"திருக்கோயில் இல்லாத திருவி லூரும்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக் கோடிப் பத்திமையாற் பாடாவூரும்
பாங்கினொடு பல தளிகளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே"
என்று திருக்கோயில் இல்லாத ஊரை அடவி காடு என குறிப்பிடுகிற அப்பர் பெருமான் "ஒருக்காலும் திருக்கோயில் சூழாராகில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் ராரே" என்று வருந்துகின்றார்.
இவை ஆலய வழிபாடு ஆன்மா இறைவன்பால் லயப்படுவதற்கு அவசியம் என்பதால் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என அப்பரடிகள் வலியுறுத்துவதை உணரலாம்.
ஆ- பசு எனப் பொருள்படும்.பசு என்றால் ஆன்மா. ஆன்மா லயப்படும் இடம் என்பதே ஆலயத்தின் பொருளாகும். கோ என்றால் அரசன். இல் என்றால் இருக்கும் இடம்.எனவே கோயில் என்பது பசுக்களின்(ஆன்மாகளின்) பதியாகிய இறைவன் சிவப்பரம்பொருள் எழுந்தருளியிருக்கும் இடம் என பொருள்படும்.
கற்பனைக் கடந்த சோதியாகிய சிவப்பரம்பொருள் ஆன்மாக்களை ஈடேற்றும் கருணையின் நிமித்தம் அற்புதக் கோலந்தாங்கி எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்கு சைவ சமயிகள் யாவரும் நாள்தோறும் சென்று விதிப்படி பயபக்தியுடன் வழிபடுதல் வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஆலயம் செல்ல இயலாதவர்கள் சோமாவாரம் , மங்கலவாரம், சுக்கிரவாரம்,பிரதோசம்,பௌர்ணமி,அமாவாசை,திருவாதிரை,கார்த்திகை,மாதப்பிறப்பு,சூரியகிரகணம்,சிவராத்திரி,நவராத்திரி,விநாயசதுர்த்தி,விநாயகசட்டி,கந்த சட்டி,போன்ற விசேடநாள்களில் தவறாது செல்லுதல் வேண்டும்.
திருக்கோயில் கோபுரம் தூலலிங்கம் எனப்படும்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர்.
ஆதலால் திருக்கோயில் கோபுரத்தை கண்டதும் கைகூப்பித் தொழுது திருக்கோயிலுக்கு அருகில் உள்ள புண்ணியதீர்த்தத்தில் நீராடி தோய்த்துலர்ந்த ஆடைதரித்து (ஈர ஆடையுடன் ஆலயம் செல்லல் தவறு) பரிசுத்தமாக கோயிலுக்கு செல்லல் வேண்டும்.
ஆலய புண்ணிய தீர்த்தத்தில் குளிக்க முடியாதவர்கள் இல்லத்தில் நித்திய கருமங்களை முடித்து குளித்து தோய்த்துலர்ந்த ஆடையணிந்து ஆலயத்துக்கு வரவேண்டும். வரும்போது இயலுமானவரை அந்நியமான எவருடனும் முட்டாது அவர்களைத் தீண்டாது வரவேண்டும்.(அறிமுகம் இல்லாதவர் மரணவீட்டிற்குச் சென்றுவிட்டும் வரலாம்.எனவேதான் எவரும் தீண்டாதவண்ணம் இயன்றவரை வரவேண்டும்.) ஆலயம் வந்ததும் கேணியில் கால்களை கழுவுதல் வேண்டும்.
தேங்காய்,பழம்,பாக்கு,வெற்றிலை,கற்பூரம்,மலர்கள்,மாலை முதலியனவற்றை தட்டில் அல்லது பாத்திரத்தில் வைத்து அரைக்குக் கீழ்ப்படாது மேலே உயர்த்தப்பட்ட கையில் ஏந்திக் கொண்டு போதல் அவசியம்.
நாம் யாரேனும் பெரியவர் வீட்டுக்கோ அல்லது தெரிந்தவர் வீட்டுக்கோ செல்லும்போது ஏதேனும் அவர்களுக்கு கொண்டுசெல்வதை மரியாதையாக கருதுகிறோம். ஐந்தொழில்களையும் புரிகின்ற இறைவன் எழுந்தருளியுள்ள ஆலயத்திற்கு செல்லும்போது அன்பு என்ற ஒன்றே உண்மையில் போதுமானது.ஆனால்?
ஏதேனும் இறைவனுக்கு செய்யப்படும் பூசைக்கு உதவக்கூடிய பொருட்களில் ஒன்றையேனும் கொண்டுசெல்லாவிட்டால் அந்த அன்புக்கு மரியாதையை நாம் செய்யவில்லை என்றே அர்த்தமாகிறது.
