"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Tuesday, April 7, 2020

சைவசமயம் இலங்கையிற் சிறப்பாகவுள்ளதா?

இப்பதிவினை வாசிக்கமுன்னர் மூன்று விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

1) இது சற்று நீண்டபதிவு. படிக்க விருப்பமில்லாவிட்டால் பேசாமல் கடந்துபோங்கள். வீட்டில் சும்மாயிருக்கும்  இக்காலத்திலும் படிக்க நேரமில்லையென்றால்; உங்களால் நாம்பெறும் பயன் ஏதுமில்லை!!!

2) ஒரு தமிழ் ஆசிரியர் சரியாக தமிழ் இலக்கணத்தோடு கட்டுரை எழுதத்தெரியாவிட்டால், பிள்ளைகளுக்கு தமிழைச் சொல்லிக்கொடுக்கத் தெரியாவிட்டால், தமிழ் இலக்கியங்களில் புலமையில்லாவிட்டால் அவரை இந்த உலகு சாடும். ஒரு மருத்துவர், மருத்துவ நூல்களில் புலமையில்லாவிட்டால், ஒழுங்காக மருத்துவம் செய்யாவிட்டால், நோயாளிகளுடன் அன்புறவு பாராட்டாவிட்டால் இந்த உலகு அவரைச் சாடும். அதுபோல், ஒரு மதத்தின் குருமார் அம்மதத்தினுடைய நூல்களில் புலமையில்லாவிட்டால்,அம்மதத்தினை காப்பதற்குரிய பணிகளைச் செய்யாவிட்டால், அம்மதத்தின் வளர்ச்சிக்கு பாடுபடாது இருந்தால், அம்மதத்தின் நூல்களுக்கு மாறாகச் செயற்பட்டால், அம்மத குரு அம்மதத்தாரால் சாடப்படுவர். இது உலக நியதி. நம் சமயப்பண்பாட்டில் மதத்தின் கிரியைக்காரியங்களைச் செய்யும் குருமார் "சாதி"அடிப்படையிலேயே பெரிதும் இருப்பதால், அக்குருமார் விடும் தவறுகளைச் சாடும்போது அது ஒருசாதியின்மேலான சாடலாக திரிக்கப்படுவதற்கும் அங்ஙனமே கருதப்படுவதற்கும் பெருத்த வாய்ப்புண்டு. அது நம்பண்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடுகளில் ஒன்று.சைவாகமக் கற்புடன் நிற்பார் எத்திறத்தார் ஆயினும் அவர் திருவடிதொழும் உள்ளமே நாம் நம்முடைய ஆத்மார்த்த சிவபூசையின் நிறைவில் வேண்டும் வரம் என்பதினைஇத்தருணம் சுட்டவிரும்புகின்றோம்.எனினும் அறிவுக்குறைவால் எவரேனும் அந்தண வெறுப்பாக இப்பதிவைக் கருதின் அதற்கு நாம் பொறுப்பாகோம்.

3) இலங்கையில் தீட்சைமுறையில் சைவாலயங்களில்  பரம்பரை பரம்பரையாகப் பூசைசெய்யும் சமூகமும் பண்டைய கால ஆதிசைவப் பிராமண சமூகமும் கலந்து உருவான "சைவக் குருமார்" சமூகமும் , பிராமணக் குருமார் சமூகமும் பூசைசெய்கின்றனர். இவர்களில் பிராமணக் குருமார், தம்மை பிராமணர் என்று காட்டுவதற்காக, "சைவக்குருமார்" என்று கூறிக்கொள்ள கூசுகின்றனர். எனவே, சைவக்குருமார் என்று அறியப்படும் சமூகம் " தேசிகர் சமூகம்" என்றே அழைக்கப்படவேண்டும்.  பிறப்பால் பிராமணராயினும் தேசிகர் சமூகமாயினும் "சைவக்குருமார்" என்பதே அனைவருக்குமான பொதுச்சொல் ஆகும். கத்தோலிக்கப் பாதிரியார் தம்மை கத்தோலிக்கப் பாதிரியார் என்றுதான் கூறுவார். அதுபோல் சைவசமயத்து குருக்கள் என்றால், அவர் சைவக்குருமார்தான். "சாதி"ப்பாசத்தில் அச்சொல்லைப் புறக்கணித்தால் அதுபோன்றதொரு சிவத்துரோகம் வேறெதுவும் இல்லை.அக்கேட்டினைச் செய்துவிட்டு செய்யும் பூசைகளிலும் பாடும் தோத்திரங்களிலும் எப்பலனும் இல்லை.

