"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, January 23, 2020

எந்தமொழியில் பூசை? குடமுழுக்கு?


1)ஆகமங்கள் எந்தமொழியில் அருளப்பட்டன?

அண்மையில் தொலைக்காட்சி விவாதமொன்றில்  ஆகமங்கள் வடமொழியிலேயே அருளப்பட்டதாக சிவாசாரியார் ஒருவரால் மயக்கக்கருத்து கூறப்பட்டிருந்ததுஆனால், ஆகமங்கள் தமிழ்மொழியிலும் வடமொழியிலும் ஒரேநேரத்தில் சிவபெருமானால் அம்மையாருக்கு உபதேசிக்கப்பட்டதாகவே திருமந்திரம் கூறுகின்றது.

ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகையார்க்குக் கருணை செய்தானே  - திருமந்திரம் (ஆகமச்சிறப்பு 65)

தமிழ்ச்சொல் வடசொல் என்னும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆகுமே  - திருமந்திரம் (ஆகமச்சிறப்பு 66)

திருமந்திரத்தின்படி, ஆகமங்கள் இருமொழியிலும் உபதேசிக்கப்பட்டவென்பதும், ஒன்றை முதலிலும் மற்றையதை அடுத்ததாகவுமன்றி, இருமொழிகளிலும் ஒரேசமயத்திலேயே உபதேசிக்கப்பட்டதென்பதையும்  தெளியலாம். எனவே, ஆகமங்கள் வடமொழியில் மாத்திரமே உபதேசிக்கப்பட்டதென்ற கருத்துத்தோன்ற தொலைக்காட்சி விவாதத்தில் சிவாசாரியார் கூறிய கருத்து பிரமாண முரணாகும்.

2) தமிழ்மொழி ஆகமங்கள் உண்டா?

வழக்கொழிந்துபோயின!

3) ஆகமங்களை மொழிபெயர்த்தல் தகுமா? தகாதா?

ஏற்கனவே ஆகமங்கள் தமிழ்மொழி உட்பட பிரன்சு,ஆங்கிலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

4) மொழிபெயர்த்தலுக்கு பிரமாணம் உண்டா?

திருமந்திரமே ஆகமசாரத்தினை அருளுமாறு இறைவனால் திருமூலர் வாயிலாக அருளப்பட்டதுதானே!

என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே. திருமந்திரம் -81
திருமூலர் வடசொல்,ஆரியம்,தமிழ் என்னும் சொற்களை ஆகமங்களைக் குறிக்கவே பயன்படுத்தியுள்ளமையாலும், இங்கு திருமூலர் வழங்கிய திருமந்திரம் சைவசமய நூலேயொழிய தமிழ் இலக்கண நூலன்று என்பதாலும், ஆகமத்தினை தமிழில் வளர்க்கும்பொருட்டே தம்மை இறைவன் படைத்தனன் என்று கூறுகின்றார் என்று பொருள்கொள்வதே சாலப்பொருத்தமும் மரபுமாம்.
சர்வஞானோத்தர ஆகமம் வித்தியாபாதம்  தமிழில் 9 தலைப்புகளில் 71 விருத்தங்களால் பாடல் நூலாகவுண்டு. இதனை மொழிபெயர்த்துக் கவியாக்கியவர் பெயர் அறியப்படவில்லை.  16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவரென்று கருதப்படும்  மறைஞானசம்பந்தர் என்னும் அருளாளரால்  சிவதருமோத்தரம் தமிழில் பாடலாக்கப்பட்டுள்ளது. 

தேவீகாலோத்தராகமமும் தமிழில் பாடல்களாக மொழிபெயர்க்கப்பட்டு வழக்கில் பல்காலமாயுண்டு. இவ்வாகம நூல்கள்,ஆகமச்சார்பு நூல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டமை, மொழிபெயர்ப்புக்குரிய பிரமாண அங்கீகாரமாகும்.5) தமிழர் சிலரிடம் ஏற்பட்டுள்ள தனித்தமிழில் தஞ்சைப்பெரியகோயில் குடமுழுக்கு நடைபெறவேண்டுமென்ற கோரிக்கை கிருஷ்தவ மிஷனரிச் சதியா?

