வாருங்கள் சித்திரை புதுவருடத்தை கொண்டாடுவோம்… எமது இனத்தை அழித்த ஆரியர்களின் புதுவருடமாக……"என்ற தலைப்பில் தமிழ் ஊடகவியலாளர் திரு. இரா.துரைரத்தினம் ஐயாவுடைய கட்டுரை அண்மையில் தமிழ்வின் இணையத்தில் பிரசுரமாகியிருந்தது. அவருடைய கட்டுரையில் உள்ள பெரிய பொருட்பிழைகளைஉணர்த்தும் வகையில் கட்டுரையாக கடிதம் எழுதி மின்னஞ்சலூடாக தமிழ்வின் இணையத்திற்கு அனுப்பியிருந்தேன். அதனைத் தொடர்ந்து குறித்த கட்டுரை ஒருசில மணித்தியாலங்களில் சிறப்புக் கட்டுரைப்பகுதியில் இருந்து அகற்றியிருந்தனர். பின்னர் மீண்டும் இணைத்திருந்தனர். கனகசபை தேவகடாட்சம் என்ற அன்பர் எழுதிய மறுப்புக் கட்டுரையை பிரசுரித்தபோதும் அதனை சிறப்புப் பக்கத்தில் இணைக்கவில்லை. ஆனால் குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரை அகற்றப்பட்டிருந்தது. இரா.துரைரத்தினம் ஊடகவியளாளர் அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டை அண்மையில் நடந்ததேர்தலில் கண்டு மெய்சிலிர்த்தேன். திருகோணமலைத் தமிழ் பிரதிநிதித்துவம் பற்றி தமிழருக்கு உணர்த்திய பெருமையையுடையவர்.எனவே அவரின் கட்டுரையில் சர்ச்சைக்குரிய "ஒரு இடத்தில் ஏற்றும் இன்னொரு இடத்தில் மறுத்தும் ( சிவ வழிபாட்டை மேற்கொண்ட சிந்துவெளி மக்கள் திராவிடரின் மூதாதையர் என்பதை ஏற்றிருந்தபோதும், சிவனை ஆரியக் கடவுள் என்றமை)" இருக்கும் முரண்பாட்டையும் வைணவநெறி குறித்த பிறழான கருத்தையும் தெளியவைக்கும் முகமாகவே யாம் கட்டுரை வடித்திருந்தோம். அது அவருக்கு வரவிருந்த அபகீர்த்தியை நீக்கும் பணியாகவே கருதினேன். தமிழ்வின் திடமான தீர்மானமில்லாமல் தடுமாறி "அகற்றி-இணைத்து" விளையாடிக் கொண்டிருந்தமையால் கட்டுரையை வரைந்த இரா.துரைரத்தினம் ஐயாவுக்கும் மின்னஞ்சல் செய்தேன். விளைவு அவரது பதில் எனது மின்னஞ்சலை உடனே அலங்கரித்தது.
இரா.துரைரத்தினம் ஐயா, தங்கள் புத்தாண்டுக் கட்டுரை பிழையான பொருளை விதைக்கலாமா?
தமிழ்வின் உரலி:-
http://www.tamilwin.com/view.php?2b39VPe4b4cd94534beQHWU0e22m4DAdcd3EfuG2e0dJ0SpBce04c7G62cdbdevO30
இரா.துரைரத்தினம் ஐயாவுக்கு,
வணக்கம்.
"வாருங்கள் சித்திரை புதுவருடத்தை கொண்டாடுவோம்… எமது இனத்தை அழித்த ஆரியர்களின் புதுவருடமாக……"என்ற கட்டுரையைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தங்களின் ஆதங்கக் கருத்துக்களுடன் சில உண்மைக்குப் புறம்பான கருத்துகளும் பதிந்து அக்கட்டுரை இருப்பது மனதை சங்கடத்துள் ஆழ்த்திவிட்டது. தங்களது அரசியல் கட்டுரைகள் தமிழர்கள் செய்த பயன் என்றே சொல்லவேண்டும். ஆனால் இக்கட்டுரையில் ஆய்வுக்குரிய பலவிடயங்களை தீர்ப்பாக எழுதியிருப்பதும் அதில் ஒருசில கருத்துப்பிழைகள் இருப்பதும் தங்களது எழுத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துமோ என்ற அச்சதிலேயே எளியேனின் மடல்.