தமிழ்நாட்டார் சிலர் 'இலங்கையில் சைவசமயம் கொடிகட்டிப் பறக்கின்றது" என்று பெருமிதம் கொள்வது உண்மையிலேயே அர்த்தமுள்ளதா? அல்லது வெறும் புழுகுமூட்டையா? என்பதுவே இப்பதிவின் கருப்பொருள்.
அதனைக் கேள்வி வடிவிற் காண்போம்.

1) சைவசமயத்தில் ஆலயங்களில் பூசைசெய்வதற்கு எவருக்கு அதிகாரம் உண்டு?

கௌசிகர்,காசிபர்,பரத்வாஜர்,கௌதமர்,அத்திரி முனிவர் கோத்திரங்களை உடையவர்களே சைவசமய கிரியாகுருமார்கள். (உத்தர காமிக ஆகமம்). அத்திரி முனிவருக்குப் பதிலாக, அகத்திய முனிவர் என்றும் கொள்ளும் சைவாகம மரபு உண்டு.(மறைஞான சம்பந்த நாயனார் அருளிய சைவ சமய நெறி). இதிலேயே தெளிவில்லை.
எப்படிப் பார்த்தாலும் கௌசிகர், காசிபர், பரத்வாஜர், கௌதமர், அத்திரி, அகத்தியர் என்னும் ஆறு கோத்திரங்கள் மாத்திரமே சைவாலயங்களில் பூசைசெய்யமுடியும். இதில் இன்று பலகோத்திரங்கள் இலங்கையில் இல்லை.  இம்முனிவர் கோத்திரங்களைச் சார்ந்த சைவாகமக்கற்புடையோரே ஆலயங்களில் பூசைசெய்யலாம் என்பது விதி. ஏனையோர் செய்தால் நாசம் என்று ஆகமங்கள் உரைக்கின்றன.


இலங்கையில் வைணவக்கோத்திரங்களை உடையவர்கள், ஸ்மார்த்தமதக் கோத்திரங்களை உடையவர்களே இன்று பிராமணரில் அதிகமாய் உள்ளனர்.  மாவிட்டபுரம்,நகுலேசுவரம் முதலியனவற்றில் மடப்பள்ளி ஐயராக இருந்த ஸ்மார்த்தமதத்தினைச் சார்ந்தவரின் மகனாகிய மகாதேவா ஐயர் அவர்கள் இன்று, இலங்கை அந்தணரால் "வாத்தியார்" என்று கொண்டாடப்பட்டு, அச்சுவேலிக் குமாரசுவாமிக் குருக்கள் பரம்பரையினர் முதலிய பல்வேறு ஆதிசைவ அந்தணர் மரபினருக்கும் பூணூற் சடங்கு செய்விக்கும் பெரும்குருக்களாக உள்ளார்.
தர்மசாஸ்தா குருகுலம் என்று அந்தணரைப் பயிற்றுவிக்கும் குருகுலம் நடத்தியும் வருகின்றார்.  தாமே ஸ்மார்த்தமதத்தினராய் இருக்கும்போது, அவர் கற்பிக்கும் அந்தணச்சீடரிடம் எங்ஙனம் "ஸ்மார்த்தமதத்தார்" சைவக்கோயில்களில் பூசைசெய்யமுடியாது என்னும் ஆகமவிதியினைக் கூறுவார்? அவரே இன்றைய பிரபல குருக்கள்மார் அனைவருக்கும் குருவாக இருப்பதனால், "ஹரிஓம்" கூறியே வேதம் ஓதும் ஸ்மார்த்த நியதி, ஆசீர்வாதத்திற்குப் பிறகே திருமுறையென்னும் ஸ்மார்த்தத்தின் மொழித்தீண்டாமை முதலியனவற்றை இலங்கை முழுதும் பரப்புவதற்கு காரணியாகவும் விளங்கியுள்ளார்.
அந்தளவுக்கு இங்குள்ள பிராமணரில் எவருக்கும் "ஆதிசைவப் பிராமணர் யார்? ஸ்மார்த்தமதப் பிராமணர் யார்? " என்ற பேதமேயில்லாது, அனைத்தும் ஒழிந்தாயிற்று.  ஆரம்பத்திற் கூறியதுபோன்று, பண்டைய ஆதிசைவ அந்தணரும் தேசிகரும் கலந்துருவான தேசிக சமூகத்தாரும் ஆலயக்குருக்கள்மாராக சில ஆலயங்களில் உள்ளனர்.