கோயிலுக்குள் நுழைந்ததும் துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தின் அருகில் நிலத்தில் விழுந்து ஆண்கள் அட்டாங்கமாகவும் பெண்கள் பஞ்சாங்கமாகவும் வணங்க வேண்டும்.
அட்டாங்க வணக்கம்:- தலை,கையிரண்டு,செவியிரண்டு,மேவாய்,புயங்களிரண்டு என்னும் எட்டு அங்கங்களும் நிலத்தில் தோயும்படி வணங்குதல் வேண்டும்.
பஞ்சாங்க வணக்கம்:-தலை,கையிரண்டு,முழந்தாளிரண்டு என்னும் ஐந்து அங்கங்கள் நிலத்தில் தோயும்படி வழிபடல் வேண்டும்.
திரயாங்க வணக்கம்:-சிரசிலே இரண்டு கைகளையுங் குவித்தல்
இவ்வணக்கமுறையை ஒரு தரம் இரண்டு தரம் பண்ணுதல் கூடாது. மூன்று தரம், ஐந்துதரம்,ஏழுதரம்,பன்னிரண்டு தரம் என பண்ணுதல் வேண்டும்.
விழுந்து வணங்கும்போது கிழக்கேயாயினும் வடக்கேயாயினும் தலைவைத்து வழிபடல் வேண்டும். நிலத்தில் விழுந்து வணங்க முடியாதவர்கள் (முதியவர்கள்,முழங்கால் என்பு இழையம், முழங்கால் மென்சவ்வு இழையம் தேய்வடையும் குறையுடையவர்கள்) திரியங்க வணங்கத்தை மேற்கொள்வதில் தவறில்லை.
"நந்தியெம்பெருமானே, பிறவா யாக்கைப் பெரியோனும் தனக்குவமை இல்லாதவனும் எல்லாம் வல்லவரும் முழுமுதற்பொருளுமாகிய சிவபெருமானை வழிபட அனுமதி வேண்டுகிறேன்.இறைவனின் திருவருள் கிட்ட அருள்பாலியும் ஐயனே" என்று வேண்டலாம்.
பிறகு ஆலய விநாயகர் சன்னிதியில் (வலப்புறமாக விநாயகர் சந்நிதி இருப்பது விதி) நின்று வழிபட்டு குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபட்டு பின்னர் திருமூலட்டானத்தினை நோக்கி செல்ல வேண்டும். அதனையே கருவறை, மூலத்தானம் எனவும் அழைப்பர்.
மூலத்தானத்தில் உள்ள முழுமுதற் பொருளாகிய சிவலிங்கத் திருமேனியை அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை;
தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.
மண்டையோட்டுத் தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக.
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.
கண்களே! கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக் கொண்டு நின்ற நிலையில் ஆடும் பெருமானை நீங்கள் காணுங்கள்.
என திருமுறைகளை ஓதி மனமுருகி வழிபடல் வேண்டும்
பின் அந்தணரிடம் இருந்து திருநீறு பெற்று சிவ சிவ என உச்சரித்தவண்ணம் பூசுதல் வேண்டும். பின் வலம் வருதல் வேண்டும்.
தெற்குப் பாகத்தில் தென்முகக் கடவுளை வழிபடுதல் வேண்டும். கல்லாலின் புடையமர்ந்து நான்கு மறை ஆறு அங்கம் முதலியவற்றைக் கேள்வி வல்லவர்களாகிய சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும் வாக்கியலைக் கடந்த நிறைவாயும் வேதங்கட்கு அப்பாற் பட்டதாயும் எல்லாமாயும் அல்லது மாயும் உள்ளத்தின் உண்மையை உள்ளபடி காண்பித்துக் குறிப்பால் உணர்த்திய தட்சிணா மூர்த்தி சந்நிதியின் முன்நின்று பாடலோதி வணங்குதல் வேண்டும்.
பின் தென்மேற்கு மூலையில் விநாயர் இருப்பர். அவரை வணங்கி பின் அடுத்தடுத்தாற்போல் உள்ள ஆலய மூர்த்தங்களை வழிபடல் வேண்டும்.
மூலதானத்திற்கு நேர் பின்புறம் முருகன் அல்லது திருமால் இருப்பது மரபு. திருமால் இருப்பின் வடமேற்கு மூலையில் முருகன் இருப்பது மரபாகும். சில கோயில்களில் பின்புறம் முருகனும் வடமேற்கு மூலையில் கஜலட்சுமியும் இருப்பது மரபாகும்.