கன்னட நாட்டிலும் கிருஷ்தவமிஷனரியர் உளர். அங்கு இலிங்காயுதமென்ற வீரசைவ சமயத்தினை இந்துமதமன்று,தனிமதமே என்ற கருத்துருவாக்கம் பெருத்தளவில் நடைபெற்றவாறுள்ளது. இதனை மிஷனரிச்சதியென்று அங்கு எவரும் கூவவில்லை!!!!

மலையாள நாட்டில் அனைத்துச் சாதியரும் அச்சகராகுதல் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
இதனை மிஷனரிச்சதியென்று எவரும் எதிர்த்திலர்.

கன்னட நாட்டிலும், மலையாள நாட்டிலும், தெலுங்கு நாடுகளிலும் கிருஷ்தவ மிஷனரிகள் தமிழ் நாடுபோல் பலமாகவேயுள்ளனர். மலையாள நாட்டில் பலம் இன்னும் அதிகம். எனினும் அங்கு சுதேசமொழிகளில் ஆலயப்பூசை என்ற வாதம் இதுவரை  பெருத்தளவில் தோன்றவில்லை
எனவே, மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுதல் உண்மைக்காரணியைக் கண்டறியவிடாது தடுத்துவிடும். இந்துத்துவவாதியர் இன்று செய்துவரும் அரசியலும் இதுவேயாம்.

6)தமிழ்நாட்டில்  தனித்தமிழ்ப்பூசைக்கோரிக்கை ஏற்பட மிஷனரியர் காரணமில்லையெனின், உண்மைக்காரணி யாது?

 கன்னடம்,தெலுங்கு,மலையாளம் என்பன தமிழில் இருந்து சங்கதமொழிக்கலப்புக்களால் காலத்துக்காலம் பிரிந்து திரிந்துபோன மொழிகளேயொழிய, தமிழ்போல் தொன்மையானவையல்ல! சங்கதமொழிக்கு இருக்கும் சிறப்பான தனித்த வரலாறு,இலக்கியம்,இலக்கணம் , கிளைமொழிகள் என்ற சகல தகுதிகளும் உடைய ஒருமொழி தமிழ்!!!
ஆய்வுகளின்படியும் சமயமரபின்படியும் சங்கதமும் தமிழும் மட்டுமே பாரதத்தின் பழம்மொழிகள். ஏனையவை இவை இரண்டிலுமிருந்து கிளைத்த மொழிகள் எனலாம்.

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுறஎத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!" -
 மனோன்மணியம் பெ.சுந்தரனார்

தெய்வத்தமிழ்க் கூடல் தழையத் தழைத்தவள்,முதுதமிழ் உததியில் வரும் ஒருதிருமகள் என்றெல்லாம் அங்கயற்கண்ணியை தமிழோடு பந்தம் செய்யும் குமரகுருபரப்பெருமான், தமிழோடு பிறந்து பழமதுரையில் வளர்ந்தகொடி என்று ஆதியும் அந்தமுமில்லாத அன்னைக்கு (திருவருளுக்கு) தமிழையே உவமையாக்குகின்றார்இக்குமரகுருபரர் மிஷனரிச் சதிக்கு உட்பட்டவரா?

இன்று தமிழ்ச்சைவம் என்னும் சொல்லாடலையே மிஷனரிச்சதியென்று உழறுகின்ற மூடர், தமிழ்ஞானசம்பந்தன் என்று திருஞானசம்பந்தர் தம்மைத் தமிழோடு பந்தம் செய்தமையை சமணச்சதி என்பரோ? (திருஞானசம்பந்தர் வேதவேள்வியைப் போற்றினாரென்று வகுப்பெடுக்கவேண்டாம்.நாம் வேதவேள்வியையும் தன்னகத்தேயுடைய சைவப்பெருஞ்சமயத்தினைச் சார்ந்தவன்.)