2) கோத்திரங்கள் பிறப்பால்/தீட்சையால் நிர்ணயம் செய்யப்படுவதென்பதில் கருத்துபேதங்கள் இருக்கலாம். இலங்கை நாட்டில் அனைத்தும் கலந்தாயிற்று என்னும் நிலையிருக்கும்போது, "சுத்த" ஆதிசைவர் என்று எவரும் இல்லையென்ற நிலையிலிருக்கும்போது, 
சைவாலயங்களில் பூசை எவர் செய்யலாம் என்னும் கேள்விக்கு நடைமுறைச்சாத்தியமான பதிலைத் தேடவேண்டியுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணக்கோயிலொன்றில் பிராமணர் கொடியேற்றுவதா? தேசிகக்குருக்கள் கொடியேற்றுவதா? என்று சச்சரவு உருவாகி, கத்திக்குத்திற் முடிந்திற்று.  இதற்குரிய சைவாகம முடிவு யாது? நடைமுறைச் சாத்தியமான வழியாது?


"ஆதிசைவருள்ளும் சமயதீஷை ,விசேட தீட்சை, நிருவாண தீட்சை, ஆசாரியாபிஷேகம் என்னும் நான்கும் பெற்றவரே பரார்த்த லிங்கத்தைத் தீண்டற்கு அதிகாரிகளாவர்" - நாவலர் பெருமான்.


நான்கு தீட்சைகளும் முறைப்படி இல்லாதவர்கள் ஆதிசைவரேயெனினும் பூசைக்கு அருகதையில்லாதவர் என்பது இதனாற் பெறப்படும். இங்கு சிலர், பிறப்பேயெல்லாம் தீர்மானிக்குமென்று பிடிவாதம் பிடிப்போர் உளரெனினும், இலங்கையில் இவ்வழக்கிலே நின்றால் அத்தனை ஆலயங்களையும் பூட்டவேண்டிவரும் என்னும் இடர்நிலையைக் கருத்திற்கொண்டு அவர்தம் பிடிவாதத்தினை கைகழுவிவிடுவோம். 
ஆனால், ஸ்மார்த்தமத சம்பிரதாயங்களை பின்பற்றும் ஒருவர், சைவசமயக் கோயில்களில் பூசைசெய்வதென்பது அநாகரீகம். 

அதனிலும், தேசிகர்மார் பூசைகள் செய்யலாம் என்பது நாவலர் முதலிய சைவப் பெரியார்களின் ஆப்தவாக்கியப் பிரமாணம்.
இஸ்லாமிய மௌலவியார் கிருஷ்தவ தேவாலயத்தில் பூசைகள் எங்ஙனம் செய்யமுடியாதோ, அங்ஙனமானது ஸ்மார்த்தமத சம்பிரதாயங்களை ஒழுகும் ஒருவர், சைவக்கோயில்களில் பூசைசெய்வதென்பது.கத்தோலிக்கப் பாதிரியார் இல்லாவிடத்து, ஒரு கத்தோலிக்கர் செபம் செய்யலாம். ஆனால் மாற்றீடாக இஸ்லாமிய மௌலவியை கத்தோலிக்க செபம் செய்ய அனுமதிக்கலாமோ?  அதுபோற்தான், ஸ்மார்த்தமதப்பழக்கமுடையாரிலும் தேசிகர்மார் செய்யும் பரார்த்தபூசை என்க.

"சூத்திரனாயினும் ஒழுக்கமுடையவனாயிற் பிராமணனெனப்படுவன்.பிராமணனாயினும் ஒழுக்கமில்லாதவனாயிற்  சூத்திரனெனப்படுவன்." - நாவலர் பெருமான்.