தெற்கு நோக்கி ஒவ்வொரு திருக்கோயிலிலும் நடராசப் பெருமான் எழுந்தருளியிருப்பர்.சைவ சமயத் தத்துவங்களைத் தாங்கிநிற்கும் திருவுருவம் நடராசப் பெருமான்.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால் வெண் நீறும் இனித்தமுடைய எடுத்தபொற் பாதமுமாய் எழுந்தருளி ஐந்தொழில்களையும் ஆட்டுவிக்கும் நடராசப் பெருமானின் முன்நின்று திருமுறைகளை ஓதி வழிபடல் வேண்டும்.
அம்மன் திருக்கோயில் பெரும்பாலும் தெற்குநோக்கியே அமைந்திருக்கும். சில கோயில்களில் மூலத்தானைத்தை அடுத்து இடப்பக்கமாக தனிக்கோயிலாக அமைந்திருக்கும். தனம் தருபவருளும் கல்வி தருபவளும் ஒருநாளும் தளர்வறியா மனம் தருபவளும் தெய்வ வடிவம் தருபவளும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தருபவளும் நல்லன என்ன என்ன உண்டோ அவையாவையும் அள்ளித் தருபவளும் அன்பர்களுக்கு எல்லாப் பெருமைகளையும் தருபவளுமாகிய நறுமணப் பூவினைச் சூடியுள்ள கூந்தலையுடைய அம்மையை வழிபடல் வேண்டும்.
பின் துர்க்கையை வழிபட்டு சண்டிகேசரை வழிபடல் வேண்டும். "பெருமானே,அடியேனுக்கு கிட்டிய திருவருட்சம்மதத்தால் திருக்கோயிலை வழிபடும் பேறு பெற்றேன்.வழிபாட்டில் அபுத்தி பூர்வமாக ஏதேனும் தவறிழைத்திருந்தால் அவற்றைப் மன்னித்து அருள வேண்டும்' எனப் பிரார்த்திக்க வேண்டும்.சண்டிகேசரை வழிபடும்போது கையை மெதுவாகத்தட்டுவது மரபு.
உரக்கத்தட்டுதலைத் தவிர்க்க. சண்டிகேசர் நிட்டையில் இருப்பதால் நமது வரவை தெரிவிக்கவெ இவ்வாறு மெதுவாக கைதட்டுவது மரபு. சண்டேசுவரர் எழுந்தருளியுள்ள பிரகாரத்தை வலம் வருதல்,வீபூதி, குங்குமம் சண்டேசுவரர்மேல் எறிதல்,நூல் கழட்டி வைத்தல்,சுண்டுதல் என்பன பெருந்தவறாகும்.(தஞ்சைப் பெரிய கோயிலில் சண்டிகேசர் பிரகாரத்துள் நுழைந்து சண்டிகேசரைத் தீண்டி வணங்குவது கண்டு "தவறு' என எடுத்துக் கூறியபோது "இவ்வாலயத்தில்" இது சரி என அன்பர் வாதிட்டார். பின்னர் அங்குள்ள அந்தணரிடம் விசாரித்தபோது "பிழை" என்று சொன்னவர் மக்களின் தவறான நம்பிக்கையின் விளைவால் ஏற்பட்டது என்று வருந்தினார்.
பின்னர் பைரவர் சந்நிதியை வழிபட்டு விடைபெற்றுச் செல்லல் வேண்டும். பைரவர் திருக்கோயில் காவல் தெய்வமாகும்.
பின் புறங்காட்டாது பலிபீடத்திற்கு இப்பால் வந்து இடபதேவருடைய கொம்புகளினூடாக சிவலிங்கப் பெருமானை வழிபட்டு விழுந்து வணங்கி வடக்கு முகமாக அமர்ந்து சிவபெருமானை மனதில் எழுந்தருளச் செய்து திருவைந்தெழுத்தை உச்சாடனம் செய்து திருமுறைகளை ஓதி வழிபடல் நன்று.
"தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே"
என்று அம்மையினுந் துணை ஐந்தெழுத்தே என இறைவியிடம் ஞானப்பால் பெற்று அருந்திய திருஞானசம்பந்தர் எமக்கு விளக்கியுள்ளார். சித்தர் வாக்கு சிவன் வாக்கு என்பர்.
"சிவாயம் என்ற அட்சரம் சிவன் இருக்கும் அட்சரம்
உபாயம் என்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடமற்ற வாயிலைக் கடந்துபோன வாயுவை
உபாயமிட்டு அழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே"
என்று ஐந்தெழுத்தே மரணத்தின் பின் உபாயம் என்கிறார் சித்தர் சிவவாக்கியார்.
உருக்கழிக்கு முன்னமே உரையுணர்ந்து கொள்ளுமே என்று ஐந்தெழுத்தை உணரும்படி வேண்டுகிறார். எனவே ஐந்தெழுத்தை; நம சிவாய என்னும் தூல பஞ்சாட்சரத்தை 'ஓம்" என்னும் பிரணவம் சேர்த்து செபித்தல் வேண்டும்.