சிவபெருமான் அருளியமொழியாக தமிழைக் கம்பர்கூடக் கொண்டாடியுள்ளார். "நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண் தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ்" என்கின்றார் கம்பர்.

தமிழ், சிவபெருமானால் அருளப்பட்டமொழியென்பதையும் ஏனையமொழிகளைப்போல் சங்கதத்திலிருந்தோ, அன்றி சங்கதத்தாக்கத்தினாலோ தோன்றியமொழி அன்று என்பதையும் சமயமரபுகளுக்கூடாய் நாம் தெளியலாம். விஞ்ஞான வரலாறு சங்கதமொழிக்கும் முந்தியதாய்த் தமிழைச் சுட்டிநிற்கினும், சமயமரபே தமிழின் தொன்மைக்குப் போதுமானதாகும்.

இங்ஙனமான பண்டைப்பெருமையுடைய தமிழ்மொழி, காலத்துக்குக் காலம் சங்கதமொழிக்கலப்பினால் கன்னடமாகவும், தெலுங்காகவும் திரிவுற்ற துயர வரலாற்றினை உடையதுமட்டுமன்றி, வெறும் சொற்ப நூற்றாண்டில் மலையாளமொழியாகச் சேரத்தமிழ் நாட்டை இழந்த கேட்டையும் சங்கதத்தாக்கத்தால் தமிழ் சந்திக்க நேர்ந்திற்று. அத்தோடு நில்லாது, மணிப்பிரவாளமொழியாக எஞ்சிநின்ற சோழ,பாண்டியத்
தேசமும்
உருமாறிச்சென்று, தமிழாக மீண்டும் மீட்கப்பட்ட கசப்புணர்வுகளையுடையது .
இவையே சங்கதமொழி வெறுப்பு தமிழரிடம் இலகுவில் ஏற்படக்காரணமாயிற்று


7) ஆகமமீறல் தனித்தமிழ் வாதத்தால் மட்டும் நடைபெறும் ஒன்றா?
"பக்த ஸ்தோத்திரம் பாடத் பச்சாத் ஆசிஷம் சம்யக ஆசரேத்" - அகோர சிவாசாரியார் பத்ததி, ஆசீர்வாதப்படலம் 25ம் சுலோகம்
ஆசிர்வாதத்திற்கு முன்னர் திருமுறை பாடல் வேண்டும் என்ற இவ்விதி, (இலங்கைச்) சைவாலயங்களில் காணல் அரிது. ஆசிர்வாதத்திற்குப் பிறகே  திருமுறை ஓதல் நடைபெறுகின்றது.
வடமொழி வேதாகம மந்திரம் -தமிழ்மறைத் திருமுறை மந்திரம் - வடமொழி ஆசீர்வாதம் என்று தமிழ் நடுநாயகமாக பத்ததிகளில் இருக்க, தமிழைக் கடைநிலைக்கு இட்டுச்
சென்றதுபற்றி இதுவரை (இலங்கையில்) எந்தச் சலசலப்பும் இல்லை.

மேலும், தோத்திரமென்று வரும்போது சங்கதமொழி என்கின்ற மொழிப்பிரியத்தால் பசு,பாச வாக்கியங்களாக விளங்கும் சங்கராச்சாரியார் பாடிய சங்கதமொழித் தோத்திரங்கள், தியாகராஜ பாகவதர் பாடிய துதிகள் என்று சங்கதத்துதிகளுக்குப் பிறகே,  பதிவாக்கியத் திருமுறைகள் ஓதல் என்னும் கீழ்த்தரமான சமய மீறலையும் பல ஆலயங்களில் காணலாம். இதற்கும் எந்த எதிர்ப்பும் இதுவரை தோன்றியிருக்கவில்லை.