"பிராமணர் முதற் சூத்திரர் இறுதியாகிய நான்கு வர்ணத்தாரும் தீஷையினாலே துவிசத்துவம் அடைந்தார்களாயின் ஆகமம் ஓதுதற்கு அதிகாரிகளாவர்."-  நாவலர் பெருமான்.

சைவாகம ஒழுக்கங்கள் இல்லாத ஒரு (ஸ்மார்த்தமத வழக்குடைய) பிராமணரிலும் சைவாகம ஒழுக்கமுடைய ஏனையார் (தேசிகர்மார்) சைவாலயப் பூசைக்குத் தகுதியானவர் என்பதினையும் இக்கருத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் துவிசத்துவம்(இருபிறப்பாளர்) தீட்சையால் சகலருக்கும் உண்டு என்பதும் பெறப்படும்.


பிறப்பால் இல்லை;தீட்சையால் கோத்திர நிர்ணயம் என்று கொண்டால் பிராமணர்க்கே அதி பெரும் நன்மைசெய்யும். ஏனெனில்; இலங்கையில் பெரும்பான்மையான பிராமணர் பிறப்பால் ஸ்மார்த்தமதத்தார்.ஸ்மார்த்தமதக் கோத்திரங்கள் உடையார். எனவே, அவர்கள் முறைப்படி தீட்சை எடுத்து, கோத்திரங்களையும் தீட்சைமுறையிற் தெரிவுசெய்து, சைவாகமத்தில் பிடிப்போடு நின்று பூசைசெய்தால் அவர்களைக் கொண்டாட எந்த இலங்கைச் சைவரும் பின்நிற்கார். அதுவும் பிராமணரை போற்றும் இலங்கைத் தமிழர் சமூகத்தில் இப்படியொரு நல்ல காரியத்தில் அவர்கள் ஆர்வம் காட்டினால், அவர்களெல்லோரும் கொண்டாடப்படுவர் என்பது திண்னம்.மேலும், கந்தசட்டி விரதத்தினை கடுகும் மிளகும் ஒருகுவளைப் பச்சைத்தண்ணீரும் என்று நோற்றுவிட்டு, அடுத்த நாள் திருக்கல்யாணமாவது மண்ணாங்கட்டியாவதென்று "ஆடடித்து" சுவைக்கும் சைவப்பற்றாளர் மிகுந்த இந்தத்தேசத்தில் "குருமார்" தொழிலுக்கு போட்டியாக எவரும் வரப்போவதில்லை.

 ஆனால், அவர்கள் ஸ்மார்த்த மதத்தில் பிடிப்போடு நின்றால், "சைவாலயங்களில்" பூசைசெய்வதை நிறுத்துவதே அவர்கள்  தம் இன்மைக்கும் மறுமைக்கும் செய்யும் நன்மையாகும்.


சைவாகமத்தில் பிடிப்போடு நிற்காது, ஸ்மார்த்தமத வழக்கத்தில் நிற்கும் ஒருவர் சைவாலயங்களில் பூசைசெய்தால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் கேடாகும் என்பது ஆகமக்கூற்று. இந்த நாட்டில் தமிழர் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டு, சைவாலயங்களெல்லாம் இடித்தழிக்கப்பட்டு, தமிழர்க்கென்ற தேசம் ஒழிக்கப்பட்டு, தமிழர் அநாதைகளாகி நிற்பது ஸ்மார்த்தமதத்தில் ஒழுகுவோர் சைவாலயங்களில் பூசைசெய்வதால் வந்த பலனோ? தமிழ் நாட்டில் ஆதிசைவர் பூசைசெய்கின்றனர். இலங்கையில் ஸ்மார்த்தமத வழக்கிலுள்ளோர் பூசைசெய்கின்றனர். இலங்கையில் தமிழர் உரிமைகளின்றி அழிந்தொழியும் காட்சிப்பிரமாணத்தினால்  ஆகமத்தில் ஸ்மார்த்தமதத்தார் சைவாலயங்களில் பூசைசெய்தால் வரும் கேடுகளென்று கூறியவை உண்மையேயென்பதை உணரலாம்.

3) ஸ்மார்த்த மதத்தில் ஈடுபாடுடன் உள்ளார் சைவசமயத்திற் கிரியாச்சாரியர்களாக விளங்குவதன் விளைவுகள் என்ன?

