும் பொருட்டு; "சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும்"என்னும் தொடர் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை சைவ அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தமிழர் நாங்கள் சிவன் திருவடிகள் மறவாத வாழ்வை பேணுவோமாக