சிவன்,கணபதி ஆகியோர் ஆரியக் கடவுள் என்கிறீர்கள். கணபதி ஆரியக் கடவுள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிவனை ஆரியக்கடவுள் என்று ஆய்வாளர்கள் எவருமே உறுதிசெய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ்க்கடவுள் என்றே கருதுகின்றனர்.
சிந்துவெளி நாகரீகம் தமிழரின் மூதாதையரின் நாகரீகம் என்பதை உங்களது கட்டுரை ஏற்றுள்ளது.அப்படியானால் அங்கு கிடைக்கப்பெற்ற சிவனை சுட்டும் சின்னங்கள் யாருடையது?
பாரதம் முழுவதும் இருந்த ஆதித்திராவிட இனத்தின் குழுக்களில் வடநாட்டில் சிந்துநதியில் இருந்த திராவிடரிடம் சிவவழிபாட்டுக்குரிய கரு தோன்றிற்று என்றே சொல்லவேண்டும். ஆரிய வருகைக்கு பின்னர் , அங்கிருந்த ஆதித்திராவிடக்குழு தென்னாட்டை நோக்கி நகருகையில் தென்னாட்டுக்கு சிவவழிபாட்டை அறிமுகம் செய்திருக்கலாம்! ஆனால் சிந்துவெளி மக்கள் தமிழரின் மூதாதையர் என்ற கருத்தை ஏற்ற தங்கள் கட்டுரை அவர்களிடம் இருந்த சிவவழிபாட்டு சின்னங்களை கண்டுகொள்ளாமல் விட்டது ஏனோ?
சிவவழிபாட்டை "ஆண்குறி-பெண்குறி' வழிபாடு என்று வடவரின் சிலர் ஏளனம் செய்ததும், உதாசீனம் செய்ததும் சிவவழிபாட்டின் பூர்வீகத்தை உணர்ந்தன் விளைவென்பதை அறியீரோ?
"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்றது வெறும் வசனமல்ல!!! தமிழரின் வீரகோசம்!
நடராசர் தத்துவத்தை உலகம் கண்டு வியக்கின்றது.அது தென்னாட்டு கலைக் கண்டுபிடிப்பென்பதை மறந்ததேனோ?
Saivism is the oldest prehistorian religion of South India, essentially existing from pre-Aryan times - Dr.G.U.Pope
Among the many revelations that Mohenjadaro and Harappa have in store for us, none perhaps is more remarkable than this discovery that Saivism has a history going back to the chalcolithic age or perhaps even further still, and that it takes place on the most ancient living faith in the world- Sir John Marshall
The Saiva Philosophy is the choicest product of the Dravidian intellect. It is the most elaborate, influential and undoubtedly the most intrisically valuable of all religions of India. It is peculiarly the South Indian and Tamil Religion. - Dr.G.U. Pope
சைவநெறி தமிழருடையது என்ற கருத்தை ஆழமாக ஏற்றுள்ள தாங்கள், சைவத்தின் தனிப்பெரும் முதலாகிய சிவபெருமானை ஆரியக்கடவுள் என்று சுட்டிவிட்டீர்களே? ஜீ.யூ.போப் மற்றும் சிந்துவெளி நாகரீக ஆய்வாளர் சேர்.ஜோன்.மார்சல் போன்றோர் ஆரியர் வருகைக்கு முன்னரே சைவவழிபாடு இருந்துள்ளதை சிவசின்னங்களை வைத்துத்தானே உறுதிசெய்து எழுதியுள்ளனர். முருகனின் சிலையை வைத்தா?
முருகனும் குறிஞ்சிக்கடவுளாக இருந்தாரே ஒழிய ஒட்டுமொத்த தமிழரின் கடவுளாக இருக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளின், அன்று சிந்துவெளியில் இருந்த தமிழ் மூதாதையரிடம் சிவ வழிபாடு இருந்ததை உணர்வது இலகுவாக இருக்குமென நினைக்கிறேன்.
