"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, February 4, 2010

சிவராத்திரி விரதம் விரோதி ஆண்டில் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன?

விரதங்களில் தலைசிறந்தது சிவராத்திரி விரதமாகும். முழுமுதற் பொருளை மனம் முழுதும் தியானித்தபடி நோற்கும் விரதமே சிவராத்திரி விரதமாகும்.
"எட்டுணையும் உளத்து அன்பிலரேனும்
உளரேனும் இந்நாள் எம்மை
கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர்
நற்கதி அடைவர்"
என்று வரதபண்டிதரின் சிவராத்திரி புராணத்தில் சிவன் வாக்காக காணப்படுவது சிவராத்திரி விரத மகிமைக்கு தக்க சான்றாகும். உள்ளத்திலே எள்ளளவுக்கேனும் அன்பில்லாதவர்களாயினும் சரி, அன்புடையோராயினும் சரி, சிவராத்திரி விரத நாளில் சிவபெருமானைத் தரிசிப்பவர்,விரதம் இருப்பவர்,பூசை செய்பவர் யாவருக்கும் நற்கதி ஏற்படும் என்ற சிவன் வாக்கையே வரதபண்டிதர் நற்றமிழில் யாத்த சிவராத்திரி புராணத்தில் குறிப்பிடுகின்றார்.

இத்தகு சிறப்புடைய சிவராத்திரி விரதத்தை இம்முறை அனுட்டிப்பதில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. இம்முறை மகாசிவராத்திரி விரதமானது பெப்பிரவரி 12ம் நாள் அன்றா அன்றி மார்ச்சு 13ம் நாள் அன்றா என்பதே அனுட்டிப்பதில் ஏற்பட்டுள்ள பெருங்குழப்பமாகும்.

இங்கு சாத்திரமான அடிப்படையில் நோக்குவதா அல்லது சௌரமான (சூரியனின் பாதை) அடிப்படையில் நோக்குவதா பொருத்தம் என்ற வாதப்பிரதிவாதங்களே சிவராத்திரி நோன்பு பெப்பிரவரி 12ம் நாளா அன்றி மார்ச்சு 13ம் நாளா என்ற குழப்பத்தை உருவாக்கிற்று. இதுவரைகாலும் சாத்திரமான அடிப்படையும் சௌரமான அடிப்படையும் பொருத்தி வந்தமையால் இந்தக் குழப்பமேதும் உருவாகியிருக்கவில்லை.
 ஆந்திரமாநில சித்தூரைச் சேர்ந்த டி.வி ஞானசம்பந்த சிவாச்சாரியார் பெப்பிரவரி 12ம் நாள் அன்றே சிவராத்திரியை அனுட்டிக்க வேண்டும் என தெளிவுபடுத்தியமை தினமலரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதுபோல் யாழ்ப்பாணத்தில் பாரம்பரியமாக வாக்கிய பஞ்சாங்கத்தைக் கணிக்கும் இரகுநாதையர் வழிவந்த இ.வெங்கடேச ஐயரும் வலைப்பூவில் பெப்பிரவரி 12ம் நாளே சிவராத்திரிக்கு உகந்தது என்று விளக்கியுள்ளார்.

டி.வி ஞானசம்பந்த சிவாச்சாரியார் பெப்பிரவரி 12ம் நாளே உகந்தது என்று பின்வருமாறு விளக்கியுள்ளார்.

"இந்தாண்டு, விரோதி என்ற பெயருக்குத் தக்கபடி, பல மாற்றங்கள் உள்ளன. பூணூல் அணியும் சடங்கான உபா கர்மா, முன்னோர்க்கு சடங்கு செய்யும் சிராத்தம், சிவராத்திரி ஆகியவை, அமாவாசை வரும் மாதங்களில் தான் செய்ய வேண்டும்.