தமிழ்த்திருமுறைகள் மகோற்சவம் முதலிய சிறப்புப்பூசைகளில் மாத்திரம் இடம்பெறுகின்றன!!! நித்தியபூசைகளில் திருமுறை ஓதுதலைக் காணல் அரிது. இவையெல்லாம் ஆகமமீறலாக இதுவரை தொடர்வதுகுறித்து இன்றுவரை எவரும் அலட்டிக்கொள்ளவில்லை!
தமிழ்நாட்டில் வைணவ ஆலயங்களில் தமிழ்பெறும் முதன்மைத்துவம்கூட, சைவாலயங்களில் இல்லாமை கண்கூடு. எனினும் இலங்கைபோல் தமிழ்நாட்டில் தரம்தாழ்ந்துவிடவில்லையென்னும் நிலையைக் கண்ணாற் கண்டமையால் நிம்மதிப்பெருமூச்சுவிடக்கூடியதாகவுள்ளது!!!!

தமிழைப் புறக்கணிக்கும்போதெல்லாம் கண்டும்காணாதிருக்கும் நம்சைவாகம வல்லுனர்கள், சங்கதமொழியைப் புறக்கணிக்குமாறு தமிழ்ப்பிரியர் அழுத்தம்கொடுக்கும்போது, "ஆகமமும் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க" என்று ஆகமக்கற்புடையராவது ஆகமப்பற்றிலா? அன்றி சங்கதமொழிப்பிரியத்திலா?


8) திருமுறைகளிலிருந்து சொற்களைத் தொகுத்து போற்றிப்பாமாலைகள் இயற்றலாமா?

தற்போது கிரியைப்பூசைகளில் மந்திரங்களாகச் சொல்லப்படும் பல்வேறு துதிகள் காலத்துக்குகாலம் சைவாசாரியார்களால் புராணங்கள்,இதிகாசங்களிலிருந்து தொகுத்து வழங்கியவைகளேயாம். பத்ததி ஆசிரியர்களால் வழங்கப்பட்டவைகளாகும்அண்மையில் இலங்கையைச் சேர்ந்த கோப்பாய் சிவமென்று அழைக்கப்படும் சிவானந்த சர்மா (ஸ்மார்த்தமதத்தார்) வைரவர் பூசைக்கிரியைகளில் பயன்படுத்தும்பொருட்டு  வைரவர் திரிசதியை சகஸ்ரநாமம்,அஷ்டோத்தரசதமுதலியனவற்றிலிருந்து தொகுத்து இயற்றியுள்ளார்.

பிரமாண விதிகளின்படி, இது பாசவாக்கியமேயாம். திருமுறைகளோ பதிவாக்கியம்ஆனால், வைரவர் கிரியைப்பூசையில் பதிவாக்கியத்திருமுறைகளிலும் ஸ்மார்த்தமதத்தாராகிய சிவானந்தசர்மா இயற்றிய பாசவாக்கிய வைரவர் திரிசதி "சங்கதமொழி" என்னும் மொழிமோகத்தால் முதன்மையிடம் பிடிக்கப்போகின்றன!!! அதுவும் சைவாலயங்களில் ஸ்மார்த்தமதத்தார் எழுதிய திரிசதி இடம்பிடிக்கப்போகின்றன!!! இவை சங்கதமொழி மோகத்தினால் சைவத்தில் நடந்துவரும் கேடுகள்!!! இவைபற்றி வாய்திறக்க எவரும் இலர்!!!! எவரும் துணியார்!!!
சைவாலயங்களில் ஏற்கனவே புழக்கத்திலுள்ள சங்கதமொழித் தோத்திரங்கள் 
இங்ஙனம் பலரால் காலத்துக்குக் காலம் தொகுக்கப்பட்டனவாகவேயுள்ளன. அவை "சங்கதமொழி" என்ற மோகத்தால் கடவுளால் அருளப்பட்டதா, மனிதரால் தொகுக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு உள்ளாகாது அங்கீகாரம் பெற்றுவிட்டன!!! எனவே, தோத்திரங்கள் தனித்தமிழேயே நடத்துதல் முரணன்று!!!
எனினும், திரிசதிக்கள்போல் கண்டவர் தொகுத்ததையெல்லாம் தோத்திரப்பாக்கள் ஆக்காது,  

சைவ ஆதீனங்கள் திருமுறைகளிலிருந்து இங்ஙனம் தொகுத்து அருளாசியுடன் வழங்கின் மரபோடு ஏற்கப்படும். நன்மைபயற்கும்!