சமயத்துள் ஆரிய-திராவிடப் புரளிகளை பலர் பல காலமாக எழுப்பியே வருகின்றனர். தமிழரில் வெள்ளை நிறத்தோலுடன் ஒருவருமே இல்லையா? எல்லோரும் கருப்பர் தானா? ஆரிய-திராவிடக் கலப்பு நடந்தது வரலாறு. இனமே கலக்கும்போது இன வழிபாடுகள் கலந்ததில் என்ன தவறு? இன்று மொழி ஆய்வாளர்கள் வடநாட்டில் புழக்கத்தில் உள்ள பலமொழிகளை திராவிடமொழிக் குடும்பத்தில் சுட்டுகின்றனர். எனவே மொழிக் கலப்பும் இனக் கலப்பும் அதனுடன் இணைந்து சமயப் பழக்க வழக்க கலப்பும் நிகழ்ந்துள்ளன.
எம்மவரில் வெள்ளை நிறத்தோலை உடையவர்களை என்ன செய்யலாம்? வடநாட்டுக்கு அனுப்பிவிடுதல் உத்தமமா? வடவரிலும் கருப்பர் உண்டு! அவர்களை தென்னாட்டுக்கு அழைத்துவிடுவோமா? இவர்களுக்கு சொல்லப்போகும் பதிலே எமது சமயத்துள் கலந்துள்ள கடவுள்களாகிய பிள்ளையாருக்கும் ஏனைய இந்திரன் போன்ற தேவதைக் கடவுள்களுக்கும் பொருந்தும்!
"வைஸ்ணவ நாயன்மார்களும் வைஸ்ணவ ஆழ்வார்களும்" என்று சொற்பிரயோகம் உங்கள் கட்டுரையில் உண்டு. வைணவ ஆழ்வார்கள் என்பது சரியான சொற்பிரயோகம். அது என்ன வைணவ நாயன்மார்கள்? அப்படி ஒரு கூட்டம் இருந்ததாக எங்கும் எவ் இலக்கியத்திலும் காணக்கூடியதாகவில்லை. எனவே, வைணவ ஆழ்வார்களையே வைணவ நாயன்மார்கள் என்று (சைவ நாயன்மார்கள் போல்) எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். எனவே நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை தாங்கள் தெரிந்து கொள்ளவில்லையே?
வைணவ ஆழ்வார் சைவ வழிபாட்டை ஒழித்து இந்து வழிபாட்டை தமிழருக்கு திணித்ததாக எழுதியுள்ளீர்கள்! எவ்வளவு பெரிய தவறைவிட்டுள்ளீர்கள் என்பது புலனாகவில்லையா? இந்து என்ற பெயரும் அதனுடன் இணைந்த வடநாட்டு வைதீக வழிபாட்டு முறைகளும் "சுவாமி விவேகானந்தரின்" அமெரிக்கா சிக்காக்கோ சொற்பொழிவில் இருந்தே தென்னாட்டை ஆக்கிரமித்தது!
அதற்கு ஊடகத்தை ஏற்படுத்தியது சங்கரரின் அத்வைதம். தமிழை நீசபாசை என்று இன்றும் ஒதுக்கிவரும் சங்கரபீடத்தை இந்துமத பீடாதிபதியாக ஏற்றியது சுமார்த்தம் என்கின்ற அத்வைத மதமும் அதை இந்திய மதமாக சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியமையே ஆகும்!
உண்மையைச் சொல்லப்போனால், வைணவ ஆழ்வார்களும் தமிழை நீசபாசையாகக் கருதும் சுமார்த்தம் என்கின்ற அத்வைதத்தை தென்னாட்டில் பரவாது தடுத்த காவலர்கள் என்றே சொல்ல வேண்டும். இராமனூஜரை அத்வைதர்கள் கொல்ல திட்டம் தீட்டியதும் அதிலிருந்து அவர் தப்பியதும் வரலாறு சொல்லும் செய்தி! பன்னிரு ஆழ்வார்களும் தமிழிலே திருப்பாசுரங்கள் பாடி தமிழையும் வைணவத்தில் தென்கலையையும் வளர்த்தெடுத்தனர். அவர்களை தமிழருக்கு எதிரிகளாக சுட்டுவது என்ன நியாயம்?
