பிந்திவந்த கொம்பு முன்பிருந்த செவியை மறைப்பது போல்"இந்து" மதம், சிவனுஞ் சீவனும் என்றுண்டோ அன்றுதொட்டிருந்து வரும் சைவத்தை மறைக்க எத்தனிக்கிறது. இந்து சமயம் என்பது கூட்டுச் சரக்கு.அதன் ஆறுபிரிவுகளில் ஒன்றென கூறப்படும் சைவம் தென்னாட்டில் பெரும்பான்மையோரால் கடைப்பிடிக்கப்படும் நெறி. வைணவம்கூட தென்னாட்டிலேயே சிறப்பாக வழிபடப்படுகிறது. சாக்தம் கல்கத்தாவுடன் சரி.
கௌமாரம்,காணபத்தியம்,சௌரம் எனும் நெறிகள் வெறும் கட்டுக்கதைகளே. இத்தனைக்கும் முருகன் என்பது தமிழ்க் கடவுள்.காலம் காலமாக சைவநெறிக் கடவுள். இத்தகு முருகனை கௌமாரக் கடவுளாக எழுத்தில் எழுதி கட்டுக்கதைகளை பரப்புகின்றனர். பிள்ளையார் வழிபாடு சைவத்திலும் வைணவத்திலும் சிறப்பாக உள்ள வழிபாடுகளில் ஒன்று. இரண்டு நெறிகளுக்கும் பொதுவான வழிபாடாக பிள்ளையார் வழிபாடு விளங்குகிறது. சூரிய வழிபாடு என்பது சௌரம்.காலையில் சூரிய வந்தனம் செய்யும் ஒரு வழிபாட்டை நெறியாக்கிய கெட்டித்தனத்தைப் பாராட்ட வேண்டியது அவசியம். எனவே, இந்துமதம் என்பது சைவத்தினதும் வைணவத்தினதும் தனித்தன்மைகளை சிதைத்து வேறு ஏதோ ஒரு நெறியைப் புகுத்த உருவாக்கப்பட்ட கூட்டுச் சரக்கு என்பது இந்துவைப் பகுக்கும் போதே உணரக்கூடியதாகவுள்ளது. அப்படியானால் அது என்ன நெறி? அத்வைதம்.உருவாக்கியவர் ஆதிசங்கரர். வைணவ இராமனுஜரின் புகழால் அத்வைதத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்ற காரணத்தால் அவரை காசிக்கு அழைத்துச் சென்று கொல்ல சதிதீட்டியவர்கள் அத்வைதர்கள். இராமனுஜரை அவரது சீடர்கள் காத்தார்கள்.இத்தகு உதாரணம் போதும் அத்வைதம் எவ்வண்ணம் தன்னை காக்க எண்ணியது என்பதை உணர்ந்து கொள்வதற்கு. எனவே, தமிழரின் தனிப்பெரும் சமயமாகிய சைவநெறியை சிறுமைப்படுத்த அத்வைதம் எவ்வளவு முயற்சி எடுக்கும் என்பதை உய்த்துணரலாம். அத்வைதமே சுமார்த்தம் என்க. வடவரின் வைதிகத்திற்கு சாமரைவீசுகிற இந்தச் சுமார்த்தநெறியை திரைமறைவில் பரப்ப கண்டுபிடித்த மதமே "இந்து" மதமாகும்.
சிந்துவெளி மக்களை பாரசீகமொழியில் இந்து என உச்சரித்தனர். சிந்துவெளி மக்கள்மேல் கொண்டிருந்த வெறுப்பால் "இந்து"வை கள்ளர் எனப் பொருள்படுத்தினர், இந்த இந்து ஆங்கிலேயரால் "இந்தியா"வாயிற்று. சுவாமி விவேகானந்தரின் அமெரிக்க சர்வசமய மாநாட்டு வீரகர்ச்சனையால் உலகப் பிரபல்யம் பெற்றதாயிற்று. சந்திரனைக் குறிக்கும் அருஞ்சொல்லாகிய இந்துவும் "இந்து"மத இந்துவும் வேறுவேறானவை. "HINDU"வை தமிழில் இ"IN" ந்து என உச்சரிக்கிறோம். இந்த வேறுபாட்டை உணராது தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்று "ஸ்ரீ" யை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்த சனம். எதிரி நேர்மையாக நேராக வந்தும் மோதுவான். மறைமுகமாக நேர்மையற்று முதுகில் வந்தும் தாக்குவான். வடநாடு "நேர்மையற்ற" எதிரி. அதுதான் "இந்து" மதமாகி சைவத்தை அழித்து தமிழரின் தனித்துவப் பண்பாட்டை சிதைக்கத் துடிக்கிறான். தமிழரே அதற்கு துணையாகி நிற்கின்றனர்.