கார்த்திகை மாதத்தில் அமாவாசை சிராத்த திதியே வரவில்லை. எனவே, ஐப்பசி 30ம் தேதியே செய்ய வேண்டி இருந்தது. தீபாவளி கொண்டாடும் மாதத்தில் இரண்டு அமாவாசை நேரக் கூடாது என்பதால், இரண்டு அமாவாசை கொண்ட ஐப்பசி மாதத்தை விடுத்து, புரட்டாசியில் கொண்டாடினோம்.
மகா சிவராத்திரி அனுஷ்டிப்பதற்கு தனி விதி உள்ளது. ஒவ்வொரு மாதமும், பவுர்ணமி அன்று எந்த நட்சத்திரம் வருகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயர் தான், மாதத்தின் பெயராக அமைகிறது. சம்ஸ்கிருதத்தில், இதற்கான பெயரைப் பார்த்தால், இது தெளிவாகும். இந்தக் கணக்குப்படி, சில நேரங்களில், ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை ஏற்படுகிறது; அதற்கு முந்தைய இரண்டு தினங்களான, த்ரயோதசியும், சதுர்த்தசியும், மாதத்தின் முதல் மற்றும் கடைசி நாட்களில், சம கால அளவில் ஏற்படுகின்றன. அது போன்ற காலங்களில், மாதக் கடைசி நாள் அன்றே, சிவராத்திரி கொண்டாட வேண்டும்.
மாதத்தின் முதலிலோ அல்லது கடைசியிலோ, த்ரயோதசி - சதுர்த்தசி அல்லது சதுர்த்தசி - அமாவாசை வந்தால், எந்த இரவில் சதுர்த்தசி அதிகமாக உள்ளதோ, அன்று தான் மகா சிவராத்திரி கொண்டாட வேண்டும். மகாசிவராத்திரி காலம் என்று அழைக்கப்படுவது, இரவு 9 மணிக்கு மேல், அதிகாலை 3 மணி வரையிலான, ஆறு காலங்கள் தான். ஒரு காலத்திற்கு, ஒன்றரை மணி நேரம் என்ற கணக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள விதிப்படி பார்த்தாலும், கோகுலாஷ்டமியிலிருந்து 184வது நாள், மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்ற விதிப்படியும், வரும் பிப்., 12ம் தேதி தான், மகா சிவராத்திரி ஏற்படுகிறது என்பதை அறிந்த கொள்ளலாம்.
வரும் மார்ச் 13ம் தேதி, மகாசிவராத்திரி ஏன் கொண்டாடப்படக் கூடாது என்பதற்கான விளக்கமும் உண்டு. அன்றைய தினம், மாசி 29ம் தேதி, சனிக்கிழமை ஏற்படும் சதுர்த்தசி திதியை விட, அடுத்த நாள் ஞாயிறு அன்று, 11 வினாடிகள், சதுர்த்தசி திதி அதிகமாக உள்ளது என்று கூறினாலும், அன்றைய தினம், "மீன சங்க்ரமண தோஷம்' உள்ளது. எனவே, அந்த இரண்டு தேதிகளிலுமே, மகா சிவராத்திரி கொண்டாட முடியாது.
சிவராத்திரி முதல் காலத்தில், த்ரயோதசியும், சதுர்த்தசியும் கலப்பது, உத்தமத்தில் மத்திமம்; இரண்டாம் காலத்தில், திரயோதசி -சதுர்த்தசி, ஆரம்பத்தில் கலப்பது, உத்தமத்தில் அதமம் என ஆகமங்கள் கூறுகின்றன. எனவே, இவ்வாண்டு, தை மாதமே, கோவில் அனுஷ்டான வாக்கிய பஞ்சாங்கப்படி, 12.2.10 அன்றே, மகாசிவராத்திரி கொண்டாடப்பட வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்."

காமிக ஆகமம், குமார தந்திரம், கந்தபுராணம் என்று சிவராத்திரி பூசைவிதிகளை விரித்துரைக்கும் நூல்கள் மாகமாதத்தில் வருகின்ற தேய்பிறை சதுர்தசி திதி கூடுகின்ற இரவே சிவராத்திரி நோன்புக்கு உகந்தநாள் என்று கூறுகின்றன. இந்த மகாமாதம் என்பது எந்த மாதம் என்பதே இன்று சிவராத்திரி விரதநாளை அனுட்டிப்பதில் ஏற்பட்ட சர்சைகளுக்கு வித்திட்டுள்ளது. சாத்திரமானம் மற்றும் சௌரமானம் (சூரியனின் அடிப்படையில் கணிப்பது) என்று இருபிரிவினருக்குள் இந்த மாகமாதத்தை புரிந்துகொள்வதில் ஏற்பட்டுள்ள சர்சைகளே யாவற்றுக்கும் காரணமாயிற்று.