9) சங்கதமொழியை நிராகரிக்கத்தான் வேண்டுமா?

சைவர்களுக்கு சங்கதமொழியும் தமிழும் இருகண்கள்போன்றன
எனினும் சங்கதமொழிப் பிரியர்களால் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளமையும், அக்கேடு இன்று சங்கதமொழி எதிர்ப்பாகத் தமிழர் சிலரிடம் வளர்ந்துள்ளதையும் சைவம் எதிர்கொண்டு நிற்கும்
காலம் இக்காலம்!!!! இது நோயின் விளைவேயொழிய, நோய் சங்கதமொழிப் பிரியமேயாம்!!!



10) இதற்கு மருந்துதான் என்ன?

கிரியைகளில் செயன்முறை மந்திரங்களைச் சங்கதமொழியிலும், தோத்திரங்கள் யாவற்றையும் தமிழிலும் செய்தலே  மொழிமோகங்கள் சைவத்தில் தாக்கத்தைச் செலுத்தாது தடுக்கும் வழிமுறையாகும்.
இது ஆகமத்திற்கு முழுமையாய் ஏற்புடையனவேயாம்.ஆகம மீறலும் நடைபெறவில்லைதமிழுக்கும் சைவக்கிரியையில் இராஜாங்கமாய் நிற்கும் வாய்ப்பை வழங்கியாயிற்று.

11) இதனை நம் மரபுச்சைவர்கள் ஏற்பார்களா?
உண்மைச் சைவர்கள் ஏற்பார்கள்! ஸ்மார்த்தவாசமுடையார்,சங்கதமொழி மோகவாதியர் விதண்டாவாதம் செய்வர்.

12)  சிவன்,நம என்பவை தமிழா? சங்கதமொழியா?
சிவன்/சிவம் என்ற சொற்களுக்கு தமிழிலேயே வேர்ச்சொல் உண்டென்று அறிஞர் நிறுவியுள்ளனர்.   சைவசித்தாந்த சாத்திர வரலாறு என்னும் நூலில் இதனைப் பேராசிரியர். திரு..வெள்ளைவாரணனாரும் எழுதியுள்ளார்.
"சிவன் என்னுந் திருப்பெயர் செம்மையென்னுந் தமிழ்ச்சொல்லின் அடியாகப் பிறந்த பெயராகும் என்பதனைச்  செம்மேனிப் பேராளன் வானோர்பிரான் எனக் காரைக்கால் அம்மையாரும், சிவனெனுநாமந் தனக்கேயுடைய செம்மேனியம்மான் எனத் திருநாவுக்கரசரும் அருளிய மெய்ம்மொழிகளால் இனிதுணரலாம்." என்கின்றார் இப்பெரியவர்

நமன்று என்னும் தமிழிலேயிருந்தே நம பிறந்ததென்றும் தமிழறிஞர் வேர்ச்சொல்கொண்டு சுட்டிநிற்கின்றனர். திரு.நடேசப்பிள்ளை சிவேந்திரனார், திரு.இராம.கி அவர்கள் "நம" தமிழ் வேர்ச்சொல்லினை உடையதுவே என்று தமிழ் பிரபந்தங்களிலிருந்து எடுத்துக்காட்டி உரைப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். 

பூக்கள் கொண்டு செய்வதால், பூசெய் என்பது பூசையாயிற்று என்னும் வேர்ச்சொல் விஞ்ஞானவியலின்படி, பூஜை சங்கதமொழிச்சொல் அல்ல ! என்பது பலரும் தெளிந்ததேயாம். இப்படி, எண்ணற்ற சொற்கள் தமிழிலிருந்து சங்கதமொழிக்குச் சென்றுள்ளன. சங்கதமொழியிலிருந்து தமிழுக்கும் வந்துள்ளன.  

