"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, January 10, 2013

ஏன் பிறந்தோம்? சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 10

கடந்தபகுதியில் உயிர்கள் எக்காலம் தொட்டு உண்டு என்று பார்த்தோம். இப்பகுதியில் உயிர்களுக்கு ஏன் பிறவி வாய்த்தது என்று பார்ப்போம்.

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 1
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 2
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 3
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 4
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 5
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 6
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 7
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 8
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 9  


ஆன்மாக்களின் மூன்று நிலைகளும் எவை?

கேவலநிலை - ஆன்மா ஆணவமலத்துடன் அநாதிகாலந்தொட்டு இருக்கும்நிலை. பிறப்பு இறப்பு என்னும் சக்கரத்துள் வரமுன்னரான நிலை.

பிறப்பு இறப்பு என்பது ஆன்மாவுக்கு பக்குவத்தை ஏற்படுத்தி
, பாசமலங்களை அழியச்செய்து முக்தியெனும் சிவானந்தத்தை நுகரச்செய்வதற்கு இறைவன் வழங்கிய பரிசு. ஆக; அந்தப்பரிசு வாய்க்கப்பெறாத நிலை!

இந்நிலையில் ஆணவமலப்பிடிப்பால், தன்னோடு ஒன்றாய்,உடனாய்,வேறாய் உள்ள எம்பெருமானை ஆன்மா உணரமுடியாது பார்வையற்ற தேனீபோல் தத்தளித்துக்கொண்டிருக்கும்.

பெத்தநிலை - பிறப்புக்களில் உழலும் நிலை.

முக்திநிலை - பாசமலங்கள் யாவும் அறுபட்டு
, சிவானந்தத்தை நுகரும் நிலை.
ஆன்மாவுக்கு ஏன் பிறவி வந்தது?
ஆன்மாக்கள் அநாதிகாலந்தொட்டு, ஆணவமலத்துடன் இணைந்திருப்பதனால் பார்வையற்ற தேனீபோல் தவித்துக்கொண்டிருப்பன.இந்தநிலையை கேவலநிலை என்று பார்த்தோம்.
தன்னோடு ஒன்றாய்,வேறாய்,உடனாய் அநாதிகாலந்தொட்டே உள்ள சிவப்பரம்பொருளை உணரும் பேறு இந்நிலையில் அவற்றுக்கு இல்லை.
எனவே, இறைவன் ஆன்மாக்களிற்கு நன்மையளித்திடும்பொருட்டு, பிறப்புக்களில் உழல வைத்து, கன்மம் மாயை ஆகிய மலங்களை சேர்ப்பித்து, உலக இன்ப-துன்பங்களை அனுபவிக்கச்செய்து,மலங்கள் யாவையும் கெடச்செய்கின்றார்.

சடப்பொருள் ஒன்று இயங்க இயங்கத் தேய்வடைவதுபோல், ஆன்மாக்களை அநாதிகாலந்தொட்டு பீடித்துள்ள ஆணவம் பிறவிகள் தோறும்  ஆன்மாக்கள் பெறுகின்ற அனுபங்களினூடாக விளைகின்ற பக்குவத்தினால் நலிவடையும். ஆக; பிறப்பு என்பது ஆன்மாக்களின் நன்மையின் பொருட்டு, இறைவன் அருளும் பரிசுதான்!

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே." -மாணிக்கவாசகர்


இப்பாடலை நெஞ்சுக்குள் நிறுத்தி உள்ளத்தால் உருகி படித்தால் இப்பாடலில் சூட்சுமமாக சொல்லப்பட்டுள்ள உண்மை புலனாகும்.

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை
 -முக்திநெறி அறியாத மூர்க்கரோடு இருந்த என்னை என்பது பொருளாகும். அதாவது ஆணவமலத்துள் அழுத்தி கண்ணில்லாத தேனீபோல் தத்தளித்து துன்பப்பட்டுக்கொண்டிருந்த தன்னை என்று பொருள் கொள்க.