அமெரிக்காவில் பெருவெற்றியீட்டி 1987இல் இலங்கை வந்த சுவாமி விவேகானந்தர் "இந்து என்ற பெயர்க்குப் பதில் சைவன் எனக் கூறவேண்டும்" என்றார். சுவாமிக்கு உவகையளிக்கும் என எண்ணி இந்துமதம்....இந்து....என்று பேச்சாளர்கள் பேசியபோதே சுவாமி இவ்வண்ணம் தெரிவித்தார். திருமூல நாயனாரால் சிவபூமி என திருமந்திரத்தில் சிறப்பிக்கப்பட்ட இலங்கையில் சைவம் என்னும் அழகுபொதிந்த அர்த்தம் நிறைந்த சொல்லாடல் சிதையக்கூடாது என அவர் எண்ணினார் போலும். சுவாமிக்கு உவப்பாக இருக்கும் என எண்ணி சுவாமியை வரவேற்றுப் பேசியபோது , "We, the inhabitants of Jaffna professing the Hindu religion, desire to offer our most hearty welcome to our land, the chief centre of Hinduism in Ceylon" என்றெல்லாம் இந்துவைப் போற்றித் துதிபாடினர் எம் சில ஆங்கிலம் மெத்தப்படித்த பண்டிதர்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கட்கு பதிலளித்துப் பேசும்போது "The word Hindu has lost its meaning, for this word merely meant those who lived on the other side of river Indus.This name was altered by ancient Persians, and all people living on the other side of the river Sindhu were called by them as Hindus... I, therefore, would not use the word Hindu" என்று எம்மவர்களில் அறீவினத்தை சுட்டிக்காட்டினார். சுவாமி விவேகானந்தர் இவ்வண்ணம் சுட்டிக்காட்டியதை Lectures from Colombo to Almora, Advaita Ashram, Delhi, 1995 . 14th edition இல் காணலாம்.(இதனை உலக சைவப் பேரவையின் இணையத்தளப் பிரசுரத்தில் சித்தாந்தரத்தினம் கணேசலிங்கம் ஐயா சுட்டிக்காட்டியுள்ளார். ஐயாவுக்கு நன்றிகள்).
இலங்கையில் சுவாமி விவேகானந்தரைப் போற்றுபவர்கள் சுவாமி விவேகானந்தர் "சைவம்" என்பதை பேணவேண்டும் என எடுத்துக்கூறியதை கருத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுவே அவர்மேல் கொண்டுள்ள பக்திக்கு அழகு.
1906இல் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருந்த சேர்.பொன்.இராமநாதனை கப்பலில் சந்தித்த அமெரிக்கர் ஒருவர் "ஐயா நீங்கள் இந்துவா?" எனக் கேட்டபோது சிரித்துவிட்டு நாங்கள் சிவபெருமானை வழிபடுபவர்கள்.அக்கருத்தில் நாங்கள் சைவர்கள்.விபரம் அறியாத வெளிநாட்டவர்கள் எங்களை இந்துக்கள் என்கிறார்கள் அதற்காக நாங்கள் அப்பெயருக்கு உரியவர் ஆகமாட்டோம்" என்றார். "Eastern pictures to Western Students" எனும் நூலில் இன்றும் காணக்கிடைக்கும் செய்தியிது. அன்று விபரம் அறியாதவர்களாக சேர்.பொன்.இராமநாதன் சுட்டுவது வெளிநாட்டவர்களை! இன்று விபரம் அறியாதவர்கள் என்றால் நாங்கள் தானே? வெளிநாட்டவரா என்ன?
சைவப் பெரியார் க.சிவபாதசுந்தரம் ஐயா பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு மடல் வரைந்து "இந்து எம்மொழிச் சொல்?" என வினாவி என்ன அர்த்தத்தில் வழங்குகிறது என ஆய்வித்து அந்நியச்சொல் என்பதையும் அதன் அர்த்தம்(திருடர்) அமங்கலமானது என்பதையும் அறிந்து 1956களில் யாழ்ப்பாணத்தில் இருந்த இந்து வாலிபர் சங்கத்தை சைவ வாலிபர் சங்கமாக பெயர் மாற்றம் செய்தமை அறிந்த ஒன்றே!