சிவாலயங்களை மூன்றுமுறை வலம்வருதல் விதி. எனவே பின்வருமாறும் ஆலய வழிபாடு மேற்கொள்ளப்படும்.
முதல் வலமாக கொடிமரத்தின் கீழ் விழுந்து வணங்கிய பின் வெளிப் பிரகாரத்தை சுற்றுதல்.
பின் திருமூலட்டானத்தை வழிபட்டபின் அம்மையை வழிபட்டு வலம் வருதல். இவ் இரண்டாம் வலத்தின்போது உற்சவமூர்த்திகள், நடராசப் பெருமான் ஆகியோரை வழிபட்டு சமயகுரவர்,சந்தான குரவர், அறுபத்து மூவர்,சேக்கிழார் ஆகியோரை வழிபட்டு முருகப் பெருமானை வழிபடல் வேண்டும் என்பர்.
மூன்றாம் சுற்றில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, பின் துர்க்கையை வழிபடல் வேண்டும்.கடைசியாக சண்டேசுவரரை வழிபடல் வேண்டும். ஒவ்வொரு சுற்றுப் பூர்த்தியிலும் பலிபீடத்திற்கு அப்பால் விழுந்து வணங்குதல் வேண்டும்.
திரும்பும்பொழுது ஆலயத்தின் வாயிலில் சற்று அமர்ந்து பின் எழுந்து செல்லல் வேண்டும். சிவாலயங்களில் ஏழு சிரஞ்சீவிகள் தங்கியிருந்து சிவதரிசனம் செய்பவர்களை அவர்கள் வீடுவரை வந்து மரியாதை செய்வதாக ஐதீகம் உண்டு. எனவே அவர்களை "நீங்கள் இருங்கள்,நாங்கள் சென்று வருகிறோன்" என்னும் பொருளிலேயே இவ்வாறு ஆலய வாயிலில் அமர்ந்து எழுந்து செல்லல் மரபு.
கரும்பைவிட மிக்கசுவை உடையவனாய், சூரியன் போன்ற ஒளி உடையவனாய், கடலில் தோன்றிய அமுதம் போல்பவ னாய், பிறப்பு, இறப்பு இல்லாதவனாய், மகா வாக்கியப் பொருளாய் இருப்பவனாய் உள்ள, பெரிய தவத்தை உடைய முனிவர்கள் துதிக்கும் அரிய பொன் போன்ற பெருமானை மனம்,மொழி,மெய்யினால் வழிபட்டு ஆலய வழிபாட்டை இறைசிந்தையுடன் பூரணப்படுத்தல் வேண்டும்.
திருக்கோயிலில் நுழைந்தது முதற் வெளியேறும்வரை இறைவனைத் தவிர வேறுயாரையும் கைகூப்பியோ அன்று விழுந்து வணங்கியோ அன்றி சாதரணமாகவோ வணங்குதல்/கும்பிடுதல் கூடாது. இறைவனுக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் இது என்பதை நினைவில் கொள்க. எவரும் யாருடைய வணக்கத்தையும் ஏற்றலும் கூடாது.
அந்தணரை வணங்குதல், கும்பிடுதல் அறியாமையால் இன்று நிகழ்வதுண்டு. இது தவறாகும்.
இறைவன் சம்பந்தப்பட்ட வேறு பேச்சுக்களை பேசக்கூடாது.
பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்தங்கள்
நடராசர் :- படைத்தல், காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழிகளையும் செய்யும் கடவுள் அம்பலவாணர் திருவுருவம்.
உமாதேவி:- சிவபெருமானுடைய திருவருட்சக்தி. ஐந்தொழில்களுக்கும் துணையாகவுள்ள சிவசக்தி.உமாமகேசுவரராகிய சிவனே அம்மை வடிவங்களை வழிபடும் அன்பருக்கு அருள்பாலிப்பவர் என்பதை "உடையாள் நடுவுள் நீயிருத்தி" என்னும் திருவாசகம் மூலம் அறியலாம்.
சந்திரசேகரர்:- உமாதேவியை இடப்பாகத்தே கொண்ட போகவடிவம். சடையில் ஒற்றைப்பிறை விளங்கும்.
சோமஸ்கந்தர்:- சர்வலோகங்களையும் தேராய் அமைத்து ஆரோகணித்து முப்புரங்களையும் எரிக்கப்புறப்பட்ட கோலம்.
தட்சணாமூர்த்தி:- குரு வடிவம் கல்லால மரத்தின்கீழ் ஞானகுருவாக எழுந்தருளிய சிவபிரான் வடிவம்.
பிட்சாடனர்:- ஆன்மாக்கள் செய்யும் செப,தப அனுட்டானங்களை ஏற்கும் திருவடிவம்.