ஆஞ்சநேயருக்கு உலகிலேயே முதன்முதலில் தானே தேர் இழுத்தேன் என்று கொழும்பு ஆஞ்சநேயர் தொண்டர் புளகாங்கிதம் அடைந்தமை ஊரறிந்தது. அப்படியானால் வைணவமுள்ள தமிழ்நாட்டில் ஏன் ஆஞ்சநேயருக்கு தேர் இழுக்கவில்லை? மரபு இருக்கவில்லை. வைணவ ஆகமங்கள் வழிவிடவில்லை. அப்படியானால் இலங்கையில் எப்படி நடந்தது? இலங்கையில் வைணவபீடமேதும் இல்லை. எனவே அத்வைதக் கொள்கைப்படி எந்த தேவதைக் கடவுளுக்கும் எந்த உயர் வழிபாடுகளையும் மேற்கொள்ளலாம் என்ற வசதியைப் பயன்படுத்தியே!!!
ஆஞ்சநேயர் தென்னாட்டு வைணவருக்கு ஒரு இராமரின் தொண்டர். நம்முடைய சண்டேசுவரர் போன்றுதான்!!! ஆனால் வடகலை வைணவருக்கு அவர் பெரியவர்! அத்வைதருக்கு எவர் எக்கேடானாலும் பருவாயில்லை.பிராமணத்துவத்தையும் அதைக் காக்கும் அத்வைதத்தையும் பரப்பினால் போதும்!
ஆகமங்கள் தமிழருடையது அல்ல என்பது போல் ஒரு தோற்றத்தை தங்களது கட்டுரை வழங்கியுள்ளது. ஆகமங்கள் தமிழருடையது அல்ல என்றால் ஏன் அதை வடநாட்டு ஆலயங்களில் காணமுடியவில்லை என்பதை விளக்குவீர்களா?
தென்னாட்டிலும் தென்னாட்டார் நிர்வகிக்கும் வடநாட்டு சைவக் கோயில்களிலுமேயே ஆகமவழிபாடு உண்டு. இன்று ஆங்கில மோகத்துள் சென்னை மாநகர் தவிப்பதுபோல், தமிழா-ஆங்கிலமா என்று அறியாது ஆங்கிலத்தை தமிழாகக் கருதும் ஆங்கிலத்தாக்கத்துக்குள் இருப்பதுபோல் "பண்டிதர்" என்றால் சமஸ்கிருதம் படித்தவரே என்ற காலம் அன்று தமிழ்நாட்டில் இருந்தது. எனவே அவ்வாறான ஒரு காலத்தில் ஆகமங்கள் எழுந்திருக்க வாய்ப்புண்டு!
தமிழரின் முதல் மாதம் சித்திரையா -தையா என்பது ஆய்வுக்குரியது. பச்சையப்பன் கல்லூரியில் நடந்த ஆய்வில் பல சைவ அறிஞர்கள் கூடிக் கலந்து எடுத்த முடிவுதான் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறை! ஆனால் முதல் மாதம் தை என்று அவர்கள் முடிவு செய்ததாக என்னால் அறிய முடியவில்லை! பிற்கால அரசியல்வாதிகளின் முடிவாகவே அறிந்தேன். உண்மைத் தன்மையை அறியமுடியவில்லை! எது எவ்வாறாயினும், சித்திரையை திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதமுடியாமல் போனது ஏனோ? தை மாதமே முதல் மாதமாக தமிழர் கருதினர் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகள் உண்டா? சித்திரை தமிழருடைய முதல் மாதம் அல்ல என்பதற்கும் மறுக்கமுடியாத சான்றுகள் உண்டா?