தத்துவம்,கிரியைகள், பத்தித்துறை என்பவற்றில் இவை செய்துள்ள தாக்கம் சுருக்கமாகப் பார்ப்போம். முதலில் தத்துவத்தினைக் காண்போம்.

சமயத் தத்துவத்தில் செய்துள்ள தாக்கம்

1. ஸ்மார்த்தமத ஆதிசங்கராச்சாரியாரையும் ஸ்மார்த்தமத சங்கரமடத்தினையும் சைவசமய ஆச்சாரியராகவும் சைவமடமாகவும்  சைவசமயத்தார் எண்ணும் கேடு.

2. ஸ்மார்த்தமதத்தில் ஆண்களாய்ப் பிறந்த பிராமணருக்கே ஞானம் வாய்க்கும். செடிக்கும் கொடிக்கும்  முத்தி வாய்க்க வாய்ப்புள்ளன என்னும் சைவசமயத்தில் இப்படியான மூடத்தனங்களும் சைவக்கொள்கை என்னும் பெயரில் பரவலாக்கப்பட்டமை. திலகவதியார்,காரைக்கால் அம்மையார், பாண்டிமாதேவி முதலிய சைவமாதுக்களுக்கு முத்தியில்லை என்னும் நிலைதான், ஆதிசங்கரரை ஏற்றாற் நாம் கொள்ளவேண்டிய நிலைப்பாடாகிவிடும்.

3. தீட்சையால் வர்ணங்கள் போகாதென்னும் புறச்சமயங்களினது கொள்கைகளைச் சைவக்கொள்கைகளாக இட்டுக்கட்டியுள்ளமை.
இதனால், அதிவர்ணாச்சிரமச் சைவத்திற்கு  பிறப்புவழிப் பேதமுடையது சைவமென்னும் தீயபெயர் வாய்த்தமை.

4. சைவசமயத்தினைப் பொறுத்தவரை, தமிழ்மொழியும் வடமொழியும் சிவபெருமானால் சமசமயத்திலே ஒன்றாக அருளப்பட்ட தெய்வமொழிகள் . ஸ்மார்த்தமதத்திற் வடமொழியை மாத்திரமே தேவமொழியென்று கொண்டாடும் மரபு உண்டு.

5. ஸ்மார்த்தமத காஞ்சி முதலிய சங்கராச்சாரியார்கள் வீபூதியை வேதம் புனிதச்சின்னமாக கூறியதன்பொருட்டே அணிகின்றனர். சிவசின்னமாக அல்ல. ஆனால் சைவசமயத்தவர் வீபூதியைச் சிவசின்னமாகக் கருதியே அணிகின்றனர்.  இருவரும் வீபூதி பூசினாலும் வீபூதிக்குக் கொள்ளும் பொருள் வேறுவேறாகும். இந்தத் தத்துவ விளக்கங்கள் இலங்கைச் சைவரிடம் இன்று மறைக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் பிறமதத்தார்(ஆபிரகாமியர்) சைவசமயத்தினை அன்பிலாச்சைவம் என்று நம்பால் சுட்டுவதற்குரிய காரணிகளை உருவாக்கி, பிறமதத்தாருடன் சமயவிவாதங்கள் செய்ய அஞ்சும் சமயிகளை நம்சமயம் கொள்வதற்கு காரணியாக்கியுள்ளன.

கிரியையில் சீரழிந்துள்ள சைவசமயம்

1) வேதம் ஓதும்போது ஹரிஓம் சொல்லும் வழக்கம் ஸ்மார்த்தமத வழக்கம். ஆனால் இன்று இலங்கையில் பெரும்பாலான சிவாலயங்கள் உட்பட எல்லாச் சைவாலயங்களிலும் இதுவே நடைமுறை. 
இஸ்லாமிய குரானை கிருஷ்தவ தேவாலயத்தில் ஓதுதல்போன்று, ஸ்மார்த்தமத வழக்கத்தினை சைவாலயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை எந்தவொரு கிரியாகுருமாரும் கேள்விகூடக் கேட்டிலர். ஆனால், தமக்கு முன்னால் "சிவாகம சிரோன்மணி" "சிவாகமசேகரம்"என்று பட்டங்களைச் சூட்டிக்கொண்டுள்ளார்கள்.

2) ஆசீர்வாதத்திற்கு முதலில் திருமுறை ஓதவேண்டும் என்பது  சைவப்பத்ததி நியமம்.

