"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Sunday, September 13, 2009

ஸ்மார்த்தரிடம் நாவலர் தொடுத்த ஐந்து வினாக்களும் நாவலர் விளக்கிய சைவ சாதிமுறையும்

ஸ்மார்த்த மதம் எமது சைவாச்சாரியகளான சிவாச்சாரியர்களை சாதிவலை கொண்டு தமக்குள் ஈர்க்கத் துடித்தவண்ணம் இருக்கும் இக்காலகட்டத்தில் நாவலர்பெருமானார் அன்று ஸ்மார்த்தரிடம் இருந்து சைவநெறியைப் பாதுகாக்க ஏற்படுத்திய விழிப்புணர்வுகளை பரப்புவது காலக் கடமையாகும்.

ஸ்மார்த்தர்கள் நாயன்மாருக்கு பூசை செய்கின்ற பிராமணர்களை பதிதர்கள் என அழைத்து சாதித்துவத்தை துதிபாடியபோது நாவலர் பெருமான் நமது சிவாச்சாரியார்களின் மனக்குறையை போக்கும் வகையில் ஐந்து வினாக்களை ஸ்மார்த்தர்மேல் தொடுக்குக என ஆணையிட்டுள்ளார்.

இதோ நாவலர் பெருமானின் திருவாக்கு
ஓ சைவ சமயிகளே, உங்களெதிரே அறுபத்துமூன்று நாயன்மார்களை நிந்திக்கும் ஸ்மார்த்தர்களைக் காணும்தோறும் இந்த ஐந்து வினாக்களைக் கேட்டு,அவர்களைத் தலைகுனிவித்து அவர்கள் வாயை அடக்குங்கள்.அவ்வினாக்கள் இவை.
1. ஓ ஸ்மார்த்தர்களே, உங்கள் மத தாபகரான ஆசாரியர் சங்கராச்சாரியரோ அன்றோ?
2. சௌந்தரியலகரியும் சிவானந்தலகரியும் சிவபுசங்கமும் உங்கள் சங்கராசரியர் செய்த கிரகந்தங்கள் அன்றோ?
3. அறுபத்துமூன்று நாயன்மார்கள்ளுள்ளே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைச் சௌந்தரியலகரியினும் கண்ணப்பநாயனாரைச் சிவானந்தலகரியினும் இயற்பகை நாயனாரையும் சிறுத்தொண்டநாயனாரையும் சண்டேசுரநாயனாரையும் சிவபுசங்கத்தினும் உங்கள் சங்கராச்சாரியர் துதித்திருக்கின்றாரோ அன்றோ?

4. உங்கள் குருவாகிய சங்கராசாரியராலே துதிக்கப்பட்ட நாயன்மார்களை நீங்கள் நிந்தித்தலினாலே,அச் சங்கராச்சாரியரிடத்திலே அறியாமையையேற்றிக் குருநிந்தர்களானீர்களோ அன்றோ?

5. அறுபத்துமூன்று நாயன்மார்களை வணங்கும் பிராமணர்கள் பதிதர்களாவரெனச் சொல்லும் நீங்கள் அவர்களைத் துதிக்கும் சங்கராசாரியரைப் பதிதரெனச் சொல்லாம் சொல்லி அவரை நீங்கள் வணங்குதலாற் பதிதரிற் பதிதர்களாயினீர்களோ அன்றோ?