சனவரி முதலாம் திகதியை தை மாதம் என்று நம்மிலர் பலர் கருதுவர். இல்லாவிட்டால் அண்மையில் நடந்த "------பேரவை" தேர்தலில் ஆங்கில மாதத்தை அப்படியே தமிழுக்கு மாற்றி ஒரே திகதியை வழங்கி நம்மவர்கள் விளம்பரம் செய்வார்களா? அண்மையில் நடந்த ஒருநாட்டுப் பேரவைத் தேர்தலின் விளம்பர அட்டையைப் இணையச் செய்தியில் பார்த்ததும் சிரிப்புத்தான் வந்தது. தமிழ் மாதத்துக்கும் ஆங்கில மாதத்துக்கும் 14 அல்லது 15 நாட்கள் வேறுபாடு உண்டு என்பதையே கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டனர். இந்தக்கூத்துத்தான் சனவரியோடு வரும் தமிழ்மாதமே தமிழரின் முதல்மாதம் என்ற நிலைப்பாட்டுக்கு ஏதுவாயிற்று என்று கருதுகிறேன். சித்திரையே முதல் மாதமாக தமிழரின் பண்பாட்டில் குமரிக்கண்டந்தொட்டு நிலவிவந்தது என்று கருதும் ஆய்வாளர்கள் உண்டு என்பதை இங்கு சுட்டவிரும்புகிறேன்.
சிங்கள மக்கள் கொண்டாடுவதால் சித்திரைப் புத்தாண்டு தமிழருடையது அல்ல என்ற பொருளை தங்கள் கட்டுரை தருகின்றது.தங்கள் அவ்வண்ணம் பொருள் கொண்டிருப்பின் அது பெரும்பிழை என்றே சொல்லவேண்டும். ஏன் கண்டி நடனம்கூட தென்னாட்டுக் கூத்தின் திரிபு என்பதை சொல்லிய தெரியவேண்டும்!சிங்கள மக்கள் தென்னாட்டுத் தாக்கத்திலேயே சித்திரையை புதுத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். வடநாட்டினரின் தாக்கத்தில் அல்ல! சிங்கள மக்களை முழுமையாக ஆரியர் என்று அடையாளப்படுத்த முடியாது என்பதையும் கவனிக்க. குவேனியைத் திருமணம் செய்தது முதல் மதுரையில் இருந்து பெண்ணெடுத்தல் வரை தமிழ்க் கலப்பு உண்டு. தென்னாட்டுக் கலப்பு உண்டு. இல்லாவிட்டால் அனைத்து சிங்களவரும் கண்ணைக் கவரும் வெள்ளையர்களாக அல்லவா இருப்பார்கள்? ஆரிய-திராவிட பகையின் நீட்சியாக இலங்கை இனப்பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் செயல்பாடு இருக்கின்றது என்பதே மெத்தச்சரி என்று கருதுகிறேன்.
ஆபிரிக்கா பழங்குடியினர் முகம் முழுக்க சிவப்பு மஞ்சள் என்று நிறங்களைப் பூசியிருப்பர். இதுதான் பொட்டு என்று சுருங்கிற்று. ஒருசில ஆபிரிக்கா நாடுகளில் நெற்றி முழுதும் வெள்ளை நிறத்தூளை பூசியிருப்பதை வெளிநாட்டு டிஸ்கவரி சனலில் காணக்கூடியதாக இருந்தது. அவுஸ்ரேலிய நாட்டுப் பழங்குடிகள் திராவிடக் குடிகள் என்றும் குமரிக்கண்ட எச்சங்களாய் இருப்பவர்கள் என்றும் கருதுகின்றனர். இவர்களிடமும் வெள்ளைநிறத் தூளை முகம் கன்னம்,நெற்றி முழுவதும் பூசும் பழக்கம் உண்டு.எனவே வீபூதி-பொட்டு என்பன திராவிடப் பண்பாடு எனக் கருத முடியும். இத்தனைக்கும் ஆரியரின் மூதாதையரிடம் இப்படியொரு பழக்கம் இருந்ததாக எந்தவிதமான சான்றுமில்லை. ஆனால் இன்று வடநாட்டினர் திலகம் இட்டுக் கொள்வர். எனவே திராவிடப் பண்பாட்டை அவர்கள் ஒழுகுவது தவறில்லையா? அவர்களிடம் தாழ்வுமனப்பான்மை ஏதுமில்லையே?