சௌரமானப்படி மாசிமாதம் கும்பம் எனப்படும். மகாமாதம் என்பது தைக்கும் மாசிக்கும் இடையில் வருவது. அதாவது மகரத்துக்கும்(தைக்கும்) கும்பத்துக்கும்(மாசிக்கும்) இடையில் வருவது. ஆனால் மாசிமாதமே மகாமாதம் என்ற கருத்துப்பிறழ்வு இப்பிரச்சினைகளுக்கு ஏதுவாயிற்று.


மகாமாதத்தின் நடுப்பகுதியில் இருந்து முடிவுவரை கும்பமாதமாகிய மாசியில் அமையும். எனவே இக்காலப்பகுதியிலேயே நாம் சிவராத்திரிக்குரிய சதுர்த்தசி திதி அமைவதால் நாம் சிவராத்திரி மாசிமாதம் வரும்விரதம் என்று மனதில் பதியவைத்துள்ளோம்.
தை முதலாம் திகதி சனவரி 14இல் வரும் என்று கட்டாயம் ஏதுமில்லை.ஆனால் அது பொதுவாக அப்படி அமைவதால் எம்மில்பலர் சனவரி 14 அன்றுதான் தைப் பொங்கல் என்போம். சிலசமயம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சனவரி 14இல் இருந்து குறைந்துகூட வாய்ப்புண்டு. அதுபோல்த்தான் இம்முறை தை 30ம் நாள் அதாவது பெப்பிரவரி 12ம் நாள் சிவராத்திரி விரதம் அமைந்திருப்பதால் "என்ன மாசியில் வரவில்லையே?" என்று குழம்பிவிட்டோம். எனவே மாசியில் வரும்படி மார்ச்சு 13 அன்று திதி அமைவதால் அந்நாளை சிவராத்திரியாக அனுட்டிக்க முனைந்துள்ளோம்.

இங்கு சௌரமானப்படி கணிப்பவர் காமிகம் முதல் கந்தபுராணம் ஈறாய் சிவராத்திரி பூசைவிதிகளை விதந்துரைக்கும் மகாமாதம் மாசிமாதம் என்றே கருதுகின்றனர்.

யாழ்ப்பாணத்து இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்க மரபுவழி கணிப்பாளர் இ.வெங்கடேச ஐயர் மகாமாதம் என்பது " மகர சங்கிராந்திக்குப் (தைப்பொங்கல்) பின் முடிந்த அமாவாசை கழித்த பிரதமை முதலாக, கும்ப சங்கிராந்திக்குப் (கும்ப மாதமாகிய மாசிமாதம்) பின் முடிந்த இறுதியாகவுள்ள காலமே மாகமாசம்" என்று தெளிவுபடுத்துகின்றார். இது சாத்திரமானக் கணிப்புப்படியாகும்.


"விரோதி வருடத்தில் வரும் (2009-2010) மாக மாதமானது தைமாதம் 3ம் திகதி (16.01.2010) சனிக்கிழமை ஆரம்பமாகி மாசி மாதம் 2ம் திகதி (14.02.2010) ஞாயிற்றுக்கிழமை முடிவடைகின்றது. அமைவாசைக்கு முதற்தினம் வரும் சதுர்த்தசியே மஹாசிவராத்திரி எனும் விதிப்படி, விரோதி வருடம் தை மாதம் 30 திகதி (12.02.2010) வெள்ளிக்கிழமையே சிவராத்திரி விரதமாகும்" என்று வெ.வெங்கடேச ஐயர் மேலும் விளக்குகின்றார்.

