திருக்கேதீசுவரத் திருத்தலத்தின் தலைவரும் ஈழத்து சைவக்காவலருமான சிவத்திரு இராசப்பிள்ளை நமசிவாயம் ஐயா 99ம் அகவையில் சனிக்கிழமை காலை கொழும்பில் தனது பூதவுடலை விட்டு நீங்கி சிவபதம் பெற்றார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகக் கொண்ட சிவனடியார் நமசிவாயம் ஐயா, 1912ஆம் ஆண்டு சித்திரை மாதம் 11ஆம் நாள் பூவுலகில் இராசப்பிள்ளை, சிதம்பரனாச்சியார் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். ஐயா ஆரம்பக்கல்வியை வடமராச்சியில் உள்ள விக்டோரியா கல்லூரியிலும் உயர்கல்வியை யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியிலும் கற்றார். சட்டத்துறையில் தனது மேற்படிப்பை மேற்கொண்டு 1941 இல் சட்டத்தரணியாக பணியாற்ற தொடங்கினார். விஜயலஷ்மி அம்மையாரை திருமணம் செய்தார். இவர்கள் நான்கு பிள்ளைகளுக்கு பெற்றோராயினர்.
ஈழத்தில் மட்டுமற்றி தமிழகத்திலும் சைவப்பணிகள் ஆற்றி 64ஆம் நாயனாராக போற்றத்தக்க பேறைப்பெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாலவரால் ஆரம்பிக்கப்பட்ட திருக்கேதீசுவரத் திருப்பணி சைவப்பெரியார் சிவபாதசுந்தரம் அவர்களாலும், சேர். கந்தையா வைத்தியநாதன் அவர்களாலும் தொடரப்பட்டு சிவத்திரு.இ.நமசிவாயம் ஐயாவால் பெரிதும் வளர்த்தெடுக்கப்பட்டது.
பல்வேறு கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி சைவசமயத்தின் மேன்மைகளை ஊடகங்களூடாக நிலைநாட்டினார். திருநெறிச்சைவ சித்தாந்த வளர்ச்சிக்கு ஈழத்தில் பெரும்பங்காற்றினார். இந்து என்ற சொல்லால் சைவம் என்ற சொல் மழுங்கடிக்கப்படுவதையும்,ஸ்மார்த்த மதம் இந்துமதம் என்ற பெயரில் சைவர்களுக்குள் புகுத்தப்படுகின்றதென்பதையும் சைவமக்களுக்கு உணர்த்தி சைவத்திருநெறிக் காவலராக விளங்கினார். சைவநெறிக்கு முரணான வழிபாடுகளையும் அவ்வழிபாடுகளை நடத்துகின்ற சிவாச்சாரியார் அந்தணர்களையும் கண்டித்தார். எவருக்கும் அஞ்சாது உண்மையை உள்ளபடி உரைத்தார்.சைவத்திருநெறியை பாதுகாக்க தன்னாலான தன்சக்திக்கு மீறிய பணிகளையெல்லாம் ஆற்றினார்.
சிவனடியார் நமசிவாயம் ஐயாவின் பணிகளை நன்குணர்ந்துகொண்ட தமிழக திருவாவடுதுறை ஆதீனம் 2002ஆம் ஆண்டு பொன்னாடை போர்த்தி தங்கமோதிரம் அணிவித்து பொற்கிழி வழங்கி கௌரவித்தமை அனைவருக்கும் மகிழ்வை ஊட்டியது.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருக்கு பின்னர் ஈழத்தவர் ஒருவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய கௌரவம் என்றால் அது சிவனடியார் சிவத்திரு.இ.நமசிவாயம் அவர்களுக்கே என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய விடயமாகும்.
இராச இராச சோழனுக்கும் நம்பியாண்டார் நம்பிக்கும் திருக்கேதீசுவர ஆலயத்தில் சிலை அமைத்தார். இவர்களுக்கு முதன் சிலை அமைத்த சைவப்பெரியார் சிவத்திரு .இ.நமசிவாயம் அவர்களே என்றால் மிகையில்லை! கல்கி சஞ்சிகையும் இராச இராச சோழனுக்கு சிலை அமைக்கப்பட்டதை தமிழகத்தில் பதிவுசெய்தது.
போர்த்துக்கேயரால் இடித்தழிக்பட்ட தேவார முதலிகளான திருஞானசம்பந்தப்பெருமான்,சுந்தரமூர்த்தி நாயனார்
ஆகியோரால் பாடல்பெற்ற தலமாக விளங்கிய திருக்கேதீசுவர
ஆலயத்துக்கு கட்டிடப்பணி, சிலை உருவாக்கப்பணி,தேர் உருவாக்கப்பணி என்று எண்ணற்ற பணிகளை சிவனடியார் இ.நமசிவாயம் ஐயா மேற்கொண்டிருந்தமையை பாராட்டி திருக்கேதீசுவர ஆலய திருப்பணிச்சபையின் ஆயுட்காலத்தலைவராக மன்றம் தமக்கு நியமித்து ஐயாவை கௌரவப்படுத்தியது. சபையினால் முதன்முதலில் இவ்வாறான கௌரவம் ஐயாவுக்கே வழங்கப்பட்டமை குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும்.
சிவனடியார் இ.நமசிவாயம் ஐயாவின் இழப்பானது சைவத்தமிழ் உலகிற்கு ஈடுகட்டமுடியாத பேரிழப்பே!
திருக்கைலாயத்திற்கு ஐயாவின் ஆன்மாவை திருநந்திதேவர் அழைத்துச் சென்றிருப்பார் என்பதும் சிவானந்தப்பேறை நிலையாக நுகரும் திருப்பேறு ஐயாவுக்கு வாய்க்கபெற்றது என்பதும் சிவனடியாரின் துணிபு.
ஐயாவின் பூதவுடல் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 4 மணிக்கு பொரளை மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.சிவனடியார் நமசிவாயம் ஐயாவின் பூதவுடலை இறுதியாக வணங்க விரும்பும் சைவ ஆர்வலர்கள்,சைவமக்கள்,சிவனடியார் திருக்கூட்டத்தவர்கள் இலக்கம் 2,அடம்ஸ் அவன்யூ,கொழும்பு -04 என்னும் முகவரியிலுள்ள ஐயாவின் இல்லத்திற்கு செல்லுமாறு பணிவோடு வேண்டிக்கொள்கிறேன்.
எல்லாம் திருவருட் சம்மதம்
திருச்சிற்றம்பலம்
0 comments: on "சைவக்காவலர் சிவத்திரு.இ.நமசிவாயம் ஐயா சிவபதம் பெற்றார்!"
Post a Comment