சிவாகமங்களிலோ சித்தாந்த சாத்திரங்களிலோ கந்தபுராணம்,பெரிய புராணம், தேவாரங்கள், திருவாசகம்,திருமந்திரம் மற்றும் ஏனைய திருமுறைகள் என்று எங்குமே இந்துமதம் எனும் சொல் இல்லை. அமங்கலமான இந்து எனும் சொல்லை எங்கனம் சைவத்துக்கு சூட்டமுடியும்? தமிழை சிதைக்கும் திட்டத்துடன்கூடிய இந்துவை தமிழர் எங்கனம் ஏற்க முடியும்?
இராவணன் காலந்தொட்டு சீரும்சிறப்புமாக விளங்கிவருவது சைவநெறி. நாவலரால் மேலைத்தேயத்தவரிடம் இருந்து மீட்டு தமிழ்ச்சாதிக்கு வழங்கபட்ட உன்னத நெறி. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் மறைவுடன் இலைமறை காயாக இருந்த இந்து எனும் சொல்லாடல் பின்னர் இந்து சாதனம், இந்துக்கல்லூரி, இந்துபோர்ட் எனப் பெருத்து மாமன்றம்,பேரவை,குருமார்பீடம் என்று கொழுத்துப் போய்விட்டது.
ஏலவே சைவகுருமார் பீடம் இலங்கையில் சீரும்சிறப்புடன் இருக்க, கொழும்பில் சுமார்த்தவிசுவாசிக்கு "இந்து'குருமார் பீடம் தேவைப்பட்டுள்ளது. ஏனெனில் இவரது சிவாகமவிரோத வழிபாட்டுக்கு "சைவகுருமார்" உதவார் என்றதனால், அவர்களிலும் தான் பெரியபீடத்துக்கு உரியவன் என்பதை நிலைநிறுத்த "இந்து"குருமார்பீடம் உருவாக்கிவிட்டார். எங்கள் தமிழ்ச்சாதி எதற்கும் தலையசைக்கும் இழிசாதி என்ன இவர்கள் எண்ணிவிட்டனர் போலும்.
"சிவனெனும் ஓசை அல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை உனதே" என்றார் நாவுக்கு அரசராகிய திருநாவுக்கரசர் நாயனார். சிவனெனும் ஓசைக்கு அல்லாது வேறு எவற்றுக்கும் செம்மையில்லை.சபதம் பிடிக்கவா? என்கிறார். 'சைவம் சிவனுடன் சம்பந்தமாவது" என்கிறது திருமந்திரம். சைவம் என்பது சிவனெனும் ஓசையுடையது. இந்துவுக்கு எந்த மண்ணாங்கட்டியும் கிடையாது.
ஒரு சமயப் பெயர் அச்சமயத்தை பண்பும் பயனும் விளங்கும் உயிரோட்டமான அர்த்தம் பொதிந்ததாக இருத்தல் அவசியம். எள்ளில் எண்ணெய் இருப்பதுபோல் சமயப் பெயரில் சமயத் தத்துவங்கள் புலனாக வேண்டும். சைவம்-சிவம் என்பதே அழகு நிறைந்தது. தமிழருக்கு உரியது. தமிழ்ச்சாதியே உன் விதியை வடநாட்டின் தரகர்களுக்கு விற்காதே!!!!!!!!
4 comments: on "சைவநெறி என்று பறைவோம்"
//எனவே, தமிழரின் தனிப்பெரும் சமயமாகிய சைவநெறியை சிறுமைப்படுத்த அத்வைதம் எவ்வளவு முயற்சி எடுக்கும் என்பதை உய்த்துணரலாம்.//
அத்வைதம் வைதீக சமயம். பார்பனர்கள் போற்றும் சமயம் என்பதைத் தவிர்த்து அதில் உயர்த்தன்மை இருப்பதாகத் தெரியவில்லை. எந்த ஒரு ஞானியும் அத்வைதக் கொள்கை மூலம் முக்தி அடைந்ததாக இலக்கியங்கள் இல்லை.
சங்கரமடங்கள் அத்வைதைத்தை உயர்த்திப் பிடிப்பதால் அதற்கு இன்னும் உயிர் இருக்கிறது.
***
விவேகந்தர் ஒரு அத்வைதி என்பது உங்களுக்கு தெரியாதா ?