மேலும் சைவத்தில் சாதி என்றால் என்ன என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
"சாதியினுஞ் சமயமே அதிகம். சமயத்தினுஞ் சாதி அதிகமெனக் கொள்வது சுருதி யுத்தி அநுபவமூன்றுக்கும் முழுமையும் விரோதம்.உலகத்துச் சாதிபேதம் போலச் சற்சமயமாகிய சைவசமயத்தினும் முதற்சாதி இரண்டாஞ்சாதி மூன்றாஞ்சாதி நாலாஞ்சாதி நீச சாதியென சமயநடைபற்றி ஐந்து சாதி கொள்ளப்படும்.
சிவாகமத்தில் விதிக்கப்பட்ட நான்கு பாதமுறைப்படி வழுவற நடந்து சிவானந்தப் பெரும்பேறு பெற்ற சீவன்முத்தர் சிவமேயாவர். இனிச் சிவஞானிகள் முதற்சாதி; சிவயோகிகள் இரண்டாஞ்சாதி; சிவக்கிரியாவான்கள் மூன்றாஞ்சாதி;சிவாச்சாரியான்கள் நாலாஞ்சாதி; இந்நெறிகளில் வராதவர்களும் ,இவர்களையும் இவர்கள் சாத்திரமுதலியவற்றையும் நிந்திப்பவர்களும்,இந்நெறிகளிலே முறைபிறழ்ந்து நடக்கின்றவர்களும், இந்த நடைகளை விட்ட பதிதர்களும், சதாசூதகிகளாகிய பஞ்சமசாதி.

சிவசரியை கிரியை முதலியவைகளிலே பொருள்தேடி உடம்பை வளர்ப்பவர்களும், அப்பொருளை பாசத்தாருக்குக் கொடுத்து இன்புறுபவர்களும், கோயிலதிகாரிகளாய்த் தேவத்திரவியத்தைப் புசிப்பவர்களும், விருத்திப் பொருட்டு ஆசாரியாபிஷேக முதலியன செய்துடையோர்களும், விருத்திப் பொருட்டு சிவவேடந்தரித்தவர்களும், விருத்திப் பொருட்டுத் துறவறம் பூண்டவர்களும், சிவஞானநூல்களைச் சொல்லிப் பொருள் வாங்கி வயிறு வளர்ப்பவர்களும், பிறரும் பதிதர்களுள் அடங்குவர்கள்.

இங்கே சொல்லிய முறையன்றி, சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டுத் தமக்குத் திருமேனியாகக் கொண்டருளிய குருலிங்கசங்கமமென்னும் மூன்றிடத்தும் ஆசையும் பணியும் வழிபாடும் கொடையும் அடிமைத் திறமும் உரிமையுடையவர்கள் எந்தக் கருமஞ்செய்தாலும் முதற்சாதியெனக் கொள்ளப்படுவார்கள்."

இவ்வண்ணம் சாதி என்பதன் பொருள் சைவத்தில் எவ்வண்ணம் கையாளப்பட்டுள்ளது என்பதை வேதசிவாகமங்கள் சித்தாந்த சாத்திரங்கள் திருமுறைகள் யாவும் கற்ற ஈழவள நாட்டில் அறுபத்தி நான்காவது நாயனாராகப் போற்றப்படும் நாவலர் பெருமான் தெளிவாக விளக்கியிருக்க "சாதித்துவ குடைபிடிக்கும்" சுமார்த்தத்தை அறிந்தும் அறியாமலும் ஒழுகுவது எவ்வளவு மடமையாகும்!!!!!!!

"உங்கள் சங்கராச்சாரியர்" என நாவலர் பெருமான் சுமார்த்தரைச் சுட்டி வினாத் தொடுத்துள்ளதில் இருந்து ஆதிசங்கரர் கோட்பாடுகள் சைவநெறிக்கு ஏற்றதல்ல என்பதும் ஆதிசங்கரர் துதிபாடுவது சைவநெறிக்கு விரோதம் என்பதும் சங்கராச்சாரியர் பரம்பரை சைவநெறிக்கு உடன்பாடனதன்று என்றும் புலனாக்கியுள்ளார்.
சைவநெறியில் சாதித்துவம் உண்டு என்று உழறுகின்ற மூடர்களுக்கு நாவலர் பெருமானின் திருவாக்கு போதும் என நினைக்கிறேன்.
எனவே, சைவப் பெருமக்களே, இந்துத்துவம் என்னும் பெயரில் தமிழரில் தொன்று தொட்டு நிலவிவருகின்ற பண்பாடாகிய சைவப் பண்பாட்டை சிதைக்கும் வடக்குவலைக்கு சிக்காது சைவநெறி போற்றி மேன்மைகொள்வோம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 comments: on "ஸ்மார்த்தரிடம் நாவலர் தொடுத்த ஐந்து வினாக்களும் நாவலர் விளக்கிய சைவ சாதிமுறையும்"

*இயற்கை ராஜி* said...