மேலும் திருக்கோயில்களில் விநாயகர்,பைரவர்,வீரபத்திரர்,முருகன் என்னும் நான்கு சிவகுமாரர்களின் திருவுருவங்களும் இருக்கும். சிவகுமாரர் நால்வரும் இறைவனின் சுத்த மாயா தத்துவத்திற்க் கொண்ட வடிவங்களாகும்.
விநாயகர்:- ஓங்காரத்தின்/பிரணவத்தின் உண்மைப்பொருளை அறிவிக்கும் சிவத்தின் வடிவம்.
பைரவர்:- சங்கர ருத்திரர் எனப்படுவர். சகல சம்பந்தங்களையும் சங்கரித்து ஆன்மாக்களை ஈடேற்றும் கோலம். சிவத்தினின்று தோன்றிய காரணத்தால் சிவகுமாரர் எனப்படுவர்.
இவரது வாகனம் வேதவடிவாகிய நாய் . இவரை வழிபடும்போது 'எங்களுடைய அகந்தையை நீக்கி காத்தருள வேண்டும்' என பிரார்த்தித்தல் வேண்டும்.
முருகன்:-இச்சா சக்தியாக வள்ளியம்மையையும் கிரியா சக்தியாக தெய்வானை அம்மையையும் உடையவர். மயிலாகிய வாகனம் ஆணவத்தையும் கொடியாகிய கோழி சிவ ஞானத்தையும் குறிக்கும்.
மேலும் ஆலயத்தில்;
பள்ளியறை:- காலையில் பள்ளியறைத் திறப்பு சிவமும் சக்தியும் பிரிந்து தொழிற்படுவதால் உண்டாகும் தோற்றத்தையும், இரவு பள்ளியறை மூடுதல் சக்தியானது சிவத்தில் ஒடுங்கும் போது ஏற்படும் லயத்தையும் குறிப்பனவாகும்.
கருவறை:- ஆலயத்தின் மையப்பகுதி. உடலில் இதயத்துள் இறைவன் இருப்பதற்குரிய அடையாளமாக விளங்குகிறது.
பலிபீடம்:- இது பாசத்தைக் குறிக்கிறது. இதை சிரி பலிநாதர் என்பர்.ஆலயத்துள் எட்டுத் திக்குகளில் எட்டுப் பலிபீடங்கள் இருக்கும். இவை எட்டுத்திக்குப் பாலர்களை உணர்த்தும். இவைகளுக்கெல்லாம் தலைமைப் பீடமாக உள்ளது நந்தியெம்பெருமானின் பின்பு உள்ள பலிபீடமாகும்.
நாம் வெளி எண்ணங்களை எல்லாம் பலியிட்டுவிட்டு இறைவனை வழிபட செல்லவே பலிபீடம் அமைந்துள்ளது.
கொடிமரம்:- அசுரர்களை அகற்றவும் சிவகணங்களையும் தேவர்களையும் பாதுகாக்கவும் கொடிமரம் அமைந்துள்ளது.
நந்தியெம்பெருமான்:- சிவபெருமானை எந்நேரமும் வணங்கி பார்த்தபடி இருக்கும் நந்தியெம்பெருமான் "நான் மறந்தாலும் என் நா மறவாது ஓது நாமம் நமசிவாயவே" என்பதுபோல் கண்காள் காண்மிங்களோ கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை" என்று அப்பர் பெருமான் ஏங்கியதுபோல் இடைவிடாது இறைசிந்தையில் இருத்தல் வேண்டும் என்பதைக் குறிக்கும்.
மண்டபங்களின் தத்துவம்
திருமூலட்டானம்:- மூலாதாரம்
அர்த்தமண்டபம்:-சுவாதிட்டானம்
மகாமண்டபம்:-மணிபூரகம்
ஸ்நான மண்டபம்:- அநாகதம்
அலங்கார மண்டபம்:-விசுத்தி
சபாமண்டபம்:-ஆக்ஞை
பலிபீடத்திற்கு அப்பால் விழுந்து வணக்க வேண்டும். கோயிலில் வேறு எங்கும் எச்சந்நிதியிலும் விழுந்து வணங்கக்கூடாது.
சமய சின்னங்கள் இன்றி ஆலயம் செல்லல் ஆகாது.
இறைவனுக்கு சாத்தப்பட்ட திருநீறு,வில்வம்,மலர் போன்றவற்றை மிதித்தல் ஆகாது.
ஒரே ஒருமுறை பிரகாரத்தை வலம்வருதல் கூடாது.
தனித்தனியாக ஒவ்வொரு பிரகாரத்தையும் வலம் வருதல் கூடாது.
கோயிலில் படுத்து உறங்குதல் கூடாது.