கடவுள் குறித்தக் கொள்கையில் கடவுள் என்று எதுவும் தனித்து இல்லை நீயே கடவுள் என்பதே அத்வைதம். விவேகநந்தர் என்ன செய்வார் பாவம், உருவ வழிபாட்டிலும் அவருக்கு ஒப்புதல் இல்லை, சமயங்களைத் தூறந்தால் நாத்திகனாக சொல்லுவார்கள், அதனால் அவருக்கு அத்வைதம் உயர்ந்தாக தெரிந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
அத்வைதம் மிகச் சரியான கொள்கை என்றால் இராமனுஜருக்கு வைணவம் தேவைப்பட்டு இருக்காது. :)
புத்தமதத்திற்கு இருந்த செல்வாக்கை குறைக்க வேறு வழியின்றி ஆன்மா - உடல் தத்துவங்களை ஏற்று, ஆன்மாவே கடவுள் என்ற கொள்கையைக் கொண்டு வந்து வைதீக சமயங்களை தழைக்க வைக்க எடுத்த முயற்சியே அத்வைதம். பார்பனீயம் மிகவும் ஆழமாகப் பரவியதற்கும் பார்பனர்கள் தங்களை பிராமணர், ஐயர் என்று அழைத்துக் கொள்வதற்கும் அத்வைதம் வழிசெய்து பிறப்பு வழி பார்பனர்கள் சங்கராச்சாரியார்களாக அறிவிக்கப்பட்டு தொடர்கின்றனர்.
***
சிறப்பான கட்டுரை !
//வைணவ நம்மாழ்வாரின் புகழால் அத்வைதத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்ற காரணத்தால் அவரை காசிக்கு அழைத்துச் சென்று கொல்ல சதிதீட்டியவர்கள் அத்வைதர்கள். நம்மாழ்வாரை அவரது சீடர்கள் காத்தார்கள்.//
இது என்ன புதுக்கதையாக இருக்கிறதே? நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியெனப்படும் திருக்குருகூரில் உள்ள பெருமாள் கோவிலில் அமைந்திருக்கும் புளிய மரத்தடியை (மரப்பொந்தினை) விட்டு தன் வாழ்நாளில் எங்கும் நகரவில்லை என்று தான் எல்லா வைணவ நூல்களும் கூறிப் படித்திருக்கிறேன். நீங்கள் ஒரு புதுக்கதையைச் சொல்கிறீர்களே? இதற்கு என்ன தரவு இருக்கிறது என்று காட்டுங்கள்.
மற்ற படி கட்டுரையின் முதன்மைக் கருத்தான 'இந்து என்று சொல்லிக் கொள்ளாதீர்கள். சைவர் என்று சொல்லிக் கொள்ளுங்கள்' என்ற உங்கள் கருத்தினை நடுநிலையிலிருந்து படித்துச் செல்கிறேன். படித்துக் கொண்டு வரும் போது நம்மாழ்வாரைப் பற்றிய தவறான தகவல் இருப்பதாகத் தோன்றுவதை மட்டும் கேள்வி கேட்கிறேன்.
மன்னிக்க வேண்டும். இராமனுஜர் என்பதை தவறுதலாக நம்மாழ்வார் என்று எழுதிவிட்டேன். கருத்துப்பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.
இராமனுஜரும் அவரது சீடரான கோவிந்தன் என்னும் எம்பார் ஆக இருவரும் அத்வைதரான யாதவப்பிரகாஸரின் குருகுலத்தில் அத்வைத கருத்துகளை அறிவதற்காய் சிலகாலம் இருந்த தருணம், தனது கருத்துகளை இராமனுஜர் எடுத்துக்கூறியபோது யாதவப்பிரகாஸரின் கருத்துகள் மங்கத் தொடங்க அவர் தீட்டியதிட்டப்படி காசிக்கு இராமனுஜர் உட்பட அனைத்து சீடரையும் அழைத்துச் சென்றபோது அங்கு இராமனுஜரை கொல்வது என்ற திட்டத்தை அறிந்துகொண்ட இராமனுஜரின் சீடரான எம்பார் இராமனுஜரை தப்பிஓட செய்கின்றார். பின்னர் காஞ்சி வரதராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும் வேடன் வேடுவச்சி வடிவம்தாங்கி காப்பாற்றி காஞ்சி சேர்த்தனர்.
கட்டுரையில் நம்மாழ்வார் என்று இருந்த இடத்தில் இராமனுஜர் என்று திருத்திவிடுகின்றேன்.
அன்புடையீர்,வணக்கம்.தங்களது பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன்.தமிழ்நாட்டில் இருந்தால் தங்களை சந்திக்க விரும்புகிறேன்.
அன்புடன்
சீனிவாசன்
Post a Comment