“பக்த ஸ்தோத்திரம் பாடத் பச்சாத் ஆசிஷம் சம்யக ஆசரேத்” அகோர சிவாச்சாரியார் பத்ததி -ஆசீர்வாதப்படலம் 25ம் சுலோகம்

ஆனால், ஆசீர்வாதம் செய்து பஞ்சாராத்தியெல்லாம் காட்டியபின்னரே திருமுறை ஓதிட அனுமதி. சைவசமயத்தில் தமிழும் வடமொழியும் ஒன்றேயாகும். ஸ்மார்த்தமதத்தில் வடமொழி மாத்திரமே தேவபாசையாகும்.  தமிழை ஆசீர்வாதத்திற்குப் பிறகென்று துரத்தப்பட்டிருப்பது, அதுவும் ஸ்மார்த்தமத ஆதிசங்கரரின் சிவானந்தலகரி முதலிய பசு வாக்கியங்களுக்குப் பிறகென்று சைவசமய நாயன்மார்களின் திருமுறை துரத்தப்பட்டிருப்பது, ஸ்மார்த்தமத வழக்குகளால் என்பதை இலங்கைச்  சைவ அந்தணரும் உணர்ந்திலர். ஏனையாரும் தெளிந்திலர்.

3) நித்திய அனுட்டானம்,நித்திய ஆத்மார்த்த சிவபூசை(வீட்டில்செய்யும் சிவ பூசை) முதலிய இல்லாதார் ஆலயங்களில் பூசைசெய்யக்கூடாதென்பது ஆகமக்கூற்று.  இன்று நம் அந்தணர்களில் இவ்வாறு இருப்போர் அரிதோ அரிது. நித்திய அனுட்டானத்திலும் ஆத்மார்த்த சிவபூசையிலும் "ஸ்மார்த்தமதப்படி" பல்வேறு மாற்றங்கள் செய்து ஆத்மார்த்த பூசைவிதியை சிவானந்த சர்மா என்பார் செய்தபோது அந்தணர் சமூகத்தில் யாருமே "சைவாகமங்களுக்கு விரோதமான நூல்" என்று கேள்விகேட்டிலர்.
இத்தனைக்கும்  அச்சுவேலிக்குமாரசுவாமிக் குருக்கள் வைதீக (சைவ) சந்தியாவந்தனம்,ஆத்மார்த்த பூசைவிதிகளை சைவாகமப்பிரகாரம் எழுதியிருக்க; அதற்கு மாற்றாக சைவவிரோதமாக "சைவ" என்றே பெயர்தாங்கி ஒருநூல் இந்த ஈழநாட்டில் தோன்றியிருக்கும்போது இலங்கையில் குருமார் பீடங்களை நடத்துவோர் எல்லோரும் கும்பகர்ண நித்திரையிலிருந்தனர் போலும்!!!! எவரும் ஆத்மார்த்த சிவபூசையோ சைவ அனுட்டானமோ செய்வதில்லை. செய்தாற்தானே எது சரி; எது பிழை என்று தெரிந்துகொள்ளல்லாம்.



4) இலங்கையிலுள்ள திருமால் கோயில்களும் சைவக்கோயில்களேயென்னும் தெளிவினைத் துறந்து, ஆத்மார்த்த சிவபூசை என்பது சைவ அந்தணர்க்கு கட்டாயமானதாகவிருக்க, திருமால் கோயிலில் பூசைசெய்தால் அப்பூசையைக் கைவிட்டு, நெற்றியில் திருநீறினைக் குறைத்து அல்லது கைவிட்டு சந்தனத்தினை அப்பிக்கொண்டு நிற்கும் நம் அந்தணரைக் காணுதல் பெருத்த வழக்கமாயுண்டு.

பத்தித்துறையில் சைவசமயம்

1) கதாப்பிரசங்கங்கள், அடியார் கூட்டங்கள் என்று தமிழ்நாட்டில் சிறப்புற்றிருக்கும் "சைவச்சங்கம வழிபாடு" இலங்கையில், அதுவும் நாவலர் பிறந்த இந்த நாட்டில் ஒழிந்துபோயுள்ளது. சில ஆலயங்கள் பிரசங்கங்களை நடத்தினாலும், கேட்பதற்கு சனம் இல்லை. சனம் இருக்கும் நேரம் பிரசங்கம் நடத்த அனுமதிக்கும் ஆலயங்கள் அரிதோ அரிது.