நம என்பது சங்கதமொழிதானென்று பிடிவாதம் பிடிப்பவர் நம என்ற சங்கதமும் சிவன் என்ற தமிழும் இணைந்தே நமசிவாய தோன்றிற்று என்று தம்மை ஆற்றுப்படுத்திக்கொள்ளுதல் நலம். 

சைவசமயத் தத்துவவியலில் ,,சி,வா, என்பன தனியெழுத்துகளாய் நின்று, மறைமொழியாய் விளங்கிப் பொருளுரைக்கும் தன்மையுடையவை.

சிவன்
வழிபாட்டிற்கு பாரதத்தில் கிடைத்த தொன்மைச் சான்றுகளைக் காட்டிலும், இலங்கையில் கிடைத்த சான்றுகள் மிகத்தொன்மையானவை. அதனாலேயோ தெரியவில்லை இராவணன் மேலது நீறு என்றார் திருஞானசம்பந்தர் பெருமான். சிவபூமியென்று சிறப்பித்தார் திருமூலர் பெருமான்.

"வடநாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்று மாணிக்கவாசகரும் கூறியிலர். "தென்னாடுடைய சிவனே போற்றி" என்றுதான் பாடிமகிழ்ந்தார்.  தென்னாடுடையவன்.கயிலைக்கும் அவனே சொந்தக்காரன். எந்நாட்டிலும் அந்நாட்டு இறைவனாய் நின்று அருளுவதும் நம்நாட்டுக்காரனேயாம்.  இதுதான் தென்னாட்டார் கொண்டாடும் சைவப்பெருஞ்சமயம்!!!!

13) தமிழ்மொழி மந்திரமாகுமா?

அ) திருமந்திரப்படி ஆகமங்கள் தமிழ்மொழியிலும் அருளப்பட்டன என்னும்போது, தமிழ் மந்திரமொழி என்பதைத் தெளியலாம்.
ஆ)சிவபெருமானுக்கு ஓங்காரத்திற்கு பொருளுரைக்கும்போது
முருகப்பெருமான் தமிழிலேயே அப்பொருளை உரைத்தார்.
"கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத் தெரிய கொஞ்சித்
தமிழால் பகர்வோனே"
 என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.  "சிவனார் மனம்குளிர உபதேச மந்த்ரம் இருசெவிமீதிலும் பகர் செய் குருநாதா" என்று, அத்தமிழுரையை உபதேச மந்த்ரம் என்று தெளிவுபடுத்தியுள்ளதுடன், சிவபெருமான் ஒருசெவியில் கேட்ட
மகிழ்வை மீண்டும் நுகரும்பொருட்டு இரண்டாவது செவியிலும்
உரைக்குமாறு வேண்டிப் பெற்றுக்கொண்டமையையும் அருணகிரிநாதப்பெருமான் கூறிமகிழ்கின்றார் தம்திருப்புகழில்.
ஆக, ஓங்காரப்பொருளாக உள்ள உபதேச மந்திரம் தமிழேயென்பது தெளிவு!

இ) 
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழிதானே மந்திரம் என்ப - என்பது தொல்காப்பியம்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 
மறைமொழி காட்டிவிடும் - திருக்குறள் 

ஆக, மந்திரம் என்பது மொழியில் அல்ல!!! அருளாளரின் அருளில் தோன்றியவை  எம்மொழியாயினும் மந்திரமேயாம்!!!
ஈ)ஆரியம் நன்று,தமிழ் தீதென்று ஒருவன் உரைத்தபோது, 
முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி - அரணிய
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்
ஆனந்தம் சேர்க சுவாகா!
என்றார் நக்கீரர் பெருமான். கூறியவன் உடனே உயிரிழந்துபோனான். அவனது பெற்றார் நக்கீரரைப் பிழைபொறுக்குமாறு மன்றாடிக்கொண்டதும்,

ஆரியம் நன்று தமிழ் தீது என உரைத்த 
காரியத்தால் காலக்கோள்  பட்டானைச் -  சீரிய
அந்தண்  பொதியில் அகத்தியனார் ஆணையினால்
செந்தமிழே தீர்க்க சுவாகா என்றார் நக்கீரர் பெருமான். உடனே மாண்டவன் உயிர்பிழைத்துக்கொண்டான்.