அசூரர்களை திராவிடர் என்று பூரணமாக ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். தமிழ்க் கடவுள் முருகனுக்கும் சூரர்களுக்கும் நடந்ததாகச் சொல்லப்படும் யுத்தத்தை "உள்நாட்டுப் போர்" என்று வைத்துக் கொள்ளலாமா? தேவர்கள் ஆரியர் என்றும் அசூரர்கள் திராவிடர் என்றும் நிலவும் கருத்தை புறந்தள்ளவில்லை. ஆனால் அசூரர் வதம் என்ற காரணத்துக்காக சமயத்தை இகழமுடியாது என்ற நியாயத்தை விளக்கவே விரும்புகின்றேன்.
சூரபத்மனின் சகோதரன் சிங்கமுகாசுரனின் கொடி சிங்கம் என்று கந்தபுராணம் சொல்கின்றது. எனவே சிங்கக் கொடி திராவிடக்கொடி அல்லவா?
சிங்கை ஆரியச்(பட்டப்பெயர்; நம்மவரில் ஆரிய என்ற சொல்லே தீட்டுப்போல் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.எனவே ஆரியச்சக்கரவர்த்தி என்பது முடிசூடும் யாழ் மன்னரிகளின் பட்டபெயர்) சக்கரவர்த்திகளின் கொடியாகிய சிங்கத்தையே பிற்காலத்தில் தமது கொடியாக்கிக் கொண்டனர் நமது பெரும்பான்மை இனத்தார். சிங்கக் கொடியை திராவிடரின் சின்னமென்றே பாராளுமன்றத்தில் அன்றைய பிரதமர் டி.எஸ் சேனநாயக்க தெரிவிக்கின்றார். tamilcause வலைப்பூவில் சிங்கக்கொடிமேல் தமிழருக்கு உள்ள உரித்தை அறிந்து கொள்ளலாம்.
தமிழருக்கு ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மை சிங்கக்கொடியை பெரும்பான்மை இனம்மட்டும் சொந்தம் கொட்டாடும் நிலையை ஏற்படுத்திற்று. அதுபோல்த்தான் ஆகமங்களும் சித்திரை ஆண்டுக் கணிப்பீடுகளும் சமஸ்கிருதத்தில் இருப்பதால் தமிழருடையது இல்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை தமிழரில் சிலருக்கு தொற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டது.
"ஆரியமுந் தமிழும் உடனே சொல்லி"
"தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும் உணர்த்தும்"
என்று திருமந்திரம் தமிழையும் ஆரியத்தையும் சிவபெருமான் சமமாகப் பேணியதை எடுத்தியம்புகின்றது. தமிழிலும் வடமொழியிலும் ஏககாலத்தில் பார்வதிக்கு ஆகமங்களை உபதேசித்ததாகவும் இவ்விரு மொழிகளாலும் உணர்த்தப்படுபவன் சிவன் என்றும் திருமந்திரம் தமிழையும் சமஸ்கிருதத்தையும் சமமாகப் பேணியிருப்பதைக் காணலாம். சமஸ்கிருதப் பற்றினால் தமிழில் இருந்த சிவபெருமானால் அருளப்பட்ட ஆகமங்களை தொலைத்துவிட்டோம். இப்போது சமஸ்கிருத எதிர்ப்பு வெறியினால் ஆகமங்களை தூக்கி எறிய நிற்கிறோம்! அதுவும் ஆகமங்கள் ஆய்வுப்படி தென்னாட்டிலே தோன்றியவை.
தாழ்வு மனப்பான்மையில் நாம் தொலைத்தவை ஏராளம்!!! இன்னும் பலவற்றை தொலைக்க வேண்டுமோ?
ஐயா, புதுவருடம் என்பதில் உள்ள வருடம் என்ற சொல் தமிழ்ச் சொல்லா என்ன? ஆண்டு என்று தமிழில் தலைப்பையேனும் வழங்கமுடியாத தாங்கள் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யாது எழுதுவது நெறியல்ல! திராவிட இயக்கத்தை அரசியல்வாதிகள் தமிழறிவில்லாது நகர்த்தியதால்த்தான், எவ்வளவோ பாதகத்தை அனுபவித்துள்ளோம்! அரசியலை அரசியல் ஆய்வாளர்களும் இலக்கிய விடயங்களை இலக்கிய ஆய்வாளர்களும் மேற்கொள்வது நன்மையை பயக்கும்.