சந்தியா வேளையில் உணவோ வேறு தின்பண்டமோ உண்ணல் ஆகாது.(சந்தியா வேளை மாலை 5.31 முதல் 7.30 மணிவரை.)
இரைந்துசிரித்தல் ஆகாது.
ஒருவர் காலில் மற்றவர் விழுந்து வணங்குதல் கூடாது.
கம்பளி ஆடை தரித்து கோயிலுக்குள் நுழையக்கூடாது.
இறைவனுக்கு நிவேதனம் செய்யாதவற்றை உண்ணுதல் கூடாது.
தாம்பூலம் தரித்தல் கூடாது.
தலைமுடி ஆற்றுதல் கூடாது.
ஆராதனைக்குரிய பொருள் இன்றி ஆலயம் செல்லல் தவறு.
கோயிலில் வேகமாக வலம் வருதல் கூடாது. கர்ப்பிணிப் பெண் மெதுவாக நடப்பதுபோல் வலம்வருதல் வேண்டும்.
ஆண்கள் சட்டையணிந்து கொண்டோ போர்த்துக் கொண்டோ ஆலயம் செல்லல் தவறு. மேல் வேட்டியை(சால்வையை) இடுப்பில் கட்டிக் கொண்டு செல்லல் வேண்டும்.தலைப் பாகை அணிந்திருத்தல் கூடாது.
மூர்த்திகளை தீண்டுதல்,மூர்த்திகளின் கீழ் கற்பூரம் ஏற்றல் கூடாது.
சுவாமிக்கு நிவேதனமாகும்போது பார்த்தல் கூடாது.
சுவாமிக்கும் பலிபீடத்திற்கும் குறுக்கே போதல்
நந்திக்கும் சுவாமிக்கும் குறுக்கே போதல் கூடாது. நந்தியெம்பெருமான் இமைக்காது சிவபிரானை பார்த்து தொழுதவண்ணம் இருப்பதால் குறுக்கேபோவது பாவத்தை ஏற்படுத்தும். தூபி,பலிபீடம்,கொடிமரம்,விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது. நிழலில் மூன்றுகூறு நீக்கி எஞ்சிய இரண்டு கூறினுள்ளே செல்லல் பாவம் இல்லை என்பர். திருவிளக்குகளை கையால் தூண்டவோ,தூண்டிய கைகளில் உள்ள எண்ணெய்யை தலையில் தடவுதலோ அன்றி கோயிற் தூணில் துடைத்தலோ கூடாது.
அபிடேக காலத்தில் உட்பிரகாரத்தை வலம்வருதல் கூடாது.
இறைவனுக்கு நிவேதனம் செய்யாதவற்றை உண்ணக்கூடாது.
தீட்டுடன் செல்லல் கூடாது ஒருவரை ஒருவர் நிந்தித்தல் கூடாது.
சண்டையிடுதல்,எச்சில் துப்புதல், காறி உமிழ்தல் அல்லது துப்புதல், மல சலம் கழித்தல்,வாயு பறிதல் (fart), என்பன பாவத்தை ஏற்படுத்தும்.
பெண்கள் இடப்பக்கமும் ஆண்கள் வலப்பக்கமும் நின்று வழிபடுதல் அவசியமானதா?
மாதொருபாகனாகிய சிவனாரின் வலப்பக்கம் சிவனாகிய ஆணும் இடப்பக்கம் பெண்ணாகிய உமையும் இருப்பதைக் கொண்டு எழுந்ததாக இருக்க வேண்டும்.தோடுடைய செவியன் என்று ஞான சம்பந்தர் பாடுகிறார். தோடு என்பது பெண்கள் அணிவது. ஆண்கள் காதில் அணிவதற்கு குழை என்று பெயர். எனவே இறைவனின் இடப்பாகம் பெண்ணுக்குரியது என்பதை திருஞானசம்பந்தர் விளக்கியுள்ளார். காலனை சிவபிரான் இடப்பக்க காலால்தான் உதைக்கிறார். அதனாலேயே காலன் பிழைத்தான் என்பர் ஆன்றோர். காரணம் சிவனின் இடப்பக்கம் பெண்ணாகிய உமையம்மையாதலால் பெண்மை குணமாகிய இரக்கத்தின் விளைவால் இடக்கால் காலன்மேல் இரக்கம் கொண்டு காலனின் உயிர்பறிக்காது தண்டித்தது என்பர்.எனவே வலம்-ஆண் என்றும் இடம்-பெண் என்பதும் மரபாயிற்று.பேருந்தில் கூட வலப்புறம் ஆண்களும் இடப்புறம் பெண்களும் அமர்வது தமிழகத்தில் விதியாக்கப் பட்டுள்ளதை கண்டிருப்பீர்கள். இந்த "இடம்" பெண்களுக்கு என்பது காலம் காலமாக திருமணத்தில் தாலி ஏறியது தொட்டு குடும்ப நல்லதுகள்வரை பெண்களுக்கு "இடம்" என்ற பண்பாடு இருந்தமையால் ஏற்பட்டதே!எனவே இடப்புறமாக பெண்கள் நின்றும் வலப்புறமாக ஆண்கள் நின்றும் வழிபடல் வேண்டும் என வந்துள்ளது.ஆனால் இதை ஆலய வழிபாட்டு விதியாகக் கருதமுடியாது. இறைவன் தில்லையில் கூத்தாடும்போது வலப்புறமும் இடப்புறமும் வியாக்கிரதபாதரும் பதஞ்சலி முனிவரும் வழிபடுகின்றனர். எனவே இறைவனை இடப்பக்கமாக பெண்களும் வலப்பக்கமாக ஆண்களும் நின்று வழிபடல் வேண்டும் என்பது கட்டாய விதி அல்ல. ஆனால் ஆலயத்தில் துஷ்டர்களால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க இம்முறையை சில ஆலயங்களில் கட்டாயவிதியாக கடைப்பிடிப்பர். அப்படி கடைப்பிடிப்பது நன்மையே என்பதால் "அவ் விதியை" ஒழுகுவதே உத்தமம்.