தமிழ் மந்திரமே என்பதற்கு இதைவிடச் சான்றேனும் வேண்டுமோ???

உ) திரு.நடேசப்பிள்ளை சிவேந்திரனார் தமிழ்ப்புலவர்க்கு  வாக்குப்பலம் உள்ளதென்பதை சுட்டிக்காட்டுகின்றார்.  தமிழ்ப்புலவர் பெருஞ்சித்திரனார் ஈழத்தில் திரு.இராஜீவ் அரசு தமிழர்பால் நடத்தியகொடுமைகளால் மனம் நொந்து, திரு.இராஜீவ்பால் அறம்பாடினார். 
இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக்
குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்
கடும்புலி வரியெனச் சாவு கவ்வுக!
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க!
சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்
வீழ்ச்சியுறுக! நின்னுடல் வெடித்துச்
சுக்கு நூறாகச் சிதறுக! சூதனே! 
திக்கி நா விழுக்க! நெஞ்சு தெறிக்க! என்பது அவர் திரு.இராஜீவ்பால் அறம்பாடிய கவிதை. ஈற்றில் விளைந்ததும் அதுவே!!!!

அதுபோல், திரு.ஜெயலலிதாபாலும் அவர் அறம்பாடினார்.  "கொழுவுடல் உருகிக் கொடுநோய் எய்திப்
புழுவுற நலிந்து  புன்மையுற் றொழிக!" என்றார். ஈற்றில் விளைந்ததும் அதுவே!!!
தமிழ் மந்திரம் என்பதற்கு தற்கால பொதுவாழ்வுக் கவியே காட்சிப்பிரமாணமாயுண்டு. இவை, தமிழை எம்பெருமான் அருளியதால் விளைந்ததுவே என்பது சைவச்சால்பினால் துணியலாம்!!!

14)  "பேர்கொண்ட பார்ப்பான்" -திருமந்திரம் உணர்த்துவது எதனை?
 சிவப்பிராமணர் என்பர் யாவர்? "பேர்கொண்ட ஆகமம்" உண்டா? 


பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே
திருமந்திரம்

மூலாகமங்களில் சிவபெருமானின் சத்தியோசாதம் முதல் ஈசானம் ஈறாக  ஐம்முகங்களினால் தீட்சிக்கப்பட்ட இருடிகளாகவே சிவகோத்திரம்(கௌசிகர்),சிகாகோத்திரம் (காசிபர்),சோதிகோத்திரம்(பாரத்துவாசர்),சாவித்திரி கோத்திரம் (கௌதமர்), வியாம கோத்திரம் (அகத்தியர்) முதலாகிய கோத்திரங்கள் உரைக்கப்பட்டிருக்க, ஐம்முகங்களிலிருந்து தோன்றியவர்களென்ற  "பிறப்புவழி" இட்டுக்கட்டப்பட்டுள்ளது. இங்ஙனம் இட்டுக்கட்டப்பட்ட முறைகளால்  பத்தியின்றி தொழிலாக எவரேனும் பூசைசெய்யின், நாட்டுக்குக் கேடுண்டாகும் என்பதுவே தெளிந்த பொருளாகும்.