காமிகம் முதல் கந்தபுராணம் ஈறாய் சிவராத்திரி பூசையை விரித்துரைக்கும் நூல்கள் குறிப்பிடும் மகாமாதம் சௌரமானக் கணிப்பின்படியான கும்பமாதமாகிய மாசிமாதம் அல்ல என்றும் இது பொதுவாக தை-மாசியில் அமையும் சாத்திரமான மாதம் என்றும் இ.வெக்கடேச ஐயர் தனது வலைப்பூவில் விரிவாக விளக்கியுள்ளார்.
எனினும் சாத்திரநூலை நன்குணர்ந்தவர்களே இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருப்பதால், எனது மொழிநடையில் அவரது கருத்துகளை இங்கு பகிருகின்றேன். இங்கு கோட்டுப்படங்களை இணைத்துள்ளேன்.இவை சாத்திரமான மாதங்களையும் சௌரமான மாதங்களையும் (தை,மாசி,பங்குனி......) அடையாளங்கண்டு விளங்கிக் கொள்ள உதவும் என நினைக்கிறேன்.

ஆவணிச் சதுர்த்தி என்று நாம் அனுட்டிக்கும் விநாயகர் சதுர்த்தி சிலசமயம் புரட்டாசியில் அமைகின்றமையையும் புரட்டாசியில் அனுட்டிக்கும் நவராத்திரி சிலசமயம் புரட்டாசி-ஐப்பசியாகிய இருமாதங்களையும் கொண்டதாகவும் அரிதானசமயங்களில் ஐப்பசியில்மட்டுமே நவராத்திரி விரதநாட்கள் அமைவதையும் இ.வெங்கடேச ஐயர் சுட்டி விளக்கியுள்ளார்.


இவ்வாறு மாதங்கள் சிலவேளைகளில் மாறுவது ஏன்? கோட்டுப்படங்களை நன்கு பார்க்க. யாவும் புரியும்.


பாத்திரபத பூர்வபச சதுர்தசியே விநாயகர் சதுர்தசியாகும். பாத்திரபத மாதம் சாத்திரமானப்படியான மாதமாகும். இது ஆவணியையும் புரட்டாதியையும் கொண்டிருக்கும். தைமாதம் எப்படி சனவரியையும் பெப்பிரவரியையும் கொண்டிருக்குமோ அதுபோல்த்தான். எனவே, அமாவாசை ஆவணிமாதத்தின் நடுப்பகுதியில் அதாவது பாத்திரபத மாதத்தின் தொடக்கத்தில் அமையும்போது பூர்பபட்ச சதுர்தசி ஆவணிமாதத்துக்குள்ளேயே வந்து அமையும். ஆனால் சிலசமயம் அமாவாசை ஆவணிமாத இறுதியில் அமையும்போது பூர்வபட்ச சதுர்தசி புரட்டாதி மாதத்தின் ஆரம்பத்தில் அமையும். எனவே நாம் பொதுவாக ஆவணியில் அனுட்டிக்கும் விநாயகர் சதுர்த்தி விரதம் புரட்டாதியில் சிலவேளைகளில் அனுட்டிக்க வேண்டியேற்படுகின்றது.ஆனால் விதிப்படி எப்பிழையும் இல்லை.காரணம் பாத்திரபத மாதத்திலேயே நாம் விநாயகர்சதுர்தியை அனுட்டிக்கிறோம்.இவ்வாறுதான் இம்முறை சிவராத்திரிக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படம் மூலம் சாத்திரமானப்படியான மாத அமைப்பு எப்படி ஆவணி-புரட்டாசியை உள்ளடக்கிறது என்பதையும் ஏன் சிலசமயம் விநாயகர் சதுர்ததி புரட்டாதியில் வருகின்றது என்பதையும் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
மேற்சொன்ன கோட்டுப்படம் மூலம் விளங்கியிருக்குமானால் இனி சிவராத்திரி நாளை இலகுவாக உணர்ந்துகொள்வீர்.