பத்திநெறி அறிவித்துப் -பக்தி வழியைக் காட்டி -தனு,கரண,புவன போகங்களைப் படைத்தருளி அதனை அனுபவிக்கச் செய்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிதந்து பக்தி மார்க்கம் தந்து அதனூடாக

பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்து-பழைய வினைகள் எல்லாம் கெட்டொழியும்படி அறிவை பற்றியுள்ள மூலமலத்தை(ஆணவமலத்தை) போக்கி 

சிவமாக்கி எனையாண்ட  - சிவமாக்கி என்னை ஆட்கொண்ட - சிவத்தன்மையாக்கி என்னை ஆட்கொண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார்  அச்சோவே - இறைவன் பெருங்கருணையினால் தானே வந்து தனக்கு அருளிய அத்தகைய அருமையை யார் தான் பெறுவர்!  

ஆணவமலத்துள் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த தன்னை அதிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இறைவன் ஆன்மாவாகிய தன்மீது கொண்ட பெருங்கருணையின் நிமித்தம் தன்னை தனு,கரண,புவன போகங்களை அனுபவிக்கச் செய்து பிறவிகள் தந்து அதனூடாக பக்குவப்படவைத்து இன்பம்-துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்கின்ற அருமையை ஏற்படவைத்து கன்மம்,மாயை ஆகியவற்றை உதரவைத்து மூலமலமாகிய ஆணவமலத்தை தானே முன்வந்து நீக்கி சிவமாக்கி நிலையான பேரின்பத்தை தந்தருளிகின்றான் என்பதை சூட்சுமமாக இப்பாடலில் உணர்த்துகின்றார் மாணிக்கவாசகர். 

ஆக
; நாம் பிறவிகளைப் பெறுவது இறைவன் நம்மீது வைத்த கருணையினாலேயே ஆகும்.
ஐம்பொறிகளைப் பயன்படுத்தி ஐம்பூதங்களின் வழியாக இறைவனின் அருமையை உணரக்கூடிய பேறு பெற்றிருக்கும் நிலை. இந்த பெத்தநிலை என்பது ஆன்மாவுக்கு இறைவன் கொடுத்த பரிசு. அப்பர் பெருமான் பெத்தநிலையாகிய இப்பரிசை தவறாகப் பயன்படுத்தாது முறையாகப் பயன்படுத்துமாறு தேவாரத்தினூடாக நமக்கு தெரிவிக்கின்றார்.


தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.

கண்காள் காண்மின்களோ - கடல் 
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.

செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் 
செவிகள் கேண்மின்களோ.

மூக்கே நீமுரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீமுரலாய்.

வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்.

நெஞ்சே நீநினையாய் - நிமிர் 
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய்.

கைகாள் கூப்பித்தொழீர் - கடி 
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.

ஆக்கை யாற்பயனென் - அரன் 
கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் 
வாக்கை யாற்பயனென்.

கால்க ளாற்பயனென் - கறைக் 
கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் 
கால்க ளாற்பயனென்.

உற்றா ராருளரோ - உயிர் 
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றார் ஆருளரோ.

இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
கிறுமாந் திருப்பன்கொலோ.

தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்.


ஊனால் அடைக்கப்பபெற்றுள்ள உடம்பாகிய இப்பிறப்பைக் கொண்டு தில்லையில் திருநடனம் செய்யும் இறைவனின் திருவடிகளைக் கண்டு வணங்குவோமேயானால், அப்பிறப்பால் இப்பூமிக்கு வந்தடைந்தன் நோக்கத்தை அடைந்திடலாம் என்று இறைவன் தந்த பிறவியென்னும் பரிசை முறையாகப் பயன்படித்திட வேண்டும் என்று சேக்கிழார் பெருமானும் அறிவுறுத்துகின்றார்.

ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியைச் சாருமால்
தேன் அடைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
மா நடம்செய் வரதர்பொன் தாள்தொழ   -பெரியபுராணம்

அடுத்த பகுதியில் ஆன்மாக்களின் இயல்புகளைப் பார்ப்போம். எல்லாம் திருவருட் சம்மதம்.






Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஏன் பிறந்தோம்? சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 10"

Post a Comment