விநாயகர் வழிபாடு நந்தியெம்பெருமானை வழிபட்டு துவாரபாலகர்களை வழிபட்டபின்னர் மேற்கொள்வதா அன்றி அதற்கு முதலிலேயே வழிபடல் வேண்டுமா?
பெரிய சிவாலயங்களில் (ஆகமவிதிப்படி முறையாக அமைந்த ஆலயங்கள்) கோபுர வாயிலுக்கு வெளியே உள்ள விநாயகரை வழிபட்டு, பின் கொடிமரம்,பலிபீடம்,நந்தி ஆகியவற்றை வழிபட்டு பின்னர் துவாரபாலகர்களை வழிபட்டு தொடர்ந்து விநாயகர் சந்நிதியில் வழிபட்ட பின்னர் சிவபெருமானை வழிபடல் வேண்டும்.திருக்கைலாயத்திலும் நந்தியின் அனுமதியுடனேயே திருக்கைலாயம் நுழைய முடியும். பின்னர் துவார பாலகர்களின் அனுமதி பெற்று உட்செல்லும் போது சிவகுடும்பத்தை வணங்க முடியும். சிவ குடும்ப வணக்கத்தில் விநாயகர் வணக்கம் முதன்மை பெறுகிறது. எனவே துவார பாலகர்களுக்கு அடுத்ததாக விநாயகர் வழிபாடும் அதனைத் தொடர்ந்து மூலமூர்த்தி வழிபாடும் விதியாகிறது.
சேரமான் பெருமானுக்கு முன்னமே ஔவையாரை துதிக்கையால் திருக்கைலாயம் கொண்டு சென்றவர் விநாயகர் என்ற தத்துவத்தை கருத்தில் நிறுத்தின் விநாயகர் வழிபாடு திருக்கைலாயம் செல்லும்போது ஏற்படும் இடர்களை நீக்கவல்லது.அதுபோல் ஆலய வழிபாடுகளை மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய இடர்களை விநாயகர் வழிபாடு நீக்க வேண்டியே பெரிய சிவாலயங்களில் கோபுரவாசலின் வலப்புறமாக விநாயகர் சந்நிதி இருப்பது மரபு என உணரலாம்.
எனவே கோபுர வாசலில் வெளியே வலப்புறமாகவுள்ள விநாயகர் சந்நிதியில் வழிபட்டு பின் நந்தியை வழிபட்டு துவாரபாலகர்களை வழிபட்டு அதன்பின்னர் விநாயர் சந்நிதி இருக்குமானால் அவ்விநாயகர் சந்நிதியில் வழிபட்டு பின் மூலமூர்த்தியை வழிபடல் வேண்டும் என்பது புலனாகிறது.
சுருங்கக் கூறின்
- நித்திய கருமங்களை முடித்து நீராடி தூய ஆடையணிந்து சிவசின்னங்களாகிய திருநீறு,உருத்திராக்கம் அணிந்து ஆலயம் செல்லல் வேண்டும்.
- கோபுரத்தை கண்டமாத்திரம் கைகூப்பி தொழவேண்டும்.
- மலர்கள்,பாக்கு,மாலை,கற்பூரம்,பழம் என்பவற்றை கொண்டுசெல்லல் வேண்டும்.
- தல விநாயகரை(கோபுரத்துக்கு வெளியே வலப்புறமாக இருப்பார்.) தரிசித்து குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இட்டு வழிபட்டு உட்செல்ல வேண்டும்.