காமிக ஆகமம் தொட்டு கந்தபுராணம்வரை கூறப்படுகின்ற மகாமாதம் தைமாதத்தின் கடைப்பகுதியையும் மாசிமாதத்தின் நடுப்பகுதிவரையாக காலத்தையும் கொண்டது. அமாவாசைக்கு முன்கூடுகின்ற சதுர்தசியே விரதநாள் ஆகும்.எனவே, அமாவாசையானது மகாமாதத்தின் இறுதிப்பகுதியில் வரும்போது அது மாசிமாதத்துள் அமைகின்றது.எனவே, மாசிமாததினுள்ளே நாம் சிவராத்திரி விரதநாளை அனுட்டிக்கின்றோம். இது வழமையாக நடைபெறும். ஆனால் இம்முறை மகாமாத முதற்பகுதியில் அமாவாசை வருவதால் சிவராத்திரி விரதம் தைமாதம் அனுட்டிக்க வேண்டியதாகிறது. தையின் இறுதிக்காலமும் மாசியின் நடுக்காலம் வரையும் மகாமாதத்துள் அமைவதால் ஆகமவிதிப்படி பிழை எதுவும் இங்கு இல்லை.

ஆனால் மாசியின் இறுதிப்பகுதியில்(30ம் நாள்) வரும் (ஆங்கிலத்திற்கு மார்ச்சு 13) சிவராத்திரி நாளோ அன்றி அதற்கு ஆதரமான அமாவாசையோ மகாமாதத்துள் வரவில்லை.அது மகாமாதத்துக்கு அடுத்த மாதத்தை சேர்ந்ததாகிவிட்டது. இங்கு சௌரமான அடிப்படையில் கணிப்போர் மகாமாதம் என்று ஆகமம் சொல்வது மாசியே என்று வாதிடுகின்றனர்.அப்படியானால் விநாயகர் சதுர்த்தி விரதம் (பாத்திரபத மாதம்), நவராத்திரி விரதம் (ஆஸ்வீஜ மாதம்) என்பனவற்றுக்கு சாத்திரநூல்கள் கூறும் மாதங்கள் சாத்திரமானமாதங்கள் என்று ஏற்றுக் கொண்டவர்கள் ஏன் சிவராத்திரிக்குமட்டும் மகாமாதம் என்பது மாசியென்று பிடிவாதம் பிடிக்கின்றனரோ?

மாசிக்கு கும்பம் என்று சௌரமானத்தின்படி தனிப்பெயர் இருக்க, ஆகமங்கள் மகாமதம் என்று சுட்டுவதால் மகாமதம் ஒருக்காலும் மாசியாகாது. அது தையையும் மாசியையும் கொண்ட சாத்திரமான மாதம் என்பது வெள்ளிடைமலை.
இலங்கையில் இருந்து எழுதுபவர் ஒருவர் இரகுநாதையர் வழிவந்தோர் இப்போது பலவருடங்களாக கணிப்பதில் பிழைவிடுகின்றனர் என்று காரசாரமாக எழுதியுள்ளார். அவரது கருத்துகளை மதித்தே ஆகவேண்டும். அவர் பிழைகளை சுட்டி சைவசமூகத்துக்கு பணியாற்றிவரும் அன்பர். அதுபோல் பிழைகள் நேரும்போது அவற்றைத் திருத்தவேண்டியது கடமையாகும்.நக்கீரர் நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றது சும்மாவா என்ன? ஆனால் தமிழகத்து வாக்கியக் கணிபாளர்கள் இரகுநாதையர் வழிவந்தோரிடம் கேட்டா கணிப்பவர்கள்? அவர்களும் இம்முறை பெப்பிரவரி 12ம் நாள் என்றே கணித்துள்ளனர். பிழைவிட்டார்கள் என்ற மந்திரத்தினூடாக சரியைப் பிழையாகக் காட்டக்கூடாது.சிதம்பரம்,திருவண்ணாமலை போன்ற சிவாலயங்கள் வழியே சரி என்ற வாதமும் ஏற்புடையதல்ல.நாவலர் பெருமான் சிதம்பர அந்தணர்கள் ஆகமவழி நிற்காமையை கண்டித்திருக்கிறார். எனவே அவர்வழி வந்த ஈழவள நாட்டில் சிதம்பரம் செய்தால் சரி என்ற கொள்கை அபத்தம்!!!  சிதம்பரத்தில் ஓதுவாருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்தை அடிப்படையாகக் கொண்டு நாமும் அவமானப்படுத்தலாமா என்ன? நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றது இங்கும் பொருந்தும்!