சோழநாடு,பாண்டி நாடு, யாழ்ப்பாண அரசு, சேர நாடு என்று இருந்தகாலத்தில் ஆகமப்படி பூசைகள் சிறப்பாகவே நடைபெற்றன!!! தனித்தமிழ்ப் பூசைகளும் இல்லை!!!! ஆகமப்படி பூசைகள் யாவும் சிவப்பிராமணரால் நடத்தப்பட்டிருந்த அக்காலத்தில், சேர,சோழ,பாண்டியர்,யாழ்ப்பாண அரசரெல்லாம் அழிந்துபோனமை எதனால்? ஆகமப்பூசைகள் ஒழுங்காய் நடைபெற்றால் அழிவுவராதென்ற இறைவாக்கு பொய்த்துப்போனதுவோ?  இறைவாக்கு பொய்ப்பதில்லை!
தீட்சைவழி பிறப்புவழியாக இட்டுக்கட்டப்பட்டமையால், பேர்கொண்ட பார்ப்பான்கள் பூசைசெய்தமையே கேடுகள் ஏற்பட்டமைக்குக் காரணமெனத் தெளியலாம்.அதுவும் எத்தனையோ சைவாலயங்கள் இடிந்தழிக்கப்பட்டன!!!! பூசைகள் முறையாய் மன்னர்களின் முழுமானியங்களுடன் நடைபெற்றும் இவ்வாறான கேடு ஏற்பட்டமைகளுக்கு காட்சியளவையாய், கருதல் அளவையாய் நிற்பது "பேர்கொண்ட பார்ப்பான்" என்பதுவேயாம்.
வேறு காரணங்களேதும் காட்சியளவையாயும் கருதல் அளவையாயும் இல்லையென்னும் போது, இக்கருத்துக்கு மாற்றுக்கருத்தேதும் உண்டோ?

காசிவாசி செந்திநாத ஐயர் பெருமான், சிவபரத்துவத்தினை இல்லாதொழிக்கும்பொருட்டு உபநிடதங்களில் பெருத்தளவு இடைச்செருகல்களும் நீக்கல்களும் உள்ளன என்று சைவ உலகுக்கு ஏற்கனவே தெளிவித்தார். மகாபாரதத்தில் அருளப்பட்டதாகக் கூறப்படும் சிவசகஸ்ரநாமத்திலேயே மாறுபாடான பிரதிகள் ஈழத்தேசத்திலும் தமிழ்நாட்டிலுமாய் புழக்கத்திலுண்டு. ஆகமங்களின் ஏடுகளைச் சேகரித்துத் தொகுத்த பிரன்ஸ்சு நிறுவனத்தாரும் பாடபேதங்கள் பிரதிகளுக்குப் பிரதி அதிகமாயுண்டென்று கூறியுள்ளனர்.  இப்பிரமாணங்களினூடாய் நாம் ஒன்றைத் தெளியலாம். பேர்கொண்ட பார்ப்பான் ஒக்க, பேர்கொண்ட ஆகமநூல்களும் உள!!!
எனவே, அன்பு,ஒழுக்கம்,சிவபத்தி முதலிய அருள் அடையாளங்களைச் சமன்செய்துசீர்தூக்கும் கோலாகக்கொண்டு, திருமுறைக்கண்ணாடியால் ஆகமங்களின் சாறைத் தெளிந்து, பூசைகள் ஆகமவிதிப்படி, வடமொழியோடும் தமிழ்மொழியோடும் சிவப்பிராமணரால் நடக்கட்டும்!!! சைவசமயம் சைவப்பெருஞ்சமயமாக மீண்டும் தழைத்தோங்கட்டும்!!!

15) மேற்கூறியவற்றால் பெறப்படுவது யாது?

தீட்சைவழியே சைவவழி!!!
தமிழிலும் ஆகமங்கள் இருந்தன! தமிழும் மந்திரமொழியேயாகும்!
சங்கதமும் தமிழும் சைவத்துக்கு இருகண்கள்! சங்கத வெறுப்பும் தீது! தமிழ் வெறுப்பும் தீது! கிரியைச் செயன்முறைகள் சங்கதமாயும் கிரியையில் பயன்படுத்தும் தோத்திரங்கள் யாவும் தமிழிலும் இருக்குமாயின், ஆகமமீறலும் இல்லை! மொழிச்சமத்துவமும் உண்டு!
எல்லாவற்றையும் திராவிட கிருஷ்தவமிஷனரியென்று புழம்பிக்கொண்டிராமல், மடைமாற்றாமல், சைவப்பெருஞ்சமய வளர்ச்சிக்கு காலத்திற்கு ஏற்ப, சைவக்கற்புநெறி நின்று ஆவணசெய்தலே சால்புடமையாகும்!!!


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "எந்தமொழியில் பூசை? குடமுழுக்கு?"

Post a Comment