தங்களின் வலைப்பூவைப் பற்றிய விவரத்தை http://blogintamil.blogspot.com இங்கே தந்துள்ளேன்.நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள். நன்றி

உலக சைவ மாநாடு said...

அன்புடையீர்,
வணக்கம்.உலக சைவப் பேரவையின் பன்னிரன்டாவது உலக சைவ மாநாடு தில்லையில் வரும் பிப்ரவரி மாதம் 5,6,7 தேதிகளில் நடத்தத்
திட்டமிடப்பட்டு உள்ளது.பேரூர் ஆதீனம் சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகையையும், யோகானந்த அடிகள் ( பிரான்சு ) அவர்களையும் அமைப்பாளர்களாகக் கொண்டு , சீர்வளர்சீர் குன்றக்குடி குருமகா சந்நிதானம் அவர்களைத் தலைவராகக் கொண்டு
விழாக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. சைவ ஆதீன குருமகா சந்நிதானங்களைப் புரவலர்களாகக் கொண்டுள்ள இந்த சைவ மாநாட்டில் பங்கேற்க தங்களை வரவேற்கிறோம்.தங்களுக்குத் தெரிந்த சைவ ஆர்வலர்களின் முகவரி, தொலைபேசி, மற்றும் மின்அஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
வேண்டுந் தங்களன்பு
அன்புடன்
தவத்திரு.மருதாசல அடிகள்

உலக சைவ மாநாடு said...

அன்புடையீர்,
வணக்கம்.உலக சைவப் பேரவையின் பன்னிரன்டாவது உலக சைவ மாநாடு தில்லையில் வரும் பிப்ரவரி மாதம் 5,6,7 தேதிகளில் நடத்தத்
திட்டமிடப்பட்டு உள்ளது.பேரூர் ஆதீனம் சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகையையும், யோகானந்த அடிகள் ( பிரான்சு ) அவர்களையும் அமைப்பாளர்களாகக் கொண்டு , சீர்வளர்சீர் குன்றக்குடி குருமகா சந்நிதானம் அவர்களைத் தலைவராகக் கொண்டு
விழாக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. சைவ ஆதீன குருமகா சந்நிதானங்களைப் புரவலர்களாகக் கொண்டுள்ள இந்த சைவ மாநாட்டில் பங்கேற்க தங்களை வரவேற்கிறோம்.தங்களுக்குத் தெரிந்த சைவ ஆர்வலர்களின் முகவரி, தொலைபேசி, மற்றும் மின்அஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
வேண்டுந் தங்களன்பு
அன்புடன்
தவத்திரு.மருதாசல அடிகள்

Sathyan said...

தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறையருள் கிடைக்க வணங்கி வாழ்த்துகறேன்.

Sathyan said...

தங்கள் பணி தொடர, எல்லாம் வல்ல இறையருள் கிடைக்க வணங்கி வாழ்த்துகறேன்.

சிவத்தமிழோன் said...

தவத்திரு மருதாசல அடிகளாருக்கு,

இந்தச் சிறியேன், நாயிற் கடையேன் செய்த தவறாகிய தாமதமான பதிலுக்கு தயவுகூர்ந்து மன்னிக்கும்படி தாழ்மையுடன் பணிந்து நிற்கிறேன். எளியேன் கல்வி கருதி கடல்கடந்து வாழ்வதால் தற்சமயம் கலந்து கொள்ளும் பேறை இழந்து வாடிநிற்கின்றேன்.

எளியேனால் இயன்ற உதவிகளை செய்யக் காத்திருக்கின்றேன்.

எழுத்தால் உதவும் பொருட்டு, வலைப்பூவில் 12ம் உலக சைவ மாநாட்டுப் புகழைப் பரப்ப எம்பெருமானின் திருவருட் சம்மதத்தையும் தங்கள் குருவருளையும் நாடிநிற்கிறேன்.

என்றும் தங்கள் குருவருள் ஆட்சியை வேண்டும்
சிவத்தமிழோன்

Post a Comment