"தோத்திரமும் சாத்திரமும் ஆனார்தாமே "என்று அப்பரடிகள் சிவபெருமானைப் துதித்துப்பாடுகின்றார். எனவே, சாத்திரமான அடிப்படையில் கணிக்கப்படும் கணிப்பை ஆதரிப்பதே சைவப் பெருமக்களுக்கு அழகுடையதாகும்.


மார்க்கண்டேயருக்கு விதிக்கப்பட்டிருந்த 16 வயது என்னும் காலக் கெடுவிலிருந்து காலனை உதைத்து காலனுக்கே காலனாகி மார்க்கண்டேயரைக் காத்தவர் எம்பெருமான். தை அமாவாசையை சுப்பிரமணிய பட்டராகிய அபிராமிப் பட்டருக்காக தனது காதிலிருந்த தோடகத்தை கழற்றி வானில்வீசி பௌர்ணமியாக்கிய அன்னை அபிராமியை இடப்பாக்கம் கொண்டவரே காலனுக்கு காலனாய் திருக்கடவூரில் அமிர்த்தகடேசுவராக எழுந்தருளியுள்ள எம் நாதன்.நாளும் கோளும் சிவனடியாருக்கு தீங்காக என்ற ஞானசம்பந்தக் குழந்தையின் அருள்வாக்கை மனதில் நிறுத்தின் நாளும் கோளும் சிவராத்திரி விரதக் கணிப்பில் ஏற்படுத்தும் சிக்கல்களை ஆராய்ந்து துயருரத்தேவையில்லை என்பது புலனாகும்.எனவே, சைவப் பெருமக்களே, உங்களுக்கு அருகாமையில் உள்ள சைவாகம முறைக்கமைந்த சைவ ஆலயங்களில் சிவராத்திரி விரதநாள் அனுட்டிக்கப்படும்வேளை, நீங்கள் முழுமனதுடன் சிவராத்திரி விரதத்தை அனுட்டிக்க. பலன் முழுமையாய் உண்டு. உங்கள் மனதுக்கு ஈர்ப்புடைய சைவாகம ஆலயங்களில் சிவராத்திரி கடைப்பிடிக்கப்படும் நன்னாளில் மனதை சிவன்பால் செலுத்தி சிவராத்திரி நோன்பை நோற்குக. இங்கு, சிவராத்திரி விரதநாள் என்ற நம்பிக்கையுடன் மனதை சிவபெருமானின் திருவடிகளுடன் ஒன்றியிருக்கச் செய்வதுவே அடியார்கள் செய்யவேண்டிய கடமையாகும்.
மார்க்கண்டேயருக்கு காலனை அழித்து காலத்தை மாற்றியவர் அமிர்த்தகடேசுவராகிய திருக்கடவூர் எம்பெருமான். அதுபோல் அமாவாசையைப் பௌர்ணமியாக்கி அபிராமிப்பட்டரைக் காத்தருளிய தாய் அமிர்த்தகடேசுவரருடனாய அபிராமியம்மை.
எனவே, இறை நம்பிக்கையே முதலாவதும் அடிப்படையானதுமாகும்.  காலமும் நேரமும் இரண்டாம் பட்சம். சிவராத்திரி காலம் எவ்வளவு மகிமையுடையது என்பதை பல்வேறுகதைகளினூடாக எடுத்துக்கூறப்பட்டிருப்பினும், பூரணமான அன்புமிகுந்த பக்தி காலத்தையே மாற்றி இறையருளை ஊட்டும் என்பதை அபிராமிப்பட்டர் மற்றும் மார்க்கண்டேயர் கதைகளிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "சிவராத்திரி விரதம் விரோதி ஆண்டில் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன?"

சிவத்தமிழோன் said...

இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கத்தினரின் வலைப்பூ முகவரி :-

http://vakyapanchangham.blogspot.com/2010/01/blog-post.html

சிவத்தமிழோன் said...

கட்டுரையை மீளாய்வுக்கு உட்படுத்தி மார்ச்சு 13ம் நாள் சிவராத்திரி விரதத்துக்கு உகந்ததாகக் கருதி எழுதியுள்ள கட்டுரையை படிக்க:-

http://sivathamiloan.blogspot.com/2010/02/blog-post_11.html

Anonymous said...

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCoOnline Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

Anonymous said...

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCoOnline Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

Post a Comment