- கொடிமரம்,பலிபீடம்,நந்தி ஆகியவற்றை வழிபடல் வேண்டும்.
- துவார பாலகர்களை வணங்கியபின்னர் ஆலய திருமூலட்டானத்தின் வலப்புறமாக விநாயகர் சந்நிதியில் வழிபடல் வேண்டும்.
- மூலமூர்த்தியை வழிபட்டபின் சுற்றிலும் உள்ள ஏனைய மூர்த்திகளை வழிபடல் வேண்டும்.
- சண்டேசுவரரை மெதுவாக மும்முறை கைகளைத் தட்டி பின் வணங்குதல் வேண்டும். திருநீற்றை இருகைகளாலும் பணிவுடன் பெற்று சிவசிவ என உச்சரித்த வண்ணம்
- மேல்நோக்கி தலையை உயர்த்தி நெற்றியில் அணிதல் வேண்டும்.கிழே சிந்துதல் கூடாது.
- ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வருதல் வேண்டும்.
- கொடிமரத்தின் கீழ்(பலிபீடத்திற்கு அப்பால்) விழுந்து வணங்க வேண்டும்.
- வடக்கு முகமாக சற்று அமர்ந்து திருமுறை, திருவைந்தெழுத்தை ஓதி ஆலய வழிபாட்டை பூரணப்படுத்தல் வேண்டும்.
2 comments: on "திருக்கோயில் வழிபாட்டு விதிகள்"
ஆலய வழிபாட்டு விதிகள் பற்றி பதிவிடுவதற்காக எழுதிய கட்டுரை அரைகுறையாக எழுதி பூரணப்படுத்தாது சிலநாட்களாய் தட்டிக்கழித்த வண்ணமே இருந்தேன் யை. இறைவன் தமக்கையார் ஒருவர் மூலம் ஆலய வழிபாட்டு ஐயங்களை எனது மின்னஞ்சலுக்கு கிட்டச்செய்தான். அப்போதுதான் ஐயகோ! பெரும்பிழை விட்டுவிட்டோம் என உள்மனம் சொல்லத் தொடங்கியது. உடனே எழுத மீண்டும் ஆரம்பித்தபோது எனக்கும் ஐயங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டது. உடனே ஒருசில நூல்களை ஆராய்ந்து என் புத்திக்கு ஏற்ற வகையில் தெளிவுபெற்று இங்கு பதிவேற்றியுள்ளேன்.
தமக்கையாருக்கு எழுந்த ஐயங்கள்
1) பலிபீடம்,நந்தியை வழிபட்ட பின்னர் துவார பாலகர்களுக்கு அடுத்ததாக விநாயகரை வழிபடுதல் சரியான விதியா என்பது.
2)இடப்புறமாக பெண்களும் வலப்புறமாக ஆண்களும் வழிபடுதல் சரியானதா என்பதாகும்.
இந்தப் பிள்ளையார்தான் எங்குதேடியும் தெளிவுபெறவும் முதலில் முடியவில்லை. ஏன் எனில் பெரிய சிவாலயங்களில் விநாயகர் சந்நிதி கோபுர வாயிலில் வெளியாக வலப்புறம் இருக்கும். சில ஆலயங்களில் கொடிமரத்தின் கீழ்கூட இருக்கும்.(சீர்காழியில் அல்லது திருவெண்காட்டில் அப்படித்தான் உள்ளது என நினைக்கிறேன்.) யாழ்ப்பாண ஆலயங்களிலும் அப்படியிருப்பது வழமை. எனவே ஒரே குழப்பமாயிற்று. பிள்ளையாரைக் கண்டும் காணாததுபோல் உள்நுழைவது ஏற்றதா என்பதே!
ஆலய விதிகளை விதந்துரைக்கும் ஒருசில நூல்கள் கைவசம் இருந்தன.அவற்றிலும் தெளிவான விளக்கம் இல்லை. இறுதியில் சிவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு எழுத ஆரம்பித்தபோது "ஔவையார் திருக்கைலாயம் சென்ற கதை" நினைவுக்கு வந்தது. சரியான தெளிவையும் ஊட்டியது. அவற்றை விரிவாக பதிவிட்டுள்ளேன்.
பயன்பெற்றால் வலைப்பூவில் பின்னூட்டமிடுக. ஐயங்கள் ஏற்பட்டால் வினாவுக. இயன்றவரை என் சிற்றறிவுக்கு எட்டியவரை விளக்க முயலுகிறேன்
கோவிலில் உள்ள சிலைகளை புகைப்படம் எடுக்கலாமா? கூடாதா? இதற்க்கு ஏதேனும் காரணங்கள் விளக்கங்கள் உண்டா?
Post a Comment