தங்களின் தமிழ்ப்பணிக்கு இறைவனின் திருவருள் என்றும் உண்டு.
சைவம்- இந்துமதம் -அத்வைத சுமார்த்தம் பற்றி ஒருசில கட்டுரைகளை எளியேனின் சிவத்தமிழோன் வலைப்பூவில் எழுதியுள்ளேன்.நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
நன்றி
சிவத்தமிழோன்
5 comments: on "இரா.துரைரத்தினம் ஐயாவும் சித்திரைப் புத்தாண்டுக் கட்டுரையும்"
அன்பர் எழுதிய தமிழ்வின் கட்டுரை உரலி:-
http://www.tamilwin.com/view.php?2a02899F22e01DpiG40ecbQojv42cdbPZLuwdcd3cSIPTd4b4cjVQ6oeb43iGG1ped0e39F2g830
கனகசபை தேவகடாட்சம் அன்பர் எழுதிய தமிழ்வின் கட்டுரை உரலி:-
http://www.tamilwin.com/view.php?2a02899F22e01DpiG40ecbQojv42cdbPZLuwdcd3cSIPTd4b4cjVQ6oeb43iGG1ped0e39F2g830
திரு.இரா.துரைரத்தினம் ஐயா எளியேனிடம் அக்கறையுடன் விடுத்த சில கேள்விகளுக்குரிய பதில்களை அடுத்த பதிவில் பதிவிடுகின்றேன்.
உண்மையிலேயே அந்த கட்டுரை வாசித்த பின் எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது, தெளிவு படுத்தியமைக்கு நன்றி. மேலும் எதிர் பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்
பொறுமையுடன்
நீங்கள் சொல்லவந்த விளக்கத்தை எந்தக்குறையுமில்லாது ஆதாரங்களோடு சொல்லியிருக்கின்றீர்கள். வாசிக்கும்போது ஒரு விவாத அரங்கில் ஆவேசத்தோடு சொற்போர்புரியும் வித்தகனை மனதில் கொண்டுவந்துவிட்டீர்கள்
ஒரு கதை உள்ளது...
ஒரு தொடர்மாடிக்கட்டிடத்தில் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் அனைத்து மக்களையும் காப்பாற்றிவிட்டனர்
இறுதியாக ஒருகுழந்தை ..
அதனைக் கீழே கொண்டுவரமுடியாத அளவு வெப்பம்...
மேலிருந்து கீழேபோடவேண்டிய நிலை... ஏந்துவதற்குத்தான் யாரும் முன்வரவில்லை. கடைசியாக புகழ்பெற்ற கால்பந்து வீரர் ஒருவர் வர அவரிடம் ஏந்தும் பொறுப்பு விடப்படுகிறது. குழந்தையைக்கீழே போடத் தீயணைப்பு வீரர் தயாராக அதனை ஏந்துவதற்கு கால்பந்து வீரர் தயாராகிறார்.
மக்கள் இமைகொட்டாது சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருக்க குழந்தை கீழ்நோக்கி விழுகிறது. அதனை மிகத்திறமையாகப் பற்றிப்பிடித்தார் கால்பந்து வீரர்
சுற்றி நின்ற மக்கள் பெரும் ஆரவாரஞ்செய்து கரவொலி எழுப்புகின்றனர்.
உற்சாகம்மேலிட கால்பந்தாட்ட வீரருக்கு சூழ்நிலை மறந்து விடுகிறது. அது ஒரு மைதானமாகவும் குழந்தை பந்தாகவும் மாற்றமடைகிறது. கோல் ஒன்றைத் தடுத்த உற்சாகம் பிறக்க குழந்தையைத் தரையில்போட்டு .......
விட்டாரே ஒரு உதை....
இங்கு யார் அந்தக் கால்பந்து வீரர் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை...
வாழ்க வளமுடன்
Post a Comment