2) கைலாய வாத்தியக்குழு, ஆலயந்தோறும் திருமுறைப் பாராயணம் செய்யும் நித்திய அடியார் கூட்டம் எல்லாம் இலங்கையில் காணுதல் அரிது. சைவசமயத்தினை வெறுமனே கிரியைச்சமயமாக கோயில் முதலாளிகளும் அந்தணரும் ஒடுக்கியுள்ளனர்.  இவையும் ஸ்மார்த்தத்தாக்கத்தினால் "சைவ வளர்ச்சியில்" அக்கறையின்மை ஏற்பட்டமையின் விளைவுகளேயாம்.




4. ஆட்டைகடித்து மாட்டைக்கடித்து இறுதியாக மனுசனையே கடித்த கதைபோற், சைவசமயத்தின் தத்துவம், கிரியை என்று எல்லாவற்றினையும் நாசம்செய்துள்ள ஸ்மார்த்தமதப் பழக்கம், சமயப்பெயருக்குச் செய்துவரும் கேடு  யாது?


சைவசமய குருமார், சைவ சமய அந்தணர், சைவசமயக் கோயில், சைவசமய மாணவர், சைவ சமய மாணவர் மன்றம், சைவ சமயக் கல்லூரி, சைவசமய மன்றம் என்றெல்லாம் எங்ஙெங்கு  சைவசமயம் என்ற சொல் புழகவேண்டுமோ அங்கெல்லாம் இந்து என்னும் பெயரைத் திணித்துவிட்டுள்ளனர். கேட்டால் ஒற்றுமை?

யாரோடு நமக்குச் சண்டை? எவரோடு எமக்கு ஒற்றுமை? இருப்பவர் எல்லோரும் சைவசமயிகள் ஆயிற்றே! என்றால் கள்ள மௌனம்!!!!! ஸ்மார்த்தமதத்தாருக்கு சைவசமயம் என்னும் சொல் எங்ஙனம் இனிக்கும்? இதுதான் உண்மை!!!

5.செய்யவேண்டியது யாது?"தற்காலத்துச் சைவசமயிகள் பலர் புறச்சமயங்கள் ஆறதனுள் ஒன்றாயுள்ள ஏகான்மவாதவகை நான்கினுள் ஒன்றாகிய மாயாவாதத்துக்குரிய ஆசாரியரை வேடவொற்றுமைபற்றித் தம்மாசிரியரெனக் கொண்டு வழிபட்டொழுகியும், அம்மாயாவாத நூல்களைப் பாராட்டியும், தஞ்சமயநிலையின் வழுவித் தாம்முன்னர்ப்பெற்ற சிவதீஷையின் பயனையும் அநுட்டித்த சமயாசாரங்களின் பயனையும் இழந்து, எரிவாய் நிரயத்துக்கு இரையாகுகின்றனர்" -ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானார்.

ஸ்மார்த்தமதக்கொள்கைகளை விடுத்து, சைவசமயத் தீட்சை முதலிய எடுத்து, சைவக்கோத்திரங்களைத் தீட்சைவழியிற் தெரிவுசெய்து, சைவாகமங்கற்படி பூசைகள் செய்தலும், சைவாகமங்கற்படி நிற்றலுமாகும்.
அங்ஙனம் எவர் நிற்பாரோ அவர் பூர்வீகம் ஸ்மார்த்த மதமா?, சண்டாளரா? என்றெல்லாம் வேர்மூலம் தேடாது சிவமாகவே போற்றும் பக்குவம் ஈழத்துச் சைவரிடம் உண்டு. அதனைச் செய்வதே ஒரேயொரு வழி!!! அதைவிடுத்து ஸ்மார்த்தப்பாசத்துடன் சைவக்கோயிலில் பூசைசெய்தால், சிவாகம நிந்தனையின் பலனை இப்பிறவியில் அல்லது மறுமையில் அனுபவித்தேதான் தீரவேண்டும்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

கட்டுரையாளர்: வைத்தியக் கலாநிதி.சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சைவசமயம் இலங்கையிற் சிறப்பாகவுள்ளதா? "

Post a Comment